Wednesday, October 4, 2023

செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன். (லூக்.10:3)

செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்.
 (லூக்.10:3)

, இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை இருவர் இருவராகத் தமக்குமுன்னால் அனுப்பிய போது 

அவர்களைப் பார்த்து கூறிய வார்த்தைகள் இவை.

இயேசு தன் போதனைகளை அறிவிக்கச் சென்ற சீடர்களை ஆடுகளுக்கும், 

அறிவிக்கப்பட வேண்டியவர்களை ஓநாய்களுக்கும் ஒப்பிடுகிறார்.

ஓநாய்கள் நடுவில் ஆடுகள் சென்றால் அவற்றுக்கு என்ன ஆகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஆனாலும் இதில் ஒரு மகத்தான உண்மை மறைந்திருக்கிறது.

ஓநாய்கள் நடுவில் அவற்றை திருத்துவதற்காகச் செல்லும் ஆடுகளுக்கு உண்மையிலேயே வீரம் அதிகம் இருக்க வேண்டும்.

ஓநாய்களை ஆடுகளாக மாற்றுவதே ஆடுகளின் பணி.

தங்களுக்கு மரணமே நேர்ந்தாலும், தாங்கள் கொடியவர்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும்.

ஓநாய்களைப் போன்ற மனிதர்கள் கொடியவர்களாக, கொலைக்காரர்களாகவும் கூட இருக்கலாம்.

ஆடுகளைப் போல் சாந்தமான நற்செய்தி அறிவிப்பாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்களை திருத்த முயலும் தியாகிகளாக இருப்பார்கள்.

ஆண்டவர் 72 சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.

ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எழுத வாசிக்க தெரியாத மாணவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.

இயேசுவை அறியாத மக்களுக்கு அவரை அறிவிக்க வேண்டியது நற்செய்தியாளர்கள் ஆகிய நமது கடமை.

இருட்டும் ஒளியும் எதிர்மறைகள்.

சுபாவத்தில் ஆடுகளும், ஓநாய்களும் எதிர்மறைகள்.

இயேசுவை அறிந்தவர்களும் அறியாதவர்களும் எதிர்மறைகள்.

ஒளி இருக்கும் இடத்தில் இருட்டு இருக்காது.

ஓநாய்கள் வாழும் காட்டில் ஆடுகள் வாழ முடியாது.

கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்துவை அறியாமை இருக்கக் கூடாது.

நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் மத்தியில் கிறிஸ்துவை அறியாதவர்கள் இருந்தால் நாம் நமது நற்செய்தி அறிவிக்கும் பணியை செய்யவில்லை என்று அர்த்தம்.

நற்செய்தி அறிவிப்பின்போது ஓநாய்களால் ஆடுகளுக்கு ஏற்படும் கதி நமக்கும் ஏற்படலாம்.

ஆண்டவரின் வார்த்தைகளே இதை உறுதி செய்கின்றன.

சுதந்திர நாடு என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் நமது நாட்டில் கூட 

அனேக இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கதியை 

நாம் கேள்வி பட்டு கொண்டு தான் இருக்கிறோம்.

அவர்களுக்கு ஏற்படும் அதே நிலைமை நமக்கும் ஏற்படலாம்.

ஆனாலும் வீரமுள்ள ஆடுகளைப் போல நாமும் வீரமுள்ள,

 எதிரிகளால் ஏற்படும் மரணத்திற்கு பயப்படாத

  கிறிஸ்தவர்களாய் வாழ வேண்டும்.

ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

நாம் படைக்கப்பட்டது இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.

இவ்வுலக வாழ்வு விண்ணக வாழ்வை நோக்கிய பயணமே.

பயணம் நிரந்தரமானது அல்ல..

விண்ணக வாழ்வோ முடிவில்லாதது.

மதுரையிலிருந்து தென்காசியில் உள்ள நமது இல்லத்திற்கு ரயிலில் பயணிப்பதாக வைத்துக்கொள்வோம்.

ரயில் பயணம் எவ்வளவு வசதிகள் உள்ளதாக இருந்தாலும்

  ரயிலிலிருந்து இறங்காமல் பயணித்துக் கொண்டேயிருக்க நாம் ஆசைப்பட்டால் நாம் எப்படிப்பட்டவர்கள்?

வீட்டுக்குச் செல்வதற்காக பயணிக்கிறோமே தவிர பயணிப்பதற்காக பயணிக்கவில்லை.

அதேபோல் நமது நித்திய வீடாகிய விண்ணகம் செல்ல இவ்வுலகில் பயணிக்கிறோமே தவிர 

இவ்வுலகில் பயணித்துக் கொண்டே இருப்பதற்காக பயணிக்கவில்லை.

நமது நித்திய வீட்டின் வாசல் மரணம்.

வாசலுக்கு வராவிட்டால் வீட்டுக்குள் நுழைய முடியாது.

வீட்டுக்கு வருபவன் வீட்டு வாசலை அடைந்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ

அவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும் மரண வாசலை அடைந்து விட்டால்.

ஆடுகளாகிய நம்மை 
ஓநாய்களாகிய எதிரிகள் விண்ணக வாசலுக்கு (மரணத்துக்கு) அனுப்பினால்

நாம் அடைய வேண்டியது மகிழ்ச்சியே தவிர வருத்தம் அல்ல.

ஓநாய்கள் மத்தியில் ஆடுகளாய் வாழ்வோம்.

முடிந்தால் ஓநாய்களை ஆடுகளாக மாற்றுவோம்.

முடியாவிட்டால் ஓநாய்களின் செயலால் விண்ணக வாசலை அடைவோம்.

வாசல் வழியே விண்ணகத்திற்குள் நுழைந்து இறைவனோடு நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

விண்ணகம் தான் நமது நிரந்தரமான வீடு.

அங்கு செல்வது மட்டும் தான் நமது இவ்வுலக வாழ்க்கையின் ஆன்மீக நோக்கம்.

நமது நோக்கம் நிறைவேற நமது விண்ணகத் தந்தையின் அருளை வேண்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment