Friday, February 5, 2021

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது."(மாற்கு7:6)

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது."
(மாற்கு7:6)


"சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வரும்."

இது தமிழ்ப் பழமொழி.

'மனதில் இருப்பது தான் வெளியே வரும்."

இது அந்த பழமொழியின் புது மொழி.

அழைப்பின் பேரில் வீட்டிற்கு நிறைய விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் அடுப்பங்கரையில் உள்ள பானைகள் எல்லாம் empty.

விருந்தினர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது.

ஆண்டு முழுவதும் மனப்பாடம் செய்து படித்து விட்டு 

இறுதியில் தேர்வு எழுதச் செல்லும்போது படித்தது எல்லாம் மறந்து விட்டால் தேர்வு எழுதி பயன் இல்லை.

மனம் என்பது மனிதன் தனது எண்ணங்களைச் சேமித்து வைக்கும் இடம்.

மனம் உள்ளவன்தான் மனிதன். 

மிருகங்களுக்கு எண்ணங்களும் இல்லை, மனமும் இல்லை.

ஒரு மனிதன் தன் மனதில் சேமித்து வைத்திருக்கும் எண்ணங்கள்தான்

  அவன் நல்லவனா, கெட்டவனா, அறிவாளியா, முட்டாளா என்பதைத் தீர்மானிக்கின்றன.

மனதின் தன்மையை முகம் காட்டி விடும் என்பார்கள். 

ஆயினும் மனதில் உள்ளதை வாய்திறந்து ஒருவன் சொன்னால் தான் மற்றவர்களுக்கு தெரியும்.

மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு அதற்கு மாறாதனைச் சொல்பவர்களும் உண்டு.

உள்ளத்தில் உள்ளதை அப்படியே வாய்வழியே வெளியிடுபவன் வாய்மை உள்ளவன்.

இரகசியங்களைப் பத்திரமாக வைத்திருக்கும் இடமும்
 மனம்தான்.

மனதில் உள்ள இரகசியங்களை மற்றவர்களால் அறிய முடியாது.

ஆனால் இறைவனுக்கு நமது மனதில் உள்ளவை அனைத்தும் தெரியும்.

அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது.

நமது ஆழ் மனதில் உள்ளதையும் அவர் அறிவார்.

நாம் மற்ற மனிதரோடு பேசும் போது வாயைப் பயன்படுத்துகிறோம்.

பேச முடியாதவர்களால் மற்றவர்களுக்கு பேச்சு மூலம் தங்கள் எண்ணங்களை தெரிவிக்க முடியாது.

ஆனால் இறைவனிடம் கேட்கும்போது நமது வாயைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

நாம் ஒரு சமூக பிராணி என்பதால் கோவிலில் பொதுவாக ஜெபிக்கும்போது சமூகத்திற்காக வாய் மூலம் ஜெபிக்கிறோம்.

ஆனால் இறைவன் நமது மனதைத்தான் பார்க்கிறார். 

மனதில் வேறு எதையாவது நினைத்துக் கொண்டு வாயை கொண்டு மட்டும் ஜெபித்தால் அதன் பெயர் ஜெபம் அல்ல.

நாம் பக்தியோடு ஜெபிப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம்.

ஆனால் கடவுளுக்கு தெரியும் நாம் மனதை வேறு எங்கே வைத்திருக்கிறோம் என்று.

'இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது."

மனிதர்கள் நாம் நடிப்பதை நம்பலாம். 

ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது.

திருப்பலியின் போது நமது உடலும் உள்ளமும் கோவிலில் இருக்க வேண்டும்.

உள்ளத்தை கசாப்புக் கடைக்கு அனுப்பி விட்டு உடல் மட்டும் கோவிலில் இருந்தால் பயனில்லை.

ஜெபம் என்றாலே நமது உள்ளமும் இறைவனது உள்ளமும் இணைவது தான்.

இறை உள்ளத்தோடு நமது உள்ளம் இணைந்த நிலையைத்தான் தியான நிலை என்கிறோம்.

ஆழ்நிலைத் தியானம் செய்பவர்கள் தங்களை முற்றிலுமாக இறைவனோடு இணைந்து விடுவதால் 

அவர்களை சுற்றி என்ன நடந்தாலும் அவர்களுக்குத் தெரியாது.

தியானத்தின் மூலம் ஜெபிப்பவர்களுக்கு வார்த்தைகள் தேவையில்லை.

இறைவனோடு இணைந்த நிலையே ஜெப நிலைதான்.

Union with God is prayer.

இறைவனது உள்ளம் பரிசுத்தமானது.

பரிசுத்தத்தனத்தோடு பரிசுத்தத்தனம்தான் இணைய முடியும்.

பாவ நிலை பரிசுத்தத்த நிலையோடு இணைய முடியாது.

ஆகவே ஜெபம் சொல்லும்போது நமது உள்ளத்தில் பாவம் இருக்க கூடாது.

பாவம் இருந்தால் இறைவனோடு இணைய முடியாது.

அதனால்தான் திருப்பலியின் ஆரம்பத்தில் முதலில் பாவமன்னிப்புக்காக வேண்டுதல் செய்கிறோம்.

ஆகவே நமது தனிப்பட்ட ஜெபத்தையும் ஆரம்பிக்குமுன்

 நம்மிடம் பாவம் இருந்தால் அதற்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன் பாத்திரத்தின் வெளிப்புறத்தை மட்டும் சுத்தம் செய்தால் போதாது.

உன் புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.

அசுத்தமான உட்புறத்தில் உணவை வைத்தால் உணவும் அசுத்தமாகும். அந்த அசுத்தமான உணவை உண்டால் ஆயிரம் வியாதிகள் வரும். 

அது போல் தான் அசுத்தமாக இருக்கும் உள்ளத்தில் சுத்தமான எண்ணங்கள் தங்காது.

அசுத்தமான உள்ளத்தை சுத்தமான உள்ளத்தோடு இணைக்க முடியாது.

இறைவனோடு இணைந்த வாழ்வுதான் ஆன்மீக வாழ்வு.

ஆன்மீக வாழ்வின் அடிப்படையே தூய்மையான உள்ளம்தான். 

ஆன்மீக வாழ்வின் நோக்கமே கடவுளை அடைவது தான்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."
(மத்.5:8)

உள்ளத்தை தூயதாக வைத்திருப்பது எப்படி?

உள்ளம் ஆன்மாவை சேர்ந்தது.

உலகில் நமது ஆன்மா நமது உடலோடு சேர்ந்து வாழ்கின்றது.

நமது உடலில் உள்ள ஐந்து புலன்களின் உதவியால் தான் நமது புத்தி சிந்திக்க வேண்டிய விஷயங்களைப் பெறுகிறது.

நமது ஐம்புலன்களும் தான் அவை தொடர்புகொண்டுள்ள உலகச் செய்திகளை மூளைக்கு அனுப்புகின்றன.

 அவற்றைப் பற்றி நமது புத்தி சிந்திக்கிறது,

 அந்த சிந்தனைகள்தான் நமது மனதில் தங்குகின்றன,


 சிந்தனைகளின் தன்மைதான் மனதின் தன்மையை தீர்மானிக்கிறது.

 அப்படியானால் நமது மனது தூய்மையாக இருக்க வேண்டுமென்றால்

 நமது ஐம்புலன்களும் தூய்மையான செய்திகளை மூளைக்கு அனுப்ப வேண்டும்.

கண்கள் அடக்கம் இல்லாமல் பார்க்க கூடாத அசிங்கமான காட்சிகளை எல்லாம் பார்த்தால் அக்காட்சிகள் மூளையில் பதியும்.

காதுகள் கேட்க கூடாத அசிங்கமான செய்திகளைக் கேட்டால் அச்செய்திகள் மூளையில் பதியும். 

நமது வாயில் உள்ள நாக்கு இரண்டு விதங்களில் நமது மனதை பாதிக்கிறது.

போதைப்பொருட்களை ருசி பார்க்கும் நாக்கு நமது மனதில் போதைப் பொருட்கள் மீது ஆசை ஏற்படுத்தக்கூடிய எண்ணங்களை உருவாக்குகிறது.

மோசமான நடத்தை உள்ளவர்களுடன் பேச நமது நாக்குஆர்வம் காட்டினால் அதன் மூலமாகவும் நமது எண்ணங்கள் கெடும்.

நமது கால்கள் போகக்கூடாத இடங்களுக்கு போனால்,

அவை நமது கண்கள், காதுகள், வாய் ஆகியவற்றையும் அழைத்துக் கொண்டு செல்வதால்

அவற்றின் மூலமாக வேண்டாத செய்திகள் மூளைக்குச் செல்லும்.

கண்கள் தூய்மையானவற்றை மட்டும் பார்த்தும்

 காதுகள் தூய்மையாக செய்திகளை மட்டும் கேட்டும் மூளைக்கு அனுப்பினால்

நமது புத்தியும் தூய்மையானவற்றையே சிந்திக்கும்.

"உன் கையாவது காலாவது உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டி எறிந்துவிடு. 

இரண்டு கைகளோடு அல்லது இரண்டு கால்களோடு முடிவில்லா நெருப்பில் தள்ளப்படுவதைவிட,

 கை ஊனனாய் அல்லது கால் முடவனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.


9 உன் கண் உனக்கு இடறலாய் இருந்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடு. 

இரண்டு கண்களோடு எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்."
 (மத்.18:8,9)

ஆண்டவரது இந்த கண்டிப்பான வார்த்தைகள் நாம் ஐம்புலன்கள் விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்." (திருக்குறள் 6)


 பொறிவாயில் = சிலுவைப் பொறியில்

ஐந்தவித்தான் = ஐந்து புலன்களையும் பலியாக ஒப்புக் கொடுத்த இறைவன் இயேசு.


"நாம் ஐம்புலன்களின் உதவியுடன் செய்த எல்லா பாவங்களுக்கும் பரிகாரமாக தனது ஐந்து புலன்களையும் சிலுவையில் பலியாகக்கிய இயேசு "

என்று வள்ளுவர் கூறுகிறார்.

நமது ஐம்புலன்களையும் அடக்கமாக வைத்திருந்தால்தான்

 ஐம்புலன்களையும் பலியாக்கிய இயேசுவின் சீடர்களாக வாழ முடியும்.

நாம் ஐந்து புலன்களையும் அவிழ்த்து விட்டு விட்டால் அவை உலகிலுள்ள அத்தனை பாவங்களையும் செய்துவிட்டுத்தான் திரும்பும்.

நாம் ஜெபம் செய்யும் போதும் ஐம்புலன்களையும் அடக்கினால் தான் நம்மால் மனதை ஒருநிலைப்படுத்த முடியும்.

திருப்பலியின் போது நமது புலன்கள் அனைத்தும் பீடத்தில் பலி செலுத்தப்படும் இயேசுவோடு மட்டும் ஒன்றித்து இருக்கவேண்டும்.

ஐம்புலன்களையும் அடக்கினால். எண்ணங்கள் தூய்மையாகும்.

 எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்போது மனதும் தூய்மையாக இருக்கும்.

 மனது தூய்மையாக இருந்தால் கடவுளைக் காண்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment