(மாற்கு,7:29)
நோயாளிகளை குணமாக்கும் போதும் சரி, பேய்களை ஓட்டும்போதும் சரி
இறைவன் இயேசு செய்த ஒவ்வொரு புதுமையிலும் ஒவ்வொரு விதமாக அணுகுமுறையை கையாண்டிருக்கிறார்.
ஒவ்வொரு விதமான அணுகுமுறையிலிருந்தும் நாம் ஒவ்வொரு விதமாக பாடத்தைக் கற்கிறோம்.
சீரோபெனீசிய குலத்தைச் சார்ந்த, அதாவது, யூத குலத்தைச் சாராத
ஒரு பெண்
அவளுடைய மகளைப் பிடித்திருந்த அசுத்த ஆவியை ஓட்டுமாறு அவரைக் கேட்டாள்.
அவரோ, அவளைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.
இயேசு இறைவன் என்பது நமக்கு தெரியும்.
இறைவனைப் பொறுத்தமட்டில் இன, மொழி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் அவரால் படைக்கப்பட்ட அவரது பிள்ளைகள் என்று நமக்கு தெரியும்.
ஆவர் மனிதனாகப் பிறந்தது யூதர்களை மட்டுமல்ல மனுக்குலத்தைச் சார்ந்த அனைத்து மக்களையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகத்தான் என்று நமக்கு தெரியும்.
நமக்கு தெரிந்தது அனைத்தும் அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.
அப்படி இருக்கும்போது புற இனத்தை சார்ந்த ஒரு பெண் ஒரு உதவி கேட்டு வரும் போது
இயேசு ஏன் "பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று." என்று சொன்னார்?
மேலெழுந்த வாரியாக பார்க்கும் பொழுது
யூத மக்கள் மட்டுமே அவரது பிள்ளைகள் போலவும்,
மற்றவர்களெல்லாம் நாய்களுக்கு சமமானவர்கள் போலவும் அவர் எண்ணுவது போல தோன்றுகிறது.
ஆனால் அவர் அப்படி எண்ணவில்லை என்பதுவும் நமக்கு தெரியும்.
இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டு விண்ணகம் எய்துமுன் தனது சீடர்களை நோக்கி
" உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்" என்றுதான் சொன்னார்.
"யூத மக்களுக்கு மட்டும் அறிவியுங்கள்" என்று சொல்லவில்லை.
சீடர்களும் உலகெங்கும் சென்றுதான் நற்செய்தியை அறிவித்தார்கள்.
அதுமட்டுமல்ல தன்னைப்பற்றி குறிப்பிடும்போது மனுமகன் (Son of man) என்று குறிப்பிடுவதுதான் அவரது பழக்கம்.
அதுவே அவர் மனுக்குலத்தின் மீட்பர் என்பதை தெளிவாக்குகிறது.
அப்படியானால் ஏன் அவர் இந்த புதுமையில் வரும் புற இனத்து பெண்ணிடம்
யூத மக்கள் மட்டுமே அவரது பிள்ளைகள் போலவும்,
மற்றவர்களெல்லாம் நாய்களுக்கு சமமானவர்கள் போலவும்
என்று தான் நினைப்பது போல தோன்றும்படி பேசினார்?
முதலில் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்:
இயேசு மனிதனாகப் பிறந்தது புதுமைகள் செய்வதற்கோ,
வியாதிகளை குணமாக்குவதற்கோ
பேய்களை ஓட்டுவதற்கோ அல்ல.
அவர் பிறந்ததும் ஒரே நோக்கம் மனுக்குலத்தின் மீட்பு.
பின் ஏன் புதுமைகள் செய்து வியாதிகளை குணமாக்கினார்? பேய்களை ஓட்டினார்?
மனுக்குலம் மீட்கப்பட வேண்டும் என்றால் அத்தியாவசியமாக வேண்டியது
மக்கள் அவர் மீது வைத்திருக்கவேண்டிய ஆழமான விசுவாசம்.
மக்களிடையே விசுவாசத்தை உறுதிப்படுத்தும் ஒரே நோக்கத்தோடுதான் வியாதிகளை குணமாக்கினார், பேய்களை ஓட்டினார்.
அதனால்தான் ஒவ்வொரு முறை புதுமை செய்யும் போதும்,
தானே குணமாக்கியிருந்தாலும்,
"உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று." என்று சொல்வதையே வழக்கமாக வைத்திருந்தார்.
ஒவ்வொரு புதுமையின் போதும்
விசுவாசம், பாவமன்னிப்பு, குணமடைதல் ஆகிய மூன்று நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.
இம்மூன்றும் ஆன்மீக நிகழ்வுகள்.
இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அதைச்சார்ந்த நிகழ்வுகள்.
அதுமட்டுமல்ல உலகில் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகின்றதோ,
அங்கெல்லாம் அவர் செய்த புதுமைகளைப் பற்றியும் அறிவிக்கப்படும் என்பது அவருக்கு தெரியும்...
ஆக புதுமைகள் செய்யப்பட்டது சம்பத்தப்பட்ட நபர்களுக்காக மட்டும் அல்ல, அனைத்துலக மக்களுக்காகவும் தான்.
இயேசுவின் புதுமைகளிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்துதான் ஒவ்வொரு புதுமையையும் ஒவ்வொரு விதமாக செய்தார்.
சீரோபெனீசிய குலத்தைச் சார்ந்த பெண்ணின் மகளிடமிருந்து பேயை ஓட்டு முன்
அவளுடைய விசுவாச அறிக்கையை வெளிக் கொணர்வதற்காகவே இயேசு அவளிடம்
"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"
என்று சொன்னார்.
அவளிடம் விசுவாசம் இருந்தது என்பது அவருக்கு தெரியும்.
ஆனால் இறைவன் நமது விசுவாசத்தை சோதித்துப் பார்ப்பார் என்ற உண்மை நமக்கு தெரிய வேண்டுமே!
அவளை சோதிப்பதற்காக மட்டுமல்ல நமக்கு பாடம் கற்பிப்பதற்காகவும் இயேசு அவ்வாறு பேசினார்.
உண்மையில் இயேசு புற இனத்தாரை நாய்களுக்கு சமமானவர்கள் என்று நினைக்கவே இல்லை.
ஏனெனில் அவர்களும் அவரது பிள்ளைகள்.
அந்த அளவுக்கு பேசியும் அந்தப் பெண் தனது விசுவாசத்தில் தடம் மாறவில்லையே!
அதை நாமும் அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் இறைவனிடம் உதவி கேட்டு மன்றாடும்போது
நமது வாழ்வில் நமது விசுவாசத்தையும் பரிசோதிப்பதற்காக
இறைவன் ஏதாவது முறைகளை கையாளுவார் என்பதை
நாம் முன்கூட்டியே அறிந்திருந்தால்
நமது அனுபவத்திற்கு அது உதவியாக இருக்குமே என்பதை எண்ணித்தான் அத்தகைய வார்த்தைகளை சொன்னார்.
"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"
என்று சொன்ன போதும், அப்பெண் தாழ்ச்சியுடன்
"ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே"
என்று கூறிய வார்த்தைகள்தான் நமக்கு மிகப்பெரிய பாடம்.
அந்த பெண் தன்னை நாய்க்கு சமமானவள் என்று பொருள்படும்படி இயேசு கூறிய போதும்
அவள் கொஞ்சம் கூட தளர்வு அடையாமல் அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டு
தன்னைத்தானே தாழ்த்தி,
'இயேசுவை "ஆண்டவரே" என்று அழைத்தார்.
"நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே"
என்ற வார்த்தைகள் அவளது உண்மையான விசுவாசத்தையும் தாழ்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன.
தாழ்ச்சிதான் எல்லா புண்ணியங்களுக்கும் அரசி.
ஆகவே தாழ்ச்சியான அவளது வார்த்தைகள் இயேசுவின் பார்வையில் அவளை உயர்த்துகின்றன.
அவளது விசுவாசம் அவளது மன்றாட்டு கேட்கப் படுவதற்கு காரணமாய் அமைந்தது.
அவளது விசுவாசத்தினால் அவள் பயன் பெற்றது போல நாமும் பயன்பெற வேண்டும் என்றால்
நமது விசுவாசம் வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் உண்மையான வாழ்க்கையாக மாற வேண்டும்.
"தம்பி, சுகம் இல்லையா?"
"ஆமா, சார்."
"சுகமாக வேண்டும் என்று கடவுளிடம் ஜெபிக்கிறாயா?"
"ஆம்.''
"விசுவாசத்தோடு ஜெபிக்கிறாயா?"
"விசுவாசம் இல்லாவிட்டால் ஜெபிக்க முடியாது சார்."
"வியாதி கட்டாயம் சுகமாகி விடும் என்று விசுவசிக்கிறாயா?"
" மன்னிக்கவும் தங்களது கேள்வி தவறு."
"கேள்வியில் என்ன தவறு இருக்கிறது?"
"என்னுடைய விசுவாசம் நோய் குணமாவதில் இல்லை, இறைவனிடம் இருக்கிறது."
"சரி கேள்வியை கொஞ்சம் மாற்றி கேட்கிறேன்.
இறைவன் உன்னைக் குணமாக்கி விடுவார் என்று விசுவசிக்கிறாயா?
"திரும்பவும் கேள்வி தவறு."
"நீங்கள் தவறு என்று சொல்வது புரியவில்லை."
"Faith is a theological virtue."
விசுவாசம் தேவ சம்பந்தமான புண்ணியம்.
விசுவாசம் முழுக்க முழுக்க இறைவனை பற்றியது.
நான் இறைவன் என்னை படைத்தவர் என்றும்
நல்லவர் என்றும்
என்னை ஒவ்வொரு வினாடியும் பராமரிப்பவர் என்றும்,
எனக்கு நன்மையே செய்பவர் என்றும்,
எல்லாவற்றுக்கும் மேலாக
என்னை அளவுகடந்த விதமாய் நேசிப்பவர் என்றும்
விசுவசிக்கிறேன்.
இந்த விசுவாசத்தின் அடிப்படையில்தான் நான் அவரிடம் எனக்கு சுகம் தரும் படி ஜெபிக்கிறேன்,
ஆனால் எது சுகம் என்று அவருக்கு மட்டுமே தெரியும்.
ஜெபத்தின் விளைவாக எது நடந்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.
நோய் குணமடைவதற்கு உலகப் பார்வையில் ஒரு பொருள் இருக்கும்.
இறைவன் பார்வையில் ஒரு பொருள் இருக்கும்.
அவர் என்ன பொருளில் குணமாக்கினாலும் அதை நன்றியுடன் ஏற்றுக்கொள்வது நமது கடமை."
"இறைவன் பார்வையில் ஒரு பொருள் இருக்கும். இதை கொஞ்சம் விளக்கலாமா?"
"குணம் என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"
"குணம் என்றால் நோயிலிருந்து விடுதலை பெறுவது என்று நினைக்கிறேன்."
"உடலில் நோய் இருக்கிறது.
ஆன்மா அதை கடவுளிடம் ஒப்புவித்து விட்டு அதைப்பற்றி கவலைப்படாமல் அதன் ஆன்மீக வாழ்வில் மட்டும் அக்கறை காட்டுகிறது.
இப்பொழுது ஆன்மா உடல் நோயிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது.
இந்த மாதிரியான விடுதலைக்கு கடவுளின் அருள் உதவி வேண்டும்.
அனேக புனிதர்கள் இத்தகைய விடுதலையுடன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கிறார்கள்
நோய் நொடிகளுக்கு மத்தியில் மகிழ்ச்சி புன்னகையோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
உடல் நோயைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து விட்டதால்
அது விண்ணகத்தில் பேரின்பமாக மாறி புனிதர்களின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கும்.
இது ஒருவகை விடுதலை.
மரணம் கூட நோயில் இருந்து கிடைக்கும் விடுதலைதான். இதையும் அளிப்பவர் இறைவன் தான்.
இவ்விருவகைகளையும் உலகம் ஏற்றுக் கொள்ளாது.
ஆனால் விசுவாசத்தில் வாழும் ஆன்மா ஏற்றுக்கொள்ளும்."
"அதாவது நோய் உள்ளவன் அதைப்பற்றி கவலைப்பட்டால் நோய்க்கு அடிமை.
கவலைப்படாவிட்டால் நோயை வென்றவன் என்கிறீர்கள். சரியா?"
"கவலைப்படாமல் இறைவனுக்காக வாழ்பவன் நோயை வென்றவன்.
ஆழமான விசுவாசத்தோடு இறைவனுக்காக மட்டும் வாழ்பவனுக்கு நல்லதுதான் நடக்கும்.
அதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால்,
இறைவனுக்காக விசுவாசத்தோடு வாழ்பவனுக்கு என்ன நடந்தாலும் அது அவனது நன்மைக்கே."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment