Sunday, October 29, 2023

ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?(லூக். 13:15)

ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?
(லூக். 13:15)

மோயீசன் மூலமாகத்  திருச்சட்டத்தை  இறைவன் கொடுத்தது   .அவரது  திருச் சித்தத்தை மக்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

இறைவன் மேல் முழுமையான அன்பு செலுத்த வேண்டும்,

 நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் 

என்பதுதான் இறைவனின் சித்தம்.

"திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை" என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்.
( மத்.22:39)

பரிசேயர்களும், சது சேயர்களும், மறை நூல் அறிஞர்களும் திருச் சட்டத்தை  எழுத்தளவிலேயே பின்பற்றினார்கள்.

திருச்சட்டம் எதை விரும்புகிறது என்பதை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

(They followed the letter of the law, not  its spirit.)

ஓய்வு நாளில் அவர்கள் வேலை எதுவும் செய்வதில்லை.

ஓய்வு நாளில் வேலை எதுவும் செய்யாமல் படுத்துத் தூங்குவதற்கென்று அது கொடுக்கப்படவில்லை.

வாரத்தில் மற்ற ஆறு நாட்களும் நமக்கு வருமானம் வரக்கூடிய வேலையைச் செய்கிறோம்.

ஓய்வு நாளை ஆண்டவருக்காகவும், அயலானுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.

எல்லா நாட்களிலுமே இறைவனை வழிபடுகிறோம்.
பிறருக்கு உதவிகளும் செய்கிறோம்.

நாம் சாதாரணமாக வீட்டில் சாப்பிடுவதற்கும்,

 திருமண வீட்டில் விருந்து சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதே போல் தான் சாதாரண நாட்களில் இறைவனை வழிபடுவதற்கும்,

 ஓய்வு நாளில் இறைவனை வழிபடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 

சாதாரண நாட்களில் காலை மாலை செபம் சொல்கிறோம்.

ஒவ்வொரு வேலையையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

நமது செயல்கள் யாவற்றையும் இறைவனது மகிமைக்காகச் செய்கிறோம்.

ஆனால், ஓய்வு நாளில் நாம் சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் சமூகமாக கோவிலில் ஒன்று கூடி திருவழிபாட்டில் கலந்து கொள்கிறோம்.

திருப்பலியில் கலந்து கொள்ளும் போது நமது ஆன்மா கல்வாரி மலை நோக்கி பயணம் செய்து,

 அன்று உலகம் அனைத்துக்குமாக தன்னையே பலியாக்கிய நமது ஆண்டவரை வழிபடுகிறது.

ஆண்டவர் பலியானது தனிப்பட்ட நபராகிய நமக்காக  மட்டுமல்ல, மனித சமூகத்திற்காக.

இதை நினைவு கூறும் வகையில் தான் சமூகமாக ஒன்று கூடி   ஆண்டவரது திருப்பலியிலும்,

திரு விருந்தினும் கலந்து கொள்கிறோம்.

புனித வியாழனன்று அன்று இயேசு தனது சீடர்களுக்குத் தன்னையே உணவாக வழங்கினார்.

இன்றும் அதே இயேசு அவரது சீடர்களாகிய நமக்குத் தன்னையே உணவாக வழங்குகிறார்.

சாதாரண நாட்களில் நமது அன்றாட பணிகளுக்கு மத்தியில் இயேசுவை முழு மனதோடு நேசிக்கிறோம்.

ஓய்வு நாளில் நமது அன்றாட பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு 

முழு மனதோடு இயேசுவை நேசிப்பதை நமது திருப்பலி வழிபாட்டின் மூலம் அவருக்குத் தெரிவிக்கிறோம்.

திருப்பலியின் போது இயேசுவோடு உரையாடிய நாம் திருப்பலி முடிந்த உடன் கோவிலுக்கு வந்திருக்கும் நமது சபை உறுப்பினர்களுடன், 

அதாவது, இயேசுவில் நமது சகோதரர்களுடன் உரையாட வேண்டும்.

இந்த உரையாடல் ஒன்றிணைந்த சபையின்   ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது.

நமது சபை சகோதரர்களில் யார் யாருக்கு நம்முடைய உதவி தேவைப்படும் என்பதை 

நமது உரையாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.  

நாம் அறிந்து கொள்வதைச் செயல்படுத்தும் விதமாக அன்று அவர்களுக்கு வேண்டிய பிறர் அன்பு உதவிகளைச் செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு,

 நமது உரையாடல்களின் போது ஏதாவது ஒரு சகோதரரின் வீட்டில் யாருக்காவது சுகம் இல்லை என்பது தெரிய வந்தால்

 அன்று அவரைச் சந்திக்கச் செல்வதோடு அவர் சுகம் அடைவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்.

"நான் சுகமில்லாதிருந்தேன், என்னைப் பார்த்து ஆறுதல் கூற வந்தாய், ஆகவே என்னுடன் நித்திய பேரின்ப வாழ்வில் இணைந்து நித்திய காலம் வாழ
மோட்சத்திற்கு வா"

என்று நமது தீர்ப்பு நாளில் நமது ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுப்பார்.

ஓய்வு நாளில் உணவில்லாதவர்களை நமது வீட்டுக்கு அழைத்து வந்தோ,

 அல்லது அவர்கள் வீட்டுக்கு சென்றோ உணவு கொடுக்கலாம்.

சிறைப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லலாம்.

நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபடலாம்.

ஓய்வு நாளில் இப்படிப்பட்ட ஆன்மீகப் பணிகளைச் செய்தால் இயேசு நமது இறுதி நாளில் நம்மை நோக்கி,

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்.

 தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.

 அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.

 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

 நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள். 

சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள்.

ஆகவே,   

உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக."

என்று கூறி மோட்ச வாழ்வுக்குள் நம்மை  அழைப்பார்.

"ஓய்வு நாளில் திருப்பலி முடிந்தவுடன் மட்டன் வாங்க வேண்டும்,

பிரியாணி தயாரிக்க வேண்டும்,

நன்கு சாப்பிட்டு விட்டு டிவி பார்க்க வேண்டும்,

முடிந்தால் தூங்க வேண்டும்."

என்ற எண்ணத்தை விட்டு விட்டு,

சமூகத்தோடு கூடி இறைவழிபாடு செய்ய வேண்டும்,

சமூகத்தில் உள்ளவர்களுக்கு பிறர் அன்புப் பணி ஆற்ற வேண்டும் என்று தீர்மானிப்போம், அதன்படி செயல்படுவோம்.

லூர்து  செல்வம்.

No comments:

Post a Comment