Wednesday, October 25, 2023

நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்.12:51)

நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்.12:51)

இயேசு சமாதானத்தின் தேவன்.

தான் செய்த பாவத்தினால் மனிதன் இறைவனோடு தனக்கு இருந்த சமாதான உறவை இழந்தான்.

மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்து

 அவனை மன்னித்து

 அவன் இழந்த சமாதானத்தை மீட்டுக் கொடுக்கவே இறைமகன் மனிதனாய் பிறந்தார்.

பிறரன்புக்கு விரோதமான பாவங்கள் மனித சமூகத்திலும் சமாதானத்தைப் பாழாக்கி விட்டன.

பிறர் அன்புக்கு விரோதமான பாவங்களுக்காகவும் இயேசு பாடுகள் பட்டு பரிகாரம் செய்தார்.

மொத்தத்தில் இயேசு சமாதானத்தின் தேவனாகவே உலகிற்கு வந்தார்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தபின் தனது சீடர்களுக்குத் தோன்றிய போதெல்லாம்,

 "உங்களுக்கு சமாதானம் உண்டாகுக" என்று தான் வாழ்த்தினார்.

நாம் பெற்ற ஞானஸ்நானம் என்னும் தேவத்திரவிய அனுமானம் நமது சென்மப் பாவத்தை மன்னித்து நம்மை இறைவனோடு சமாதானப்படுத்துகிறது.

உறுதிப் பூசுதல் என்னும் 
தேவத்திரவிய அனுமானத்தின் போது பரிசுத்த ஆவியானவர் நம் மீது இறங்கி,

 இறைவனோடும் நமது அயலானோடும் நாம் கொண்டுள்ள ஆன்மீக சமாதான வாழ்வை உறுதிப்படுத்துகிறது.

பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானம் இறைவனுக்கு விரோதமாக நாம் செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து, இறைவனோடு சமாதான வாழ்வில் தொடர உதவுகிறது.

திருப்பலியில் திரு விருந்தின் போது சமாதானத்தின் தேவனாகிய இயேசு தன்னையே நமக்கு உணவாகத் தந்து நமது ஆன்மீக சமாதான வாழ்வை வளம் பெறச் செய்கிறார்.

குருத்துவம் என்னும் தேவத் திரவிய அனுமானம் நமது பாவங்களை மன்னிக்க குருக்களுக்கு அதிகாரம் கொடுக்கிறது. குருக்கள் தான் நம்மை இறைவனோடும் நமது பிறரோடும் சமாதான வாழ்வில் வழி நடத்துகிறார்கள்.

 மெய் விவாகம் என்னும் தேவத் திரவிய அனுமானம் திருமணத் தம்பதிகள் ஒருவர் ஒருவரோடும், இறைவனோடும் சமாதான உறவில் வாழ வேண்டிய அருள் வரங்களை அள்ளித் தருகிறது.

அவஸ்தைப் பூசுதல் என்னும் தேவத் திரவிய அனுமானம் நமது வாழ்வின் இறுதியில் நாம் சமாதானத்தோடு இறைவன் பாதத்தை அடைய வேண்டிய அருள் வரங்களை தருகிறது. 

ஆக கிறிஸ்தவம் என்றாலே இறைவனோடு சமாதான வாழ்வு என்றுதான் அர்த்தம்.


அப்படியிருக்க, இயேசு ஏன்,

"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன்.'' என்று சொல்கிறார்?

தான் பெற்ற பிள்ளைகள் தன் சொற்படி கேட்காமல் தங்கள் இஸ்டம்போல் நடப்பதைப் பார்த்த தாய் பொறுக்காமல், 

"நான் பத்து மாதம் சுமந்து பெற்றது இரண்டு பிள்ளைகள் அல்ல, பேய்கள்."

என்று சொன்னால் அதை எந்த பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதே பொருளில் ஆண்டவருடைய வார்த்தைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிள்ளை உண்டாகும் முன் பிள்ளைக்கு ஆசைப்பட்ட தாய்,

பிள்ளை உண்டான போது பேறு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாய்,

பிள்ளை பிறந்த போது மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த தாய், 

பிள்ளைகள் வளர்ந்து ரவுடிகளாக 
மாறிவிட்டால்,

"உன்னைப் பெற்றதற்குப் பதிலாக ஒரு விளக்குமாற்றைப் பெற்றிருக்கலாம், 
பெருக்கவாவது உதவும்" என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். 

ஆனால் அவளுடைய ஆசை அது அல்ல. அவளுடைய மனநிலை.

இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைக்கும் போது அவர்களை நல்லவர்களாகத்தான் படைத்தார்.

ஆனால் அவர்கள் பாவம் செய்து கெட்டுப் போனார்கள்.

இறை மகனாகிய இயேசு மனு மகனாய்ப் பிறந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து அவற்றை மன்னித்து,

 நமக்கும் அவருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகத்தான்.

ஆனால் நம்மில் அநேகர் அவர் ஏற்படுத்துவதற்காக ஆசைப்பட்ட சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

நமது முதல் பெற்றோர்களைப் போல அவர்களும் பாவத்தினால் 
தங்களைப் படைத்த இறைவனோடும், தங்களோடு வாழ்கின்ற அயலானோடும் சமாதானம் இன்றி வாழ்கின்றார்கள்.

கடவுளைப் பொறுத்த மட்டில் அவர் அளவில்லாத ஞானம் உள்ளவர்.

நித்திய காலத்திலிருந்தே தன்னால் படைக்கப்பட்டவர்கள் இப்படித்தான் வாழ்வார்கள் என்று அவருக்குத் தெரியும்.

ஆனாலும் பிள்ளைகளைப் பெற்ற தாயின் மனநிலையை நமக்கு புரிய வைப்பதற்காக,

புரிந்து கொண்டு நம்மைப் படைத்த நமது வானகத் தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் வாழ வேண்டும் என்பதை நமக்கு அறிவுருத்துவதற்காகவும்
அவ்வாறு சொன்னார்.

இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள்.

துன்பப்படவோ வருத்தப்படவோ முடியாத தேவ சுபாவம்.

பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் மனித மனநிலை உள்ள மனித சுபாவம்.

இயேசு முழுமையாகக் கடவுள் (Fully God)

முழுமையாக மனிதன் (Fully man)

இயேசு மனித சுபாவத்தில் மக்கள் தன் சொல்லை கேளாததற்காக வருத்தப்பட்டார்,

லாசர் இறந்த போது அழுதார்,

தான் யூதர்களால் கைது செய்யப்படுவதற்கு முன் ஒலிவமலையில் வைத்து, தனது பாடுகளின் வேதனையை நினைத்து பயந்து, தன் தந்தையை நோக்கி 

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: 

எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.

இதைப்போல் மனித மனநிலையில் தான்,

"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று கூறினார்.

16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து லூத்தர் பிரிந்து சென்ற நிகழ்வும்,

இன்று  பைபிளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நாற்பதாயிரத்துக்கு மேலான பிரிவினை சபையார்களும்,


கத்தோலிக்க திருச்சபைக்குள்ளேயே இயேசுவின் வழிகாட்டல் படி வாழாமல் பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்

 அன்று இயேசுவின் மனதில் இருந்திருக்க வேண்டும்.

ஒரு மனித தாயின் மனநிலையில் தான் இயேசு,

 "நான் சமாதானத்தை அல்ல, பிரிவினையை ஏற்படுத்தவே வந்தேன்" என்று கூறுகிறார்.

ஒரு தாய் கெட்டுப்போன தன் மகனைப் பார்த்து,

"நான் ஒரு பேயைப் பெற்று விட்டேன்" என்று கூறும் போது,

வார்த்தைகள் பிள்ளையின் மனசாட்சியைக் குத்த வேண்டும்.

அவன் திருந்த வேண்டும்"

அதேபோல் தான் இயேசு

"பிரிவினையை உண்டாக்கவே வந்தேன்" 

என்ற இயேசுவின் வார்த்தைகள் கெட்ட கிறிஸ்தவர்களின் மனசாட்சியைக் குத்த வேண்டும்.

தங்களைப் பற்றி தான் இயேசு இவ்வாறு கூறுகிறார் என்பதை உணர்ந்து நல்ல கிறிஸ்தவர்களாக வாழ ஆரம்பிக்க வேண்டும்.

பாவத்தின் காரணமாக மனச் சமாதானம் இல்லாதவர்கள் உடனடியாகப் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பங்குகளில் பங்குக் குருவோடு சமாதானம் இல்லாமல், தகராறு பண்ணிக் கொண்டிருப்பவர்கள்,

தங்கள் நிலையை மாற்றி சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

பெற்றோருடன் சமாதானம் இல்லாமல் வாழும் பிள்ளைகள் சமாதானத்தோடு வாழ வேண்டும்.

வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் தங்கள் தவறை உணர்ந்து பெற்றோரை நன்கு கவனிக்க வேண்டும்.

சகோதர, சகோதரிகளுடனும், பக்கத்து வீட்டுக் காரர்களுடனும் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

நமது மீட்பர் இயேசுவின் ஆசைப்படி அனைவரும் சமாதானமாக வாழ வாழ்த்துகிறேன்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment