அரசன் ஒருவன் தன் மகனின் திருமண விருந்துக்கு அநேகருக்கு அழைப்பு கொடுத்திருந்தான்.
அவர்களோ சாக்குப் போக்கு சொல்லி விருந்துக்கு வரவில்லை.
ஒருவன் தன் தோட்டத்திற்குச் சென்றுவிட்டான்.
வேறொருவன் வியாபார காரியமாக வெளியூர் சென்று விட்டான்.
அரசனுக்கு இது கௌரவ பிரச்சனை.
முதலாவது அவன் நாட்டின் அரசன். நாட்டில் உள்ள அனைவரும் அவரது சொல்லுக்கு கட்டுப்பட கடமைப் பட்டிருக்கிறார்கள்.
இரண்டாவது அரசன் அழைக்கும் போது செல்லாதவர்கள் அவரை அவமதிக்கிறார்கள்.
கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறார்கள்.
கடவுள் கொடுத்திருக்கும் கட்டளைகள் கடினமானவை அல்ல, இனிமையானவை.
ஆளுக்கு ஒரு லட்டு கொடுத்து சாப்பிடுங்கள் என்று சொன்னால் யாராவது வேண்டாம் என்பார்களா?
நேசிப்பதை விட உலகில் இனிமையாக செயல் வேறு எது இருக்கிறது.
ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒரு குறிப்பிட்ட வயது வந்த உடனே யாரும் சொல்லாமல் தாங்களாகவே செய்யும் செயல் காதலிப்பது.
காதல் அன்பின் ஒரு பிரிவு, எதிர்ப்பாலினத்துக்கு மட்டும் உரியது.
அன்பு எல்லோருக்கும் பொதுவானது.
எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் என்பதுதான் கடவுளின் கட்டளை-
நம்மைப் படைத்த கடவுளையும், அவரால் படைக்கப்பட்ட நம்மைப் போன்றவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.
அன்பு செய்பவர்கள், அதாவது அனைவரையும் நேசிப்பவர்கள் நித்திய பேரின்ப விருந்துக்கு கடவுளால் அழைக்கப் படுவார்கள்.
அன்புதான் ஆன்மாவின் உயிர்.
உயிருள்ள நபரால் இயங்காமல் இருக்க முடியாது.
இருதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு சொல்லாகவும் செயலாகவும் இயங்கிக் கொண்டே இருக்கும்.
அன்பினால் இணைக்கப்பட்ட நண்பர்கள் மணிக்கணக்காக சலிப்பில்லாமல் பேசிக் கொண்டிருப்பதை நமது அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.
கடவுள் நம்மை அளவு கடந்த விதமாய் நேசிக்கிறார்.
நாமும் கடவுளை நேசிக்கும் போது அவருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு மிகவும் நெருக்கம் ஆகும்.
கடவுள் தனது உள் தூண்டுதல்கள் (Inspirations)மூலமாக நம்மோடு இடை விடாது பேசிக்கொண்டு நம்மை வழிநடத்தி பராமரித்து வருகிறார்.
நாமும் அவரோடு பேச வேண்டும். நாம் அவரை நேசிப்பதை அவரிடம் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வினாடியும் அவரோடு உறவில் இணைந்திருக்க வேண்டும். இறைவனோடு நாம் இணைந்திருப்பதற்கு பெயர் தான் ஜெபம். ஜெபம் வெளி வார்த்தைகளாலும் இருக்கலாம், மௌன வார்த்தைகளாலும் இருக்கலாம்.
மௌனமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் அவரோடு இணைந்திருக்கும் நாம் செயல்கள் மூலம் எப்படி இணைந்திருப்பது.
திருப்பலியில் கலந்து கொள்ளுதல்,
திருவிருந்தில் கலந்து கொள்ளுதல்,
'
கத்தோலிக்கர்கள் இணைந்து நடக்கும் ஜெப வழிபாட்டில் கலந்து கொள்ளுதல்,
நாம் வழிபடும் இறைவனின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்தல்,
கடவுளால் படைக்கப்பட்ட மற்ற மனிதர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்தல்
போன்ற செயல்கள் மூலம் நமது அன்பை செயலில் வெளிப்படுத்தலாம்.
நமது பிறர் சிநேகமும் சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.
ஒருவருடன் அன்போடு பேசுவதின் மூலம் நமது அன்பை சொல்லில் வெளிப்படுத்தலாம்.
பிறருக்கு வேண்டிய உதவிகளை இறைவனுக்காக செய்வதில் மூலம் நமது அன்பை செயலில் பயன்படுத்தலாம்.
இறையன்பு மூலமும் பிறர் அன்பு மூலமும் நித்திய பேரின்ப விருந்துக்கு இறைவன் விடுத்திருக்கும் அழைப்பை அனேகர் ஏற்றுக்கொள்வதில்லை.
கடவுள் விடுத்திருக்கும் இந்த அன்பின் அழைப்பை விட பணம், பொருள் ஆகியவை விடுக்கும் அழைப்பு இவர்களுக்கு பிரியமானதாக தெரிகிறது.
பணத்தினால் கிடைக்கும்
சிற்றின்பம் கடவுள் அளிப்பதாகச் சொல்லும் பேரின்பத்தை விட கவர்ச்சிகரமாக இவர்களுக்குத் தெரிகிறது.
ஆகவே இவர்கள்
"இறைவா, நீர் அளிப்பதாகச் சொல்லும் பேரின்பத்தை நாங்கள் மரணம் அடைந்த பின்பு தான் அனுபவிக்க முடியும்.
அதைவிட இப்பொழுது நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிற்றின்பமே எங்களுக்கு போதும்."
என்று கூறி கடவுளின் அழைப்பை நிராகரித்து விடுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் நித்திய கால பேரிடர் காத்துக் கொண்டிருக்கிறது.
நாம் இறைவனின் அழைப்பை ஏற்று நித்திய கால பேரின்ப மோட்ச வாழ்வுக்கு நம்மையே தயாரிப்போம்.
கடவுளுடைய அருள் நமக்கு உதவிகரமாக இருக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment