(தொடர்ச்சி)
"இறந்தவர்களை உங்களால் பார்க்க முடியாது.
உங்களோடு பேச அவர்களுக்கு வாய் இல்லை.
நீங்கள் அவர்களோடு பேசுவது போல் கற்பனை செய்து கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்."
"நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்
புனிதர்கள்களோடு நாங்கள் கொண்டிருக்கும் உறவு ஆன்மீக உறவு.
இரண்டு ஆன்மாக்கள் பேசுவதற்கு வாய் தேவை இல்லை. நமக்கு உள்ள புத்தி, மனது, இதயம் (உடல் இதயம் அல்ல) என்ற மூன்றும் ஆன்மாவை சேர்ந்தவை
புத்தி சிந்திக்கிறது. மனது சிந்தனைகளை சேமித்து வைக்கிறது. இதயம் நேசிக்கிறது.
உத்தரிக்கிற நிலையில் அல்லது விண்ணகத்தில் இருக்கிற நமது உறவினரோடு
நமது மனது மூலமாக எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
எண்ணங்களை பரிமாற வேண்டுமென்ற நோக்கத்தோடு நினைத்தாலே நமது எண்ணங்கள் அவருடைய மனதுக்கு மாற்றப்படும்.
நாம் இறைவனோடு ஜெபிப்பதும் இதே முறையில் தான்.
இறைவனுக்கு நாம் சொல்லாமலேயே நமது மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியும்.
ஆனாலும் நாம் நமது எண்ணங்களை இறைவனிடம் தெரிவிக்க நமது மனதைத்தான் பயன்படுத்த வேண்டும்.
அதனால்தான் ஜெபம் உள்ளத்தில் இருந்து வர வேண்டும் என்று சொல்லுகிறோம்.
உள்ளத்தில் வேறு எதையாவது நினைத்துக் கொண்டு வாய் வழியாக எதைச் சொன்னாலும் அது ஜெபம் ஆகாது.
புனிதர்களை நோக்கி நாம் ஜெபிக்க வேண்டும் என்றாலும் நமது உள்ளத்தை அவர்களது உள்ளத்தோடு இணைத்து நமது எண்ணங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இந்த முறையில் தான் வார்த்தைகளே இல்லாத தியானமும் செபமாக மாறுகிறது.
விண்ணகத்தில் உள்ளவர்களோடு நமது கருத்துக்களை நம்முடைய மனது மூலமாகத்தான் பரிமாறிக் கொள்கிறோம்.
புரிந்துகொள்ள மனது உள்ளவர்களுக்கு இது புரியும்."
"இப்போது நாம் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்கிறோம்.
நான் உங்களிடம் பேசும்போது நீங்கள் நான் சொல்வதை கவனித்துக் கொண்டிருந்தால் இன்னொருவர் உங்களோடு பேச முடியாது.
அதாவது ஒரு நேரத்தில் ஒருவரோடு ஒருவர் மட்டும்தான் பேச முடியும்.
ஆனால் உலகிலுள்ள அத்தனை பேரும் ஒரே நேரத்தில் அன்னை மரியாளிடம் ஜெபிக்கும்போது அவர்களால் எப்படி அத்தனை பேருடைய ஜெபங்களையும் கவனிக்க முடியும்?"
"இதை புரிந்துகொள்ள சில அடிப்படை உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும்.
உலகில் நாம் இடத்தில் (space,)
காலத்தில் (time) வாழ்கிறோம்.
ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இன்னொரு பொருள் இருக்க முடியாது.
ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும்.
அதாவது ஒரே நேரத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இருக்க முடியாது.
ஆனால் விண்ணகத்தில் இடமுமில்லை, காலமும் இல்லை.
விண்ணகம் ஒரு வாழ்க்கை நிலை. (State of life)
ஒரு ஊசி முனையில் கோடானுகோடி பங்கில் ஒரு பங்கு இடத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
விண்ணக வாசிகள் அனைவரும் இருப்பதற்கு அவ்வளவு இடம் கூட தேவையில்லை. இடமே தேவையில்லை.
காலம் இல்லாததால் நேர இடைவெளியும் கிடையாது,
ஆனாலும் அவர்களைப் பற்றி பேசும்போது நமது மனித அனுபவ அடிப்படையில் பேசினால்தான் நமக்குப் புரியும். ஆனால் மனித அனுபவம் அவர்களுக்கு பொருந்தாது.
மனித அனுபவத்தில் நாம் ஒருவரோடு பேச வேண்டும் என்றால் அவர் நமது அருகில் இருக்க வேண்டும்.
நமது அனுபவ அடிப்படையில் அன்னைமரியாளோடு அது நாம் பேசவேண்டும் என்றால் அன்னை நமக்கு அருகே இருக்க வேண்டும்.
நாம் பேச நினைக்கும் போது மரியாளின் மனது நமக்குள் இருக்கும்.
நாம் அன்னையோடு பேசும் அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு நபரும் பேச வேண்டுமென்றால்
விண்ணக நிலையில் கால, இட இடைவெளியில் இல்லாததால் அன்னையின் மனது அங்கும் இருக்கும்.
எத்தனை பேர் பேசினாலும் அத்தனை பேர் மனதிலும் அன்னையின் மனது இருக்கும்.
அன்னையின் மனதிற்கு வந்த அத்தனை விண்ணப்பங்களும் இறைவனின் பாதத்தில் உடனே சமர்ப்பிக்கப்படும்.
இந்த விளக்கம் ஒவ்வொரு புனிதருக்கும் பொருந்தும்."
"கால இடைவெளி இல்லை என்பதை கொஞ்சம் புரியும்படியாக சொல்லுங்களேன்."
"நல்ல கள்ளன் விண்ணகம் போய் எத்தனை ஆண்டுகள் இருக்கும்?"
"1,988 ஆண்டுகள் ஆகின்றன."
"இப்போது நீங்கள் மோட்சத்திற்கு போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்."
"ஹலோ! என் மேல உங்களுக்கு என்ன கோபம்?"
" மோட்சத்திற்கு போகிறீர்கள்
என்றுதானே சொன்னேன்."
"சரி, விளக்குங்கள்."
"உலக கணக்குப்படி 1,988 ஆண்டுகள் கழித்து போயிருந்தாலும் நித்திய கணக்கு படி நல்ல கள்ளன் கூட தான் போயிருப்பீர்கள்.
இருவருக்கு மத்தியிலும் ஒரு வினாடி கூட இடைவெளி இல்லை."
"நான் நம்ப மாட்டேன்."
"அது உங்கள் இஷ்டம். கடவுள் காலங்களுக்கு அப்பாற்பட்டவர்.
நாம் காலத்தில் வாழ்பவர்கள்.
காலத்திற்கு துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு.
கடவுள் நித்தியத்தில் வாழ்பவர்.
நித்தியத்திற்கு துவக்கமும் இல்லை. முடிவும் இல்லை.
நமக்கு புரியும்படியாக சொல்வதானால் அவர் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்பவர்.
கடவுள் மோயீசனுக்குத் தன்னை அறிமுகப்படுத்தும்போது
"இருக்கிறவர் நாமே." (யாத். 3:14)
என்றுதான் கூறினார்.
நமது கால கணக்குப்படி ஒரு கோடி ஆண்டுகளுக்கு பின்னால் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளும்,
ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளும் கடவுள் மனதில் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.
கி.மு. நூறுகோடிக்கும்,
கி.பி.நூறுகோடிக்கும் இடையில் ஒரு வினாடி கூட இடைவெளி இல்லை.
காலத்தை ஒரு கோட்டிற்கு ஒப்பிட்டால் நித்தியத்தை ஒரு புள்ளிக்கு ஒப்பிடுவார்கள்."
"சொல்வது புரிகிறது. சொல்லப்படுவதுதான் புரியவில்லை.
பரவாயில்லை. அடுத்த கேள்வி.
கடவுள் மாறாதவர் தானே!"
" ஆமா. கடவுள் மாறாதவர்."
"நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நித்திய திட்டம் (Eternal plan) வைத்திருப்பார் அல்லவா?"
"ஆமா."
"மாறாத கடவுள் புனிதர்களின் பரிந்துரையை கேட்டு எப்படி தன் திட்டத்தை மாற்றுவார்?
மாற்றவே மாட்டாரென்றால் புனிதர்கள் பரிந்துரைத்து என்ன பயன்?"
"நாம் திட்டங்கள் தீட்டுவதற்கும் கடவுள் திட்டம் போடுவதற்கும். பார தூர வித்தியாசம் உள்ளது.
மாதத்திற்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
மாத சம்பளம் எவ்வளவு என்று நமக்கு தெரியும்.
என்ன செலவுகள் மாதத்தில் இருக்கும் என்பதை அனுமானித்து
அதன் அடிப்படையில் வரவு, செலவு சேமிப்பு திட்டம் தயாரித்து வைத்திருப்போம்.
16ஆம் தேதி செலவு எதிர்பாராத செலவு ஒன்று வந்து நமது சேமிப்பை சாப்பிட்டு விடும்.
ஆனால் இறைவன் சர்வ ஞானம் உள்ளவர்.
காலங்களுக்கு முன்னரே, நித்திய காலமாக
எப்பெப்போ என்ன நடக்கும்,
தங்கள் சுதந்தரத்தைப் பயன்படுத்தி
யார் யார் எப்படி எப்படி செயல்படுவார்கள்,
யார் யார் என்னென்ன உதவி கேட்டு ஜெபிப்பார்கள்,
என்றெல்லாம் அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.
யார் யாருடைய ஜெபத்தை எந்த அளவு நிறைவேற்ற வேண்டும்
யார் யாருடைய ஜெபத்தை, அவர்களின் நலன் கருதி, நிறைவேற்றக் கூடாது
என்று நித்திய காலமாகவே திட்டமிட்டு விடுவார்.
இன்றைய ஜெபத்திற்கான பதில் நித்திய காலமாகவே இறைவனிடம் தயாராக இருக்கிறது.
ஆதாம் ஏவாளுடைய பாவம் காலத்தில் நடந்தது.
அவர்கள் பாவம் செய்வார்கள் என்று நித்தியமாகவே இறைவனுக்குத் தெரியும்.
ஆகவேதான் மீட்பரை அனுப்புவதற்காக திட்டமும் நித்திய காலமும் தயாராக இருந்தது.
(நான் எழுதுவது காலத்தில், ஆகவேதான் வினைச்சொல்லை இறந்த காலத்தில் போட்டிருக்கிறேன்.
உண்மையில் இறைவனுக்கு இறந்தகாலம், எதிர்காலம் எதுவும் கிடையாது.
நிகழ்காலம் என்ற வார்த்தை கூட காலத்தை சேர்ந்தது. நித்தியத்திற்கு பொருந்தாது. ஆனாலும் நமக்கு அந்த வார்த்தையை விட்டால் வேறு வார்த்தை கிடையாது. ஆகவே தான் இறைவன் நிகழ்காலத்தில் செயல்படுகிறார் என்கிறோம்.)
ஒருவன் பல ஆண்டுகள் பாவ வாழ்க்கை வாழ்ந்து விட்டு இன்று பாவசங்கீர்த்தனம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
இன்று குருவானவர் கொடுக்கும் பாவ மன்னிப்பு இறைவனிடம் நித்திய காலமாகவே தயாராக இருக்கிறது.
இறைவன் தனது முன்னறிவைப் பயன்படுத்தி நித்திய காலமாக திட்டமிடுவதால் அவர் மாறுவது இல்லை."
"நாங்கள் இறைவனிடம் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கிறோம்.
புனிதர்களைத்
தேடுவதில்லை, எங்கள் விண்ணப்பங்களை இறைவன் ஏற்கமாட்டாரா?"
"ஏற்கமாட்டார் என்று சொன்னேனா?
விண்ணகத் தந்தையை நோக்கி ஜெபிக்க இயேசுவே கற்றுக் கொடுத்திருக்கிறார்.
இறை குடும்பத்தைச் சேர்ந்த அனைவரோடும் உறவு வைத்துக்கொள்ள ஆசைப் பட்டால்
புனிதர்களோடும் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்.
'அப்பாவிடம் மட்டும்தான் பேசுவேன். வேறு ஒருவர் கூடவும் பேச மாட்டேன்' என்று நீங்கள் சொன்னால் நான் என்ன செய்ய முடியும்?
நாங்கள் குடும்ப உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
ஆகவேதான் புனிதர்களோடும் தொடர்பு வைத்திருக்கிறோம்."
லூர்து செல்வம்.