Tuesday, February 9, 2021

*இறைவனுக்காக வாழும் அனைவரும் பாக்கியசாலிகள் தான்*.

*இறைவனுக்காக வாழும் அனைவரும் பாக்கியசாலிகள் தான்*.

நம் ஒவ்வொருவரிடமும் விலைமதிப்பில்லாத பொருள் ஒன்று உள்ளது.

அது நமக்கு மட்டுமே உரியது.

யாரோடும் மாற்றிக்கொள்ள இயலாதது.

We cannot exchange it with anybody.

 அது கடவுளால் நமக்கு இலவசமாக அருளப்பட்ட நமது வாழ்க்கை.

நமது வாழ்க்கைக்கு விலை மதிப்பே கிடையாது.

அதை மற்றவர்களுக்காக பயன்படுத்தலாம் ஆனால் மற்றவர்களுக்கு நம்மால் அதை கொடுக்க இயலாது.

தாயின் கருவறையில் தொடங்கி கல்லறை வரைக்கும் அதை நாம் தாம் அனுபவித்தாக வேண்டும்.

அது நமக்கு இலவசமாக தரப்பட்டது,

 ஆனால் அதில் ஒரு சிறிய பிரச்சனை.

 இலவசமாக நமக்கு தரப்பட்டிருந்தாலும் அதை நமது இஷ்டம் போல் வாழ முடியாது

 இலவசமாக நமக்கு தந்தவரது இஷ்டப்படி தான் வாழ வேண்டும்.


அதன் மகிமை எதில் அடங்கி இருக்கிறது?

அதன் எதிரெதிர் குணங்களில்,

அது நிரந்தரமற்றது ஆனால் நிரந்தரமானது.

ஏன் நிரந்தரமற்றது?

 ஏனெனில் இந்த உலகிலேயே அது முடிந்துவிடும்.


எப்படி நிரந்தரமானது?

ஏனெனில் இந்த உலகில் முடிந்த பின்னும் மறு உலகில் தொடரும்.

இது எவ்வளவு மகிமை வாய்ந்தது என்றால் 

நம்மை படைத்த நித்தியரான கடவுளே இதற்கு ஆசைப்பட்டு மனிதராக பிறந்தார்!

இதில் இன்னும் ஒரு அதிசயம் என்னவென்றால் ஒரே வாழ்விற்குள் இரண்டு வாழ்வுகள் அடங்கி இருப்பதுதான்!

இறைவன் நம்மை படைத்த போது எதிரில் எதிர்க் குணங்கள் உள்ள இரண்டு பொருள்களை நமக்கு இலவசமாக தந்தார்.

கண்ணால் பார்க்கக் கூடிய ஒரு பொருள், அதோடு பார்க்க முடியாத ஒரு பொருள்.

அழிவுள்ள ஒரு பொருள், அழிவு இல்லாத ஒரு பொருள்.

சடப் பொருளாகிய ஒரு பொருள், ஆவியாகிய ஒரு பொருள்.

ஒன்று நமது உடல், அடுத்தது நமது ஆன்மா.

நாம் வாழ வேண்டியது உடலை அடுத்த ஒரு உலக வாழ்வையும், அதனோடு விண்ணுக்கு சொந்தமாக ஒரு ஆன்மிக வாழ்வையும்.

நமது வாழ்வே ஒரு Tug of war. தான்.

உடல் மண்ணை நோக்கி இழுக்க ஆன்மா விண்ணை நோக்கி இழுக்க அப்பப்பா ஒரே thrilling experience!

கையில் ஒரு மாம்பழம் .

பக்கத்தில் ஒரு குரங்கு.

 நாம் மாம்பழத்தை சின்ன முயலும் போது, குரங்கு அதை பிடுங்க முயலும்.

 குரங்கிற்கு கொடுத்து விடாமல் பழத்தைத் தின்று முடிப்பதுதான் வாழ்க்கையில் வெற்றி! 

பார்ப்பதற்கு கஷ்டமானது போல் தோன்றினாலும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் எளிது.

 கூர்ந்து கவனித்தால் நமது ஆன்மாவின் பக்கம் சர்வசக்தி வாய்ந்த இறைவனும்,
'
 உடலின் பக்கம் மந்திர தந்திரங்கள் தெரிந்த சாத்தானும் நின்று கொண்டிருப்பது தெரியும்.


 நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அவரோடு நிற்க வேண்டியதுதான்!


 உண்மையான Tug of war. சாத்தானுக்கும் இறைவனுக்கும் மத்தியில் தான்!

 இறைவன் வெற்றி பெறுவார் என்பது நமக்குத் தெரியும்..


சாத்தானுக்கு ஒரு bye சொல்லிவிட்டு 

இறைவன் கரத்தைப் பற்றிக்கொண்டு விண்ணகம் செல்ல வேண்டியதுதான் நமது வேலை.

ஐயோ பாவம், சாத்தான்! செத்துப்போன உடலை வைத்துக்கொண்டு அழ வேண்டியது தான்!


இறைவன் கரத்தைப் பிடித்து அவர் வசம் நம்மை முழுவதும் ஒப்படைப்பதற்காகத்தான் வாழ்வின் ஆரம்பத்தில் திருமுழுக்கு பெறுகிறோம்.

திருமுழுக்கின் போது தண்ணீர் ஊற்றப் படுவது உடலின் மேல் தான், ஆனால் பரிசுத்தமடைவதோ நமது ஆன்மா.

திருமுழுக்கு நம்மை இறைவனின் பிள்ளைகளாக மாற்றி, விண்ணக பாதையை நோக்கி திருப்பி
 விடுகிறது.

விண்ணகப் பாதையில் இறைவன் கையை பற்றிக்கொண்டு நாம் நடைபோடுவதை சாத்தான் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே நடப்பான்.

விண்ணகப் பாதை மலர் மெத்தை போன்று மென்மையாக இருக்காது.

 கரடுமுரடாகத்தான் இருக்கும். ஆங்காங்கே நிறைய முள் கிடக்கும்.

  குண்டும் குழியுமாகதான் கிடக்கும்.

பாதையும் குறுகலாகத்தான் இருக்கும்.

சாத்தான் நடக்கும் பாதையோ அகலமாகவும் மென்மையாகவும் மலர்கள் பட்டதாகவும் இருக்கும்.

அந்தப் பாதையை பார்த்தவுடன் நமக்கே அங்கே போய் விடலாமா என்று தோன்றும்.

போனால் சாத்தான் பக்கம் வெற்றி ஆகிவிடும்.

 ஆனால் இறைவன் நமது கையை விடமாட்டார்.

நாமும் அவர் கையை விட மாட்டோம்.

இறைவன் தன்னையே நமக்கு உணவாக தந்து அழைத்து செல்வதால் நமது பயணம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

நமக்குத் தெரியும், குறுகலான பாதை தான் விண்ணகம் நோக்கி செல்லும் பாதை.

இறைவனது கையை பற்றிக்கொண்டு விண்ணக வாயினுள் நுழையும் போது விண் தூதர்கள் நம்மை மகிழ்ச்சி பொங்க வரவேற்பார்கள்.

"என்ன இருந்தாலும் எங்களைவிட மனிதர்கள்தான் பாக்கியசாலிகள்" 

"நீங்கள்தான் பாக்கியசாலிகள் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

  உங்களுக்கு உடல் கிடையாது.

 நாங்கள் எங்களது உடலை வைத்துக் கொண்டு உலகில் பட்டபாடு எங்களுக்கு தான் தெரியும்.

 நீங்கள் ஆவிகளாகவே படைக்கப்பட்டு
. ஆவிகளாகவே விண்ணகத்திற்குள் நுழைந்து இருக்கிறீர்கள்.

 உங்களை விட நாங்கள் எப்படி பாக்கியசாலிகள் ஆக இருக்க முடியும்?"


"நீங்கள் இறைவன் கையை பற்றிக்கொண்டு நடந்து வரும்போது என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோமே.

உங்களுக்கு கடவுள் தனது உடலையே உணவாக தந்து அழைத்து கொண்டு வந்தாரே!

 அந்த பாக்கியம் எங்களுக்கு இல்லையே!

அதுமட்டுமா உங்களை விண்ணகத்திற்கு அழைத்துவர கடவுளே மனிதனாகப் பிறந்தாரே!

ஆனால் சம்மனசாக பிறக்கவில்லையே!"

"ஹலோ, நீங்களே பிறக்கவில்லையே!"

"உங்களுக்கு பெறும் உரிமையைத் தந்து 

உங்களை தனது படைப்புத் தொழிலில் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டாரே!

எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே!"

"கவலைப்பட வேண்டாம்.

 நாங்களும் உங்களை மாதிரியே ஆகிவிடுவோம் பாருங்கள்!"

"கவலையா? விண்ணகத்திலா?
இங்கு கவலைப்படவே முடியாது."

"அதுதான் எங்களுக்கு தெரியுமே. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.''

"இங்கே யாரும் சும்மா இருக்க மாட்டோம்!

இடைவிடாமல் இறைவனை நேசிப்பது, 

அவரை ஆராதிப்பது, 

அவரைப் புகழ்வது,

உலகில் வாழும் மக்களுக்காக அவரிடம் பரிந்து பேசுவது,

உலகில் உள்ளவர்களுக்கு உதவுவது,

என்று சதா இயங்கிக் கொண்டிருப்பது விண்ணக வாசிகள் அனைவரின் சுபாவம்."

"இப்போ நாங்களும் விண்ணக வாசிகள் தான்!''


"இங்கு நேரம் போவதே தெரியாது.
 ஏனெனில் இங்கு நேரமே இல்லை!

ஆமா! உடலை வைத்துக் கொண்டு உலகில் பட்டபாடு எங்களுக்கு தான் தெரியும் என்று சொல்லுகிறீர்களே.

 உடலை வைத்துக் கொண்டுஅப்படி என்ன பாடுபட்டீர்கள்?"

"உங்களுக்கு துன்பம் என்றால் என்ன என்று தெரியுமா?''

"தெரியாது. நாங்கள் துன்பப் பட்டதே இல்லை."


"நாங்கள் உடலோடு பூமியில் வாழ்ந்தபோது அனுபவித்தது எல்லாம் துன்பம் மட்டுமே. 

கடவுள் ஆன்மாவிற்கு உதவியாக இருப்பதற்காக எங்களுக்கு உடலை தந்தார்.

ஆனால் நாங்கள் செய்த பாவத்தின் விளைவாக எங்கள் உடல் துன்பத்தின் பிறப்பிடம் ஆகிவிட்டது,

எங்களை இறைவனோடு சேரவிடாமல் எங்களது உடல் தடுத்துக் கொண்டே இருந்தது.

நல்ல வேளை கடவுள் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு,

எங்கள் துன்பங்களை விண்ணகத்தில் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரின்பமாக மாற்றினார்.  

எங்களது ஆன்மாவிற்கும் உடலுக்கும் இடையே நடந்த இழுபரி போரில் (Tug of war) இறைவனின் உதவியால் ஆன்மா வெற்றி பெற்றது.

உடல் தனக்கு சொந்தமாக மண்ணோடு கலந்து விட்டது."

"உலகின் இறுதி நாளில் உங்களது உடல்களும் உயிர்த்து அவ்வவற்றுக்குச் சொந்தமான ஆன்மாவோடு இணையுமே!"

"ஆமா. ஆனால் அது அப்போது சடப்பொருள் உடலாக இருக்காது. விண்ணக வாழ்வு நிலைக்கு ஏற்ற உடலாக மாறிவிடும்."

"அப்போதும் நீங்கள்தான். பாக்கியசாலிகள். 

இயேசு உயிர்த்த உடலோடு வாழ்ந்து கொண்டிருப்பது போல நீங்களும் நித்திய காலம் அவரோடு இணைந்து வாழ்வீர்கள்."  

"அதென்ன நீங்கள்தான். பாக்கியசாலிகள்? 

விண்ணகத்தில் இறைவனோடு இணைந்து வாழும் அனைவரும் பாக்கியசாலிகள்தான்."

 விண்ணகத்தில் மட்டுமல்ல மண்ணகத்திலும் இறைவனுக்காக வாழும் அனைவரும் பாக்கியசாலிகள் தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment