(தொடர்ச்சி)
"திருமுழுக்கு பெற்று விட்டோம். பரிசுத்த ஆவி நம்மோடு தான் இருக்கிறார். நாமும் அவருடனேயே இருக்கிறோம்.
கடைசிவரை அதே பரிசுத்த ஆவி தான். அதே நாம்தான்.
அவர்தான் நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பார்.
பிறகு எதுக்குங்க வேறு திருவருட்சாதனங்கள்?"
"ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் குழந்தையாய் இருக்கும்போது இருந்த அதே உடல் தான். இப்பொழுதும் உங்களிடம் இருக்கிறது....."
"போதும் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது தெரிகிறது.
ஆனால் அதே உடல் அப்படியே இல்லையே. வளர்ந்துவிட்டதே."
"உடலுக்கு மட்டும் இல்லீங்க, ஆன்மாவுக்கும் வளர்ச்சி உண்டு."
"உடல் சடப்பொருள். அது உருவத்தில் வளர்கிறது. ஆன்மா ஆவி ஆயிற்றே, அது எப்படி வளரும்?"
"ஆன்மா பரிசுத்தத்தனத்தில் வளர வேண்டும். அந்த வளர்ச்சியில் பல படிகள் இருக்கின்றன.
ஒவ்வொரு படியிலும் ஆன்மா வித்தியாசமான சூழ்நிலைகளைச் சந்திக்கும்.
சில சூழ்நிலைகள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும். சில எதிராக இருக்கும்.
எப்படி உடல் வளர வளர வித்தியாசமான உணவு வகைகள் தேவைப் படுகின்றனவோ,
அதேபோல ஆன்மாவின் வளர்ச்சியிலும் பரிசுத்த ஆவியின் வித்தியாச வித்தியாசமான அருள் உதவிகள் தேவைப்படும்.
அதற்காகத்தான் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு திருவருள் சாதனம்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் உடல் பயிற்சி செய்கிறீர்களே. எதற்காக?"
"உடல் உறுதி பெறுவதற்காக."
"ஆன்மாவும் அதனுடைய பரிசுத்த தனத்தின் வளர்ச்சியில் உறுதியாக இருக்க வேண்டாமா?
ஆன்மா வளர முயலும்போது சாத்தான் அதன் வளர்ச்சியில் பல முட்டுக்கட்டைகளை போடும்.
அவற்றை முறியடிக்க ஆன்மா உறுதியாக, திடமாக இருக்க வேண்டாமா?
அதற்கான அருள் வரங்களை அள்ளித் தருவதற்காகத்தான் உறுதிபூசுதல் என்னும் அருள் அடையாளத்தை இயேசு ஏற்படுத்தினார்.
அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றாலும்
ஆண்டவரின் பாடுகளின் பயந்து போது அவரைவிட்டு ஓடிவிட்டது நமக்கு தெரியும்.
உடனிருந்த இராயப்பரும் ஆண்டவரை மூன்று முறை மறுதலித்தார்.
அருளப்பர் எப்படியோ சிலுவை அடிவாரத்திற்கு வந்துவிட்டார்.
ஆண்டவர் உயிர்த்த பின்பும் கூட அதை நம்ப தயங்கினார்கள்.
அப்போஸ்தலர்களின் செயல்கள் அவர்களது உறுதி இன்மையை காட்டுகின்றன.
அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதற்காகவே பெந்தேகோஸ்தே திருநாளன்று பரிசுத்த ஆவியே அவர்கள் மேல் இறங்கினார்.
அதாவது பரிசுத்த ஆவி அவர்களை திடப் படுத்தினார்.
திடப் படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் பயமில்லாமல் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.
அதே திடத்தை நமக்கு அளிப்பதற்காகவே உறுதிப்பூசுதலின்போது பரிசுத்த ஆவியே நம் மேல் இறங்கி வருகிறார்.
அதாவது நாம் பரிசுத்த ஆவியின் அருள் கொடைகளை பெறுகிறோம்."
"இப்பொழுது எனக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வருகிறது.
இயேசு கடவுள். பரிசுத்த ஆவி கடவுள். அதே கடவுள்
பெந்தேகோஸ்தே அன்று பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்களைத் திடப் படுத்தினார் அல்லவா,
அதே திடப்படுத்துதலை சர்வ வல்லப கடவுளாகிய இயேசு மூன்று ஆண்டுகளில் ஏன் செய்யவில்லை.
செய்திருந்தால் அப்போஸ்தலர்கள் ஆண்டவர் பாடுபடும்போது அவரை விட்டு ஓடியிருக்க மாட்டார்களே!"
"நீங்கள் கேட்பது எப்படி இருக்கிறது தெரியுமா?
குழந்தையாய் பிறந்து கஷ்டப்பட்டு தானே வளரவேண்டியிருக்கிறது,
பிறக்கும்போதே பெரிய ஆளாய் பிறக்க வைத்திருக்கலாமே,
கடவுளுக்கு அதற்குரிய சக்தி இருக்கிறதே.
அதை ஏன் செய்யவில்லை?"
என்று கேட்பதுபோல் இருக்கிறது.
இதே மாதிரிதான் இன்னொரு நண்பரும் கேட்டார்.
கடவுள் நம்மை உலகத்தில் படைத்து, பல ஆண்டுகள் வாழவிட்டு, விண்ணகத்திற்கு வழிநடத்தி செல்வதற்குப் பதிலாக நம் எல்லோரையும் முதலிலேயே விண்ணகத்திலேயே
படைத்திருக்கலாமே!
அவரும் மனிதனாய் பிறந்து பாடுபட்டு மரித்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே!
இதுவும் நியாயமான கேள்வி தானே!"
"அது எப்படிங்க நியாயமாகும்?
கடவுள் மட்டும்தான் மாறாதவர், மாற முடியாதவர், ஏனெனில் நிறைவானவர்.
படைக்கப்பட்ட பொருள்கள் எப்படி அவரைப் போல் நிறைவானவையாய் இருக்க முடியும்?
நாம்தான் வளர வேண்டும். நமது வளர்ச்சி இயல்பானதாய் இருக்க வேண்டும், கடவுள் நமது வளர்ச்சிக்கான உதவிகள் மட்டுமே செய்வார். வளர வேண்டியது நாம் தானே! அதில்தானே ஒரு thrill இருக்கிறது.''
"அப்போ பதிலை வைத்துக்கொண்டே கேட்டிருக்கிறீர்கள்.
முழுவதையும் சொல்லிவிடுங்கள்."
"அப்போஸ்தலர்களுக்கு ஆண்டவர் பயிற்சி கொடுத்தார்.
பயிற்சி இயல்பானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுத்தவரும், பெந்தகோஸ்தே திருநாள் என்று அவர்களுக்கு திடத்தைக் கொடுத்தவரும் ஒரே கடவுள் தான்.
கடவுள் அவரது திட்டப்படி செயல்படுகிறார்.
அவரது திட்டத்தைப் பற்றி கேட்க வேண்டுமென்றால் அவரிடம்தான் கேட்க வேண்டும். உங்களிடம் கேட்டது தப்பு தான்.
விண்ணகம் செல்லும்போது எனக்கு இதை ஞாபகப்படுத்துங்கள்.
கடவுளிடமே கேட்டுக்கொள்கிறேன்.
இப்போ நமக்குத் தெரிந்ததை பற்றி பேசுவோம்.
திருமுழுக்கிற்கு தண்ணீர் வெளி அடையாளமாக இருப்பதுபோல உறுதிபூசுதலின் வெளி
அடையாளம் எது?"
"ஆயர் உறுதிப்பூசுதல் பெற வேண்டியவரின் மேல் கைகளை வைத்து புனித தைலத்தைப்பூசி,
“Be sealed with the Gift of the Holy Spirit"
என்று சொல்லுவார்.
(The matter is the imposition of hands and anointing with chrism.
The form is “Be sealed with the Gift of the Holy Spirit.”)
இந்த வெளி அடையாளங்கள் நிகழும்போது நமது ஆன்மாவில் பரிசுத்த ஆவி நமக்கு ஆன்மீக திடத்திற்கான வரங்களை கொடுத்துக் கொண்டிருப்பார்.
ஆன்மாவின் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்."
"உறுதிபூசுதலின் போது நமக்குள் ஏற்படும் ஆன்மீக மாற்றம் என்ன?"
" உறுதிபூசுதலின்போது திருமுழுக்கில் நாம் பெற்ற விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது.
சாத்தானை எதிர்த்து வீரமுடன் போராடும் போர் வீரர்களாக நாம் மாறுகிறோம்.
நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போரில் நாம் நன்மையின் பக்கம் நின்று தீமையை எதிர்த்து போராடும் சக்தியை பெறுகிறோம்.
ஒளிக்கும், இருளுக்கும் நடக்கும் போரில் நாம் ஒளியின் பக்கம் நின்று இருளை எதிர்த்து போராடும் சக்தியை பெறுகிறோம்.
உறுதிபூசுதலின்போது நமது விசுவாசத்தை பாதுகாப்பதற்கான மற்றும் நமது இறுதி முடிவை நோக்கி பயணிப்பதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறோம்.
Confirmation means accepting responsibility for our faith and destiny.
நமது பொறுப்பை சரிவர நிறைவேற்ற பரிசுத்த ஆவி நமக்கு அவருடைய அருள் கொடைகளை தருவார்.
குழந்தையாய் இருக்கும்போது நமது பெற்றோரின் வழி நடத்தும்படி அப்படியே நடப்போம்.
ஆனால் வயது ஆக ஆக நாம் நாமாகவே பொறுப்புடன் செயல்பட வேண்டியிருக்கும்.
எது சரியோ அதை தெரிவு செய்து செயல்படுத்த வேண்டி இருக்கும்.
அதற்கு பரிசுத்த ஆவியின் அருள் வரங்கள் நமக்கு உதவியாக இருக்கும்,
உறுதிப்பூசுதல் பெற்றபின் நாம் ஒவ்வொரு விநாடியும் பரிசுத்த ஆவியினாலே வழிநடத்தப்படுவோம்.
அன்று அப்போஸ்தலர்களுக்கு ஆன்மீக திடத்தை கொடுத்து அவர்களை வழிநடத்தியது போல நம்மையும் அவரே வழிநடத்துவார்.
அவர் காட்டும் வழியே நடப்பதற்கான போதுமான அருள் வரங்களை தந்து கொண்டே இருப்பார்.
அதற்காக நம்மை முழுவதுமாக அவரிடமே ஒப்படைத்து விட வேண்டும்."
"உறுதிப்பூசுதலின்போது பரிசுத்த ஆவியானவர் நமக்கு தரும் கொடைகள் எவை?"
"தூய ஆவியார் அருளும் கொடைகள் ஏழு. அவை:
ஞானம், புத்தி, விமரிசை,. அறிவு
திடம், பக்தி, தெய்வ பயம்
wisdom, understanding, counsel, , knowledge,fortitude , piety, and fear of the Lord.
ஒவ்வொரு கொடையையும் பற்றி பேசும்போது, பரிசுத்த ஆவி நம்மிடம் எவ்வாறு செயலாற்றுகிறார் என்பது புரியும்."
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment