(லூக்.12:40)
திருடன் தான் திருட வரும் நேரத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு வரமாட்டான். நாம் எதிர்பாராத நேரத்தில் வருவான்.
அதேபோல் தான் மனுமகன் நம்மை அழைக்க வரும் நேரமும்,
அதாவது, மரணமும் இருக்கும்.
இவ்வுலகில் வாழும் நம்மை இயேசு மறு உலகிற்கு அழைத்துச் செல்லும் நேரத்தை மரணம் என்கிறோம்.
ஞானஸ்நானத்தின் போது நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தை மரணம் வரைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
எப்போதாவது நமது பாவத்தினால் அதை இழக்க நேரிட்டால் பாவ சங்கீர்த்தனம் செய்து இழந்த பரிசுத்தத்தனத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மரணத்தின் போது நமது ஆன்மா பரிசுத்தமாக இருந்தால்தான் இறைவனோடு வாழ விண்ணகம் செல்லும்.
சாவான பாவ நிலையிலிருந்தால் நித்திய பேரின்ப வாழ்வை இழக்க நேரிடும்.
பாவத்தினால் பரிசுத்தத்தனத்தை இழக்க நேரிட்டால், மரணம் வரும்போது பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்ளலாம் என்று மெத்தனமாக இருக்கக் கூடாது.
ஏனெனில் மரணம் எதிர்பாராத நேரத்தில் வருமாகையால் மரண நேரத்தில் பாவ நிலையில் இருக்க நேரிடலாம்.
ஆகவே நாம் எப்போதும், ஒவ்வொரு வினாடியும், நமது ஆன்மாவை பாவம் இல்லாமல் பரிசுத்தமாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
எப்படி திருமணத்தின் போது மணமகனின் வருகையை மணமகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ
அதே போல நாமும் ஆண்டவரின் வருகையை ஒவ்வொரு வினாடியும் பரிசுத்தமான ஆன்மாவோடு
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
மரணம் விண்ணகத்தின் வாசல் என்பதால், மரணம் வரும் நேரம் நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்.
எதிர்பாராமல் வரும் மரணத்தை ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன் பாவம் எதுவும் செய்ய மாட்டான்.
எப்போதும் ஆண்டவரின் வருகையை அவரின் நினைவோடு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
விண்ணகப் பேரின்ப வாழ்வு வேண்டுமா?
எப்போதும் பாவம் இல்லாமல் பரிசுத்தமாய் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment