(தொடர்ச்சி)
"இன்னும் எவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க வேண்டும்?"
"தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க மாட்டானாம்!"
"பொறு என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.
மன்னித்துக்கொள், காத்திரு.
இரண்டு சொற்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?:"
"இருக்கும் என்றுதான் எண்ணுகிறேன்.
அப்படி என்றால் இரண்டு கனிகளை ஒன்றாக சாப்பிட்டு விட வேண்டியது தான்?"
"எந்த இரண்டு கனிகளையும்?"
" பொறுமை, பரிவு."
".தொடர்பைக் கண்டு பிடித்து விட்டீர்களோ?"
"எல்லா கனிகளும் பரிசுத்த ஆவியின் கனிகள்தான்.
ஒரே மரத்தின் கனிகள் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாமல் இருக்குமா?
அன்பு உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அன்பு உள்ளவர்கள் சமாதானமாக
இருப்பார்கள்.
அன்பு உள்ளவர்களிடம் பரிவு இருக்கும். பரிவு உள்ளவர்கள் பிறர் குற்றங்களைப் பொறுப்பார்கள்.
அன்பு உள்ளவர்களிடம்தான் பொறுமை இருக்கும்."
"உண்மைதான்.
உலகத்தில் பாவங்கள் பெருகிக் கொண்டே போனாலும்
கடவுள் அதை அழிக்காமல் பொறுமையாக இருப்பதற்கு
அவருடைய அன்பு தானே காரணம்!"
".நமது குடும்பங்களில் மிகவும் பொறுமைசாலி யார்?"
"அம்மாதான்?"
".ஏன்?"
"நாம் எத்தனை முறை தப்பு செய்தாலும் நம்மை அன்புடன் மன்னிப்பதினால்தான் பொறுமையாக இருக்கிறார்கள்.
அவர்களது மன்னிக்கும் குணத்திற்குக் காரணம் அவர்களுடைய பரிவு அதாவது இரக்கம்."
".கரெக்ட். கடவுளுக்கும் நமது மேல் பரிவு இருப்பதால்தான் நாம் மனம் திரும்புவதற்கு கால அவகாசம் அளித்துக் கொண்டு பொறுமையாக இருக்கிறார்.
புனித அகுஸ்தினார் மனம் திரும்ப அவருக்கு 30 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது."
"நமது வாழ்வில் எப்பொழுதெல்லாம் பொறுமை என்ற கனியை ருசித்து பார்க்க வேண்டும்?"
"கடவுளிடம் ஏதாவது கேட்டு வேண்டும்போது வேண்டியதற்குப்பின் பொறுமை தேவை.
உண்மையிலேயே நமக்கு என்ன வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்.
எப்போது தர வேண்டும் என்பதுவும் தெரியும்.
சிலருக்கு கேட்டது கேட்டவுடன் கிடைக்க வேண்டும்.
கடவுளை அவசரப்படுத்தாமல் அவர் தரும்வரை விசுவாசத்துடன் பொறுமை காக்க வேண்டும்.
பரிசுத்த ஆவி நமக்கு பொறுமை என்ற கனியை தந்திருக்கிறார்.
தேவைப்படும் போதெல்லாம் அதை ருசித்து பார்க்க வேண்டும்.
நமது விருப்பத்தை எப்போது நிறைவேற்ற வேண்டுமென்று இறைவன் விரும்புகிறாரோ அப்போது நிறைவேற்றுவார்.
அதுவரை பொறுமை என்ற கனியை ருசித்துக் கொண்டிருக்க வேண்டும்.
இயேசு தனது பாடுகளை எவ்வளவு பொறுமையாக அனுபவித்தார் என்பது நமக்கு தெரியும்.
அவரது சிலுவையை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் போது அவரது பொறுமையையும் நம்மோடு பகிர்ந்து கொள்வார்.
இரண்டையுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சமூக வாழ்வில் தனியாக பயணிக்க முடியாது. நம்முடன் வருபவர்கள் எல்லோரும் நமது விருப்பப்படியே செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
குறைகள் இல்லாத மனிதர்கள் யாருமே உலகில் இல்லை.
நம்முடைய குறைகளோடு நம்மை நாமே ஏற்றுக்கொள்வது போல மற்றவர்களது குறைகளோடு அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
We must have the ability to bear the imperfections of other people, through a knowledge of our own imperfections.
இதற்கு நம்மிடம் பொறுமை இருக்க வேண்டும்.
நமது அன்றாட வாழ்க்கையில் எப்போதெல்லாம் பொறுமையை இழக்க சோதனைகள் வருகின்றன என்பதை சிந்தித்துப் பார்த்து,
அப்போதெல்லாம் பொறுமையாய் இருக்க கற்றுக் கொள்வோம்.
நமது உலகியல் வாழ்வில்
நாம் கடைபிடிக்கும் பொறுமையை பரிசுத்த ஆவிக்கு ஒப்புக்கொடுத்து அவரது கனியாக மாற்றுவோம்.
Bus stand க்கு சரியான நேரத்தில் போய் விட்டோம், ஆனால் பேருந்து சரியான நேரத்தில் வரவில்லை.
கையில் ஜெபமாலையை எடுப்போம்.
பிந்தும் நேரத்தை மாதா வழியாக இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்போம்.
வீட்டில் சாப்பாடு வர பிந்துகிறது. மனவல்லப ஜெபத்தோடு பொறுமை காப்போம்.
சிலர் மணிக்கணக்காக டிவி முன் உட்கார்ந்து இருப்பார்கள்.
ஆனால் ஆனால் ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் சிறிது நீண்டு விட்டால் பொறுமைக்கு சோதனை வந்துவிடும்.
சிலர் ஆற அமர ரசித்து கதை வாசிப்பதற்காக ஜெபத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடித்துவிடுவார்கள்.
ஆண்டவருக்கான காரியங்களில் அவசரமின்றி பொறுமையாக பக்தியுடன் செயல்படுவோம். அதற்காக பரிசுத்த ஆவியின் வரம் வேண்டுவோம்."
"திவ்ய நற்கருணை வாங்குபவர்கள் பூசை முடிந்து கால் மணி நேரமாவது கோவிலில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால் அநேகர் குருவானவர் பூசையின் இறுதியில் "சென்று வாருங்கள்" என்று சொல்ல ஆரம்பித்தவுடன் எழுந்து புறப்பட்டு விடுகிறார்கள்.
10 மாதங்கள் தாயின் வயிற்றுக்குள் இருக்கவேண்டிய குழந்தை பொறுமையில்லாமல் அவசரப்பட்டு ஒன்பதாவது மாதமே வெளியே வந்தால் எப்படி இருக்கும்!"
"அவசரக் குடுக்கை!
சரி, பொறுமை, பரிவு இரண்டு கனிகளையும் சேர்த்து பார்ப்போம் என்கிறீர்களே பரிவை மறந்து விட்டீர்களா?''
".மறக்கவில்லை. நமது பொறுமை மற்றவர்களோடு சம்பந்தப்படும் போது பரிவு உள்ளே வருகிறது.
மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளிகளை எப்படி கவனிக்க வேண்டும்?"
"பொறுமையுடனும், பரிவுடனும்.''
" ஒரு மந்தமான மாணவனுக்கு ஆசிரியர் எப்படி பாடம் சொல்லித்தர வேண்டும்?"
"பொறுமையுடனும், பரிவுடனும்.''
". பரிவு என்றால் என்ன?"
"இரக்கம்."
."யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அவர்களெல்லாம் இரக்கத்துக்கு உரியவர்கள்.
நாம் பாவிகள். இறைவனால் மட்டுமே மீட்கப்பட வேண்டியவர்கள். ஆகவேதான் இறைவன் நம்மோடு பொறுமையுடனும் பரிவுடனும் நடந்து கொள்கிறார்.
நமது உதவி யாருக்குத் தேவைப்பட்டாலும் நாம் அவர்கள் மீது இரக்கம் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு உதவி செய்யும்போது பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஒருவன் சாலையில் விழுந்து கிடக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அவனுக்கு உதவ வருகிறவன் அவனைப் பார்த்து,
"நான் உனக்கு. உதவ வந்திருக்கிறேன். என் கையை பிடித்துக் கொண்டு எழுந்து நில்."
அவன் முயல்கிறான்.
முடியவில்லை.
உதவ வந்தவன்,
"சொல்வது காதில் விழவில்லை.
நான் உன்னை காப்பாற்ற வேண்டுமென்றால் நீ என் கையை பிடித்துக்கொண்டு எழ வேண்டும்."
"முயல்கிறேன். முடியவில்லை."
"அப்போ அப்படியே கிட . எனக்கு அவசர வேலை இருக்கிறது."
என்று பொறுமை இல்லாமல் பேசினால் எப்படி இருக்கும்?
விழுந்து கிடப்பவன் மீது இவனுக்கு இரக்கம் இருந்தால் பொறுமையோடு குனிந்து கையை பிடித்து தூக்கிவிடுவான்.
இரக்கம் இல்லாதவரிடம் பொறுமையும் இருக்காது."
"அது உண்மைதான். நமக்கு இரக்க சுபாவம் வேண்டும்.
இரக்க சுபாவம் இருந்தால் உதவி தேவைப்படுபவர்களுக்கு பொறுமையுடன் உதவி செய்வோம்.
அன்பு உள்ளவர்களிடம் மட்டுமே பரிவு இருக்கும்.
பரிவு உள்ளவர்களிடம் மட்டுமே பொறுமை இருக்கும்.
கடவுள் அவருடைய அன்பையும், பரிவையும் நம்மிடம் தாராளமாகவே பகிர்ந்துள்ளார்.
இலவசமாக பெற்றோம், இலவசமாக கொடுப்போம்."
"யார் யாருக்கு இலவசமாக கொடுப்போம்?"
"கடவுள் தன்னால் படைக்கப்பட்ட அனைவர் மீதும் இரக்கமாயிருக்கிறார்.
நாமும் அனைவர் மீதும் நமது பரிவைப் பொழிய வேண்டும்."
"அனைவர் மீதும் என்றால்?
ஏழைகள், தேவைப்படுபவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் போன்றவர்கள் மீது பரிவு காட்டவேண்டும்.
வசதியுள்ள பணம் படைத்தவர்கள் மீது எதற்காக பரிவு காட்ட வேண்டும்.
அவர்களுக்கு யார் மீதும் பரிவு கிடையாதே?"
."உண்மையில் பரிவு தேவைப்படுகின்ற பரிதாபத்திற்கு உரியவர்கள் அவர்கள்தான்.
தாங்கள் தேடுகின்ற,
அளவுக்கு அதிகமாக சொத்துக்களை,
இறுதிநாளில் தங்களோடு எடுத்துச் செல்ல முடியாது என்பதை தெரிந்திருந்தும்,
அவற்றைத் தேவைப்படுவோரோடு பகிர்ந்து கொள்ளாமல்,
தாங்களும் அனுபவிக்க முடியாமல் போக போகிறார்களே என்பதை நினைக்கும்போது அவர்கள்மேல் பாவமாக இருக்கிறது!
அவர்கள் மீதுதான் நாம் அதிக இரக்கப்படவேண்டும்.
அவர்களுக்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்."
"உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மீது?"
"பதவி நிரந்தரமற்றது என்பதை அறிந்திருந்தும்,
நிரந்தரமான விண்ணக வாழ்வை தேடாமல்,
நிரந்தரமற்ற பதவிக்காக தங்களது வாழ்நாள் முழுவதையும் வீணாக்குகிறார்களே,
அவர்களும் நமது இரக்கத்திற்கு உரியவர்கள்.
அவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்ட வேண்டும்."
"அதாவது உலக ரீதியாக வசதி உள்ளவர்கள் ஆன்மீக ரீதியாக ஏழைகள், நமது பரிவுக்கு உரியவர்கள்."
"கடவுள் மேலேயே இரக்கப்பட்ட ஒரு குழந்தையை பற்றி தெரியுமா?"
"தெரியாதே!"
"ஒரு சிறு குழந்தை சிலுவையில் தொங்கும் ஆண்டவரே பார்த்து அவர்மீது இரக்கப்பட்ட தாம்.
'ஆண்டவரே உங்களை நினைக்கும் போது எனக்கு உங்கள் மீது பாவமாக இருக்கிறது!
மனிதர்களுக்காக நீங்கள் இவ்வளவு பாடுகள்பட்டு,
இரத்தத்தை முழுவதும் சிந்தி,
சிலுவையில் உங்களது உயிரையே அவர்களுக்காக பலி கொடுத்தீர்களே!
இவ்வளவு செய்தும் அநேகர் உங்களை ஏறிட்டுப் பார்க்க மறுக்கிறார்களே!
அதை நினைக்கும்போது உங்களை பார்க்க பாவமாக இருக்கிறது!'
என்றதாம்."
"மாசு மறுவற்ற குழந்தை!"
"தனது Superior ஐப் பார்த்து இரக்கப்பட்ட Brother Juniper கதை தெரியுமா?"
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment