Tuesday, August 31, 2021

"அவர் அதிகாரத் தொனியோடே பேசினதால் அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப்போயினர்! (லூக்.4:32)

"அவர் அதிகாரத்தொனியோடே பேசினதால் அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப் போயினர்.! "
(லூக்.4:32)

இயேசு அவர் சொந்த ஊராகிய நசரேத்திற்குச் சென்று போதித்தபோது, அவரது ஞானத்தைக் கண்டு அவர்கள் வியந்த போதிலும்,

அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.(மத்.13:58)

"இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்கப்படுவதில்லை."
(லூக்.4:24)

என்று அவர் சொன்னபோது

செபக்கூடத்தில் இருந்த அனைவரும் வெகுண்டெழுந்து, 
.
மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்.

ஆனால் அவர்களால் முடியவில்லை.

இயேசு கப்பர்நகூம் ஊருக்கு வந்து, அங்கே மக்களுக்கு ஓய்வு நாளில் போதித்து வந்தார்.

அவர் அதிகாரத்தொனியோடே பேசினதால் 

அங்குள்ள மக்கள்
அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப் போயினர்.

அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டதால்

அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெல்லாம் பரவியது.

இயேசுவின் நாசரேத்தூர் அனுபவத்துக்கும், கப்பர்நகூம் அனுபவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தியானித்தால் ஒரு முக்கியமான ஆன்மீக உண்மை நமக்குப் புரியும்.

இயேசு நாசரேத்தூரில் சுமார் 27 ஆண்டுகள் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்.

அதிலும் ஒரு தச்சு தொழிலாளி.

ஆகவே அனைத்து மக்களுக்கும் அவருடன் பழக்கம் இருந்திருக்கும்.

நிச்சயமாக அவருடைய நல்ல குணங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அவரோடு ஒரு தச்சு தொழிலாளி என்ற முறையில்தான் பழகியிருப்பார்களே ஒழிய 

மனித உரு எடுத்த இறைமகன் என்ற முறையில் அல்ல.

அவரது போதனையைக் கேட்டு வியந்தார்கள். 

ஆனால் மெசியாவைப் பற்றிய தீர்க்கதரிசன வசனத்தை வாசித்துவிட்டு 

" நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று "

என்று சொன்னது அவர்களுக்கு புரிந்திருக்காது.

ஆகவே அவர் மீது அவர்களுக்கு விசுவாசம் ஏற்படவில்லை.

ஆனால் கப்பர்நாகூமுக்கு அவர் புதியவர்.

ஆகவே அவர் அதிகாரத்தொனியோடே 
போதித்ததோடு புதுமைகளும் செய்ததால்  

அவரைப்பற்றிய புகழ் சுற்றுப்புறமெல்லாம் பரவியது.

இயேசுவின் நாசரேத்தூர் அனுபவத்துக்கும், 

கப்பர்நகூம் அனுபவத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இரண்டு இடங்களிலும் போதித்தவர் அதே இயேசு.

நாசரேத்தூர் மக்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.

கப்பர்நகூம் ஊர் மக்களிடம் விசுவாசம் இருந்ததால் புதுமைகள் பல செய்தார்.

விசுவாசம் இறைவன் நமக்கு தரும் நன்கொடை தான்.

இறைவன் தரும் நன்கொடையை ஏற்றுக்கொள்வதும், அதைப்பற்றி அக்கரை காட்டாதிருப்பதும் நமது சுதந்திரத்தைச் சார்ந்தது.

நாசரேத்தூர் மக்களிடம் தான் மெசியா என்பதற்கான வேத வசனத்தை இயேசு வாசித்து காண்பித்ததே அவர்களுக்கு விசுவாசத்தை ஊட்டுவதற்காகத்தான்.

ஆனால் அவர்கள் இவர் "சூசையின் மகனன்றோ" என்பதைக் கடந்து செல்லவில்லை.

ஆனால் கப்பர்நாகூமில் புதுமைகள் செய்தார் என்பதே அவர்கள் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு சான்று.

இவ்விரு ஊர்  மக்களின் விசுவாசம் இன்மையும், விசுவாசமும் நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன?

நாம் உலக வரலாற்று நூல்களை படிக்கும்போது வரலாற்று  நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே படிக்கிறோம்.

ஆனால் பைபிள் வாசிப்பது வெறுமனே உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்ல,

நாம் தெரிந்துகொண்ட இறைச் செய்தியை நமது வாழ்வாக மாற்ற,

பைபிள் செய்தி நம் வாழ்வாக மாறவில்லை என்றால் பைபிள் வாசித்துப் பயனில்லை.

அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இரட்சகர் அதே இயேசு தான்.

ஒரே கம்பெனி காபியை மூன்று பேர் குடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஒருவன் காபி மிகவும் ருசியாக இருக்கிறது என்கிறான்.

ஒருவன் காபி அவ்வளவு ருசியாக இல்லை என்கிறான்.

ஒருவன் காபியில் ருசியே இல்லை என்கிறான்.

தவறு காபியில் இருக்கிறதா அல்லது குடிக்கின்றவர்களின் நாவில் இருக்கின்றதா?

மூவர் குடிப்பதும் ஒரே கம்பெனி காப்பிதான்.  

 குடிக்கிறவர்களுடைய நாவின் தன்மையை பொறுத்து ருசி மாறுகிறது.


இயேசு மாறாதவர். எல்லோருடைய வாழ்விலும் ஒரே அன்போடும் அக்கரையோடும்தான் செயல்படுகிறார். 

ஆனால் சிலர் புனிதர்களாக மாறிவிடுகிறார்கள்.

சிலர் புனிதர்களாக மாறாவிட்டாலும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்கிறார்கள்.

சிலர் சுமாரான கிறிஸ்தவர்களாக வாழ்கிறார்கள்.

சிலர் கிறிஸ்தவர் எந்த பெயருக்கு பொருத்தம் இல்லாதவர்களாக வாழ்கின்றார்கள்.

ஆனாலும் எல்லோரும் கோவிலுக்கு ஒழுங்காக போகின்றார்கள்,

திருப்பலி காண்கின்றார்கள்,

செபம் சொல்லுகிறார்கள்.

ஒரே இயேசுவை வழிபடுகிறார்கள்.

ஒரே இயேசுவை உட்கொள்கிறார்கள்.

 ஏன் வித்தியாசமாக வாழ்கின்றார்கள்?


அவரவர்களுடைய விசுவாசத்தின் தன்மைக்கு ஏற்ப வாழ்வும் மாறுபடுகிறது, இயேசுவின் தன்மைக்கு ஏற்ப அல்ல.


இயேசு ஒரே மாதிரிதான் செயல்படுகிறார். நமது விசுவாசத்திற்கு ஏற்ப நமது வாழ்வு இருக்கிறது.

எல்லோரும் அதை இயேசுவைத்தான் உணவாக அருந்துகிறோம்.

ஆனால் வாழ்க்கை ஒரே மாதிரியாக மாறுவது இல்லை.

"இயேசுவே, அந்தோனியாரும், நானும் உம்மைத்தான் கும்பிடுகிறோம். 

அவரால் புதுமைகள் செய்ய முடிகிறது, 

என்னால் முடியவில்லையே, 

ஏன் இப்படி ஆள் பார்த்து உதவி செய்கிறீர்?"

"மகனே, நீங்கள் இருவருமே எனது பிள்ளைகள்தான். 

அவர் பெரிய விசுவாச பாத்திரத்தை கொண்டுவருகிறார், நீ சிறிய விசுவாச பாத்திரத்தை கொண்டு வருகிறாய்.

 இருவருக்குமே பாத்திரம் நிறையவே அருளை ஊற்றுகிறேன்.

நீ பெரிய விசுவாச பாத்திரத்தை கொண்டு வா.

 நிறைய அருள் கிடைக்கும்.

உனக்கு கிடைக்கும் அளவுக்கு நீதான் பொறுப்பு."

"நீர் அவருக்கு பெரிய பாத்திரமாக கொடுத்திருக்கிறீர்."

"இருவருக்குமே ஒரே மாதிரிதான் கொடுத்தேன். அவர் பெரிய பாத்திரமாக வேண்டும் என்று கெஞ்சி கேட்டார்.

 கொடுத்தேன்.  நீயும் கேள், தருகிறேன்.

 கேட்டால்தான் கிடைக்கும்.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நான் சொல்லி இருக்கிறேன்.

 அவர் அதிகமான விசுவாசத்தை கேட்டார். கொடுத்தேன்.

 நீ தின்பண்டம் கேட்கிறாய். கொடுக்கிறேன்.

 நீயும் அதிகமான விசுவாசத்தை கேள். தருகிறேன்.

மற்றவர்களைக் குறை சொல்லாதே."

"ஆகட்டும், ஆண்டவரே. இனிமேல் விசுவாசத்திற்காக மட்டுமே செபிப்பேன்.

வேறு ஒன்றும் கேட்க மாட்டேன்."

"Very good.  நல்ல பிள்ளை."

நாமும் நல்ல பிள்ளைகளாக மாறுவோம்.

விசுவாசத்தை மட்டும் ஆண்டவரிடம் கேட்போம்.
'
அவர் அதையும் தந்து, 

நாம் கேட்காத மற்ற தேவைகளையும் தருவார்.

ஒரு தந்தை தன் மகனிடம்,

"என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கேள். வாங்கித் தருகிறேன்."
என்றார்.

"அப்பா, உங்கள் Purse ல் இருக்கும்
A.T.M Card யும், அதற்குரிய PIN நம்பரையும் மட்டும் தாருங்கள்.

வேறு எதுவுமே வேண்டாம்."

"புத்தியுள்ள பையன். இந்தா பிடி." என்று சொல்லி, கொடுத்தார்.

ஆன்மீகத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய A.T.M Card விசுவாசம்.

முழுமையான விசுவாசம் மட்டும் இருந்தால் போதும்.

கடவுளே நம்  கையில்தான்.

லூர்து செல்வம்.

Monday, August 30, 2021

நாசரேத் ஊரில் இயேசு.

நாசரேத் ஊரில் இயேசு.

இயேசு தனது நற்செய்திப் பணியைக் கலிலேயாவில் ஆரம்பித்தார். .

யூதர்களுடைய செபக்கூடங்களில் அவர் போதித்துவந்தார்.

கப்பர்நகூம் ஊரில் போதித்துவிட்டு,

 தான் பொது வாழ்வில் புகுந்த நாள் வரை வாழ்ந்த நாசரேத் ஊருக்கு வந்தார்.

ஓய்வுநாளன்று செபக்கூடத்திற்கு வந்து வாசிக்க எழுந்தார்.

இசையாஸ் எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருளை அவரிடம் கொடுத்தனர். 

அதை விரித்ததும் பின்வரும் பகுதியைக் கண்டார்.
"ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷேகம் செய்துள்ளார்.

 "எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், 

சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், 

ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,

 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார் ".

என்ற தன்னைப்பற்றி எழுதப்பட்ட தீர்க்கதரிசன வரிகளை வாசித்தார்.

வாசித்துவிட்டு
" நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " என்று கூறினார்.

இயேசுவின் கூற்று மக்களிடையே இரண்டு விதமான எதிர் எதிர்வினைகளை (Opposite Reactions)
ஏற்படுத்தியது.

ஒரு சாரார் அவரை பாராட்டினார்கள்.

"இவர் சூசையின் மகனன்றோ?

இந்நாள்வரை நம்மிடையே வாழ்ந்து வந்திருந்த இவருக்கா இவ்வளவு ஞானம்?"

என்று ஆச்சரியப்பட்டார்கள்.

யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்து,

 ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் எகிப்தில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து விட்டு,

 அதன் பிறகு முப்பதாவது வயது வரை அவர்களிடையே தச்சு வேலை செய்து வாழ்ந்து வந்தவர் இயேசு.

அவர்களுக்கு அவர் இறைமகன் என்றோ, மெசியா என்றோ தெரியாது.

அவர்களை பொறுத்தமட்டில் அவர் சூசையின் மகன்.

அவரோடு தச்சு வேலை செய்தவர்.

ஆகவே அவரது ஞானம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மெசியாவை பற்றிய தீர்க்கதரிசன வாக்கியங்களை வாசித்துவிட்டு,

" நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " 

அதாவது,

"இந்த தீர்க்கதரிசன வசனங்கள் | என்னைப் பற்றியே."

இதைப்பற்றிய ஆச்சர்ய எதிர்வினையோடு அதற்கு  நேர் எதிர்மாறான எதிர்வினை ஒன்றும் எழுந்தது.

"இவற்றைக் கேட்டுச் செபக்கூடத்தில் இருந்த அனைவரும் வெகுண்டெழுந்து,

 அவரை ஊருக்கு வெளியே தள்ளி, அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்."

இயேசுவின் வார்த்தைகள் ஜெபக்கூடத்தில் இருந்தவர்கள் அவரைக் கொல்லத் துணியும் அளவிற்குஅவர்கள் மனதில் கோபத்தை ஊட்டியிருக்கின்றன.


''சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளைப் பார்த்து, "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்: எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்." (லூக்.2: 34)

என்ற இறைவாக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

இயேசு ஒருவர்தான்.
அவர் கொடுத்த செய்தியும் ஒன்றுதான்.

அது ஏற்படுத்திய எதிர்வினைகள் இரண்டு,

ஆச்சர்யம்.
கோபம்.

நற்செய்தி அறிவிப்பின் ஆரம்பக்கட்டத்திலேயே
அவரது சொந்த ஊரிலேயே 

இறைச் செய்தியை மக்கள் எப்படி எப்படி ஏற்றுக் கொள்வார்கள்

என்பது தெளிவாகிவிட்டது.

இயேசு செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த மூன்று ஆண்டுகளுமே 

ஒரு சாரார் விசுவாசத்துடன் குணம் பெறவும், நற்செய்தியைக் கேட்டு  பயன் பெறவும், மீட்பு அடையவும் அவர் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள்.

மற்றொரு சாரார் அவரைக் கொல்வதற்காகவே அவர் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள்.

இதில் அடங்கியருக்கின்ற இன்னொரு அதிசயம்,

விஷமே மருந்தாகி விடுவதுபோல,

இரண்டாவது சாராரின் கொலை தான் முதல்  சாராரின் மீட்புக்கு காரணமாக இருந்தது.

ஆம், இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரித்துதானே மக்களுக்கு மீட்பு பெற்றுத் தந்தார்!

அவரது சிலுவை மரணத்திற்கு காரணமானவர்கள் அவரைத் கொன்றவர்கள்தானே!

ஆனாலும் அவர்கள் செய்த கொலையை நியாயப்படுத்த முடியாது.

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க இறைவனால் முடியும் என்பதே உண்மை. 

இயேசுவின் சொந்த ஊர்காரர்கள் அவரை கொல்வதற்கு தள்ளிக்கொண்டு போனார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் இயேசு 

அவர்களிடையே நடந்து தம் வழியே போய்விட்டார்.

ஏனெனில் தனது மரணத்திற்கு என்று தான் குறித்த நேரம் இன்னும் வரவில்லை.

அன்று இயேசு வாழ்ந்த காலத்தில் என்ன நடந்ததோ அதே தான் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. 

ஏனெனில் இன்றும் இயேசு நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!

இன்றும் நற்செய்தியை கேட்டவுடன் இயேசுவைகாகவே வாழ்ந்து அவருக்காகவே தங்கள் உயிரை தியாகம் செய்ய கிறிஸ்தவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

நற்செய்தியை கேட்டவுடன் கிறிஸ்தவர்களை கொல்லவும் கிறிஸ்தவத்தை ஒழிக்கவும் ஒரு கூட்டம் தயாராக காத்து கொண்டிருக்கிறது.

இன்றும் கிறிஸ்தவ சமயம் வேகமாக பரவ காரணமாக இருக்க போகின்றவர்கள் அதை அழிக்க எண்ணுபவர்கள் தான்!

இது ஒரு வரலாற்று உண்மை.

வேத சாட்சிகளின் இரத்தம் தான் கிறிஸ்தவத்தின் வித்து.

ஒரு பந்தை எந்த அளவிற்கு வேகமாக கீழ் நோக்கி அடிக்கிறோமோ அந்த அளவுக்கு வேகமாக அது மேல் நோக்கிச் செல்லும்!

இது விஞ்ஞான உண்மை.

இங்கு மற்றொரு உண்மையையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

  இறைவனுக்கு விரோதமான சாத்தானின் ஒவ்வொரு முயற்சியும்  சாத்தானுக்கு எதிராகவே திரும்பும்.

ஒரு பழத்தைக் காண்பித்து மனுக்குலத்தை இறைவனுக்கு எதிராக திருப்ப முயற்சி செய்தான்.

ஆனால் அந்த முயற்சியின் விளைவு கடவுளே மனிதனாக பிறந்தார்! சாத்தானின் பிடியிலிருந்து மனிதரை மீட்க.

மக்களை இரட்சிக்க பிறந்தவரை கொன்றுவிட்டால் மக்கள் இரட்சிக்கப்பட முடியாது என்று எண்ணி இயேசுவை கொல்ல திட்டமிட்டான். 

ஆனால் அதுதான் மக்கள் இரட்சிப்பு பெற காரணமாகவே ஆகிவிட்டது.

இன்றும் கிறிஸ்தவர்களை துன்புறுத்தினால் கிறிஸ்தவம் அழிந்து விடும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்

 ஆனால் அவனது இந்த செயலின் விளைவாகத்தான் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

அன்றும் சரி, இன்றும் சரி கிறிஸ்தவத்தின்  எதிரிகளால் அதை  அழிக்க முடியாது.

அந்த முயற்சியால் அதுதான் மேலும் மேலும் வளரும்.

 நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலை கிறிஸ்தவம் இங்கு வளர்வதற்கு ஏற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது.

வேதசாட்சிகளின் இரத்தத்தில்தான் கிறிஸ்தவம் வேகமாக வளரும்.

கிறிஸ்தவம் பிறந்ததே இறைமகனின் இரத்தத்தில்தான்.

அது வளர்ந்தது இறைமக்களின் இரத்தத்தில்.

நாம் இயேசுவின் இரத்தத்தைக் குடிப்பதே அவருக்காக அதை சிந்துவதற்காகத்தான்

திருச்சபையின் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இதற்குச் சான்று.

லூர்து செல்வம்

Sunday, August 29, 2021

"கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கடைப்பிடிக்கிறீர்கள்"(மாற்கு, 7:8)

"கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கடைப்பிடிக்கிறீர்கள்"
(மாற்கு, 7:8)

இயேசுவின் சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் உண்பதைப் பார்த்த சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து,

"முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்?"  என்று கேட்டார்கள்.

இயேசுவைப் பொறுத்தமட்டில் சாப்பிடுமுன் கைகளைக் கழுவ வேண்டுமா வேண்டாமா என்பது முக்கியமல்ல.

அவர் கடவுள்.

 அவர் மனிதனாக பிறந்தது மக்களின் ஆன்மீக மீட்புக்காக,

 ஆன்மீக மீட்புக்கான நற்செய்தியை அறிவிக்க,

உடல் சார்ந்த சுகாதார விதிகளைப் போதிக்க அல்ல

ஆகவே "கைகளை கழுவிட்டு சாப்பிடுங்கள்.

 அப்போதுதான் உடல் நலமாக இருக்கும்'

 என்று அறிவுரை கூறுவது அவரது வேலை அல்ல.

"கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள், அப்போதுதான் மீட்பு கிடைக்கும்." என்று சொல்லவே அவர் போதித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் பரிசேயரோ 

கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு 

மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

ஆகவே உடல் நலத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்மீக நலத்திற்குக் கொடுக்காததற்காக அவர்களைக் கண்டிக்கிறார்.


"கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கடைப்பிடிக்கிறீர்கள்"

(சாப்பிடும் முன் கை கழுவ வேண்டும் என்பது கடவுளுடைய கட்டளை அல்ல, மனிதருடைய பரம்பரை வழக்கம்)

"உங்கள் பரம்பரையைக் கடைப்பிடிக்கக் கடவுளுடைய கட்டளையை எவ்வளவு நன்றாக வெறுமையாக்குகிறீர்கள்!
 என்கிறார்.

கை கழுவாமல் சாப்பிடுவதால் 
புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே செல்லும் அழுக்கு நமது ஆன்மாவை மாசுபடுத்தாது,

ஆனால் மனதில் கெட்ட எண்ணங்கள் இருந்தால்,
 அவை உள்ளே இருந்தாலும், 
வெளியே வந்தாலும்
ஆன்மாவை மாசுபடுத்தும்.

ஆசிரியர் பாடம் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களிடம்,

 "ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்" 

என்று சொன்னார்.

 ஒரு மாணவன் எழுந்து,

"சார் வகுப்பிற்கு வெளியே ஏதோ வினோதமான சப்தம் கேட்கிறது, அது என்ன?

 என்று கேட்டான்.

 ஆசிரியர் என்ன சொல்லுவார்?

"அப்போ நீ நான் நடத்திய பாடத்தை கவனிக்க வில்லை.

வகுப்பிற்கு வெளியே கேட்கிற சப்தத்தை தான் கவனித்திருக்கிறாய்."

என்றுதானே சொல்லுவார்.

இயேசு நற்செய்தி அறிவிக்க வந்திருக்கிறார். பரிசேயர்கள் அவரிடம்,

"உமது சீடர்கள் ஏன் கைகழுவாமல் சாப்பிடுகிறார்கள்?"

என்று நற்செய்திக்கு சம்பந்தமில்லாத கேள்வியை கேட்கிறார்கள்!

இயேசு பரிசேயரை வெளிவேடக்காரர்கள் என்கிறார்.

மனதில் ஒன்றை வைத்துக் கொண்கொண்டு அதற்கு எதிர்மறையாய் வாழ்பவன் தான்
வெளிவேடக்காரன.

வெளிப்பார்வைக்கு மோயீசன் சட்டப்படி நடக்கும் ஆன்மீகவாதிகள் போல் காட்டிக்கொள்கிறார்கள்.

ஆனால் மனதளவில் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது  ஆன்மீகம் இல்லாத உலக பரம்பரை வழக்கங்களுக்கு.

இசையாசின் கூற்றுப்படி

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது."

அவர்கள்  இறைவனை புகழ்வது உதடுகளால் மட்டுமே.

உள்ளத்தில் இறைவன் இல்லை.


நம்மைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் பூசைக்கு புறப்படுகிறோம்.

பல்தேய்த்து, குளித்துவிட்டு, சுத்தமான கவர்ச்சியான உடை அணிந்து, தலை சீவி, கண்ணாடியைப் பார்த்து நம்மை நாமே ரசித்துவிட்டு  
கோவிலுக்குப் போகிறோம்.

உடல் ரீதியாக ரெடி.

கோவிலுக்கு போவது ஆன்மீக செயல். அதற்கு நாம் ஆன்ம ரீதியாக ரெடியா என்று நம்மை நாமே கேட்டிருக்கிறோமா?

ஆன்ம பரிசோதனை செய்து,
தேவைப் பட்டால் 

ஆன்மாவைச் சுத்தப்படுத்துவதற்காக

 பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோமா?

உடல் சுத்தத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்ம சுத்தத்திற்குக் கொடுக்கிறோமா?

சிந்தித்துப் பார்ப்போம்.

சமய விழாக்கள் கொண்டாடும்போது நாம் உலக  ஆடம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

 ஆன்மீக எளிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

பிரபஞ்சத்துக்கே அதிபதியான கடவுள்

நித்திய காலமாக திட்டமிட்டு 

ஒரு மாட்டுத் தொழுவத்தில்

  மிக ஏழை  குழந்தையாய்ப் பிறந்தார்.

நாம் ஏழ்மையை மதிக்க நமக்கு முன்மாதிரிகை காட்டுவதற்காக ஏழையாய்ப் பிறந்தார்.

நாம் ஏழை இயேசுவின் விழாவாகிய கிறிஸ்மசை ஆன்மீக எளிமையுடன் கொண்டாடுகிறோமா?

அல்லது,

 பணக்காரத்தனமாகக் கொண்டாடுகிறோமா?

கிறிஸ்து பிறந்ததைவிட நமக்கு முக்கியம் விலை உயர்ந்த உடை, மட்டன் பிரியாணி சாப்பாடு, ஆடம்பரமான கொண்டாட்டம்! 

  கிறிஸ்மஸ் திருவிழாவை எளிமையாகக் கொண்டாடினால்தான்

நாம் ஏழை பாலகன் இயேசுவின் சீடர்கள்.

நமது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஆன்மீகத்தை விட  உலக ஆடம்பரம்தான் அதிகம் இருக்கிறது.


அன்னை மரியாளுக்கு விழா எடுக்கும் போது நம் அன்னையை சப்பரத்தில் சுமக்கும் அளவிற்கு மனதில் சுமக்கிறோமா?

 நம் அன்னையை நமது மனதில் சுமந்தால் அவளது அத்தனை நற்குணங்களும் நம்மிடமும் ஒட்டிக் கொள்ள வேண்டுமே!

அன்னையின் தாழ்ச்சி நம்மிடம் இருக்கிறதா?

அன்னை நம்மிடமிருந்து
எதிர்பார்ப்பது எளிமையை, ஆடம்பரத்தை  அல்ல.

ஒவ்வொரு விழாவின் போதும் நமது ஆன்மீகம் வளரவேண்டும்.

ஆன்மீகம் வளரவேண்டும் என்றால் லௌகீகம் தேய வேண்டும்.

கல்யாண வீட்டிற்குப் போனால் வயிறார விருந்து கிடைக்கிறது.

அதுபோல கோவில் திருவிழாவிற்குச் சென்றால் ஆன்மாவிற்கு அருள் விருந்து கிடைக்க வேண்டும், பிரியாணி விருந்து அல்ல.

இறைவனுக்கு விழா எடுப்பது இறைவனை விளம்பரப்படுத்த அல்ல,

இறைவனை மற்றவர்களுக்குக் கொடுக்க.

நாம் வாழ்வது கடவுளுடைய கட்டளைகளை அனுசரிக்க.

 மனிதர்களுடைய பரம்பரையைக் கடைப்பிடிக்க அல்ல.

லூர்து செல்வம்.

Friday, August 27, 2021

"ஐயா! நீர் என்னிடம் ஐந்து தாலந்து ஒப்படைத்தீர். இதோ! இன்னும் ஐந்து தாலந்து சம்பாதித்துள்ளேன்"(மத். 25:20)

"ஐயா! நீர் என்னிடம் ஐந்து தாலந்து ஒப்படைத்தீர். இதோ! இன்னும் ஐந்து தாலந்து சம்பாதித்துள்ளேன்"
(மத். 25:20)

"ஏங்க, bed coffee ready."

'ஏண்டி, நான் bed ஐ விட்டு எழுந்து அரைமணி ஆகிறது. இப்போ
bed coffee ready ங்கிற?

இப்போ அது table coffee. Table ல்ல coffee ஐ வை."

" coffee ஐ ஊற்ற தான் முடியும். வைக்க  முடியாது."

", குடிக்க முடியுமா?"

" முதலில் எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள். அதற்குள்ள காபி ஆறிவிடும். குடிப்பது எளிது."


", முதல்ல சந்தேகத்தை சொல்லு."

"தாலந்துகள் உவமை வாசித்தீங்களா?"

", வாசித்துவிட்டேன். அதைப் பற்றிதான் எழுதப்போகிறேன்."

"எனது சந்தேகம் நீங்கள் எழுதுவதற்கு உதவியாக இருக்கும்."

",ரொம்ப சந்தோஷம். முதல்ல சந்தேகத்தை சொல்லு."

"அந்த உவமையில் வருகிற பெரியவர் தனது ஊழியர்களுக்கு தாலந்துகள் கொடுத்து உதவுகிறார்.

அதேபோல கடவுளும் நமக்கு தருகிறார் என்பதைத்தானே உவமை மூலம் இயேசு நமக்கு சொல்ல விரும்புகிறார்!"

", ஆமா, அதில் என்ன சந்தேகம்?"

"நான் யோசித்து, யோசித்து பார்க்கிறேன். எனக்கு எதையுமே தந்ததாக தெரியவில்லை."

",கர்த்தர் கர்ப்பித்த ஜெபத்தில் தந்தையை நோக்கி 

"எங்கள் அன்றாட உணவை, இன்று எங்களுக்குத் தாரும்."
என்று கேட்கிறாயா?"

"ஆமா. அதனால்தான் தினமும் உணவு குறைவில்லாமல் கிடைக்கிறது."

",நீ எந்த உணவை சொல்கிறாய்?"

"சாப்பிடுகிற உணவைத்தான்." 

",அதாவது வாய்வழியாக சாப்பிடுகிற உணவையா?"

"வாய்வழியாகத்தானே சாப்பிட முடியும்!''

",நமது உடலுக்கு வேண்டிய உணவை வாய்வழியாக தான் சாப்பிட முடியும்.

நமக்கு ஆன்மா என்று ஒன்று இருக்கிறது, தெரியுமா?''

"இது என்னங்க கேள்வி இது.
இதுகூட தெரியாம இருப்பாங்களா?"

", தெரிந்திருந்தால் இந்த சந்தேகமே வந்திருக்காதே!
எப்போதாவது உனது ஆன்மாவிற்கு வேண்டிய உணவை கேட்டிருக்கிறாயா?"

" அப்படி தனியாக எந்த உணவையும் கேட்கவில்லை.
இயேசு கற்றுத்தந்த செபத்தை அப்படியே சொல்கிறேன். அவ்வளவுதான்."

",  ஆன்மாவின் வளர்ச்சிக்கு வேண்டிய உணவு எது என்றாவது தெரியுமா?"

" ஆன்மாவுக்கு உருவமே இல்லை. அது எப்படிங்க வளரும்?"

", ஆன்மாவின் வளர்ச்சி  என்றால் ஆன்மீக வாழ்வில் நாம் பெறும் வளர்ச்சி.

ஆன்மீக வாழ்வில் நாம் வளர வேண்டிய உணவு எது?"

"திவ்ய நற்கருணை என்று நினைக்கிறேன்."

", Correct. ஆனாலும் புதுநன்மை வாங்கிய பிறகுதான் நற்கருணை வாங்க முடியும்.

எட்டு வயதில் சிறுவர்கள் புதுநன்மை வாங்குகிறார்கள்.

அதுவரையிலும் ஆன்மிகத்தில் வளர உணவு வேண்டாமா?"

" புரிகிறது. ஆன்மீக வாழ்வில் வளர வேண்டிய உணவு இறைவனது அருள்.

ஆன்மீக வாழ்வையே அருள் வாழ்வு என்றுதான் அழைக்கிறோம்.

இப்பொழுது சிறுவயதில் ஞான உபதேச வகுப்பில் படித்தது ஞாபகத்திற்கு வருகிறது.

தேவ இஸ்டப்பிரசாதம் (Sanctifying grace)
எனப்படும் அருள் நமது ஆன்மாவிற்கு உயிர் அளிக்கிறது.

இறைவனோடு நமக்கு உறவை ஏற்படுத்துகிறது.

உதவி வரப்பிரசாதம் (Actual grace)
நற்செயல்கள் புரிய உதவியாக இருக்கிறது."

",நாம் ஞானஸ்நானம் பெறும்போது நமக்கு இறைவனால் அளிக்கப்படுகின்ற  
தேவ இஸ்டப்பிரசாதம்தான் நமக்கும் இறைவனுக்கும் உறவை ஏற்படுத்துகிறது.

நாம் பெற்ற தேவ இஸ்டப்பிரசாதத்தை நமது வாழ்நாள் முழுவதும் இழக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நாம் சாவான பாவம் செய்ய நேரிட்டால் தேவ இஸ்டப்பிரசாதத்தை இழந்து விடுவோம்.

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து இழந்த தேவ இஸ்டப்பிரசாதத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

நாம் மரணிக்கும் போது நம்முடன் 
தேவ இஸ்டப்பிரசாதம் இருந்தால்தான் விண்ணரசுக்குள் நுழைய முடியும்.

நாம் நற்செயல் புரிய 
உதவி வரப்பிரசாதம் உதவியாக இருக்கிறது."

"தாலந்துகளுக்கும், அருளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?"

",நாம் ஆன்மீக வாழ்வை ஆரம்பிக்கும்போது இறைவன்  நமக்கு இலவசமாக தனது அருளைத் தருகிறார்.

நாம் பெற்ற அருளை இழக்காமல் பாதுகாப்பதோடு அதில் வளரவும் வேண்டும்.

அருளில் வளர்வதில்தான் நமது ஆன்மீக வளர்ச்சி இருக்கிறது."

"அருளில் வளர்வது எப்படி?"

",அருளுக்கு உரிமையாளர் இறைவன் மட்டுமே.  அவரிடமிருந்து கேட்டு, பெற்று நம்மிடம் உள்ள அருளின் அளவை அதிகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை நற்செயல் புரியும் போதும் அதற்கு வேண்டிய அருளை இறைவனிடம் கேட்க வேண்டும்.

இறை அருளின் உதவியால் நாம்  புரிந்த நற்செயலும் நமக்கு இறை அருளைப் பெற்றுத் தருகிறது. 

நாம் தினமும் செய்ய வேண்டிய நற்செயல்களை செய்ய வேண்டிய அருளைத்தான் 

ஒவ்வொரு முறை கர்த்தர் கற்பித்த செபத்தில் கேட்கிறோம்.

அந்த அருள்தான் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு வேண்டிய அன்றாட உணவு.
 
நாம் செய்யும் நற்செயல்கள்தான் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகின்றன.

நற்செயல் புரிய தேவையான உணவாகிய அருளைக் கேட்டுப் பெறுகிறோம்.

ஒவ்வொரு நற்செயலுக்கும் சன்மானமாக இறையருள் கிடைக்கிறது.

நமது செபத்தின் மூலமும், நற்செயல்களின் மூலமும் நாம் அருளில் வளர்கிறோம். 

தாலந்துகளை பெற்றவர்கள் அதன் அளவை அதிகரிப்பது போல,

நாம் இறைவனிடமிருந்து பெற்ற அருளையும் அதிகரித்துக்கொண்டே வாழ வேண்டும்.

உண்மையில் நாம் வாழ்வதே இறையருளில் வளர்வதற்காகத்தான்."

"அதாவது ஆன்மீக வாழ்வில் நாம் வளர்வதற்குத் தேவையான அருளை

 அருளின் ஊற்றாகிய ஆண்டவரிடமிருந்தே பெறவேண்டும்.

வேறு எந்த வழியில் இறையருளை ஈட்டலாம்?"

", நமது செபம், தவம், தர்மம், தேவத் திரவிய அனுமானங்கள்  மற்றும் நமது நற்செயல்கள் மூலமே இறையருளை ஈட்டலாம்.

காலையில் எழும்போது நம்மிடம் எவ்வளவு அருள் இருந்ததோ அதைவிட பன்மடங்கு அதிகமாக இரவில் படுக்கப் போகும்போது இருக்க வேண்டும்.

நாம் வாழ்வதே அருளை ஈட்டுவதற்காக தான்."

"ஆனால் நாம் பொருளை ஈட்டுவதில் அல்லவா குறியாக இருக்கிறோம்!"

", பொருளை ஈட்டுவதில் தவறு ஒன்றும் இல்லை.

சரியான முறைப்படி பொருளீட்டுவதே நமக்கு அருளைக் கொண்டு வரும்.

ஈட்டிய பொருளை பிறரன்பு செயல்களுக்கு  பயன்படுத்தும்போது சன்மானமாக மிகுதியான இறையருள் கிடைக்கும்."

"அதாவது உலக வாழ்வை கூட அருளுக்காக வாழ்ந்தால் அது ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது. சரியா?"

", சரி.  சிலர் தாலந்து திறமைகளை (Talents) மட்டுமே குறிக்கும் என்று எண்ணுகிறார்கள்.

நமக்கு கடவுள் தருவது எல்லாமே தாலந்துகள் தான்.

ஆன்மீக வாழ்வின் ஆரம்பத்தில் நமக்கு ஆண்டவர் தருகின்ற அவரது அருளை  

அவரது உதவியாலே பன்மடங்கு பெருக்கி 

விண்ணகத்துக்கு போகும்போது நம்முடன் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வுலகில் நாம் ஈட்டுகிற பொருள் எதுவும் நம்மோடு வராது.

அருள் மட்டுமே நம்மோடு வரும்.

 ஆண்டவர் தந்த அருளை பன்மடங்கு பெருக்கி அவரிடம் கொண்டு போகும்போது அவர் மிகவும் மகிழ்வார்.

மோட்சத்தில் பன்மடங்கு சன்மானம் தருவார்."

"சரி, இதுவரை நாம் பேசியதை அப்படியே எழுதி விடுங்கள்.

நான் உங்களுக்கு உதவியதற்கு நன்றியாக ஆறிப்போன காபியைக் குடிச்சிடுங்க."

''அது ஒரு ஒறுத்தல் முயற்சி. அதற்கும் இறையருள் பரிசாகக் கிடைக்கும்."

லூர்து செல்வம்.

Thursday, August 26, 2021

" அவர்கள் கையில் விளக்கு எடுத்துப் போனார்கள்." (மத்.25:1)

" அவர்கள் கையில் விளக்கு எடுத்துப் போனார்கள்." (மத்.25:1)

இயேசு விண்ணரசை மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு ஒப்பிடுகிறார். 

பத்துப் பேரும் கையில் விளக்குகளுடன் மணமகன் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

அவர்களுள் ஐவர் விவேகிகள். 

 ஐவர் அறிவிலிகள்


விவேகிகள் விளக்குடன் ஏனத்தில் எண்ணெயும் எடுத்துக்கொண்டார்கள். 

அறிவிலிகளிடம் போதுமான அளவிற்கு எண்ணெய் இல்லை.

மணமகன் வரக் கால தாமதம் ஆகியது.

விவேகிகளிடம் போதிய அளவு எண்ணெய் இருந்ததால் மணமகன்
வரும்போதும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

ஆனால் அறிவிலிகளிடம்  போதிய அளவு எண்ணெய் இல்லாததால் மணமகன் வரும்போது அவை மங்க ஆரம்பித்தன.

மணமகன் வந்தபோது விவேகிகள் விளக்குகளுடன் அவருடன் மணவீட்டில் நுழைந்தனர். கதவு அடைக்கப்பட்டது.

ஆனால் அறிவிலிகளின் விளக்குகள் எண்ணெய் இன்மை காரணமாக எரிய மறுத்ததால் அவர்களால் விவேகிகளோடு மணவீட்டில் நுழைய முடியவில்லை.

இந்த பத்து கன்னியர் உவமையை நமது ஆன்மீக வாழ்வுடன் ஒப்பிட்டு தியானிப்போம்.

நாம் விண்ணரசு வந்தவுடன் அதனுள் நுழைய இவ்வுலகில் காத்துக் கொண்டிருக்கிறோம்.

உவமையில் வரும் விளக்கு நம்மிடம் உள்ள விசுவாசம். (Faith)

விசுவாச விளக்கு   ஒளி வீசி எரிந்து கொண்டிருந்தால்தான் விண்ணரசுக்குள் நுழைய முடியும்.

விசுவாச விளக்கு   ஒளி வீசி எரிய தேவையான எண்ணெய் நமது நற்செயல்கள்.

நற்செயல்கள்  என்ற எண்ணெய் இல்லாவிட்டால் விசுவாச விளக்கு அனைந்து விடும்.

Faith will die without good works.

"ஆன்மாவை இழந்த உடல் எப்படி உயிரற்றதோ, அப்படியே செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே ."
(யாகப்.2:26)

நாம் செய்யும் பிறரன்பு செயல்கள்தான் நமது விசுவாசத்தை உயிரோடு வாழ வைப்பவை,  

விசுவாசத்தின் மூலம் கடவுளை நமது தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம்.

நமது தந்தையையும், அவரது மற்ற பிள்ளைகளையும் நேசிக்க வேண்டியது நமது கடமை.

நமது  நேசம் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் உயிர்வாழ வேண்டும்.

மனதில் இருக்கும் இறை அன்பும், பிறர் அன்பும் சொல்லாகவும் செயலாகவும் உருப்பெற வேண்டும்.

செயலாக மாறாத அன்பு உண்மையான அன்பு அல்ல.

இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டு எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நண்பனிடம் உண்பதற்காக உணவு இருக்கிறது. மற்றவனிடம் எதுவும் இல்லை.

கையில்  உணவு வைத்திருப்பவன் மற்றவனைப் பார்த்து சொல்கிறான்,

" நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்."

நண்பகல் வருகிறது.

 இருவருக்கும் பசிக்கிறது.

இருவரும் ஒரு மரத்தடியில் அமர்கிறார்கள்.

உணவு வைத்திருப்பவன் உணவு பொட்டலத்தைப் பிரிக்கிறான்.

"நண்பா நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

நான் சாப்பிட போகிறேன்.

நீயும் சாப்பாடு   இருந்தால் சாப்பிடு"

 என்று கூறிவிட்டு அவன் உணவைச்  சாப்பிட ஆரம்பிக்கிறான்.

 மற்றவனிடம் சாப்பாடு இல்லை. ஆகவே சாப்பிடுபவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

 சாப்பாடு வைத்திருந்தவன் சாப்பிட்டு விட்டு ஒரு ஏப்பம் விட்டான்.

மற்றவன் சாப்பிடவே இல்லை. 

சாப்பிட்டு முடித்தவன் மற்றவனைப் பார்த்து,

"நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். 

நான் சாப்பிட்டு விட்டேன்.

 நீயும் சாப்பாடு கொண்டு வந்திருக்கலாம்."
என்றான்.

இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளாமல் சாப்பிட்டுவிட்டு ,

"நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்." 

என்று சொல்லி என்ன பயன்?

அவன் சொன்ன நேசம் உண்மையில் நேசம் இல்லை.

வெறும் வார்த்தை, பொருள் இல்லாத வார்த்தை.

வெறும் Lip service!

ஆன்மீக வாழ்விலும்

நற்செயல் செய்யாதவனிடம் அன்பும் இருக்க முடியாது, விசுவாசமும் இருக்க முடியாது.


"பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல  பிதாவாகிய சர்வேசுரனை .விசுவசிக்கிறேன்."

என்று சொல்லிவிட்டு,

அவரால் படைக்கப்பட்டவர்களுக்கு ஒரு உதவியும் செய்யாவிட்டால் 

அவன் விசுவசிப்பதாகச் சொன்னது பொய்.

நற்செயல் இல்லாத விசுவாசம் உயிரற்ற விசுவாசம்.

உயிரற்ற விசுவாசத்தால் ஆன்மீக வாழ்வும் வாழ முடியாது, விண்ணகமும் செல்ல முடியாது.

எப்படி ஐந்து அறிவிலிகளால் எண்ணெய் இல்லாத விளக்குகளோடு மணவீட்டிற்குள் நுழைய முடியவில்லையோ,

அப்படியே நற்செயல் எதுவும் இல்லாத விசுவாசத்தோடு விண்ணகத்திற்குள் நுழைய முடியாது.

எப்படி ஐந்து விவேகிகளும் எண்ணெய் ஊற்றி பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்த  விளக்குகளோடு மணவீட்டிற்குள் நுழைந்தார்களோ,

அப்படியே நற்செயல்களால் உயிருள்ள 'விசுவாசம் உள்ளவர்கள் விண்ணகத்திற்குள் நுழைவர்.

இயேசு வெறும் Lip service செய்பவர் அல்ல.

வெறும் வார்த்தைகளை அல்ல, சாதனைகளையே போதனையாகத் தந்தவர்.

தனது அளவற்ற அன்பை செயலாக்கி விட்டுதான் 

நம்மையும் அவரை பின்பற்ற சொன்னார்.

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)

இது இயேசுவின் போதனை.

கடவுள் தன்னால் படைக்கப்பட்டவர்களைத் தனது பிள்ளைகளாகவும், நண்பர்களாகவும் தான் கருதுகிறார்.

''தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."

என்ற அவரது போதனையை சாதித்து காண்பித்தார்.

கடவுளால் தேவ சுபாவத்தில்  சாக முடியாது.

ஆகவே அவரது நண்பர்களாகிய நமக்காக உயிரைக் கொடுப்பதற்காகவே,
மனித உரு எடுத்தார்.

அவர் மனிதனாகப் பிறந்தது நம்மை மீட்பதற்காக சிலுவையில் உயிரை விடுவதற்காகத்தான்.

இறைமகன் நமது மீட்பிற்காக மனித சுபாவத்தில் மரித்தார்.

அவரை விசுவசிக்கின்ற நாமும் நமது நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

தங்கள் விசுவாசத்தை செயல்களாக மாற்றுகின்றவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும்.

"இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன்,

 எனது அயலானையும் நேசிக்கிறேன்''

என்று சொல்வதால் மட்டும் மீட்பு அடைய முடியாது. 

புனிதர்கள் அனைவருமே தங்களது விசுவாசத்தையும், அன்பையும் செயல்களில் வெளிப்படுத்தியவர்களே.

நமது காலத்தில் வாழ்ந்து மரித்த புனித கல்கத்தா தெரெசம்மாளே நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.

"நாம் சாதாரணமானவர்கள்தானே, அன்னை தெரசாவை போல நம்மால்  வாழ்ந்து விட முடியுமா?"
என்று கேட்கலாம்.

யானை அதனால் முடிந்த சுமையை தூக்கினால், 

எறும்பும் அதனால் முடிந்த சுமையை தூக்க முடியாதா?

மனதில் உள்ள அன்பை செயலில் காட்ட அவரவர் தங்களால் இயன்ற அளவில் முயற்சி செய்ய வேண்டும்.

நமக்கு எதிரே வருபவர்களை பார்த்து ஒரு புன்னகை செய்ய முடியாதா?

"எப்படி இருக்கிறீர்கள்?" என்று விசாரிக்க முடியாதா?

கஷ்டபடுகிறவர்களுக்கு ஆறுதல் கூற முடியாதா?

நம்மால் இயன்றவரை நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு  பகிர்ந்து கொள்ள முடியாதா? 

நம்மை தேடி வருபவர்களுக்கு ஒரு கப் காபி கொடுக்க முடியாதா?

மற்றவர்களைப் பற்றி கெடுத்து பேசாமல் இருக்க முடியாதா?

திருப்பலிக்கு வரும் போதாவது ஒரு அரை மணி நேரம் நற்கருணை நாதரை பார்த்துக் கொண்டிருக்க முடியாதா?

பிள்ளைகளை ஞானோபதேச வகுப்புக்கு அனுப்ப முடியாதா?

நம்மால் முடிந்த பிறர் சிநேக காரியங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

நாம் செய்யும் நற்செயல்களின் அளவுக்கு ஏற்ப நமது விசுவாசம் வலுவடையும்.

நாம் மீட்பு பெற விசுவாசம் வேண்டும்.  

விசுவாசம் வலுவடைய நற்செயல்கள் புரிய வேண்டும்.

நற்செயல்கள் செய்வோம்.

விண்ணரசுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்

" நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.'' (மத்.24: 44)

" நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.'' (மத்.24: 44)

ஒவ்வொரு நாளும் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று. கால அட்டவணை போடுவதும்,

நமது வாழ்வின் எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போடுவதும் நமது இயல்பு.

திட்டம் போடுவது மட்டும்தான் நமது இயல்பு. நாம் போடும் திட்டப்படி எதுவும் நடக்குமா என்பது நமக்கு தெரியாது.

நாம் திட்டம் போட முடியாத நிகழ்ச்சிகள் இரண்டு நமது வாழ்வில் உண்டு. பிறப்பு, இறப்பு.


எந்த நாட்டில், எந்த ஊரில், எப்போது, எந்த பெற்றோருக்கு பிள்ளையாய் நாம் பிறக்க வேண்டும் என்று நம்மால் திட்டம் போட முடியாது.

பிறந்த பிறகுதான் அந்த விவரமெல்லாம் நமக்குத் தெரியும்

அதேபோல், எப்போது, எங்கு ,எப்படி இறப்போம் என்பதும் நமக்கு தெரியாது.

நமது பிறப்பும், இறப்பும் இறைவனின் நித்திய காலத் திட்டங்கள்.

எப்படி வாழ வேண்டும் என்று திட்டமிட நமக்கு முழு மன சுதந்திரம் உண்டு. ஆனால் எப்படி வாழ்வோம் என்பது நமக்கு தெரியாது.

நாம் எப்போது மரிப்போம் என்று இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

தெரியாதிருப்பது நல்லதும்கூட.

தெரிந்தால்  மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. மரிக்கவேண்டிய காலம் நெருங்க, நெருங்க மன வேதனைதான் அதிகரித்துக் கொண்டே போகும்.

வாழ்வில் மரணம் என்பது பள்ளிக்கூட வாழ்வில் இறுதித் தேர்வு போல்.

பள்ளி இறுதித் தேர்வுதான் நமது முழு பள்ளி வாழ்வின் வெற்றியையோ, தோல்வியையோ நிர்ணயிக்கும்.


ஆண்டு முழுவதும் நன்கு படித்து விட்டு தேர்வின்போது எல்லாவற்றையும் மறந்து விட்டால் ஆண்டு முழுவதும் Waste!

ஆண்டு முழுவதும் படிக்காமல் இருந்துவிட்டு, தேர்வுக்கு முந்திய நாள் நன்கு படித்து, ஞாபகத்தோடு நன்கு தேர்வு எழுதினால் வெற்றிதான்.

அதேபோல் வாழ்நாள் முழுவதும் நன்கு  வாழ்ந்து விட்டு இறுதியில் ஒரே ஒரு சாவான பாவத்தோடு மரித்தால் வாழ்ந்ததெல்லாம் Waste.

இறுதிவரை நிலைத்திருப்பனே மீட்புப் பெறுவான்.

வாழ்நாள் முழுவதும் பாவியாய் வாழ்ந்து விட்டு இறுதியில் மனஸ்தாபத்தோடு மரித்தால் நிலைவாழ்வு பெறுவான்.

பள்ளியில் இறுதித் தேர்வு நாளை முன்னால் அறிவித்து விடுவார்கள்.

Pass மட்டும் செய்தால் போதும் என்று எண்ணும் மாணவர்கள் 
தேர்வு நாளன்று தயாராய் இருந்தால் போதும்.

முதல் தரமான மதிப்பெண்ணுக்கு ஆசைப்படுவோர் ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும்.

மரண நாளை முன்பே அறிவித்து விட்டால் மோட்சத்திற்குப் போனால் போதும் என்று எண்ணுவோர் மரணத்தின்போது  தயாராக இருந்தால் போதும்,

புனிதர் ஆக விரும்புவோர் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு ஏற்றபடி வாழ வேண்டும்.

ஆனால்  மரணம் எந்த வினாடி வரும் என்று யாருக்கும் தெரியாது.

நான் அடுத்த வரி எழுதுமுன் கூட எனது மரணம் வரலாம்.

மரணத்திற்கு முந்திய வினாடி கூட யாருக்கும் தெரியாது.

ஆகவே வாழ்வின் ஒவ்வொரு வினாடியும்  நாம் பாவம் இன்றி மரணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்.

"திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால் அவன் விழிப்பாயிருந்து வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டான் அன்றோ?

இதை உணர்ந்து நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். 

ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
(மத். 24:43, 44)

எப்போதும் பாவ மாசின்றி இருப்பவன் மரணத்தைப் பற்றி கவலைப்படவே மாட்டான்.

எப்போதும் பாவ மாசின்றி இருப்பது எப்படி?

நாம் ஞானஸ்நானம் பெறும் போது நமது சென்மப் பாவமும், அதுவரை செய்த கர்மப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும்.

அடுத்து பாவம் செய்யாதபடி பரிசுத்த ஆவியின் அருள் வரங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.

ஆவியின் வரங்களை நாம் சரியாகப் பயன்படுத்தாமல் பாவம் செய்ய நேரிட்டால் அவற்றுக்கு மன்னிப்பு பெறவே

 பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தை இயேசு ஏற்படுத்தியிருக்கிறார். 

அதை அடிக்கடி பயன்படுத்தி அவ்வப்போது செய்யும் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற வேண்டும்.

பாவம் செய்யாதிருக்கவும், புண்ணியத்தில் வளரவும் நமக்கு வேண்டிய தைரியம் வேண்டும் என்பதற்காக 

ஆன்மீக பலத்தை அதிகரிக்க இயேசு தன்னையே நமக்கு ஆன்மீக உணவாக தந்திருக்கிறார்.

 அந்த ஆன்மீக உணவை அடிக்கடி உண்டு நாம் பரிசுத்தத்தனத்தில் வளரவேண்டும்.

இயேசு நம்முள் இருக்கும்போது பாவம் நம்மை அணுகாது.

எப்படி பற்களை சுத்தமாக வைத்திருக்க பற்பசையை  பயன்படுத்துகிறோமோ, 

எப்படி உடலைச் சுத்தமாக வைத்திருக்க தண்ணீரைப் பயன்படுத்துகிறோமோ

அப்படியே ஆன்மாவைச் சுத்தமாக  வைத்திருக்க 

பாவங்களுக்காக உத்தம மனஸ்தாபத்தையும்,

 பாவ சங்கீர்த்தனத்தையும் பயன்படுத்துவோம்.

நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்,

நாம் பாவமாசின்றி வாழ்வதற்காக.

நாம் அதைப் பயன்படுத்தி வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும்  நம்மை பரிசுத்தமாக வைத்திருப்போம். 

ஆண்டவர் எப்போது அழைக்க வந்தாலும் அவரோடு செல்ல எப்போதும் தயாராக இருப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, August 25, 2021

"கிண்ணத்தின் உட்புறத்தை முதலில் தூயதாக்கு: அப்பொழுது வெளிப்புறமும் தூயதாகும்."(மத்.23:26)

"கிண்ணத்தின் உட்புறத்தை முதலில் தூயதாக்கு: அப்பொழுது வெளிப்புறமும் தூயதாகும்."
(மத்.23:26)

நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல

மனிதனுக்கு இரண்டு புறங்கள் உண்டு, உட்புறம், வெளிப்புறம்.

உட்புறம் கண்ணால் பார்க்க  முடியாத ஆன்மா.

வெளிப்புறம் கண்ணால் பார்க்கப் படக்கூடிய உடல்.

வெளிப்புறத்தின் தன்மையை உட்புறம் தீர்மானிக்க வேண்டும்.

மனிதருக்கு மட்டுமே உரிய சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றில்

சிந்தனை முழுக்க முழுக்க ஆன்மாவிற்கு சொந்தமானது.

சிந்தனை வாய் வழியே வெளியே வரும்போது சொல் உண்டாகிறது.

சிந்தனைக்கு உடல் உருவம் கொடுக்கும்போது அது செயலாக மாறுகிறது.

 ஒரு நேர்மையான மனிதனுடைய சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்று போல் இருக்கும்.

நேர்மையான மனிதன் (Honest person) சிந்தனையை மாற்றம் இன்றி சொல்வான்.

சொன்னதை மாற்றமின்றி செய்வான்.

(An honest person's thought, words and actions will tally with one another.)

உள்ளொன்று வைத்துக்கொண்டு புறமொன்று பேசுபவர்களும், செய்பவர்களும் வெளிவேடக்காரர்கள்.

மனதில் தவறான சிந்தனைகளை வைத்துக்கொண்டு நல்லவர் போல் பேசுபவர்களும், நல்லன செய்வதுபோல் நடிப்பவர்களும் வெளி வேடக்காரர்கள்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் வெளிவேடத்துக்குப் பேர்போனவர்கள்.

"பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதகுப்பி, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பகுதி செலுத்துகிறீர்கள். 

ஆனால், திருச்சட்டத்தில் முக்கிய படிப்பினைகளான நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள்."
(மத்.23:23)

மனதில் நீதி, இரக்கம், விசுவாசம் இல்லாதவர்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாகக் கொடுத்து என்ன பயன்?

அழுக்கான மனதுடன் கொடுக்கும் 
காணிக்கை வெளிவேடமே!

பரிசுத்தமான இருதயத்தோடு கொடுக்கப்படும் காணிக்கையே இறைவனுக்கு ஏற்றது.

சுத்தமான மனதுடன் காணிக்கையை கொடுப்போம்.

 ஒரு பாத்திரத்தின் உட்புறத்தை சுத்தம் செய்யாமல் வெளிப்புறத்தை மட்டும்   சுத்தம் செய்தால் அதில் வைக்கப்படும் உணவு சாப்பிட ஆகுமா?

மனதில் எல்லா விதமான பாவ எண்ணங்களையும் வைத்துக்கொண்டு வெளிப்புறத்தில் நல்லவர் போல் தோன்றுவதால் ஆன்மாவிற்கு என்ன பயன்?

வெளி வேடக்காரர்கள்
வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். 

அவை வெளியே பார்வைக்கு அழகாக தோன்றும். உள்ளே எலும்புக்கூடுகள் மட்டுமே இருக்கும்!

. மனம் கள்ளத்தனத்தாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருந்தால்,

 வெளியே மனிதருக்கு நீதிமான்களாகத் தோன்றினால் என்ன பயன்?

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெறாமல்

 கோவிலுக்குப் போவதாலும், திருப்பலி காண்பதாலும்,

 திருவிருந்து  அருந்துவதாலும் என்ன பயன்?

லஞ்சம் வாங்குவது பாவம்.

 லஞ்சம் வாங்கி ஈட்டிய பணத்தில் ஒரு பங்கை  கோவிலில் காணிக்கையாகப் போட்டுவிட்டால் லஞ்சம் வாங்கிய பாவம் தீராது.

பாவத்திற்காக  மனஸ்தாபப்பட்டு பாவ சங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெற வேண்டும்.

லஞ்சமாக வாங்கிய பணத்தை யாரிடமிருந்து வாங்கினோமோ அவரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும். காணிக்கையாக அல்ல.


திருப்பிக் கொடுக்காமல்  காணிக்கையாக போட்டால்

லஞ்சமாக வாங்கிய பணத்தை கடவுளுக்கு லஞ்சமாக கொடுப்பது போலிருக்கும்.


பரிசுத்தமான இதயத்தோடு திருப்பலி  ஒப்புக்கொடுத்து திருவிருந்து அருந்த வேண்டும்.

பரிசுத்தமான இதயத்தோடு பிறரன்பு செயல்கள் செய்ய வேண்டும்.

பாவத்தோடு செய்யும் எந்த செயலும் நற்செயல் ஆகாது.

உள்ளம் சாவான பாவ நிலையில் இருக்கும்போது ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தாலும் ஆத்மாவிற்கு ஒரு பயனும் இல்லை.

மீட்பு பெற வேண்டியது நமது ஆன்மாதான்.  

எந்த நேரமும் நமது ஆன்மாவிற்கு ஆண்டவரின் அழைப்பு வரலாம்.

மற்ற எந்த நேரத்தையும் விட நமது இறுதி நேரம் பாவம் அற்றதாக இருக்க வேண்டும்.

ஆகவே உள்ளத்தில் எப்போதும் பரிசுத்தமாக இருப்போம்.

உடல் சுத்தம் அல்ல ஆன்மாவின் சுத்தமே  நமக்கு விண்ணகத்தை ஈட்டித்தரும்.

ஆகவே நமது உட்புறத்தை எப்போதும் பரிசுத்தமாக காப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, August 24, 2021

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார். பிலிப்புவோ, "வந்து பார்" என்றார்.(அரு. 1:46)

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார். பிலிப்புவோ, "வந்து பார்" என்றார்.
(அரு. 1:46)


பெலவேந்திரரும், இராயப்பரும் அவர்களாகவே இயேசுவைத் தேடி வந்தார்கள்.

அடுத்து அவர்களுடைய ஊரினராகிய பிலிப்புவை இயேசுவே அழைத்தார்.

 பிலிப்பு நத்தனயேலைக் கண்டு, "இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலிலே மோயீசனும் யாரைக்குறித்து எழுதினார்களோ அவரைக் கண்டோம். 

அவர் நாசரேத்தூர் சூசையின் மrகன் இயேசு" என்றார்.

அதாவது, யூத மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'மெசியாவைக் கண்டோம் ' என்றார்.

மெசியா நாசரேத்தூரைச் சேர்ந்தவர் என்ற செய்தி நத்தனயேலின் மனதில் எழுப்பி விட்ட கேள்வி நம் எல்லோருக்கும் ஒரு முக்கியமான இறையியல் செய்தியைத் தருகிறது.

அந்த நோக்கத்திற்காகக் கூட அக்கேள்வியை பரிசுத்த ஆவி 

 அவர் மனதில் தோற்றுவித்திருக்கலாம்.

 ஊர்ப் பெயரை கேட்டதுமே அவர் 

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார்.

ஏன் அவர் அப்படிக் கேட்டார்?

உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம்.

"நீங்கள் பிறந்த ஊர் எது?" என்று யாராவது கேட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சென்னை போன்ற நகரங்களின் பெயரைச் சொன்னால் பெருமையாய் இருக்குமா?

 அல்லது


நூறு பேர் குடிசைகளில் வாழக்கூடிய ஒரு பட்டிக்காட்டின் பெயரைச் சொன்னால் பெருமையாய் இருக்குமா?

மெசியா 'பெத்லகேமில் பிறப்பார் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில்

நாசரேத்தூர் என்ற சிறிய கிராமத்தின் பெயரைச் சொன்னது  அவருக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

400 பேர்    வாழக்கூடிய  ஒரு சிறு     கிராமத்தில்    யூத   மக்கள்  ஆவலுடன் எதிர்பார்த்த மெசியா பிறந்தார் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.

ஆகவேதான்

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார்.

இதில் என்ன இறையியல் செய்தி இருக்கிறது?

இயேசு சர்வ வல்லப கடவுள்.

மனித சுபாவத்தில் தாவீதின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்.

25,000 மக்கள் தொகை கொண்ட பெத்லகேமில் பிறந்தாலும்,

(அங்கேயும் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான்.)

வாழ்வதற்கு 400 மக்கள் தொகை கொண்ட நாசரேத் என்னும் சிறிய கிராமத்தைத் தேர்ந்து கொண்டார்.

ஏழைகளோடு ஏழையாக வாழ தேர்ந்து கொண்டது இயேசுவின் தாழ்ச்சியை குறிப்பது மட்டுமல்லாமல் 

நமக்கும்  அந்த புண்ணியத்தின் பெருமையை கற்றுத் தருகிறது.

"ஏழைகள் பேறு பெற்றோர்'' என்று கூறியது மட்டுமல்ல, வாழ்ந்தும் காண்பித்தார்.

தச்சுத் தொழில் செய்த உழைப்பாளியாக வாழ்ந்து காண்பித்தார்.

இது இயேசு வாழ்ந்து கற்பித்த ஒரு இறையியல் பாடம்.

அடுத்து, 

பிலிப்பு மெசியா நாசரேத்தூரினர் என்று சொன்ன உடனேயே

நத்தனயேல் மனதில் தோன்றிய சந்தேகம்:

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?"

நத்தனயேல் தனது சந்தேகத்தை கபடின்றி உடனே கேட்டுவிட்டார்.

அப்படி கேட்காமல் அவராகவே,

"மெசியா பெத்லகேமில் தான் பிறக்கவேண்டும். இயேசு நாசரேத் ஊரினராக இருப்பதால் அவர் மெசியாவாக இருக்க முடியாது" என்ற முடிவுக்கு வரவில்லை.

தனது சந்தேகத்தை உடனே அவர் வெளிப்படுத்தினாலும்

 பிலிப்பு அதை சரியான முறையில் கையாண்டார்.

அவர் பதிலேதும் சொல்லாமல்,

"வந்து பார்" என்று மட்டும் சொன்னார்.

அதாவது என்னுடன் வந்து இயேசுவைப் பார்த்தால் உங்களது சந்தேகம் தீர்ந்து விடும் என்ற பொருளில்  "வந்து பார்" என்று மட்டும் சொன்னார்.

நத்தனயேல் இயேசுவிடம் வந்தார்.

அவர் வருவதைக் கண்டு இயேசு அவரைப்பற்றி, "இதோ! உண்மையான இஸ்ராயேலன். இவன் கபடற்றவன்" என்றார்.

நத்தனயேல் கபடில்லாமல் கேட்ட கேள்விக்கு இயேசு சான்றிதழ் கொடுத்துவிட்டார்.

நத்தனயேல் அவரிடம், "எவ்வாறு என்னை அறிந்தீர் ?" என்று கேட்க,

 இயேசு அவரைப் பார்த்து, "பிலிப்பு உன்னை அழைப்பதற்குமுன் நீ அத்திமரத்தின்கீழ் இருக்கையில் நான் உன்னைக் கண்டேன்" என்றார்.

 நத்தனயேல் அவரிடம், "ராபி, நீர் கடவுளின் மகன், நீரே இஸ்ராயேலின் அரசர்" என்று சொன்னார்.

நத்தனயேல் பிலிப்பு தன்னிடம் சொன்னதை பற்றியோ, தனது சந்தேகத்தை பற்றியோ இயேசுவிடம் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் இயேசுவுக்கு நாம் சொல்லாமலேயே நம்மைப்பற்றி முழு விவரமும் தெரியும்.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட உடனேயே அவர் இறைமகன் என்பதை நத்தனயேல் புரிந்துகொண்டார்.

அவரது சந்தேகத்திற்கு இயேசு நேரடியாக வாயினால் விளக்கம் கொடுக்காமலேயே அவரது மனதில் தன்னைப் புரிய வைத்து விட்டார்.

அதனால்தான் விசுவாசம் இறைவன் நமக்குத் தரும் நன்கொடை என்கிறோம்.

இந்த நத்தனயேல்தான் இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவரான பர்த்தலேமியு. 
( Bartholomew)

 நத்தனயேலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:

ஆன்மீக காரியங்களில்,
 நமது பலகீனம் காரணமாக, சந்தேகங்கள் வருவது இயல்பு.

நத்தனயேலின் சந்தேகத்தை பிலிப்பு தீர்த்து வைக்கவில்லை.

"வந்து பாரும்" என்று இயேசுவிடம் அழைத்து வந்தார்.

அவர்கள் திறந்த மனதோடு இயேசுவிடம் வந்தார்.

அவரது மனதை இயேசு விசுவாசத்தால்  நிரப்பினார் 

அவரது சந்தேகம் தீர்ந்தது.

இயேசுவை இறை மகனாக ஏற்றுக் கொண்டார்.

நமக்காக இயேசு திவ்ய நற்கருணை பேழையில் இரவும், பகலுமாக காத்துக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் சென்று,

திறந்த மனதோடும், விசுவாசத்தோடும் அவரை உற்று நோக்கினாலே  போதும்.

மனதை அழுத்திய சந்தேகங்கள் காணாமல் போகும்.

இயேசுவின் பிரதிநிதியாகிய நமது பங்குக் குருவும் நமது ஆன்மீக பிரச்சனைகளில் வழிகாட்டுவதற்காக நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

பைபிள் வாசகங்களில் சந்தேகமா?  
 பங்குக் குருவிடம் செல்வோம்.

மனதோடு பேச நற்கருணை ஆண்டவரும்,

வாய் விட்டுப் பேச ஆண்டவரின் பிரதிநிதியும் 

நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்று பார்ப்போம்.

லூர்து செல்வம்.

Monday, August 23, 2021

"நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன." (அரு. 6:68)

"நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன." (அரு. 6:68)

இயேசு திவ்விய நற்கருணையை பற்றி,

அதாவது 

தனது உடலையும் இரத்தத்தையும் உணவாக உட்கொள்கிறவன் என்றென்றும் வாழ்வான் என்பது பற்றி,

மக்களிடம் சொன்னபோது அவருடைய சீடருள் பலர் அவரது வார்த்தைகளை நம்ப மறுத்து அவரை விட்டு போய்விட்டார்கள்.

இயேசு பன்னிருவரை நோக்கி,

 "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? என்றார்.

அதற்குச் சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் 
போவோம்? 

முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

நீரே கடவுளின் பரிசுத்தர்: 

இதை நாங்கள் விசுவசிக்கிறோம்:

 இதை நாங்கள் அறிவோம்"


இராயப்பருடைய கூற்றில்தான் நமது விசுவாச வாழ்வின் அடிப்படை உள்ளது.

கடவுள் நமது கண்டுபிடிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டவர்.

உதாரணத்திற்கு ஒரு குழந்தையை எடுத்துக்கொள்வோம்.

 பிறந்த நேரத்திலிருந்து தனக்கு பாலூட்டி பராமரிப்பவளை குழந்தை தாயாக ஏற்றுக்கொள்கிறது.

 அதற்கு விஞ்ஞானபூர்வமாக தாய் என்றால் யார் என்று தெரியாது.

 தாயை ஏற்றுக் கொண்டபின் அவள் காண்பிக்கும் ஆளை தந்தை என்று ஏற்றுக் கொள்கிறது.

 அவர் எப்படி தந்தை என்று அதற்கு அறிவியல்பூர்வமாக எதுவும் தெரியாது.

இரண்டு நபர்களை தாயும், தந்தையுமாக குழந்தையை ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன?  

அதன் நம்பும் தன்மை.

இந்த நம்பும் தன்மையைத்தான் ஆன்மீகத்தில் விசுவாசம் என்கிறோம்.

இயேசுவின் வார்த்தைகளை நாம் உன்மை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்

முதலில் அவரைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அவர் உண்மையை மட்டுமே சொல்வார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


இந்த இரு ஏற்றுக்கொள்ளல்களும் இல்லாதவர்களால் இயேசுவின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. ஆகவே அவரை விட்டு போய்விட்டார்கள்.

ஆனால் பன்னிருவரும் இவற்றில் உறுதியாக இருந்ததால் அவரை விட்டு போகவில்லை.

 இயேசுவை இறை மகன் என்று உறுதியாக ஏற்றுக்கொண்டதால்,

அவரது வார்த்தைகளை உறுதியாக  நம்பினார்கள்.

இயேசு சொன்னதன் முழுமையான பொருள்  அவர்களுக்கு அவரது பாடுகளுக்கு முந்திய இரவு உணவின் போது  புரிந்திருக்கும்.

 அப்பத்தையும் தன் உடலாகவும், ரசத்தை தனது இரத்தமாகவும் மாற்றிய உண்மை விசுவாச அடிப்படையில் புரிந்திருக்கும்.

 அந்த விசுவாச சத்தியத்தை உலகமெங்கும் உள்ள மக்களுக்கு அறிவித்தார்கள். 
இன்று நாமும் விசுவசிக்கிறோம்.

அன்னை மரியின் வயிற்றிலிருந்து பிறந்த அதே இயேசுதான்,

30 ஆண்டுகள் தச்சு வேலை புரிந்து வாழ்ந்த அதே இயேசுதான்,

மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்த அதே இயேசுதான்,

நமது பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் மரித்து, மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த  
அதே இயேசுதான்,

அதே உடலோடும், ஆன்மாவோடும் அப்ப ரச குணங்களில் திவ்ய நற்கருணையில் இருக்கிறார் 

என்று உறுதியாக விசுவசிக்கிறோம்.


உறுதியாக விசுவசிக்கிறோம் என்று சொல்கிறோம்.

ஆனால் உண்மையிலேயே 
உறுதியாக விசுவசிக்கிறோமா,

அல்லது சொல்ல மட்டும் செய்கிறோமா?

எப்படிக் கண்டுபிடிப்பது?

இரவு 11 மணி. வீட்டிலே மின்விளக்கு எரிகிறதா என்று  கண்டுபிடிப்பது எப்படி?

இரவில் வீட்டில் வெளிச்சமாக இருந்தால் மின்விளக்கு எரிகிறது. இருட்டாக இருந்தால் மின்விளக்கு எரியவில்லை.

இதே Technique தான் திவ்ய நற்கருணை சார்ந்த விசுவாச விசயத்திலும்.

திவ்ய நற்கருணையில் மெய்யாகவே இருக்கிறார் என்று விசுவசிப்பவன் 

இயேசுவை பார்க்க வேண்டும், அவரை உட்கொள்ள வேண்டும்

என்ற ஆசையால் சதா துடிப்பான்.

  உண்மையான ஆசையோடு தினமும் திருப்பலி காண செல்வான்.

உண்மையான ஆசையோடு, பழக்க தோசத்தினால் அல்ல.

திருப்பலியில் முழு ஈடுபாட்டோடு கலந்து கொள்வான்.

குருவோடு மனதால் இணைந்து
திருப்பலி ஒப்புக்கொடுப்பான்.

பாவமில்லாத பரிசுத்தமான இதயத்தோடு நற்கருணை உட்கொள்வான்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து தன்னுடைய ஆன்மாவை பரிசுத்தமாக வைத்துக் கொள்வான்.

நற்கருணையின் வழியே இறைவன் இயேசுவையே உணவாக உட்கொள்வதால்,

இயேசு அவன் நாவில் இருக்கும்போது 

மரியாளின்  மடியில் இயேசு பாலன் இருந்தபோது அன்னை எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்திருப்பாரோ

 அவ்வளவு மகிழ்ச்சியாக அவனும் இருப்பான்.

நற்கருணை வாங்கியபின் ஒரு வினாடி கூட வீணாக்காமல் இயேசுவோடு உரையாடுவான்.

 அவனுள் வந்தமைக்கு நன்றி கூறுவதோடு  தனக்காக மட்டுமல்லாமல் மற்றவர்களுக்காகவும் மன்றாடுவோம்,

 குறிப்பாக அவனுக்கு தீமை செய்தவர்கள் வாழ்வில் சிறக்க செபிபான்.

அவனது மனதை நோகச் செய்தவர்களை மனதார மன்னிப்பதாக  இயேசுவிடமே
கூறுவான்.

அன்றைய நாளில் அவன் செய்யவிருக்கும் நல்ல காரியங்களை இயேசுவிடமே கூறி அவருடைய உதவியை நாடுவான்.

அன்றைய நாள் முழுவதும் இயேசுவின் சன்னிதானத்தில்தான் வாழ்வான்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரை சந்திக்க வருவான்.

நற்கருணையின் முன்னால் செல்லும்போதெல்லாம் முழந்தாள் படியிட்டு இறைவனுக்குரிய ஆராதனையைச் செலுத்துவான்.

 தலையை மட்டும் தாழ்த்துவது .மனிதனுக்கு உரிய மரியாதை. 

இறைவன் முன் முழந்தாள் படியிட்டு ஆராதிக்க வேண்டும்,

தினமும் இயேசுவை நேரிலேயே சந்தித்து செபிப்பதால் அவனது வாழ்நாள் முழுவதும் இயேசுவின் போதனைப்படி தான் நடப்பான்.

இயேசுவின் மன்னிக்கும் குணம் அவனிடமும் இருக்கும்.

  இயேசுவின் விருப்பப்படியே அயலானுக்கு உதவி செய்து வாழ்வான். 

அவனது ஆன்மீக வாழ்வில் முன்னேற்றமே

  நற்கருணை மீது அவனுக்குள்ள விசுவாசத்தை வெளிப்படையாக காட்டும்.

ஒருவனது விசுவாச வாழ்வின் தன்மையே அவனது விசுவாசத்தில் ஆழத்திற்கு அடையாளம்.

தினமும் திருப்பலிக்கு சென்று திவ்ய நன்மை வாங்கினாலும் வாழ்க்கை ஏனோ தானோ என்றிருந்திருந்தால்  விசுவாசம் வாயளவில்தான் என்று அர்த்தம். 

நற்கருணை நாதரை வாழ்நாளெல்லாம் உடன் அழைத்துச் செல்வோம்.

அவருக்காகவே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, August 22, 2021

." உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்." (மத்.23:11).

." உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்." 
(மத்.23:11).

"ஏங்க, கடவுள் மனிதர்களை பாவம் செய்வதற்கென்று படைக்கவில்லை. எப்படி முதன்முதலில் பாவம் நுழைந்தது?"

",கடவுள் மனிதர்களை படைப்பதற்கு முன்னாலேயே
பாவம் நுழைந்து விட்டது.

கடவுள் முதன் முதலில்
 சம்மனசுக்களைப் படைத்தார்.

தலைமைச் சம்மனசாகிய லூசிபெர்  
(Lucifer) தன்னைக் கடவுளுக்கு  நிகராக நினைத்து கர்வப்பட்டான்.

கர்வம் (Pride) தான் படைப்புகள் செய்த முதல் பாவம்.

விளைவு, லூசிபெர் சாத்தானாக மாறினான்."

"நமது முதல் பெற்றோர், ஐயோ பாவம், ஒரு பழத்துக்கு ஆசைப்பட்டு பாவம் செய்தார்கள்."

", வெறுமனே பழத்துக்கு ஆசைப்பட்டு அல்ல.

அந்தப் பழத்தைச் சாப்பிட்டால்
'நீங்கள் தெய்வங்கள்' ஆகிவிடுவீர்கள்

 என்று சாத்தான் ஏவாளுக்கு ஆசை காண்பித்து விலக்கப்பட்ட பழத்தை சாப்பிட வைத்தான்."
 
"ஆக, துணிகூட உடுத்த்தத் தெரியாத அந்தப் பொண்ணுக்கு தெய்வத்தை போல ஆக ஆசை!

இதற்கு பெயர்தான் பேராசை!"

",பெரிய பதவிக்கு போய்விட வேண்டும் என்ற இன்றைய மனிதனின் ஆசை நமது ஆதி தாயிடமிருந்து நமக்கு வந்தது.

ஒவ்வொரு மனிதனும் இருக்கிற நிலையிலிருந்து பெரிய நிலைக்கு சென்றுவிட ஆசிக்கிறான்.

ஓரு வேலையும் இல்லாமல் இல்லாமல் இருப்பவன் M.L.Aஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறான்.

M.L.A ஆகிவிட்டால் மந்திரி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

மந்திரி ஆகிவிட்டால் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

முதல்-மந்திரி.ஆகிவிட்டால் பிரதம மந்திரி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

ஆசைக்கு எல்கையே இல்லை.

அதனால் தான் இயேசு

"உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்."
என்கிறார். 

 பணியாள் நிலையிலிருந்து  உயர் பதவிக்கு  போக ஆசைப்படுவன் சாதாரண மனிதன்.

 உயர் நிலையில் இருக்கும்போது

பணியாள் நிலைக்கு இறங்கி மற்றவர்களுக்குப் பணிபுரியவன் கிறிஸ்தவன்.

அதுமட்டுமல்ல,

 பணியாள் நிலையில் இருப்பவன் தனது பணியை தாழ்ச்சியுடன் ஒழுங்காக செய்தால்  அவன் உயர்நிலையில் இருப்பவனுக்கு ஒப்பாவான்.

"இதோ ஆண்டவரின் அடிமை "

என்று தன்னையே அடிமை நிலைக்கு தாழ்த்திய அன்னை மரியாள்   வானுலக பூவுலக அரசியானாள்!

மரியாள் வானுலக பூவுலக அரசி ஆக வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே அடிமை நிலைக்குத் தாழ்த்த வில்லை.

இறைவனின் தாயாவது அவருடைய சித்தம் என்பதற்காக மட்டுமே தன்னை அடிமை நிலைக்கு தாழ்த்தினாள்.

அது அவளுடைய தாராள குணம். தனது அடிமையை மண்ணக விண்ணக அரசியாக்கினது இறைவனின் தாராள குணம்'

தாராள குணமும், தாராள குணமும் சந்தித்துக் கொண்டன. அவ்வளவுதான்.

நாம்  இறைவனது பிள்ளைகள் என்பதனால்  அவர் நமக்காக மனிதனாகப் பிறந்து  பாடுபட்டு வந்தார்.

கடவுள் நமது தந்தை என்பதனால் நாம் அவருக்குப் பணி செய்ய நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டும்.

தலையான பாவங்களில் முதல் பாவம் ' கர்வம். (Pride)

புண்ணியங்களின் அரசி தாழ்ச்சி.
(Humility)

கடவுள் இயல்பிலேயே (By nature) சர்வ வல்லபர்.

அனைத்து நற்பண்புகளும், திறமைகளும்  அளவில்லா விதமாய் உள்ளவர்.

அவரது வல்லமையையும்  நற்பண்புகளையும் அவர் யாரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் அவரால் படைக்கப்பட்ட ஒருவரிடம் ஒரு திறமை இருக்குமானால் அது கடவுள் அவரோடு பகிர்ந்து கொண்டது.

தன்னோடு கடவுள் பகிர்ந்துகொண்ட ஒரு பண்பை தன்னுடையது என்று ஒருவன் பெருமை பாராட்டி கொண்டால் அதுவே கர்வம்.

அதைத்தான் லூசிபர் செய்தான்.

கடவுள் தன்னோடு பகிர்ந்து கொண்ட ஒளியையும் அழகையும்  தன்னுடையது என்று எண்ணி தன்னை கடவுளுக்கு நிகரானவன் என்று கர்வம் கொண்டான்,

அதுவே அவன் செய்த மிகப் பெரிய பாவம்.

மனிதர்களாகிய நாமும் 

பிறருக்கு பணிபுரிவதற்காக நம்மோடு கடவுள் பகிர்ந்துகொண்ட பண்புகளையும், திறமைகளையும்

 உரிமை பாராட்டி கர்வம் கொன்டால் அது மிகப் பெரிய பாவம். தலையான பாவம்.

அதைத்தான் உயர்ந்த பதவியில் உள்ள மனிதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு உண்மையான பெரிய மனிதன் தன்னுடைய பண்புகளையும், திறமைகளையும் மற்றவர்களுக்கு பணிபுரிவதற்காக பயன்படுத்திக் கொள்வான்.

தன்னுடைய திறமைகள் உண்மையில் தன்னுடையவை அல்ல,

 இறைவன் அவரது பிள்ளைகளுக்கு பணிபுரிவதற்காக தனக்குத் தந்தவை என்பதை உணர்ந்து  

 தன்னை பணி செய்பவராக மாற்றிக் கொள்வான்.

அதைத்தான் இயேசு


''உங்களில் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.''
என்றார்.

 நமக்கு பணியாளனாக  இருப்பவன்தான் உண்மையிலேயே பெரியவன்.

Minister என்ற வார்த்தையின் பொருள் 'வேலைக்காரன்.'
(The term minister comes from Middle English, deriving from the Old French word ministre, originally minister in Latin, meaning "servant, attendant.)
 
நமது அரசியலில் ஆளும் . பொறுப்பில் உள்ளவர்களுக்கு Ministers என்று பெயர் வைத்திருப்பதில் காரணமே அவர்கள் நமக்கு பணி (அதிகாரம் அல்ல) செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

இதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும்.
 
 அவர்கள் நமக்கு பணி செய்தால் மட்டுமே பெரியவர்கள்!

நாமும் பணி செய்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, August 20, 2021

"திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை"

"திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை" (மத்.22:40)

படிப்பு அறிவற்ற சாதாரண மக்கள் இயேசுவின் நற்செய்தியைக் கேட்கவும், 

அவரில் விசுவாசம் கொள்ளவும்,

 விசுவாசத்தின் காரணமாக தங்களுடைய நோய்களிலிருந்து குணமடையவும் அவர் பின் சென்றார்கள்.

ஆனால் பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும், சட்ட வல்லுனர்களும் 

இயேசுவின் பேச்சில் குறை காண்பதற்காகவும், 

அவரைக் கொல்வதற்கு காரணங்கள் தேடுவதற்காகவுமே அவரைப் பின் சென்றார்கள்.

சட்டவல்லுநர்  ஒருவன்,
இயேசுவைச் சோதிப்பதற்காக ஒரு கேள்வி கேட்கிறான்.

அதற்கு உரிய பதில் அவனுக்குத் தெரியும் என்றும்,

 தன்னை சோதிப்பதற்காகவே கேட்கிறான் என்றும் இயேசுவுக்குத் தெரியும்.

 ஆனாலும் அவரைப்  பின்சென்ற மற்ற மக்களுக்காகவும், நமக்காகவும்  இயேசு மிகப் பொறுமையாக பதிலைச் சொல்கிறார்.

 "போதகரே,  திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" 

 இயேசு அவனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு 

முழு உள்ளத்தோடும்,

 முழு ஆன்மாவோடும்,

முழு மனத்தோடும் 

அன்பு செய்வாயாக.


இதுவே எல்லாவற்றிலும் பெரிய முதன்மையான கட்டளை.

இரண்டாவது இதை யொத்ததே:

 உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."

 என்று இயேசு பதில் சொல்கிறார்.

சீனாய் மலையில் அவர் கொடுத்த பத்து கட்டளைகளையும், இரண்டு
கட்டளைகளாகச் சுருக்கிவிட்டார்.

பதிலைக் கூர்ந்து வாசிப்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும்.

நமக்கு இருப்பது ஒரு ஆன்மா, ஒரு உள்ளம்.

இவை இரண்டையும் முழுவதுமாக இறைவனுக்கு கொடுத்துவிட்டால் நமக்கும், நமது அயலானுக்கும் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?

இந்த கேள்விக்குரிய பதிலை கண்டுபிடித்து அதை ஆழமாக தியானிக்க வேண்டும்.

நாம் நமது ஆன்மாவையும்  மனத்தையும் முழுமையாக இறைவனுக்கு கொடுக்க வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும்போது,

 அந்த உண்மைக்குள் மறைந்திருக்கும் மற்றொரு உண்மையையும்   ஏற்றுக் கொள்கிறோம்.

அது என்ன உண்மை?

நாம் உட்பட, படைக்கப்பட்ட அனைத்து மக்களும் இறைவனின் பராமரிப்பின் கீழேதான் உள்ளனர் என்பதே அந்த உண்மை.

குடும்ப அட்டையில் உள்ள தலைவர் பெயருக்கு கொடுக்கப்படும் அனைத்து பொருளும் குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுக்கப்பட்டவைதானே.

அதுபோலவே கடவுளுக்கு கொடுக்கப்படுவது அவரது பாதுகாப்பில் உள்ள அனைவருக்கும்  கொடுக்கப்படுவதுதான். 

ஆகவே நாம் எதையும் கடவுளுக்கு முழுமையாக கொடுக்கும்போது படைக்கப்பட்ட அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தினர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறோம்.

நமது வீட்டில் சமையலறையில் குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு இருந்தாலும் 

நமது அம்மா ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாத்திரத்தில்தானே உணவு கொடுக்கிறார்.

அதே போல் தான் நமது அன்பை முழுவதும் இறைவனுக்கு கொடுத்து விட்டாலும் 

அவர் நம்மைப் பார்த்து 

அந்த அன்பிலிருந்து குடும்பத்தார் அனைவருக்கும் பங்கு கொடுங்கள் என்று சொல்கிறார்.

எந்த அன்பினால் இறைவனை 
நேசித்தோமோ  அதே அன்பினால் நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

 நமது குடும்பத்தில் நமது அப்பா அம்மாவை நேசிப்பது போல உடன் பிறந்தவர்களையும் நேசிக்கிறோம் அல்லவா, அதேபோல்,

ஆகவேதான் ஒரே குடும்பத்தை சேர்ந்த நாம் 

 நம்மை நேசிப்பது போலவே .

  நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

 நம்மை நாம் நேசிக்க வேண்டும் என்பதற்கு கட்டளை தேவையில்லை.

 பிறரை நேசிப்பதற்கு இறைவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.

இறை குடும்பத்தின் தலைவரான  கடவுளிடம் 

நமது முழு அன்பையும் கொடுத்து விட்டபடியால் 

கடவுள் மூலமே  நமது பிறரன்பையும் கொடுக்க வேண்டும்.

 கடவுள் மூலமே பிறரன்பை பகிர்ந்து கொள்வதால்தான்  பிறருக்கு செய்வதெல்லாம் கடவுளுக்கே செய்வது ஆகிறது.
 
கடவுள் மூலம் பகிர்ந்து கொள்ளாமல் உலகத்தின் மூலம் பகிர்ந்து கொண்டால் பிறருக்கு செய்வது கடவுளுக்கு செய்வது ஆகாது.

நமது அயலான் கடவுளின் பிள்ளை  என்பதற்காகத்தான்  அவனை நாம் நேசிக்கிறோம்.

கடவுளை நேசிப்பவனால் அயலானை நேசிக்காமல் இருக்க  முடியாது.

உண்மையான அன்பு தன்னிலும் பிறரிடமும் ஆன்மீக நலனையே நாடும்.

கடவுளை மறுப்பவர்களுடைய அன்பு உண்மையான அன்பு அல்ல.

   ஏனெனில் அது முழுக்க முழுக்க உலகையே சார்ந்தது.

 ஆன்மீக நலனை நாடாது

உண்மையான பிறரன்பு இறையன்பை உயிராகக் கொண்டது.

திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை.

   பைபிள் இந்த இரண்டு கட்டளைகளையே மையமாகக் கொண்டது.

இறை அன்பையும் பிறர் அன்பையும் நீக்கிவிட்டால் பைபிள்  இல்லை.

பைபிள் வாசிக்கத் தெரியாதவன்கூட 

தன் சிந்தனையிலும், சொல்லிலும்,  
செயலிலும் இறைவனையும் அயலானையும் நேசித்தால் மீட்புப் பெறுவான்.
 
வாசிப்பதைவிட வாழ்வதே முக்கியம்.

இறையன்பையும், பிறரன்மையும் வாழ்வோம்.

நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, August 19, 2021

"ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்." (மத்.22:5)

."ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்." (மத்.22:5)


"ஏங்க, விண்ணரசுன்னா என்னங்க?"

",, தெரியாம கேட்கிறியா? அல்லது நேரப் போக்கிற்காகக் கேட்கிறியா?"

"நான் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நேரம் போய்விடும் . 

நான் இப்பொழுது உங்களிடம் கேட்டதே இன்றைய நற்செய்தி 
 வாசகத்தை தியானிப்பதற்கு மட்டுமே."

",தியானிப்பதற்கு.மட்டுமா? வாழ்வதற்காக இல்லையா?"

"நீங்கள் சொல்வது சாப்பாடு கேட்டால் சாப்பிடுவதற்காக இல்லையா? என்று கேட்பது போல் இருக்கிறது. தியானிப்பதே வாழ்வதற்காகதான்.

இப்போ சொல்லுங்க. விண்ணரசு என்றால் என்ன?"

",சுருக்கமாகச் சொல்வதானால் உடலைச் சார்ந்த அரசு   உலக  அரசு. 

ஆன்மாவைச் சார்ந்த அரசு விண்ணரசு."

"ஆன்மாவும் உடலும் சேர்ந்து தானே இந்த உலகில் வாழ்கிறோம்.

இதை ஏன் உடலைச் சார்ந்த அரசு என்கிறீர்கள்?"

  ",நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது.   நமது உடல்  இவ்வுலக வாழ்வின் இறுதியில் மண்ணுக்கே திரும்பிவிடும். ஆகவேதான்   உடலை உலகை சார்ந்த அரசு என்கிறேன்.

கடவுள் முதலில் மண்ணைப் படைத்தார்.

 பிறகு மண்ணிலிருந்து ஆதாம் ஏவையின் உடலை உருவாக்கினார்.

ஆன்மாவை நேரடியாகப் படைத்து அவர்களின் உடலோடு சேர்த்தார். 

நமது உடல் நமது முதல் பெற்றோரின் வாரிசு.

நமது ஆன்மா கடவுளால் நேரடியாக படைக்கப்பட்டது.

அது கடவுளைப் போலவே ஆவி.
கடவுள் வாழும் விண்ணகத்தில் கடவுளோடு வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டது.

கடவுளின் சாயலிலே படைக்கப்பட்டது.

ஆகவேதான் அதை விண்ணகத்தைச் சார்ந்தது என்றேன். 

நமது ஆன்மா உடலோடு சேர்ந்து உலகில் வாழ்ந்தாலும் நமது வாழ்வின் இறுதியில் நமது உடலை மண்ணில் விட்டுவிட்டு விண்ணை பார்த்து பறந்துவிடும்.

கடவுள் வாழும் விண்ணைச். சேர்ந்த அரசுதான் விண்ணரசு. 

விளக்கம் போதுமா.?" 

"இயேசு ஏன்  விண்ணரசைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனுக்கு ஒப்பிடுகிறார்? " 

",விண்ணரசின் ஒவ்வொரு தன்மையையும் ஒவ்வொரு உவமை மூலம் இயேசு விளங்க வைக்கிறார்.

இதை விளக்கும் முன் சில அடிப்படை உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முழுமையாக விண்ணரசில் நாம் வாழப்போவது நமது இவ்வுலக மரணத்திற்குப் பின் தான்.

 ஆயினும் முழுமையான விண்ணரசில் வாழ்வதற்காக நம்மை நாமே இவ்வுலகத்தில் தயாரிக்க வேண்டும்.

 அதற்காகத்தான் நாம் அழைக்க பட்டிருக்கிறோம்.

"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" 
(லூக் 17:21)

 ஒருவகையில் விண்ணரசை இவ்வுலகிலேயே வாழ ஆரம்பிக்க வேண்டும்.

 இதற்காக நமக்கு இயேசு அழைப்பு விடுக்கிறார்.

  அவருடைய அழைப்பை ஏற்று இறையரசை இவ்வுலகிலேயே வாழ ஆரம்பிக்க வேண்டும்.

 இவ்வுலகில் இறையரசை வாழ்வது என்பது இறைவன் நமக்கு அதற்காக தந்துள்ள சட்டங்களின்படி வாழ்வது.

இயேசுவால் நிறுவப்பட்ட  கத்தோலிக்க திருச்சபையின் ஒழுங்கு முறைகளின்படி நாம் வாழும்போது இவ்வுலகில் இறையரசில் வாழ ஆரம்பிக்கிறோம்.

இவ்வுலகிலேயே நாம் இறையரசில் வாழ அழைக்கப்பட்டிருக்கும் அழைப்பை பற்றியதுதான் நாம் இன்று நற்செய்தியில் வாசித்த வாசகம்.
 
இறையரசை ஒரு  அரசன் அளிக்கும் திருமண விருந்துக்கு ஒப்பிடுகிறார்.

இறையரசில் வாழ நம்மை அழைப்பவர் விண்ணுலக அரசர், நம் ஆண்டவர் இயேசு.

திருமண விருந்தாகிய விண்ணரசுக்கு நாம் யாவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அழைப்பை ஏற்று நாம் விருந்துக்கு செல்கிறோமா என்பதை விளக்குவது தான் இயேசு கூறும் உவமை.

அழைக்கப்பட்டிருப்பவர்களுள் ஒருவன் தன் தோட்டத்திற்குப் போக வேண்டியிருப்பதாக சாக்குப்போக்கு சொல்லுகிறான்.

வேறொருவன் வியாபாரத்துக்குப் போக வேண்டியிருப்பதாக சாக்குப்போக்கு சொல்லுகிறான்.

இவர்கள் இருவருக்கும் திருமண விருந்துக்கு போக இஷ்டமில்லை ஆகவே சாக்குப் போக்கு சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்.

அதாவது விண்ணரசில் வாழ்வதற்கு அழைக்கப் பட்டிருந்தும் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

நம்மில்  அநேகர் அந்த இருவரைப்போலவே செயல்படுகிறோம்.

நமது நிலை பற்றி சிந்திப்பதற்கு இயேசு இந்த உவமையைக் கூறியுள்ளார்."

"நாம் ஏற்கனவே இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபையில் தானே இருக்கிறோம்.

 பிறகு எதற்கு இன்னொரு அழைப்பு?"

",வீட்டில் அம்மா சாப்பிட கூப்பிடுகிறார்கள்.

 நான் வீட்டில் தானே இருக்கிறேன், என்னை ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்று கேட்பாயா?"

"கேட்க மாட்டேன். கூப்பிட்ட உடனே செல்வேன் " 

",அதே போல் தான் இங்கேயும்.

 கத்தோலிக்க திருச்சபையில் இருந்தால் மட்டும் போதாது.

 அதன் ஒழுங்கு முறைமைகளின் படி வாழ வேண்டும்.

 தேவ திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெற வேண்டும்.

 மற்றவர்களுக்கு இறை அன்புடன் உதவி செய்து வாழ வேண்டும்.

 நமக்கு எதிராக குற்றங்கள் செய்தவர்களை தாராளமாக மன்னிக்க வேண்டும்.

 நாம் செய்த பாவங்களுக்கு தினமும் இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பத்துக் கட்டளைகளையும், திருச்சபைக் கட்டளைகளையும் .ஒழுங்காக அனுசரிக்க வேண்டும்.

 இந்த ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கும்படி தான் நாம் அழைக்கப்படுகிறோம். 

நான் திருச்சபையில் தானே இருக்கிறேன்.

 எனக்கு எதற்காக அழைப்பு என்று கேட்கக் கூடாது.

நம்மை அழைக்க இயேசு நேரடியாக வரமாட்டார்.

தனது பிரதிநிதிகள் மூலம் அழைப்பார்.

நம்மைப் பொறுத்த மட்டில் இயேசுவின் பிரதிநிதி பங்கு குருவானவர்.

அவர் ' பங்கினுடைய நிர்வாகி அல்ல, 

அவர் நமது ஆன்மீகத் தந்தை, 

பாவ நோய் நீக்கும் ஆன்மீக மருத்துவர்,

 விண்நோக்கிய நமது பயணத்தில் நம்மை வழியில் நடத்துபவர்,

நமக்காக பலி ஒப்புக் கொடுப்பவர்,

பலிப் பொருளாகிய இயேசுவை நமக்கு ஆன்மீக உணவாகத் தருபவர் ,

அவர் மூலமாகத்தான்  நமக்கு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

குருவின் உருவில் வாழும் இயேசுவின் அழைப்பை ஏற்று வாழ்கிறோமா,

அல்லது நமது இஷ்டப்படி வாழ்கிறோமா?

சிந்திக்க அழைக்கப்படுகிறோம்."

     சில சாக்குபோக்குகள்.

"ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வந்தது மாதிரி தெரியல?"

"மறுநாள் அரசுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை டியூஷனுக்கு போனேன்."

                   ***

"திருப்பலியின்போது கோவிலுக்குள் உட்கார்ந்தால் என்ன?"

"மனுசனுக்கு 1000 வேலைகள் இருக்கும் அடிக்கடி பிசினஸ் சம்பந்தமா phone Calls வரும்.
ஓயாம வெளியே ஓடி வர முடியுமா?"

                        ***

"பாவ சங்கீர்த்தனம்?"

"அதுக்கெல்லாம் நேரமில்லை."
 
                       ***

"ஏங்க, வாங்க, இரவு ஜெபம் சொல்வோம்."

"களைப்பாய் இருக்கு. படுக்கப் 
போறேன். இன்றைக்கு மட்டும் நீயும் மகனும் சொல்லுங்க."

"டேய், ஜெபம் சொல்ல வாரீயா?"
"என்னுடைய வீட்டுப் பாடத்தை நீங்க எழுதுவீங்களா?"
 
                       ***

"டேய், பூசைக்கு கிளம்பு."
"நீ,ங்க போயிட்டு வாங்க. நான்
on line ல பார்க்கப் போகிறேன்."
(கொரோனா செய்த கேடு!)

                      ***

"ஏன் யாருமே ஞானோபதேச வகுப்புக்கு  வரவில்லை?"

"நாளைக்கு பரீட்சையாம், சாமி."


நாட்ல சாக்குப் போக்குகளுக்கு மட்டும்  பஞ்சமே இல்லை!

சாக்குப் போக்கு சொல்லாமல் இறை வார்த்தையைக் கேட்போம்.

இறை அரசுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, August 18, 2021

""வேலையாட்களைக் கூப்பிட்டுக் கடைசி ஆள் தொடங்கி முதல் ஆள்வரை கூலிகொடு" (மத். 20:8)

""வேலையாட்களைக் கூப்பிட்டுக் கடைசி ஆள் தொடங்கி முதல் ஆள்வரை கூலிகொடு" 
(மத். 20:8)


திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து கூலி பெற்ற வேலையாட்கள் பற்றிய
 உவமையில்,

ஆரம்பம் முதல் வேலை செய்தவர்களும்,

இடையில் வந்து வேலை செய்தவர்தவர்களும் சம கூலி பெறுகின்றனர்.

இதனால் காலை முதல் வேலை செய்தவர்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

 "அதிகமாக வேலை செய்தவர்களுக்கும் , குறைவாக வேலை செய்தவர்களுக்கும் ஒரே கூலியா" என்று முதலாளியிடம் கேட்கிறார்கள்.

ஆனால் அவரோ,

"அவரவருக்குப் பேசிய கூலியைத் தந்தாகிவிட்டது. வாங்கிக் கொண்டு போகலாம்.

மற்றவர் களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நான்."
என்றார்.
 
விசுவசித்து, ஞானஸ்நானம் பெற்று, தேவ கட்டளைகளை அனுசரிப்பவர்களுக்கு மீட்பு உண்டு, 

அதாவது, விண்ணரசு உண்டு.

எவ்வளவு காலம் அனுசரிப்பவர்களுக்கு என்று ஆண்டவர் சொல்லவில்லை.

 குழந்தையாய் இருக்கும்போது ஞானஸ்நானம் பெற்று, எண்பது ஆண்டுகள் விசுவாச வாழ்வு வாழ்ந்து மரிப்பவனுக்கு எந்த விண்ணகம் உண்டோ, 

அதே விண்ணகம்தான் ஞானஸ்நானம் பெற்றவுடன் மரிப்பவனுக்கும் உண்டு.

விண்ணகத்தைத் தீர்மானிப்பது .ஞானஸ்நானம் பெறும்போது நாம் இருக்கும் நிலை அல்ல. 

மரிக்கும்போது இருக்கும் நிலை.

நாம் வாழும்போது எப்படி வாழ்கிறோம் என்பதை விட,

 எப்படி மரிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஒருவன் 60 ஆண்டுகள் பாவமே செய்யாமல் வாழ்ந்து மரிக்கிறான்.

இன்னொருவன் 60 ஆண்டுகளும் பாவ வாழ்க்கையே வாழ்ந்துவிட்டு உயிர் பிரியும் போது பாவங்களுக்கு மனஸ்தாபப் பட்டு மரிக்கிறான்.

இருவரும் விண்ணகத்திற்குத்தான் செல்வார்கள்.

60 ஆண்டுகள் பாவமே செய்யாமல் வாழ்ந்தவன் ஆண்டவரிடம் போய்,

"ஆண்டவரே நான் 60 ஆண்டுகள் உமக்குப் பிரியமாய் வாழ்ந்தேன்.

 ஆனால் இவன் ஒரே ஒரு வினாடி மட்டும் உனக்கு பிரியமாய் வாழ்ந்தான்.

   இருவருக்கும் ஒரே மோட்சமா?" என்று கேட்டால் ஆண்டவர் என்ன சொல்லுவார்?

"மகனே, உனக்கு கிடைத்ததற்காக சந்தோஷப்படு,

 அடுத்துவனுக்குக் கிடைத்ததற்காகவும் சந்தோஷப்படு"
என்றுதான் சொல்வார்.

தோட்ட வேலை காலையில் எட்டு மணிக்கு ஆரம்பித்து மாலையில் ஆறு மணிக்கு முடிவதாக வைத்துக்கொள்வோம். 

எட்டு மணிக்கு வேலைக்கு வந்த ஒருவன் மாலை 5.55க்கு வேலையை விட்டு போய்விட்டால்

 அவனுக்கு அன்றைக்கு பார்த்த வேலைக்கு கூலி கிடைக்காது.

 ஆனால் ஒருவன் மாலை 5.55 வேலைக்கு வந்து ஆறு மணி முடிய வேலை பார்த்தால் அவனுக்கு முழு கூலி கிடைக்கும்.

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்." (மத். 24:13)

ஒருவனது வாழ்க்கையில் முக்கியமான நேரம் பிறந்த நேரம் அல்ல.

பள்ளியில் சேர்ந்த நேரம் அல்ல.

'வேலையில் சேர்ந்த நேரம் அல்ல.

 திருமண நாள் அல்ல.

 குழந்தை பெற்ற நாள் அல்ல.

மரண நேரம்தான் வாழ்க்கையில் முக்கியமான நேரம்.

ஏனெனில் அதுதான் ஒருவனது நித்திய வாழ்வை தீர்மானிக்கிறது.

இயேசுவின் மடியில் தலையை வைத்து மரித்த புனித சூசையப்பர் தான் நல்ல மரணத்தின் பாதுகாவலர்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது அவரை நோக்கி செபிக்க வேண்டும்.


 "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்லுங்கள்" 

தோட்டத்திற்கு உரிமையாளர் வேலை இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து கூறிய வார்த்தைகள் இவை.

கத்தோலிக்க திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தில் பணிபுரிபவர்கள் நாம்.

திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளராகிய இயேசு தோட்டத்தில் பணிபுரிய ஆட்களை சேர்க்கும் பணியையும் நமக்கு அளித்துள்ளார்.

பணி இல்லாமல் இருக்கும் ஆட்களைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வாக்கியம் ஞாபகத்துக்கு வரவேண்டும்.

"இதோ நான் அழைத்துவந்த உமது பணியாளர்கள்" என்று நாம் இயேசுவிடம் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

புனித கல்கத்தா தெரசம்மாள் சாலையோரங்களில் மரணித்துக்
கொண்டிருக்கும் தொழுநோயாளிகளைத் தனது கரங்களால் தூக்கி வந்து, அவர்களது புண்களுக்கு மருந்து போட்டு உபசரிப்பாள்.
 
எதற்காக?

அவர்கள் ஆண்டவரது திராட்சைத் தோட்டத்தில் கொஞ்ச நேரமாவது பணிபுரிந்து விண்ணரசில் நுழையாலாமே!

அன்னைத் தெரசா விண்ணரசுக்குள் நுழையும் போது அவளால் பணியமர்த்தப்பட்ட திராட்சை தோட்ட பணியாளர்கள் அவளை வரவேற்றிருப்பார்கள்!

நம்மையும் விண்ணரசில் வரவேற்க ஆள் சேர்க்கலாமே!

லூர்து செல்வம்.

Tuesday, August 17, 2021

"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" (மத்.19:24)

"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" 
(மத்.19:24)

"என்னங்க, இன்றைய நற்செய்தியை கொஞ்சம் வாசியுங்கள்."

" பணக்காரன் ஒருவனை நோக்கி:

''நீ நிறைவு பெற விரும்பினால்,

 போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு.

 வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். 

பின்னர் வந்து என்னைப் பின்செல்" என்றார். 

ஆனால் அவனோ தனது சொத்துக்களை விற்க மனம் இன்றி  வருத்தத்தோடு போய்விட்டான்.

அப்போது இயேசு தம் சீடரிடம்,

 "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது.

 மீண்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.

 நீ சொன்ன படி வாசித்து விட்டேன்.
வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?"

"நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். நான் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். 
 
ஏன் இயேசு பணக்காரனிடம் 

உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு தன்னைப் பின்பற்றச் சொன்னார்."


",உடமைகள்உள்ளவனிடம் தான் அவற்றை விற்க சொல்ல முடியும்.

  இல்லாதவனிடம் எதை விற்க சொல்லமுடியும்?''
 
''அதைச் சொல்லலீங்க, உடமைகளை வைத்துக்கொண்டு அவற்றோடு இயேசுவைப் பின்பற்ற முடியாதா?''

", முடியும்.  இயேசு எப்படி அழைக்கிறாரோ  அப்படி செல்ல வேண்டும்.

சிலரை குருக்கள் ஆகி சேவை செய்யும் படி அழைக்கிறார்.

சிலரை துறவற மடங்களில் சேர்ந்து  சேவை செய்ய அழைக்கிறார்.

சிலரை திருமண வாழ்க்கையில் சேவை செய்ய அழைக்கிறார்."

"அதெல்லாம் தெரியுமுங்க.  அப்போஸ்தலர்களை அழைக்கும்போது  'என்னைப்  பின்செல்' என்று அழைத்தார்.

அவர்கள் தங்கள் உடமைகளையும், உறவுகளையும் விட்டுவிட்டு பின் சென்றார்கள்.

அல்லும் பகலும் அவரோடு இருக்க வேண்டியவர்கள் உடமைகளோடும், உறவுகளோடும் இருக்க முடியுமா?

அவர்களைப் போலவே தன்னைப் பின்பற்ற அந்த வாலிபனை  அழைத்திருப்பார்.

ஆனால் அவனுக்கு மனமில்லை."

"சரி. ஆனால் 
"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது." என்று சொன்னாரே, அதுதான் புரியவில்லை.

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையவே  முடியாது.

அப்படியானால் பண வசதி உள்ளவர்கள் மோட்சத்தற்குப் போகவே முடியாதா?"

", முடியும். சுமையே இல்லாமல் மைல் கணக்காய் நடக்கலாம்.

கனமான சுமையை சுமந்து கொண்டு நடக்க முடியுமா?"

"சுமையை இறக்கி வைத்து விட்டு நடக்க வேண்டியது தானே!"

", பிரச்சனை அங்கேதானே வருகிறது. ஒரு சாக்கு நிறைய 2000 ரூபாய் நோட்டு கிடைத்தது. கோடிக்கணக்கில் மதிப்பு.

அந்த சாக்கை சுமந்துகொண்டு நடக்க முடியாது.

 அவ்வளவு ரூபாயை இறக்கி வைக்கவும் முடியாது.

 ஆகவே அவ்வளவு பணம் உள்ளவன் நடக்க முடியாது."

"அதாவது பணத்தின் மீதுள்ள 
பற்றுதான் பிரச்சனை.

கடவுள் மீது உள்ள பற்றை விட பணத்தின் மீது அதிக பற்று உள்ளவர்கள் கடவுளை பின்பற்ற முடியாது.

 கடவுளைப் பின்பற்ற முடியாவிட்டால் மோட்சத்திற்குச் செல்லமுடியாது..

 பிரச்சனைக்கு காரணம் பணம் அல்ல, பணத்தின் மீது உள்ள பற்று. 


பண ஆசை உள்ளவனைக் கெடுக்க ஆள் யாரும் தேவை இல்லை.

 அவனது பண ஆசையே அவனைக் கெடுத்துவிடும்.

 பண ஆசை உள்ளவன் பணத்தை  பணத்திற்காகவே தேடுவான்,

அதன் பயன்பாட்டிற்காக அல்ல.

தேவைக்கு அதிகமான பணத்தை ஈட்டுவதற்காக எவ்வளவு மோசமான வழிகளாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்த தயங்க மாட்டான்.

எவ்வளவு பெரிய பாவங்களையும் செய்ய தயங்க மாட்டான்.

 லஞ்சம் வாங்குவான், லஞ்சம் கொடுப்பான்.

தனது பண ஆசையை நிறைவேற்றுவதற்காக தானும் கெடுவான், 

 தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் கெடுப்பான்.

அற்ப மண்ணுக்கு ஆசைப்பட்டு  விண்ணகத்தையே தியாகம் செய்து விடுவான். 

சரியா?"
.
",Super சரி. கையில் நிறைய பணம் இருந்தாலும் 

அதன்மீது பற்று இல்லாதவன் அதை எப்போது  வேண்டுமானாலும்,

 யாருக்காக வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருப்பான்.

கையில் பணம் இருந்தாலும் அதன் மீது பற்று இல்லாதவன்  பணக்காரன் அல்ல.

ஆனால் கையில் பணமே இல்லாத ஒருவன் அதன் மீது உள்ள பற்றின் காரணமாக அதைத் தேடி அலைவான். 

பணம் கிடைக்கவே விட்டாலும் அதை தேடி அலைவதை விடமாட்டான்.

அலைவதை விட்டுவிட்டு கடவுளிடம் வரவும் மாட்டான்.

பணப்பற்று மட்டும் உள்ள அவன்தான் உண்மையில் பணக்காரன்."


"அப்படியானால் யார்தான் மீட்புப்பெற முடியும்?" 

என்ற சீடர்களின் கேள்விக்கு ஆண்டவர்,

அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்"

என்று சொல்கிறாரே,

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பணக்காரன் விண்ணகம் செல்வது அரிது என்று சொன்னவரும் கடவுள் தானே."

", ஆம். கடவுளால் எல்லாம் முடியும்.

ஆனாலும்,

நம்முடைய ஒத்துழைப்பு இன்றி நம்மை படைத்து காப்பாற்றி வரும் கடவுள் 

மீட்பு விஷயத்தில் நமது ஒத்துழைப்பையும் நாடுகிறார்.

நம்மிடம் நிறைய  பணம் இருந்தால் நாம்  செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

 பணத்தின் மீது உள்ள  பற்றை கடவுள் மீது மாற்றி விட்டால் போதும். 

மீதியை கடவுள் பார்த்துக் கொள்வார்.

நம்மிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் கடவுள் மீது பற்று  உள்ளவர்களாக வாழ்வோம்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை.''

லூர்து செல்வம்

Monday, August 16, 2021

கடவுளால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்போம்.

கடவுளால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்போம்.



"ஏங்க, நீங்க English வாத்தியார்தானே?"

",யார் சொன்னா? நான் தமிழ் வாத்தியார்."

".பொய் சொல்றீங்க."

", ஏண்டி, நான் பிறந்தது தமிழ் நாடு,
வளர்ந்தது தமிழ் நாடு, தாய் மொழி தமிழ். நான் எப்படிடி English வாத்தியாரா இருக்க முடியும்?"

"நீங்க பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு English பாடம் எடுக்கல?"

",English பாடம் எடுத்தா English  வாத்தியாரா? England ல பிறந்த வாத்தியார்தாண்டி English  வாத்தியார்.

நான் தமிழ் நாட்டில பிறந்தவன். ஆகவே தமிழ் வாத்தியார்தான்.

அதாவது,
ஆங்கில பாடம் நடத்தும் தமிழன்."

"ஒரு நாள் சாமியார் பிரசங்கத்தில் சொன்னார்:

ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் அல்ல.
 
கிறிஸ்துவை வாழ்பவர்கள்தான் கிறிஸ்தவர்கள்."

", ஏண்டி, திடீரென்று பிரசங்கத்துக்குத் தாவிட்ட!"

"நான் ஒண்ணும் தாவல. 

English பாடம் எடுத்தா English  வாத்தியாரா? என்று நீங்கள் சொன்னதைக் கேட்ட உடனே எனக்கு சாமியார் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.''

",உண்மையான கிறிஸ்தவன் யார்?"

"கிறிஸ்துவை வாழ்பவன்தான் உண்மையான கிறிஸ்தவன்."

", இந்த கேள்விக்குப் பதில் சொல்.

ஏன் கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்?"

"தான் மனிதனில் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக."


", அதாவது,

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப்  பார்க்கும்போது அவனில் கடவுளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக.

 ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்கும்போது கடவுளை நேசிக்கிறோம் என்பதை உணர்வதற்காக.

யாரை வெறுத்தாலும் நாம் கடவுளையே வெறுக்கிறோம் என்பதை உணர்வதற்காக.

யாருக்கு என்ன செய்தாலும் அதை இறைவனுக்கே செய்கிறோம் என்பதை உணர்வதற்காக.

இயேசு அறிவுறுத்தியது போல ஒவ்வொருவரும் பரம தந்தையைப் போல நிறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக.

" வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."(மத். 5:48)

"இதன்படி பார்த்தால் எவனொருவன் இன்னொருவனிடம் கிறிஸ்துவை பார்க்கிறானோ அவனே
நல்ல கிறிஸ்தவன்."

",இன்னுமொரு படி மேலே போய் சிந்தித்தால்,

 ஒருவன் முதலில் தான் தன்னுடைய நடத்தையால் கிறிஸ்துவாக மாற வேண்டும்.

 தொடர்ந்து தனது ஒவ்வொரு அயலானிடமும் தன்னையே பார்க்க வேண்டும்.

 அதாவது தன்னில் வாழ்கின்ற கிறிஸ்து அவனிடமும் வாழ்வதைப் பார்க்க வேண்டும்.

 அதாவது கிறிஸ்துவையும் கிறிஸ்தவனையும் பிரிக்க முடியாது."

"இப்போது  ஒன்று புரிகிறது. நமது அயலானில் நம்மைப் பார்த்தால்தான்  நாம் நம்மை நேசிப்பது போல நம் அயலானையும் நேசிக்க முடியும்.

அது மட்டுமல்ல,  நம்மில் கிறிஸ்து இருந்தால்தான் நாம் உண்மையான அன்போடு அயலானை நேசிக்க முடியும்." 

",கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களும் மற்றவர்களை நேசிக்கின்றார்கள் அது எப்படி?" 

" கடவுள் எல்லா மனிதர்களையும்,

 தன்னை மறுப்பவர்களையும்கூட,

 தன் சாயலில்தான் படைத்தார்.

 படைக்கும்போது அவர்களையும் அன்பு என்ற பண்போடுதான் படைத்தார்.

 அன்புதான் மனிதனுக்கு கடவுளின் சாயலைக் கொடுக்கிறது. 

 கடவுளை  ஏற்றுக் கொள்பவன்தான் அவர் தந்த அன்பை அவருக்காகப்  பயன்படுத்துகிறான்.

அவருக்காகப்  பயன்படுத்துபவன்தான்  அவர் தரும் நிலை வாழ்வுக்கு ஏற்றவன்."

",கடவுளை  ஏற்றுக் கொள்ளாதவன்.
அவர் தந்த அன்பை தன் சொந்த திருப்திக்காகப் பயன்படுத்துகிறான்.

தன் சொந்த திருப்திக்காகப் பயன்படுத்துகிறவன் அவர் தரும் நிலைவாழ்வுக்கு ஏற்றவன் அல்ல.

ஒரு ஒப்புமை.

அரசு நடந்தும் பள்ளியில்
 படித்து முடித்தவன் ,அரசு ஊழியம் செய்தால், அரசு தரும் சம்பளத்தைப் பெறுவான்.

சுயமாக ஏதாவது வேலை செய்தால் அரசு சம்பளம் தராது.

அதேபோல்தான்,   இறைவனுக்காக அயலானை நேசிப்பவன் இறையரசில் நுழைவான்.       

 சொந்த திருப்திக்காக நேசிப்பவனுக்கு 
அவனது திருப்திதான்  அரசு."

"ஒரு சின்ன சந்தேகம்.

 நாம் மற்றவர்களில் கடவுளின் கைவண்ணத்தைப் பார்க்க வேண்டும் என்பது உண்மைதான்.

 ஆனால் சாத்தானின் பிள்ளைகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்,

அதாவது,

 இறைவனுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்களில் எப்படி இறைவனை காண்பது?"

",கடவுள் யாரையும் கெட்டவர்களாக படைப்பதில்லை.

சவுளிக்கடைக்குச் சென்று புதிதாக Dress எடுத்து வருகிறோம்.

புதிய dress ல். அழுக்கு ஏதும் இல்லை. ஆனால் அதைப் பயன்படுத்தும்போது அழுக்காகி விடுகிறது.

அழுக்கான dress ஐ என்ன செய்கிறோம்?"

"துவைத்து அழுக்கு நீக்கி பயன்படுத்துவோம்."

",அழுக்கு என்பதற்காக தூர போட மாட்டோமே!"

"அழுக்கு தான் நீக்கப்பட வேண்டியது. dress அல்ல."

",அதே போல் தான் மனிதன் கெட்டு விட்டாலும் நீக்கப்பட வேண்டியது கெட்ட குணம் மட்டும்தான். மனிதன் அல்ல.

  நமது அயலான் கெட்டவனாக இருந்தாலும் நாம் அவனை நேசிக்கத் தான் வேண்டும்.

கெட்ட குணத்தை நீக்க அவனுக்கு உதவ வேண்டும்.

எந்தச் காரணத்தை  முன்னிட்டும் அவனை வெறுக்கக் கூடாது,

 ஏனென்றால் அவன் கடவுளின் படைப்பு.

கடவுளின் படைப்பை நேசிக்காதவன் கடவுளையே நேசிக்கவில்லை.

கடவுளே பாவிகளாகிய நம்மை தேடித்தான் உலகிற்கு வந்தார்.

பாவிகளை தேடித்தான் அவரது சீடர்களை அனுப்பினார். நாமும் அவரது சீடர்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆகவே கடவுளால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்போம்."

லூர்து செல்வம்.