(லூக்.11:28)
.
இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண் எழுந்து,
" உம்மைத் தாங்கிய வயிறு பேறு பெற்றது" என்றாள்.
இயேசு மறுமொழியாக,
ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.
அன்னை மரியாள் பேறு பெற்றிருப்பதற்குக் காரணமே கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடித்து வாழ்ந்ததே.
அவள் கடவுளின் தாய் என்பதால் அவளைப் பற்றி நாம் பெருமையாக பேசுவது இயல்புதான்.
அன்னை மரியாள் மீது பக்தி உள்ளவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எந்த புனிதர் மீது பக்தி கொண்டிருக்கிறோமோ அவரைப் புகழ்வதிலும், அவரிடம் நமக்கு வேண்டிய உதவிகளைக் கேட்பதிலும் திருப்தி அடைந்து விடுகிறோம்.
வேளாங்கண்ணிக்கு செல்பவர்கள் மாதாவைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.
தாங்கள் கொண்டு சென்ற காணிக்கைகளைச் செலுத்துவார்கள்.
தங்களுக்காக இறைவனிடம் வேண்டி தங்களுக்கு வேண்டிய உதவிகளைப் பெற்று தரும்படி ஜெபிப்பார்கள்.
பெருமையாக பேசினாலும், காணிக்கைகளைச் செலுத்தினாலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான்.
தங்களுக்கு வேண்டிய உதவிகளைக் பெற்றுக் கொள்வது தான்.
குழந்தை வரம், திருமண உதவி போன்ற உதவிகளை கேட்பதற்காகத்தான் அன்னையின் திருத்தலத்திற்கு திரு யாத்திரையாக செல்வார்கள்.
பூசைக் கருத்துகளில் கூட வேண்டிய உதவிகள் தான் குறிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அது உண்மையான பக்தி (Devotion) அல்ல.
இறைவனை உதவிகள் செய்பவர்களாகவும்,
புனிதர்களை உதவிகளைப் பெற்றுத் தருபவர்களாகவும்
மட்டும் நினைப்பது பக்தி அல்ல.
உலக ரீதியாகப் பேசினால் கூட நாம் யார் மீது அன்பு வைத்திருக்கிறமோ அவர்களைப் போலவே வாழ விரும்புவோம்.
காதலியின் அன்பை வெல்வதற்காக தனது நடை உடை பாவனைகளை அவளைப் போலவே மாற்றிக்கொள்ளும் காதலர்களைப் பார்க்கிறோம்.
அவளுக்குப் பிடித்த கலர் உடைகளை அணிவது.
அவளுக்கு பிடித்த ஹோட்டலுக்குப் போவது.
அவளது விருப்பங்களை நிறைவேற்றுவது. etc.
நாம் கடவுளை உண்மையாகவே நேசித்தால் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவரது பண்புகளில் நாம் வளர ஆர்வம் காட்டுவோம்.
அவரைப்போல அனைவரையும் நேசிப்போம்.
நம்மை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்வோம்.
நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை மன்னிப்போம்.
"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"
(மத்.5:48)
என்று நம் ஆண்டவரே கூறியிருக்கிறார்.
வானகதந்தையைப் போல நிறை உள்ளவர்களாய் இருக்க
முயல்பவர்கள் தான் உண்மையான இறை பக்தர்கள்.
அன்னை மரியாளின் அத்தனைப் பண்புகளையும் தங்களுடையவைகளாகக் கொண்டிருப்பவர்கள் தான் உண்மையான மரியாளின் பக்தர்கள்.
மரியாள் தன்னை ஆண்டவரின் அடிமையாக ஒப்புக்கொடுத்தாள்.
எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்படிப்பவன் தான் அடிமை.
என்றும் கன்னியாய் வாழ கடவுளுக்கு வாக்குக் கொடுத்திருந்தாள்.
குழந்தைப் பேறு மீது அவளுக்கு விருப்பமில்லை.
ஆனால் இறைமகனை மனு மகனாய் அவள் பெற வேண்டும் என்பது இறைவனின் சித்தமாக இருந்ததால் அதை ஏற்றுக் கொண்டாள்.
இறைவனும் அவளது கன்னிமைக்கு எந்தவித பழுதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.
தன்னை இறைவனின் அடிமையாக ஒப்புக் கொடுப்பவன் தான் உண்மையான மரியாள் பக்தன்.
ஒருவனுக்கு ஆண் குழந்தை மீது விருப்பம் இருக்கிறது.
ஆனால் அது இறைவனுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தால் இறைவனது விருப்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தனது கன்னிமைக்கு பாதுகாப்பாளராக அவள் சூசையப்பரைக் கணவராக ஏற்றுக் கொண்டாள்.
சூசையப்பர் வான தூதர் மூலம் தெரிவிக்கப்பட்ட இறைவன் சித்தத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்.
மரியாளும் சூசையப்பர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டாள்.
"குழந்தையை எடுத்துக்கொண்டு எகிப்துக்கு செல்"
சென்றார்.
"எகிப்தில் இருந்து திரும்பவும் ஊருக்குச் செல்"
சென்றார்.
"கலிலேயாவுக்கு செல்."
சென்றார்.
சூசையப்பர் வான தூதர் சொன்ன சொல்லைத் தட்டவில்லை.
மரியாள் சூசையப்பர் சொன்ன சொல்லைத் தட்டவில்லை.
இறைமகன் அவர்கள் கையில்.
அதுதான் திருக்குடும்பம்.
உண்மையான மாதா பக்தி மாதாவின் நற்குணங்களை நாமும் கொண்டிருப்பதில் அடங்கியிருக்கிறது.
முழு மனதோடு ஆண்டவருக்கு அடிமையாக,
வாழ்வில் வரும் வியாகுலங்களை ஏற்றுக் கொள்பவர்களாக,
இயேசுவின் சிலுவைப் பாதையில் நடப்பவர்களாக,
சிலுவை அடியில் நிற்பவர்களாக
வாழ்பவர்கள் மட்டுமே உண்மையான மரியாள் பக்தர்கள்.
விண்ணப்பங்களைக் கொடுப்பதற்கு மட்டும் அவளைத் தேடுபவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல.
இறைவனின் சொல்லைக் கேட்டு அப்படியே நடப்பவர்கள் இயேசுவின் அன்னையைப் போலவே பாக்கியசாலிகள்.
"கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்று ஆண்டவர் சொல்கிறாரே,
அன்னை மரியாளை விட பேறு பெற்றவர்களா?
இறைவனது சித்தத்தை ஏற்று நாம் அதன் படி நடக்க வேண்டும் என்ற கருத்தை வலியு.றுத்துவதற்காக
உயர்வு நவிற்சி அணியில் இயேசு பேசுகிறார்.
வானகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment