Monday, February 15, 2021

பொதுக் குருத்துவம்.

     பொதுக் குருத்துவம்.


." நீங்களும் உயிருள்ள கற்களென, ஞான இல்லமாக அமைக்கப்படுவீர்களாக. 

அதில் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவனுக்குகந்த ஞானப்பலி நிறைவேற்றும் குருத்துவத் திருக்கூட்டமாக அமைவீர்கள்."

"நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரசு குருத்துவத் திருக்கூட்டம், பரிசுத்த குலம், இறைவனுக்குச் சொந்தமான மக்கள்:"
(1 இராய. 2:5, 9)

"என்னாச்சு உங்களுக்கு? வந்ததும் வராததுமா பைபிள் வசனங்கள மனப்பாடமா பாராமல் ஒப்பிக்கிறீங்க."

"மனப்பாடமா ஒப்பிக்கல, மனதில் உள்ளதைச் சொல்லுகிறேன்."


"மனதில் உள்ளதை நேரடியாக சொல்லுங்கள்."

"உங்களிடம் யார் மூலமாகவும் சொல்லவில்லையே. 

நேரடியாகத்தானே சொல்லுகிறேன்."

"நீங்கள் பைபிள் வசனத்தின் மூலம் சொல்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளை பயன்படுத்தி நேரடியாக. சொல்லுங்கள்"

"நமது முதல் பாப்பரசர், இராயப்பர்,
விசுவாசிகளுக்கு எழுதிய திருமடலில், '

"ஞானப்பலி நிறைவேற்றும் குருத்துவத் திருக்கூட்டமாக அமைவீர்கள்."

என்றும்,

நீங்கள் குருத்துவத் திருக்கூட்டம், என்றும் எழுதுகிறார்.

அதாவது விசுவாசிகளை குருக்கள் என்று அழைக்கிறார்.

நீங்கள் ஒரு விசுவாசிதானே?"


"புரிகிறது. நான் பொதுக்
குருத்துவத்தைச் சேர்ந்த விசுவாசி என்று எனக்குத் தெரியும்.

தெரிந்த ஒன்றை ஞாபகப்படுத்த என்ன அவசியம் உங்களுக்கு ஏற்பட்டது?"

"கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த அனைவரும் குருக்கள்தான் என்று நண்பர் ஒருவர் கூறுகிறார்.

 அதற்கு நான் மனதில் இருந்து ஒப்பித்துக்  கொண்டுவந்த இரண்டு வசனங்களையும் ஆதாரமாகக் கூறுகிறார்."

"அதுகுறித்து பேச வேண்டும். அப்படித்தானே!"

"அப்படியேதான்."


"நான் ஒரு கேள்வி கேட்கிறேன். 
குரு என்றால் யார்?"

"இறைவனுக்கு பலி ஒப்புக் கொடுப்பவர்களைத்தான் குருக்கள் என்று அழைக்கிறோம்."

"Correct. திருச்சபையில் விசேஷமான விதமாக இறைவனால் அழைக்கப்பட்டு திருநிலைப் படுத்தப் பட்டவர்கள்தானே திருப்பலி ஒப்புக் கொடுக்க முடியும்.

அப்போ அவர்கள்தானே குருக்கள்.

அவர்கள் பயிற்சி பெறும் இடங்கள் தானே குரு மடங்கள். 

சாதாரண விசுவாசிகளை எப்படி குருக்கள் என்று அழைக்கலாம்?"

"நீங்கள் புரியாமல் பேசுகிறீர்களா; அல்லது புரிந்ததைப் புரியாதது மாதிரி காட்டிக்கொண்டு பேசுகிறீர்களா என்று தெரியவில்லை.

பலி ஒப்புக் கொடுப்பவர்களைத்தான் குருக்கள் என்று அழைக்கிறோம் என்று நான் சொன்னேன்.

நீங்கள் Correct என்று கூறி அதை ஏற்றுக் கொண்டீர்கள்.

இப்போ புரியாதது போல் கேள்வி கேட்கிறீர்கள்."

"எனக்குத் தெரியவில்லை என்றே வைத்துக் கொள்வோம். விளக்கமாக கூறி தெரிய வையுங்களேன்."

"புரிகிறது. நன்றாகவே புரிகிறது.

எனக்கு நீங்கள் testவைக்கிறீர்கள்.
பரவாயில்லை. விளக்குகிறேன்.

கத்தோலிக்க திருச்சபை ஒரு குடும்பம். இக்குடும்பத்தில் உள்ள அனைவரும் குருக்கள் தான்.

நம்முடைய முதல் குரு 

நமக்காக தன்னையே சிலுவையில் பலியாக தந்தையிடம் ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்து.

பலி ஒப்புக்கொடுத்தவரும் அவர்தான் 
பலிபொருளும் அவர்தான்.
பலியை ஏற்றுக் கொள்பவரும் அவர்தான்."

"கொஞ்சம் பொறுங்கள்.

 பலியை ஒப்பு கொடுப்பவர் அவர்தான் பலிப் பொருளும் அவர்தான். விளங்குகிறது
 .
 ஏற்றுக்கொள்பவரும் அவர்தான். அதைக் கொஞ்சம் விளக்கவும்."

"இதில் விளக்குவதற்கு என்ன இருக்கிறது?

இயேசு கிறிஸ்து யார்?"

"கடவுள்."

"கடவுளுக்குத் தானே பலி ஒப்புக் கொடுக்கப்படுகிறது.

 பலியை ஏற்றுக் கொள்பவர் கடவுள்தானே."

 "அதாவது?"

"அதாவது, இறைவன் நம்மை படைத்து பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார்.

 பிள்ளைகள் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தன்னை தானே பலியாக்கி கொள்கிறார்!

தேவ சுபாவத்தைப் பலிப் பொருள் ஆக்க முடியாது..

ஆகவே பலிப்பொருள் 
ஆவதற்காகவே கடவுள் மனித சுபாவத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.

இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள்.

தேவ சுபாவம், 
மனித சுபாவம்

பலிப் பொருள் கடவுளின் மனித சுபாவம்.

பலியை ஏற்றுக்கொள்வது அதே கடவுளின் தேவ சுபாவம்.

ஆகவே பலி பொருளும் கடவுள்தான்,

 பலியை ஏற்றுக்கொள்பவரும்.   கடவுள்தான்."

"இதை வேறு ஒரு மாதிரியும் விவரிக்கலாம்.

மனிதன் பாவம் செய்தான்.
மனிதன்தான் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.

கடவுள் அளவு இல்லாதவர். மனிதன் அளவு உள்ளவன்.
அளவு உள்ள மனிதனால் அளவு இல்லாத கடவுளுக்கு ஏற்றபடி பரிகாரம் செய்ய இயலாது.

இறைவனுடைய நீதிமன்றத்திற்கு இந்த பரிகார Case வருகிறது.

மனிதனது நிலைமையை பார்த்து இரங்கிய கடவுள் தானே மனிதனாக பிறந்து அவன் செய்த அத்தனை பாவங்களையும் தன்மேல் ஏற்றுக் கொள்கிறார்.

நீதிமன்றத்தில் நீதிபதி தந்தை, கடவுள்.

வக்கீல் இறைமகன், கடவுள், 
தேவ சுபாவத்தில்.

தண்டனையை ஏற்றுக் கொள்பவர்,
இறைமகன், இயேசு, கடவுள், மனித சுபாவத்தில்.

ஆக 

நீதிபதியும் கடவுளே,
 வக்கீலும் கடவுளே,
பரிகாரத்தை ஏற்றுக்கொள்ள வரும் கடவுளே

இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டுமென்றால் 

வக்கீலே பாவச் சுமையை தானே ஏற்றுக்கொண்டு

 தானே பரிகாரம் செய்ய அனுமதிக்க

 நீதிபதியிடம் வேண்டுகிறார்.

அனுமதி கொடுக்கப்படுகிறது.

வக்கீலே மனிதனுக்காக தன்னைத்தானே பலியாக ஒப்புக் கொடுக்கிறார்.

சரி. தொடர்ந்து சொல்லுங்கள்."

"முதல் குருவாகிய இயேசு கிறிஸ்து
 தான் பாடுகள் படுவதற்கு முந்திய நாள் இரவு,

 அதாவது பெரிய வியாழன் அன்று,

 தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு குருப்பட்டம் கொடுக்கிறார்.

மறுநாள் தான் இரத்தம் சிந்தி ஒப்புக் கொடுக்கப் போகும் அதே பலியை 

இரத்தம் சிந்தாத விதமாக உலகம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் ஒப்புக் கொடுப்பதற்காகக் குருக்களை நியமிக்கிறார்.

அப்போஸ்தலர்களும், அவர்களது வாரிசுகளும் பணிக் குருத்துவத்தைச் சேர்ந்தவர்கள்.


இவர்களது பணி தேவ திரவிய அனுமானங்கள் துணைகொண்டு திருச்சபையின் உறுப்பினர்களுக்கு பணி புரிவது.

பாப்பரசர் முதல் பங்கு குருக்கள் வரை அனைவரும் பணிக் குருத்துவத்தினர்.

இவர்களால் ஒவ்வொரு வினாடியும் உலகில் ஆயிரக்கணக்கான திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன."


"இதுவரை நீங்கள் சொல்லாமலே எனக்கு தெரியும்.

பொதுநிலையினரை குருக்கள் என்று எவ்வாறு கூறலாம்?"

"தாய் திருச்சபையின் பொது நிலையினர் அனைவரும்

 தங்கள் வாழ்நாள் முழுவதும் குருக்கள் தான். 

இவர்கள் பொதுக் குருத்துவத்தை சேர்ந்தவர்கள்.

பொது என்ற வார்த்தை ஞானஸ்நானம் பெற்ற அனைவரையும் உள்ளடக்கும்.

ஞானஸ்நானம் பெற்ற அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்கும் கடமை இருக்கிறது.

, இயேசு "உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்" என்று தனது சீடர்களுக்குக் கூறியதால்,

அவருடைய சீடர்களாக இருக்கும் அனைவருக்கும் அந்த கட்டளை பொருந்தும். 

ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் இயேசுவின் சீடர்களே.

தனக்கு சீடர்களாக இருக்க விரும்புவோர் தங்கள் சிலுவையை சுமந்துகொண்டு அவரை பின்பற்றும்படி இயேசு கூறியிருக்கிறார்.

ஞானஸ்நானம் பெற்ற அனைவருக்கும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிலுவையை சுமந்து சொல்ல கடமை இருக்கிறது.

நாம் சுமக்கும் சிலுவையே நம்மை அவரது சீடர்களாக மாற்றிவிடுகிறது.

ஆகவே அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்ட நற்செய்தி அறிவிக்கும் பணி நமக்கும் பொருந்தும்.


நமக்கும் பலி ஒப்புக்கொடுக்கும் கடமை இருக்கிறது. 

இயேசு தன்னையே ரத்தம் சிந்திய விதமாய் சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார்.

பணிக் குருத்துவத்தினர் அதே இயேசுவை ரத்தம் சிந்தாத விதமாக ஒவ்வொரு நாளும் பீடத்தில் திருப் பலியில் தந்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள்.


பொதுக் குருத்துவத்தினர் அதே இயேசுவை நமது ஜெபத்தில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுக்கலாம்.

"நித்திய பிதாவே! 
'
உமது நேசக்குமாரனாகிய எமது
ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின்

 உடலையும் 

உதிரத்தையும்,

ஆன்மாவையும், 

தெய்வீகத்தையும் 

எமது பாவங்களுக்காவும்,

அகில உலகின் பாவங்களுக்காகவும்,

 பரிகாரமாக

 உமக்கு

ஒப்புக்கொடுக்கிறோம்."

தந்தையின் இரக்கத்தை பெறுவதற்காக நாம் சொல்லும் இந்த ஜெபம் அளவற்ற பலனை நமக்கு தரவல்லது.

எப்போது வேண்டுமென்றாலும் தந்தை இறைவனுக்கு அவரது திருமகனை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக் கொடுத்து கொண்டே இருக்கலாம்.

தந்தைக்கு மிகவும் பிடித்தமான பலி அவரது மகன்தான்.

அவரது திருமகனை மட்டுமல்ல

 நம்மை நாமே தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்தவுடன் அன்றைய நாளின்

நமது சிந்தனை, சொற்கள், செயல்கள் அனைத்தும் இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும்.

 அப்படி ஒப்புக்கொடுக்கப் பட்டால்தான் நமது சிந்தனை, சொல், செயல்களில் பரிசுத்தத்தனம் இருக்கும்.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு மூச்சையும் இறைவனுக்கு சொந்தமாக்கி விட வேண்டும்.

நமது இறுதி மூச்சு அவருக்கு சொந்தமாக இருந்தால்தான் 

அது நம்மை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும்.

நமது ஒவ்வொரு செயலையும் பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவருக்கே ஒப்புக் கொடுத்து விட்டால்

 அதில் பாவம் நுழைய முடியாது.

நமது வாழ்வையே இறைவனுக்கு பலியாக ஒப்புக்கொடுக்கும் நாம் குருக்கள்தானே!

குருவானவர் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் கலந்து கொள்ளும் நாம் அவரோடு சேர்ந்து பலியை ஒப்புக் கொடுக்கிறோம். 

திருப்பலியின்போது ஒப்புக் கொடுக்கப்படும் அப்பத்திலும், இரசத்திலும் நமக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் 

பலி ஒப்புக் கொடுக்கப்படும் முன் காணிக்கை செலுத்துகிறோம்.

காணிக்கையாக நாம் கொடுப்பது வெறும் பணம் அல்ல.

நாம்தான் காணிக்கையாக பீடத்திற்கு செல்கிறோம்.

 பலி ஒப்புக்கொடுக்கும் குருவோடு இணைந்து நாமும் பலியை ஒப்புக் கொடுக்கிறோம்.

பொதுக் குருத்துவத்தினராகிய நாமும் இறை ஊழியத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட குருக்களே என்ற உணர்வோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.










"

No comments:

Post a Comment