Monday, February 1, 2021

மனிதனை இயக்கும் :: மூன்று தத்துவங்கள்.

மனிதனை இயக்கும்
            மூன்று தத்துவங்கள்.


கடவுள் உலகத்தையும் அதிலுள்ள உயிர் வாழ்வன அனைத்தையும் படைத்து விட்டு கடைசியில் மனிதனை தன் சாயலில் படைத்தார்.

 இயற்கை இயங்குவதற்கு இயற்கை விதிகளை கொடுத்தது போல மிருகங்கள் இயங்குவதற்கு உள்ளுணர்வைக் (Instinct) கொடுத்தார்.

அவை தம் உள்ளுணர்வின்படியே இயங்குகின்றன.

ஒவ்வொரு வகை மிருகத்திற்கும் ஒவ்வொரு வகையான உள் உணர்வு இருக்கும்.

அதில் எப்பொழுதும் எந்தவித மாற்றமும் இருக்காது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அவை எப்படி இயங்கினவோ அப்படியே தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இப்போது குச்சிகளை கொண்டு மரத்தில் கூடு கட்டுகின்ற காகம்

 பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அப்படித்தான் கட்டியது

 இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அப்படியேதான் கட்டும்.

இறைவன் மனிதனை மட்டும் தன் சாயலில் படைத்தார்.

அதற்காக அவனுக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய நன்கொடை அவனுடைய புத்தி.

புத்தியிலிருந்து பிறப்பதுதான் சிந்தனை.

ஒவ்வொரு மனிதனும் தன் சிந்தனையை நேசிக்கிறான்.

சிந்தனை தன்னிலேயே உருவம் அற்றது.

புத்தி தான் பெற்ற சிந்தனைக்கு வார்த்தை என்ற உருவத்தைக் கொடுத்து மனதில் குடி வைக்கிறது.

மனதில் குடியிருக்கும் தன் பிறப்பாகிய சிந்தனையை புத்தி மிகவும் நேசிக்கிறது.

சிந்தனை செயலாக உருவெடுக்கும் போது மனிதன் இயங்குகிறான்.

ஆக புத்தி, மனது, அன்பு என்ற மூன்று தத்துவங்களால் 
ஆனவன்தான் மனிதன்.
 
புத்தியிலிருந்து பிறக்கும் சிந்தனையின் தன்மையை பொறுத்துதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கை அமையும்.

வாழ்க்கையில் சிறப்பாக இயங்குகின்றவனைப் புத்திசாலி என்கிறோம்.

வாழ்க்கையில் மோசமாக இயங்குகின்றவனைப் புத்தி கெட்டவன் என்கிறோம்.

இறைவனும் மனிதனுடைய புத்தியை படைக்கும்போது அதனை சுதந்திர உணர்வோடு படைத்தார்.

ஆகவேதான் மனிதன் சுதந்திரமாக சிந்திக்கிறான், சுதந்திரமாக செயல்படுகிறான்.

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பது இல்லை.

 சிந்தனைதான் செயலாக மாறுவதால் ஒவ்வொரு மனிதனின் செயலும் ஒரு மாதிரியாக இருக்கிறது.

இறைவன் மனிதனுக்கு புத்தியை கொடுத்ததன் நோக்கம்

 அவன் அதன் உதவியால்
 அவரை அறிந்து.

 அவரை நேசித்து .

அவரது விருப்பப்படி செயல்பட்டு அதன் வழியாக 

அவரை அடைய வேண்டும் என்பதற்காகத்தான்.

அவரை எப்படி அறிவது?

ஒருவன் காலையில் எழுந்து தனது அறையை பூட்டிவிட்டு சாவியோடு வெளியே சென்று விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம்.

மாலையில் வீடு திரும்பி, கதவைத் திறந்து அறைக்குள் செல்லும் போது, அவனுடைய மேஜையின் மேல் ஒரு அழகான cell phone இருக்கிறது.

 அது அவனுடையது அல்ல என்று அவனுக்குத் தெரியும்.

 காலையில் அறையை விட்டு போகும் போது அந்த செல்போன் மேஜையின் மேல் இல்லை.

செல்போனை பார்த்தவுடன் அவனது புத்தி செயல்படத் தொடங்கும்.

" நான் அறையைவிட்டு செல்லும்போது இந்த போன் இங்கு இல்லை. 

நான் கதவை பூட்டிவிட்டுதான் சென்றேன். 

போன் தானாக இங்கு வந்திருக்க முடியாது.

யாராவது அதை இங்கு கொண்டு வந்து வைத்திருக்க வேண்டும், 

 அது யாராக இருக்கும்?

 கதவு பூட்டி இருந்தது.

யாரிடம் இன்னொரு சாவி இருக்கிறதோ அவர்தான் இதை இங்கு வைத்திருக்க வேண்டும்  


அப்பாவிடம் மட்டும்தான் இந்த அறைக்கான duplicate சாவி இருக்கிறது.

அப்படியானால் அப்பாதான் இந்த போனை இங்கு வைத்திருக்க வேண்டும்."

இவை புத்தியிலிருந்து பிறந்த சிந்தனைகள். அவை உடனே செயலில் இறங்கு கின்றன.

உடனே அப்பாவிடம் சென்று அவருக்கு நன்றி கூறுகிறான்.

இப்போது அவனுடைய புத்தி சரியாக செயல்பட்டிருக்கிறது.

 Suppose அவன்,

"Phone இங்கு எப்படி வந்தது?

  சரி, எப்படியாவது வந்திருக்கும். எப்படி வந்தால் எனக்கென்ன. வந்திருக்கிறது, அனுபவிப்போம்.

 வேறு யாரிடமும் காட்டிக் கொள்ளக் கூடாது. காட்டினால் இது என்னுடையது என்று யாரும் சொல்லிவிடக்கூடாது"

என்று அவனது சிந்தனை ஓடினால் அதை சரி என்போமா?

உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இயற்கையை பார்க்கிறோம். அதன் அழகை ரசிக்கிறோம். அதன் அதிசயங்களை பார்த்து வியக்கிறோம்.

புத்தியில்லாத விலங்குகளும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவையும் இயற்கையை பார்க்கின்றன.


எந்த விலங்கும் இயற்கையை ரசிப்பதில்லை. அதிசயங்களை பார்த்து ஆச்சரியப்படுவதில்லை. அதனுடைய உள்ளுணர்வை கொண்டு இயற்கையை அனுபவிக்கும். அதோடு சரி.

ஆனால் புத்தியுள்ள மனிதன் இயற்கையை பார்த்தவுடன் சிந்திக்க ஆரம்பிக்கிறான்.

ஆளுக்கு ஆள் சிந்தனைகள் மாறுபடுகின்றன.

 சிலர் இயற்கையின் மாறாத விதிகளால் ஈர்க்கப்பட்டு அவற்றை ஆராய்ந்து விஞ்ஞான வளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். 

சிலர் முதலில் தங்களை பார்க்கிறார்கள். 

தங்களுக்கு புத்தி இருப்பதை உணர்கிறார்கள். 

தங்களது புத்தியை தாங்களே தங்களுக்கு கொடுக்க இல்லை என்பதையும் உணர்கிறார்கள்.

தங்களது பெற்றோரால் உடலை மட்டும் பெறமுடியும்.

 தங்களது புத்தியை பெற்று தந்திருக்க முடியாது என்பதை உணர்கிறார்கள்.

 பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்று தெரியாதவர்களால் எப்படி புத்தியை கொடுத்திருக்க முடியும்!

ஆகவே தங்கள் பெற்றோரையும் தாண்டி 

தாங்கள் இவ்வுலகத்திற்கு வர காரணமானவர் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்து,

 பிறகு அவர் தான் கடவுள் என்ற விசுவாசத்திற்கும் வருகிறார்கள்.

இவர்கள் 

விதிகளுக்கு கட்டுப்பட்டு இயங்குகின்ற அழகான இயற்கையை பார்க்கும்போது

 இயற்கைக்கு தங்களுக்கு இருப்பதைப்போல் சிந்திக்கும் திறன் இல்லை என்பதை முதலில் உணர்கிறார்கள். 

ஆகவே அளவற்ற விதமாய் சிந்திக்க வல்ல ஒருவர்தான் இயற்கையை, இயற்கைக்கு வெளியே இருந்து இயக்க முடியும் என்பதையும் உணர்கிறார்கள்.

தங்களைப் படைத்த கடவுள்தான் இயற்கையையும் படைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

சரியான முறையில் தங்களது புத்தியைப் பயன்படுத்தி சிந்திக்கின்றவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.

சரியாக சிந்திக்கத் தெரிந்த விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கையை உள்ளவர்கள்தான் இருப்பார்கள்.

நாம் கிறிஸ்தவர்கள்.

நமது புத்தியால் கடவுள் இருக்கிறார் என்பதை பற்றி மட்டும் அறிய முடியுமே ஒழிய

 அவரைப் பற்றி நமது புத்தியைக் கொண்டு முழுமையாக கண்டுபிடிக்க முடியாது.

 ஏனெனில் நமது புத்தி அளவுள்ளது.

கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்க்கைக்கு அடிப்படை விசுவாசம்.

விசுவாசம் இறைவனால் நமக்கு அருளப்பட்ட ஒரு ஆன்மீக நன்கொடை.

நமது புத்தியின் செயல்பாடு நமது விசுவாசத்திற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.

 அதாவது நமது சிந்தனையும் செயல்களும் விசுவாசத்தினால் இயக்கப்பட வேண்டும்.

நமது புத்தி எதைப்பற்றி சிந்தித்தாலும் அந்த சிந்தனை நமது விசுவாசத்திற்கு எதிராக இருந்து விடக்கூடாது.

இன்றைய நம்முடைய பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமே 

நாம் விசுவாசத்தின் அடிப்படையில் சிந்திக்காமல் புத்தியின் அடிப்படையில் மட்டும் சிந்திப்பது தான்.

மனித புத்தியின் அடிப்படையில் கன்னிமையோடு குழந்தை பெற இயலாது.

அதனால்தான் கபிரியேல் தூதர் கன்னி மரியிடம் மங்கள வார்த்தை சொன்னபோது 

"நான் கணவனை அறியேனே" என்று மரியாள் சொன்னாள்.

ஆனால் கபிரியேல் தூதர் மரியாளின் கன்னிமைக்கு பழுது ஏற்படாமல் இறைவன் தன் வல்லமையால் அவளது வயிற்றில் மனித உரு எடுப்பார் என்று சொன்னவுடனே,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்."

என்று, தன் புத்தியை விசுவாசத்திற்கு அடிமையாக்கி கொண்டாள்.

மரியாளின் பிள்ளைகளாகிய நாம் தாயைப் போலவே நமது புத்தியை விசுவாசத்திற்கு அடிமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

"நம்மை படைத்த இறைவன் ஒவ்வொரு வினாடியும் நம்மை பராமரித்து வருகிறார்.

நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நமது ஆன்மீக நலன் கருதியே இருக்கும்."

என்று இயேசுவின் மேல் அசைக்கமுடியாத விசுவாசம் நமக்கு இருந்தால் நமது வாழ்வில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை  அமைதியாக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம்.

ஏனெனில் இயேசுவையும் மீறி நமக்கு எதுவும் நடக்க முடியாது என்று நாம் விசுவசிக்கிறோம்.

இன்று கொரோனாவைக் கண்டு நாம் பயப்படுவதற்குக் காரணம் நம்முடைய விசுவாசப் பற்றாக்குறைதான்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment