Monday, February 8, 2021

"இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?" (மாற்கு8:21)

"இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?" (மாற்கு8:21)


சீடர்கள்இயேசுவோடு படகில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திடீரென்று அப்பம் கொண்டுவர மறந்துவிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. 

படகில் ஒரே ஓர் அப்பந்தான் இருந்தது.

ஒரு அப்பம் 13 பேருக்கு போதாது.

இயேசு அவர்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தபோது அவர்கள் 

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். 

இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் அப்பம் இல்லை என்று பேசிக்கொள்வானேன்? 

இன்னுமா உணரவில்லை?

 இன்னுமா விளங்கவில்லை?

உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?

 கண்ணிருந்தும் காண்பதில்லையா? 

காதிருந்தும் கேட்பதில்லையா?

 உங்களுக்கு நினைவில்லையா?"

என்று கூறி அவர்களை கண்டிக்கிறார்.

இருமுறை அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்த புதுமையை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி 

இன்னும் உங்களுக்கு" விளங்கவில்லையா?" என்றார்.

ஐந்து அப்பங்களை கொண்டு. 5000 பேருக்கும்,

ஏழு அப்பங்களை கொண்டு 4000 பேருக்கும்உணவு கொடுத்தவர் அவர்களுடன் இருக்கும்போது 

சீடர்கள் 13 பேர் உணவிற்காக இப்படி விசுவாசம் இல்லாமல் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களே என்று இயேசு கவலைப் படுகிறார்.

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்க செல்வதற்காக இயேசு தனது சீடர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் முதலில் தான் சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதை உணர வேண்டும்.

அதன் அடிப்படையில் அவரது போதனைகளை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொண்டதை உலகெங்கும் சென்று எல்லா மக்களுக்கும் அறிவிக்க வேண்டும்

என்பதுதான் அவருடைய விருப்பம்.


ஆனால் அப்போஸ்தலர்கள் இயேசுவின் சிந்தனைகளையும் சொற்களையும் செயல்களையும் முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் மாதிரியே தெரியவில்லை.

 புரிந்து கொண்டிருந்தால்  

இயேசு அவர்களோடு இருக்கும் பொழுது

 சாப்பிட அப்பம் இல்லையே என்று கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.

சரி.  அப்போஸ்தலர்களின் செயலை அவர்கள் நமக்கு கற்பிக்கும் பாடமாக எடுத்துக் கொள்வோம்.


அப்போஸ்தலர்களை வழிநடத்திய அதே கடவுள்தான் இப்பொழுது நம்மையும் ஒவ்வொரு வினாடியும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

கடவுள்தான் நம்மை படைத்தார் என்று நமக்குத் தெரியும்.

கடவுள் அளவு கடந்த அன்பு உள்ளவர் என்று நமக்குத் தெரியும்.

கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்று நமக்குத் தெரியும்.

நமது ஒவ்வொரு அசைவும் அவரது நித்திய கால திட்டத்தின்படியேதான் நடக்கிறது என்று நமக்குத் தெரியும். 

அவர் நம்மை சரியான பாதையில்தான் வழி நடத்துகிறார் என்று நமக்குத் தெரியும்.

நமது நன்மையை தவிர அவருக்கு வேறு நோக்கம் இல்லை என்று நமக்குத் தெரியும்.

நாம் அவரைதான் முற்றிலுமாக நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுவும் நமக்குத் தெரியும்.

கடவுள் தன்னை நம்பினவர்களைக் கைவிடமாட்டார் என்பதுவும் நமக்குத் தெரியும்.

இவ்வளவும் தெரிந்தும் நாம் ஏன் நமது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டு நமது நிகழ்கால நேரத்தை வீணடிக்கிறோம்?

நிகழ்காலம் நம்முடையது. கடவுளுடைய சித்தப்படி நடப்பதிலேயே நமது கவனத்தைச் செலுத்துவோம்.

இறைவனில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

எதிர்காலம் நம்மைப் படைத்தவருடைய கையில்தான் இருக்கிறது.

அதைப்பற்றிய கவலை எதுவும் நமக்கு வேண்டாம்.

ஆழ்ந்த விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், அன்புசெய்து வாழ்பவர்களுக்கு 

எதிர்காலதில் நித்திய பேரின்ப நிகழ் காலம்  காத்திருக்கிறது. 

நிகழ் காலத்திலேயே வாழும் இறைவனோடு நித்திய நிகழ்காலத்தில் இணைந்து என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment