விண்ணை உற்று நோக்கினால் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்
கோடிக்கணக்கான கிரகங்களுடன்
கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரம் பரவிக்கிடக்கும் அதிசயத்தை கண்டு ரசிக்கலாம்.
அவற்றோடு ஒப்பிட்டு பார்த்தால் நமது பூமி ஒரு சிறு தூசிக்குச் சமம்.
நமது பூமியின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் ஒரு தூசிக்குச் சமம்.
ஒவ்வொரு சடப் பொருளும் அணுக்களால் ஆனது.
ஒவ்வொரு அணுவும் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு சிறியது.
கணிதவியல்படி பிரபஞ்சம் அணுக்களின் கணம்.
The whole universe is only a set of atoms.
ஒரு வாதத்திற்கு, பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு அணுவும் ஒரு நாள் காணாமல் போய்விட்டால் பிரபஞ்சமே காணாமல் போய்விடும்!
பிரபஞ்சத்தை ஆக்குவதில் ஒவ்வொரு அணுவுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.
இறைவன் ஒவ்வொரு அணுவையும் படைத்து அதை பராமரித்து வருகிறார்.
ஒவ்வொரு அணுவும் இறைவனது திட்டப்படி இயங்கி வருவதால்தான் பிரபஞ்சமே ஒழுங்காக இயங்கி வருகிறது.
அதுபோல்தான் இறைவனது மனுக்குல படைப்பு திட்டத்திலும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு பங்கு உண்டு.
நாம் ஒவ்வொரு மனிதனின் முக்கியத்துவத்தையும் அவனது அந்தஸ்தை வைத்து தீர்மானிக்கிறோம்
இறைவனது திட்டப்படி ஒவ்வொரு மனிதனும் முக்கியமானவன்தான்.
அதை இப்படி சொன்னால் புரியும்:
மனுக்குலத்தின் கோடானுகோடி மனிதர்களில்
ஒரே ஒருவன் மட்டும் பாவம் செய்திருந்தால்கூட
அவன் ஒருவன் செய்த பாவத்திலிருந்து
அவனை மீட்க இறைவன் மனிதனாக பிறந்து தன்னையே பலியாக்கி இருப்பார்!
ஒவ்வொரு மனிதனும் இறைவனுக்கு அவ்வளவு முக்கியம்!
ஒவ்வொரு மனிதனும் அவனவனுக்குரிய குணாதிசயங்களுடன் இறைவனால் படைக்கப்பட்டவன்.
உலக அந்தஸ்தின் படி அவன் எவ்வளவு தாழ்வான நிலையில் இருந்தாலும் இறைவன் முன் முக்கியமானவன்.
நமது உடலில் எவ்வாறு ஒவ்வொரு உறுப்பும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அததன் பணியின் அடிப்படையில் முக்கியமானதோ,
அதே போல்தான் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் படைப்புத் திட்டத்தில் முக்கியமானவன்.
திருச்சபையில் இறைவன் முன் பாப்பரசர் எவ்வளவு முக்கியமானவரோ
அதே அளவு முக்கியமானவன் எழுத படிக்க தெரியாத கடைநிலை ஊழியனும்.
அவரவர் அவரவருக்கு அளிக்கப்பட்ட பணியை செய்வதற்காக படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
விண்ணகத்தில் ஒவ்வொருவரின் பேரின்ப நிலையும்
உலகில் அவர்கள் பூமியில் வகித்த பதவியில் அடிப்படையில் தீர்மானிக்க படுவதில்லை,
அவரவருக்கு அளிக்கப்பட்ட பணியை அவரவர் செய்த தன்மையின் அடிப்படையில்தான் தீர்மானிக்க படுகிறது.
உலகத்தின் நோக்கில் எஜமானனை விட வேலைக்காரன் தாழ்ந்தவன்.
ஆன்மீக நோக்கில் யார் தன் ஆன்மீகக் கடமையை ஒழுங்காகச் செய்து பரிசுத்தமாய் இருக்கிறானோ, அவன் உயர்ந்தவன்.
யார் கடமை தவறி பாவ நிலையில் இருக்கிறானோ அவன் தாழ்ந்தவன்.
ஆகவே, அவரவருக்கு அளிக்கப்பட்ட கடமையை அவர்கள் திறம்பட செய்ய வேண்டும்.
சில அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொண்டால் இறைவன் முன் அனைவரும் முக்கியமானவர்கள் என்ற உண்மையும் எளிதில் புரியும்.
இறைவன் சர்வ வல்லபர். அவருக்கு நிகர் அவரே. அவரால் படைக்கப்பட்டவர்களை அவரோடு ஒப்பிட்டுப் பார்க்கவே இயலாது.
ஏனெனில் அவர் அளவு கடந்தவர் படைக்கப்பட்ட அனைவரும் அளவுக்கு உட்பட்டவர்கள்.
அளவு கடந்த, ஒப்பிட்டுப் பார்க்கவே இயலாத, சர்வ வல்லப கடவுள் அவர் முன் ஒன்றுமே இல்லாத நம்மை அவரது சாயலில் படைத்தார்!
அது அவரது அளவுகடந்த அன்பிற்கான அடையாளம்.
அதுமட்டுமல்ல கொஞ்சம் கூட தகுதி இல்லாத நம்மை தனது சுவிகாரப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.
அவரது நித்திய விண்ணரசை நமக்கும் உரிமை ஆக்கினார்.
எல்லாவற்றையும்விட மகத்தான செயல் அவர் நம்மைப்போல் மனிதனாகப் பிறந்தார்.
நித்தியரான அவர் நித்தியராக இருந்துகொண்டே நம்மை போல காலத்திற்குள் வந்தார்.
நம்மைப்போல பிறந்தார், நம்மைப்போல உழைத்தார்,
நம்மைப்போல கஷ்டப்பட்டார். நம்மைப்போல மரித்தார்.
அளவுகடந்த அவர் அளவு உள்ள நம் நிலைக்கு தன்னையே தாழ்த்திக் கொண்டார்.
கடவுளே தன்னை நம் நிலைக்கு தாழ்த்திக் கொண்டிருக்கும்போது மனிதர்களாகிய நாம் நமக்குள்ளே ஏற்றத்தாழ்வு பார்க்கலாமா?
நமக்குள் அந்தஸ்தில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம், அதாவது, நம்மில் ஆள்பவர்கள் இருக்கிறார்கள், ஆளப்படுகின்றவர்களும் இருக்கிறார்கள்.
அந்தஸ்தில் ஏற்றதாழ்வு இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே தந்தை, ஒரே விசுவாசம், ஒரே நம்பிக்கை, ஒரே அன்பு.
நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்து தமது குடும்ப தலைவர்.
குடும்பத்தில் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது.
ஒவ்வொருவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை ஒழுங்காக கவனிக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.
ஒரு கிறிஸ்தவர் பொறுப்பு தவறினாலும் அது மொத்த கிறிஸ்தவ குடும்பத்தையே பாதிக்கும்.
ஒரு கிறிஸ்தவர் பொறுப்புடன் வாழ்ந்தால் அது மொத்த கிறிஸ்தவ குடும்பத்துக்கே பெருமை சேர்க்கும்.
ஒரு சிறு உதாரணத்திற்கு,
ஞாயிறு திருப்பலிக்கு ஒரு நபர் indecent ஆக உடை அணிந்து வந்தால்
அது கோவிலுக்கு வந்திருக்கும் அனைத்து விசுவாசிகளின் கண்களையும் கெடுக்கும்.
நமது உடலின் ஏதாவது ஒரு அங்கத்திற்கு பிரச்சனை வந்தால் கூட அது முழு உடலையும் பாதிப்பது போல
நம்முள் ஒருவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால்கூட அது திருச்சபை முழுவதையும் பாதிக்கும்.
திருச்சபையின் சமூக உறவு அவ்வளவு நெருக்கம் ஆனது.
திருப்பலியின் துவக்கத்தில் பாவமன்னிப்பு மன்றாட்டின் போது
"சகோதரரே உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன்"
என்று நமது அருகில் உள்ளவரிடமும் நாம் கூறுவதன் காரணம் நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள நெருக்கமான ஆன்மீக உறவுதான்.
இந்த உறவின் காரணமாக தான் நாம் மற்றவர்களுக்காக மன்றாடுவதற்கும் திருப்பலியின்போது நேரம் ஒதுக்கித் தரப்படுகிறது.
அப்போது அனைவருக்காகவும் ஜெபிக்கிறோம்.
திருச்சபை நமக்காக வாழ்வது போல நாம் திருச்சபைக்காக வாழ வேண்டும்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் எல்லா திருப்பலிகளிலும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பங்கு உண்டு.
ஏனெனில் ஒவ்வொரு திருப்பலியும் உலகம் முழுவதற்காகத்தான் கொண்டாடப்படுகிறது.
நாம் ஒருவர் ஒருவருக்காக வாழ்வது போல விண்ணக வாசிகளும் நமக்காக இறைவனோடு வாழ்கிறார்கள்.
நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார்கள்.
உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக நாமும் வேண்டுகிறோம் விண்ணக வாசிகளும் வேண்டுகிறார்கள்.
கிறிஸ்துவின் ஞான சரீரமாகிய திருச்சபையின் அங்கங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும்
நமக்கு மட்டும் அல்ல, குடும்பத்தின் மற்ற ஒவ்வொரு அங்கத்தினருக்கும்
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், ஜெபத்தாலும் உதவிகரமாக இருக்க வேண்டும்.
நமது குடும்ப உறுப்பினர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்,
அவரகளிடம் ஆறுதலான, அன்பான, நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும்,
அவர்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும்,
அவர்களது ஆன்மீக மீட்புக்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்.
எல்லோரும் இவ்வாறு செய்தால் நமது திருச்சபைக்குள் பிரச்சனை என்ற எண்ணமே எட்டிப் பார்க்காது.
இன்று "கிறிஸ்துதான் என் தலைவர்" என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கான சபையினராய் பிரிந்து கிடக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்?
பிரிந்து சென்றவர்கள் கிறிஸ்தவன் என்ற பெயரை மட்டும் எடுத்து சென்றிருக்கிறார்கள்.
கிறிஸ்துவை விட்டுவிட்டார்கள்.
கிறிஸ்துவுடன் இருந்தால் பிரிவினை எப்படி வரும்?
இறைவனின் படைப்புத் திட்டத்தில் அவரவருக்கு உரிய பங்கினை சிறப்பாக ஆற்றினால்தான்
இறைவனின் பிள்ளைகள் என்ற பெயருக்கு ஏற்றவர்கள் ஆவோம்.
இன்றேல் வெறும் படைப்பு பொருளாகவே இருப்போம்.
இறைவனின் பிள்ளைகளாய் அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வோம்.
அப்போதுதான் இறையரசு நமது.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment