Thursday, February 4, 2021

*அவர்களோ அவர் கடல் மீது நடப்பதைக் கண்டு பூதமென்று எண்ணி அலறினர்*(மாற்கு,6:49)

*அவர்களோ அவர் கடல் மீது நடப்பதைக் கண்டு பூதமென்று எண்ணி அலறினர்*
(மாற்கு,6:49)



இயேசு தன்னுடைய 12 சீடர்களையும் இருவர் இருவராக போதிக்க அனுப்பும் போது

 அவர்களுக்கு அசுத்த ஆவிகளின்மேல் அதிகாரம் அளித்தார்.(மாற்கு6:7)

அவர்களும் போதிக்க சென்ற இடத்தில் பேய்கள் பலவற்றை 
ஓட்டியிருக்கின்றார்கள்.

  தாங்கள் போதித்தது முடிந்தவுடன் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தது, போதித்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர்.

அவர்கள் பேய்களை ஓட்டியதையும் சொல்லியிருப்பார்கள்.

ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் 5000 பேருக்கு பகிர்ந்து அளித்தபின் இயேசு தன் சீடர்களை படகில் அனுப்பிவிட்டு ஜெபிக்க செல்கிறார்.

இயேசு ஜெபித்து விட்டு கடல் வழியே நடந்து வருகிறார்.

அவர் கடல்மேல் நடந்து வருவதை பார்த்த அப்போஸ்தலர்கள் அவரைப் பூதமென்று எண்ணி அலறுகிறார்கள்.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்புதான் அவர்கள் போதிக்க சென்ற இடங்களில் உண்மையான பேய்களை ஓட்டியிருக்கின்றார்கள்.


ஆனால் இப்போது அவர்கள் இயேசுவைப் பார்த்து பூதமென்று எண்ணி அலறினார்கள்.

பேய்களை ஓட்டும் வரம் அவர்களுக்கு இருந்தும் அதை பயன்படுத்த ஞாபகம் வரவில்லை.

உண்மையிலேயே வருவது பூதம் என்று நினைத்திருந்தால் இயேசு தங்களுக்கு தந்திருந்த வரத்தை கொண்டு அவர்கள் அதை விரட்ட துணிந்திருக்க வேண்டும்.

இயேசுவும் அவர்களை பார்த்து சிரித்திருப்பார்

ஆனால் அதைச் செய்யாமல் அவர்கள் அலறியதைப் பார்த்து இயேசு,

 "தைரியமாயிருங்கள், நான் தான், அஞ்சாதீர்கள்" என்றார்.

இயேசு செய்த அப்பங்களின் புதுமையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.

நற்செய்தியாளர் இந்த விபரங்களை எல்லாம் நமக்கு தருவதற்கு காரணம் 

நாம் மழுங்கிய உள்ளம் உள்ளவர்களாக இருக்கக்கூடாது என்பதை நமக்கு 
அறிவுறுத்துவதற்காகத்தான்.

நாமும் அநேக சமயங்களில் இயேசுவைப் பார்த்து பேய் என்று பயந்து இருக்கிறோம்.

இயேசு நாம் சுமப்பதற்காக அவரது சிலுவையில் ஒரு சிறு துண்டை நமக்கு தரும்போது,

அதில் இயேசுவை பார்ப்பதற்கு பதிலாக 

பேயைப் பார்த்து அதை விரட்டுவதற்கு இயேசுவையே போய் கெஞ்சுகிறோம்.

அதாவது இயேசுவை நம்மால்   அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

ராணுவத்திற்கு ஆள் எடுக்கும்போது முதலிலேயே பலவிதமான பரிசோதனைகள் செய்து பொருத்தமானவர்களையே எடுப்பார்கள். 

எடுத்த பின் கடுமையான பயிற்சி கொடுப்பார்கள்.

அப்பயிற்சிகள் பூ மெத்தை மீது நடந்தது போல் இருக்காது.

எதிரியோடு யுத்தம் புரியும் போது என்ன என்ன கஷ்டங்கள் வரும் என்பதை முன்பே உணர்ந்து 

 அதற்காக நம்மை  தயாரிப்பதற்காகத்தான் கஷ்டமான பயிற்சியைக் கொடுக்கின்றார்கள்.

நமக்கு பயிற்சி கொடுப்பவர்களே எதிரிகள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது.

ஆனால் நமது ஆன்மீக வாழ்வில் நாம் அதைத்தான் அடிக்கடி செய்கிறோம்.

சாத்தானுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவதற்காக நமக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தோடு 

இயேசுவே நமக்கு அதிக சோதனைகளையும் கஷ்டங்களையும் அனுமதிக்கிறார்.

சோதனைகளை பார்த்து பயப்படாமல் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தை 

அவற்றை நமக்கு அனுமதித்த இயேசுவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்கு வரும் துன்பங்களையும் சகித்துக் கொண்டு, விண்ணகப் பயணத்தை உற்சாகத்தோடு தொடர வேண்டும்.

சோதனைகளில் நாம் விழுந்து விடாதபடி தைரியத்தை இயேசுவிடம் கேட்டு பெற வேண்டும்.

நமக்கு சோதனைகள் வரும் என்பதை அறிவுறுத்துவதற்காகத்தான் இயேசுவே தன்னை சோதனைக்கு உட்படுத்தி நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார்.

இறைவாக்கை பயன்படுத்தியே சாத்தானை விரட்டினார்.

மீட்புப் பெற வேண்டுமென்றால் துன்பப்பட்டே ஆக வேண்டும் என்பதை அவரது வாழ்க்கை மூலமாகவே  செய்து காண்பித்தார்..

சிலுவை இல்லாவிட்டால் உயிர்ப்பும் இல்லை.

பாடுகள் இல்லாவிட்டால் பரலோகமும் இல்லை.

வகுப்பில் ஒரு நாள்

"சார் ஒரு சின்ன சந்தேகம்."

"கேளு."

"வன்முறையால் வெற்றி பெற முடியுமா?'

"முடியாது."

"அப்போ நீங்கள் ஏன் வன்முறையை பயன்படுத்துகிறீர்கள்?"


''நான் வன்முறையை பயன்படுத்துகிறேனா?"


"உங்களிடமிருந்து நாங்கள் வாங்கும் பிரம்படி களும், நவுட்டான் பழங்களும் ருசியாகவா இருக்கின்றன?


நீங்கள் வகுப்பிற்குள் பிரம்புடன் நுழையும்போது கையில் கத்தி வைத்துக்கொண்டு வருவது மாதிரி இருக்கிறது."


"சார் நீங்கள் கத்தி, கத்தி பாடம் நடத்துவது அவனுக்கு உங்கள் கையில் மட்டுமல்ல வாயிலும் கத்தி இருப்பது மாதிரி தோன்றுகிறதாம் சார்.''

"கட்டாயம் தோன்றும். களிமண்ணை பிசைந்து பொம்மை செய்யலாம்.

இரும்புக் கம்பியை பிசைந்து சங்கிலி செய்ய முடியுமா?

 தங்கத்தை நெருப்பில் போடாமல் நகை செய்ய முடியுமா?

துணியை வெட்டாமல் சட்டை தைக்க முடியுமா?

உழவு உழாமலும், மண்வெட்டியை கொண்டு வெட்டாமலும் பயிர்த்தொழில் செய்ய முடியுமா?

அரிவாள் இல்லாமல் அறுவடை செய்ய முடியுமா?

கத்தி இல்லாமல் காய்கறி வெட்ட முடியுமா?

பிரம்பு இல்லாமல் உங்களை படிக்க வைக்க முடியுமா?

அம்மா சமையலறையில் செய்வது வன்முறை என்றால் நான் செய்வதும் வன்முறைதான்."

"அது மட்டும் இல்லை, சார்.

 அவன் கரும்பு தின்னும்போது பல்லைக் கொண்டு கரும்பை என்ன பாடு படுத்துகிறான் தெரியுமா?"

"அது மட்டுமா சார், அவனுடைய அப்பா எப்போதும் கத்தியும் கையுமாகத்தான் அலைகிறார்."

"அப்படியால?"

"அவர் ஒரு operation specialist, சார்."

"இப்போ சொல்லு ஆசிரியர் செய்வது வன்முறையா?"

"இல்லை சார்."

"சார், அவன் கேள்வி கேட்டதே உங்கள் நேரத்தை வீணாக்குவதற்காகத்தான்."

"இல்லை. ஒரு பாடம் கற்பிப்பதற்காகத்தான்.

உங்களை உருவாக்க ஆசிரியர் பிரம்பைப் பயன்படுத்துவதைப் போல,

 கடவுள் தான் படைத்த மனிதர்களை நல்லவர்களாக உருவாக்குவதற்காக துன்பங்களைப் பயன்படுத்துகிறார்.

வாழ்க்கையில் நமக்கு வரும் துன்பங்களுக்கு ஒரு நோக்கம் உண்டு.

 கடலில் படகில் பயணம் செய்து கரையை அடைவது போல,

உலகமாகிய கடலில், துன்பமாகிய படகில் பயணம் செய்துதான் விண்ணகமாகிய கரையை அடைய வேண்டும்.

டாக்டர் மவன, புரியுதா?"

"புரியுது, சார்."
"


"அண்ணாச்சி!"

"தம்பி, சொல்லு."

"துன்பத்தை பார்த்தால் சிலுவை ஞாபகத்திற்கு வரவேண்டும்..

 சிலுவையை பார்த்தால் இயேசு ஞாபகத்திற்கு வரவேண்டும் என்று சொன்னீர்கள்

 அதாவது துன்பத்தை பார்த்தால் இயேசு ஞாபகத்திற்கு வரவேண்டும்.

 அதாவது துன்பத்தில் இயேசுவை பார்க்க வேண்டும் என்று சொன்னீர்கள்."

"ஆமா அதுல உனக்கு என்ன பிரச்சனை?"

"பிரச்சனை எதுவும் இல்லை.

ஒரு வியாதி வருகிறது.

 உங்களது கூற்றுப்படி, அதில் இயேசுவை காண வேண்டும்.

 ஆனால் அந்த வியாதி குணமாகும் படி மருத்துவம் பார்க்க வேண்டாம் என்று இயேசு கூறவில்லை.

 அவரிடம் சென்று "வியாதியை குணமாக்கும் என்று கேட்கவும் கூடாது" என்றும் இயேசு கூறவில்லை.

 நாம் மருத்துவம் பார்க்கிறோம். இயேசுவையும் வேண்டுகிறோம்,

 அப்படியானால் வியாதியில் காணும் இயேசுவை வெளியே போக சொல்கிறோமா?"

"சொல்பவர் சொல்லும் பொருளை காணாமல் அவரது வார்த்தைகளின் அகராதி பொருளை மற்றும் காண்பதால் வரும் வினை இது.


சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பேசுகிறாய். உனது அப்பா "வாயை பொத்திக் கிட்டு சாப்பிடுல" என்று கூறுகிறார். 

அகராதிப்படி வாயைப் பொத்த வேண்டும். பொத்திய நிலையிலேயே சாப்பிட வேண்டும். இது எப்படி முடியும் என்று அப்பாவிடம் பொத்திய வாயை கொண்டு கேட்கவும் முடியாது. இப்போது நீ என்ன செய்வாய்?"

"வாயை பொத்திக் கிட்டு சாப்பிடுல" என்றாள் பேசாமல் சாப்பிடு என்றுதான் பொருள். நான் பேசாமல் சாப்பிடுவேன்."

"சாப்பாட்டு விஷயத்தில் சரியாக பொருளை கண்டுபிடிக்க முடிகிறது.

 ஆன்மீக காரியங்களில் மட்டும் தவறு தவறாக யூகிக்க முடிகிறது. அது ஏன் என்று தெரியவில்லை.

நமக்கு துன்பம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அப்படியே இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் இயேசு விரும்புகிறார்.

இனி அதைப்பற்றிய பிரச்சனை அவர் பாடு.

நீ அவரிடம் வேண்டும் போது "உமக்கு சித்தம் இருந்தால் இந்த வியாதியை என்னை விட்டு நீக்கும்" என்று தான் வேண்ட வேண்டும்.

கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்க்கும் போது இயேசு நமக்கு சொல்லி தந்த பாடம்.

இந்த மனநிலையோடுதான் மருத்துவரை அணுக வேண்டும்.

நாம் மருத்துவம் பார்ப்பதையும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து கொண்டேதான் பார்க்க வேண்jடும்.

நமது மனநிலை 'என்ன நடந்தாலும் இயேசுவின் பாடு" என்ற ரீதியிலேயே இருக்கவேண்டும்.

அவருக்கு விருப்பம் இருந்தால் வியாதி குணமாகும்.

வியாதியின் விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டும் என்பது
 அவரது சித்தமாக இருந்தால் நீடிக்கும்.

குணமானாலும் இயேசுவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

குணம் ஆகாவிட்டாலும் இயேசுவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இது இயேசுவின் சீடனுக்கு இருக்கவேண்டிய ஆன்மீக மனப்பக்குவம்.

புரிகிறதா, தம்பி."

நம் வாழ்வில் எது நடந்தாலும் அது இயேசுவின் சித்தத்தினால்தான் நடக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டால் நம்முடைய மனதில் எப்போதும் ஆன்மீக மகிழ்ச்சி இருக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment