Tuesday, February 23, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 9(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 9
(தொடர்ச்சி)


"காதலர்கள் காலை பத்து மணிக்கு பூங்காவில் சந்திக்க வேண்டுமென்று தொலைபேசி மூலம் முடிவு செய்திருந்தார்கள்.


ஆனால் காதலன் ஒன்பதரை மணிக்கே வந்து காத்துக் கொண்டிருந்தான்.

காதலி சரியாக பத்து மணிக்கு வந்தாள்.

"ஏங்க, சீக்கிரமே வந்து விட்டீர்களோ?"

"ஆமாடி. ஒன்பதரை மணிக்கே வந்து காத்துக்கிடக்கிறேன்."

"ஏங்க, பத்து மணிக்குதான சந்திப்பதாக பேசிக்கிட்டோம். ஏன் ஒன்பதரை மணிக்கே வந்து காத்துக்கிடக்கிறீர்கள்?"

"ஒரு பயம்தான்."

"பயமா? எதுக்குங்க? யாரிடம் பயம்?"

"சரியான நேரத்திற்குப் புறப்பட்டு, எதிர்பாராத காரணத்தினால் பிந்திவிட்டால் நீ வருத்தப்படுவாயோ என்ற பயம்தான்."

"நாம் அன்பர்களுங்க. அன்பு இருக்கும் இடத்தில் பயம் எதற்கு?"

"அன்பு இருக்கும் இடத்தில்தானடி பயம் இருக்கும்.

எங்கே வேண்டாததைச் செய்து காதலியின் மனதை நோகச் செய்து விடுவோமோ என்ற பயம்.

அன்பு இல்லாதவர்களை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லையே!"


"சார் நாம் பேசிக்கொண்டிருப்பது பரிசுத்த ஆவியின் வரங்களைப் பற்றி.

 இறைவனோடு நமக்குள்ள ஆன்மீக உறவைப் பற்றி.

 இப்பொழுது எதற்கு காதல் கதை?"

"நமது ஆன்மீக வாழ்வே இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையே உள்ள காதல் வாழ்வு தானே!

தமிழில் காதல் என்றால் அன்பு என்றுதான் அர்த்தம்.

இறைவன் அன்பு மயமானவர்.

நாம் இறைவனாகிய அன்பின் பிள்ளைகள்.

தாயை போல பிள்ளைகள்.

 நம்மிடமுள்ள அன்புதான் நம்மை இறைவனின் பிள்ளைகளாக ஆக்குகிறது.

அன்பின் தலையாய குணமே தனது நேசருக்காக தன்னையே தியாகம் செய்வதுதான்.

நமக்காக இயேசு தன்னையே சிலுவையில் தியாகம் செய்ததை நம்மால் மறக்க முடியாது.

நாமும் அவருக்காக நம்மையே தியாகம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

கிறிஸ்தவ வாழ்வு ஒரு தியாக வாழ்வு.

அன்பரின் விருப்பத்தையே வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்வதுதான் தியாக வாழ்வு.

அன்பரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் அவரின் மனம் நோகுமோ எங்கு பயந்து வாழ்வது அன்பின் சுபாவம்.

இந்த பயம் உள்ளவர்கள் அன்பரின் மனதை நோகச் செய்ய மாட்டார்கள்.

நமது அன்பர் கடவுள்.

நமக்கு தெய்வ பயம் இருந்தால்தான் நாம் தெய்வத்தை நோகச் செய்யாமல் அவரது விருப்பம் நிறைவேறும் படி வாழ்வோம்.

பாவம் இறைவனின் மனதை நோகச் செய்யும் என்பதால் உண்மையான இறை அன்பு உள்ளவன் பாவம் செய்ய பயப்படுவான்.

தெய்வ பயம் இல்லாதவன் தெய்வத்தின் மனம் நோவதைப் பற்றி கவலைப்பட மாட்டான்,

அதாவது பாவம் செய்வதைப்பற்றி கவலைப்பட மாட்டான்.

தெய்வ பயம் இல்லாதவர்களால் இறைவனை முழுமையாக அன்பு செய்ய முடியாது.

ஆகவே தெய்வ பயத்தையும் அன்பையும் பிரிக்க முடியாது.

இறைவன் மீதும், புனிதர்கள் மீதும் நமக்கு உள்ள அன்பையே பக்தி என்கிறோம்.

இறைவன்மீது நமக்கு இருக்க வேண்டியது பயபக்தி, அதாவது பயம் கலந்த பக்தி.'

"பயபக்தி என்று சொல்வதற்கா இவ்வளவு முன்னுரை?"

"ஆமா. உலகில் தெய்வ பயம் குறைந்துவிட்ட காரணத்தினால்தான் பாவங்கள் பெருகிவிட்டன.

ஆகவேதான் அன்பின் தெய்வமாகிய பரிசுத்த ஆவி நம்முள் இறங்கும்போது முதலில் தெய்வ பயம் என்ற கொடையை நமக்கு தருகிறார்.

தெய்வ பயத்திலிருந்து ஞானம் பிறக்கிறது.

ஞானம் நமது புத்தி, அறிவு, விமரிசை, திடம், பக்தி ஆகியவற்றை வழிநடத்துகிறது.

தெய்வ பயத்திலிருந்து தான் மற்ற எல்லா கொடைகளும் பிறக்கின்றன என்று கூட சொல்லலாம்."

" மனிதன் - தெய்வ பயம் = மிருகம்.
சரியா?"

"Super சரி. புத்தி தான் ஒருவனே மனிதனாக்குகிறது.

தெய்வ பயம் இல்லாதவனுடைய புத்தி மிருகத்தனமாகவே செயல்படும்.

தெய்வத்துக்குப் பயப்படாதவன் வேறு எதற்குப் பயப்படுவான்?

 இன்று மனிதர்கள் மிருகங்களைப் போல் ஒருவரோடொருவர் சண்டை போடுவதற்கும், 

பயப்படாமல் கொலைகள் கூட செய்வதற்கும்,

ஆறாம், ஒன்பதாம் கட்டளைகளை வெட்கப்படாமல் மீறி நடப்பதற்கும் காரணம் 

தெய்வ பயம் இல்லாமைதானே!

தெய்வ பயம் இல்லாதவன் மனிதன் என்று அழைக்கப்பட அருகதை அற்றவன்."

"பரிசுத்த ஆவியின் கொடைகள்
தான் நம்மை முழுமையான மனிதர்களாக மாற்றுகின்றன.

ஏழு கொடைகளையும் வரிசைப் படுத்தும்போது ஏன் தெய்வ பயத்தை முதலில் போடவில்லை?"

" குழந்தை முதலில் அம்மா என்று சொல்ல கற்கிறது.

அதற்காக அப்பா முக்கியமில்லை என்று ஆகிவிடுமா?

வேண்டுமென்றால் தெய்வ பயத்தை முதலில் போட்டுக்கொள். ஞானத்துக்கு கோபம் வராது."

."தூய ஆவியின் கனிகள் என்கிறார்களே. அவற்றைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment