ஆம், என் நுகம் இனிது, என் சுமை எளிது." (மத்.11:30)
"தாத்தா, 'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்'
என்று கூறிய ஆண்டவர் 'என் சுமை எளிது' என்று கூறியிருக்கிறார்.
முதல் வசனத்தை வாசிக்கும் போது
'சுமை சுமந்து சோர்ந்து வருபவர்களின் சுமையை நீக்கி அவர்களுக்கு இளைப்பற்றி தருவார் என்று நினைத்தேன்.
ஆனால் அவர் 'என் சுமை எளிது' என்று கூறியிருக்கிறாரே, அப்படியானால் நாம் அவரிடம் சென்றால் நமக்கு சுமக்கச் சுமையை தருவாரோர? எளிதாக இருந்தாலும் சுமை சுமை தானே!"
"தம்பி, இயேசு ஆன்மீக ரீதியாக பேசுகிறார் என்பதை முதலில் உனது ஞாபகத்தில் வைத்துக் கொள்.
ஆன்மாவைச் சோர்வடைய செய்யும் சுமை நாம் செய்யும் பாவங்கள்.
நமது பாவங்களால் சோர்வடைந்திருக்கும் நமது ஆன்மா சோர்வு நீங்கி இளைப்பாற்றி அடைய வேண்டுமானால்
நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஆன்மா பரிசுத்தம் அடைய வேண்டும்.
பாவங்களால் சோர்வடைந்திருக்கும் நமது ஆன்மா பாவங்கள் நீங்கி இளைப்பாற்றி பெற வேண்டுமென்றால்
நாம் நமது பாவங்களுக்கு
பரிகாரம் செய்ய மனித உரு எடுத்த இயேசுவிடம் செல்ல வேண்டும்.
அவர் நமது பாவங்களை மன்னிக்க அதிகாரம் பெற்ற கடவுளாகையால்
நமது பாவங்களை மன்னித்து நமக்கு இளைப்பாற்றி தருவார்.
நமது பாவங்களை மன்னிப்பதற்கென்றே சிலுவையை சுமந்து சென்று அதில் தன்னையே நமக்காகப் பலியாக்கினார்.
இயேசு சுமந்த சுமை சிலுவை.
நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் இயேசு.
ஆகவே அவரைப் போலவே நாமும் சிலுவையைச் சுமந்து அவரைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லாமலேயே விளங்கும்.
"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது." என்று அவரே கூறியிருக்கிறார்.
நாம் இயேசுவைத் தஞ்சமடைந்து நம்மை அவரிடமே ஒப்படைத்து விட்டால் அவர் தரும் சிலுவையாகிய சுமையைச் சுமந்து அவரைப் பின்பற்ற வேண்டும்.
அவர் நமக்காக பாரமான சிலுவையைச் சுமந்தார்.
ஆனால் நாம் சுமப்பதற்காக அவர் தரும் சிலுவை பாரமாக இருக்காது.
நமக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் அன்பு சிலுவையின் பாரத்தைக் குறைத்து விடும்.
உலக வாழ்வில் கூட நாம் நேசிப்பவர்களுக்காக என்ன கஷ்டப்பட்டாலும் அது கஷ்டமாகத் தெரியாது.
நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகத் தன்னையே சிலுவையில் பலியாக்கும் அளவுக்கு அன்பு நிறைந்த
நமது இயேசுவுக்காக நாம் சுமக்கும் எந்தச் சிலுவையும் பாரமாகத் தெரியாது.
பார வண்டிகளை இழுப்பதற்காக வண்டியின் முன்பகுதியில் நுகக்கால் என்ற அமைப்பு இருக்கும்.
அதில் வண்டியை இழுக்கும் மாடுகளைப் பூட்டுவார்கள். பார வண்டியை மாடுகள் இழுத்துச் செல்லும்.
இயேசு தன்னைப் பார வண்டிக்கும், நம்மை வண்டியை இழுக்கும் மாடுகளுக்கும் ஒப்பிடுகிறார்.
நமது கடமை இயேசுவாகிய பார வண்டியை விண்ணக பாதையில் விண்ணகத்தை நோக்கி இழுத்துச் செல்வதுதான்.
நமது ஆன்மாவாகிய கழுத்தின் மீது இருக்கும் இயேசுவின் நுகம் மிகவும் இனிது.
ஏனெனில் இயேசு நமது அன்பர்.
நமது அன்புக்கு உரியவர்களை எவ்வளவு தூரம் சுமந்து சென்றாலும் அந்தச் சுமை இனிதாகவே இருக்கும் என்பது உலகம் நமக்கு கற்பிக்கும் பாடம்.
நமது பாவங்களுக்காகவும், அகில உலகின் பாவங்களுக்காகவும் தன் இன்னுயிரையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுக்கும் அளவிற்கு அன்பு நிறைந்தவர் நமது ஆண்டவர்.
அந்த அன்பு இயேசுவின் நுகத்தை இனிமையாக்கி விடுகிறது.
இயேசுவிடம் அன்பு நிறைந்த புனிதர்கள் அவருக்காக தங்களது வாழ்நாளில் மலர்ந்த முகத்தோடு பட்ட கஷ்டங்களே இதற்குச் சான்று.
ஐந்து காய வரம் பெற்ற புனித பிரான்சிஸ் அசிசி, Father Pio, மற்றும் இயேசுவுக்காக வேத சாட்சிகளாக மரித்த அனைத்து புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்தால் இது புரியும்.
இயேசுவாகிய சுமையை எளிதாக்கி விடுவது அவர் மீது நாம் கொண்டுள்ள அன்பு.
இயேசுவே நமக்கு எல்லாம் என்று அவரது சிலுவையைச் சுமந்து செல்பவர்களுக்கு இது புரியும்.
இயேசுவாகிய சுமை தாங்கிய சிலுவை வண்டியை இழுத்துச் செல்வர்கள் அவர் வாழும் விண்ணகத்தை நோக்கியே நடை போடுவார்கள்.
இயேசுவைத் தஞ்சம் அடைவோம்.
பாவச்சுமை நீங்கி பரிசுத்தம் அடைவோம்.
அவரையே சுமந்து விண்ணகப் பாதையில் வீர நடை போடுவோம்.
இயேசு தரும் நித்திய பேரின்ப வாழ்வு நமக்கு நிச்சயம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment