(தொடர்ச்சி)
"ஒரு ஒண்ணாங்கிளாஸ் டீச்சர்ட்ட வசதியுள்ள வீட்டைச் சேர்ந்த ஒரு பையன் படித்தான்.
ஒருநாள் அந்தப் பையனிடம் டீச்சர் ஒரு கணக்கு போட்டார்கள்.
"இரண்டும் இரண்டும் எத்தனை?"
"22"
"தம்பி, இந்த கையில இரண்டு மாம்பழங்கள் உள்ளன.
இந்த கையில 2 மாம்பழங்கள் உள்ளன. மொத்தம் எத்தனை மாம்பழங்கள்"
"22 மாம்பழங்கள்"
"தம்பி, இரண்டும் இரண்டும் 4, சொல்லு"
" டீச்சர், நீங்கள் சொல்வது தப்பு. இரண்டும் இரண்டும் 22.''
மறுநாள் காலையில் பையனுடைய அப்பா பள்ளிக்கூட principal ஐப் பார்க்க வந்தார்.
"சார், உங்களுடைய ஒண்ணாங்கிளாஸ் டீச்சருக்கு கணக்கு சொல்லிக்கொடுக்க தெரியல.
கொஞ்சம் விசாரியுங்கள்."
principal டீச்சர கூப்பிட்டு விட்டார்கள்.
"டீச்சர், உங்களைப் பற்றி உங்கள் வகுப்புப் பையன் ஏதோ complaint கொண்டு வந்திருக்கிறான். நீ சொல்லு தம்பி."
"டீச்சருக்கு கணக்கு தெரியல. இரண்டும் இரண்டும் நான்கு என்கிறார்கள்.
22 என்று நான் சொல்லியும் நம்ப மறுக்கிறார்கள்."
"டீச்சர், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
"நீங்கள் விசாரிக்கிறீர்கள். நீங்கள்தான் சொல்ல வேண்டும்."
பையனின் அப்பா: சார் இதுல விசாரிக்க என்ன இருக்கு?
பையன் சொன்னதை டீச்சர் மறுக்கவில்லை.
ஒண்ணு டீச்சர வேலையை விட்டு போக சொல்லுங்க அல்லது என் பையனுக்கு T.Cகொடுங்க."
பையனின் அப்பா பள்ளிக்கூடத்திற்கு நிறைய நன்கொடை கொடுத்திருக்கிறார். இன்னும் கொடுப்பார். ஆகவே பையனை விட principalக்கு மனது இல்லை.
"அதுல ஒரு பிரச்சனை இருக்கிறது. டீச்சரை உடனே போக சொல்ல வேண்டுமென்றால் இரண்டு மாத சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து தான் போகச் சொல்ல முடியும். அதுக்கு நிர்வாகம் சம்மதிக்காது."
"சம்பளம் என்ன சார் சம்பளம். நான் கொடுக்கிறேன். சம்பளம் எவ்வளவு?"
"மாதத்திற்கு 4000 ரூபாய்."
"பூ! இவ்வளவுதானா! இரண்டு மாதத்திற்கு 4 ஆயிரமும் 4 ஆயிரமும் 8000 இப்பவே கொடுத்து விடுகிறேன்." என்று சொல்லிக்கொண்டே பணத்தை எடுத்து விட்டார்.
"டீச்சர் பணத்தை பிடியுங்கள், இடத்தை காலி பண்ணுங்கள்."
"பணம் எவ்வளவு என்று உங்கள் பையனையே சொல்ல சொல்லுங்கள். வாங்கிக்கொண்டு போய் விடுகிறேன்."
"ஏல, நாலாயிரமும் நாலாயிரமும் எவ்வளவு?"
"நாற்பத்தி நான்காயிரம்."
"சார், பையன் சொல்லிவிட்டான். தந்தால் போய்விடுகிறேன்"
"ஏல, நல்லா யோசித்து சொல்லு. நாலாயிரமும் நாலாயிரமும் எவ்வளவு?"
"ஒரு முறை சொன்னால் போதாதா? 44000."
"ஏல,இங்க பாரு. நாலும் நாலும் எட்டு."
"ஏம்பா, உங்களுக்கும் டீச்சரைப் போலவே புத்தி இல்லை."
"சார் T.C வேண்டாம் பையனுக்கு படிப்பு வராது." என்று சொல்லிவிட்டு பையனை இழுத்துக் கொண்டு போய்விட்டார்.
"டீச்சர் நீங்க ஏன் மறுத்து எதுவும் சொல்லவில்லை."
"சார், இப்படிப்பட்டவர்களிடம் நியாயத்தை பேசினால் பிரச்சனை வளருமே தவிர தீராது.
அவர்களாகவே திரும்பி வருவார்கள். அப்படி வரும்போது பேசக்கூடிய விதமாய் பேசி நியாயத்தை எடுத்துச் சொல்லலாம்.
வகுப்புக்கு போகலாமா?"
"போங்கள்."
"இந்தக் கதையை நான் எங்கோ வாசித்து இருக்கிறேன்."
"கட்டாயம் வாசித்திருப்பீர்கள். இப்போவெல்லாம் WhatsApp ல் நிறைய கதைகள் வருகின்றனவே."
"நாம் பேசிக்கொண்டிருப்பது பரிசுத்த ஆவியின் கொடைகளை பற்றி. இப்போது எதற்காக இந்த கதையை சொல்லுகிறீர்கள்?"
"எதற்காக ஒண்ணாம் கிளாஸ்ல காகம் வடை திருடிய கதையை சொல்கிறார்கள்? காகத்தின் குணங்களைப் பற்றி போதிக்கவா?"
"இல்லை.கதையிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடத்திற்காக. (moral)"
"அதேபோல்தான் இந்த கதையிலிருந்தும் நாம் ஒரு பாடத்தை. கற்றுக்கொள்ள வேண்டும்.
யார் யாரிடமெல்லாம் எப்படி எப்படி பேச வேண்டுமோ அப்படி அப்படி பேசினால் தான் காரியம் நடக்கும்.
சில சமயங்களில் மௌனம் கூட காரியங்களை சாதிக்கும்."
"அது புரிகிறது. பரிசுத்த ஆவியின் கொடைகளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
"ஏனெனில், அவ்வேளையில் என்ன சொல்ல வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிப்பார்." (லூக்.12:12)
என்று யார் யாரிடம் எந்த சந்தர்ப்பத்தில் கூறினார்கள்?"
"செபக்கூடங்களுக்கும், ஆள்வோர்முன்னும் அதிகாரிகள்முன்னும், உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, எப்படிப் பதில் சொல்வது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என்று கவலைப்பட வேண்டாம்."
வேத விரோதிகள் சீடர்களை பிடித்துக் கொண்டுபோய் விசாரிக்கும் போது என்ன பேச வேண்டும் என்பதை பரிசுத்த ஆவியே அவர்களுக்கு அறியப் படுத்துவார் என்று இயேசு சொல்கிறார்.
அதே பரிசுத்த ஆவிதான் இப்போதும் நம்முடனே இருந்து நம்மை ஆன்மீக காரியங்களில் வழி நடத்துகிறார்.
நமது ஆன்மீக நடவடிக்கைகளில்
நாம் யார் யாரோடு எப்படி எப்படி பழக வேண்டும்,
யார் யாருடன் என்ன என்ன பேச வேண்டும்,
ஆன்மீக பிரச்சனைகளுக்கு தீர்வு காண என்ன அணுகுமுறைகளை கையாளவேண்டும்
என்பன போன்ற இன்னும் அநேக காரியங்களிலும்
பரிசுத்த ஆவியே நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார்.
சில சமயங்களில் நாமாகவே சில பிரச்சனைகளை நமது விருப்பம்போல் அணுகி, நமக்கு விருப்பமான வார்த்தைகளை பேசினால் நமது அணுகுமுறையும் வார்த்தைகளும் புது பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.
சில பங்குகளில் வேண்டாத பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களுடைய சரியில்லாத அணுகுமுறையும் வார்த்தைகளும்தான்.
ஒரு சிறு பொரி ஊரே கொழுந்து விட்டு எரிய காரணம் ஆகி விடுவது போல
வேண்டாத ஒரு வார்த்தை தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு காரணம் ஆகிவிடும்.
ஆன்மீக சம்பந்தமான காரியங்களில் இறங்கும் பொழுது முதலில் பரிசுத்த ஆவியிடம் வேண்ட வேண்டும்.
எப்படி அணுக வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று அவரே கற்பிப்பார்.
சில சமயங்களில் மலை போன்ற பிரச்சனைகளே ஒரே வார்த்தையால் பனிபோல் காணாமல் போய்விடும்.
ஒரு மாணவன் டிஸ்மிஸ் செய்யப்படும் அளவிற்கு ஒரு தப்பு செய்துவிட்டான்.
அதற்காக வருந்தினான்.
ஆனால் எப்படி தன்னிலை விளக்கம் கொடுப்பது என்று தெரியவில்லை. என்ன விளக்கம் கொடுத்தாலும் பொருத்தமாக இருக்காது.
தலைமை ஆசிரியர் சுவாமியிடம் அனுப்பப்பட்டான்.
சுவாமியை பார்த்தவுடன்
" extremely sorry father. ஒரு முறை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் இப்படி நடக்காது."
தலைமை ஆசிரியர் சுவாமி எதுவுமே சொல்ல இல்லை.
" இனிமேல் கவனமாக. இரு"
ஒரே sorryயில் எல்லாம் சரியாகிவிட்டது!
ஒரு உண்மையான sorry சர்வ வல்லவ கடவுளையே நமது இதயத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறது! அவ்வளவு சக்தி அந்த வார்த்தைக்கு!
வார்த்தைகளை பயன்படுத்துவதில் இயேசுவே கவனமாக இருந்திருக்கிறார்.
விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பரிசேயர்கள் அவரிடம் கூட்டி வந்தபோது அவர் அதிகமாக வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.
"உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்"
என்று மட்டுமே சொன்னார்.
பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுவிட்டது.
நாமும் ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி பொதுவில் விவாதிக்கும்போது வார்த்தைகளை கவனித்து போடவேண்டும்.
விமரிசை என்ற கொடை நாம் விவேகமுடன் பேச, செயல்பட உதவுகிறது.
நாம் இருக்கும் சூழ்நிலையின் தன்மையை புரிந்து அதற்கு ஏற்ற படி செயல்பட விமரிசை உதவுகிறது.
இயேசு மூன்று ஆண்டுகள் போதித்த நற்செய்தியை போலவே தன்னுடைய பாடுகளின் போது காத்த மௌனமும் மிகவும் சக்திவாய்ந்த நற்செய்தியே.
நாமும் எப்போது பேச வேண்டும் எப்போது மௌனம் காக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியே நமக்கு வழிகாட்டுவார்."
"ஞானத்துக்கும் விமரிசைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?"
"எல்லா கொடைகளுமே ஒன்றோடொன்று தொடர்ப்பு உடையவை.
ஞானத்தோடு சிந்திப்பது புத்தி,
ஞானத்தோடு சிந்தனைகளை சேர்த்து வைப்பது அறிவு.
ஞானத்தோடு சிந்தனைகளையும், அறிவையும் செயல்படுத்துவது விமரிசை.
நமது செயல்பாட்டில் இருக்கும் உறுதிதான் அடுத்த கொடையான திடம்."
"ஞானம் புத்தி விமரிசையுடன் அறிவு திடம் பக்தியும் தெய்வபயமான வரங்கள் ஏழும் எமக்கு ஈவாயே.
எல்லா வரமும் நிரம்பித் ததும்பும் திவ்விய ஸ்பிரீத்து சாந்துவே."
"ஹலோ என்ன பாட ஆரம்பிச்சிட்டிங்க!"
"என்னை அறியாமலேயே பழைய பாட்டு ஞாபகத்திற்கு வந்தது."
"பாட்டில் மட்டும் அல்ல, நீங்கள் பாடுவதிலும் திடம் இருக்கிறது."
(தொடரும்)
லூர்து செல்வம்
No comments:
Post a Comment