(லூக்.12:58)
நமக்கு முன் அனுபவம் இல்லாத ஆன்மீக காரியங்களை விளக்குவதற்கு
ஆண்டவர் நமக்கு அனுபவம் உள்ள உலக காரியங்களை உதாரணமாகக் கூறுவது வழக்கம்.
நாட் இவ்வுலக வாழ்க்கையை முடித்துவிட்டு ஆண்டவர் முன் தீர்ப்புக்குச் செல்லும் போது
இவ்வுலகில் நாம் வாழ்ந்த ஆன்மீக வாழ்வின் அடிப்படையில் நமக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும்.
பாவ மாசின்றி வாழ்ந்தவர்கள் விண்னக மோட்ச வாழ்வுக்கும்,
சாவான பாவ வாழ்க்கை வாழ்ந்தவர்கள் நித்திய பேரிடர் வாழ்வுக்கும் அனுப்பப்படுவார்கள்.
இறுதித் தீர்ப்பை நாம் இறந்த பின்பு தான் சந்திக்க வேண்டும்.
தீர்ப்பு நாளில் நமக்கு விண்ணக மோட்ச வாழ்வு கிடைக்க வேண்டும் என்றால் நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?
உலக ரீதியாக நாம் ஒரு நபருக்கு எதிராக ஒரு குற்றம் செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
யாருக்கு விரோதமாகக் குற்றம் செய்தோமோ அவர் நம்மை பற்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு நமது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நமக்கு தண்டனை வழங்கப்படும்.
நமக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்று நாம் ஆசைப்பட்டால்,
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே
யாருக்கு விரோதமாக குற்றம் செய்தோமோ அவரிடம் சென்று நமது குற்றத்தை மன்னிக்கும் படி கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
அவர் நமது குற்றத்தை மன்னித்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வார்.
நாம் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இது உலக அனுபவம்.
ஆன்மீகத்துக்கு வருவோம்.
இறைவன் நம்மைப் படைத்தது இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.
இவ்வுலகில் அவரது சித்தப்படி வாழ்ந்து
மறு உலகில் அவரோடு நிரந்தரமாக நித்தியகாலம் பேரின்ப இன்பத்தில் வாழ்வதற்காகவே நம்மைப் படைத்தார்.
ஆனால் இவ்வுலகில் அவரது கட்டளைகளை மீறி பாவ வாழ்க்கை வாழ்வோர் மறு உலகில் நித்திய பேரின்ப வாழ்வை இழக்க நேரிடும்.
நித்திய பேரின்ப வாழ்வோ, அதன் இழப்போ நமது மரணத்திற்குப் பின் நடைபெறும் தீர்ப்பு முதல் ஆரம்பமாகும்.
ஆகவே இவ்வுலகில் பாவ வாழ்க்கை வாழ்வோர் தங்கள் மரணத்துக்கு முன் பாவ சங்கீர்த்தனம் மூலம் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்று இறைவனோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
சமாதானம் செய்து கொள்ளாவிட்டால் மரணத்திற்குப் பின் நித்திய பேரிடர் வாழ்விலிருந்து தப்பிக்க முடியாது.
இதைத்தான் நமது ஆண்டவர் பின்வரும் வசனத்தின் மூலம் விளக்குகிறார்.
"நீ உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்.
(பாவம் செய்பவர்கள் தங்களைப் படைத்த கடவுளுக்கு எதிராக செயல்படுவதால் கடவுளையே தங்கள் எதிரியாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் கடவுளிடம் பாவ மன்னிப்புப் பெற்று அவரைத் தங்கள் நண்பராக்கிக் கொள்ள வேண்டும்)
இல்லையேல், அவன் உன்னை நீதிபதியிடம் இழுத்துக்கொண்டு போக, நீதிபதி உன்னைச் சேவகனிடம் கையளிக்கக்கூடும்.
சேவகன் உன்னைச் சிறையில் அடைக்க நேரிடும்."
(கடவுள் தான் மனிதர்களுடைய நீதிபதி. தீர்ப்பு நாளைக்கு முன் அதாவது மரணத்துக்கு முன் நீதிபதியிடமே தங்களது பாவங்களுக்கு மன்னிப்புப் பெறாவிட்டால் பாவங்களுக்கான தண்டனை பெற நேரிடும்)
கடவுளுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கு நமக்கு மன்னிப்புத் தரும் அதிகாரத்தை கத்தோலிக்க திருச்சபையின் குருக்களுக்கு இறைவன் அளித்திருக்கிறார்.
"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு. 20:23)
நமது குருக்களிடம் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து நமது ஆன்மாவைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி வைத்துக் கொண்டால் நமக்கு இறைவனோடு நித்திய பேரின்ப வாழ்வு உறுதி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment