Thursday, February 25, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 11 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 11
(தொடர்ச்சி)


"எல்லோரும் அமைதிக்கு வந்த பிற்பாடு நீங்கள் மட்டும் ஏன் சமாதானத்தையே பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?"
 
"அதிலுள்ள ஆன்மீகப் பொருள் நயத்துக்காக."


"அப்படி என்ன நயம் அதிலே இருக்கிறது?"


"சமம் + தானம் = சமாதானம்.

சம தானம் = சம இடம் (equal place)"


"நாம் இலக்கணமா பேசிக் கொண்டிருக்கிறோம்? வார்த்தையை பிரித்து பொருள் சொல்லுகிறீர்கள்?

இலக்கணத்தில்தான்

எழுத்து + எல்லாம் = எழுத்தெல்லாம்.

செம்மை + தமிழ் = செந்தமிழ் என்றெல்லாம் சொல்லுவோம்.

...........சார், பேசுங்க."


"நீங்கள் எங்கே பேச விடுகிறீர்கள்.

ஆரம்பத்திலேயே குறுக்கிடக் கூடாது. சொல்லி முடித்தபின் சந்தேகம் இருந்தால் கேட்கணும்."

"சரி, சொல்லுங்க."

"சம இடத்தில் இருப்பவர்களால்தான் உரையாட முடியும், உறவாடவும் முடியும்.

ஒருவர் மேடையிலிருந்து பேசினால் கீழே இருப்பவர் கேட்டுக் கொண்டுதான் இருக்க முடியும்.

கடவுள் அளவில்லாதவர். நாம் அளவுள்ளவர்கள்.

கடவுள் அளவில்லாதவர் என்று சொல்லலாமே தவிர,

அளவற்ற அவரை முழுவதுமாக நமது அளவு உள்ள மனதிற்குள் கொண்டு வரவே முடியாது.

கடல் முழுவதையும்  தம்ளருக்குள் கொண்டு வர முடியுமா?
 
நமது மனதின் அளவு எவ்வளவோ அவ்வளவு தான் கொண்டு வர முடியும்.

கடவுள் நம்மை அளவுகடந்த விதமாக நேசிக்கிறார். 

அவரது அளவுகடந்த அன்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசிக்கிறார். .

ஆனாலும் அளவுகடந்த அவரை அளவு உள்ள நாம் முற்றிலுமாக புரிந்து கொள்ள முடியாது என்று அவருக்குத் தெரியும்.

சம இடத்திலுள்ள இரண்டு பேரால்தான் ஒருவரை ஒருவர் முற்றிலும் புரிந்து கொள்ள முடியும். 

ஆகவே நம்முடன் சம இடத்திற்கு இறங்கிவரத் தீர்மானித்தார்.

நம்மை ஏற்ற அவர் இறங்கிவரத் தீர்மானித்தார்.

He came down to lift us up!

சம அளவுள்ள பொருட்கள்தான் சம இடத்தில் இருக்க முடியும்.

எலியும் யானையும் சம இடத்தில் இருக்க முடியுமா?

ஆகவேதான் துவக்கமும் முடிவும் இல்லாத அவர்,

நம்மோடு சம இடத்தில் இருப்பதற்காக,

 துவக்கமும் முடிவும் உள்ள மனிதனாக உருவெடுக்க தீர்மானித்தார்.

துவக்கமும் முடிவும் இல்லாத தேவ சுபாவத்தை வைத்துக்கொண்டே 

துவக்கமும் முடிவும் உள்ள மனித சுபாவத்தையும் ஏற்றுக்கொண்டார்.

நித்தியரான அவர் நமது காலத்திற்குள் வந்தார்.

துவக்கமே இல்லாத அவர் 
மரியாளின் வயிற்றில் தனது மனித வாழ்வைத் தொடங்கினார்.

வளரவே முடியாத அவர் குழந்தையாய் இருந்து

 பையனாக வளர்ந்து, இளைஞனாக வளர்ந்து, முழுமையான ஆளாக வளர்ந்தார்.

கஷ்டப்படவே முடியாத அவர் நமக்காக கஷ்டங்களை ஏற்றுக்கொண்டார்.

மரிக்கவே முடியாத அவர் சிலுவையில் நமக்காக மரித்தார்.

இவ்வளவும் எதற்காக?"

"நம்முடன் சம தானத்திற்கு,

 சமாதானத்திற்கு, 

வருவதற்காக."

"அதனால் தான் அவரை சமாதானத்தின் தேவன் என்கிறோம். 

*சமாதானத்தின்* *தேவன்* என்பதன் பொருள் நயம்

 *அமைதியின்* *தேவன்* என்பதில் இருக்கிறதா?"


"சத்தியமாக இல்லை." 

"அப்படியானால் சமாதானத்தையே பிடித்துக் கொண்டு இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?"

"தவறு இல்லை."

"இயேசு முழுக்க முழுக்க அளவற்ற கடவுள்.

Jesus is fully God.

இயேசு முழுக்க முழுக்க அளவுள்ள மனிதன்.

Jesus is fully Man.

இயேசு சிலுவையில் மரித்து 1,988 ஆண்டுகள் ஆகிவிட்டாலும்.

இன்றும் அவரை நமது மனித கண்களால் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் தான் பாடுகள் படுவதற்கு முந்திய இரவு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினார்.

இன்று நற்கருணையை உருவம் உள்ள நாம் பார்க்கும்போது

 அளவுள்ள நமது கண்களால் உருவமற்ற, அளவற்ற கடவுளையே அளவுள்ள உருவத்தில் பார்க்கிறோம்.


நமது கைகளால் அவரைத் தொடும்போது அளவுள்ள நமது கைகளால் அளவற்ற கடவுளையே தொடுகிறோம்.


நமது நாவினால் அவரை ருசித்து பார்க்கும்போது அளவுள்ள நமது நாவினால் அளவற்ற கடவுளையே
ருசித்துப் பார்க்கிறோம்.

உருவம் உள்ள நாம் உருவமற்ற கடவுளையே நற்கருணை உருவில் பார்க்கிறோம்.

நற்கருணையை விழுங்கும்போது இயேசுவின் உருவமும் நமது உருவமும் ஒன்றாக இணைகின்றன.  

உருவமுள்ள கண்களால் நாம் பார்ப்பது உருவமுள்ள இயேசுவை.

அதுவும் நமது கண்களால் பார்க்கக்கூடிய அளவுக்கு உருவமுள்ள இயேசுவை.

இயேசுவை மட்டும் அல்ல, உருவமற்ற  அவரது தந்தையையும் பார்க்கிறோம்.

"என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான்."
(அரு. 14:9)


இப்போது நாம் துணிந்து சொல்லலாம், "கடவுளுக்கு நம்மைப்போல் உருவம் உண்டு!"

இயேசு அளவு இல்லாதவர், (as God)

 அதேசமயம் நமது கண்களால் பார்க்கக்கூடிய அளவிற்கு

 அளவு உள்ள உருவத்தைக் கொண்டவர்.(as Man)

 ஆனாலும் உருவமுள்ள இயேசுதான் உருவமற்ற கடவுள்.

உருவமற்ற கடவுள்தான் உருவமுள்ள இயேசு!

இதெல்லாம் எதனால் சாத்தியமாயிற்று?"

"இயேசு நம்மோடு சம தானத்தில் இருப்பதால்.

 நாம் உருவத்தோடு வாழும் இதே உலகில்தான் இயேசு அன்றும் வாழ்ந்தார், 

 இன்றும் உருவத்தோடு நற்கருணை வடிவில் வாழ்கிறார்.

ஆகவேதான் அமைதியை விட சமாதானம் எனக்கு பிடித்திருக்கிறது."

"சமாதானத்திற்கும், அமைதிக்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லையா?"

"தொடர்பு இருக்கிறது, பொருளில் அல்ல, உறவில் ."

"கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்கள்."

"சமாதானம் இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும். 

அமைதியை சமாதானத்தின் குழந்தை என்று கூட சொல்லலாம்.

 இன்று உலகில் அமைதி இல்லை.
ஏன்? 

சமாதானம் இல்லை.
 ஆகவே அமைதியும் இல்லை.

நாடுகளை ஆள்பவர்கள் சமாதான உறவோடு இருந்தால்

 நாடுகளுக்கு இடையே அமைதி நிலவும்.

சமாதான உறவு இல்லாமல் ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொண்டிருப்பதால்தான்

 நாடுகளுக்கிடையே போர்கள் மூழ்கின்றன, அமைதி கெடுகிறது."

"மன அமைதி, (peace of mind) என்று கூறுகிறார்களே அதற்கும் சமாதானத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?"


"மன அமைதியைக் கெடுப்பது பாவம்.

மன அமைதியைக் கொடுப்பது சமாதானம்.

நாம் பாவம் செய்யும்போது இறைவனோடு நமக்குள்ள உறவை முறித்துக் கொள்கிறோம்.

இந்த உறவு முறிவினால் நமது மன அமைதி கெடுகிறது.

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து முறிந்த உறவை சரிசெய்து கொண்டால் இழந்த மன அமைதி திரும்பும்.

மனதில் அமைதி இருக்க வேண்டும் என்றால் நாம் இறைவனோடு சமாதானமாக இருக்க வேண்டும்.

சமாதானம் இருக்கும் இடத்தில் அமைதி உறுதியாக இருக்கும்."

"நாம் பாவமில்லாமல் இறைவனோடு சமாதான உறவோடு இருப்பதுதான் பரிசுத்த ஆவியின் கனி, சரிதானே"

"Super சரி. பரிசுத்த ஆவிக்கும் பாவமற்ற மனதுக்கும் உள்ள இன்னொரு தொடர்பு தெரிகிறதா?"

"கொஞ்சம் பொறுங்கள். சொல்லி விடுகிறேன்.

பரிசுத்த ஆவி, பரிசுத்த மனது.

பரிசுத்தராகிய கடவுள் 
பாவமற்ற பரிசுத்தமான மனதை
விரும்புகிறார்.   

பரிசுத்தமான மனது பரிசுத்த ஆவியின் கனிகள் இருந்து செயலாக்க பொருத்தமான இடம்.

சரியா?"

"சரி. பரிசுத்த ஆவியின் கனிகளை பெற வேண்டுமென்றால் நமது உள்ளமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

 பரிசுத்தமான மனதில்தான் சமாதானமும் இருக்கும், அமைதியும் இருக்கும்.


இப்போ சொல்லுங்கள், உங்களுக்கு சமாதானம் வேண்டுமா?
 அமைதி வேண்டுமா?"

"உறவில் சமாதானம் வேண்டும்.
 உள்ளத்தில் அமைதி வேண்டும்."


"யார் யார் இறைவனோடு சமாதான உறவில் இருக்கிறார்களோ அவர்கள் உள்ளத்தில் அமைதி இருக்கும்."

"அடுத்த கனி எது?"

"கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
அதது வரக்கூடிய நேரத்தில் வரும்."

(பொறுமை வரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment