Wednesday, June 30, 2021

"மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"(மத்.9:2)

"மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"
(மத்.9:2)

இயேசு உலகிற்கு வந்தது ஆன்மாக்களின் மீட்புக்காக.

பாவ நோயிலிருந்து ஆன்மாக்களை விடுவிக்க.

இவ்வுலகைச் சார்ந்த எந்த விடுதலைக்காகவும் அல்ல.

யூதர்களில் அனேகர் மெசியா வந்து 

தங்களை உரோமையர்களின் அடிமைத்தனத்திலிருந்து  மீட்டு

 தங்களுக்கு தனி சுதந்திரமான ராஜ்யம் அமைத்து ஆள்வார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் இயேசு உலகிற்கு வந்தது அரசியல் விடுதலைக்காகவோ,

 பொருளாதார விடுதலைக்காகவோ,

சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவோ,

உடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவதற்காகவோ அல்ல.

ஆன்மாக்களின் மீட்புக்காகவும், இறை அரசை ஏற்படுத்தவுமே உலகிற்கு வந்தார்.

அப்படியானால் அவர் ஏன் சென்ற இடமெல்லாம் மக்களின் உடல் நோய்களை புதுமைகள் செய்து குணமாக்கினார்?

இயேசு ஒவ்வொரு நோயாளியையும் குணமாக்கிய விதத்தை உற்று நோக்கினால் 

அவர் செய்த ஆன்மீக பணி தெளிவாக விளங்கும்.

ஒவ்வொரு புதுமையிலும் நான்கு அம்சங்களை காணலாம்.

1. விசுவாசம்.
2..பாவமன்னிப்பு.
3.குணப்படுத்துதல்.
4.இயேசுவை பின்பற்றுதல்.

இவற்றில் குணப்படுத்துதல் மட்டுமே நமது புறக் கண்களுக்கு தெரிகிறது.

மற்ற மூன்று ஆன்மீக அம்சங்களும் ஆன்மாவின் கண்கொண்டு நோக்கினாள் தான் தெரியும்.

திமிர்வாதக்காரனைக் குணப்படுத்திய புதுமையில் இயேசு,

அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"

என்கிறார்.

ஒவ்வொரு புதுமையிலும் இயேசு விசுவாசத்தை சுட்டிக் காண்பிப்பார்.

குணப்படுத்தியவுடன்
" உனது விசுவாசம் உன்னை குணப்படுத்திற்று."

என்று இயேசு சொல்வது வழக்கம்.

மீட்புக்கு அடிப்படைத் தேவை விசுவாசமே.

விசுவாசம் நமது சுய சம்பாத்தியம் அல்ல. அது இறைவன் நமக்கு இனாமாக தரும் பரிசு.

Faith is God's gift to us.

இப்போது ஒன்றை புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நோயாளியையும் குணமாக்கு முன்பு இயேசு அவனுக்கு விசுவாசம் என்னும் பரிசை முதலிலேயே கொடுத்து விடுகிறார்.

 அவர் கொடுப்பது நமது கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். விசுவாசக் கண்கொண்டு பார்த்தால் புரியும்.

விசுவாசத்தை தொடர்ந்து பாவங்களுக்கு  மனஸ்தாபம்.
அதன் விளைவாக பாவமன்னிப்பு.

அடுத்து குணமாக்குதல்.

இயேசு சென்றவிடமெல்லாம் நோயாளிகளை குணமாக்கி கொண்டே போனார் என்றால்

 சென்றவிடமெல்லாம் விசுவாச விதையை ஊன்றிக் கொண்டே போனார்,

மனஸ்தாபத் தண்ணீரைப் பாய்ச்சிக் கொண்டே போனார்,

பாவங்களை மன்னித்துக் கொண்டே போனார்,


இவற்றின் விளைவாக சீடர்களை உருவாக்கிக் கொண்டே போனார் என்பதுதான் பொருள்.

நோய்கள் குணமானது மக்களின் விசுவாச வாழ்வுக்கு இயேசு அளித்த பரிசு.

திமிர்வாதக்காரனை குணமாக்கிய புதுமையில் 

விசுவாசத்தை அடுத்து அவனது பாவங்களை மன்னிக்கிறார்.

அடுத்து தான் இறைமகன்,

தனக்கு பாவங்களை மன்னிக்கவும் அதிகாரம் உண்டு 

 என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு நோயைக் குணமாக்குகிறார்.

 "எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.

அவன் எழுந்து தன் வீடு சென்றான்.

குணமாக்கும் புதுமைகளில்  குணமானவன் 
ஒன்று அவரை பின் செல்வான்,
அல்லது அவரது புகழை பரப்புவான்.

இந்த புதுமையில் அவன் வீட்டுக்கு சென்று விட்டான். 

ஆனாலும், அங்கிருந்த மக்கட்கூட்டம், 

இத்தகைய வல்லமையை மனிதருக்கு அளித்த கடவுளை மகிமைப்படுத்திற்று.

இயேசுவின்  வல்லமையில்  நம்பிக்கை வைத்து இன்றும் நாம் நமது நோய்களை குணமாக்கும்படி வேண்டுகிறோம்.

நாம் கிறிஸ்தவர்கள் என்பதால் ஞானஸ்நானம் பெறும் பொழுது விசுவாசத்தையும் சேர்த்துதான் பெற்றிருக்கிறோம்.

இயேசுவிடம் நோயைக் குணமாக்கும்படி கேட்டால் குணமாக்குவார் என்று  நம்புகிறோம்.

நோய்களைக் குணமாக்கும்படி இயேசுவிடம் வேண்டும்போது குணமாக்கப் படுவதற்கு வேண்டிய இன்னும் இரண்டு அம்சங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் குணமாக்க வேண்டுவது நமது உடலில் உள்ள நோயை.

உடல் நோய் குணமாக வேண்டும் முன்  முதலில் நமது ஆன்ம நோயை குணமாக்கும்படி  இறைவனிடம் கேட்க வேண்டும்.

 அதாவது நமது பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பாவங்களுக்கு மன்னிப்புப் பெறாமல் உடல் நோயை மட்டும் குணமாக்க வேண்டுவது, கடவுளை பார்த்து,

"ஆண்டவரே எனக்கு விண்ணகத்திற்கு வர விருப்பம் இல்லை.

 ஆகவே பாவங்களுக்கு மன்னிப்பு பெற வேண்டும் என்ற அக்கறை ஏற்படவில்லை. 

ஆனாலும் நான் உலகத்தில் நோய் எதுவுமின்றி உடல் நலத்தோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

 ஆகவே எனது உடல் நோயை மட்டும் குணமாக்குங்கள்.

 அதுவே எனக்கு போதும்"

என்று சொல்வதற்கு சமம்.

விண்ணகத்திற்காக மட்டுமே நம்மை இறைவன் படைத்தார்.

அதற்கான முயற்சியை தான் நாம் முதலில் எடுக்க வேண்டும்.

இவ்வுலகம் தற்காலிகமானது.
நமது நிரந்தர வீடு விண்ணகம்தான்.

ஒரு வேலையாக அமெரிக்காவிற்கு சென்றுவிட்டு ஊருக்கு flight மூலம் திரும்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

பறந்து கொண்டிருக்கும்போது வீட்டுக்குப் போவதை விட விண்ணில் பறந்து கொண்டிருப்பது நன்றாக இருக்கிறது.

வீட்டிற்கு போகாமல் பறந்து கொண்டே இருக்கலாம் என்று ஆசைப்பட்டால் எப்படி? 

அப்படியேதான்  உலகிலேயே தங்க ஆசைப்படுவதும்.

அதற்குரிய நேரம் வந்தவுடன் ஆகாய விமானம் நின்றுவிடும்.

நாம் இறங்கி தான் ஆக வேண்டும்.

விண்ணக வாழ்விற்கு அவசியமானது பாவமற்ற வாழ்க்கை.

பாவ மன்னிப்பு பெற அவசியமானது பாவசங்கீர்த்தனம்.

நண்பர் ஒருவர் கேட்டார்,

"சாவான பாவம் செய்தால்தானே பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். அற்பப் பாவங்கள் மட்டுமே இருந்தாலும் ஏன் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்யச் சொல்லுகிறீர்கள்?"

நான் கேட்டேன்,

"வயலில் வேலை செய்து உடல் முழுவதும் சகதியாக இருப்பவன் மாலையில் கட்டாயம் குளிக்க வேண்டும்.

நீங்கள் அலுவலகத்திற்கு காரில் செல்லுகிறீர்கள். A.C. அறையில்  அமர்ந்து பணி செய்கிறீர்கள். தூசி கூட ஒட்டுவது சந்தேகமே. அப்படியிருந்தும் ஏன் தினமும் குளிக்கிறீர்கள்?"

"குளிக்கும்போது உடல் refresh ஆகி, உற்சாகம் ஏற்படும். உடல் வியர்வை கழுவப்படும். உடல் மணமாக இருக்கும். அதற்காகத்தான் தினமும் குளிக்கிறேன்."

"ஆன்மாவை பொறுத்தமட்டில் பாவசங்கீர்த்தனமும் அப்படித்தான்.

ஆற்பப் பாவங்கள் மன்னிக்கப் படுவதால் உத்தரிக்கிற தல வேதனை குறையும்.

பாவசங்கீர்த்தனம் செய்யும்போது அதற்கென்றே சில அருள் வரங்கள் கிடைக்கும். 

அவை ஆன்மாவிற்கு உற்சாகத்தை கொடுக்கும். பாவத்தில் விழாமல் இருப்பதற்காக ஆன்மீக தைரியத்தை கொடுக்கும். (Immunity against sin)

துறவற இல்லங்களில் வாரம் ஒரு முறை பாவ சங்கீர்த்தனம் செய்து விடுவார்கள்.

இது பரிசுத்தத்தனத்தில் வளர உதவும்."

மறக்காமல் ஞாபகத்தில் வைக்க வேண்டியது:

நமது உடல் நோயின்றி இருப்பதைவிட,

 நமது ஆன்மா பாவ நோயின்றி இருப்பதே மேல்.

லூர்து செல்வம்.

" அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்."(மத்.8:34)

" அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்."
(மத்.8:34)

இயேசு கதரேனர் நாட்டிற்கு வந்தபோது, பேய்பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தனர்.

அவர்கள் எவ்வளவு கொடியவர்கள் என்றால், அவ்வழியே யாரும் போகமுடியாது.

அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பன்றிகள் பல கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.

பேய்கள் அவரை நோக்கி, "நீர்  எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பும்"  என்றன.

இயேசுவும்  "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே, கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் மடிந்தது.


பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடிப்போய் நகருக்குச் சென்று எல்லாவற்றையும், பேய்பிடித்தவர்களைப்பற்றிய செய்தியையும் அறிவித்தார்கள்.

நகரினர் அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்.

இந்த நிகழ்ச்சியில்,  கதரேனர் நாடு யூதர்கள் வாழ்ந்த பகுதி அல்ல.


யூதர்களாய் இருந்திருந்தால் அவர்கள் பன்றிகள் வளர்த்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில்  யூதர்களின் மதச் சட்டப்படி பன்றிக் கறி உண்ணலாகாது.

பேய்கள்  பிடித்திருந்த இருவருமே யூதர்கள் அல்லர்.

  இயேசு அவர்களைக் குணமாக்கினார்.

இப்பகுதியை நாம் தியானிக்க ஆரம்பித்தால் நம்முள் எழும் சில வினாக்களுக்கு நமக்கு விடை கிடைக்காது.

ஏன் பேய்கள் பன்றிகளுக்குள் போக ஆசைப்பட்டன?

தெரியவில்லை.

எப்படியும் பன்றிகள் இறந்துவிடும். அப்போது  வெளியேறித்தான் ஆக வேண்டியிருக்கும்.

ஏன் பன்றிகள்  வளர்த்த கதரேனர் நகரினர் இயேசுவை தம் நாட்டை விட்டு அகலுமாறு  வேண்டினர்?

தெரியவில்லை.

முறைப்படி பார்த்தால் தங்கள் ஊரைச் சேர்ந்த இருவரைக் குணமாக்கியதற்காக அவர்கள் இயேசுவுக்கு நன்றி கூறியிருக்க வேண்டும்.

தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றிருக்க  வேண்டும்.

ஆனால் அவர்கள் இயேசுவை தங்களை விட்டு அகலுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஏன்?

"இயேசு பரிசுத்தர், தாங்கள் பாவிகள், பரிசுத்தரோடு பேச தாங்கள் அருகதையற்றவர்கள் என்று நினைத்து சொன்னார்களா?

தெரியவில்லை.

ஒரு முறை இராயப்பர் கூட இதே வார்த்தைகளை தாழ்ச்சியின் காரணமாக சொன்னார்.

கெனேசரேத்து ஏரியில் நிறைய மீன்களை பிடிக்க புதுமை செய்த இயேசுவின் காலில் விழுந்து, இராயப்பர் "ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்" என்றார். ( லூக்.5:8)


"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்." என்று செந்தூரியன் கூட ஆண்டவரிடம் கூறினான். (மத்.8:8)

இராயப்பரும், செந்தூரியனும்  கூறியது தாழ்ச்சியின் நிமித்தமாக என்று ஆண்டவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.

ஆனால் கதரேனர் கூறியது தாழ்ச்சியின் நிமித்தமாக அல்ல.

இருவர் பேய்கள் நீங்கி குணமானதால், குணமானவர்களோ, ஊரினரோ மகிழ்ச்சி அடைந்ததாக தெரியவில்லை. 

நகரினரின் பேச்சை பார்க்கும் போது, தங்களுள் இருவர் குணமானதில் அவர்கள்  மகிழ்ச்சியடையவில்லை. 

மாறாக இருவரை குணமாக்குவதற்காக தங்களது பன்றிகளை இயேசு காலி பண்ணி விட்டாரே என்று நினைத்து இயேசுவின் மேல் கோபப்பட்டது போல் தான் தெரிகிறது.

அவர்கள் மனிதர்களை விட பன்றிகளை அதிகமாக நேசித்தது போல் தெரிகிறது.

பிள்ளையின் நோயைக் குணமாக்குவதற்காக  தனது உடமையை இழக்க தயாராக இருப்பவன் உடமைகளை விட பிள்ளையை அதிகம் நேசிக்கிறான்.

ஆனால் உடமைகளை காப்பாற்றுவதற்காக பிள்ளையை இழக்க தயாராக இருப்பவன்  எப்படிப்பட்டவன்?

அப்படிப்பட்டவர்கள்தான்   அந்நகரினர்.

மற்ற இடங்களில் நோயிலிருந்து குணமாக்கப்பட்டவர்கள் இயேசுவைப் பின்பற்றி போவதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் இங்கு அதற்கு மாறாக குணமாக்கியதற்காக இயேசுதான் அகன்று போக வேண்டியிருக்கிறது!

இந்த நகரினரின் நடத்தையிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

"உன்னை நேசிப்பது போல் உனது அயலானையும் நேசி"

 என்பது தான் இயேசு கொடுத்த கொடுத்த கட்டளை.

"உன்னை நேசிப்பது போல் உனது உடமைகளையும் நேசி." என்று இயேசு சொல்லவில்லை.

 நாம் சொன்னதைச் செய்கிறோமா?

 சொல்லாததைச் செய்கிறோமா?

நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆய்ந்து பார்த்தால் உண்மை புரியும்.

திருமணம் ஒரு தேவத் திரவிய அனுமானம்.

ஒரு கத்தோலிக்க குருவானவர் முன்நிலையில்,

இதை நிறைவேற்றுபவர்கள் பெண்ணும், மாப்பிள்ளையும்.

அத்தியாவசியமானவை:

பெண்ணும், மாப்பிள்ளையும்.
அவர்களின் சம்மதம்.
அவர்களோடு எப்போதும் இருக்கவேண்டிய அன்பு.

அத்தியாவசியம் இல்லாதவை.

பணம்.
நகைகள்.
விருந்து.
படிப்பு.
வேலை.
சம்பளம்.

நாம் திருமணத்திற்கு  ஏற்பாடு செய்யும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

அத்தியாவசியமானவைகளுக்கா?
அத்தியாவசியம் இல்லாதவைகளுக்கா?

நம்மில் அனேகர் முக்கியத்துவம் கொடுப்பது மணமக்களுக்கு அல்ல, பொருட்களுக்கே என்பது நமக்குத் தெரியும். 

கதரேனர் மக்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

அவர்கள் குணமான அவர்களது அயலான்களுக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைப் பன்றிகளுக்குக் கொடுத்தார்கள்.

நாம் மணமக்களுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைப்
பணத்திற்குக் கொடுக்கிறோம்.

எட்டு மணிக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி

அதே நேரத்தில் ஒரு business meeting.

meeting குக்குப்  போனால் பல  இலட்சங்கள் வருமானம். 
போகாவிட்டால் வருமான இழப்பு.

அநேக business people எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

திங்கட்கிழமை அரசு பொதுத்தேர்வு.

ஞாயிற்றுக்கிழமை மாணவன் திருப்பலிக்கு போவானா?
Tution class க்குப் போவானா?


மதிய உணவுக்கு ஓட்டலுக்கு போவதாக வைத்துக் கொள்வோம்.

மட்டன் பிரியாணி சாப்பிட ஆசை.

ஓட்டலுக்குப் போய்க் கொண்டிருக்கும் போது வழியில் ஒருவன் சாப்பாட்டிற்காக கையேந்துகிறான்.

 மட்டன் பிரியாணி சாப்பிட 500 ரூபாய் ஆகும்.

நமக்கு பிறர் அன்பு இருந்தால்  கையேந்துபவனுக்கு ஒரு சாதாரண சாப்பாட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு,

நாமும் பிரியாணிக்கு பதில் சாதாரண சாப்பாடு சாப்பிடலாமே!

அப்படி செய்தால் பிரியாணியை விட  அயலானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அப்படிச் செய்யாவிட்டால் அயலானை விட சாப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அதுமட்டுமல்ல, ஆண்டவரைவிட பிரியாணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

 ஏனெனில் அயலானுக்குக் கொடுப்பது ஆண்டவருக்குக் கொடுப்பது.

 அயலானுக்குக் கொடுக்காதது ஆண்டவருக்கும் கொடுக்காதது!

 நமது வாழ்நாள் முழுவதிலும் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இறைவனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஓய்வு கிடைக்கும்போது சில சமயங்களில் ஏதாவது கற்பனைகளில் நமது மனதை ஈடுபடுத்துவது நமது வழக்கம், நேரப் போக்கிற்காக.

'வீண் கற்பனைகள் எதற்கும் பயன்படாது.

ஆனால் ஆண்டவரைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தால் இறைவனோடு உள்ள உறவு
நெருக்கமாகும்.

விண்ணகத்தில் பேரின்பம்  அதிகமாகும்.  

அதேபோல பேசும்போதும் பயன் படாத காரியங்களைப் பற்றி அரட்டை அடிப்பதை விட 

ஆன்மிக வாழ்வைப் பற்றி பேசினால் பேசியவருக்கும் பயன், கேட்பவருக்கும் பயன்.

நமது ஒவ்வொரு செயலின் நோக்கமும் இறைவனாக இருக்க வேண்டும்.

இறைவனை விட்டு விட்டு இந்த உலக காரியங்களை பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தால் நமது செயல்பாடுகளும் உலகை சார்ந்தவையாகவே இருக்கும்.

அழியாத விண்ணக  செல்வத்தை விட்டுவிட்டு, அழியக்கூடிய உலக செல்வத்தை ஈட்டி என்ன பயன்?

அயலானது நன்மைக்காக உலக செல்வங்களை தியாகம் செய்ய வேண்டும் என்ற பாடத்தை   கதரேனர் நாட்டினரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

அயலானுக்குச் செய்வதையெல்லாம் இறைவனுக்கே செய்கிறோம்.

லூர்து செல்வம்.

Tuesday, June 29, 2021

திருச்சபையின் இரண்டு தூண்கள்.

திருச்சபையின் இரண்டு தூண்கள்.

எதிர் எதிர் திசைகளில்  ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு பெரிய ஆறுகளை ஒரே கடலில் விழும்படி திருப்பிவிட முடியுமா? 

நம்மால் முடியாது.
 ஆனால் இறைவனால் முடியும்.

இராயப்புரும், சின்னப்பரும் எதிரெதிர் குணங்கள் உள்ளவர்கள்.

இராயப்பர் படிப்பறிவு இல்லாத ஒரு சாதாரண மீனவத் தொழிலாளி.

சின்னப்பர் யூதச் சட்டத்தை மிக நுணுக்கமாகக் கற்றவர்.


இராயப்பரின் இயற்பெயர் சீமோன்,
முதல் சந்திப்பிலேயே இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். - கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.

 கலிலேயாக் கடலோரமாய் நடந்த அடுத்த சந்திப்பின் போது, மீன்பிடித்துக் கொண்டிருந்த இராயப்பரையும், பெலவேந்திரரையும் 

"என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.

 உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

ஆக ஆரம்பத்திலிருந்தே இராயப்பரை  இயேசு  நற்செய்தி அறிவிக்க  அனுப்ப திட்டமிட்டு விட்டார்.

சின்னப்பரின்  ஆரம்ப  பெயர் சவுல். அவரின் ஆரம்ப திட்டம் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபையை முற்றிலும் அழித்து விடுவதுதான்.

ஆக, இராயப்பரின் ஆரம்ப திட்டமும், சின்னப்பரின் ஆரம்ப திட்டமும் எதிர் எதிரானவை.

இயேசு பூமியில் வாழும்போது இராயப்பருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் விண்ணகம் சென்ற பின்புதான் சின்னப்பருக்கு
 அழைப்பு விடுத்தார். 

விடுத்த அழைப்பை  இருவருமே ஏற்றுக்கொண்டார்கள்.

இருவருமே நற்செய்தி பணிக்காக தங்களை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

இருவரும் திருச்சபையைத் தாங்கும் தூண்கள் (Pillars of the Church) என்று அழைக்கப்படுகிறார்கள்.

சின்னப்பர் தான் மனம் திரும்புமுன் திருச்சபையை அழிக்க எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அதைவிட பன்மடங்கு ஆர்வத்தை திருச்சபையை பரப்புவதில் காண்பித்தார்.

புற ஜாதியினரை மனம் திருப்புவதில் அதிக ஆர்வம் காட்டியமையால் புறஜாதியினரின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார்.
 

" உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."
(மத்.16:18)

என்ற வார்த்தைகளின் மூலம் இயேசு இராயப்பரைத் தனது திருச்சபையின் தலைவராக  நியமித்தார்.

அவர்  தனது  மேற்றிராசனத்தை உரோமையில் நிறுவியதால் உரோமை கத்தோலிக்க திருச்சபையின் தலைநகர் ஆயிற்று.

அப்போது வேதகலாபனை காலம்.
நீரோ மன்னன் கிறிஸ்தவர்களைப் பிடித்து, வதை செய்து கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.

   கிறிஸ்தவர்கள் குகைகளில் ஒளிந்திருந்துதான் திருப்பலி வழிபாட்டில் கலந்து கொண்டார்கள்.

ஒரு நாள் மக்கள் இராயப்பரிடம் வந்து, "இராயப்பரே, மன்னன் கிறிஸ்தவர்களைக் கொன்று கொண்டிருக்கிறான்.

நாம் எல்லோருமே கிறிஸ்துவுக்காக உயிர் கொடுக்க தயார்தான்.

ஆனால் நீங்கள் திருச்சபையின் தலைவர். 

ஆகவே நீங்கள் உயிரோடு இருந்தால்தான் திருச்சபையை தொடர்ந்து வழிநடத்த முடியும்.

 ஆகவே தயவு செய்து கொஞ்ச நாளைக்கு உரோமாபுரியை விட்டு வெளியே தங்குங்கள்." என்றார்கள். 

அதில் உண்மை இருப்பதை உணர்ந்து இராயப்பரும் கொஞ்ச நாளைக்கு வெளியே தங்குவதற்காகப் போய்க்கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு தன் எதிரே வருவதைப் பார்த்தார்.

" ஆண்டவரே, எங்கே போகிறீர்கள்?"

"இராயப்பா, நீ கொஞ்ச நாளைக்கு சாகாமல் இருப்பதற்காக வெளியே போகிறாய்.

உனக்குப் பதிலாக சாவதற்காக நான் உள்ளே போகிறேன்."

"ஆண்டவரே திரும்பவும் சிலுவையில் மரணமா?"

"உனக்காக நான் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிலுவையில் மரிக்க தயாராக இருக்கிறேன். சரி, வழியை விடு."

" ஆண்டவரே,  வேண்டாம். நானே போகிறேன்." 

என்று கூறிவிட்டு திரும்பினார்.

மன்னனுடைய ஆட்கள் அவரைக் கைது செய்தார்கள்.

அவரை சிலுவையில் அறைந்து கொல்ல  திட்டமிட்டார்கள்.

"என் ஆண்டவரைப் போலவே சாக நான் அறுகதை அற்றவன். ஆகவே என்னை சிலுவையில் தலைகீழாக அறைந்து கொல்லுங்கள்." என்றார்.

அவ்வாறே சிலுவையில் தலைகீழாக அறைந்து கொல்லப்பட்டார்.

சின்னப்பர் மனம் திரும்பிய பின் சிறிய ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பயணம்செய்து 

புற இனத்தாரிடையே நற்செய்தியை அறிவித்து திருச்சபையைப் பரப்பினார்.

அவர் தான் மனம் திருப்பிய மக்களுக்கு எழுதிய கடிதங்கள் நற்செய்தி நூலில் இடம்பெற்றுள்ளன.  

அவர் ஜெருசலேமுக்கு வந்தபோது கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உரோமைக்கு அழைத்துவரப்பட்டார்.

தலை வெட்டப்பட்டு வேத சாட்சியாக மரித்தார்.

இராயப்பரும், சின்னப்பரும் 
இயேசுவுக்காகவே வாழ்ந்து, அவருக்காகவே வேத சாட்சிகளாக மரித்து அவரிடமே சென்றார்கள். 

நாம் புனிதர்களின் திருவிழாக்களை கொண்டாடுகிறோம்.

எதற்காக?

வெறும் ஞாபகார்த்தத்திற்காகவா?

வெறும் ஞாபகார்த்தத்தால் எந்தவித பயனும் இல்லை.

யாருடைய விழாக்களை கொண்டாடுகிறோமோ

 அவர்களைப்போல் நாமும் நடக்க ஆரம்பித்து, 

அவர்களைப்போல் நாமும் வாழ்ந்தால்தான் விழாக்களால் நமக்கு பயன். 

இராயப்பரைப் போலவும், சின்னப்பரைப் போலவும் நாமும் ஆர்வத்தோடு நற்செய்தி பரப்பும் பணியில் ஈடுபடுவோம்.

வாழ்வாலும், மரணத்தாலும் இயேசுவுக்கு சாட்சிகளாக விளங்குவோம்.

லூர்து செல்வம்.

Monday, June 28, 2021

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" (மத். 8:20)

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" 
(மத். 8:20)

மறைநூல் அறிஞன் ஒருவன் வந்து, "போதகரே, நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்லுவேன்" 
என்றான்.

இயேசு அவனிடம் "என் பின்னால் வா" என்றோ, " வர வேண்டாம்" என்றோ சொல்லவில்லை.

ஆனால் அவரை பின் சென்றால் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக் காண்பிக்கின்றார்.

 அந்த கஷ்டங்களை அவரோடு சேர்ந்து அனுபவிக்க தயாராக இருந்தால் அவரை பின் செல்லலாம்.

பகலெல்லாம் நற்செய்தி அறிவிப்பிற்காக  நடந்தே நிறைய இடங்களுக்கு சென்று வந்தபின் மாலையில் களைப்பாக இருக்கும்.

இரவில் படுத்து ஓய்வு எடுப்பதற்கு கூட சொந்தமாக ஒரு இடம் அவருக்கு இல்லை.

பெரும்பாலாக இரவு பொழுதை இயேசு ஜெபத்திலேயே செலவழித்தார்.

நரிகளுக்கு கூட தங்குவதற்கு இடம் உண்டு. பறவைகளுக்கு தூங்குவதற்கு கூடுகள் உண்டு.

ஆனால் இயேசுவுக்கு ஓய்வு எடுக்கக்கூட சொந்தமாக எந்த இடமும் இல்லை.

அவருடைய கஷ்டங்களில் பங்கெடுத்துக் கொள்ள தயாராக இருந்த சீடர்கள் மட்டும் அவர் எங்கு சென்றாலும் பின்னாலே சென்றார்கள். 

இயேசுவால் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத போது அவர்களாலும் இரவில் தூங்கி ஓய்வெடுக்க முடியாது.

 இயேசுவோடு சேர்ந்து அவர்களும் அவர் அனுபவித்த கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்தார்கள்.


மறைநூல் அறிஞனும் இயேசுவோடு  கஷ்டங்களை அனுபவிக்க தயாராக இருந்தால் அவரை பின் செல்லலாம்.

தயாராக இல்லாவிட்டால் பின்செல்ல முடியாது.


அவருடைய சீடர்களுள் இன்னொருவன் அவரை நோக்கி, "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர விடை கொடும்" என்றான்.

22 இயேசு அவனைப் பார்த்து, "என்னைப் பின்செல். இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்" என்றார்.

இவர் இயேசுவை பின் செல்ல தயாராக இருக்கிறார்.

 ஆனால் அதற்கு முன் அவரது சொந்த வேலை ஒன்று வீட்டில் காத்திருக்கிறது. அதை முடித்துவிட்டு இயேசுவை பின் செல்ல வேண்டும் என்று 
ஆசிக்கிறார்.

அதற்கும் இயேசு சம்மதம் தெரிவிக்கவில்லை.

வீட்டில் உள்ள வேலையை அங்குள்ள மற்றோர் கவனித்து கொள்வார்கள்.

இயேசுவை பின்பற்றுவதாக இருந்தால், 

முதலிடம் மட்டுமல்ல, 

முழு இடமும் அவருக்காகத்தான் இருக்க வேண்டும்.

உலகத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு இயேசுவை பின்பற்ற நினைத்தால்,

 உலகத் தேவைகளே 
நமது நேரத்தில் பெரும்பகுதியை காலி செய்துவிடும்.

அத்தேவைகள் நமக்கு உரியனவாக இருந்தாலும்,

 அவைகளைப் பற்றி கவலைப்படாமல் 

இயேசு ஒருவரையே  நினைத்து, அவருக்காக மட்டும் நமது நேரத்தை முழுவதும் செலவழித்தால் 

நமது தேவைகள் எப்படியாவது பூர்த்தி செய்யப்பட்டு விடும்.

இயேசுவின் பணியில் நம்மை முழுவதும் அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பு.

இயேசு இந்த இருவருக்கும் கூறிய வார்த்தைகள் அவர்களுக்கு மட்டுமல்ல, 

பிற்காலத்தில் அவருக்கு ஊழியம் செய்ய விரும்பும் எல்லோருக்கும் பொருந்தும்.

 இறைவன் தனது பணிக்கு நம்மை அழைக்க விடுக்கும் அழைப்புக்கு தேவ அழைத்தல் என்று பெயர்.

தேவன் நம்மை அழைக்கிறார்  என்ற உணர்வு நமது மனதில் தோன்றியவுடன் 

அதற்கு பொருத்தமானவர்களாக நம்மையே மாற்றிக்கொள்ளும் வேலையில் இறங்க வேண்டும்.

இறைப்பணி என்பது பஞ்சு மெத்தை போன்றது அல்ல, படுத்து ஓய்வெடுக்க.

முட்கள் நிறைந்த பாதை. அன்று இயேசுவின் தலைக்கு யூதர்கள் முள் முடியைச் சூட்டியது போல,

நமது கால்களுக்கு சூட்டப்படும்.

முட்களின் மேல் நடந்து செல்வது இன்பகரமான காரியமல்ல.

சொட்டும் ரத்தத்தையும்  ஏற்படும் வலியையும் தாங்கிக் கொண்டு உற்சாகமாக நடக்க முடிந்தவர்கள் தான் இறைப்பணிக்கு அருகதை ஆனவர்கள்.

இறைப்பணிக்கு தன்னையே அர்ப்பணித்த அன்னை மரியாள் வாழ்நாளில் வியாகுல மாதாவாகத்தான் வாழ்ந்தாள்.

இயேசு அவளது உதரத்தில் கருத்தரித்த உடனே பிறர்பணி ஆற்றுவதற்காக எலிசபெத்தம்மாள் 
இல்லம் நோக்கி கரடு முரடான பாதை வழியே பல மைல்கள்  நடந்தாள்.

மூன்று மாதங்கள் எலிசபெத்துக்குக்கு சேவை செய்தாள்.

 நாசரேத்து ஊரில் சூசையப்பருக்கு  வீடு இருந்தும், இயேசு தான் பிறப்பதற்கு ஒரு மாட்டுக் குடிலை தேர்ந்தெடுத்து 

தனது அன்னையையும், வளர்ப்புத் தந்தையையும், 

பெத்லகேம் நகருக்கு பல மைல்கள் பிரயாணம் செய்ய செய்தார்.

இயேசு பிறந்த பின் அவரை எடுத்துக்கொண்டு, மாதாவும் சூசையப்பரும் மூன்று ஆண்டுகள் எகிப்தில் நாடோடிகளாக மறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.

திரும்பி வந்தவுடன் நாசரேத்து ஊரில் தச்சு வேலை செய்துதான் உணவு உண்ண வேண்டியிருந்தது.

ஐந்து அப்பங்களை 5000 பேருக்கு பங்கு வைக்க தெரிந்த இறைவன் தனது பெற்றோர்களை தச்சு வேலை செய்துதான் பிழைக்க வைத்தார்.

அது மட்டும் இல்ல தன்னை வளர்த்த தந்தையை வாதநோயினால்தான் மரிக்க இயேசு சித்தமானார்.

பொது வாழ்வின்போது ஆயிரக்கணக்கானோருக்கு நோய்களை குணமாக்கிய இறைமகன் தன்னை  வளர்த்தவரைக் குணமாக்கவில்லை.

இறை பணி என்பது சொகுசான வாழ்க்கை அல்ல என்பதற்கு மாதாவும், சூசையப்பருமே  சான்று.

இறைப்பணி என்றாலே கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை.

பாடுகள் பட்டு மரித்த தேவனுக்கு ஊழியம் செய்வோரும் பாடுகள் பட்டு தான் ஆக வேண்டும்.

 குருத்துவ வாழ்க்கை   சொகுசான வாழ்க்கை என்று நம்மவர்கள் நினைக்கிறார்கள்.

தேவ அழைத்தலை ஏற்று குருவானவர் ஆகிவிட்டால் 

தங்க இடமும், உடுத்த உடையும், உண்ண உணவும் இலவசமாக கிடைக்கும்.

வயலில் வேலை செய்வது போல் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய அவசியமில்லை.

பயணம் செய்ய பைக் கிடைக்கும், கார் கூட கிடைக்கும். வரவேற்று உபசரிக்க ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பார்கள்.

படிப்பதற்கு வெளி
நாட்டிற்கெல்லாம் போகலாம்.

என்றெல்லாம் மக்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

குருக்கள் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதைப் பார்த்து அவர்கள் ஏதோ சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக  அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் குருத்துவ வாழ்க்கையைப் போல் கஷ்டமான வாழ்க்கை எதுவும் இருக்க முடியாது.

முதலில் அவர்கள் ஆற்ற வேண்டியது முழுக்க முழுக்க இயேசுவுக்கான பணி.

இறைப்பணியில் உலக சொகுசுகள் எதுவும் கிடையாது.

இயேசு சொகுசாக வாழ்ந்தாரா?
இல்லையென்றால் அவருக்கு பணி செய்பவர்கள் எப்படி சொகுசாக வாழ முடியும்?


இயேசுவின் நற்செய்திப் பணியில் அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது.

அதே பணி தான் குருக்களுக்கும்.

நற்செய்தியை எல்லோருக்கும் அறிவித்தல், 

எல்லோருக்கும் தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுதல், 

எல்லோருக்கும் ஆன்மீக உணவை அளித்தல்,

எல்லோருக்கும் ஆன்மீக வழிகாட்டுதல், 

ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து, அங்கு நிலவும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்

இவையும், இவையோடு நெருங்கிய தொடர்பு உடையவையும்தான்

குருக்களின் முழுநேரப் பணி.

இந்த ஆன்மீக பணியை நிறைவேற்ற  அவர்கள் உலகில் வாழ வேண்டும்.

உலகில் வாழ்வதே ஆன்மீக பணிக்காகத்தான்.

உலகில் வாழத் தேவையான இருக்க இருப்பிடம்,  உண்ண உணவு, உடுக்க உடை ஆகியவற்றை இறைவனே தனது திருச்சபை வழியாக பூர்த்தி செய்கிறார்.

இயேசு தலை சாய்க்க கூட இடம் இல்லாதிருந்ததை போலவே,

அவருக்கு ஊழியம் செய்பவர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் சொந்த வீடே கிடையாது!

நாம் உழைத்தோ, வங்கியில் கடன் வாங்கியோ சொந்தமாக வீடுகள் கட்டி அவற்றில் வாழ்கிறோம்.

ஆனால் ஒரு பங்கு குருவானவருக்கு பங்கு   அறை வீடு சொந்தமானது அல்ல.

நாம் வாங்குகிற சம்பளத்தில் நமக்கு வேண்டியதை நாமே வாங்கி சாப்பிடுகிறோம்.

ஆனால் இயேசு எப்படி பொதுவாழ்வின் போது மக்கள் கொடுத்ததை வாங்கி சாப்பிட்டாரோ,

அதே போல்தான் இறை ஊழியர்களும் எந்த மக்களிடையே ஊழியம் செய்கின்றார்களோ அவர்கள் கொடுத்த உணவைத் தான் சாப்பிட முடியும்!

உண்மையில் இறை ஊழியர்களுக்கு சொந்தமாக எதுவும் இல்லாததினால் தான்

திருச்சபை 

"நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்" 

என்று கட்டளையே கொடுத்திருக்கிறது!

வேத போதக நாடுகளில் ஊழியம் செய்வோம் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று அவர்களோடு வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்.

 
எவ்வளவு கஷ்டமாக வாழ்ந்தாலும் அவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணம் அவர்கள் பணிபுரியும் இயேசுவின் வாக்குறுதி.

"என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்.

12 அகமகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும்." 
(மத். 5:11,22)

 பாடுகளின் போது இயேசு யூதர்களால் எவ்வளவு வசைக் கூற்றுகளால் அவமானப்படுத்தப்பட்டார் என்று நமக்கு தெரியும்.

அவ்வளவும் அவரது ஊழியர்களுக்கும் கிடைக்கும்.

அந்த வசைகள் உட்பட அவர்களது  வாழ்வில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களையும் 

இயேசுவுக்காக ஏற்றுக்கொள்வதால் வானகத்தில் கிடைக்கப்போகும் கைம்மாறுதான் அவர்களை எப்பொழுதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கிறது.

தங்களுக்கு உரிய   யாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிய அவரது சீடர்களும்,

அவர்களுக்குப் பின்னால் இயேசுவின் ஊழியத்திற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்களும் 

தங்களது சீடத்துவ வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தோடு,

இயேசுவுக்காக மறைசாட்சிகளாக தங்களது உயிர்களை தியாகம் செய்தார்கள்.

வேதசாட்சிகளின் இரத்தம்தான் திருச்சபையை 
வளர்த்திருக்கிறது.

இயேசுவுக்காக கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு,

அவருக்காக மட்டுமே வாழ விரும்புகிறவர்கள் மட்டுமே அவரது பணிக்கு வருகிறார்கள்.

அவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

குருத்துவ வாழ்க்கை சொகுசான வாழ்க்கை என்று தவறாக எண்ணி அதற்காக வருகின்றவர்களுக்கு

 வாழ்நாளில் மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியாகி விடும்.

ஏனெனில் தங்களது சிலுவையை சுமந்துகொண்டு இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு மட்டுமே விண்ணகத்தில் சன்மானம் காத்திருக்கும்.

விண்ணக சன்மானமே இறை ஊழியர்களின் உற்சாகத்துக்கு உணவு.


இயேசுவைப்போல வாழ்ந்து, அவருக்காக உழைப்பவர்களே இறை ஊழியர்கள்.

லூர்து செல்வம்.

Sunday, June 27, 2021

கேளுங்கள், தரப்படும்.

கேளுங்கள், தரப்படும்.

" ஆண்டவரே!"

"தம்பி, சொல்லு."

"ஆண்டவரே, நான் உங்கள் தம்பியா?"

"நம் இருவருக்கும் விண்ணகத் தந்தைதானே தந்தை!

அப்போ நீ என் தம்பிதானே!"

"என்ன இருந்தாலும்

நீர் காலங்களுக்கு எல்லாம் முந்தியவர் .    
நான் நேற்றுப் பிறந்தவன்.

நீங்கள் சர்வ வல்லப கடவுள்,

நான் ஒன்றுமில்லாத மனிதன்"

"இப்படி எல்லாம் நினைத்து என்னை கண்டு பயப்பட கூடாது என்பதற்காகத்தான் நானும் உன்னை போல மனிதனாக பிறந்து, மனிதனாக வாழ்ந்து, மனிதனாக மரித்தேன்."

" உங்களைப் பார்த்து பயப்பட கூடாதா?"

"பாவம் செய்ய  பயப்பட வேண்டும்.   அன்புக்கு ஏன் பயப்பட வேண்டும்?"

"அப்போ பயப்படாமல் ஒரு கேள்வி கேட்கட்டுமா?"

"என்னை உனது சகோதரராக எண்ணி பயப்படாமல் கேள். அதற்காகத்தானே இரவும் பகலும் உனக்காக இங்கே நற்கருணைப் பேழையில் காத்துக் கொண்டிருக்கிறேன்."

"கேளுங்கள், தரப்படும் இன்று சொன்னீர்கள். ஆனால் நான் எதைக் கேட்டாலும் உங்களுக்கு இஷ்டமானதைத்தான் தருகிறீர்கள், எனக்கு  இஷ்டமானதை அல்ல."


"ஆமா. எனக்கு இஷ்டம் ஆனதை, அதாவது உனது ஆன்மீக மீட்புக்கு உதவக்கூடிய எதை கேட்டாலும் கட்டாயம் தருவேன்.

இவ்வுலக உதவிகளை கேட்கும்போது அவை உனது ஆன்மீக மீட்புக்கு உதவக்கூடியதாய் இருந்தால் அவற்றையும் கட்டாயம் தருவேன்."

"அப்போ நான் ஆசைப்படுவதை எல்லாம் கேட்கக் கூடாதா?

"உன் மகன் உன்னிடம் வந்து விளையாடுவதற்கு ஒரு பாம்பை பிடித்து தரச் சொன்னால் கொடுப்பாயா?"

"கொடுக்க மாட்டேன். பாம்போடு விளையாடினால், அது கடித்துவிடும். உயிருக்கு ஆபத்து."

"ஆனால் கேட்டது உனது மகனல்லவா?"

"அதனால் தான் கொடுக்க மாட்டேன். அவனுக்குப் பாம்பைப் பற்றித் தெரியாது. எனக்கு தெரியும்."

"அவனுக்கு அதைக் கொடுக்க விடாதபடி  தடுப்பது எது?"

"அவன்மீது நான் கொண்டுள்ள அன்பு."

"எனக்கு உன் மீது அளவற்ற அன்பு இருக்கிறது. 

நீ  ஆன்மாவிற்கு கெடுதி விளைவிக்கும் பொருளைக் கேட்டால்  நான்  கொடுக்க மாட்டேன்.

ஆனாலும் உனது ஆன்மாவிற்கு நன்மை விளைவிக்கும் பொருளை நீ கேட்காமலேயே தருவேன்.

நீ கேட்டது கிடைக்காவிட்டால் அது எனக்கு விருப்பம் இல்லாதது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்."

"எனக்கு பிரியமுள்ள ஒருவருக்கு சுகம் இல்லாமல் போய்விட்டது.

அவருக்கு சுகம் கிடைக்கும்படி வேண்டுகிறேன்.

ஆனால் என் வேண்டுதல் கேட்கப்படவில்லை. ஏன்?"

" நீ நேசிப்பவர்களை நானும் நேசிக்கிறேன்.அவர்களுக்காக எது வேண்டினாலும் அது அவர்களுக்கு நன்மை பயக்குமா, பயக்காதா என்று அவர்களுக்கு தெரியாது, எனக்கு தெரியும்.

அவர்களுக்காக நீ என்ன வேண்டினாலும் அவர்களுக்கு  நன்மை பயப்பதை   அவர்களுக்கு கொடுப்பேன்.

நான் அவர்களுக்கு கொடுப்பதெல்லாம் அவர்களுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.

 "உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக"

 என்று தந்தையை நோக்கி ஜெபிக்க உனக்கு கற்றுக் கொடுத்தவன் நான்.

 அந்த ஜெபத்தை தினமும் சொல்லுகிறாய் அல்லவா?"

"சொல்லுகிறேன்."

"பொருள் உணர்ந்து சொல்கிறாயா?"

"தந்தை என்ன நடக்க வேண்டும் என்று ஆசிக்கிறாரோ அதுவே நடக்க வேண்டும்.

விண்ணுலகில் அப்படித்தான் நடக்கிறது.

மண்ணுலகிலும் அப்படியே நடக்க வேண்டும்."

"பூவுலகில் நான் பிறக்கும்போது என்னை பெறுவதற்கு ஒரு அன்னையையும், வளர்ப்பதற்கு ஒரு தந்தையையும் நானே தேர்ந்தெடுத்தேன்.

தந்தையின் விருப்பமும் தூய ஆவியும் விருப்பமும் அதுவேதான். 

நாங்கள்  ஆள் வகையில் மூவராய் இருந்தாலும் ஒரே கடவுள்.

ஆகவே மூவருக்கும் இருப்பது ஒரே விருப்பமே.

எனது தாய்க்கு துணையாகவும் என்னை வளர்ப்பதற்காகவும் நான் தேர்ந்தெடுத்த சூசையப்பர்

 நான் திரு குடும்பத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்போதே மரிக்க வேண்டும் என்பதுவும் எனது விருப்பம்.

எனது விருப்பத்தை எனது தாய் மரியாளும், வளர்ப்புத் தந்தை சூசையப்பரும் முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.

எனது மடியிலேயே தலையை வைத்து சூசையப்பர் மரித்தார்.

அதன் பிறகு 30 வயது வரைக்கும் நான் தனியாகவே தச்சுத் தொழில் செய்து அன்னையைக் காப்பாற்றினேன்.

எனது பொது வாழ்வின்போது நிறைய பேரின் நோய்களைக் குணமாக்கியிருக்கிறேன்.

இறந்தோருக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் எனது வளர்ப்புத் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவரை குணமாகவில்லை.

 மரித்தபோது உயிர் கொடுக்கவும் இல்லை. 

ஏனெனில் அதுவே தந்தையின் சித்தம், எனது சித்தம்.

எப்படி செபிக்க வேண்டும் என்பதற்கு கெத்சமனி தோட்டத்தில் நான் செய்த செபமே முன்மாதிரிகை. 

''தந்தையே எனது விருப்பம் , உமது விருப்பமே நிறைவேறட்டும்"

நீயும் அப்படியே செபிக்க கற்றுக்கொள்.

உனது ஆசைகளை எல்லாம் தந்தையிடம் எடுத்து சொல்.

ஆனால் செபத்தை முடிக்கும் போது,

 "தந்தையே எனது ஆசைகளைக் கூறிவிட்டேன்.

 ஆனாலும் உமக்கு எது விருப்பமோ அதையே என்னில் நிறைவேற்றும். நான் உனது அடிமை."

உனது செபம் கட்டாயம் கேட்கப்படும்.

புரிகிறதா?"

"புரிகிறது, ஆண்டவரே.

செபிப்பது எனது விருப்பமாக இருந்தாலும்,

 நிறைவேறுவது உமது விருப்பமாகவே இருக்கட்டும்.

உமது அறிவுரைப்படியே நடப்பேன்.

நன்றி, ஆண்டவரே."


லூர்து செல்வம்.

Wednesday, June 23, 2021

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத்.8:13)(தொடர்ச்சி)

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத்.8:13)
(தொடர்ச்சி)

நேற்று குறிப்பிட்டிருந்த சிறுகதையில் வரும் வாலிபனுக்கு,

 தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய, தன் தாயின் மேல் உண்மையான நம்பிக்கை இல்லை.

நம்பிக்கை இருந்திருந்தால் அவன் தன் தாய் மேல் சந்தேகப் பட்டிருக்க மாட்டான்.

சந்தேகப்பட்ட வினாடியிலேயே அவன் அவளுக்கு மகனாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டான்.

அவனுக்குத் தாயின் மேல்  நம்பிக்கை இருந்திருந்தால்,

 அவள் பேசிக் கொண்டிருந்தது அவனுடைய அப்பா என்ற முடிவிற்கு வந்து இருப்பான். 

நாம் யாரை முழுவதுமாக நம்புகிறோமோ அவரை, எந்த சூழ்நிலையிலும்,  இம்மி அளவு கூட சந்தேகப் பட மாட்டோம்.

நமக்கு இறைவன் மீது முழுமையான விசுவாசம் இருக்குமானால்,

அவர் சர்வ வல்லவர் என்ற உண்மையை நம்புவோமானால்,

அவர் நமது பாசமுள்ள தந்தை என்று நம்புவோமானால்,

அவர நம்மை அளவுகடந்த விதமாய் நேசிக்கிறார் என்று நம்புவோமானால்,

ஒவ்வொரு வினாடியும் நம்முடன்  இருந்து நம்மைப் பராமரித்து வருகிறார் என்று நம்புவோமானால்,

ஒரு அணு கூட அவரது அனுமதியின்றி நகராது என்று நம்புவோமானால்,

நமக்கு என்ன நடந்தாலும் அது அவருடைய சித்தத்தினாலேதான், நமது நன்மைக்காகவே நடக்கிறது என்று நம்புவோமானால், 

நமது வாழ்வில் நமக்கு என்ன நேர்ந்தாலும்,

 நம்மீது அவர் கொண்டுள்ள அக்கரையின் மீது சந்தேகம் வருமா?

சிறிதளவு சந்தேகம் வந்தாலும் நாம் அவரை முழுமையாக விசுவசிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

நாம் நினைப்பது நடந்தாலும், நடக்காவிட்டாலும்,

நாம் அவரிடம் கேட்பது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும்,

நமது வாழ்வு இன்பங்களால் நிறைந்திருந்தாலும், துன்பங்களால் நிறைந்திருந்தாலும்

நாம் முழுமனதோடு அவருக்கு நன்றி கூறினால்தான் நம்மிடம் முழுமையாக விசுவாசம் இருக்கிறது என்று அர்த்தம்.

கஷ்டங்கள் வரும்போது, அவை எந்த ரூபத்தில் வந்தாலும்,

கொரோனா ரூபத்தில் வந்தாலும்,

 அவற்றிலிருந்து நமக்கு விடுதலை கொடுக்க நம் விண்ணகத் தந்தையிடம் கேட்க நமக்கு முழு உரிமை உண்டு. 

ஏனெனில் நாம் அவரது அன்புக்குப் பாத்திரமான பிள்ளைகள்.

ஆனாலும் அது விசயத்தில் நம் தந்தை என்ன முடிவு எடுத்தாலும் அது நமது நன்மைக்காகதான் இருக்கும்.

கஷ்டங்கள் நம்மை விட்டு முற்றிலும் நீங்கினாலும்,

ஓரளவு நீங்கினாலும், 

 முழுதும் தொடர்ந்தாலும் 

தந்தையின்  முடிவை நன்றியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நம் தந்தை நம்மைப் படைத்தது முடிவில்லாத நித்திய பேரின்ப வாழ்வுக்காக,

நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வுக்காக அல்ல.

இவ்வுலக துன்பங்களை அவருக்காக ஏற்றுக்கொண்டால் பதிலுக்கு நமக்கு முடிவில்லா பேரின்ப சன்மானம் கிடைக்கும்.

தனது குழந்தையை பார்க்கப் போகும் சந்தோசத்தில் 

அது தனது வயிற்றில் இருக்கும்  ஒன்பது மாதங்களும் ஏற்படும் கஷ்டங்களை ஒரு தாய் தாங்கிக் கொள்வது போலவும்,

பேறுகாலத்தின் போது ஏற்படும் வேதனைகளை அவள்  தாங்கிக் கொள்வது போலவும், 

நாம் நமக்கு இவ்வுலகில்  ஏற்படும் துன்பங்களை 

மறு உலகில் நாம் பெற இருக்கும் நித்திய பேரின்பத்தை எண்ணி மகிழ்ச்சியோடு தாங்கிக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல அந்த பேரின்பத்தை நாம் பெற நமது ஆண்டவர் பட்ட பாடுகளையும்,

 சந்தித்த மரணத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவர் பட்ட துன்பங்களுக்கு முன் நமது துன்பங்கள் ஒன்றுமே இல்லை.

துன்பப்படவே முடியாத அவர் நமக்காகத் துன்பப் படுவதற்காகவே,

நமக்காக மரிப்பதற்காகவே,

 மனித உரு எடுக்கத் தூண்டிய அவரது அளவுகடந்த அன்பை நினைத்துப்  பார்க்க வேண்டும்.

மரணத்தால் கூட நம்மையும் இறைவனையும் பிரிக்க முடியாது.

 அவரது அன்பில் ஒரு துளியாவது நம்மிடம் இருந்தால் உலகளவு துன்பம் வந்தாலும் அது நமக்கு கடுகளவு போல் தோன்றும்.

உண்மையான விசுவாச வாழ்வு வாழ்வோம்.

உண்மையான விசுவாசத்தோடு செபிப்போம்.

நமது விசுவாசம் நமக்கு நிலைவாழ்வு தரும்.

லூர்து செல்வம்.

Tuesday, June 22, 2021

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத்.8:13)

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத்.8:13)

இயேசு நூற்றுவர்தலைவனின் 
விசுவாசத்தைப் பாராட்டி அவனது
 ஊழியனைக் குணமாக்கினார்.

இயேசு எப்போதும் வியாதியுற்றோரை அவரே குணமாக்கினாலும்,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றுதான் சொல்வார்.  

நமது ஆன்மிக வாழ்வில் அடிப்படை விசுவாசம்தான்.

நம்மில் அநேகர் விசுவாசம் என்றால் விசுவாச சத்தியங்களை உண்மை என்று ஏற்றுக்கொள்வது மட்டும்தான் என்று நினைக்கிறோம்.

இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டாலே நமக்கு மீட்பு கிடைத்துவிடும் என்று நினைக்கிறோம்.

ஏற்றுக்கொள்வது ஆரம்பம்தான்.

Trainக்கு ticket எடுத்தால் மட்டும் போதாது. அதில் பயணித்தால்தான் செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல முடியும்.

Ticket எடுத்துவிட்டு Station னிலேயே நின்றுகொண்டிருந்தால் எப்படி செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல முடியும்?

முதலில் விசுவசிக்க வேண்டும். தொடர்ந்து விசுவாசத்தை வாழவேண்டும்.

உலகியலில் நாம் உயிர் வாழ வேண்டுமென்றால் உயிர் நம்மோடு இருக்க வேண்டும்.

உயிரோடு நாம் ஐக்கியமாகா விட்டால் உயிர் வாழ முடியாது. 

 ஆன்மீக வாழ்வின் உயிரே நமது விசுவாசம்தான்.

இயேசுவை நமது இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடன்,

நமது உயிர் நம்மோடு ஐக்கியமாக இருப்பது போல,

இயேசுவும் நம்மோடு நாமாக ஐக்கியமாகிவிட வேண்டும்.

நமது உயிர் நம்மை இயக்கிக் கொண்டிருப்பதுபோல 

நமது ஆன்மீக வாழ்வை இயேசு ஒருவரே இயக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இயேசுவின் எண்ணங்களே நமது எண்ணங்கள் ஆக மாற வேண்டும்.

அவையே நமது சொற்களாகவும், செயல்களாகவும் மாற வேண்டும்.

இப்போது வாழ்வது நாம் அல்ல, இயேசுவே.

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நாம் நூற்றுக்கு நூறு இயேசுவாக மாறினால்தான் 

நாம் இயேசுவை விசுவசிக்கிறோம் என்று அர்த்தம்.

"கேளுங்கள், தரப்படும்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

இயேசுவின் இந்த கூற்றை விசுவாச அடிப்படையில் நாம் ஏற்றுக்கொண்டால், 

நாம் கேட்டது கிடைத்துவிட்டது என்பதில் நூற்றுக்கு நூறு உறுதியாக இருப்போம்.

இயேசுவே நம்மை உயிராக இருந்து இயக்குகிறார் என்பது உண்மையானால் இயேசு விரும்புபவற்றையே நாமும் விரும்புவோம்.

இயேசு தனது விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பாரா?

இயேசுவின் விருப்பத்தை நாம் நிறைவேற்றும்போது நமது விருப்பம் நிறைவேறி விட்டதாக தானே பொருள்!

நடைமுறை வாழ்க்கைக்கு வருவோம்.

பள்ளிக்கூட படிப்பு முடிந்தவுடன் ஒரு வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறோம்.

நாம் விண்ணப்பித்துள்ள வேலை நமக்கு கிடைக்க வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டுகிறோம்.

அந்த வேலை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் இயேசுவின் விருப்பமாகவும் இருந்தால் அந்த வேலை உறுதியாக நமக்கு கிடைக்கும்.

Suppose, நாம் விண்ணப்பித்துள்ள வேலை கிடைக்காவிட்டால் அது இயேசுவின் விருப்பமல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவுக்கு விருப்பம் இல்லாதது என்று தெரிந்தவுடன் நாமும் அதன்மீது நமக்குள்ள விருப்பத்தை விட்டுவிட வேண்டும்.

"இயேசுவே உமது விருப்பப்படியே ஆகட்டும்" என்று பொறுப்பை முழுவதும் அவர் கையில் ஒப்படைத்து விட்டால்  அவர் விருப்பம் நம்மில் உறுதியாக நிறைவேறும்.

ஆனால் அனேக சமயங்களில் நமது பிரச்சனை

நாம் விரும்புவதை இயேசுவும் விரும்ப வேண்டும் என்று ஆசைப்படுவது தான்.

அந்த ஆசை நம்மில் இருப்பதால்தான் நமது ஆசை நிறைவேறாத போது நமக்கு இயேசுவின் மேல் நம்பிக்கை குறைகிறது. 

இயேசு விரும்புவதை மட்டுமே நாம் விரும்ப வேண்டும்,

 அவர் விரும்பாததை நாமும் விரும்பக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்தால்

நாம் கேட்டது  கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நாம் மகிழ்ச்சியாகவே இருப்போம்.

கிடைத்தாலும் இயேசுவுக்கு நன்றி கூறுவோம்,

 கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்,

 அதாவது என்ன நடந்தாலும் நன்றி கூறுவோம்.

"நம்புங்கள், செபியுங்கள், 
நல்லது நடக்கும்" என்று ஒரு பாடல் வரி உண்டு.

விசுவாசத்தோடு நாம் இயேசுவை கேட்கும்போது 

அதன் விளைவாக கிடைப்பது எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.

விசுவாச வாழ்வு என்பது ஒரு அர்ப்பண வாழ்வு.

அதாவது இயேசுவின் கையில் நம்மை முழுவதும் அர்ப்பணித்துவிட்டு, அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே வாழ்வது.

"இதோ ஆண்டவரின் அடிமை உமது விருப்பப்படியே எனக்கு ஆகட்டும்"

 என்ற அன்னை மரியாளின் வார்த்தைகள் தான் நமது வாழ்வின் வழிகாட்டும் வார்த்தைகளாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால்

நாம்விசுவசித்தபடியே நமக்கு ஆகும்.

விண்ணகத் தந்தையை நமது தந்தையாக ஏற்றுக்கொண்டபின்

 அவர்மீது எந்த அளவிற்கு அவரை விசுவசிக்க வேண்டும் என்பதற்கு பின்வரும் கதை உதவி செய்யும்.

ஐம்பதுகளில் மாணவ பருவத்தில் ஏதோ ஒரு வார பத்திரிகையில் வாசித்த சிறுகதை.

ஒரு ஊரில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தார்கள். மகன் இளம் வயது Sub-inspector.

தந்தை தேடப்பட்டு வரும் ஒரு கொலைக் குற்றவாளி. அவரை தேடும் பொறுப்பு மகனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தந்தை கொலை செய்துவிட்டு தப்பித்து போனபோது மகன் கைக்குழந்தை.

தாய் குழந்தையை வளர்த்து ஆளாக்கி Sub-inspector ஆக்கி இருக்கிறார்.

அவள் எதிர்பாராத விதமாக தந்தையை தேடும்  பொறுப்பை அரசு  மகனிடம் ஒப்படைத்திருக்கிறது.

ஆனால் தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும்.  
Sub-inspectorன் தாய் வீட்டுத் தோட்டத்தில் ஒரு ஒதுக்குப்புறமாக ஒரு ஆண்மகனோடு பேசிக்கொண்டிருப்பதை தற்செயலாக பார்க்கிறார்.

அவர் நேர்மையாக இருக்க விரும்பியதால்  தான் பார்த்ததை தாயிடமிருந்து மறைக்க விரும்பவில்லை.

"அம்மா, எத்தனை நாட்களாக இந்த பழக்கம்?"

"எந்த பழக்கம்?"

"இரவு நேரத்தில் மறைந்து நின்று பேசுவது! யார் அவன்?"

"அப்படியானால் நீ என்னை நம்பவில்லை!"

"நான் Sub-inspector. சந்தேகம் வராவிட்டால் குற்றவாளியை பிடிக்க முடியாது."

"நான்   குற்றவாளியா?

   உனது அப்பா நம்மை விட்டு போகும்போது நீ கைக்குழந்தை.

நீ என் பிள்ளை என்று எனக்குத் தெரியும். ஏனெனில் உன்னை பெற்று வளர்த்தவள் நான்.

 ஆனால் நான் உனது தாய் என்று நான் சொன்னதால்தான் உனக்கு தெரியும். நீ நான் சொன்னதை நம்பினாய். ஆனால் இப்பொழுது தெரிகிறது உண்மையில் உனக்கு  என்மேல் நம்பிக்கை இல்லை என்று.''

"நீங்கள் எனது தாய் என்று நம்புகிறேன். அதனால்தான் நீங்கள் நல்லவராக  இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் இன்று இரவு எனக்கு சந்தேகம் வந்துவிட்டது."

"Shut up. உனக்கு ஆரம்பம் முதல் என் மேல் நம்பிக்கை இருந்திருந்தால் உனக்கு என்மேல் சந்தேகம் வந்திருக்காது.

 நான் பேசிக் கொண்டிருந்தது உனது தந்தையிடம்தான் என்பது புரிந்திருக்கும். 

நீயும் உடனே வந்து அவரை கைது செய்திருப்பாய். ஆனால் நீ எனது ஒழுக்கத்தின் மீது சந்தேகப்பட்டு விட்டாய்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இரவு நீ எங்களைப் பார்த்ததை அவரும் பார்த்திருக்கிறார். 

ஆகவே இதற்குமேல் தான் மறைந்திருப்பது நல்லதல்ல என்று எண்ணி உன்னிடம் சரணடைய தீர்மானித்து எனது அறையில்தான்  காத்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஒரு உண்மையை சொல்லுகிறேன். அதை கேட்டு விட்டு போய் அவரை கைது செய்.

உண்மையில் கொலை செய்தது நான். தவறான எண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவனை என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கொலை செய்தேன்.

ஆனால் ஒரு குழந்தையை ஒழுங்காக வளர்ப்பதற்கு ஒரு தாயால்தான் முடியும் என்று எண்ணி கொலைப் பழியை தன் மேலே போட்டுக்கொண்டார்.

 ஆனாலும் என்னை பிரிந்து இருக்க முடியாததால் போலீஸிலிருந்து தப்பித்து மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நீ இன்றுதான் அவரைப் பார்த்தாய். ஆனால் நாங்கள் பலமுறை சந்தித்து பேசியிருக்கிறோம்.

  இன்றுதான் அவரை பார்த்து விட்டாய். இப்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை.  அவரது முகத்தை நீ பார்த்ததில்லை. ஆனால் அரசு உன்னிடம் தந்திருக்கும் அவரது புகைப்படத்தை வைத்து அவர்தான் என்பதை உறுதி செய்து கொள்.

நீ கைது செய்ய வேண்டியது அவரை மட்டுமல்ல, உண்மையான கொலையாளியான என்னையும் சேர்த்துதான்.
வா என்னுடைய அறைக்கு."

அங்கு சென்று பெற்றோரின் கால்களில் விழுந்து மகன் அழுததாகக் கூறி சிறுகதையை முடித்துவிட்டார் ஆசிரியர்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

"நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்: தீய மரமோ தீய பழம் கொடுக்கும்:" (மத். 7:17)

"நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்: தீய மரமோ தீய பழம் கொடுக்கும்:" (மத். 7:17)

இயேசு தனது போதனைகளை சாதாரண மக்களும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 

அவற்றை உவமைகள், உருவகங்கள், ஒப்புமைகள் மூலமாகக் கொடுத்தார்.

விண்ணகம் செல்வதையே நோக்கமாக கொண்டுதான் இவ்வுலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எப்படிப்பட்டவர்கள் விண்ணகம் செல்வார்கள்?

நல்லவர்கள் விண்ணகம் செல்வார்கள்.

கெட்டவர்களுக்கு அங்கே இடமில்லை.

ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்று எப்படி அறிந்து கொள்வது?

அதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மரம், பழம் ஒப்புமையை இயேசு தந்திருக்கிறார்.

ஒரு மரத்தை பார்த்த உடனேயே அது நல்ல மரமா, கெட்ட மரமா என்று நம்மால் அறிய முடியாது.

அது தரும் கனியை வைத்துதான் அது நல்ல மரமா, கெட்ட மரமா என்பதை அறிய முடியும்.

ருசியான, உடலுக்கு பலன் தரக்கூடிய பழங்களை தரும் மரம் நல்ல மரம்.


ருசியற்ற , உடலுக்கு தீங்கு தரக்கூடிய பழங்களை தரும் மரம் கெட்ட மரம்.

அதுபோல ஒருவரை நல்லவரா அல்லது கெட்டவரா என்று தீர்மானிப்பது அவருடைடைய செயல்களே.

செயல்களைத் தீர்மானிப்பது அவருடைய சிந்தனைகள். சிந்தனைகள் எப்படிப்பட்டவை என்று சிந்திப்பவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

சிந்தனைகளிலிருந்து பிறப்பவைதான் செயல்கள்.

ஒருவரது செயல்களிலிருந்ததான் அவரது சிந்தனைகள் எப்படிப்பட்டவை என்று தீர்மானிக்கலாம் 


விண்ணகம் செல்ல ஒருவனது செயல்கள் தான் முக்கியம் என்பதே இயேசுவின் போதனைகளில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

"வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக.

35 ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்.

 தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.

 அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.

36 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

 நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்.

 சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் " என்பார்

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."

நமது நற்செயல்கள்தான் நம்மை விண்ணகத்திற்கு தகுதி உள்ளவர்களாக  ஆக்குகின்றன  என்று இயேசுவே சொல்கிறார்.

செபம் மட்டும் சொன்னால் போதாது.

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்.

 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."(மத். 7:17)

"ஆண்டவரே, ஆண்டவரே"  - செபம்.

தந்தையின் விருப்பப்படி "நடப்பவனே" - நற்செயல்.

அயலானை நேசித்து, அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்வதுதானே விண்ணக தந்தையின் விருப்பம்! 

 முழுமையான கிறிஸ்தவ வாழ்வுக்கு கிறிஸ்துவை போல் வாழ வேண்டும்.

அதாவது இறைவனுக்காகப் பிறர் பணி செய்து வாழ வேண்டும்.

கிறிஸ்து நமக்கு வாழ்ந்து காண்பித்தது போல நாமும் மற்றவர்களுக்காக வாழ வேண்டும். 

மற்றவர்களுக்காக வாழும்போது இறைவனுக்காக வாழ்கிறோம்.

மற்றவர்களுக்காக வாழ்வதன் மூலம் இறைவனுக்காக வாழ்வதுதான் முழுமையான கிறிஸ்தவ வாழ்வு.

நமது சிந்தனையில் கிறிஸ்து இருந்தால்

நமது செயலிலும் கிறிஸ்து இருப்பார்.

நமது சிந்தனையில் பிறரன்பு இருந்தால்

நமது செயலிலும் பிறரன்பு இருக்கும்.

"நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் உனக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டேன்"

என்று நாம் சொன்னால்,

 "நேசிக்கிறேன்" என்று சொன்னது பொய்.

விசுவாசம் இருக்கும் இடத்தில்தான் அன்பு இருக்கும்.

"விசுவாசமும் இதைப் போலவே செயலோடு கூடியதாய் இராவிட்டால், அது தன்னிலே உயிரற்றதாகும்."(யாக. 2:17)

நற்செயல்கள் இல்லாத விசுவாசம்
உயிரற்றது.

 விசுவாசம்   உயிரற்றதானால், அன்புக்கு எப்படி உயிர் இருக்கும்?


நற்செயல்கள்  புரிவோம்.

 நல்லவர்கள் ஆவோம்.

விண்ணகம் நமக்கே.

லூர்து செல்வம்.

Monday, June 21, 2021

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள்." (மத். 7:13)

 "இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள்." (மத். 7:13)

S.S.L.C தேர்வுக்கு தங்களையே தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு வகுப்பு.

மாணவர்கள் பலர்.

ஒவ்வொருவரும் ஒரு விதம். 

சிலர் ஒரு முக்கியமான குறிக்கோளோடு தேர்வில் முதல்தரமான மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகத் தங்களையே தயாரித்துக்
 கொண்டிருக்கிறார்கள்.

சிலர் அந்த வகுப்பில் படிக்க நேர்ந்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தங்களைத்  தேர்வுக்காக தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


State First மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கோடு ஒருவன் தன்னைத் தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறான். 

பாடங்களை தேர்வுக்காக படிப்பதற்காகவே 

 என்னென்ன பாடத்தை எப்போ எப்போ படிக்க வேண்டும், 

எப்போ படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும், 

ஒவ்வொரு பாடத்தையும் எத்தனை முறை படிக்க வேண்டும், 

எப்போது சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் 

என்பதற்கான கால அட்டவணை போட்டு அதை கண்டிப்பான முறையில் பின்பற்றி வருவான்.

பாடங்களையும் தேர்வுகளையும் தவிர வேறு எண்ணம் அவன் மனதில் இருக்காது.

இரவில் தூங்குவதற்காக படுத்திருக்கும் போது கூட தூக்கம் வருவதற்கு முன்னால் ஏதாவது ஒரு பாடத்தை மனதில் திருப்பி பார்த்துக் கொண்டிருப்பான். 

கடிவாளம் போட்ட குதிரையால் அங்கும் இங்கும் பார்க்க முடியாது.

போகவேண்டிய வழி மட்டும் தெரியும்.

அவனது கால அட்டவணை அவனுக்கு ஒரு கடிவாளம்.

அப்படிப்பட்டவன் தேர்வு எழுதி, எதிர்பார்த்ததைவிட அதிகமான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவான்.

ஆனால், இன்னொருவனுக்கு தேர்வைப் பற்றியோ, மதிப்பெண்களை பற்றியோ கவலை இல்லை.

 அவனுக்கு இருக்கும் கவலையெல்லாம் நேரம் போகவேண்டும்.

புத்தகத்தை கையில் எடுக்கும் நேரத்தை விட  T.V பார்ப்பதற்கும்,
cell phone ஐ நோண்டுவதற்கும் இருக்கும் நேரம் அதிகமாக இருக்கும்.

நேரம் ஜாலியாக போகும்.

ஆனால் தேர்வும் 'அம்போ' என்று போய்விடும்.

இப்படித்தான் ஆன்மீக வாழ்விலும் இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.

ஒரு வகையினர் மனதில் இறைவனும் விண்ணகமும் தவிர வேறு எதுவும் இருக்காது.

உலகில் செலவிடும் ஒவ்வொரு வினாடியையும் இறைவனுக்காகவே செலவிடுவார்கள்.

தேவ திரவிய அனுமானங்களை பெறுதல்,

 இறைவனைத் தியானித்தல்,

 பிறருக்கு உதவி செய்தல்,

 என்ன துன்பம் வந்தாலும் இறைவனுக்காக தாங்கிக்கொண்டு அதை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தல்,

 இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் 

போன்ற ஆன்மீக காரியங்களுக்கு தங்களது முழு வாழ்க்கையும் அர்ப்பணித்து விடுவார்கள் 

இவர்கள் பயணிக்கும் ஆன்மீகப் பாதை மிக குறுகலானது.

ஜாலியான வாழ்க்கைக்கு இவர்களிடம் ஒரு நொடி கூட இடம் இல்லை.

இவர்கள் ஈட்டும் செல்வம் முழுக்க முழுக்க அருட்செல்வம் மட்டுமே.

தங்களிடம் இருக்கும் பொருள் செல்வத்தை கூட தர்மத்தின் மூலம் அருள்செல்வமாக மாற்றி விடுவார்கள்.

மரணத்தை நினைத்தால் பயப்பட மாட்டார்கள், 

அது இவர்களுக்கு விண்ணகத்தின் வாசல்.

பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கும்போது ஒரு பாடவேளை முடிந்து அடுத்த  பாடவேளை ஆரம்பிப்பதுபோல,

மரணம் முடிவுள்ள உலகப் பாடவேளை முடிந்து, முடிவில்லாத விண்ணகப் பாடவேளை    ஆரம்பிப்பதற்கான மணி மட்டுமே!

பள்ளிக்கூடம் முடிந்து  வீட்டுக்கு போகச் சொல்லும் மணியை மாணவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதுபோல் 

இவர்களும் மரணத்தை 
 ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நமது வீடு விண்ணகம் தானே!

இன்னொரு வகையினரின் மனதில் இவ்வுலகமும், இவ்வுலகின்  இன்பங்களை அனுபவிப்பதற்கான ஆசை மட்டுமே இருக்கும்.

இவ்வுலகு நிரந்தரமற்றது என்று தெரிந்திருந்தும் அதன் இன்பங்களை முடிந்த மட்டும் அனுபவித்து விடுவோமே என்ற ஆவலில் 

மறுஉலக பேரின்பங்களை தியாகம் செய்துவிட்டு,  இவ்வுலக வாழ்க்கையை இஷ்டம்போல் வாழ்பவர்கள் இவர்கள்.

கடவுளுடைய கட்டளைகளுக்கு கட்டுப்படாமல்  வாழ்பவர்கள்.

இவர்களில் சிலருக்கு  மறுஉலக பேரின்ப வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.

இவர்கள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்றும், இறை விசுவாசிகளை குருட்டு நம்பிக்கை உள்ளவர்கள்  என்றும் நினைத்துக்கொள்வார்கள். 

சிலருக்கு நம்பிக்கை இருந்தும் அதைப்பற்றி கவலை படுவது இல்லை.

இந்த உலக சிற்றின்பங்களுக்கு கவர்ச்சி அதிகமாகையால் அக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அவற்றின் பின்னே செல்வார்கள்.

அவர்கள் பயணிக்கும் பாதை மிக அகலமானது.

ஆட்டம் பாட்டங்கள் நிறைந்தது.

உலக இன்பங்களை அனுபவிப்பதே இவர்களது குறிக்கோளாக இருப்பதால் மரணத்தை நினைத்தாலே பயப்படுவார்கள்.

ஏனெனில் அது அவர்களது சிற்றின்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவதோடு,

பேரிடர் வாழ்வுக்கு ஆரம்பமாகவும் மாறிவிடும்.

ஆகவேதான் ஆண்டவர் விண்ணக வாழ்வுக்கு ஆசைப்படுபவர்கள் எல்லோரும் "இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள்"

என்கிறார்.

ஆண்டவர் சொற்படி நடப்போம்.

செப, தவங்கள் நிறைந்த,

இறைவனது கட்டளைகளுக்கு கட்டுப்பட்ட,

சிலுவைகள் நிறைந்த,

தேவ திரவிய அனுமானங்களால் அருள் வரங்கள் நிறைய பெறுகின்ற,


லௌகீகம் கலவாத ஆன்மீக வாழ்வை தேர்ந்தெடுத்து 

அதன்படி நடந்து நிலைவாழ்வை அடைவோம்.


லூர்து செல்வம்.

Sunday, June 20, 2021

"வெளிவேடக்காரனே, முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்து எறி: பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாகக் கண் தெரியும். "( மத். 7:5)

"வெளிவேடக்காரனே, முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்து எறி: பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாகக் கண் தெரியும். "
( மத். 7:5)

நமது உடலில் உள்ள அழுக்கை கழுவ வேண்டுமென்றால் சுத்தமாக தண்ணீரில் குளிக்க வேண்டும்.

சாக்கடைத் தண்ணீரில் குளித்தால் அழுக்குப் போகாது, மேலும் அசுத்தம் சேரும்.


பிறருடைய குறைகளை நீக்க அவர்களுக்கு புத்திமதி சொல்லும் எவரும் 

எந்த குறைகளை நீக்குவதற்காக புத்திமதி சொல்லுகிறாரோ

 அதே குறைகள் புத்திமதி சொல்பவரிடம் இருக்கக்கூடாது.

இயேசு இறைமகன்,
 கடவுள்,
 அவரிடம் குற்றம் குறைகள் இருக்க முடியாது.

நாம் மனிதர்கள்.
 பாவிகள்.
 பாவிகளாகிய நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக

 பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக மனித அவதாரம் அவர் எடுத்தபோது,

 நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அவரது    மனித சுபாவத்தில் வாழ்ந்து காண்பித்தார்.

அவருடைய போதனைகள் வெறும் வார்த்தைகளினால் ஆனவை அல்ல.

சாதனைகளினால் ஆனவை.

எப்படி வாழ வேண்டும் என்று போதித்தாரோ அப்படியே வாழ்ந்து காண்பித்தார்.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."
(லூக்.6:20)

என்று போதித்தார்.

இயேசு ஏழையாகப் பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார்,
 ஏழையாக மரித்தார்.

பிறப்பதற்கு ஒரு வீடு கூட கிடைக்காமல் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

படுக்க கட்டில் கிடைக்காமல் மாடுகளின் தீவனத் தொட்டியில் படுத்திருந்தார்.

ஏழைகளே அவரை பார்க்க வந்தார்கள்.

 நாசரேத்து ஊரில் தச்சுத் தொழில் செய்தே வாழ்ந்தார்.

அவரது பொது வாழ்க்கையின் போது தலை சாய்க்கக் கூட அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

 குற்றவாளிகளுக்கு உரிய சிலுவை மரத்தில்தான் இறந்தார்.

அடுத்தவர்களுக்குரிய கல்லறையில்தான் அடக்கம் செய்யப்பட்டார்.

இதைவிட ஏழையாக யாராலும் வாழ இயலாது.

"உன்னை நேசிப்பது போல் உன் அயலானையும் நேசி, உனது விரோதிகளையும் நேசி, உனக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்." என்று போதித்தார்.

அவர் மனித அவதாரம் எடுத்ததே அதற்காகத்தான். பாவம் இறைவனுக்கு எதிரான செயல். பாவம் செய்பவர்கள் அனைவரும் அவருக்கு விரோதிகள். 

பாவிகளை,
அதாவது அவரது விரோதிகளை,

 இரட்சிக்கவே,அதாவது அவர்களை தனது நண்பர்களாக, சகோதரர்களாக ஏற்றுக் கொள்வதற்காகவே 

மனிதனாகப் பிறந்தார். 

''தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."

என்று இயேசு  சொன்னார்.

அவர் அதைவிட ஒருபடி மேலே போய் தனது விரோதிகளுக்காக தன் உயிரை கொடுத்தே அவர்களை நண்பர்களாக மாற்றினார்!

தன்னைச் சிலுவையில் அறைந்து  கொன்றவர்களை மன்னிக்கும்படி தனது தந்தையிடம் வேண்டியதன் மூலம் தீமை செய்தவர்களுக்கு அவர் நன்மை செய்தார்.

இயேசு பரிசுத்தமான தண்ணீராக இருப்பதால்தான் நமது ஆன்மாவில் படிந்துள்ள பாவ அழுக்கை நன்றாகக் கழுவுகிறார்.

நாம் கிறிஸ்தவர்கள்,

 கிறிஸ்துவாக வாழ வேண்டியவர்கள்.

 கிறிஸ்துவின் நற்செய்தியை உலகமெங்கும் அறிவிக்க கடமைப்பட்டவர்கள்.

கிறிஸ்துவுக்காக நம்மைச் சுற்றி வாழ்பவர்களின் குறைகளை நீக்க அவர்களுக்கு உதவ வேண்டியவர்கள்.

மற்றவர்களின் குறைகளை நீக்க அவர்களுக்கு உதவ வேண்டுமானால் நாம் 

முதலில் நமது குறைகளை முதலில் நீக்க வேண்டும்.


 நமது கண்ணில்  விட்டம்  இருந்தால் மற்றவர்களது   கண்ணில் இருக்கும் துரும்பு எப்படி நமக்குத் தெரியும்? 

ஒரு குருடனால் மற்றொரு  குருடனுக்கு வழி காட்ட முடியாது.

உலகெங்கும் கிறிஸ்துவின் அன்பைப் பரப்ப வேண்டுமானால் நாம் முதலில் கிறிஸ்துவின் நண்பர்களாக மாற வேண்டும்.

உலகெங்கும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்ப வேண்டுமானால் முதலில் நாம் நற்செய்தியை நன்கு தெரிந்து, அதன்படி வாழ வேண்டும்.

பாவிகள் மனம் திரும்ப நாம் உதவ வேண்டுமானால் முதலில் நாம் மனம் திரும்ப வேண்டும்.

கிறிஸ்துவைப் போல 

நாமும் நமது விரோதிகளை நண்பர்களாக மாற்ற வேண்டுமானால் 

முதலில் நாம் நமது விரோதிகள் நமக்கு எதிராக என்ன கெடுதி செய்திருந்தாலும் அதை மன்னித்து விடவேண்டும்.

மன்னிப்பு ஒன்றால்தான் விரோதிகளை நண்பர்களாக மாற்ற முடியும்.

நாமும் கிறிஸ்துவைப் போல் ஏழைகளாக, உலக பொருள்களின் மீது பற்று இல்லாதவர்களாக வாழ்வோம்.

"நானே உலகின் ஒளி" (அரு. 8:12)
என்று கூறிய இயேசு,

"உலகிற்கு ஒளி நீங்கள்'' (மத். 5:14)
என்றும் கூறியிருக்கிறார்.

உலகின் ஒளி இயேசுவே. 
இயேசுவோடு, இயேசுவாக நாம் வாழும்போது நாமும் ஒளியாக மாறுகிறோம்.

இயேசுவின் ஒளி நம்மிடம் இருந்தால் தான் இயேசுவை உலகிற்கு அறிவிக்க முடியும்.

ஒளியால்தான் ஒளியை பரப்ப முடியும்.

நாம் இருட்டாக இருந்தால்,

 அதாவது இயேசுவாக வாழாதவர்களாக இருந்தால், 

நம்மால் எப்படி இயேசுவாகிய ஒளியை உலகிற்குத் தர முடியும்?
 
நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருந்தால்தான்,

கிறிஸ்துவை உலகிற்குத் தர முடியும்.

முதலில் கிறிஸ்துவாகிய ஒளியாக மாறுவோம்.

மாறியபின் ஒளியைக்கொண்டு உலகின் இருட்டை நீக்குவோம்.

கிறிஸ்துவாகிய ஒளியை எங்கும் பரப்புவோம். 

உலகெங்கும் கிறிஸ்தவத்தைப் பரப்ப ஆசைப்படுமுன்

நாம் உண்மையான  கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, June 19, 2021

"அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார்."(மாற்கு. 4:38)

"அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார்."
(மாற்கு. 4:38)

இயேசுவின் வாழ்வின் போது அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும், செய்த ஒவ்வொரு செயலும் அவருடைய சீடர்களாகிய நமக்கு பாடம் கற்பிப்பனவாகவே   அமைந்திருந்தன.

இயேசு கடற்கரையில் அமர்ந்திருந்த கூட்டத்தினருக்கு படகில் இருந்தவாறு போதித்தார்.

மாலையில் சீடர்களிடம், "அக்கரைக்குச் செல்வோம்" என்றார்.

அவர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு அவரை அப்படியே படகில் அழைத்துச் சென்றனர்.

அப்போது கடலில் நிகழ்ந்த நிகழ்வை இயேசு முக்காலமும் அறிந்த இறைவன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு தியானிக்க வேண்டும்.

சிறிது நேரத்தில் கடலில் புயல் வீசப்போவது அவருக்குத் தெரியும்.

அலைகள் படகின்மேல் மோதப்போவதும் அவருக்குத் தெரியும்.

சீடர்கள் பயத்தினால் கத்தப்போவதும் அவருக்குத் தெரியும்.

ஆனாலும்  அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார்.

சீடர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் விசுவாசத்தின் அவசியம் பற்றி போதிக்கவே இயேசு  புயலை அனுமதித்துவிட்டு அவர் எதுவும் தெரியாதவர் போல தூங்கிக்கொண்டிருந்தார்.

சீடர்கள் அவரை எழுப்பி, "போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?" என்றவுடன்,

அவர் புயலை அடக்கிவிட்டு,

"ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?" என்றார்.

நம்மைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு செயலும் நடக்கும்போது மட்டும்தான் தெரியும்.

ஆனால் இறைவனைப் பொறுத்தமட்டில் நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலும் நித்திய காலமாய் இறைவனுக்குத் தெரியும்.

ஒரு முறை ஒரு பிறவி குருடனை குணமாக்கும் முன்பு,

அவன் குருடனாய் பிறந்ததன் காரணத்தை சீடர்கள் கேட்ட போது,

"கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்." (அரு. 9:3)

என்று இயேசு கூறியிருந்தார்.

பாவம் தவிர உலகில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் இறைவனின் நித்திய திட்டத்தின்படிதான் நடைபெறுகிறது என்பதற்கு பிறவிக் குருடன் ஒரு சான்று.

 நமக்கு பரிபூரண மன சுதந்திரம் கொடுத்துவிட்டபடியால் 

அதில் இறைவன் குறுக்கிடுவது இல்லை.

நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் போது கூட,

 அதாவது நாம் பாவம் செய்யும்போது கூட,

கடவுள் தடுப்பது இல்லை.

ஆனாலும் நமது பாவத்தை  
நம் மீது அவர் கொண்டுள்ள 
அளவற்ற அன்பை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 இறைவன் நம்மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பை   பாவப் பரிகாரமாக தான் பட்ட  பாடுககளின் மூலமாகவும்,

 அடைந்த மரணத்தின்  மூலமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்!

புதுமை மூலம் பிறவிக் குருடனை குணமாக்குவதின்  மூலம் இறைவனின் மகிமையை வெளிப்படுத்துவதற்காகவே 

அவனை பிறவிக் குருடனாக இறைவன் படைத்தார்.

தான் இயற்கையின் மீதும்  சர்வ அதிகாரம் கொண்ட கடவுள்  என்பதை   சீடர்களுக்கு புரிய வைப்பதற்காகவும், 

தன்மீது சீடர்களுக்கு அசைக்கமுடியாத விசுவாசம் இருக்க வேண்டும் 

என்பதை புரிய வைப்பதற்காகவும்  புயலை வீசச் செய்தார்.

இயற்கை இறைவன் கொடுத்த விதிகளின்படி தான் இயங்குகிறது!

பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் இயக்கம், கடல் கொள்ளுதல், கண்டங்கள் தோன்றுதல், நில நடுக்கம், சுனாமி போன்ற எல்லா இயற்கை நிகழ்வுகளும் இறைவனது நித்திய கால திட்டத்திற்கு உட்பட்டவை.

இயற்கை நிகழ்வுகளின் விளைவுகளும் இறைவனது நித்திய கால திட்டத்திற்கு உட்பட்டவை.

அவரது திட்டமின்றி ஒரு அணு கூட அசையாது.

இறை இயேசு அன்று   கடலில் புயலை ஏற்படுத்திவிட்டு  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது போலவே,

இன்றும் இயற்கை நிகழ்வுகளை ஏற்படுத்திவிட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அன்று கடலில் புயலை ஏற்படுத்தியது தனது சீடர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காகவே.

அலைகள் படகில் மோதியதால் தான் சீடர்கள்,

"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?"

 என்று சத்தமாக செபித்தார்கள்.

இயேசுவும் காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இசையாதே, சும்மாயிரு" என்றார். 

காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.

பின், அவர் அவர்களை நோக்கி, "ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?" என்றார்.

இயற்கையைப் படைத்த கடவுள் தம்மோடுதான் இருக்கிறார்  என்ற விசுவாசம் சீடர்களுக்கு இருந்திருந்தால்,

இயற்கையின் சீற்றத்திற்குப் பயந்திருக்கவே மாட்டார்கள்.

கடல் சீறிக்கொண்டிருந்ததால்தான் சீடர்கள் இயேசுவின் உதவியை தேடினார்கள்.

இயேசு இயற்கையை அடக்கிவிட்டு, விசுவாசமின்மைக்காக சீடர்களைக் கண்டிக்கிறார்.

ஒரு அணு கூட தானாக தோன்றியிருக்க முடியாது.

இன்று அலையலையாக வந்து நம்மீது மோதிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தானாக தோன்றியிருக்க முடியாது.

எல்லாவற்றிற்கும் ஆதி காரணர் கடவுள் ஒருவரே.

அன்று தனது மகிமை வெளிபடுவதற்காக ஒரு மனிதனை பிறவி குருடனாக படைத்த அதே கடவுள்தான்,

அன்று சீடர்களுக்கு விசுவாசத்தின் அத்தியாவசத்தை வலியுறுத்துவதற்காக கடலில் புயலை வீச செய்த அதே கடவுள்தான்,


நமக்கு விசுவாசத்தின் அத்தியாவசத்தை வலியுறுத்துவதற்காக,

நம்மை அவரை நோக்கி ஜெபிக்க வைப்பதற்காக 

கொரோனா அலையை மோதச் செய்திருக்கிறார்.

இன்று உலகம் முழுவதும் இறைவனை உதவிக்கு அழைக்கிறது.

நல்லதுதான்.

ஆனால் விசுவாசத்தோடு அழைக்கின்றதா?


உண்மையான விசுவாசம் நமக்கு இருந்தால்,

இயற்கையை படைத்த கடவுள் நம்முள்தான் இருக்கிறார் எந்த விசுவாசம் இருந்தால்,

நாம் கொரோனாவைக் கண்டு பயப்படவே மாட்டோம்.

தாயின் கைப்பிடியில், இடுப்பில் அமர்ந்து கொண்டிருக்கும் குழந்தை தாய் மீது முழுமையாக நம்பிக்கை இருந்தால் தான் விழுந்து விடுவோமோ என்று பயப்படவே செய்யாது.

பயப்பட்டால் தாய் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

நமக்கு உண்மையான விசுவாசம் இல்லை.

அதென்ன உண்மையான விசுவாசம்?

சர்வத்தையும்  படைத்து காத்து வரும் எல்லாம் வல்ல இறைவனின் கையில் தான் நாம் இருக்கிறோம்.

அவர் நம்மை கீழே போடமாட்டார் என்று உறுதியாக விசுவாசிப்பது தான் உண்மையான விசுவாசம்.

கடவுளின் கையில் இருந்துகொண்டே கொரோனாவிற்குப் பயந்தால் நம்மிடம் உண்மையான விசுவாசம் இல்லை.

பயப்படாமல் இருந்தால் கொரோனாவால் மரணம் வராதா?

விசுவாசம் என்றால் இறைவனை விட்டு பிரிய மாட்டோம் என்று உறுதியாக நம்புவது.

மரணத்தால் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்க முடியாது.

இறைவனிடமிருந்து பிரியாமல் வாழும் வாழ்வே விசுவாச வாழ்வு.

எங்கிருந்தாலும் இறைவனோடு இருப்போம் என்று உறுதியான விசுவாசத்தோடு வாழ்வோம்.

அப்படியானால் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா?

இப்படிக் கேட்பது,  ஆன்மாவின் மீட்பிற்காக வாழ்வோம் என்று சொல்லும்போது 

"அப்படியானால் சாப்பிட வேண்டாமா?" என்று கேட்பது போல் இருக்கிறது.

விசுவாச வாழ்வு விண்ணக வாழ்வை மையமாகக் கொண்டது.

விண்ணகத்திற்காக வாழ்பவன் உலகைப் பற்றி கவலைப்பட மாட்டான்.

உலகைப் பற்றி கவலைப்படாதவன் உலகைவிட்டு  போய் விடுவோமோ என்று பயப்பட மாட்டான்.

நம்மைப் படைத்து உலகில் விட்டவர் இறைவன். உலகில் எவ்வளவு காலம் வாழவேண்டும் என்பது இறைவன் கையில் தான் இருக்கிறது.

அவரது திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. 

அவரது திட்டத்தை ஏற்று நடப்போர் எதற்கும் பயப்பட மாட்டார்.

அவரை மீறி கொரோனாவால் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது.

அன்று இயேசு எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இறையாதே, சும்மாயிரு" என்றார். காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.

இன்று அவர்  கொரோனாவை நோக்கி,

"பிரச்சனை பண்ணாதே, சும்மாயிரு" என்பார்.

அதுவும் நின்று விடும். உலகில் மகிழ்ச்சி உண்டாகும்.

விசுவசிப்போம்.


"நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்:

 நம்பிக்கையில் தளராதே, ஏனெனில் நாம் உன் கடவுள்:

 உன்னை உறுதிப்படுத்துவோம், உனக்கு உதவி செய்வோம்:

 நம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக் கொள்ளும்."
(இசையா. 41:10)

லூர்து செல்வம்.

Friday, June 18, 2021

"ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."(மத். 6:33)

"ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:33) 

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஆண்டுக்கு ஒரு முறை உவரி புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்வது வழக்கம்.

உவரி திருநாள் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது 

பத்து, பதினைந்து குடும்பங்கள் சேர்ந்து ஊரிலிருந்து கோவில் வரை மாட்டு வண்டி பயணம்,

உவரி கடற்கரையிலும் கடலிலும் ஆடிய விளையாட்டுக்கள்,

 கடைகளில் பண்டம் வாங்கித் தின்றது,

 கொடிக்கம்பத்தில் பார்த்த பேய்களின் ஆட்டம், 

மீன் சாப்பாடு, etc. etc இவைதான்.

திருவிழாவின் மையம் திருவிழா திருப்பலி.

திருப்பலிக்குப் போவோம்.

 ஆனால் சிறுவர்களாகிய எங்களுக்கு உவரி என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது அங்கு ஆடிய ஆட்டங்கள்தான்.

இப்போதுகூட திருமண வீடு என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது 
சாப்பாடு தானே.

பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் ஒரு பெரியவரிடம் சென்று அவரது கடந்த கால வாழ்க்கை பற்றி கேளுங்கள்.

பிறந்த ஊர், பெற்றோர்கள், படித்த படிப்பு, எழுதிய தேர்வுகள், பெற்ற மதிப்பெண்கள், கிடைத்த வேலை,  வாங்கிய சம்பளம், வரவு செலவு,  திருமணம், பிள்ளைகள், வாங்கிய நிலபுலன்கள், கட்டிய வீடு ஓய்வு பெற்று வாங்கும், பென்சனில் ஆகும் செலவு  ஆகியவை பற்றியும் அவற்றை சார்ந்தவை பற்றியும் பேசுவார்.

அவரை பொறுத்தமட்டில் இவைதான் வாழ்க்கை.

முக்கியத்திற்கு  முக்கியம் கொடாமல், முக்கியம் இல்லாததற்கு முக்கியம் கொடுப்பது மனித சுபாவம்.

நாம் சாப்பிடுவதற்கோ, படிப்பதற்கோ, தேர்வுகள் எழுதுவதற்கோ, வேலை செய்வதற்கோ, சம்பளம் வாங்குவதற்கோ, பென்சன் வாங்குவதற்கோ உலகில் பிறக்கவில்லை.

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:"

இதற்காக மட்டுமே உலகில் பிறந்தோம்.

ஒன்றும் இல்லாமையிலிருந்து 
இறைவன் நம்மைப் படைத்தது அவரது அரசில், அவருக்காக வாழ்வதற்கு மட்டுமே. 

ஆனால் நாம் அவரையும், அவரது அரசையும் மறந்து நமக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்படியே அவரே நினைத்தாலும் அதுவும் நமக்காகத்தான் நினைக்கிறோம்.

நாம் வசதியுடன் வாழ வேண்டும், சுகத்தோடு வாழ வேண்டும், புகழோடு வாழ வேண்டும் 

போன்ற நமது தேவைகளுக்காக மட்டுமே அவரை நினைக்கிறோம். 

அவருக்காக நம்மை பயன்படுத்துவதை விட ,

அவரை நமக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அதனால் தான் இயேசு நம்மிடம் சொல்கிறார்:

"முதலில் இறைவனின் அரசை தேடுங்கள்."

அவரைத் தேடுவதற்கு முதலிடம் கொடுத்தால்,

அதாவது நமது ஆன்மிக வாழ்விற்கு முதல் இடம் கொடுத்தால்,

அதற்காகவே வாழ்ந்தால்,

உலகில் வாழ தேவையானவற்றை அவரே நமக்கு தருவார்.


கடவுள் மனிதனை படைக்கு முன்பு அவன் வாழ்வதற்கு சகல வசதிகளையும் கொண்ட உலகை முதலில் படைத்தார்.

நாம் வாழ்வதற்கு தேவையானவற்றை படைத்த பின்புதான் நம்மை படைத்தார்.

நமக்காக எதையும் நாமே உருவாக்கிக் கொள்ளவில்லை.

நாம் பிறக்க வேண்டிய ஊரைத் தேர்ந்தெடுத்தவர் அவர்.

நமது பெற்றோரைத் தேர்ந்தெடுத்தவர் அவர்.

நாம் படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்தவர் அவர்.

நாம் செய்யவேண்டிய வேலையை
தேர்ந்தெடுத்தவர் அவர்.

நாம் வாங்க வேண்டிய சம்பளத்தை
தேர்ந்தெடுத்தவர் அவர்.

இவற்றையெல்லாம் நாம் ஏற்பாடு செய்துகொண்டு பிறக்கவில்லை.

பள்ளிக்கூடம், வேலை, சம்பளம் ஆகியவற்றை நாம் தேர்ந்தெடுத்தது போல் தெரியும், ஆனால் அவரது நித்திய திட்டத்தின்படியே நமது தேவைகள் பூர்த்தியாகின்றன.

நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது அவரையும், அவரது அரசையும்தான்.

ஒரு ஒப்புமை.

குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளிப்பது என்று தீர்மானித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.

குற்றாலத்திற்கு எப்படி செல்ல வேண்டும், குளிப்பதை ஒட்டி என்னென்ன செய்ய வேண்டும், எப்படி வீடு திரும்ப வேண்டும் 

போன்ற திட்டங்கள்  குற்றால குளிப்பை மையமாக வைத்து தீர்மானிக்கப்பட வேண்டும்.

அதேபோல,

இவ்வுலகில் நாம் படைக்கப் பட்டிருப்பது இறையரசில், இறைவனின் கட்டளைகளின்படி வாழ்வதற்காகதான்.

எவ்வளவு காலம் வாழ்வோம் என்று தீர்மானிப்பது இறைவன்.

நாம் வாழ வேண்டியது ஆன்மீக வாழ்க்கை. அதற்கு உதவியாகத்தான் தான் நமது உடல். ஆன்மீக வாழ்க்கை  வாழ்வதற்காகத்தான் உடலையும் வாழ வைக்கிறோம்.

ஆன்மாவிற்காக உடல் எப்படி வாழ வேண்டும் என்பதை நமது ஆன்மீகம் தான் தீர்மானிக்க வேண்டும்.

உடல் வாழ்வதற்காக நாம் உலகில் என்ன செய்தாலும் நமது ஆன்மிக வாழ்விற்கு இடையூறாக இருக்கக் கூடாது.

எனவே ஆன்மீக வாழ்விற்கு இடையூறு இல்லாத உலக வாழ்க்கை முறையை தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாம் பார்க்கிற வேலை ஆன்மீக வாழ்வுக்கு இடையூறாக இருந்தால் நமது வேலையை விட்டுவிட வேண்டும்.

ஆன்மிக வாழ்வுக்கு உதவக்கூடிய வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

''உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு.

 உன் உடல் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.

30 உன் வலக்கை உனக்கு இடறலாயிருந்தால், அதை வெட்டி எறிந்துவிடு. 

உன் உடல் முழுவதும் நரகத்துக்குச் செல்வதை விட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்."
(மத். 5:29,30)

நாம் ஆன்மீகத்தையும் கடவுளையும் உறுதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டால்,

அதற்கு எதிராக எது இருந்தாலும் அதை அகற்றிவிடவேண்டும்.

ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருக்கக்கூடிய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 அதற்கு ஆண்டவருடைய துணை இருக்கும்.

நம்பிக்கையோடு ஜெபிக்கும்போது எது நடந்தாலும் அது இறைவன் சித்தத்தினால் நமது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமாகத்தான் இருக்கும்.

சில சமயங்களில் துன்பங்களே நமது ஆன்மீக வாழ்விற்கு உறுதுணையாய் இருக்குமானால் ஆண்டவர் துன்பங்களை அனுமதிப்பார், தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நமது ஜெபங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட உதவிகளுக்கே.

நமது முழுமையான முக்கியத்துவத்தையும் ஆன்மீகத்திற்கே,

 அதாவது,

 இறை அரசுக்கே கொடுத்து விட்டால்

 உலக சம்பந்தப்பட்ட நமது தேவைகளை இறைவனிடம் கேட்காமலேயே அவரே பூர்த்தி செய்வார்.

அவர் எத்தகைய உலக வாழ்க்கையை நமக்கு தருகிறாரோ

 அதை அவருடைய சித்தம் என்று விசுவாச உணர்வோடு நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனிதனான அவரை வளர்ப்பதற்கு தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த திருக் குடும்பத்திற்கு

 அவர் அளித்த உலக வாழ்வு ஏழ்மையும் உழைப்பும் மட்டுமே.

அதையே அவர்கள் ஆன்மீக வாழ்வாக வாழ்ந்தார்கள்.

நாமும் திரு குடும்பத்தையே பின்பற்றுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, June 17, 2021

"விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள்."(மத். 6:20)

"விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள்."
(மத். 6:20)

தமிழில் ஒரு பழமொழி உண்டு: 
அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை.

மனிதன் ஈட்டக்கூடிய செல்வங்கள் இரண்டு வகை.

1. அருட்செல்வம்.
2, பொருள் செல்வம்.

மனிதன் உடலும், ஆன்மாவும் சேர்ந்து வாழும் ஒரு உயிரினம்.

உடல் சடப் பொருளாகிய உலகை சேர்ந்தது. கண்ணால் பார்க்கப்பட கூடியது. உலகைப் போலவே அழியக்கூடியது.

ஆன்மா ஆவி பொருள். விண்ணுலகில் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டது. கண்ணால் பார்க்க முடியாதது. அழிவு இல்லாதது.

பொருள் செல்வம் இந்த உலகைச் சார்ந்த உடல் வாழ்வதற்கு இன்றியமையாதது. 

உணவு, உடை, இருப்பிடம், நிலம், பணம் போன்ற உலகப் பொருள்கள்
 பொருள் செல்வ வகையை சார்ந்தவை.

இவை இல்லாவிட்டால் இவ்வுலகில் வசதியுடன் வாழ முடியாது.

ஆனால் இவை எல்லாமே நிரந்தரமானவை அல்ல. எவ்வளவு கஷ்டப்பட்டு இவற்றை ஈட்டினாலும் ஒரு நாள் இவை நம்மை விட்டு போய்விடும்.

உணவு நமது உடலோடு சேர்ந்து,
உடலுக்கு வளர்ச்சியை கொடுத்தாலும், ஒரு நாள் நமது உடலும் மண்ணிற்குள் போய்விடும்.

விண்ணுலகில் வாழும் இறைவனை சேர்ந்த அருட்செல்வம் நமது ஆன்மாவின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

இறைவனையும் அவரது சாயலில் படைக்கப்பட்ட நமது ஆன்மாவையும் கண்ணால் பார்க்க முடியாதது போலவே அருள் செல்வத்தையும் கண்ணால் பார்க்க முடியாது.

உணர மட்டும் முடியும்.

நமது ஆன்மாவை பாவ மாசின்றி காப்பாற்றவும், 
பரிசுத்தத்தனத்தில்  வளரவும், அருட்செல்வம் இன்றியமையாதது.

நமது ஆன்மா பாவ மாசின்றி பரிசுத்தத்தமாக இருந்தால்தான்,
அதனால் விண்ணக வாழ்வை அனுபவிக்க முடியும்.

விண்ணக வாழ்வு நிலையானது. 
ஆகவே அருள் செல்வமும் நிலையானது.

அருட்செல்வம் ஆண்டவரிடமிருந்து வருவதால் அது நம்மை ஆண்டவரிடமே அழைத்துச் செல்லும்.

ஆண்டவரை   அடைந்தால் 
அவரோடு நிலைவாழ்வு வாழலாம்.

இப்பொழுது சொல்லுவோம் 

முடிவற்ற, பேரின்ப நிலைவாழ்வு தரும் அருள் செல்வம் வேண்டுமா?

 அல்லது,

 அழிந்து போகும் உலகில் வாழ வளம் தருவது போல் தோற்றமளிக்கும் பொருள் செல்வம் வேண்டுமா?

தனது வீரத்தினால் ஐரோப்பா முழுவதையும் வென்று ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பேரரசர் நெப்போலியனை,

அவனது சாம்ராஜ்யத்தினால் காப்பாற்ற முடியவில்லை. 

கிரீசிலிருந்து இந்தியா வரை அனைத்து நாடுகளையும் வென்று 
கிரேக்க சாம்ராஜ்யத்தை நிறுவிய மகா அலெக்சாண்டரால் 

 கொசுக்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் இறந்தது கொசுக்களால் பரவும் மலேரியா நோயினால். 

கொரோனா தொற்றினால்  இறந்தவர்களுள் கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள்.

 அவர்களின் Bank Balanceனால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

இறந்தவர்களுள் பொருள் வளமில்லாத, அருட்செல்வம் மட்டுமே கொண்டிருந்த நல்லவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு இறப்பு ஒரு முடிவு அல்ல. பேரின்ப நிலைவாழ்வின் ஆரம்பம்.

அருள் செல்வத்தினால் வாழ்பவன் இவ்வுலகில் இறப்பு உட்பட எதற்கும் அஞ்ச மாட்டான். ஏனெனில் அருள் வாழ்வுக்கு முடிவே இல்லை.

மண்ணுலகில் இருந்தாலும் விண்ணுலகில் இருந்தாலும், அவன் வாழ்வது ஒரே வாழ்வு தான், அருள் வாழ்வு. 

பாவம் மட்டும் செய்யாமல் இருந்தோமென்றால் நமது அருள் உடமையை நம்மிடமிருந்து யாராலும், எக்காலத்திலும் பிரிக்க முடியாது. 

அருளின்பம் தொடர்ந்து மகிழ்ச்சி அளிக்கும்.

 பொருளின்பத்தினால் தொடர்ந்து மகிழ்ச்சி அழிக்க முடியாது.

ஒரு உதாரணத்திற்கு:

ஒரு பிரியாணி பிரியன். ருசியுள்ள பிரியாணி சாப்பிடுவதற்காக பல மைல்கள் பிரயாணம் செய்து ஒருவன் ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறான்.

இலையில் பிரியாணி வைக்கப்படுகிறது.

ஆசையோடு பிசைந்து அள்ளி வாயில் வைக்கிறான்.

பல மைல்கள் கடந்து வந்து விலை கொடுத்து  வாங்கிய பிரியாணி நாவில் இருக்கும் ஒரு சில விநாடிகள்  மட்டுமே  ருசியாக  உள்ளது.

நாவைக் கடந்தவுடன்  ருசியும் போய்விடுகிறது.


இப்படித்தான் ஒவ்வொரு பொருட் செல்வமும்.

இப்படிப்பட்ட பொருள் செல்வத்தின் பின்னால்தான் உலகில் அநேகர் ஓடுகின்றார்கள்.

அதை ஈட்ட நேர்மையாக முயல்கின்றவர்களும் இருக்கிறார்கள், 


நேர்மையற்ற முறையில் குறுக்கு வழியில் சென்று ஈட்டுகின்றவர்களும் இருக்கிறார்கள். 

குறுக்கு வழியில் செல்பவர்களுக்குதான் நிறைய பொருட்செல்வம் கிடைக்கும்.

நிறைய பொருள் செல்வம் வைத்திருப்பவர்கள்தான் நிறைய இழப்பார்கள். 

பொருளே இல்லாத சன்னியாசி இந்த உலகை விட்டு போகும் போது இழப்பது அவனது உடலை மட்டும் தான். ஆனால் பெறுவது நித்திய பேரின்பம்.

கோடிக் கணக்காய் வைத்திருப்பவன் 
இந்த உலகை விட்டு போகும்போது
கோடிக் கணக்காய் இழப்பான்.

அதோடு நித்திய பேரின்பத்தையும்
இழப்பான்.

இழப்பதற்காகவே சம்பாதித்துக் கொண்டிருக்கும் செல்வத்தின் மீது உள்ள பற்றை விட்டு விட்டு 

அருள் செல்வத்தை தேடிச் செல்பவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தேடும் செல்வம் நித்திய காலமும் அவர்களுடேயே இருக்கும்.

அருட்செல்வம் இறைவனிடம் இருந்து வருவது.

யாரெல்லாம் இறைவனோடு உறவிலிருந்து கொண்டு

 அவருக்காக வாழ்கிறார்களோ அவர்கள் ஒவ்வொரு வினாடியும் அருள் செல்வத்தை ஈட்டிக்கொண்டே இருப்பார்கள். 

இறையுறவு நிலை இருக்கு மட்டும்,
அதாவது, ஆன்மா சாவான பாவம் அற்ற நிலையில் இருக்கு மட்டும்,
நம்மால் அருட்செல்வத்தை ஈட்ட முடியும்.

ஞானஸ்நானத்தில் நமது ஜென்ம பாவம் மன்னிக்கப்பட்ட உடன் நாம்
இறையுறவு நிலைக்குள் நுழைகிறோம்.

அதன்பின் பாவம் செய்யாதபடி நமது ஆன்மாவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தேவ திரவிய அனுமானங்கள் மூலமும், ஜெப தவ , தர்ம முயற்சிகள் மூலமும்,  நற்செயல்கள் மூலமும்  அருட்செல்வத்தை ஈட்டுகிறோம்.

திவ்ய நற்கருணை என்னும் தேவ திரவிய அனுமானம் அருள் செல்வத்தை மட்டுமல்ல அதன் ஊற்றாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே நமக்குள் கொண்டு வருகிறது.. 

நமது இதயம் இறைவனோடு ஒன்றித்து இருப்பதுதான் செபம்.
இறைவனை மனதில் நினைத்துக் கொண்டிருந்தாலே அவர் நமக்கு அருள் வளங்களை அள்ளித் தருவார்.

 இறைவனோடு மனதில் ஒன்றித்து இருப்பதற்குதான் தியானம் என்று பெயர்.

தியானிக்கும் போது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது இல்லை. இறைவனை நினைத்து அவரை நமது மனதால் ஆராதிக்கிறோம்.

உறவினர்களிடமிருந்து கடிதம் வந்தால் அதை வாசித்துக் கொண்டிருக்கும்போது அவர்களை நினைத்து மகிழ்வது போல

 பைபிளில் இயேசு கூறிய வார்த்தைகளை வாசிக்கும்போது அவரை நினைத்து மகிழ்வது தான் தியானம்.

எரிந்துகொண்டிருக்கும் மெழுகுதிரியின் திரியோடு மற்றொரு மெழுகுதிரியின் திரியை ஒட்ட வைத்தால் அதுவும் எரிய ஆரம்பித்துவிடும்.

அதே போல் தான் அருளின் ஊற்றாகிய இறைவனை மனதில் நினைத்தாலே ஊற்றிலிருந்து அருள் நமது மனதிற்குள் பாயும்.

இறைவனுக்காக நாம் செய்யும் நற்செயல்கள் வழியாகவும் அருட்செல்வத்தை ஈட்டலாம்.

ஏழைகளுக்கு உதவுதல், சுகம் இல்லாதவரைச் சந்தித்தல், அழுவோருக்கு ஆறுதல் கூறுதல்,
பசித்தவர்களுக்கு உணவு ஊட்டுதல் போன்ற செயல்களை இறைவனுக்காக செய்யும் போது அவைகள் அருட்செல்வத்தை அள்ளி வரும் நற்செயல்களாக மாறுகின்றன.

நம்மிடம் இருக்கும் பொருள் செல்வத்தைக்கூட  மற்றவர்கள் நலனுக்காக செலவு செய்யும் போது 

அது அருட்செல்வமாக  மாறுகிறது.

இவ்வுலகில் நாம் சம்பாதிக்கும் அருள்செல்வம் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் செல்லும் போது நம்முடனேயே வரும்.

முடிவில்லா காலம் நமக்கு பேரின்பத்தை தந்து கொண்டிருக்கும்.

அருள் செல்வத்தை தேடுவோம். நித்திய காலம் அனுபவிப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, June 15, 2021

"அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." (மத். 6:7)

"அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." (மத். 6:7)


நிறைய, அலங்காரமான, வார்த்தைகளைப் பயன்படுத்தி செபிப்பதால் இறைவன் அவற்றை விரும்பி கேட்பார் என்று நினைக்கக்கூடாது.

ஏனெனில் ஆண்டவருக்கு நாம் என்ன கேட்கப் போகிறோம் என்று நாம் கேட்கும் முன்னாலேயே தெரியும்.

வார்த்தைகளை சுருக்கிக்கொண்டு நமது மனதை மட்டும் இறைவனில் நிலைநிறுத்த வேண்டும்.

ஆண்டவர் விரும்புவது நமது மனதை மட்டும் தான்.

இயேசு அதிகமான வார்த்தைகளை பயன் படுத்தாமல் சுருக்கமாக செபிப்பது எப்படி என்று கற்றுத் தந்திருக்கிறார்.

ஆனாலும் நாம் கில்லாடிகள்.

அவர் கற்றுத்தந்த செபத்தை விடுவதில்லை.

நமது சொந்த வார்த்தைகளை பயன்படுத்தி   நீண்ட செபத்தை சொல்லிவிட்டு

 அதற்கு  முடிவுரையாக கர்த்தர் கற்பித்த செபம் சொல்லிவிடுவோம்.

கர்த்தர் கற்பித்த ஜெபத்தில்

1. இறைபுகழ்.
(விண்ணக தந்தையே, உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக,)

2. இறை அரசு வர வேண்டுதல்.
(உமது இராச்சியம் வருக, உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக)

3.நமது தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுதல்.
(எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்,)

4.பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டல்.
(எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்.)

5.சோதனைகளில் உதவ வேண்டுதல்.
(எங்களை சோதனைகளில் விழவிடாதேயும்)

6. தீமையில் விழாதபடி நம்மை பாதுகாத்தல்.
(தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.)

நமது மொத்த ஆன்மீகமே இந்த சிறிய செபத்துக்குள் அடங்கி இருக்கிறது.

பலநூறு ஆண்டுகள் வயதுள்ள ஒரு ஆலமரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது!

அந்த ஆலமரம் பிறப்பதற்கு முன் இருந்த  ஆல விதை எவ்வளவு சிறியதாக இருக்கிறது!

அந்த சிறிய விதைக்குள் இவ்வளவு பெரிய ஆலமரம் இருந்தது என்று சொன்னால் தாவரவியல் தெரியாத குழந்தை நம்பாது.

ஆனால் அது உண்மை என்று நமக்குத் தெரியும்.

அதே போல் தான் நமது வாழ்நாள் முழுவதும் நாம் வாழவிருக்கும் மொத்த ஆன்மீகமும் இந்த சிறிய  ஆலவிதை போன்ற செபத்திற்குள் அடங்கி இருக்கிறது!

நமது வாழ்க்கையே இறைவனை புகழ்வதற்கும், இறையரசை பரப்புவதற்கும், இறைவன் சித்தப்படி வாழ்வதற்கும்தானே!

உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக என்று சொல்லும்போது நம்மைப் படைத்த வரை புகழ்கிறோம்!

உமது அரசு வருக என்று சொல்லும்போது உலகோர் அனைவரும் இறை அரசுக்குள் வர அருள் புரியும் ஆண்டவரே என்று வேண்டுகிறோம்!

உமது சித்தம் விண்ணகத்தில் நிறைவேறுவது போல மண்ணகத்திலும் நிறைவேறுக என்று வேண்டும்போது 

உலகோர் அனைவரும் உமது சித்தப்படி வாழ அருள் புரியும் ஆண்டவரே என்று வேண்டுகிறோம்!

இப்படி வேண்டும்போது மொத்த உலகமும் இறைவனை புகழவும், அவர் அரசின்கீழ் வரவும், அவர் சித்தப்படி நடக்கவும் நாம் உழைப்போம் என்று உறுதிமொழி கூறுகிறோம்!

"உணவு" என்ற வார்த்தைக்குள்  நமது ஆன்மீக, உலக சம்பந்தப்பட்ட அத்தனை தேவைகளும் அடங்கி இருக்கின்றன.

 "நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்." என்று ஆண்டவர் கூறுகிறார்.

நமது ஆன்மீக வாழ்வு வளம் பெற இறை அருள் வேண்டும், நற்கருணை வேண்டும், இறைவனின் வழிநடத்துதல் வேண்டும் போன்ற ஆன்மீகத் தேவைகள்  நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

நமது உடல் உயிர் வாழ வேண்டிய சாப்பாடு, வேலை, சம்பளம், வீடு போன்ற எல்லா தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவருக்குத் தெரியும்.

நமக்கு குழந்தைகள் வேண்டும், அவர்களது அன்பு வேண்டும், பராமரிப்பு வேண்டும் என்றும் அவருக்குத் தெரியும்.

ஆகவே தேவைகள் ஒவ்வொன்றையும் ஆண்டவரிடம் விளக்கமாக மணிக்கணக்காக சொல்லவேண்டிய அவசியமில்லை.

"எங்களது அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்" என்ற ஒரே வாக்கியத்தில் நமது வாழ்நாளிற்கான அத்தனை தேவைகளும் அடங்கி விட்டன!

காலையில் அம்மாவிடம்,

"அம்மா நான் பள்ளிக்கூடம் போக வேண்டும்." என்று சொன்னால் போதும். அதற்குத் தேவையான அத்தனை பொருட்களையும் தயாராக வைத்துவிடுவார்கள்.

அதை விட்டுவிட்டு,

"அம்மா பை வேண்டும், 
கணக்கு புத்தகம் வேண்டும், 
தமிழ் புத்தகம் வேண்டும், 
ஆங்கில புத்தகம் வேண்டும்,
வரலாற்று புத்தகம் வேண்டும்,
புவியியல் புத்தகம் வேண்டும், 
சயன்ஸ் புத்தகம் வேண்டும்,
 பென்சில் வேண்டும்,
பேனா வேண்டும்,
மை வேண்டும்" என்று வேண்டிய ஒவ்வொரு பொருளையும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதுபோல்தான் நமக்கு என்னென்ன தேவை என்று இறைவனுக்கே தெரிந்திருக்கும் போது அவற்றை நாம் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

"எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்" என்ற ஒரு வாக்கியத்தில் நமக்கு வேண்டிய எல்லா தேவைகளும் அடங்கியிருக்கின்றன.

அடுத்து நாம் அன்றாடம் வேண்ட வேண்டியது நமது பாவ  மன்னிப்புக்காக. 

நமக்கு உண்மையிலேயே பிறரன்பு இருந்தால் அவர்கள் நமக்கு விரோதமாக செய்த குற்றங்களை நாமே மன்னித்து விடுவோம்.

இறைவன்மீது அன்பு இருந்தால் அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்போம்.

பிறரை மன்னிக்க முடியாதவர்களுக்கு இறை மன்னிப்பு கிடைக்காது.

ஆகவே நமக்கு இறையன்பும் உள்ளது, பிறர் அன்பும் உள்ளது  என்பதை இறைவனிடம் தெரியப்படுத்தி நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறோம்.

"ஆண்டவரே எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம்.

 தயவு கூர்ந்து உமக்கு விரோதமாக நாங்கள் செய்த பாவங்களை மன்னியும்."

என்று வேண்டுகிறோம்.

கர்த்தர் கற்பித்த சிறிய செபத்தை ஒழுங்காக எல்லோரும் சொன்னால், மன்னிப்பின் காரணமாக உலகம் முழுவதும் சமாதானம் நிலவும்!

சண்டைகளுக்கு காரணம் மன்னிக்க முடியாமைதானே.

நமது வாழ்நாளின்போது நம்மை பாவத்தில் விழத் காட்டுவதற்காக நிறைய சோதனைகள் வரும்.

என்னென்ன சோதனைகள் வருமென்று ஆண்டவருக்கு தெரியும்.

ஆகவே ஒவ்வொரு சோதனையாக சொல்லிக் கொண்டிராமல் ஒரே வாக்கியத்தில்,

"சோதனை நேரத்தில் எங்களுக்கு உதவியாக வாரும் ஆண்டவரே"

என்று செபிக்கச் சொல்கிறார் நம் ஆண்டவர்.

தீமை என்றால் பாவம். நமது வாழ்நாள் முழுவதும் நம்மை பாவத்தில் விழுந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் 

"எங்களை தீமையில் விழவிடாதேயும்."

என்று ஒரே வரியில் செபிக்கக் கற்றுத் தந்திருக்கிறார் நம் ஆண்டவர்.

கர்த்தர் கற்பித்த செபத்தை மட்டும் ஒழுங்காக சொல்பவர்கள்,

நிச்சயமாக இரட்சிக்கப்படுவார்கள்.

அப்போ திருப்பலி வேண்டாமா? 
அது அன்றாட உணவிற்குள் வந்துவிடுகிறது.

நிறைய பழங்களை பிழிந்து ஒரே தம்ளரில் Juice ஆக ஊற்றி குடிப்பது போல,

நமது வாழ்விற்கான அத்தனை தேவைகளையும் ஒரே செபத்தில் இயேசு அடக்கி இருக்கிறார்.

நாம் நமது நீண்ட சொந்த செபத்திற்கு முடிவுரையாக பயன்படுத்தும் கர்த்தர் கற்பித்த செபத்தை,

Main செபமாக தியானத்தோடு சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் வேலை எதுவும் இன்றி ஓய்வாக இருக்கும்போது கண்ட கற்பனைகளுக்கு இடம் கொடாமல் 

கர்த்தர் கற்பித்த செபத்தை தியானித்துக் கொண்டிருந்தால்

அதன் வல்லமையை  உணரலாம்.  

லூர்து செல்வம்.