Sunday, February 28, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 14 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 14
(தொடர்ச்சி)

"கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிறவர்களுக்கு விருத்தசேதனமும் பயனற்றது: விருத்தசேதனமின்மையும் பயனற்றது, ஒன்றும் செய்ய இயலாது. தேவைப்படுவது அன்பின் வழியாய்ச் செயலாற்றும் விசுவாசமே." (கலா. 5:6)

''கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிறவர்களுக்கு தேவைப்படுவது அன்பின் வழியாய்ச் செயலாற்றும் விசுவாசமே."

"இந்த இறைவாக்கு உங்களுக்கு தரும் செய்தி என்ன?"

"கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை விசுவாசம்.

இறைவனை 
விசுவசிப்பவர்களுக்கு மட்டுமே அவர்மீது அன்பு ஏற்படும்.

இறையன்பு வழி நடந்தால் நமக்கு விண்ணகம் உறுதி."

,"விசுவாசத்தில் இறைவனை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல,

அவருக்காக நமது வாழ்வையே அர்ப்பணிப்பதும் அடங்கியிருக்கிறது.

அர்ப்பண வாழ்வுதான் விசுவாச வாழ்வு."

"ஆபிரகாமிடம் இறைவன் ஈசாக்கை பலி கொடுக்கக் சொன்னபோது அபிரகாமின் மனதில் ஏதாவது போராட்டம் இருந்திருக்குமா?" 

"விசுவாசம் இருக்குமிடத்தில் போராட்டத்திற்கு இடமே இல்லை. 

ஈசாக் பற்றி இறைவன் ஏற்கனவே கொடுத்த வாக்கை இறைவன் நிறைவேற்றுவார் என அபிரகாம் உறுதியாக விசுவசித்தார்.

"அதற்குக் கடவுள் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாறாள் உனக்கு ஒரு புதல்வனைப் பெறுவாள். அவனுக்கு ஈசாக் என்று பெயரிடுவாய். 

நம் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிறுவுவோம்."
(ஆதி. 17:19)

இது இறைவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு.

இறைவன் கொடுத்த வாக்கை உறுதியாக நிறைவேற்றுவார்,

மீற மாட்டார் என்றுஆபிரகாம் உறுதியாக விசுவசித்தார்.

சந்தேகப் பட்டால் தான் போராட்டம் வரும்.

உறுதியாக விசுவசித்தவர் மனதில் எப்படி போராட்டம் வரும்?

நமது மனதில் ஏற்படும் போராட்டங்களுக்கு காரணமே நமது விசுவாசம் இன்மை தான்.

இறைவன் நமக்கு நன்மையே செய்வார் என்று உறுதியாக விசுவசிப்பவர்கள் 

தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் அது நல்லதே என்பதில் உறுதியாக இருப்பார்கள்."


"ஆனால், சார், இறைவனை விசுவசிக்கிறவர்கள் மனதிலும் போராட்டம் இருக்கிறதே."

".உண்மைதான். ஆனால் முழுக்க முழுக்க ஆன்மீக நோக்கத்திற்காகவே தங்கள் தங்கள் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் வாழ்வில் போராட்டங்களுக்கு இடமே இல்லை.

ஏனென்றால் அவர்கள் என்ன நேர்ந்தாலும் இறைவன் சித்தம் என்று அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

தமக்கு நேர்பவற்றை உலகியல் கண்ணோடு பார்ப்பவர்களுக்கு இறைவனின் செயலில் திருப்தி ஏற்படாததால்தான் போராட்டமே.

 தமக்கு நேர்பவற்றை ஆன்மீக கண்ணோடு பார்ப்பவர்களுக்கு அவை இறைவனின் சித்தத்தின் விளைவு என்பது தெரியும்.

இறைவன் மேல் உள்ள விசுவாசம் அவர்களுக்கு திருப்தியைக் கொடுக்கும்."

"உண்மைதான். 

கொரோனாக் காலத்தில் அசையாத நம்பிக்கை உள்ளவர்கள் என்று நாம் நம்பிய நமது தாய் திருச்சபையை சேர்ந்தவர்களே பயந்து கொண்டு தானே இருந்தார்கள்.

ஆறுமாத காலத்துக்கு மேலாக 

"கோவிலுக்கு வர வேண்டாம் வீட்டிலிருந்தே online ல் திருப்பலி காணுங்கள்." என்று நமக்கு ஆலோசனை சொன்னவர்கள் நமது வழிகாட்டிகள்தானே.

நமக்கு என்ன ஆகிவிடுமோ என்று பயந்து தானே அப்படி ஆலோசனை நல்கினார்கள்.

விசுவாசம் இருக்கும் இடத்தில் பயத்துக்கு இடமே இல்லையே!"

''. பரிசுத்த ஆவியானவர் நமக்கு கனியாகத் தந்த விசுவாசத்தை நமது ஆன்மீக வாழ்வுக்காக மட்டும் பயன்படுத்தியிருந்தால் 

எந்த உலக செயலாலும் நமது ஆன்மீக மகிழ்ச்சியை பறிக்க முடியாதே!

என்ன நடந்தாலும் நன்றி மட்டும் தானே கூறியிருப்போம்.

"ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்: மடிந்துபோகிறோம்"
என்று அப்போஸ்தலர்களைப் போல் அல்லவா நாம் கத்திக் கொண்டிருக்கிறோம்.


"குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம் ?"

என்று நமது ஆண்டவர் கூறுவது நமது காதில் விழவில்லையே!"


".அதற்கு காரணம் நம்மிடம் விசுவாசம் என்ற சத்துள்ள கனி இருந்தும், அதைச் சாப்பிடாமல் 'பசிக்கிறதே பசிக்கிறதே 'என்று நாம் கத்திக் கொண்டு இருப்பதுதான்."

"நம் மக்கள் தங்களது தேசப்பற்றை நின்று கொண்டு தேசிய கீதம் இசைப்பதில் மட்டும் காண்பிப்பது போல,

நாமும் நமது விசுவாசத்தை விசுவாசப் பிரமாணத்தை சொல்வதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம்.

ஒரு சிறிய உதாரணம்,

"நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்"

என்று சொல்கிறோம்.

ஆனால் அது நெருங்கி வரும்போது ஏன் பயப்படுகிறோம்?

ஏனென்றால் நமது விசுவாசம் வார்த்தைகளில் மட்டுமே இருக்கிறது. வாழ்க்கையில் இல்லை."

"கோவிலில் விசுவாசப்பிரமானம் பாடும்போது பாட்டின் tune க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளுக்கு கொடுப்பது இல்லையே! 

சுவாமியார் 

'எப்படி பிரசங்கம் வைக்கிறார் என்பதற்கு'

 கொடுக்கும் முக்கியத்துவத்தை

'அவர் என்ன சொல்கிறார்' என்பதற்கு நாம் கொடுப்பது இல்லையே!"

". நமது விசுவாசம் நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிரதி பலிக்கவேண்டும்.

அயலான் ஒருவன் நம்மை அவமானப்படுத்தி விட்டான் என்று வைத்துக்கொள்வோம்.

"இயேசு எனது பாவங்களுக்காக பாடுகளின் போது பட்ட அவமானத்தை விட இது ஒன்றும் பெரியது அல்ல."

என்ற எண்ணம் நம்மைத் தேற்ற வேண்டும்.

நமது சம்பளம் கொஞ்சம் கூடிவிட்டால் மனைவிக்கு ஒரு சேலை எடுத்து கொடுக்க வேண்டும் என்று எண்ணம் வருகிறது அல்லவா?

அதோடு

உடுக்க உடை கிடைக்காத ஒரு ஏழையை பற்றிய  எண்ணமும் நினைவுக்கு வரவேண்டும்.

 ஏழைக்கு உடை கொடுப்பது இயேசுவுக்கு கொடுப்பதற்குச் சமம்."

"இப்போது ஒரு சிறு சந்தேகம் கேக்கலாமா?"

"எதைப்பற்றி?"

"உங்களைப் பற்றி."

"என் மீது உங்களுக்கு என்ன சந்தேகம்?"

"நீங்கள் விசுவசிக்கிறீர்களா? நம்புகிறீர்களா?"

"உங்கள் கேள்வியின் பொருள் புரிகிறது.

மற்றவர்கள் நம்பிக்கை என்பதை நீங்கள் விசுவாசம் என்கிறீர்களே, என்பதுதானே உங்களது சந்தேகம்?"

"Exactly."

"நான் பையனாக இருக்கும்போது

'விசுவாசம், நம்பிக்கை, 
தேவ சிநேகம்'

என்று படித்ததை,

இப்போது

'நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு' என்று படிக்கிறார்கள்.

அதைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம். 

இப்பொழுது இறைவன் நமது தந்தை என்பதை விசுவசிப்போம்.

அவரது கட்டளைகளைப் பின்பற்றி நடந்தால் அவரோடு மோட்ச இன்பத்தில் பங்கு பெறுவோம் என்று உறுதியாக நம்புவோம்.

நமது தந்தையையும், அவரால் படைக்கப்பட்ட நம்முடைய சகோதர சகோதரிகளையும் நமது சிந்தனை, சொல், செயலால் நேசிப்போம்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment