Tuesday, February 2, 2021

மனிதனை இயக்கும் மூன்று தத்துவங்கள்.(தொடர்ச்சி)

மனிதனை இயக்கும்
            மூன்று தத்துவங்கள்.
(தொடர்ச்சி)




விசுவாசத்தின் அடிப்படையில் நாம் சிந்தித்தால் நம்முடைய சிந்தனைகள் நல்லவையாக,  இறைவனுக்கு ஏற்றவையாக இருக்கும்.

நல்ல சிந்தனைகள் தங்கும் மனம் நல்ல மனமாகவே இருக்கும்.

"நல்மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக."

என்பது இறைவாக்கு.

விசுவாசத்தின் அடிப்படையில் இயங்குபவர்களுக்கு, எப்போதும் மனதில் சமாதானம் நிலவும்.

இன்று உலக அளவில் சமாதானம் இல்லாமல் இருப்பதற்கு காரணமே

 நாடுகளை ஆள்பவர்கள் விசுவாசத்தின் அடிப்படையில் சிந்திக்காமல் 
உலக அடிப்படையில் சிந்திப்பதுதான்.

உலகை விடுவோம்.

 இன்று நமது திருச்சபையில் மக்களிடையே முழுமையான சமாதானம் நிலவுகின்றதா?

மனம் திறந்து உண்மையை ஏற்றுக்கொள்வதானால்

" இல்லை"

 என்றுதான் சொல்ல வேண்டும்.

விசுவாசத்தை போதிக்கும் நாமே இன்னும் நமது விசுவாசத்தின் அடிப்படையில் முழுமையாக வாழவில்லை.

 முன்பெல்லாம்

"Roma locuta est, causa finita est."

"Rome has spoken, the discussion is over."

"ரோம் பேசிவிட்டது, விவாதம்
 முடிந்து விட்டது."

என்று சொல்வார்கள்.

 
ஆனால் இப்போதெல்லாம் ரோம் பேசிய பிறகுதான் உலகில் விவாதமே ஆரம்பிக்கிறது!

இதற்கு காரணம்?

நாம் திருச்சபை எடுக்கும் முடிவுகளை விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாமல்

 நமது சொந்த புத்தியின் அடிப்படையில் அவற்றைப் பற்றி சிந்திப்பதுதான்.

விசுவாசிகளில் எத்தனை பேர் தங்களது ஆன்மீக வழிகாட்டி குருவின் (spiritual director) ஆலோசனைப்படி தங்களது ஆன்மீக வாழ்வை நடத்துகிறார்கள்?

ஆன்மீக வழிகாட்டி என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தங்களது பங்கு குருவானவரை கலந்து ஆலோசிக்காமலேயே முடிவெடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அநேகர் பங்கு குருவானவரின் வேலை பள்ளிக் கூடங்களையும், பங்கு நிலங்களையும் கவனிப்பது தான் என்று எண்ணுகிறார்கள்.

அவரை ஒரு நிர்வாகியாகப் பார்க்கிறார்கள்.

உண்மையில் அவர் ஒரு ஆன்மீக வழி நடத்துனர்.

பங்கு குருவியின் ஒரே வேலை பங்கு மக்களின் ஆன்மீக நலனைக் கவனிப்பது மட்டும்தான்.

மருத்துவரின் ஒரே வேலை நோயாளிகளைக் கவனிப்பதுதான்.

நோயாளிகள் மருத்துவரை கலந்தாலோசித்து நோய் சம்பந்தப்பட்ட மருந்துகளை எடுக்க வேண்டும்.

மருத்துவரையே பார்க்காமல் மருந்து கடைக்காரரிடம் மருந்து வாங்கி சாப்பிடுப்வர்கள் இன்று நாட்டில் ஏராளம்.

அதனால் ஏற்படும் தீமைகளும் ஏராளம்.

நமக்காக கிறிஸ்துவால் நியமிக்கப்பட்ட ஆன்மீக மருத்துவர் பங்கு குருவானவர்.

நமக்கு தனிப்பட்ட ஆன்மீக பிரச்சனைகளிலும் சரி, 

குடும்ப சம்பந்தப்பட்ட ஆன்மீக பிரச்சனைகளிலும் சரி 

பங்கு குருவானவரைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்கக் கூடாது.


ஒரு நாள் ஒரு பெரியவர் ஒரு பங்கு குருவானவரிடம் வந்தார்.

"சுவாமி என் பையனுக்கு பெண் பார்த்து முடிவு செய்து விட்டோம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. நாளும் குறித்தாகிவிட்டது. 
அழைப்பிதழும் அடித்தாகிவிட்டது.

பெண்ணின் பெற்றோர் கிறிஸ்தவர்கள் அல்ல.

  அவர்களது சமயப்படி தான் திருமணம் நடக்க வேண்டும் என்கிறார்கள்.

திருமணம் முடிந்தவுடன் உங்கள் பாடு என்கிறார்கள்.

ஆகவே திருமணத்தை அவர்கள் கோவிலில் நடத்தி விட்டு,

   தாலி மந்திரித்து நமது கோவிலில் கட்டிக்கொள்ளலாம் என்று இருக்கிறோம்.

திருமணம் முடிந்தபின் நமது கோவிலில் ஓலை வாசித்து தாலி மந்திரித்து கட்டிக் கொள்ளலாம்.

நீங்கள் எப்படியாவது திருமணத்திற்கு வந்து விடுங்கள்."


என்று மூச்சு விடாமல் பேசி விட்டு அழைப்பிதழைச் சாமியாரிடம் கொடுத்தார்.

எடுக்க வேண்டிய முடிவுகளை எல்லாம் அவர்களே எடுத்துவிட்டு அதைத் தெரிவிக்க மட்டும் பங்கு சுவாமியாரிடம் வந்திருக்கிறார்!

 
 "திருமணம் பேசி முடிக்கும் முன்னாலேயே அவர்கள் வேறு மதத்தவர் என்று உங்களுக்குத் தெரியாதா?"

'தெரியும்.

 ஆனால் வசதியுள்ள குடும்பம். இந்தப் பெண்ணை விட்டால் இந்த அளவிற்கு வசதியுள்ள பெண் கிடைப்பது அரிது.

 ஆகவே பேசி முடித்து விட்டோம்.

 திருமணத்திற்குப் பின்னால் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்."

ஐயோ! பாவம்! பங்கு சுவாமியார்!

சுனாமி வருமுன் பாதுகாப்பிற்கு வழிகாட்டலாம். சுனாமி வந்தபின்!!

பங்கு சுவாமியாரை இயங்க விடாமல் முட்டுக்கட்டை போடுபவர்கள் பங்கு மக்கள் தான். 

திருமணம் முழுக்க முழுக்க ஒரு ஆன்மீகக் காரியம், ஏழு தேவ திரவிய அனுமானங்களில் ஒன்று.

குருக்கள், ஆயர்கள், கர்தினால்கள், பாப்பரசர் உட்பட திருச்சபையின் அனைத்து 
ஆளுநர்களுக்கும் உற்பத்தி ஸ்தானம் திருமணம்தான்.  

மனுக்குலத்தின் ஆரம்பத்தில் இறைத் தந்தையே நேரடியாக நடத்தி வைத்த தேவ திரவிய அனுமானம் திருமணம் மட்டும்தான்!

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக நிகழ்ச்சியை ஆன்மீக வழிகாட்டிகளின் ஆலோசனை இன்றி நடத்தி வைப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்!

திருமணத்தின் போது உலகியல் ஆடம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் ஆன்மீகத்திற்கு கொடுப்பதிலேயே என்று நினைக்கும் போது உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருக்கிறது.

திருமண உறவு ஒரு ஆன்மீக உறவு.

 இறைவனின் படைப்புத் தொழிலில் அவருக்கு உதவிகரமாக இருக்கும் உறவு.

நமது புத்தி அந்த உறவை எப்படி பார்க்கிறது?

ஏதோ நமது உலக சிற்றின்ப வாழ்க்கைக்காக நாமே அமைத்துக்கொண்ட உறவாகவே அதைப் பார்க்கிறது. 

திருமண உறவின் நோக்கம் சிற்றின்பம் அல்ல, குழந்தை பேறு.

ருசி இல்லாதவன் உணவை சாப்பிட மாட்டான் என்பதால் இறைவன் திருமண உறவில் ஒரு ருசியைக் கொடுத்திருக்கிறார். 

உணவு ருசியாக இருக்கிறது என்பதற்காக மட்டும் அளவுக்குமீறி சாப்பிடுபவன் வயிற்று வலியால் சங்கடப் படுவான்.

இது திருமண ருசிக்கும் பொருந்தும்.

திருச்சபையின் ஒழுங்கின்படி நடக்காத,

சரி செய்யப்படவேண்டிய

 தாறுமாறான கல்யாணங்கள் நிறைய நமது மக்களிடையே இருக்கின்றன.

எப்படியும் வாழ்ந்துகொண்டு கோவிலுக்கு வரி கொடுத்தால் மட்டும் போதும் என்று எண்ணுகின்ற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

திருச்சபைக்கு வெழியே திருமணம் முடித்த ஒரு நண்பர் பெருமையுடன் கூறுகிறார்,

"நான் நம்மூர்ல நன்மை வாங்க மாட்டேன். சாமியார் தரமாட்டார். ஆனால் வெளியூர் கோயில்களுக்குப் போகும்போது வாங்குவேன்."

சுதந்திர தினத்தன்று மிட்டாய் வாங்குவது போல நற்கருணையை வாங்கும் கிறிஸ்தவர்களுக்கும் இறைவன் கொடுத்த புத்தி இருக்கிறது.

கத்தியைத் தவறாக பயன்படுத்தினால் என்ன விளைவு ஏற்படுமோ

 அதைவிட மோசமான விளைவு புத்தியை தவறாய்ப் பயன்படுத்தினால் ஏற்படும்!

"கிறிஸ்தவனாக இருந்துகொண்டு லஞ்சம் வாங்குகிறாயே | இது பாவம் இல்லையா?"

"பாவம் கடவுளுக்கு எதிரானது தானே.  

அவரை சரிக்கட்ட லஞ்சத்தில் பாதியைக் கோவிலில் காணிக்கையாகப் போட்டுவிடுவேன் அல்லது ஏழைகளுக்கு கொடுத்துவிடுவேன்."

 கடவுள் கொடுத்த புத்தியை கடவுளுக்கு எதிராகவே பயன்படுத்துபவர்களைப் பற்றிக் கூற வார்த்தைகளே இல்லை!

திருச்சபையின் ஒழுங்கு முறைகளைச் சரியாக அனுசரிக்காமல்

 கோவில் கட்டவும், திருவிழா கொண்டாடவும் நிறைய நன்கொடைகள் கொடுப்பதாலேயே  

முக்கியமான கிறிஸ்தவர்களாக பங்கு மக்களால் கருதப்படுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

இவர்கள் விசுவாசத்தின் அடிப்படையில் தங்கள் புத்தியைப் பயன்படுத்தாதவர்கள்.

"தம்பி, ஞாயிற்றுக் கிழமை பூசை முடிந்தவுடன் ஞானோபதேச வகுப்பு நடக்கிறதே, அதற்கு ஏன் வருவதில்லை?"

"அடுத்த மாதம் Public Exam. அதற்காக tuitionக்குப் போக வேண்டியிருக்கிறது."

ஞான காரியங்களைத் தியாகம் செய்து விட்டுத் தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்:

விசுவாசத்தின் பார்வையில் இறைவனுக்குதான் முதலிடம்.

இறை உறவோடு கூடிய விசுவாச வாழ்க்கையில் நாம் தான் adjust செய்து கொள்ள வேண்டும்.

கடவுளைப் பார்த்து,

"சாமி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.

வேலை இல்லாத போது தான் உங்களை பார்க்க முடியும்.

கொஞ்சம் adjust செஞ்சுக்கோங்க."

 என்று சொல்லக் கூடாது.

"இன்று ஞாயிற்றுக்கிழமை ஏன் காலையில் திருப்பலிக்கு வரவில்லை?"

"ஒரு முக்கியமான business meeting இருந்தது."

"இயேசுவை விட முக்கியமாக யாரும் meetingக்கு வந்திருந்தார்களா?"

"நீ கேட்பதன் அர்த்தம் புரிகிறது. இயேசு எப்பொழுதும் நமக்குள்ளே தான் இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.

ஆனால் business meeting இருக்கும் போது தானே போக முடியும்."

"அதாவது திருப்பலியை விட business meeting தான் முக்கியம் என்று உனது புத்திக்கு படுகிறது, அப்படித்தானே."

"meeting க்குப் போகாவிட்டால் business ல நஷ்டம் வர வாய்ப்பிருக்கு."

"30 வெள்ளிக் காசு......."

"stop, என்னை யூதாஸ் என்கிறாயா?"

"அதெப்படி 30 வெள்ளிக் காசுன்னு சொன்ன உடனே யூதாஸ் ஞாபகத்திற்கு வந்தான்?"

"அவன் தான் இயேசுவை விட பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தான்."

"அதாவது நீ திருப்பலியை விட business meeting க்கு முக்கியத்துவம் கொடுத்தது மாதிரி!"

நமது வாழ்க்கையை உலக அடிப்படையில் வாழ்ந்தால் அங்கு இயேசுவுக்கு முக்கியத்துவம் இல்லை.

விசுவாச அடிப்படையில் வாழ்ந்தால் இயேசுவை விட பணம் முக்கியமானது அல்ல.

நித்திய பேரின்ப வாழ்வை விட முடிந்துவிடும் சிற்றின்ப வாழ்வுதான் முக்கியம் என்று நினைப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்!

இயேசுவுக்காக ஒரு பேரரசின் தலைமைத் தளபதி பட்டத்தையே தூக்கி எறிந்த புனித செபஸ்தியார்,

அரசின் மந்திரி பதவியையே தூக்கி எறிந்த புனித தாமஸ் மூர்

போன்று விசுவாச வழி வாழ்ந்தவர்கள் தான் நமக்கு முன்மாதிரிகை.

கடவுள் தந்த புத்தியின் சிந்தனைகளில் முதல் இடம் பெற வேண்டியது கடவுள் மட்டுமே.

சிந்தனைகள் செயலில் இறங்க வேண்டியது கடவுளுக்காக மட்டுமே.

"எல்லாம் உமக்காக,

இயேசுவின் திவ்ய இருதயமே,

 எல்லாம் உமக்காக.''

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment