"அப்பா, அந்தோணியார் கோவிலுக்கு வந்திருக்கிறோம்."
"தெரியுது."
"உவரிக்கு வந்திருக்கிறோம்."
"தெரியுது."
"கடற்கரை ஓரமாக வந்திருக்கிறோம்."
"ஏல, நான்தானே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன், எனக்கு நீ ஞாபகப்படுத்தணுமா?"
"ஏங்க, பையன் என்ன சொல்ல வருகிறான் என்று தெரியவில்லையா?"
"தெரியும், தெரியும்.முதலில் கோவிலுக்குச் சென்று
ஜெபம் சொல்லிவிட்டு
தொடர்ந்து திருப்பலி கண்டுவிட்டு அப்புறமாக அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை பார்ப்போம்."
"பசிக்குது அப்பா."
"பசிக்க வேண்டும். அப்பொழுது தான் உடம்புக்கு நல்லது.
திருப்பலிக்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கிறது. இப்போது சாப்பிடச் சென்றால்
முழுத் திருப்பலி காண முடியாது.
அது மட்டுமல்ல,
நன்மை வாங்க வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் உபவாசம் இருக்க வேண்டும்.
இப்போது சாப்பிட சென்றால் திருப்பலிக்கும் நேரத்துக்கு வர முடியாது, திருவிருந்திலும் கலந்து கொள்ள முடியாது.
திருப்பலி முடிந்து சாப்பிட செல்வோம்."
"அப்பா, மீன் கறி."
" அப்பா மீன் கறி இல்லை. மீன் கறி கடையில் இருக்கிறது. சாப்பிடப் போகும்போது வாங்கிக் கொள்ளலாம்.
முதலில் பேசாமல் கோவிலுக்குள் போ."
பள்ளிக்கூடம் போவது கல்வி கற்பதற்கு.
குற்றாலம் செல்வது அருவியில் குளிப்பதற்கு.
திருமணத்திற்கு செல்வது புதிய தம்பதிகளை ஆசீர்வதிப்பதற்கு.
இப்படியாக ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.
பள்ளிக்கூடத்தில் விளையாட்டும் இருக்கிறது.ஆனால் அது நோக்கமல்ல.
குற்றாலத்திற்கு போகும்போது குரங்குகளைப் பார்க்கலாம் ஆனால் நாம் குரங்குகளைப் பார்க்க குற்றாலம் போகவில்லை.
திருமண வீட்டில் நன்றாக சாப்பிடலாம். ஆனால் நாம் அதற்காக அங்கு செல்லவில்லை. சாப்பாடு நமது இல்லத்திலும் இருக்கிறது.
நாம் என்ன செய்தாலும் செய்வதன் நோக்கத்தை கருத்திற்கொண்டு செய்ய வேண்டும்.
அதை ஒட்டிய மற்ற செயல்கள் இரண்டாம் பட்சம்.
உவரி அந்தோனியார் கோவிலுக்குச் சென்று
கடலில் குளித்துவிட்டு
கிணற்றிலும் குளித்துவிட்டு
ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு
கடற்கரை ஓரமாக விளையாடிவிட்டு
அப்படியே வீட்டிற்கு வந்தால் நாம் கோவிலுக்குச் செல்லவில்லை.
குளிக்கப் போயிருக்கிறோம்.
ஆயிரக்கணக்காய்க் செலவழித்து பள்ளிக்கூடத்தில் admissionபோட்டு
தினமும் பள்ளிக்கூடம் போய் வகுப்பில் பாடங்களை கவனியாமல்
விளையாட்டு பிரிவு வேளையில் விளையாடி
வருடத்தைக் கடத்துபவன் பள்ளிக்கு படிக்கச் செல்லவில்லை.
விளையாட மட்டுமே செல்கிறான்.
உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் மனிதன் உலகிற்கு வந்ததன் நோக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் வாழ்வதுதான்.
ஆனால் இறைமகன் இயேசு நம்மைப் போல் அல்ல.
நித்திய காலமாய் விண்ணக பேரின்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்
உலகத்தில் மனிதனாக பிறந்ததன் நோக்கம் மனிதன் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரம் செய்து அவனை மீட்பது மட்டும்தான்.
நமது பாவங்களுக்கான அவரது பரிகாரப் பாடுகள் எப்போது ஆரம்பித்தன?
பெரிய வியாழக்கிழமை இரவிலா?
இல்லை.
எப்போது கன்னி மரியின் வயிற்றில் மனித உரு எடுத்தாரோ அந்த வினாடியிலிருந்து அவரது பாடுகள் ஆரம்பித்துவிட்டன.
அவர் கருவுற்றது வியாகுல மாதாவின் வயிற்றில்.
அதாவது தன் வாழ்நாள் முழுவதையும் வியாகுலங்களையே உணவாக உண்டு வாழப் போகிற ஒரு பெண்ணின் வயிற்றில் மனித உரு எடுத்தார்.
புனித சூசையப்பர் மாதாவின் மேல் கொண்ட சந்தேகமே அவளது முதல் வியாகுலம் என்று கூறலாம்.
இயேசு மாதாவின் வயிற்றில் இருந்ததால்தான் சூசையப்பருக்கு மாதாவின் மேல் சந்தேகம் ஏற்பட்டது.
அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க எல்லாம் வல்ல இறைவனே தனது தூதுவரை அனுப்ப வேண்டியிருந்தது.
நாசரேத்து ஊரில் சூசையப்பருக்கு சொந்த வீடு இருந்தது.
ஆனால் இயேசு தனது பாடுகளை தொடர்வதற்காக தான் அன்னையின் வயிற்றில் இருந்த படியே
சூசையப்பரையும் மாதாவையும் பெத்லகேமுக்கு அழைத்துச் செல்கிறார்.
இயேசுவின் பாடுகளில் அவரது அன்னையும் வளர்ப்புத் தந்தையும் பங்குபெறுகிறார்கள்.
நாசரேத்து ஊரிலிருந்து பெத்லகேம் வரை நடைபயணம்.
இயேசுவை வயிற்றில் சுமந்துகொண்டு மரியன்னையும் சூசையப்பரும் வீடு வீடாக சென்று தங்குவதற்கு இடம் கேட்கிறார்கள். கிடைக்கவில்லை.
சத்திரத்தில் கூட அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
வேறு வழி இல்லாமல் மாடுகள் அடைகின்ற தொழுவத்தில்
மாட்டுச்சாண நாற்றத்துக்கு இடையே மாதாவும் சூசையப்பரும் தங்குகிறார்கள்.
மாட்டுச்சாண நாற்றத்தை நுகர்ந்துகொண்டே இயேசு உலகில் மனிதனாகப் பிறக்கிறார்.
மார்கழி பனியில் உடல் எல்லாம் நடுங்குகிறது. நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அதை ஏற்றுக் கொள்கிறார்.
படுக்க பஞ்சு மெத்தை இல்லை.
ஒரு பாய் கூட இல்லை.
மாட்டுத் தீவன தொட்டி தான் அவர் முதல் முதல் படுத்துத் தூங்கிய கட்டில்.
அவர் தம்மையே நமக்கு உணவாக தரப் போவதற்கான முன் அடையாளம் மாட்டுத்தீவன தொட்டி.
பிறந்த தெய்வக் குழந்தையை காண வசதியுள்ளவர்கள் யாரும் வரவில்லை,
ஏழைகளாகியஇடையர்களையும்,
கீழ்த்திசை ஞானிகளையும் தவிர.
யூதர்களின் சார்பாக இடையர்கள்.
புற இனத்தார் சார்பாக ஞானிகள்.
யூதர்களின் மீட்பிற்காக மட்டுமல்ல,
அகில உலக மக்களின் மீட்புக்காக
தான் பிறந்திருப்பதை இவ்வாறு இயேசு நமக்கு தெரிவிக்கிறார்.
பாடுகள் தொடர்கின்றன.
உலகையே படைத்து காப்பாற்றி வரும் இறைவன்
ஏரோது மன்னனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எகிப்துக்கு செல்கிறார்.
தாயும் மகனும் கழுதையில் செல்ல சூசையப்பர் நடந்து செல்கிறார்
மூன்று ஆண்டுகள் எகிப்தில் நாடோடி வாழ்க்கை.
மகனின் பாடுகளில் அன்னையும் வளர்ப்புத் தந்தையும் பங்கு பெறுகிறார்கள்.
மூன்று ஆண்டுகள் கழித்து வீட்டுக்கு திரும்பிய பின் இயேசு நாசரேத்து ஊரில் மரியாளுக்கும் சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்.
சூசையப்பர் இறந்தபின் அவர் செய்த தச்சு வேலையை இயேசு தொடர்ந்து செய்கிறார்.
பொது வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அவரது பாடுகள் தொடர்கின்றன.
அவர் இறைவன். பாவ மாசற்றவர். ஆகவே அவர் ஞானஸ்நானம் பெற வேண்டிய அவசியமே இல்லை.
ஆனாலும் அவர் நமது பாவங்களை தன் மேல் சுமந்து அவற்றுக்கான பரிகாரத்தை செய்வதற்காக உலகிற்கு வந்தமையால்
அவரே தாழ்ச்சியோடு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெறுகிறார்.
அவர் நோன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் நமது பாவங்களுக்கு பரிகாரமாக அவர் நாற்பது நாட்கள் நோன்பு இருக்கிறார்.
மனிதர்களுக்குத் தான் சாத்தான் மூலம் சோதனைகள் வரும்.
நமது பாவங்களுக்கு பரிகாரமாக அவரே சோதனைகளைச் சந்திக்கிறார்.
மனிதர்களை மீட்பதற்காகவே உலகில் மனிதனாய் பிறந்தமையால் அவரது ஒவ்வொரு அசைவும் நம்முடைய மீட்பையே மையமாகக் கொண்டிருந்தது.
உலகிற்கே உரிமையாளரான அவர் தலைசாய்க்க இடம் இல்லாத அளவிற்கு ஏழையாகி நற்செய்திப் பணி ஆற்றுகிறார்.
சென்ற இடம் எல்லாம் நன்மையே செய்து வந்தாலும் அவருடைய விரோதிகள் அவரைக் கொல்வதற்கு தொடர்ந்து நேரம் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
அதற்கான நேரம் பெரிய வெள்ளிக்கிழமையன்று வந்தது.
இயேசுவை நினைத்தவுடன் நமக்கு ஞாபகத்திற்கு வரவேண்டியது பெரிய வெள்ளிக்கிழமை.
ஆனால் நம்மில் அநேகருக்கு.........
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment