சமூக அறிவியல் ஆசிரியர் முதல் உலகப்போரின் காரணங்கள் சம்பந்தமான பாடத்தை நடத்திவிட்டு,
மாணவர்களிடம்
''ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்" என்றார்.
ஒரு மாணவன் எழுந்து|
"இந்த ஆண்டு தீபாவளி எப்போது, சார், வரும்" என்றான்.
அவனுக்கு என்ன பதில் கிடைத்திருக்கும்?
பதில் கிடைத்திருக்காது. அடி கிடைத்திருக்கும்.
அவன் என்ன கேட்டிருக்க வேண்டும்?
ஆசிரியர் நடத்திய பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டிருக்க வேண்டும்.
சம்பந்தமே இல்லாத விஷயத்தை பற்றிக் கேட்டால் தண்டனைதான் கிடைக்கும்.
இயேசு தந்தையை நோக்கி எப்படி ஜெயிப்பது என்று சொல்லிக் கொடுத்துவிட்டு,
விடாது கேட்கும் நண்பனுக்கு நள்ளிரவில் எழுந்து கொடுக்கும் நண்பனை பற்றிய உவமையை கூறிவிட்டு,
"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்னால்,
என்ன கேட்க வேண்டும்?
ஆன்மீக சம்பந்தமான ஏதாவது ஒரு உதவியைக் கேட்க வேண்டும்.
ஆண்டவரே சொல்கிறார்,
"கேட்கிற எவனும் பெறுகிறான்: .......
வானகத்திலுள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்ப் பரிசுத்த ஆவியை அளிப்பார்! " என்று.
விண்ணகப் பாதையில் வழி நடக்கும் நாம் அது சம்பந்தமான ஆன்மீக உதவிகளை ஆண்டவரிடம் கேட்க வேண்டும்.
திரும்பத் திரும்ப கேட்க வேண்டும்.
விடாமல் கேட்க வேண்டும்.
'
ஆனால் நாம் ஆண்டவருடைய வார்த்தைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவரிடம் என்ன கேட்கிறோம்?
எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்.
மகனுக்கு நாங்கள் விண்ணப்பித்திருக்கும் கல்லூரியில் இடம் கிடைக்க.
'விண்ணப்பித்திருக்கிற வேலை கிடைக்க வேண்டும்.
இவை போன்ற ஆன்மீக சம்பந்தம் இல்லாத உதவிகளைக் கேட்கிறோம்.
இந்த உதவிகளைக் கேட்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து திருத்தலங்களுக்குச் செல்கிறோம்.
விண்ணக தந்தை நமது தந்தை.
நமது நலனில் அக்கறை உள்ள தந்தை.
ஆகவே இத்தகைய உதவிகளை கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனால் ஆன்மீக வாழ்வைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இவ்வுலக காரியங்களைப் பற்றி மட்டும் அக்கறை கொண்டு அவற்றை பற்றிய உதவிகளை மட்டும் கேட்டால்,
அது ரயில்வே நிலையத்துக்குச் சென்று புகைவண்டி பயணத்திற்காக டிக்கெட் கேட்காமல்,
''போண்டா" கேட்பதற்கு சமம்.
பல மைல்கள் பயணம் செய்து, குற்றாலத்திற்குச் சென்று அருவியில் குளிக்காமல் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்தால் நாம் எப்படிப் பட்டவர்கள்?
பிரியாணி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அருவியில் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும்.
கடவுள் நம்மை படைத்திருப்பது இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.
இவ்வுலக பொருள்களைப் பயன்படுத்தி ஆன்மீக வாழ்வு வாழ்ந்து விண்ணகம் சென்று அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக.
நாம் நம்மை படைத்தவரிடம் எதைக் கேட்டாலும் அது நமது விண்ணக வாழ்வுக்கு உதவிகரமாய் இருக்க வேண்டும்.
உதவிகரமாய் இல்லாவிட்டால் அந்த உதவி நமக்குக் கிடைக்காது.
நமது ஜெபத்தில் ஆண்டவரிடம் ஆன்மீக உதவிகளைக் கேட்போம்.
பெறுவோம், நித்திய பேரின்ப வாழ்வை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment