Saturday, February 13, 2021

இயேசு மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் மனிதன் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரம் செய்து அவனை மீட்பது மட்டும்தான்.(தொடர்ச்சி)

இயேசு மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் மனிதன் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரம் செய்து அவனை மீட்பது மட்டும்தான்.
(தொடர்ச்சி)


எப்படி இந்தியாவின் சுதந்திரம் என்றவுடனே 1947 ஆகஸ்ட் 15 ஞாபகத்துக்கு வருகிறதோ,

 அதேபோல 

இயேசுவை நினைத்தவுடன் ஞாபகத்திற்கு வர வேண்டியது பெரிய வெள்ளிக் கிழமை.

ஏனெனில், 

இயேசு, சிலுவை மரணம், வெள்ளிக்கிழமை, உலக மீட்பு என்ற என்ற 4 உண்மைகளும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கவே முடியாதவை

இயேசு 

வெள்ளிக்கிழமை அன்று

 சிலுவையில் மரணம் அடைந்து

 உலகத்திற்கு மீட்பை அறிவித்தார்.

ஆதி மனிதன் பாவம் செய்த அன்று மூடப்பட்ட மோட்சத்தின் வாசல் 

இயேசு புனித வெள்ளி அன்று சிலுவையில் உயிர் விட்ட வினாடி திறக்கப்பட்டது.

அதே வினாடியில்தான் பழைய ஏற்பாட்டின் போது வாழ்ந்து மரித்த புண்ணியவான்கள் விண்ணக நிலையை அடைந்தனர்.


ஆனால் நம்மில் அநேகருக்கு இயேசுவை நினைத்தவுடன்

 அவர் செய்த புதுமைகள்,

 அவர் குணமாக்கிய வியாதிகள்,

 ஐயாயிரம் பேருக்கும், நாலாயிரம் பேருக்கும் அவர் அளித்த உணவு,

 அவரது ஆறுதலான வார்த்தைகள் மட்டுமே ஞாபகத்துக்கு வருகின்றன.

ஒருவர் பசியால் வாடிய மற்றொருவருக்கு உணவளித்து பசியை நீக்கினார் என்று வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது நபருக்கு முதல் நபரை நினைத்தவுடன் எது ஞாபகத்திற்கு வர வேண்டும்?

முதலில் ஞாபகத்திற்கு வரவேண்டியது பசி நீங்கியது.
அடுத்து வரவேண்டியது உணவு.

அதேபோல்தான் இயேசுவை நினைத்தவுடன் முதலில் ஞாபகத்திற்கு வரவேண்டியது அவர் நமக்கு அருளிய மீட்பு.

அடுத்து வரவேண்டியது அவர் செய்த மற்ற உதவிகள் .

இயேசு அவரது பொது வாழ்வின்போது 

புதுமைகள் செய்தார்,

 நோய்களைக் குணமாக்கினார்,

 பேய்களை ஓட்டினார்,

ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்,

ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்தார்.

இதையெல்லாம் முழுக்க முழுக்க உண்மைதான்.

ஆனால் அவர் உலகிற்கு வந்தது புதுமைகள் செய்ய அல்ல,

 நோயாளிகளைக் குணமாக்க அல்ல, 
'
மக்களுக்கு உணவு அளிக்க அல்ல.

அவர் வந்ததன் ஒரே நோக்கம் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக சிலுவையில் தன்னையே பலியாக்கி நம்மை மீட்பதற்காகத் தான்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் 
.
தனது பாடுகளை மையமாக வைத்துதான் 

புதுமைகள் செய்தார், 
நோய்களை குணமாக்கினார், 
பேய்களை ஓட்டினார், 
உணவு அளித்தார்.

ஒரு சிறிய ஒப்புமை:

நாம் உலகில் வாழ்கிறோம். 

வாழ்வதற்காக உணவு உண்கிறோம்,
உணவு உண்பதற்காக வாழவில்லை.

வாழ்வதற்காக வேலைக்கு போகிறோம்.
வேலைக்குப் போவதற்காக வாழவில்லை.

வாழ்வதற்காக வீடு கட்டுகிறோம், 
வீடு கட்டுவதற்காக வாழவில்லை.

அதே போல்தான்,

அவர் பட்ட பாடுகளின் பலனை நாம் அடைவதற்கு ஆதாரமாக இருக்க வேண்டிய விசுவாசத்தை ஊட்டி வளர்ப்பதற்காகத்தான் அவர் புதுமைகள் செய்து, நோய்களை குணமாக்கினார்.

புதுமைகள் செய்து, நோய்களை குணமாக்குவதற்காக
பாடுகள் பட்டு நம்மை மீட்கவில்லை. 

அப்படியானால் உண்மையான கிறிஸ்தவனின் வாழ்க்கை எதை மையமாக கொண்டிருக்க வேண்டும்?

 மீட்பையா?
 நோயற்ற வாழ்வையா?  


மீட்பையா?
 கவலைகள் இல்லாத வாழ்வையா?


மீட்பையா? 
கடன் அற்ற வாழ்வையா?

மீட்பையா? 
குழந்தை செல்வங்களையா?

இப்பொழுதெல்லாம் நம்மவர்களைக் கவர்ந்து இழுப்பது 

"குணமளிக்கும் நற்செய்தி கூட்டங்கள்."

"குணமளிக்கும் ஆவிக்குரிய கூட்டங்கள்."

இக் கூட்டங்களின் மையமாகவும் நோக்கமாகவும் இருப்பது குணமளிப்பது மட்டுமே,


இத்தகைய கூட்டங்களை முதல் முதலில் ஆரம்பித்தது பிரிவினைச் சபையினர்.

நோய்களிலிருந்து குணமடைய விரும்புகிறவர்கள்,

கடன் தொல்லைகளிலிருந்து விடுபட விரும்புகிறவர்கள் ,

 வாழ்க்கையின் கவலைகளில் இருந்து விடுதலை பெற  விரும்புகிறவர்கள்.

 குழந்தைச்செல்வம் வேண்டியவர்கள்


 இன்னும் அநேக ஆறுதல்களைப் பெற ஆசிப்பவர்கள்

இக் கூட்டங்களுக்கு படை எடுக்க ஆரம்பித்தார்கள்.

சுகம் பெற விரும்பும் நம்மவர்களும் அக்கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.

பிரிவினை சபையாரின் சுகமளிக்கும் கூட்டங்களுக்கு படை எடுக்கும் நம்மவர்களை தடுத்து நிறுத்துவதற்காக

நம்மவர்களும் குணமளிக்கும் நற்செய்தி கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார்கள்.

ஆனால் நமது கத்தோலிக்க விசுவாசிகள் பயங்கர கில்லாடிகள்.

நம் கூட்டங்களுக்கும் வருவார்கள், தொடர்ந்து அவர்கள் கூட்டங்களுக்கும் செல்வார்கள்.

ஏன் என்று கேட்டால்

" இயேசு அழைக்கிறார்"

 என்பார்கள்.

முன்காலத்தில் கத்தோலிக்க திருச்சபையில் தியானக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது.


 சாதாரண மக்களுக்கு 3 நாள் தொடர்ந்து தியானம் இருக்கும்.

தியான நாட்களில் யாரும் வீட்டுக்கு வர முடியாது.

 மூன்று நாளும் மௌனம் காக்க வேண்டும்.

 பாவ சங்கீர்த்தனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

மூன்றாம் நாள் சங்கீர்த்தனத்திற்கான நாளாகத்தான் இருக்கும்.

தியானங்களுக்கு பாவ நிலையில் செல்பவர்கள் தியான முடிவில் பரிசுத்தமானவர்களாக மன சமாதானத்தோடு வீட்டிற்கு திரும்புவார்கள்.
'
பாவங்களிலிருந்து மீட்பு பெறுவது மட்டும்தான் தியானங்களின் நோக்கம்.

இப்போது தியானங்களின் இடத்தை குணமளிக்கும் கூட்டங்கள் பிடித்துக்கொண்டன.

உடல் நோய் உள்ளவர்கள் சுகம் பெறுவதற்காகவே இக்கூட்டங்களுக்கு விரும்பி செல்கிறார்கள். 

நோய்கள் குணமாவதாக சொல்லுகிறார்கள்.

நம்மவர் நடத்தும் நற்செய்திக் கூட்டங்களில் பாவ சங்கீர்த்தனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது,

 பிரிவினைச் சபையினருக்கு பாவ சங்கீர்த்தனத்தில் நம்பிக்கை கிடையாது. அதைப்பற்றி அங்கு செல்பவர்களுக்கு கவலையும் கிடையாது.

 இயேசு எப்போதுமே

" எல்லோரும் என்னிடம் வாருங்கள்.

 உங்களை நோய் நொடி இல்லாமல் காப்பாற்றுவேன்.

 கடன் தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்வேன்.

 நீங்கள் விரும்பும் அளவு குழந்தை பாக்கியம் கொடுப்பேன் "

போன்ற உலக செல்வங்களை பற்றி வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை.


அவர் கொடுத்த வாக்குகள் எல்லாம் நமது ஆன்மீக மீட்பு சம்பந்தப்பட்டவை.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே

 எல்லோரும் என்னிடம் வாருங்கள். 

உங்களை நான் இளைப்பாற்றுவேன்.


29 உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். 

ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்.

 உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்.


30 ஆம், என் நுகம் இனிது, என் சுமை எளிது."

இதுவும் இத்தகைய வாக்குகளும் முழுக்க முழுக்க ஆன்மிகம் சம்பந்தப்பட்டவை.

"உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்."

என்ற இயேசுவின் வார்த்தைகளே இதை நிரூபிக்கும்.

"எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்."

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:31, 33)

முதலில் இறைவனின் அரசை தேட வேண்டும். உலக சம்பந்தப்பட்ட தேவைகள் இறைவனாலேயே கொடுக்கப்படும்.

நாம் இறையரசைத் தேடுவதையே நமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் உலக சம்பந்தப்பட்ட வசதிகள் இறைவனாலேயே கொடுக்கப்படும். 

நாம் இவ்வுலகிற்கு வந்தது நமது ஆன்மீக வாழ்விற்காக மட்டுமே.

நமது உலக வாழ்வு ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருப்பதற்கு மட்டுமே.

நமது ஆன்மீக வாழ்வுக்காக இவ்வுலக வாழ்வை தியாகம் செய்யலாம்.

ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் உலக வாழ்விற்காக ஆன்மீகத்தை தியாகம் செய்ய கூடாது.

 அப்படி செய்பவன் நரகத்திற்காக விண்ணகத்தை தியாகம் செய்பவன் ஆவான்.


"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(மத்.16:24)

உலக துன்பங்களை இயேசுவுக்காக ஏற்றுக் கொள்பவன் மட்டுமே அவரது சீடனாக இருக்க முடியும்.

அதை இப்படியும் சொல்லலாம்:

உண்மையான கிறிஸ்தவன் தனது வாழ்க்கையில் வரும் துன்பங்களை இயேசுவுக்காக நல்ல மனதோடு ஏற்றுக் கொள்வான். 


அப்படி இருக்கும்போது துன்பங்கள் வாழ்க்கையில் வரக்கூடாது என்பதற்காகவே சுகமளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களா?

கடன் தொல்லைகளில் இருந்து மீள்வதற்காகவே சுகமளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள்?

பாவ மன்னிப்பு பெறுவது பற்றி கவலைப்படாமல் உலக சந்தோசங்களுக்காக மட்டும் சுகமளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள்?

ஆன்மீக மீட்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்பவனே உண்மையான கிறிஸ்தவன்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment