Sunday, February 7, 2021

*நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்*.(மாற்கு1:40)

*நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்*.
(மாற்கு1:40)

தொழுநோயாளி ஒருவன் தான் குணம் பெறுவதற்காக இயேசுவிடம் வந்தான்.

இயேசுவிடம் அவனுடைய ஜெபம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

வந்தவுடன் "என்னை குணமாக்கும்" என்று அவன் கேட்கவில்லை.

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்"
என்று கூறி இயேசுவிடம் அவனுக்கு இருந்த விசுவாசத்தை அறிக்கையிடுகிறான்.

இயேசுவும் அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி, அவனைத் தொட்டு, "விரும்புகிறேன், குணமாகு" என்றார்.

அவன் குணம் அடைந்தான்.

அவனுடைய அணுகு முறையை கவனியுங்கள்.

"நீர் விரும்பினால்"-- "உமது விருப்பப்படியே செய்ய உமக்கு முழு உரிமை இருக்கிறது, 

நான் உம்மைக் கட்டாயப்படுத்தவில்லை.

 நீர் விரும்பினால் குணமாக்கும்" என்று பொருள்பட கூறியதன் மூலம் கடவுளது சித்தத்திற்கு தன்னை உட்படுத்துகிறான்.

"தந்தையே, அனைத்தும் உம்மால் கூடும். .......... நீர் விரும்புவதே ஆகட்டும்" என்ற இயேசுவின் ஜெபத்தை இது நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

"உம்மால் கூடும்" என்ற வார்த்தைகளின் மூலம் இயேசுவுடைய வல்லமையை அவன் ஏற்றுக் கொள்கிறான்.

ஆக, அவன் இயேசுவின் மீது அவனுக்கு இருந்த விசுவாசத்திற்கு முதலிடம் கொடுத்து

 விண்ணப்பத்திற்கு 2ஆவது இடம் கொடுக்கிறான்.

நாம் எப்படி ஜெபம் செய்யவேண்டும் என்பதற்கு தொழுநோயாளி ஒரு உதாரணம்.

அவனது விசுவாசத்தை பார்த்து இயேசு மனம் இரங்குகிறார்.

அவனைத் தொட்டு குணமாக்குகிறார்.

நாம் ஜெபம் சொல்லும்போது இறைவனைப் பற்றிய விசுவாசம் எப்படி இருக்க வேண்டும்?

இறைவன் சர்வ வல்லவர். அவருக்கு எல்லாம் கூடும்.

மனித மூளையால் இன்னும் முழுவதும் கண்டுபிடித்து முடிக்கப்படாத நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தையே 'ஆகுக' என்ற ஒரு சொல்லால் படைத்தவர்.

முழுமையான சுதந்திரத்தோடு தனது விருப்பப்படியே செயல் படுபவர்.


நண்பர் ஒருவர் கேட்டார்,

 "கடவுள் அவரது விருப்பப்படியே செயல்படுபவர் ஆயிற்றே,

 அப்படி இருக்க நாம் அவரை நோக்கி ஏன் ஜெபிக்கிறோம்?

 அவர் மாறாதவர் ஆயிற்றே, நமது ஜெபத்தினால் அவரை எப்படி மாற்ற முடியும்?"

உண்மைதான்.

 கடவுள் தனது விருப்பப்படியே செயல்படுபவர்தான்.

 ஆனால் அவர் அன்பே உருவானவர். அவரது அன்பு எவ்வளவு ஆழமானது என்றால், அவர் தனது மக்களின் விருப்பத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கு ஏற்றபடியே நித்தியமாக விரும்பி செயல்படுபவர்.

அவர் மாறாகவர்தான்.

 தனது மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அவருக்குள்ள விருப்பத்தில் மாறாதவர்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்." என்ற அவருடைய வாக்கு வெறும் ஒப்புக்காக கொடுக்கப்பட்டது அல்ல.

நாம் கேட்பது நமக்கு நன்மை பயப்பதாக இருந்தால் உறுதியாகக் கொடுப்பார். 

நாம் இறைவனை நோக்கி ஜெபிக்கும்போது அவர் நம்மீது கொண்டுள்ள அன்பை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நமது விண்ணப்பங்களை வைக்க வேண்டும்.

முதலாவது நமது விருப்பத்தை அவரது விருப்பத்திற்கு கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு அதன் பின் ஜெபிக்க வேண்டும்.

அவருக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே நமது விருப்பங்களை அவர் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை மனதில் இருத்திக்கொண்டு ஜெபிக்க வேண்டும்.

அதாவது அவரது விருப்பத்திற்கு மாறாக நமது விருப்பங்கள் இருந்துவிடக் கூடாது.

இதை நமக்கு தனது முன்மாதிரிகை மூலம் காண்பிப்பதற்காகத்தான் 

இறைமகன் மனித உரு எடுக்கும் போது முழுமையாக மனித சுபாவத்தை எடுத்துக்கொண்டார்.

இயேசு முழுமையாக கடவுள்,
 அதே சமயத்தில் முழுமையாக மனிதன்.

Jesus is fully God and fully man.

பாவம் ஒன்றை தவிர மீதி எல்லா வகையிலும் அவர் நம்மைப் போலவே பலகீனமான மனிதனாகப் பிறந்தார். 

மனித பலகீனங்களை அவர் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு பிறந்தார்.

கெத்சமனே தோட்டத்தில் அவர் தந்தையை நோக்கி செய்த ஜெபத்தில் இருந்தும்,

 அவர் சிலுவையில் தொங்கும் போது தந்தையை நோக்கி கூறிய வார்த்தைகளில் இருந்தும் இதை அறிந்து கொள்ளலாம்.

மனிதனுடைய மிக முக்கியமான பலகீனம் அவனது அச்சம் அதாவது பயம்.

அவரது தேவ சுபாவத்தில் அவர் எதற்கும் பயப்படவே முடியாதவர்.

மனித சுபாவத்தில்  தான் பட இருக்கும் பாடுகளையும், மரணத்தையும் நினைத்து மிகவும் பயப்படுகிறார்.

எந்த அளவுக்கு பயப்படுகிறார் என்றால், எதற்காக மனிதனாக பிறந்தாரோ, அதிலிருந்து விடுதலை பெற ஜெபிக்கிறார்.

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்."

ஆனாலும் தந்தையின் விருப்பத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்.

"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்."

பயப்படவே முடியாத இறைமகன்

 மனித பாவங்களுக்கு பரிகாரம் செய்ய பயம் நிறைந்த மனித சுபாவத்தை மனம் உவந்து எடுத்துக்கொள்கிறார்.

எப்படி இறைமகன் மனிதனாய் பிறந்தார் என்பது உண்மையோ

 அதேபோல் இறைமகன் பாடுகளை நினைத்தவுடன் பயந்தார் என்பதும் உண்மை.

ஏனெனில் பயப்பட முடியாதவரும் (தேவ சுபாவத்தில்)

பயந்தவரும் (மனித சுபாவத்தில்)

 ஒரே ஆள் தான், 

பரிசுத்த தமதிரித்துவதின் 2ஆவது ஆள்.



இது பயப்படுபவர்களை நோக்கி,

"பயப்படுவதால் நீங்கள் குறைந்தவர்கள் அல்ல. நானே துன்பங்களை நினைத்து பயந்தவன்தான். என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். பயத்தைப் பற்றி கவலைபடாமல் எனது தந்தையின் திரு சித்தத்தை நிறைவேற்றுங்கள்."

என்று கூறுவது போல் இருக்கிறது.


 "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?"

சிலுவையில் தொங்கும் போது இயேசு கூறிய இவ்வார்த்தைகள் அவர் எந்த அளவிற்கு மனித சுபாவத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார் என்பதை காண்பிக்கின்றன.


நமது பலகீனங்களை எல்லாம் இயேசு ஏற்றுக்கொண்டது அவற்றிலிருந்து நமக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகத்தான்.

எவ்வளவு பயம் இருந்தாலும் இறைவன் சித்தத்திற்கு மட்டுமே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துவதற்காகத்தான்

 இயேசுவே நமது பலகீனங்களை தன்மீது சுமந்தார்.

நமது ஜெபத்தில் இறைவன் சித்தத்திற்கு மட்டுமே முதலிடம் கொடுப்போம்.

நமது ஜெபம் தொழு நோயாளியின் ஜெபத்தைப்போல இப்படி இருக்க வேண்டும்:


"நீர் விரும்பினால் தேர்வில் எனக்கு வெற்றியை கொடுக்க முடியும்."

"நீர் விரும்பினால் இந்தப் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க முடியும்."

"நீர் விரும்பினால் உலகை கொரோனா நோயிலிருந்து காப்பாற்ற முடியும்."

இதே ரீதியில்தான் நமது ஜெபம் இருக்க வேண்டும்.

முழுவதையும் இறைவனது விருப்பத்திற்கு விட்டு விட வேண்டும்.

இறைவனது விருப்பமே நமது விருப்பமாக மாற வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment