Saturday, October 14, 2023

எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. மாறாக, உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்கிறான். (லூக்.11:33)

எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. மாறாக, உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்கிறான். (லூக்.11:33)

சிறுவயதில் ஒரு அனுபவம்..

Teen age ஐ அடைந்த பருவம்.

நானும் எனது தம்பியும் ஒரு வேலையாய் வயலுக்கு போயிருந்தோம்.

மாலை வந்தது. இரவும் நெருங்கியது. போன வேலை முடியவில்லை.

நான் என் தம்பியைப்
 பார்த்து,

"வந்த வேலை முடியவில்லை. இரவில் வயலில் தங்கி, அதிகாலையில் எழுந்து வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வோம்."

"வயலில் தங்குவது சரி.

 ஆனால் இரவில் சாப்பாடு யார் தருவார்கள்?

 அம்மா வீட்டில் அல்லவா இருக்கிறார்கள்."

"ஒன்று செய். இப்பொழுது மாலை நீ வீட்டுக்குச் சென்று, இரவு உணவு உண்டு விட்டு, எனக்கும் உணவு எடுத்துக் கொண்டு வா."

"நீ சொல்வது சரிதான். ஆனால் இரவில் இருட்டில் வயல் வரப்பு வழியே எப்படி நடந்து வருவது?"

"வீட்டில் லாந்தர் விளக்கு இருக்கிறது. கையில் எடுத்துக் கொண்டு வா."

நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு தம்பி வீட்டுக்குச் சென்றான்.

இரவில் ஏழு மணியளவில் சாப்பிட்டு விட்டு, எட்டு மணிக்கு வயலுக்கு வந்து விடுவான் என்று நினைத்தேன்.

ஆனால் 8 மணிக்கு வரவில்லை.

இருட்டில் தனியாக நிற்பது எனக்கு பயமாக இருந்தது.

என் கையில் ஒரு விளக்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் இல்லையே.

'நம்பி வரும்போது மணி பத்து.

'வீட்டிலிருந்து வயலுக்கு வர இவ்வளவு நேரமா?" என்று கேட்டேன். 

"நின்ற இடத்திலேயே நின்று கொண்டு கேள்வி கேட்பது எளிது.

பதில் சொல்வது தான் கடினம்.

நீ சொன்ன படி விளக்கை எடுத்துக்கொண்டு வயலுக்குப் புறப்பட்டேன்.

குளத்துக் கரையில் பஞ்சாயத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

வெளிச்சத்தில் நடந்து வந்து விட்டேன்.

ஆனால் கரையை விட்டு இறங்கி வயலுக்குள் வந்தபோது வரப்பு தெரியவில்லை."

"ஏன்? கையில் விளக்கு வைத்திருக்கிறாயே!"

"நீ சொன்னபடி விளக்கை எடுத்துக்கொண்டு வந்தேன்.

வயலுக்கு வந்த பின் தான் தெரிந்தது விளக்கை ஏற்றவில்லை என்று.

திரும்ப வீட்டுக்குச் சென்று விளக்கை ஏற்றிவிட்டு வருகிறேன்."

"இவ்வளவு வயதாகிறது. விளக்கை ஏற்றினால்தான் வெளிச்சம் தெரியும் என்று தெரியவில்லை. நல்ல பையன்!'

"நானே உலகின் ஒளி." (அரு.8:12)
என்று கூறிய நம் ஆண்டவர்,

'உலகிற்கு ஒளி நீங்கள்"(மத்.5:14)
என்றும் கூறியுள்ளார்.

உலகிற்கு ஒளி இயேசுவா அல்லது நாமா?

தீப்பெட்டியில் உள்ள குச்சை அதில் உரசினால் தீப்பிடிக்கிறது.

கொஞ்ச நேரத்தில் விறகு அடுப்பில் விறகு தீப்பற்றி எரிகிறது.

நாம் பார்க்கும் தீ தீப்பெட்டிக்குச் சொந்தமா அல்லது விறகுக்குச் சொந்தமா?

தீப்பெட்டி இல்லாவிட்டால் நம்மால் விறகைப் பற்ற வைக்க முடியாது.

கடவுள் நம்மைப் படைக்கும் போது தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

கடவுள் அன்பாய் இருக்கிறார்.

அன்பு என்ற பண்பை கடவுள் நம்மோடு பகிர்ந்து கொண்டதால் நாமும் அன்பாயிருக்கிறோம்.

அதேபோல கடவுள் ஒளியாய் இருக்கிறார்.

நாம் ஒளியாக இருக்க வேண்டுமென்றால் கடவுள் நம்மோடு ஒளியை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னால் நம்மில் ஜென்மப் பாவம் இருந்ததால் நம்மிடம் ஒளி இல்லை.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது பரிசுத்த ஆவி நம் மீது இறங்கி வருகிறார். இறைவனின் அருள் வரமாகிய ஒளியும் நமக்கு கிடைக்கிறது.

கடவுளிடமிருந்து நமக்கு ஒளிகிடைக்காவிட்டால் நம்மால் உலகின் ஒளியாக இருக்க முடியாது.


"விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. மாறாக, உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்கிறான்."

நாம் விளக்கு.

 முதலில் விளக்காகிய நம்மில் இறைவனின் ஒளியை ஏற்ற வேண்டும்.

ஒளி ஏற்றப்பட்ட விளக்கை எல்லோரும் காணும் இடத்தில் வைக்க வேண்டும்.

அப்போதுதான் எல்லோரும் நம்மால் பயன் பெறுவர்.

இறைவனின் அருளால் நாம் வாழும் முன் மாதிரிகையான வாழ்க்கையை மற்றவர்கள் காணும் போது

 நமது வாழ்க்கையை பார்த்து அவர்களும் இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட தனது ஒளியை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது 

அவர்களும் இறைவனின் ஒளியைப் பெறுவதால்

 அவர்கள் அந்த ஒளியின் உதவியோடு இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்.

கடவுள் ஏன் தன்னையும் நம்மையும் ஒளிக்கு ஒப்பிடுகிறார்?

ஒளியின் வெளிச்சம் எந்த பொருட்களின் மீது படுகிறதோ அந்த பொருள்களை மட்டும் நம்மால் பார்க்க முடியும்.

நாம் நடக்கும் வழியில் ஒளி இல்லாவிட்டால் வழி நமக்குத் தெரியாது.

நாம் நடந்து கொண்டிருக்கும் ஆன்மீக பாதையில் கடவுளின் அருளாகிய ஒளி இருக்க வேண்டும்.

கடவுளின் உதவியால் மட்டுமே நம்மால் ஆன்மீக வழியை பார்க்க முடியுமாகையால் கடவுள் தன்னை ஒளியோடு ஒப்பிடுகிறார்.

நம்மை பார்ப்பவர்களுக்கும் நாம் நடக்கும் சரியான ஆன்மீகப் பாதை தெரிய வேண்டும்.

நாம் நாம் இறைவன் அருளோடு முன் மாதிரிகையாக வாழ்வது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஒளியை ஏற்றி

உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்க வேண்டும் என்கிறார்.

நாம் மற்றவர்கள் காணும்படி வாழ்வது சுய விளம்பரத்திற்காக அல்ல முன்மாதிரிகையாக.


சுய விளம்பரத்திற்காக வாழ்ந்தால் அது தாழ்ச்சி இன்னும் புண்ணியத்துக்கு எதிரான பாவம்.

முன்மாதிரி கையாக வாழ்ந்தால் நாம் வாழும் நற்செய்தியை மற்றவர்களுக்கு செயல் மூலம் அறிவிக்கிறோம்.

இருட்டை குறை சொல்வதற்குப் பதிலாக ஒரு மெழுகு திரியை ஏற்றுங்கள் என்று சொல்வார்கள்.

மற்றவர்களை மனம் திருப்ப வேண்டுமென்றால் நாம் ஆன்மீக வாழ்வில் மெழுகு திரியாய்
 செயல்படுவோம்.

நமது ஒளி உலகெங்கும் பிரகாசிக்கட்டும்.

அந்த ஒளியில் உலகம் இயேசுவைப் பார்த்து அவரிடம் வந்து சேரட்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment