Sunday, October 8, 2023

இயேசு, " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று கூறினார்.( லூக். 10:37)

இயேசு, " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று கூறினார்.
( லூக். 10:37)

கள்வர் கையில் அகப்பட்டவனையும் அவனுக்கு உதவி செய்தவனையும் பற்றிய உவமையை கூறிவிட்டு,

இயேசு தன்னிடம்  " என் அயலான் யார்?" என்று கேட்டவரைப் பார்த்து,

"உதவி செய்யாமல் போன இருவர், உதவி செய்த ஒருவர் ஆகிய மூவருள் 

எவன் கள்வர்கையில் அகப்பட்டவனுக்கு அயலான் என்று உமக்குத் தோன்றுகிறது?" என்றார்.

அதற்கு அவன், "அவனுக்கு இரக்கம் காட்டியவன்தான்" என்றார்.

இயேசு, " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று கூறினார்.


ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இருவர் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்.

ஆனாலும் ஒருவரோடு ஒருவர் அன்புடன் நடந்து கொண்டால் தான் சகோதரர் என்ற பெயருக்கு ஏற்றவர்.

 அவ்வாறு இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் அயலான் தான்.

ஆனாலும் மற்றவர்கள் மீது இரக்கம் காட்டி உதவி செய்யும் அன்புடையவனே அயலான் என்ற பெயருக்கு பொருத்தமானவன்.

ஆண்டவர் கூறிய உவமையில் கள்வர் கையில் அகப்பட்டவனுக்கு இரக்கத்தோடு உதவி செய்தவனே அயலான்'

இயேசு நம்மையும் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்.

என்?

நாம் இரக்கம் உள்ளவர்களாக இருப்பதில் அவருக்கு என்ன ஆதயம்?

தாயைப் போல் பிள்ளை.

அழகான ஒரு தாய் தனது பிள்ளையும் தன்னை போல அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் ஆச்சரியமில்லை.

செல்வந்தனாகிய தந்தை தன் மகனும் தன்னைப் போல செல்வந்தனாக இருக்க ஆசைப்படுவது இயற்கை.

இயேசு நம்மைப் படைத்த கடவுள்.

அவரது சாயலில் நம்மைப் படைத்தார்.

அவரது சாயலில் இருப்பதற்காக அவரது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

கடவுள் அன்புமயமானவர்.

அன்பே கடவுள்.

இரக்கம் அன்பின் முக்கிய குணம்.

ஆகவே கடவுள் இரக்கம் நிறைந்தவர்.

அவரது இரக்கத்தின் காரணமாகத்தான் நம்முடைய முதல் பெற்றோர் அவருக்கு விரோதமாக பாவம் செய்தபோது 

மனுக் குலத்தின் பாவங்களுக்குத் தானே பரிகாரம் செய்யத் தீர்மானித்தார்.

மனக்குலத்தின் மீது அவருக்கு இருந்த இரக்கத்தின் காரணமாகத்தான்
.
அதன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய பாடுகள் பட்டு மரிப்பதற்காக இறைமகன் மனு மகனாய்ப் பிறந்தார்.
''
நம் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகத்தான் துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள்

பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாய்ப் பிறந்தார்.

கஷ்டப்படவே முடியாத கடவுள் வேதனைகள் நிறைந்த பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை நீதிபதியே ஏற்றுக் கொள்வது போல

படைக்கப்பட்டவர்கள் செய்த பாவங்களுக்கு படைத்தவரே பரிகாரம் செய்தார்.

'
 இவற்றுக் கெல்லாம் காரணம் அவர் நம் மீது கொண்டுள்ள இரக்கமே. 

இரக்கமுள்ள கடவுள் நம்மைப் படைக்கும் போது தன்னுடைய இரக்கத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டதால் இயல்பிலேயே நாம் இரக்கம் உள்ளவர்கள் தான்.

நமது முதல் பெற்றோரைப் பாவம் செய்யும்படி சோதித்த சாத்தான் அவனது சோதிக்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறான்.

அன்று ஏவாள் சாத்தானுடைய சோதனைக்கு இணங்கியது போல் நாம் இணங்கி விடக்கூடாது.

நம்மை படைத்தவரோடு இணைந்து வாழ்வதன் மூலம் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளைச் செயல்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

பிறர் துன்பப்படும்போது அவர்கள் மீது இரக்கப்பட வேண்டும்.

இரக்கம் செயலில் இறங்க வேண்டும்.

கஷ்டப்படுகின்றவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

உலக மக்கள் அனைவரையும் கடவுள் இரக்கம் என்ற பண்புடன்தான் படைதார்.

ஆனால் சுயநலம் காரணமாக மற்றவர்களை அடிமைப்படுத்த நினைக்கின்ற மக்களின் காரணமாக உலகில் சமாதானம் இன்மையும், சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாட்டுக்கு நாடு ஏற்படும் போர்களுக்கு காரணம் அரசியல் தலைவர்களின் இரக்கமின்மை தான்.

உலக மக்கள் அனைவரும் இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருந்தால்,

மக்கள் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து ஒற்றுமையாக வாழ்வர்.

உலகமே உதவிகள் செய்தும் பெற்றும் மகிழ்ச்சியாக வாழும் அன்புப் பூங்காவாக விளங்கும்.

இறைவனது இரக்கத்தில் நம்பிக்கை வைப்போம்.

இறைவனை நம்பினால் அவரது இரக்கம் நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்கு அழைத்து செல்லும்.

இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும்.

நீர் எங்களோடு பகிர்ந்து கொண்ட உமது இரக்கம் எங்களை எங்களது ஆன்மீக வாழ்வில் விண்ணகம் நோக்கி வழி நடத்துவதாக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment