(தொடர்ச்சி
"ஒரு அம்மாவிற்கு ஒரு குழந்தை பிறந்தது.
சுற்றிலும் பார்த்தது. அதுக்கு எல்லாம் புதியதாய் இருந்தது.
அதனால் அதிகமாக அசைய முடியவில்லை. அதனால் முடிந்ததெல்லாம் அசைய முயன்றது தான்.
அதற்கு மிகவும் பசியாக இருந்தது. ஆனால் பசியை எப்படி அமர்த்துவது என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் அதனால் நன்றாக செய்ய முடிந்தது.
அதனால் அழ மட்டுமே முடிந்தது.
நன்றாக அழுதது. ஓங்கி ஓங்கி அழுதது. அங்கும் இங்கும் பார்த்து பார்த்து அழுதது. அந்த வேலையை செம்மையாக செய்தது.
ஆனால் அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்
அது அழுவதை பார்த்து
அதனை பெற்றவள் உட்பட
அனைவரும் சிரித்து மகிழ்ந்தார்கள்.
ஆனாலும் அது அழுவதை பார்த்தபின் அருகில் இருந்தவர்கள் அதை கையால் எடுத்தார்கள்.
தாயிடம் கொடுத்தார்கள்.
அவள் அதற்கு பாலூட்டினாள்.
அதிலிருந்து அந்த குழந்தை ஒரு பாடம் கற்றுக் கொண்டது.
அதுதான் அதன் வாழ்வில் கற்றுக் கொண்ட முதல் பாடம்.
என்ன பாடம்?
அழுதால்தான் பால் கிடைக்கும்.
அடுத்து அது கற்றுக்கொண்ட பாடங்கள்:
அழுதால்தான் மற்றவர்கள் தன்னை பார்க்க வருவார்கள்.
அழுதால்தான் தன்னை எடுப்பார்கள்.
அழுதால்தான் என்ன வேண்டும் என்று கேட்பார்கள்.
அழுதால் தான் தனக்கு வேண்டியதை தருவார்கள்.
காரியங்களை சாதிக்க அழுகை ஒன்றுதான் வழி என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டது."
"இப்போ எதற்கு திடீரென்று இந்த குழந்தை புராணம்?"
"இது திடீரென்று கூறப்படும் புராணம் அல்ல.
நமது ஆன்மீகத்தின் அடிப்படையே இந்த உண்மைதான்.
நாம் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டவர்கள்.
குழந்தை அழுவதன் அடிப்படை தத்துவம் என்ன?
சுயமாக குழந்தைக்கு அழுவதைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாது.
அது அழுவதனால் தான் தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்கிறது.
நாமும் குழந்தைகளாக இருந்தவர்கள் தானே.
உலகில் நாம் கற்றுக் கொண்ட முதல் பாடம் இதுதானே.
முதல் பாடம் மட்டுமல்ல இறுதி வரை கடைபிடிக்க வேண்டிய பாடம்.
இப்போதும் நம்மிடம் இல்லாத ஒன்று நமக்கு வேண்டுமென்றால் நம்மை பெற்றவரை நோக்கி அழுவதைத் தவிர வேறு ஒன்றும் நமக்கு தெரியாது.
ஆன்மீகத்தில் நம்மை பெற்றவர் கடவுள் மட்டுமே.
ஆன்மீக ரீதியாக நமக்கு எது வேண்டும் என்றாலும் இறைவனை நோக்கி அழுதால் மட்டுமே கிடைக்கும்."
"இறைவனை நோக்கி அழுவதைத்தான் நாம் ஜெபம், மன்றாட்டு, பிரார்த்தனை என்று பல பெயர்களால் அழைக்கிறோம். சரியா?"
"அழுகின்ற குழந்தை தனக்கு எது வேண்டுமோ அதை நினைத்துதான் அழும்.
முதல் தடவை அது அழும் போது அம்மா அதை எடுத்து பால் கொடுத்து விட்டால் அப்புறம் அது அம்மாவை நினைத்துதான் அழும்.
நாமும் கடவுளை நோக்கி ஒழுங்காக அழ கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் ஜெபம் சொல்லும் போது, கடவுளை நினைத்துதான் சொல்ல வேண்டும்.
மனதில் வேறு எதையாவது நினைத்துக்கொண்டு வார்த்தைகளை மட்டும் வாயினால் சொன்னால் அதன் பெயர் ஜெபம் அல்ல."
"நாம் பரிசுத்த ஆவியின் வரங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது அழுவதைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?"
"இது கூடவா புரியவில்லை? நமக்கு வேண்டிய வரங்களைக் கேட்டு பரிசுத்த ஆவியிடம் நாம் அழுது அழுது பெற்றுக்கொள்ள வேண்டும்.
'எல்லா வரமும் நிரம்பித் ததும்பும் திவ்விய ஸ்பிரீத்து சாந்துவே,
அடியோர் உள்ளத்தில் எழுந்து வாரும் இனிய சிநேக தேவனே.'"
"பரிசுத்த ஆவியை நம் உள்ளத்தில் வரவேற்று நமக்கு வேண்டிய வரங்களை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.
ஆனால் நாம் உறுதிப்பூசுதல் பெற்றவுடனே பரிசுத்த ஆவி நம்மிடம் வந்து நமது உள்ளத்தில் தங்கி ஏழு வகை கொடைகளையும் தந்துவிட்டாரே.
தந்ததையே திரும்பத் திரும்ப கேட்க வேண்டுமா?"
"கேட்க வேண்டும்.
கடவுள் நமக்கு வேண்டியதை தந்துவிட்டு ஓய்வு எடுக்க போக மாட்டார்.
அவரால் ஓய்வு எடுக்க முடியாது.
அவர் நம்முள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்.
நாமும் அவரோடு இணைந்து இயங்க வேண்டும்.
அதுவே ஆன்மீகம்.
ஒவ்வொரு வினாடியும் ஆன்மீகத்தில் நாம் இயங்க ஆண்டவரின் அருள் வேண்டும்.
நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஆண்டவனின் அருளை அதிகம் வேண்டுகின்றோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு அவர் நமக்கு அதிகமான அருளை தருவார்.
நமது உடலியல் வாழ்வில் எவ்வளவுக்கு எவ்வளவு சத்துள்ள உணவை உண்கிறோமோ
எவ்வளவுக்கு எவ்வளவு பயிற்சி செய்கிறோமோ,
அவ்வளவுக்கு அவ்வளவு நமது உடல் திடகாத்திரமாக இருக்கும்.
நமது ஆன்மா திடமாக இருக்க வேண்டுமென்றால் நாம் நமது ஆன்மாவுக்கு இறை அருளாகிய உணவை ஊட்டிக்கொண்டு இருக்க வேண்டும்.
ஆன்மீகத்தில் பயிற்சி என்றால்
அருள் வாழ்வாக மாறுவது.
அருள் நல்ல செயல்களாக மாறுவது."
''நமது ஆன்மா திடகாத்திரமாக உள்ளது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?"
"எவ்வளவு சோதனைகள் வந்தாலும், எத்தனை கஷ்டங்கள் நேரிடினும்
முகமலர்ச்சியுடன் அருள் வாழ்வில் இயங்க முடியும் என்றால் நம்முடைய ஆன்மா திடகாத்திரமாக உள்ளது என்பது பொருள்,
ஒரு சிறு சோதனை வந்தால்கூட நாம் துவண்டு விடுவோமானால் நம்மிடம் திடமில்லை.
நமது ஆன்மாவை திடப்படுத்தும்படி பரிசுத்த ஆவியை நோக்கி மன்றாடவேண்டும்.
உண்மையில் சோதனைகளும், கஷ்டங்களும் வருவதே நமது ஆன்மாவை திடப் படுத்துவதற்காகத்தான்.
சோதனைகளும், கஷ்டங்களும்
இறைவனை நோக்கி நம்மை அழ வைக்கின்றன.
The more we suffer, the more we pray.
அவை வராவிட்டால் இறைவனை நினைப்பதையே மறந்து விடுவோம்.
அவை வந்தால்தான் சோதனைகளை வெல்லவும், கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளவும் பயிற்சி கிடைக்கும்.
இறைவனுக்காக மரித்த வேத சாட்சிகள் எல்லாம் சோதனைகளை வென்று கஷ்டங்களை தாங்கி வாழ்ந்தவர்கள் தான்.
சிலுவை இல்லாவிட்டால் மகிமை இல்லை.
உண்மையான ஆன்மீகவாதிகள் துன்பங்களில் இருந்து விடுதலை பெற ஜெபிக்க மாட்டார்கள்.
துன்பங்களைப் பொறுமையோடு இறைவனுக்காக தாங்கிக் கொள்ள வேண்டிய திடனையும், உறுதியையும் தரவே இறைவனிடம் ஜெபிப்பார்கள்."
"ஞானம் எவ்வாறு திடனுக்கு உதவுகிறது?"
"சிலுவையின் பலனை ஆன்மாவிற்கு உணர வைப்பது ஞானம்தான்.
ஞானம் இல்லாதவன் துன்பங்களை பாவங்களுக்கான தண்டனை என்று நினைப்பான்.
ஞானம் உள்ளவனுக்கு தான் தெரியும் துன்பங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய உதவும் ஆசீர்வாதங்கள் என்று.
இயேசுவே துன்பங்களை அனுபவித்து தான் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.
துன்பப்படும் போது நாம் இயேசுவைப் பிரதிபலிக்கிறோம் .
நம்மை இயேசுவைப்போல் மாற்றும் எதுவும் நமக்கு ஆசீர்வாதம்தான்.
ஞானம் உள்ளவர்களுடைய புத்தி இயேசுவை மையமாக வைத்தே சிந்திக்கும்.
ஞானம் உள்ளவர்களுடைய அறிவு இயேசுவையே மையமாகக் கொண்டிருக்கும்.
ஞானம் உள்ளவர்களுடைய செயல்களும் இயேசுவையே மையமாகக் கொண்டிருக்கும்.
ஞானம் உள்ளவர்கள் இயேசுவுக்காகவே திடமாக வாழ்வார்கள்.
ஞானம் உள்ளவர்கள் தெய்வ பயத்தோடு பக்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்."
"பக்தி என்றால் Love.
பயம் என்றால் Fear.
இரண்டும் எப்படி நண்பர்களாக இருக்கும்?
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment