Saturday, October 31, 2020

பங்குச் சாமியார்னா யாரு?

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_31.html



   பங்குச் சாமியார்னா யாரு?
                 " * *



அனுபவசாலிகளின் பதில்.

"அம்மான்னா யாரு?"

"பால் கொடுப்பவள். பண்டம் கொடுப்பவள். பசிக்கும் போது சோறு கொடுப்பவள்."


"அப்பான்னா யாரு?"

"நேரம் கிடைக்கும்போது அடிப்பவர்."

" வாத்தியார்னா யாரு?"

"கையில ஒரு பிரம்பு இருக்கும். உள்ளங்கையில் எண்ணி எண்ணி அடிப்பார்."

"Headmaster னா யாரு?"

"வாத்தியார் அடித்து கை உளைந்து விட்டால், இவரிடம் அனுப்பி வைப்பார்."

"பங்குச் சாமியார்னா யாரு?"

"வாரம் ஒரு முறை கோவிலில் பிரசங்கம் வைப்பார். பள்ளிக்கூடமெல்லாம் நடத்துவார்.
எங்க அப்பா அவருடைய பள்ளியில் தான் வேலை பார்க்கிறார். மாதம் ஒண்ணாம் தேதி சம்பளம் கொடுப்பார். அவசரத்துக்குக் கடன் கொடுப்பார், ஆனால் அடுத்த சம்பளத்தில் பிடித்துக்கொள்வார்."


யாரைப் பற்றி யாரிடம் கேட்டாலும் அவரவர் அனுபவத்தில் இருந்து தான் பதில் வரும்.

பங்குச் சாமியார்னா யாரு?

பங்குச் சாமியார் என்பதை விட பங்குத் தந்தை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.

குடும்பத்தில் குடும்ப அங்கத்தினர்களின் வாழ்வுக்கு பெற்ற தந்தை பொறுப்பாய் இருப்பதுபோல,

பங்குமக்களின் ஆன்மீக வாழ்வுக்கு பொறுப்பாய் இருப்பவர்
பங்குத் தந்தை.

நமது ஆன்மீக மீட்புக்காக இயேசு தன்னையே அர்ப்பணித்தார்.

அவரது இடத்தில் இருந்துகொண்டு பங்கு மக்களின் ஆன்மீக மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்பவர் நமது பங்குத்தந்தை.

நாம் ஞானஸ்நானம் பெற்ற வினாடியிலிருந்து நமது ஆன்மீக பயணத்தில் நம்முடனே பயணித்து இறுதிநாளில் நம்மை விண்ணக வீட்டிற்கு அனுப்பி வைப்பவர் நமது பங்குத்தந்தை. 

'யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்படும்"

 என்று இறைவன் இயேசு கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி 

இயேசுவின் பெயரால் நமது பாவங்களை மன்னித்து 

நம்மை பரிசுத்தத்தனத்தில் வழிநடத்துபவர் நமது பங்குத்தந்தை.

நமது பாவங்களை மன்னிப்பதால்
அவர் நமது ஆன்மீக மருத்துவர்.

குடும்பங்களில் உள்ளவர்கள் உலகியல் ரீதியாக ஒரு குடும்ப மருத்துவரிடம் (family doctor) மருத்துவம் பார்ப்பதுண்டு.

அக்குடும்பத்திலுள்ள அனைவரின் உடல்ரீதியான எல்லா மருத்துவ விபரங்களும் அவருக்குத் தெரியும்

இது அவர்கள் மருத்துவத்திற்காக வரும்போது நோயைக் கண்டுபிடித்து மருந்து கொடுக்க உதவியாய் இருக்கும்.

அதேபோல் பங்காகிய ஆன்மீக குடும்பத்திற்கு பங்குத் தந்தைதான் ஆன்மீக மருத்துவர்.

பாவமன்னிப்பை மட்டுமல்ல ஆன்மீக ரீதியான எந்த வகை ஆலோசனைகளையும் நாம் அவரிடம் இருந்து பெறலாம்.

ஏனெனில் அவர்தான் நமது ஆன்மீக வழிகாட்டி.(Spiritual Director)

நமது ஆன்மீக பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய சக்தியும் பங்கு தந்தைக்கு உண்டு.

அடிக்கடி பங்கு தந்தையின் ஆலோசனையை பெறுபவர்கள் பரிசுத்த வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவார்கள்.

ஆன்மீக வழிகாட்டி என்ற முறையில் பங்குத் தந்தையின் ஆன்மீக ஆலோசனைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றலாம். 

அவர் நமது ஆன்மீகப் பயணத்தில் நம்முடனே பயணிப்பதால் 
 வழி தவறாமல் விண்ணகம் நோக்கி முன்னேறலாம். 

நம்மவர்களுக்கு பங்குத்தந்தையை ஆன்மீக ரீதியாக பயன்படுத்த தெரியவில்லை.

 காரணம் ஆன்மீகம் என்றாலே கோவிலுக்கு வருவதும்,

 வரி பிரித்துத் திருவிழா கொண்டாடுவதும்,

திருத்தலங்களுக்கு திரு யாத்திரை போவதும்,

கோவிலில்கள் கட்டுவதும்

மட்டும்தான் ஆன்மீகம் என்று அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த காரியங்களுக்காக மட்டுமே பங்குத் தந்தையை அணுகுகிறார்கள்.


உண்மையான ஆன்மீகம் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவில் வளர்வதுதான் என்பது அநேகருக்கு புரியவில்லை.

கோவில்கள், திருத்தலங்கள் திருவிழாக்கள் ஆகியவை இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஆன்மீக உறவை வளர்ப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

உண்மையான ஆன்மீக உறவை மறந்துவிட்டு வெளியரங்க ஆடம்பர விழாக்களில் மட்டும் கவனம் செலுத்துவது கிறிஸ்தவம் அல்ல.

இயேசு உண்மையான ஆன்மீக உறவை வளர்க்கும் நோக்கத்தோடு ஏழு தேவத்திரவிய அனுமானங்களை ஏற்படுத்தினார்.

ஆனால் நாம் ஞானஸ்நானத்தையே ஒரு விழாவாகத்தான் கருதுகிறோம்.

ஆகவேதான் ஞானஸ்நான விழாவிற்கு யார் யாரை அழைக்கலாம்,

 என்னென்ன விருந்து வைக்கலாம்,

 எப்படி ஆடம்பரமாக கொண்டாடலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம்.

  விழாவிற்கு வருகின்றவர்கள் என்னென்ன பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.


குழந்தையின் ஜென்ம பாவம் மன்னிக்கப்பட்டு, ஆன்மா பரிசுத்தம் அடைந்து இருக்கிறது என்பதற்காக மகிழ்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்?

ஞானஸ்நானத்தில் குழந்தை பெற்ற பரிசுத்தத்தனத்தில் 

அதை வளர்ப்பது எப்படி என்று திட்டம் தீட்டுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?


குழந்தையின் ஞான காரியங்களில் அக்கறை காட்டும் ஞான பெற்றோர் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

அதேபோன்று பையன் புதுநன்மை வாங்குவதையும் ஒரு ஆடம்பர விழாவாகத் தான் கொண்டாடுகிறார்கள்.


இறைமகன் இயேசு கன்னி மரியின் வயிற்றில் எடுத்த அதே உடலோடும் இரத்தத்தோடும் தங்களுடைய மகனிடம் வந்தார் என்பதற்காக மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெற்றோர் எத்தனை பேர்?

திருமணத்தை ஒரு தேவக் திரவிய அனுமானம் என்பதற்காக பெறுபவர்கள் எத்தனை பேர்?

தேவத் திரவிய அனுமானம் உள்ளார்ந்த அருளின் வெளியரங்க அடையாளம்.
(Visible sign of invisible grace)
 

நாம் உள்ளார்ந்த அருளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

வெளியரங்க அடையாளத்தை மட்டும் ஆடம்பர விழாவாக மாற்றிவிடுகிறோம்.

உள்ளார்ந்த அருளைத் தரும் கிறிஸ்துவின் இடத்திலிருந்து செயல்படும் குருவை வெறுமனே விழாவிற்கு தலைமை தாங்குபவராக மட்டும் நினைக்கிறோம். 


ஆன்மீக வாழ்வு உள்ளார்ந்தது
(Spiritual life is internal.)
என்று யாரும் நினைப்பதே இல்லை.

ஆகவே உள்ளார்ந்த ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை நம்முடைய ஆன்மீக வழிகாட்டியிடம் யாரும் கேட்பதில்லை.

நமது ஆன்மீக வாழ்வு நாம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் உள்ளரங்கமானவை.

வெளியே உள்ளவர்களின் அனுபவத்திற்கு எட்டாதவை.

ஆன்மீக போராட்டங்களை எப்படி சமாளிப்பது,

 எப்படி வெற்றி கொள்வது என்பதைப்பற்றி நாம் பேசவேண்டியது நம்முடைய பங்குத்தந்தையிடம் மட்டும்தான்.

அவர்தான் அதற்கான பயிற்சியை பெற்றிருக்கிறார்.

அவரால் மட்டுமே அதற்கான வழிகாட்டுதலைத் தர முடியும்.

அதற்காகத்தான் பங்குத் தந்தையை நாம் பயன்படுத்த வேண்டும்.

நமது ஆன்மீக வழிகாட்டியை நமது ஆன்மீக வளர்ச்சிக்காக முழுக்க முழுக்க பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Friday, October 30, 2020

விசுவாசத்தின் தந்தை.

       விசுவாசத்தின் தந்தை.
                   *           *           *

அபிரகாமை விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கிறோம்.

ஏன்?

"ஈசாக்கிடமிருந்து உனக்குச் சந்ததி தோன்றும்." (ஆதி. 21:12)

இவை ஆண்டவர் அபிரகாமிடம் கூறிய வார்த்தைகள்.


 "நீ அதிகம் அன்பு செய்யும் உன் ஒரே புதல்வனான ஈசாக்கைத் தரிசனைப் பூமிக்குக் கூட்டிக் கொண்டு போய், அங்கே நாம் உனக்குக் காட்டும் ஒரு மலையின் மீது அவனைத் தகனப்பலியாக ஒப்புக் கொடுப்பாய்."  
(ஆதி. 22:2)

இவையும் ஆண்டவர் அபிரகாமிடம் கூறிய வார்த்தைகள்.

அதாவது 

யாரிடமிருந்து அபிரகாமுக்குச் சந்ததி தோன்றும் என்று ஆண்டவர் கூறியிருந்தாரோ

 அவனையே தகனப்பலியாக ஒப்புக் கொடுக்கச் சொல்கிறார்.


இதை வாசிக்குப் போது நம்மிடம் ஒரு கேள்வி எழும்:

"ஈசாக்கை தகனப்பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டால் எப்படி அவரிடமிருந்து சந்ததி தோன்றும்?" 

ஆனால் அபிரகாமிடம் அந்தக் கேள்வி எழவில்லை.

ஏன்?

அவருடைய அசைக்கமுடியாத விசுவாசத்தின் காரணமாக.

அவர் இறைவனை முழுக்க முழுக்க விசுவசித்தார்.

இறைவன் மாறாதவர், கொடுத்த வாக்கை மீறமாட்டார் என்று விசுவசித்தார்.

ஆகவே

"ஈசாக்கிடமிருந்து உனக்குச் சந்ததி தோன்றும்."

என்ற ஆண்டவரின் வார்த்தைகளை   விசுவசித்தார்.

ஆகவேதான் அவனை தகனப்பலியாக ஒப்புக்கொடுக்க ஆண்டவர் சொன்னபோது மறுமொழி பேசாமல் பலியிடப் புறப்பட்டார்.

"எப்படியும் ஆண்டவரது வாக்கு நிறைவேறும். நமது பணி அவர் சொல்லுக்கு கீழ்ப்படிவதுதான்." 
இது விசுவாசத்தின் வெளிப்பாடு.

 

"இறைவன் வாக்குத் தவறாதவர்" என்பது விசுவாசம்.

"இறைவன் வாக்குத் தவறமாட்டார்" என்பது நம்பிக்கை.

அசைக்க முடியாத விசுவாசத்திடமிருந்து பிறப்பது,
அசைக்க முடியாத நம்பிக்கை.

அபிரகாமின் அசைக்க முடியாத விசுவாசத்தின் காரணமாகத்தான் அவரை "விசுவாசத்தின் தந்தை"
என்று அழைக்கிறோம். 

"விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம்"

என்ற வார்த்தைகளை

"நம்பிக்கை, எதிர்நோக்கு, இறையன்பு"

என்று மொழி அடிப்படையில் மாற்றியுள்ளார்கள்.

வார்த்தைகள் மாறலாம்,

சத்தியம் மாறுவதில்லை.


ஏற்கனவே இருப்பதை ஏற்றுக் கொள்வது விசுவாசம்.

எதிர்காலத்தில்  நடைபெறும் என்ற
உறுதி நம்பிக்கை.

 இறைவனை நேசிப்பது இறையன்பு.

சர்வ வல்லப இறைவன் இருக்கிறார். உலகைப் படைத்தவர் அவர்தான். (விசுவாசம்)

இறைவன் நிச்சயம் என்னை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்வார். (நம்பிக்கை)

இறைவனை முழுமனதோடு நேசிக்கிறேன். (இறையன்பு)

விசுவாசத்திலிருந்து பிறப்பது தான் நம்பிக்கையும், இறையன்பும்.

தேவசம்பந்தமான இந்த மூன்று புண்ணியங்களும் தான் நமது கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை.

அபிரகாம் விசுவாசத்தின் தந்தை.

நாம் அவரது விசுவாசத்தின் வாரிசுகள்.

விசுவாசம் இறைவன் நமக்கு அளித்த இலவசப் பரிசு.


படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களின் அடி மனத்திலும் கடவுள் நம்பிக்கை இருக்கும்.

உலகில் உள்ள அனைத்து சமயங்களும் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவைதான்.

நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று கூறுவார்கள்.

ஆனால் அவர்களது அடி மனத்திலும் கடவுள் நம்பிக்கை இருக்கும்.

ஒரு நாத்திகனை தூக்கிக்கொண்டுபோய், நடுக்கடலில் போட்டுவிட்டு அவனுக்குத் தெரியாமல் அவன் முகத்தைக் கூர்ந்து பாருங்கள்.

அவன் அடிமனத்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கை முகத்தில் எட்டிப் பார்க்கும்.

உயிருக்கு ஆபத்து என்றால் யாருடைய உதவியும் கிடைக்காவிட்டால் நாத்திகனும் கடவுளைத் தேட ஆரம்பித்துவிடுவான்.


நாம் கிறிஸ்தவர்கள்.

நம்மிடம் விசுவாசம் இருக்கிறது.

ஆனால் பெயரளவில்
விசுவாசம் இருந்தால் போதாது.


 "பரலோகத்தையும் பூலோகத்தையும் எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்."

என்று சொல்லுகிறோம்.

அதாவது நமது தந்தை சர்வவல்லவர் என்று ஏற்றுக் கொள்கிறோம். 

எல்லாம் வல்ல தந்தை எப்போதும் நம்முடனே இருக்கிறார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். 

ஆனால் நமது நடைமுறை வாழ்க்கையில் நம்மிடம் உள்ள கவலையையும், பயத்தையும் பார்த்தால்

 நமக்கு அப்படி ஒரு தந்தை இருப்பதையே மறந்து விடுகிறோமே!

ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறான் நண்பன் ஒருவன்.

வழியில் ஜவுளிக்கடை ஒன்றில் நல்ல design சேலை ஒன்று விற்பனைக்குத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.

கடைக்குள் சென்று விலையும் விசாரிக்கிறான்.

இரண்டாயிரம் ரூபாய்தான்.

ரூபாய் இருந்தால் வாங்கலாம். 

அடுத்த மாதம் பார்ப்போம்.

சேலையைப் பார்த்து ஏங்கிக் கொண்டே வாங்காமலேயே வந்துவிட்டான்.

வீட்டிற்கு வந்தவுடன் மனைவியிடம்:

"வரும் வழியில் கடையில் மிக அழகான சேலை ஒன்று விற்பனைக்கு தொங்கிக்கொண்டிருந்தது.

 உனக்காக வாங்க ஆசைப்பட்டேன். 2000 ரூபாய்தான்.

 கையில் காசு இல்லை.

 ஆசையை மட்டும் கொண்டு வந்திருக்கிறேன்." 

"ஏங்க, இன்று முதல் தேதி ஆயிற்றே, ஆபீசில்   சம்பளம் போடவில்லையா?"

"Sorry. மறந்தே விட்டது. இந்தா கவர்."

"உள்ளே 2000 ரூபாய் கூட இல்லையா?"

"நல்லா எண்ணிப் பார்த்துக்கோ. ஒரு இலட்சம் இருக்கு."

"ஒரு இலட்சத்தில்
 2000 இல்லையா?"

"ஏண்டி, கணக்கு test வைக்கிறியா?"

"இல்லை, சேலை test."

"ஆஆமா... கடையில் நிற்கும்போது ஞாபகம் வரவில்லை பார்த்தாயா!
சரியான மடையன்."


எல்லாம் வல்ல கடவுளை உள்ளத்தில் வைத்துக்கொண்டே பயந்துகொண்டே  வாழ்கிறோமே, நம்மை விடவா பெரிய மடையன்!

கடவுளும் உள்ளத்தில்,  பயமும் உள்ளத்தில்!

"ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?"

 என்று இயேசு நம்மிடம் கேட்கிறார்.

இறைவனை மீறி எதுவும் நடக்காது,

 நடப்பதெல்லாம் அவரது அனுமதியுடன் நமது நன்மைக்காகவே நடக்கும்,

என்று ஏன் நமது புத்திக்கு எட்டவில்லை?

வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையா?

கவலையே வேண்டாம்.

பிரச்சினையை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு நமது கடமையை ஒழுங்காகச் செய்வோம்.

பிரச்சினைக்கு கடவுள் கட்டாயம் தீர்வு தருவார் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

தீர்வு வரும் போது அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். 

"நம்புங்கள், ஜெபியுங்கள், நல்லது நடக்கும்."

என்று பாடல் வரி ஒன்று உண்டு.

"நம்பிக்கையோடு ஜெபிக்கும் போது எது நடந்தாலும் அது நல்லதுதான்" 

என்பது வரிப் பொருள்.

அதாவது, ஜெபத்தின் பலனாகக் கிடைப்பது நல்லதா, இல்லையா என்று ஆராய்வது, கடவுளையே சந்தேகப்படுவது போல் ஆகிவிடும்.

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற ஆழமான விசுவாசம் வேண்டும்.

புனித சூசையப்பர் மாதாமேல்  சந்தேகப்பட்டு அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது,

கடவுளின் தூதர்  அவரிடம், அவள் கருவுற்றிருப்பது இறைமகனே சொன்னவுடன் விசுவசித்து மாதாவை ஏற்றுக்கொண்டார்.

 இயேசு பிறந்த பின் இறைத்தூதர் மீண்டும் அவருக்குத் தோன்றி,


  "எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். 

நான் சொல்லும்வரை அங்கேயே இரும். 

ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" 


என்று சொன்னபோது,

"குழந்தை இறைமகனானால் ஏன் ஒரு மனிதனுக்குப் பயந்து ஓட வேண்டும்"

என்று ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை.

அவரது விசுவாசம் தளரவேயில்லை.

தூதர் சொன்னவுடன்

"எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்."

இறைமகனின் வல்லமை மீது அவருக்கு எள்ளளவும் சந்தேகம் வரவில்லை.

இறைவன் கொடுத்த கட்டளைக்கு எதிர் விளக்கம் கேட்காமல் கீழ்ப்படிந்தார்.

நாமும் சூசையப்பரைப் போலவே செயல் பட வேண்டும். 

நம்மை இயக்க வேண்டியது நம்முடைய அறிவு அல்ல,

நம்முடைய விசுவாசம்.

தேர்வு எழுதிவிட்டு அதில் வெற்றி வேண்டுமென்று இறைவனிடம் வேண்டுகிறோம்.

ஆனால் தோல்வி கிடைக்கிறது.

கொஞ்சம் கூட மனதில் கவலைப் படாமல்,

"இதுவே இறைவன் சித்தம்."  என்ற விசுவாச உணர்வோடு 

தோல்வியை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் ஆசைப்பட்ட படி கடவுள் நடக்க வேண்டும் என்ற எண்ணம் வரவே கூடாது.

கடவுள் ஆசைப்பட்டபடிதான் நாம் நடக்க வேண்டும்.

"எது நடந்தாலும் இறைவன் சித்தமே"

 என்று விசுவசித்து வாழ்பவன் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும்.


"எனது விருப்பப்படியே எல்லாம் நடக்க வேண்டும்"

 என்று நினைப்பவன் வாழ்வில் மகிழ்ச்சியும் இருக்காது, திருப்தியும் இருக்காது.

"இறைவா, உமது சித்தமே எனது பாக்கியம்"

என்ற உணர்வுடன் வாழ்வோம்.

அதுதான் இறைவன் தரும் வாழ்வு.

லூர்து செல்வம்.
 

Wednesday, October 28, 2020

இறைப்பிரசன்னத்தில் வாழ்வோம்.

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_28.html

இறைப்பிரசன்னத்தில் வாழ்வோம்.
______________________________________



நமது வாழ்க்கை நமது விசுவாசத்தின் அடிப்படையில் அமைய வேண்டும்.

நமது வாழ்க்கையை ஒரு கட்டிடத்திற்கு ஒப்பிட்டால் அதன் அஸ்திவாரம் நமது விசுவாசம். 

அஸ்திவாரம் எவ்வளவு பலமாய் இருக்கிறதோ, அந்த அளவுக்கு கட்டடமும் பலமாய் இருக்கும்.

நமது விசுவாசம் நாம் விசுவசிக்கும் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டது.

விசுவாச சத்தியம் வெறும் வார்த்தைகளில் அடங்கியிருக்க வில்லை.

காலப்போக்கில் வார்த்தைகளின் பொருள் மாறலாம், ஆனால் விசுவாசம் மாறாது.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்று விசுவசிக்கின்றோம்.

அந்த அடிப்படையில் அவர் நமக்குள்ளும் இருக்கிறார்.


கடவுள் எப்போதும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

God is always active.

கடவுள் நமக்குள் இருப்பதை நாம் விசுவசித்தால் மட்டும் போதாது, உணரவேண்டும்.

 உணரும்போதுதான் அவர் செயலாற்றிக்கொண்டிருப்பது நமக்குத் தெரியும்.

நமது வீட்டில் உணவு இருக்கிறது.

அது எப்போது நமக்குப் பயன்படுகிறது?.

நாம் அதை உண்ணும் போது.

எப்போதும் ஹோட்டலில் போய் உண்பவனுக்கு வீட்டில் இருக்கும் உணவால் எந்தப் பயனும் இல்லை.

நம்முள் இருக்கும் இறைவனை உணர்ந்து, அவரோடு உறவில் இருந்தால்தான் அவர் நம்முள் இருப்பதன் பயனை அனுபவிப்போம்.

அவரோடு உறவில் இல்லாவிட்டால் அவர் நமக்குள் செயலாற்றிக் கொண்டிருப்பது நமக்குத் தெரியாமலே போய்விடும்.

"பரிசுத்த ஆவி இறங்கி வருகிறார்." என்று சொல்லுகிறோம். நாம் சொல்வது வார்த்தைகள்.

"இறங்கி வருகிறார்" என்ற வார்த்தைகளுக்கு தமிழ் அகராதிப்படி அர்த்தம் பார்த்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும்.

நாம் flight ல் பறக்கும்போது தரையில்
 இருக்க மாட்டோம்.

தரையில்இறங்கிய பின் flight ல் இருக்க மாட்டோம்.

நம்மால் ஏதாவது ஒரு இடத்தில்தான் இருக்க முடியும்.

ஆனால் பரிசுத்த ஆவி எங்கும் இருக்கிறார்.

 அவரால் எங்கும் ஏறவும் முடியாது இறங்கவும் முடியாது.

அப்படியானால் இறங்கி வருகிறார் என்பதற்கு என்ன பொருள்?

'இறங்கி வருகிறார்' என்ற வார்த்தைகள் பரிசுத்த ஆவி நம்முள் செயலாலாற்றுவதையே குறிக்கும்.

நமது ஞானஸ்நானத்தின் போது பரிசுத்த ஆவி    

 நமது ஜென்ம பாவத்தையும், கர்மப் பாவங்களையும் மன்னித்து நம்மை பரிசுத்தம் ஆக்குகிறார்.  

நமது உறுதிப்பூசுதலின்போது  

 நம்மை திடப்படுத்துகிறார்.
 
நமது ஞானஸ்நானத்தின் போதும், உறுதிப்பூசுதலின்போதும் ஏற்கனவே பரிசுத்த ஆவி நம்முள் இருந்தார், 

இன்றும் இருக்கிறார், 

நாளையும் இருப்பார்.

இவ்வுலகில் நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்கவேண்டுமென்றால்

பரிசுத்த திரி ஏக தேவன் நம் உள்ளத்தில் எப்போதும் வாழ்கிறார் என்ற உணர்வோடு நாம் ஒவ்வொரு வினாடியும் வாழ வேண்டும்.

நாம்  அவருக்கு விரோதமாகப் பாவம் செய்தாலும் அவர் நம் உள்ளத்தை விட்டுப் போகமாட்டார்.

பாவம் இல்லாமல் பரிசுத்த நிலையில் இருந்தால் நாம் அவரோடு உறவு நிலையில் இருப்போம்.

பாவம் செய்து அவரோடு இருந்த உறவு நிலையை முறித்துக் கொண்டாலும்கூட, 
'
நாம் திரும்பவும் உறவை ஏற்படுத்திக்கொள்வதற்காக நம் உள்ளே நமக்காகக் காத்துக் கொண்டிருப்பார்.

உள் தூண்டுதல்களைக் கொண்டு நமக்கு அழைப்பை விடுத்துக் கொண்டேயிருப்பார்.

அவரது அழைப்பை ஏற்று, நாம் நமது பாவங்களுக்காக வருத்தம் தெரிவித்தால் 

அவர் நம் பாவங்களை மன்னித்து தம் உறவில் நம்மை இணைத்துக் கொள்வார்.

அவருடைய உறவு நிலையில் இல்லாமல் நாம் செய்யும் எந்த செயலுக்கும் ஆன்மீக ரீதியாக எந்த மதிப்பும் (value) கிடையாது.

அவருடைய உறவு நிலையில் நமது ஒவ்வொரு அசைவுக்கும் கூட மதிப்பு உண்டு.

பாவ நிலையில் நாம் செய்யும் எந்த செயலும் செல்லாத ரூபாய் நோட்டு மாதிரி.

நமது வாழ்வு ஆன்மீக ரீதியாக பயன் உள்ளதாக இருக்க வேண்டு மென்றால்,

 நமது ஆன்மா எப்போதும் பரிசுத்த நிலையில் இருக்க வேண்டும்.

நமது இருதயம் துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடியும்தான் உயிர் வாழ முடியும்.

இதயத்துடிப்பு நின்றவுடன்  உயிர்த் துடிப்பும் நின்றுவிடும்.

அதே போல்தான் பரிசுத்த நிலையில்தான் நமது ஆன்மா வாழும்.

பாவம் செய்த வினாடியில் ஆன்மா மரணித்து விடும். அதாவது இறையருள் நிலையை இழந்துவிடும்.

இதைத்தான் பாவத்தின் விளைவு மரணம் என்கிறோம்.

பாவ மன்னிப்புப் பெறுவதன் மூலம் இறந்த ஆன்மாவை உயிர்ப்பித்து விடலாம்,

 அதாவது ஆன்மா உடலோடு இணைந்து இருக்கும் போது.

அதாவது உலக ரீதியாக உயிர் வாழும் போது.


ஆன்மா இறந்த நிலையிலேயே உடலை விட்டுப் பிரிந்துவிட்டால் இறந்தது இறந்ததுதான்.

 ஆகவே உலகில்   உயிர் வாழும் போது  நமது ஆன்மாவும் வாழ வேண்டும்.

அதாவது இறை அருள் நிலையில் இருக்க வேண்டும்.

நாம் இறை அருள் நிலையில் இருந்தால் நம்முள் இறைவன் வாழ்வது நமது உணர்வில் இருக்கும்.

இந்த உணர்வில் வாழ்வது தான் இறை பிரசன்னத்தில் வாழ்வது.

எப்போதும் இறை பிரசன்னத்தில் வாழ்ந்தால் நமக்குள் பாவம் நுழைய முடியாது.

எப்போதும் இறை பிரசன்னத்தில் வாழ்ந்தால் விண்ணக வாழ்வின் பேரின்பத்தின் அளவைக் கூட்டலாம்.

விண்ணக வாழ்வின் பேரின்பத்தின் அளவு மண்ணுலகில் நாம் சம்பாதிக்கும் அருள் வரங்களை பொருத்தது.

மண்ணுலகில் நாம் சம்பாதிக்கும் அருள் வரங்களின் அளவு இறைவனுக்காக இவ்வுலகில் நாம் செய்யும் நற்செயல்களின் அளவை பொறுத்தது.

இறைவனுக்காக இவ்வுலகில் நாம் செய்யும் நற்செயல்களின் அளவு நாம் இறைப் பிரசன்னத்தில் வாழக்கூடிய கால அளவைப்   பொருத்தது.

இவ்வுலகில் நமது தந்தையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

வழியில்  நமக்குக் கிடைக்கும் பொருட்களை   அவ்வப்போது நமது தந்தையிடம் கொடுத்து வைப்பதாக வைத்துக் கொள்வோம்.

நாம் வீட்டிற்கு வந்தவுடன் நமது தந்தையிடம் நாம் கொடுத்த பொருள்கள் எல்லாம் பத்திரமாக இருக்கும். அவற்றை நாம் வீட்டில் இருக்கும்போது அனுபவிக்கலாம்.


ஆனால் நாம் தனியாக பயணித்திருந்தால் நமக்கு கிடைத்தவற்றை அப்போதே செலவழித்திருப்போம். வீட்டிற்கு வந்தவுடன் அதிகப்படியாக நமக்காக ஒன்றும் இருக்காது.


அதேபோல்தான் நமது ஆன்மீக வாழ்விலும் இறைப்  பிரசன்னத்தில் நாம் பயணித்தால்

 நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நம்முடன் இருக்கும் இறைவனிடம் ஒப்புக் கொடுத்திருப்போம்.

 அவை எல்லாம் நற்செயல்களாக மாறியிருக்கும்.

தூங்கும்போது இறை பிரசன்னத்தில் நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் கூட நற்செயலாக மாறி இருக்கும்.

இரவில் படுக்கும் போதே இறைவனின் மடியில் தலைவைத்து படுப்போம்.

"தந்தையே இன்றைய இரவை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்"

 என்று சொல்லி விட்டுதான் தூங்க ஆரம்பிப்போம்.

 ஆகவே தூக்கத்தின் போது நாம் செய்யும் எல்லா செயல்களும் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு  விடுகின்றன.

 இறைப் பிரசன்னத்தில் இரவும் பகலும் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் விண்ணகத்தில்  பலன் உண்டு.

அவற்றிற்குரிய பலன் விண்ணகத்தில் நமது கணக்கில் ஏறி இருக்கும்.

இறைப் பிரசன்னத்தில் நமது இரவையும் பகலையும் செலவிட்டால் இறைவனுக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டோம்.

வகுப்பில் ஆசிரியருக்கு முன்னால் அமர்ந்திருக்கும்போது ஆசிரியருக்குப் பிடிக்காத எதையும் செய்கிறோமா?

அதே போல் தான் இறைவனுக்கு முன்னால் நாம் செயல் புரியும்போது 

அவருக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டோம்.

அவருக்கு பிடித்தமான காரியங்களை மட்டுமே செய்வோம்.

நமது வாழ்வு புண்ணியங்கள் நிறைந்த வாழ்வாக இருக்கும்.

அதற்குறிய எல்லா பயன்களும் நித்திய வாழ்வை அடையும்போது நமக்கு வந்து சேரும்.

ஒரு நாள் ஒரு சிறு பையன் தங்கையிடம் கூறினான்,

"தங்கச்சி, இரவில் நாமெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தபோது அம்மா நிறைய வடை செய்து வைத்திருக்கிறார்கள்.

அநேகமாக ஏதாவது சடங்கு வீட்டிற்குக் கொண்டு போவதற்காக இருக்கலாம்.


அங்க வச்சிருக்க  இடம்  எனக்கு தெரியும்.

வாரியா, அம்மாவுக்குத் தெரியாம ஒரு பத்து வடய நாம எடுத்து சாப்பிடுவோமா?"

"தெரியாம எப்படிச் சாப்பிட முடியும் ?"

"தெரியாம எடுத்து விட்டு வருவது என் பொறுப்பு.

அம்மாக்கிட்ட ' விளையாடப் போறோம்'னு சொல்லிட்டு, மாடிக்குப் போயிடுவோம்.

அம்மா வேலையில busy யா இருக்காங்க. 

அப்பா ஆபீசுக்கு போய்ட்டாங்க.

நாம் வட சாப்பிடறத யாருமே பார்க்க மாட்டாங்க. சரியா?"

"நீ மட்டும் போய்ச் சாப்பிட வேண்டியதுதான. நான் வட கேட்கலிய."

"எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத்தான். நான் மட்டும் சாப்பிட்டா நீ அம்மாக்கிட்ட போட்டுக் கொடுத்துட்டா?"

"சரி. ஆனால் யாரும் பார்க்க முடியாத இடமா இருக்கணும்."

"வீட்ல நம்மையும் அம்மாவையும் தவிர வேறு யாருமில்ல.

அம்மா வேலைய போட்டுட்டு மாடிக்கு வரமாட்டாங்க.

வேறு யார் நம்ம பார்க்க முடியும்?"

"ஏன்? கடவுள் இருக்கார! அவர் எங்கும் இருக்கார். மாடிய விடு. உங்கிட்டையும், எங்கட்டையும்தான் இருக்கார். நாம் எங்க போனாலும் நம்ம கூடவேதான் இருப்பார்!

தெரியாம எடுத்தா களவு. வேண்டாம். வா, அம்மாட்ட கேட்டு வாங்கிச் சாப்பிடுவோம்."

இறைப் பிரசன்னத்தில் வாழ்வோம். 

அவருக்கு வேண்டியதை மட்டும் செய்வோம்.

விண்ணகத்தை 
உரிமையாக்குவோம்.

லூர்து செல்வம்.

"எனவே, இனி நீங்கள் அந்நியரல்ல, வெளிநாட்டாருமல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர், கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்."(எபேசி. 2:19)

http://lrdselvam.blogspot.com/2020/10/219.html


"எனவே, இனி நீங்கள் அந்நியரல்ல, வெளிநாட்டாருமல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர், கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்."
(எபேசி. 2:19)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நாம் அனைவரும் கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கடவுளுடைய குடும்பம் எது?

கடவுளால் படைக்கப்பட்ட அனைவரும் அவருடைய குடும்பத்தினர்தான்.

மண்ணகத்தில் வாழ்வோரும் விண்ணகத்தில் வாழ்வோரும் உத்தரிக்கிற   ஆன்மாக்களும்   நமது குடும்பத்தில் உறுப்பினர்கள்.

எல்லோருக்கும் தந்தை ஒருவர்.

  எல்லோருக்கும் ஒருவருக்கொருவர் ஆன்மீக தொடர்பு உண்டு.

  எல்லா உறுப்பினர்களின் ஆன்மாக்களில் ஓடுவது நமது மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான்.

கிறிஸ்துவின் இரத்தம் தான் நமக்கு ஆன்மீக உயிர் அளிக்கிறது.

இயேசு நமது  மூத்த சகோதரர்.

 அவர்தான் நமக்கு தந்தையை அறிமுகப்படுத்தியவர்.

நாம் செய்த பாவங்களினால்  தந்தையிடம் கோபித்துக் கொண்டு வெளியேறியபோது

 அவர் தந்தையை நமது  சார்பில் சமாதானப்படுத்தி நம்மை தந்தையோடு சேர்த்து வைத்தவர்.

தந்தையோடு நம்மை சமாதானப் படுத்தி வைப்பதற்காக அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

நமக்கு தந்தையோடு சமாதானம் ஏற்பட்டு பின் அது நிலைத்து இருப்பதற்காக என்றும் நம்மோடு தங்கி

 நம்மை பரிசுத்தமாக்கிக் கொண்டேயிருப்பவர் பரிசுத்த ஆவி.

நம்மிடம் உள்ள பரிசுத்தத்தனம் தொலைந்து விட்டால் 

நமக்கும் தந்தைக்கும் இடையே உள்ள உறவு பழையபடி முறிந்துவிடும்.

 அதற்காகவே நமது உள்ளத்திலேயே தனக்கு தங்கும் இடத்தை அமைத்துக் கொண்டு

 அங்கேயே தங்கி, நம்மை பரிசுத்தத்தனத்திலும், அன்பிலும் காப்பாற்றி வருகிறார்.

 நமது குடும்பத்தில் அடுத்த முக்கியமான உறுப்பினர் நம்முடைய தாய் மரியாள்.

நமது சகோதரர் இயேசுவைப் பெற்றெடுத்த தாய் மரியாளை

தாயாக ஏற்றுக்கொள்ள

 கிறிஸ்தவர்கள் என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் சிலர் மறுக்கிறார்கள். 


இந்த அறிவு ஜீவிகளுக்கு தாயை தாய் என்று ஏற்றுக்கொள்ள பைபிளிலிருந்து ஆதாரம் வேண்டுமாம்.

இயேசுவை அவரது தேவ சுபாவத்தில் நித்திய காலமாகப் பெற்றவர் தந்தை இறைவன்.

அந்த வகையில் இயேசு நமது சகோதரர்.

இயேசுவை அவரது மனித சுபாவத்தில் 2020 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றெடுத்தவள் அன்னை மரியாள்.

நமது சகோதரரை  பெற்ற அன்னையை  நமது தாயாக ஏற்று கொள்ள வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

நமது குடும்பத்தில் நிலவுவது ஆன்மீக உறவு.

ஆன்மீக உறவில் தான் இயேசு நமது சகோதரர்.

ஆன்மீக உறவில் தான் நமது சகோதரரை பெற்றவள் நமது தாய்.

இது ஒரு சாதாரண logic! 

பள்ளிக்கூடமே போகாதே சாதாரண மனிதருக்கே இந்த logic புரியும்.

கற்றுத்தேர்ந்த அறிவு ஜீவிகளுக்கு 
இது ஏன் புரியவில்லை என்று நமக்குப் புரியவில்லை!

உலக ரீதியான நமது குடும்பங்களில் கூட 

அதன் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளலாம். 'லாம்' மட்டுமல்ல 'வேண்டும்.'

 எந்த அளவுக்கு பேசிக் கொள்கின்றார்களோ அந்த அளவுக்கு உறவின் நெருக்கம் இருக்கும்,

 பேச்சை குறைக்க குறைக்க நெருக்கமும் குறையும்.

நமது ஆன்மீக குடும்பத்திலும் 

நாம் குடும்பத்தின் உறுப்பினர்கள் எல்லோரோடும் தாராளமாக பேசிக்கொள்ளலாம், பேசிக் கொள்ள வேண்டும்.

தந்தையோடு பேசவேண்டும்.

 மகனோடு, அதாவது, நமது அண்ணனோடு பேசவேண்டும்.

தாய் மரியாளோடு பேசவேண்டும்.

இயேசுவை வளர்த்த சூசையப்பரோடு  பேசவேண்டும்.

விண்ணகத்தில் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளோடு பேச வேண்டும்.

நமது உத்தரிக்கிற சகோதர சகோதரிகளோடு பேச வேண்டும்.

உலகில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற அனைத்து சகோதர சகோதரிகளோடு பேச வேண்டும்.

நமது  ஆன்மீக குடும்பத்தினர்  அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள  வேண்டும் என்பதற்கு வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை.

 குடும்பத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்ற ஆதாரம் மட்டும் போதும்.

 குடும்பத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இது புரியாது. புரிய வைக்கவும் முடியாது. 

இயேசு ஏன் "நாம் நம்மைப் போல் நமது  அயலானையும்  நேசிக்க வேண்டும்" என்று சொன்னார்?

 ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருப்பதற்கா?

ஒருவருக்கொருவர் பரிந்து பேசக்கூடாது என்பதற்கா?

ஒருவருக்கொருவர் உதவி செய்யக்கூடாது என்பதற்கா?

நமது விண்ணகத் தாயிடம் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசும்படி கேட்டுக் கொள்ளலாம்.

விண்ணிலுள்ள நம்முடைய எல்லா சகோதர சகோதரிகளிடமும்          நமக்காக இறைவனிடம் பரிந்து   பேசும்படி கேட்டுக் கொள்ளலாம்.

இவ்வுலகில் வாழும் நம்முடைய சகோதர சகோதரிகளிடமும்          நமக்காக இறைவனிடம் பரிந்து   பேசும்படி கேட்டுக் கொள்ளலாம்.

குடும்ப உறவு வெறுமனே பேசிக் கொள்வதில் மட்டுமல்ல,

 ஒருவருக்கொருவர் உதவி செய்வதிலும் இருக்கிறது.

விண்ணிலுள்ள புனிதர்களுக்கு நமது உதவி தேவையில்லை.

 ஆனால் நமக்கு அவர்களுடைய உதவி தேவை.

 நமக்கு வேண்டிய உதவியை அவர்களிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு நம்முடைய ஜெப உதவி தேவை.

 நாம் அவர்களுக்காக இறைவனிடம் மன்றாட வேண்டும். இது நமது கடமை.

உலகில் வாழும் அனைத்து சகோதர சகோதரிகளும்

 ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும்.

உதவி கேட்கவும் நமக்கு உரிமை இருக்கிறது,

 பெறவும் உரிமை இருக்கிறது.

 இது இறைவன் தந்த உரிமை.

உலகியல் ரீதியான நமது குடும்பங்களில் குடும்ப அங்கத்தினர்களின் சிறப்புக்களையும், சாதனைகளையும் சிறப்பிக்கும் வகையில் விழாக்கள் எடுப்பதில்லை?

அதே போன்று நமது ஆன்மீக குடும்பத்திலும் விழாக்கள் கொண்டாடலாம்.

விழாக்களின் போது யாருக்காக  விழாக்கள் கொண்டாடுகிறோமோ அவர்களின் ஆன்மீகப் பண்புகளை சிறப்பிக்கிறோம்.

அப்பண்புகளை நமது வாழ்விலும் கொண்டிருக்க விழாக்கள் உதவி செய்கின்றன. 

நம்மை மேலும் மேலும் பரிசுத்த படுத்த அவை உதவுகின்றன.

மாதாவுக்கு விழாக்கள் எடுக்கும்போது அவர்களுடைய தாழ்ச்சி, பணிவு, அர்ப்பணம்  ஆகிய பண்புகளை சிறப்பிப்பதோடு,

நாமும் அவ்வாறே வாழ வேண்டிய  வரம் தரும்படி  இறைவனை வேண்டுகிறோம்.

புனித சூசையப்பருக்கு விழா எடுக்கும் போது எதிர்க்கேள்வி கேட்காமலும்,  விளக்கம் கேட்காமலும்  இறைவன் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்த அவரது பண்பினை சிறப்பிக்கிறோம். நாமும் அவ்வாறே வாழ விழாக்கள் உதவி  செய்கின்றன.

இவ்வாறே மற்ற   புனிதர்களுக்கும்  எடுக்கின்ற விழாக்கள் நமக்கு ஆன்மீக ரீதியாக உதவிகரமாக உள்ளன.

அவ்வாறே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற சகோதர சகோதரிகளுக்கும் அவ்வப்போது விழாக்கள் எடுக்கலாம்.

எல்லா விழாக்களும்  வெறும் ஆடம்பரத்திற்காக அல்ல, ஆன்மீக பயன் கருதியே எடுக்கப்படுகின்றன.


குடும்ப உறவின் உயிர் அன்பு.

அன்பு இல்லாத இடத்தில்  உறவு இருக்க முடியாது.

நமது குடும்பம் கடவுளுடைய குடும்பம்.  ஏனெனில் கடவுள் தான் நமது தந்தை.


கடவுள் அன்பு மயமானவர்.

 கடவுளை தந்தையாக கொண்ட குடும்பமும் அன்பு மயமானதுதான்.

 நமது குடும்பத்தில் செயல்திட்டமே அன்பு செய்வது மட்டும்தான்.

 நமது தந்தை நம் எல்லோரையும் அளவுகடந்த விதமாய் அன்பு செய்கிறார்.

 நாமும் கடவுளையும் நமது சகோதர சகோதரிகளையும் அன்பு செய்ய வேண்டும்.

 நமது அன்பு சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.

 நமது வாழ்க்கையே அன்பு செய்வது மட்டும்தான். 
 
இவ்வுலகிலும் அன்பு செய்வோம்.

 தொடர்ந்து மறுவுலகிலும் அன்பு செய்வோம்.

 அன்பு ஒன்றே நிரந்தரம்.


லூர்து செல்வம்.

Tuesday, October 27, 2020

"என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.''(அரு. 15:5)


"என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.''
(அரு. 15:5)
"""""""""""""""""""""""""""'""""""""""""''''""""""""""""""""""""""""


பள்ளிக்கூட வயசு வராமல் விளையாடிக்கொண்டிருந்த பையன் 

பள்ளியில் சேர்ந்து மாணவன் ஆனவுடன் 

மாணவனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறான். 

படிப்பு முடிந்தது ஏதாவது பதவி கிடைத்துவிட்டால்

 பதவிக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறான். 

திருமணம் ஆகிவிட்டால் கணவனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறான். 

அதே போல் தான் ஒருவன் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவன் ஆகிவிட்டால்

 கிறிஸ்துவுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறான். 

கிறிஸ்துவுக்குரிய   பண்புகளைக் கொண்டிருப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல.

கிறிஸ்து மனிதனாகப் பிறந்த இறைமகன்.

கிறிஸ்து இரண்டு சுபாவங்களைக் கொண்ட ஒரு ஆள்.

தேவ சுபாவத்தையும், மனித சுபாவத்தையும் கொண்ட தேவ ஆள்.

அவர் முழுமையாக  கடவுள், 
(Fully God)

முழுமையாக மனிதன். (Fully Man)

மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக மனிதனாக பிறந்தவர்.

அவர் தேவ ஆளாகையால் அவரது ஒவ்வொரு சிறு செயலுக்கும் அளவில்லாத பலன் உண்டு.

பாவம் பரிகாரமாக ஒரு சிறு கஷ்டத்தை அனுபவித்திருந்தால் போதுமானது.

அவ்வளவு பாடுகள் பட்டு, அவமானம் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் அவர் நம் மீது கொண்டுள்ள  அன்பு அளவற்றது என்று நமக்கு காண்பிப்பதற்காகவே

 பாடுகளையும் அவமானங்கள் நிறைந்த  சிலுவை மரணத்தையும் அவராகவே   மனம் உவந்து ஏற்றுக் கொண்டார்.

அதற்காகவே 

பாவத்தை தவிர 

மற்ற அனைத்து மனித பலகீனங்களையும் ஏற்று மனிதனாகப் பிறந்தார்.

கடவுளான அவரது பண்புகளை முழுவதும் அப்படியே பிரதிபலிப்பது நம்மால் இயலாத காரியம்.

ஆனால் நாம் அவரோடு இருந்தால்,

அதாவது,

அவர் நம்மோடு இருந்தால்


நமக்கு எல்லாம் முடியும். 

அவரைப் பிரிந்து இருந்தால் ஒன்றுமே  முடியாது.

அவர் நம்மோடு இருந்தால் 

அவரைப்போல் மனமுவந்து ஏழையாக வாழ முடியும்,

அவரைப்போல் வாழ்நாள் முழுவதும் கீழ்படிந்து  வாழ முடியும்.

அவரைப்போல் அனைவரையும் நேசிக்க  முடியும்.

அவரைப்போல் செல்லும் இடமெல்லாம் நன்மை மட்டுமே செய்ய முடியும்.

அவரைப்போல் அவரது நற்செய்தியை உயிரைக் கொடுத்தாவது அறிவிக்க முடியும்.

 தீமை செய்தவர்களுக்கெல்லாம்  அவரைப்போல் நன்மை செய்ய முடியும்.

 விரோதிகளையும் அவரைப்போல் நேசிக்க முடியும்.

 நமக்கு விரோதமாக  குற்றம் புரிந்தவர்களை அவரைப்போல் மன்னிக்க முடியும்.

அவரைப்போல் நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்க முடியும்.

அவரைப்போல் நமக்கு வரும்  சிலுவையை சுமக்க முடியும்,

அவரைப்போல் மற்றவர்களுக்காக நமது உயிரையும் தியாகம் செய்யவும் முடியும்.

அவரைப்போல் செயல்கள் செய்யவும் முடியும்.

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: என்னில் விசுவாசங்கொள்பவன் நான் செய்யும் செயல்களையும் செய்வான்: ஏன், அவற்றினும் பெரியனவும் செய்வான்:"
(அரு. 14:12)

நமக்கு முன் மாதிரிகையாக இயேசுவே வாழ்ந்து காட்டினார்.

அவரைப் பின்பற்றி புனிதர்களும் வாழ்ந்து காட்டினர்.

நாமும் புனிதர்களைப் போலவே இயேசுவைப் பின்பற்றி வாழ அழைக்கப்படுகிறோம்.

இயேசு எப்போதும் நம் இருதயத்தில் இருந்தால் அவரைப் போலவே வாழ்வது எளிது.

நமது சிந்தனையில் இயேசு இருந்தால் இயல்பாகவே வார்த்தையிலும், செயலிலும் இருப்பார்.

பெண்மணி ஒருவர் தெருவழியே ஒரு சிறு பையன் அழுதுகொண்டு போவதைப் பார்த்தாள்.

"தம்பி, இங்க வா."

"என்ன அம்மா?"

"அம்மா என்றா சொன்னாய்?"

"ஆமம்மா."

"ஏன் அழுகிறாய்?"

"என்னுடைய அம்மாவும் அப்பாவும் தொலைந்து போய் விட்டார்கள்.
 அவர்களை தேடி அழுகிறேன்.''.

"எப்போது தொலைந்து போனார்கள்?"

"மூன்று நாட்களுக்கு முன்பாக,"

"எங்கே வைத்து?"

".தெரியவில்லை."

" சாப்பிட்டாயா?"  

 "இன்றைக்கு சாப்பிடவில்லை."

"வா, சாப்பிட்டு விட்டுப் பேசலாம்."

"ரொம்ப நன்றிம்மா."

"பரவாயில்லை. உன்னைப் பார்க்கும் போது என் மகனைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.

சிறுவயதில் உன்னைப் போலவே இருப்பான்.

இப்போ பெரிய ஆள். வெளிநாட்டில் இருக்கிறான்."

"நான் என்னுடைய அப்பா அம்மாவை கண்டு பிடிக்க வேண்டும்."

" நானே தேடிக் கண்டு பிடிக்கிறேன். அதுவரை என்னோடே இரு."

"சரிம்மா."

அந்தத் தாய்க்கு சிறுவன் அவளது மகனைப் போலவே இருந்ததால் அவன்மீது அவளை அறியாமலேயே பாசம் ஏற்பட்டது.

அவளுக்கு மட்டுமல்ல,
 நமக்கும் அப்படித்தான்.

 நமக்கு மிகவும் பிரியமானவர்களை ஞாபகப்படுத்தும் ஆட்கள் மீதும் பொருள்கள் மீதும் நம்மை அறியாமலேயே ஒரு வித பற்று ஏற்படும். 


நாம் கடவுளை உண்மையிலேயே அதிகமாக அன்பு செய்தால், 

 இந்த உலகில் எதைப் பார்த்தாலும் அவரது ஞாபகம் வர வேண்டும்.

ஏனெனில் இந்த உலகும், அதில் உள்ள எல்லா பொருட்களும் கடவுளாலேயே படைக்கப்பட்டன.

ஒவ்வொரு பொருளும் கடவுளுடைய கைவேலைப்பாடே.

படைக்கப்பட்ட எல்லா பொருட்களும் படைத்த  கடவுளுடைய  வல்லமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. 

ஆகவே கடவுளுடைய   ஞாபகம் இல்லாமல்  வாழவே முடியாது.

ஞாபகம் இருந்தால் அவரைப் புகழாமல் இருக்க முடியாது.

அவரால் படைக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவோமே தவிர பாழாக்க மாட்டோம். 

அவரால் படைக்கப்பட்ட மற்ற மனிதர்களை நேசிக்காமல் இருக்க முடியாது.

மற்றவர்களுக்கு தீங்கு செய்ய முடியாது.

ஏனெனில் அவர்களில் கடவுளைப் பார்ப்போம்.

கடவுளின் சாயலை உடையவர்களுக்கு எதைச் செய்தாலும் அதைக் கடவுளுக்கே செய்கிறோம்.

கடவுள் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இருந்தால் நம்மால் பாவம் செய்யவே முடியாது.

பெரிய பதவியில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டால் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது.

நாம் கடவுளையே கைக்குள் போட்டுக் கொள்வோம்.

கடவுளுக்குப் பிரியமானதை  சாதிப்போம்.

லூர்து செல்வம்.

Monday, October 26, 2020

"சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை கொண்டவன் எவனும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமை பேறு அடையான்."(எபேசி. 5: 5)

http://lrdselvam.blogspot.com/2020/10/5-5.html


"சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை கொண்டவன் எவனும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமை பேறு அடையான்."
(எபேசி. 5: 5)
5555555555555555555555555555555


"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.

 ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான்.

 அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். 

கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது." (மத். 6:24)


கடவுள் நம்மைப் படைத்தவர். ஆகவே அவருக்கு ஊழியம் செய்வது நியாயமானது.

ஆனால் பணம் நம்மைப் படைக்கவில்லை.

நாம் தான் நமது வசதிக்காக பணத்தை உண்டாக்கினோம். 

நம்மால் உண்டாக்கப்பட்ட பணத்திற்கு நம்மை படைத்த இறைவனுக்கு நிகரான இடத்தை கொடுப்பது தான் சிலை வழிபாடு.

சிலை உருவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

கடவுளுக்கு கொடுக்க வேண்டிய உன்னத இடத்தை  எதற்கு கொடுத்தாலும் அது சிலையே.

அது ஒரு பொருளாக இருக்கலாம், பதவியாக இருக்கலாம்,  ஆளாய் இருக்கலாம், கருத்தாக இருக்கலாம்,

எதுவாக இருந்தாலும் அததன் இடத்தில் வைக்காமல் இறைவன் இடத்திற்கு உயர்த்தினால்  அது சிலை வழிபாடு.

ஆகவேதான் புனித சின்னப்பர்  

"சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை"
என்கிறார்.

இறைவன் மீது வைக்க வேண்டிய ஆசையை ஒருவன் பொருளின் மீது வைத்தால்
 அவன் சிலை வழிபாடு செய்கிறான்.


ஒரு செயலின் தன்மையை அதன் நோக்கத்தை (Intention) வைத்து தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒருவனுக்கு அவன் வகிக்கும் பதவியின் மேல் பற்று இருக்கிறது. தப்பு இல்லை.

பதவியை மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே கருத வேண்டும்.

ஆனால் ஒரு பதவியைப் பெறுவதற்காக கிறிஸ்துவை மறுதலிப்பானானால், கிறிஸ்துவை விட உயர்ந்த இடத்தில் பதவியை வைக்கிறான்.

அவன் பதவியைத்தான் வழிபடுகிறான். அதற்குப் பெயர் சிலைவழிபாடு.


"ஏண்டா கோவிலுக்கு வருவதையே நிறுத்தி விட்டாய்?"

"கோவிலுக்கு வந்தும் பயன் ஒன்றும் இல்லையே!"

" சாமியார் நிர்வாகத்தில் நான்கு பள்ளிக்கூடங்கள் உள்ளன. எதிலாவது வேலை தருவார் என்ற எண்ணத்தில்தான் கோவிலுக்கு ஒழுங்காக வந்தேன்.

அவர் வேலை எதுவதும் தருவதாகத் தெரியவில்லை.

C.S.I கோவிலுக்குச் சென்றால் அவர்கள் பள்ளியில் வேலை வாங்குவது எளிது என்று கூறினார்கள். ஆகவே இப்போ அவர்கள் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்."

"அப்போ ஆண்டவரை விட உனக்கு வேலை தான் முக்கியமா?"

"அங்கேயும் அதே ஆண்டவர்தானே!"


"அங்கேயும் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வாய்?"

"கிடைக்கிற இடத்துக்குப் போவேன். எனக்கு முக்கியம் சம்பாத்தியம், அதற்கான வேலை."


"கடவுள்?"

"இப்போ வேலைதான் எனக்குக் கடவுள்."


இப்படிப் பட்டவர்கள் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு வேலைதான் அவர்கள் வழிபடும் சிலை.

சிலர் ஏதாவது உதவி கேட்டு கடவுளிடம் ஜெபிப்பார்கள்.

கேட்ட உதவி கிடைத்து விட்டால் ஜெபம் நின்று போகும்.


பழையபடி ஏதாவது உதவி தேவைப் படும் போது பழையபடி  ஜெபம் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

இவர்களுக்கு கடவுள் ஏதாவது வேண்டும் போது பெற்றுத்தரும் Agent மாதிரி!

உலக வசதிகள் மட்டுமே இவர்கள் வழிபடும் கடவுள்.

இவர்களும் சிலை வழிபாட்டினர்தான்!

சிலர் அவர்கள் வசிக்கும் ஊரிலுள்ள கோவிலுக்குப் போகமாட்டார்கள்.

ஆண்டிற்கு ஒரு முறை உவரி, வேளாங்கண்ணி போன்ற தூரத்திலுள்ள திருத்தலங்களுக்கு மட்டும் போவார்கள். 

கேட்டால் ஏதாவது நேர்ச்சை என்பார்கள்.

உள்ளுர் கோவிலில் உள்ள ஆண்டவர்தான் வேளாங்கண்ணியிலும் இருக்கிறார்.

ஆனால் உள்ளுரில் கோவிலுக்கே போகாதவர்கள், குடும்ப ஜெபம் செய்யாதவர்கள், ஜெபமாலையே சொல்லாதவர்கள் வேளாங்கண்ணிக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்குப் போனால், என்ன அர்த்தம்?


அவர்கள் ஆண்டவரை வழிபட போகவில்லை.

திருவிழா பார்க்கப் போகிறார்கள் என்று தான் அர்த்தம்.

அவர்களுக்குக் கடவுள் திருவிழா கொண்டாட்டம்தான், யாருக்காகக் கொண்டாடப்படுகிறதோ அவர் அல்ல.

எல்லாவற்றிக்கும் மேலானவராக இறைவனை ஏற்றுக்கொண்டு அவரை வழிபடுகிறவனே இறை வழிபாடு செய்கிறான்.

ஏதாவது பயன் கருதி, அதை அடைவதற்காக மட்டும் இறைவனை வழிபடுகிறவன்,

அவன் கருதும் பயனைத்தான் வழிபடுகிறான்.

இயேசு "நானே வழி" என்று கூறியிருக்கிறார்.

அவரை அடைய தான் அவர் வழி,
பணத்தை அடைய அல்ல.


நம்மைப் படைத்த இறைவனை முழு இருதயத்தோடு ஏற்று, வழிபட வேண்டும்.

'முழு இருதயத்தோடு' என்றால் நமது இருதயம்  இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்று பொருள்.

இறைவனில், இறைவனுக்காக மட்டும் நம்மையும், நம் அயலானையும் நேசிக்க வேண்டும்.

"உனக்கு நான் வேண்டுமா, அல்லது பணம் வேண்டுமா?" என்று இயேசு கேட்டால்,


"நீர் வேண்டும்" என்று சொல்ல வேண்டுமே தவிர,

"பணத்திற்காக நீர் வேண்டும்" என்று சொல்லி விடக்கூடாது.

"எல்லாம் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே."

"எனக்கு எல்லாம் இயேசுவே" என்று சொன்னால்,

"இயேசு மட்டும்தான் என்னுடையவர் , 

நான் உட்பட வேறு எதுவும் என்னுடையது அல்ல"
என்று தான் பொருள்.

நானே என்னுடையவன் அல்ல.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நான் ஒன்றுமில்லாதவன் என்பதுதான் பொருள்.

I am nothing.

ஏதோ something ஆனது நம்மால் அல்ல, இறைவனால்.

ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது,

ஒரு நாள் அது ஒரு தெருவின்  ஓரமாக படுத்துக் கிடந்தது.

அத்தெருவில் வந்தோர் போனோர் எல்லாம் அதன் அருகே வந்தவுடன் அதை நோக்கி தலை வணங்கி விட்டு போனார்கள். 

அதற்கு ஒரே ஆச்சரியம்.

"நான் அவ்வளவு முக்கியமானவனா?  

எனக்கே தெரியாமல் போய்விட்டதே! 

வருவோர் போவோர் எல்லாம் என்னை பார்த்து வணங்கி விட்டு போகிறார்களே!"

அதற்கு பெருமை தாங்க முடியவில்லை.

சாயங்காலம் வீட்டிற்குச் சென்றவுடன் தன் மனைவியிடம் தன்னைப் பற்றி பீற்றிக் கொண்டது.

"நான் எவ்வளவு மதிப்புக்கு உரியவன் தெரியுமா?

இன்று நான் ஒரு இடத்தில் படுத்திருக்கும்போது அங்கு வந்தோர்  போனோர் எல்லாம் என்னை வணங்கிவிட்டு போனார்கள் தெரியுமா?"

"சும்மா டூப் விடாதே!"

"டூப்பா? நீயே வந்து பார்.''

மனைவிக் கழுதையை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று படுத்துக் கொண்டது.

என்ன ஆச்சரியம்! எல்லோரும் அதை வணங்கி விட்டுப் போனார்கள்.

மனைவிக் கழுதை சுற்றும் முற்றும் பார்த்தது.

"கொஞ்சம் எழுந்திரு."

"ஏன்?"

"எழுந்திரு சொல்றேன்."

கழுதை எழுந்தது.

"என்னுடன் வா"

உடன் சென்றது. 

"இங்கே படுத்துக் கொள்."

படுத்துக் கொண்டது. அங்கு வந்தோர் யாரும் அதை வணங்க வில்லை.

" அதோ அங்கே பார். நீ அப்போது படுத்திருந்த இடம். நீ இல்லாமலேயே அங்கே வருவோர் போவோர் எல்லாம் வணங்கி விட்டுதான் போகிறார்கள்."

"ஆமா! அப்போ யாரும் என்னை வணங்க வில்லையா?"

"அட மடக் கழுதை. அங்கே ஒரு கோவில் இருக்கிறது.

நீ கோவில் முன்னால் படுத்திருந்திருக்கிறாய்.

கோவிலைப் பார்த்து கடவுளை வணங்கியவர்கள் எல்லாம் உன்னை வணங்கியதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறாய்! "

நம்மில் அநேகர் இப்படித்தான் தங்களுக்கு கிடைக்கும் மரியாதையை தவறாக எடுத்துக்கொள்கிறார்கள்.

  ஒருவருக்கு அவருடையதாய் முக்கியத்துவம் கொடுப்பது அவர் அவளுடைய மகன் என்பதற்காக மட்டும் தான்.

 ஒருவருக்கு மாணவர்கள் மரியாதை செய்வது அவர் அவர்களது ஆசிரியர் என்பதற்காக மட்டும்தான்.

 அலுவலகத்தில் பதவியில் உள்ளவர்களுக்கு  மற்றவர்கள் மரியாதை செய்வது அவர்களிடம்   உள்ள பதவிக்காக மட்டுமே.


 தர்மம் எடுப்பவன் ஒருவரை நோக்கி கைகூப்பினால் அது அவரிடமுள்ள காசுக்காக மட்டுமே.

ஆனால், நமக்காக மட்டுமே நம்மை நேசிப்பவர்  நம்மைப் படைத்த கடவுள் ஒருவரே. 

 நாமும் கடவுளை 

நமது கடவுள் என்பதற்காக மட்டுமே

 அவரை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்வோம்,

 ஆராதிப்போம்.

அவர் தந்த பணத்தையோ,

 பதவியையோ,

 அல்லது 

வேறு எந்தப் பொருளையோ

அவரை விட அதிகமாக மதிப்பது
.
  சிலை வழிபாடு என்பதை உணர்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 25, 2020

"மோட்சத்திற்கே போக முடியாத ஒருவர் இருக்கிறார். அவர் யார்?"

"மோட்சத்திற்கே போக முடியாத ஒருவர் இருக்கிறார். அவர் யார்?"

??????????????????????????????!

நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

நான் நின்று கொண்டிருந்தேன்.

மாணவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

ஞான உபதேசம் நடந்து கொண்டிருந்தது.

"வழக்கமாக நான் பாடம் நடத்திவிட்டு கேள்விகள் கேட்பேன்.

இன்று நான் கேள்விகள் மட்டும் கேட்கப் போகிறேன். நீங்கள்தான் பாடம் நடத்த வேண்டும்.

புரிகிறதா?"

"புரிகிறது, Sir."

"இரயில் மூலமாக சென்னையிலிருந்து தென்காசிக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்?"

"சுமார் 24 மணி நேரம் ஆகும், Sir."

"Suppose, இரவு 12 மணிக்கு சென்னையில் இரயிலில் ஏறுகிறீர்கள்.

ஏறியவுடன்  தூங்கி விடுகிறீர்கள்.

 காலை நாலு மணிக்கு விழிக்கிறீர்கள்.

ரயில் தென்காசி சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது."

"அது எப்படி சார் முடியும்? நாலே நாலு மணி நேரத்தில் எப்படி தென்காசிக்கு வர முடியும்?"

"இப்போ அது பிரச்சனை இல்லை. வந்துவிட்டது. மகிழ்ச்சி அடைவீர்களா? வருத்தப்படுவீர்களா?"

"இறங்க வேண்டிய இடம் தென்காசி தானே.

பின் ஏன் வருத்தப்பட வேண்டும்? மகிழ்ச்சியோடு இறங்கி வீட்டிற்குச் செல்வோம்."

"அதாவது 24 மணி பயணம் நாலு மணி நேரத்தில் முடிந்துவிட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். அப்படித்தானே?"

"அதில் என்ன சந்தேகம்? முதல் வகுப்பில் admission போட்டவுடனேயே 10 வது வகுப்பு certificate கொடுத்து விட்டால் கூட நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்."

"சொல்லவே சொல்ற, PhD. என்று சொல்லி இருக்கலாம் அல்லவா? "

"அவனுடைய உச்சகட்ட  படிப்பே அவ்வளவுதான் சார்."

"கடவுள் நம்மை ஏன் படைத்தார்? "

"அவரை அறிந்து, நேசித்து, சேவை செய்து, இறுதியில் விண்ணகம் செல்வதற்காக நம்மை படைத்தார்"

"நமது வாழ்க்கையை ஒரு பயணமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய முதல் station எது?"

"பிறப்பு."

"இறங்க வேண்டிய station எது?"

"விண்ணகம்."

"பிறப்பிலிருந்து விண்ணகம் செல்ல எவ்வளவு காலம் ஆகும்?"

"அது ஆளுக்கு ஆள் மாறுபடும், சார். யாருக்குமே அது தெரியாது, சார்."

"ரயில் பயணத்தின்போது 24 மணி நேர பயணம் நாலு மணி நேரத்தில் முடிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நீங்கள்தான் சொன்னீர்கள் அல்லவா?"

"ஆமாம், சார்."

"நீங்கள் அறிய, ஒருவர் வாழ்க்கை பயணத்தை எண்பதாவது வயதில் முடித்துக் கொண்டார்.

மற்றொருவர் தனது அறுபதாவது வயதில் முடித்துக் கொண்டார்.

இந்த இருவரில் பயண முடிவில் யார் அதிக மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்?"

"தெரியலிய, சார்."

"ஏன் தெரியவில்லை?"

"அவர்களிடம்  கேட்கவேண்டிய கேள்வியை எங்களிடம்   கேட்டால் எங்களுக்கு எப்படி தெரியும்?" 

"அதுவும் சரிதான். இப்போது உங்களைப் பற்றியே கேட்கிறேன் மனதில் பட்டதை சொல்ல வேண்டும். 

முதல் பெஞ்சில் முதல் பையன்,  உனது வாழ்க்கை பயணம் நாளையே முடிவதாக இருந்தால்,

 அதாவது,

 நாளையே விண்ணகம் செல்வதாக இருந்தால் 

மகிழ்ச்சி அடைவாயா? வருத்தப்படுவாயா?"

"சார் விண்ணகம் செல்ல மகிழ்ச்சி  அடைவேன்.

ஆனால் அது நாளைக்கே என்று சொல்லும் போது தான்....." 

"சொல்லும் போது தான்?"

".தெரியலையே, சார். 

மற்றவர்களைப் பற்றி கேட்கும்போது துணிந்து சொல்லத் தெரிந்த எனக்கு என்னைப் பற்றி சொல்லத் தெரியலையே சார்."

"உனக்கு விசுவாசம் இருக்கிறதா? இல்லையா?"

" விசுவாசம் இருக்கிறது, ஆனால் எவ்வளவு இருக்கிறது என்று தெரியவில்லை.

சார், பத்து பைசாவும் பணம்தான்.

10 லட்சம் ரூபாயும் பணம்தான்.

 10 கோடி ரூபாயும் பணம்தான்.

 பத்து பைசா வைத்திருப்பவன்  தன்னை பணக்காரன் என்று சொல்ல முடியுமா?"

"You are correct. Next'"

"சார், கேள்வி?"

"இன்னும் ஐந்து நிமிடத்தில் உன்னுடைய வாழ்க்கை பயணம் முடிந்து விண்ணகத்திற்குப் போகப் போகிறாய். மகிழ்ச்சியா? வருத்தமா?"

"மட்டற்ற மகிழ்ச்சி ஆனால் நீங்கள் யாரும் அழக்கூடாது.

  பாருங்க சார் எல்லா பயலும் சிரிக்கிறான்."

"அவன்தான் சார் அழக் கூடாது என்று சொன்னான்."

"அழக் கூடாது என்றுதான் சொன்னேன். சிரிக்கச் சொல்லவில்லை."

"Last bench, first boy. எதிர்பாராத பயண முடிவு. உன் கருத்து என்ன?" 

"சார்..,  பயண முடிவு எதிர்பாராதது அல்ல.  நேரம் தான் எதிர்பாராதது.

"எதிர்பாராத நேரத்தில் மனுமகன் வருவார், எப்போதும் விழிப்பாய் இருங்கள்"

 என்று ஆண்டவரே சொல்லி இருக்கிறார்.

 ஆகவே எப்போதும் விழிப்பாய் இருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டியது இல்லை.

எதற்கும், கொரோனாவிற்குக் கூட, அஞ்ச வேண்டியது இல்லை.."

"உனக்கு கொரோனாவை நினைத்தால் பயமாக இருக்கிறதா? மகிழ்ச்சியாக இருக்கிறதா? கவலையாக இருக்கிறதா?"


"உலக ரீதியாக நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.  

விசுவாச அடிப்படையில்,

'என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்'

என்பது வேதவாக்கு.

வேத வாக்கு வெறுமனே வாசிப்பதற்கு மட்டும் அல்ல,

 நமது வாழ்க்கை ஆகுவதற்கே "

"அப்போ உன்னிடம் பயம் இருக்கிறது."

"இல்லை என்று சொன்னால் நான் பொய்யன். நமக்காக பாடுபட்டு மரிப்பதற்கென்றே பிறந்த நம் ஆண்டவரே பாடுகள் ஆரம்பிக்கு முன்பு அதை நினைத்து பயந்தாரே!
நாம் ஆண்டவரைவிடப் பெரியவர்களா?"

"ஆண்டவர் ஏன் பயந்தார்?"

"நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய தானே ஆண்டவர் மனிதனாகப் பிறந்தார். 

பாவமே செய்ய முடியாத நம் ஆண்டவர் நமது பாவங்களைத்தானே சிலுவையாக சுமந்து கொண்டு பரிகாரம் செய்தார். 

நமது பலகீனத்தால்தானே நாம் பாவங்கள் செய்கிறோம்.

ஆகவே பாவம் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களையும்   ஏற்றுக்கொண்டுதான் மனிதராகப் பிறந்தார்.

துன்பத்தை கண்டு பயப்படுவது மனித பலகீனம்.

எப்படி பாடுகளையும் மரணத்தையும் அவராகவே ஏற்றுக் கொண்டாரோ, அதே போல் தான் மனித பலகீனமாகிய பயத்தையும் அவரே ஏற்றுக் கொண்டார்.

துன்பத்தைக் கண்டு எவ்வளவு பயம் ஏற்பட்டாலும்

 நாம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நமக்கு பாடம் கற்பிப்பதற்காகவே 

அவர் பயத்தை ஏற்றுக் கொண்டதோடு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார்.

கொரோனாவைக் கண்டு பயந்தாலும், விண்ணகத் தந்தையின் சித்தம் அதுவானால் ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்."

"சார், அப்படியானால் கொரோனாவை உலகத்தை விட்டு அப்புறப்படுத்தும்படி   இறைவனிடம் வேண்டுவது தப்பா?"


"சார், தம்பி பைபிளே வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

நம் ஆண்டவரே,

 "தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:"

என்று வேண்டிய பின்னர் தான்,.


 "எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" 

என்று செபித்தார்.

  நாமும் ஆண்டவரைப் பின்பற்றுவோமே!"

"Settled?"

"Yes Sir."

"Second boy  in the third bench."

"Yes, Sir.''

"உனக்கு விண்ணகம் போக ஆசையாய் இருக்கிறதா?"

"அதற்காகத்தானே அழைக்கப்பட்டோம்! ஆசை இல்லாமல் இருக்குமா?"

" நீ விண்ணகத்தை   அதிகம் நேசிக்கிறாயா?

 அல்லது

 இயேசுவை அதிகம் நேசிக்கிறாயா?"

"இரண்டும் ஒன்று தானே, சார். இயேசுவோடு இணைவதுதானே   விண்ணகம்."

"இப்போது  இயேசுவை 
 நேசிக்கிறாயா?"

"நேசிக்கிறேன்."

" Suppose, இயேசு உன்னைப் பார்த்து,

'நீ என்னை நேசிப்பது உண்மையானால் மோட்சத்திற்கு வரக்கூடாது' என்று சொன்னால் என்ன பதில் சொல்வாய்?"

"  உமது சித்தம் எனது பாக்கியம்" என்று சொல்வேன். 

"உண்மையாகவா?"

"உண்மையாக. யாரை நேசிக்கிறோமோ அவர்களுடைய சொற்படி நடப்பது தானே நேசத்தின் குணம்."

"பயப்படாதே இயேசு அப்படிச் சொல்ல மாட்டார்."

"அது எனக்கும் தெரியும்."

"Final question. மோட்சத்திற்கே போக முடியாத ஒருவர் இருக்கிறார். அவர் யார்?"

எல்லோரும்: "கடவுள். அவரால் எங்கேயும் போக முடியாது. ஏனென்றால் அவர் எங்கும் இருக்கிறார்."

லூர்து செல்வம்.
 



Saturday, October 24, 2020

என்ன வேண்டும்?(தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_24.html


என்ன வேண்டும்?
(தொடர்ச்சி)
??????????????????????????????!

நமது உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு,

 அங்கு நிரந்தரமாகத் தங்கி,

 நம்மை வழிநடத்துபவரும்,

 
நமது ஆலயங்களில் 24 மணி நேரமும் தங்கி,
 
நம்மோடு உரையாட நமது வருகைக்காகக் காத்துக் கொண்டிருபப்பவரும்,

கன்னி மரியாளின் வயிற்றில் மனு உரு எடுத்து,

நமக்காக வாழ்ந்து,

 நமக்காக மரித்த அதே இயேசு தானே!

மரியாளின் வயிற்றில் உருவான அதே உடலோடும் இரத்தத்தோடும் தானே 

திவ்ய நற்கருணை பேழையில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்!

ஆலயத்திற்கு சென்று அமர்ந்து திவ்ய நற்கருணை நாதரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே

 அபரிமிதமாக அருள் வரங்களை அள்ளிக் குவிக்கலாம்!

 நாம் பேச வேண்டியதில்லை.

மனதை மட்டும் அவரில் ஒரு நிலைப்படுத்த வேண்டும்.

ஒரு ஏழை விபசாயி ஒவ்வொரு நாளும் வயலுக்கு வேலைக்குப் போகும்போதும், கோவிலுக்குள் நுழைந்து,

நின்றுகொண்டே ஐந்து நிமிடங்கள்   நற்கருணை  நாதரைப் பார்த்துவிட்டுப் போவான்.

இதை கவனித்துக் கொண்டிருந்த பங்குத்தந்தை ஒருநாள் அவனிடம்,

"ஐந்து நிமிடத்தில் என்ன ஜெபம் சொல்வீர்கள்?"  என்று கேட்டார்.

"சுவாமி,  எனக்கு வார்த்தைகளைக் கொண்டு ஜெபம் சொல்லத் தெரியாது.

ஐந்து  நிமிடங்கள் நான் ஆண்டவரைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

 அவர் என்னை பார்த்துக் கொண்டிருப்பார்.

 அவ்வளவுதான் என் ஜெபம்."

இதைவிட சக்திவாய்ந்த ஜெபம் வேறு இருக்க முடியாது.

நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்  கோவிலுக்குச் சென்று திவ்ய நற்கருணையைச் சந்திக்க வேண்டும்.

திவ்விய நற்கருணையை சந்திக்கச் செல்வது நமது ஆண்டவராகிய இயேசுவை ஆராதிப்பதற்காக. 

நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது அவர்களுக்குள் உள்ள அன்பினை பரிமாறிக் கொள்வதற்காகத் தான்.

நட்பின் அடிப்படை அன்பு ஒன்றுதான்.

 நட்பின் உயிரும் அதுதான். 

நாம் வங்கிக்குச் செல்வது பணப் பரிவர்த்தனைக்கு மட்டுமே, 

வங்கி ஊழியர்களுக்கு நமது அன்பை தெரிவிப்பதற்காக அல்ல.


நாம் கடைக்குச் செல்வது பொருள்கள் வாங்குவதற்காக மட்டுமே,

 கடைக்காரருக்கு நமது அன்பை தெரிவிப்பதற்காக அல்ல.

நாம் குளத்தை தேடிச் செல்வது அங்கு குளிப்பதற்காக மட்டுமே,

 குளத்திற்கு நமது அன்பை தெரிவிப்பதற்காக அல்ல.

ஆனால் நண்பர்களைப் பார்க்க விரும்புவது தமது அன்பை பரிமாறிக் கொள்வதற்காக மட்டுமே.


ஒருவருக்கொருவர் உதவி செய்வது இயல்பாக வரக்கூடியது.

உதவி பெறுவதற்காக மட்டும் நட்பை வைத்திருப்பவன் உதவி கிடைக்காவிட்டால் நட்பை விட்டு விடுவான்.

நாம் திவ்ய நற்கருணை நாதரை தேடிச் செல்வது அவரை ஆராதிப்பதற்காகவும்  நமது அன்பை தெரிவித்துக் கொள்வதற்காகவும் மட்டும்தான்.

நமக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

நாம் கேட்டு அவர் நம்மை படைக்கவில்லை.

தான் படைத்ததை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று அவருக்கு தெரியும்.

கடவுளுக்கு நாம் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

நமது வாழ்வின் ஒரே நோக்கம் விண்ணக வாழ்வு.

விண்ணக வாழ்வை அடைவதற்கு நம்மிடம் இருக்க வேண்டியது ஆண்டவருடைய அருள்.

ஆண்டவரை ஆராதிக்கும் போது அவர் நம்மை தனது அருளால் நிரப்புவார்.

ஆராதிப்பதற்கு வார்த்தைகள்  தேவை இல்லை.

  ஆண்டவரை நமது எல்லாமாக ஏற்றுக்கொண்டு  நாம் அவர் முன் முற்றிலுமாக சரண் அடைவதே ஆராதனை.

கடவுளை நமது எல்லாமாக ஏற்றுக் கொள்ளும் போது அவரை நம்மை காப்பாற்றுகிறவராகவும் ஏற்றுக் கொள்கிறோம்.

நம்மைப் பற்றி நாம் கவலை பட்டுக் கொண்டிராமல் இறைவனை அடுத்த காரியங்களிலேயே முழுக் கவனத்தையும் செலுத்துவோம்.

 நம்மை அவர் கவனித்துக்கொள்வார். 


அடுத்து நம் ஆண்டவர் தான் நிறுவிய திருச்சபையில்இருக்கிறார்.

திருச்சபையில் இருந்து அதை வழி நடத்திக் கொண்டிருப்பவர் அவரே.

 தமது பிரதிநிதிகளான  பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் மூலமாக திருச்சபையை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

 தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுவது குருக்களாக இருந்தாலும் அவற்றில் செயலாற்றுவது இயேசுவே.

ஞானஸ்நானத்தில்

"நான் உன்னைக் கழுவுகிறேன்" என்றும்,


பாவசங்கீர்த்தனத்தில் 

"நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்."

"I absolve you from your sins in the name of the Father, and of the Son, + and of the Holy Spirit.'

என்றும்,

திருப்பலியின் போது

"இது என் சரீரம்".
"இது என் இரத்தம்"

என்றும் 

குருவின் வாயிலாகச்  சொல்வது இயேசு கிறிஸ்துவே.

நமது ஆன்மீக வாழ்வில் ஏதாவது பிரச்சனை இருந்தால்

 நாம் இயேசுவின் பிரதிநிதியான குருவானவரைத்தான் அணுக வேண்டும்.

அவர் நமது ஆன்மீக வழிகாட்டியாக (Spiritual Director) சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் 
இயேசுவின் வார்த்தையே.

அதற்கு அப்படியே கீழ்படிந்தால் நாம் இயேசுவிற்கு தான் கீழ்ப்படிகிறோம்.

நமது ஆன்மீக வழிகாட்டிக்கு கண்ணை மூடிக்கொண்டு
 கீழ்ப்படியலாம்.

பைபிள் வாசிக்கும்போது நமக்கு விளக்கம் தேவைப்பட்டால் நாம் அணுக வேண்டியது நமது ஆன்மீக வழிகாட்டியான பங்குக்குருவைத்தான்.

நமது யாத்திரையின் முடிவில் நமக்கு அவஸ்தை பூசுதல் கொடுத்து, நம்மை விண்ணகத்திற்கு அனுப்பி வைப்பது நமது ஆன்மீக வழிகாட்டிதான்.


ஞானஸ்நானம் முதல் அவஸ்தைப்பூசல் முடிய 

அதாவது நமது வாழ்நாள் முழுவதும்

 நம்முடைய ஆன்மீக பயணத்தில் குருவானவரின் உருவில் நம்முடன் வருவது இயேசுகிறிஸ்துவே.

இதை  உணர்ந்து செயல்படுபவர்கள் அடிபிறழாமல் ஆன்மீகத்தில்   நடந்து ஆண்டவரை அடைவார்கள்.

நம்மில் அநேகர் பங்குக் குருவானவரை  ஒழுங்காக தங்கள் வாழ்வில் பயன்படுத்துவது இல்லை.

இவர்கள் கையில் தண்ணீரை வைத்துக் கொண்டே தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்காதவர்களுக்குச் சமம்.

நாம் இயேசுவோடு இருந்து அவரை அறிந்தபின் அவரை அறியாதவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இது நமது உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.

நாம் இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்கும் போது அவரை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவர்கள் பாடு.

ஆனால் நாம் அறிவிக்காவிட்டால் நமது கடமையில் தவறுகிறோம்.

முதலாவது நமது வாழ்க்கையின் மூலம் அறிவிக்க வேண்டும்.

அடுத்து நமது வார்த்தையின் மூலம் அறிவிக்க வேண்டும்.


ஆனால் ஆளுக்கொரு  பைபிளை எடுத்துக்கொண்டு, 

திருச்சபையின் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறி, 

இஷ்டம்போல் இறை வாக்கிற்கு விளக்கம் கொடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

எதைச் செய்தாலும்

 தாய்த் திருச்சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து

 திருச்சபையோடு இணைந்து செயலாற்ற வேண்டும்.

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.

 தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்,

 அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்: 

நீர் என்னை அனுப்பினீர் என்று இதனால் உலகம் விசுவசிக்கும்.


22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல்

 அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, 

நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.

23 இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால், 

அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக."
(அரு17:21-23)

லூர்து செல்வம்.

Friday, October 23, 2020

என்ன வேண்டும்?(தொடர்ச்சி).

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_23.html

என்ன வேண்டும்?
(தொடர்ச்சி)
??????????????????????????????!

பெலவேந்திரர்

இயேசு அழைக்காமலேயே அவரைப் பின் தொடர்ந்து,

அவருடன் அவர் வசித்த   இடத்திற்கு சென்று,

அவரோடு தங்கி,

அவர்தான் மெசியா என்பதை அறிந்து,

தன்னுடைய சகோதரர் சீமோனைச் சந்தித்து,

அவருக்கு தான் அறிந்ததை அறிவித்து,

அவரையும் அழைத்துக்கொண்டு

இயேசுவிடம் வந்தார்.

ஒரு நற்செய்தி
அறிவிப்பாளருடைய முழு பணியையும் இதைவிட சுருக்கமாக  சொல்ல முடியாது.

தேடல், அறிதல், அறிவித்தல், அழைத்து வருதல்.

நமக்கு பெலவேந்திரர் ஒரு எடுத்துக்காட்டு.

நாமும்

ஆண்டவரைத் தேட வேண்டும்,

அவரை அறிய வேண்டும்,

அவரை அறிவிக்க வேண்டும்,

மற்றவர்களை அவரிடம் அழைத்து வரவேண்டும்.

பெலவேந்திரர் ஆண்டவரை நேரடியாகப் பார்த்தார். பின்தொடர்ந்தார்.

இப்போது  இயேசு விண்ணகத்தில் இருக்கிறார்.

நாம் எப்படி அவரைத் தேடி கண்டு பிடித்து, அறிந்து அறிவிக்க இயலும்?

இப்படி எல்லாம் கேட்போம் என்று தெரிந்துதான் இயேசு விண்ணகம் எய்துமுன் சீடர்களிடம்,

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்.".
'
என்று சொன்னார்.

சும்மா ஒப்புக்காக, ஆறுதலுக்காக சொன்ன வார்த்தைகள் அல்ல இவை.

உண்மையான, உயிருள்ள வார்த்தைகள்.

பொருள் தெரிந்து சொன்ன வார்த்தைகள்.

He meant what He said.

இயேசு இப்போது நம்மோடு தான் இருக்கிறார்.

வெளியூரில் இருக்கும் நமது நண்பர்கள் நம் உள்ளத்தில் இருப்பதுபோல் அல்ல.

அவர்கள் நம் ஞாபகத்தில்தான் இருக்கிறார்கள்.

இயேசு உண்மையாவே நம்முடன் இருக்கிறார்.

நமது ஊனக் கண்களால் அல்ல, விசுவாசக் கண்களால் அவரைப்  பார்க்க முடியும்.

"விசுவசிப்பவனுக்கு எல்லாம் கூடும்"
(மாற்கு, 9:23)

அவர் இன்றும் உலகில் செயலாற்றிக் கொண்டிருப்பது

நமது உள்ளத்தில்,

திவ்ய நற்கருணையில்,

திருச்சபையில்.

நமது உள்ளம் ஆண்டவரின் ஆலயம்.

நாம் கையால் கட்டப்பட்ட ஆலயங்களுக்கு எப்போதாவதுதான் போக  முடியும்.

ஆனால் நம் உள்ளம் என்னும் ஆலயத்தில் ஆண்டவரோடு நாமும் இருக்கிறோம்.

நமது உடலில் உள்ள இருதயம் எப்போதும் இயங்சிக் கொண்டிருப்பது போல்,

நமது ஆன்மாவின் இதயமாகிய உள்ளம் எப்போதும் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

ஒரு வினாடி கூட நம்மால் எதையாவது நினைக்காமல் இருக்க முடியாது.

தூங்கும்போதுகூட நமது அடிமனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

உள்ளம் என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கும் நமது ஆண்டவர்

நாம் நினைப்பவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்.

நமக்கு மிகவும் வேண்டியவர்கள் நம் அருகிலேயே இருந்தால் நாம்  அவர்களுக்கு பிடிக்காத எதையும் பேசுவோமா?

அவர்கள் விரும்புவதை மட்டும் பேசினால் தான் அவர்களுடன் நமக்குள்ள அன்பு அதிகமாகும்.

அதுபோல் நமது உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கிறார் என்ற உணர்ச்சியுடன் நாம் இருந்தால்

நமது நினைவுகள் எல்லாம் அவருக்கு பிடித்தமானவைகளாகத்தான் இருக்கும்.

அதுமட்டுமல்ல நமது நினைவுகள் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்.

நமது ஆண்டவரும் நமது உள்ளத்தில் நம்மோடு பேசுவார்.

ஆக ஆண்டவரை எங்கும் தேடிப் போகாமலேயே

நமது உள்ளத்தில் காணலாம்.

அவரோடு பேசலாம்.

நமக்கு வேண்டியதைக் கேட்கலாம்.

நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கலாம்.

அவருக்கு நன்றி கூறலாம்.

நம் உள்ளத்தில் வாழும் நம் ஆண்டவர் நம்மை ஒவ்வொரு வினாடியும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

நமது வாழ்வின் கடந்த காலத்தை நாம் கொஞ்சம் உற்று நோக்கினால் நம் வாழ்வின் நிகழ்வுகளின் காரணகாரிய தொடர்பு நன்கு புரியும்.

சில நிகழ்ச்சிகள் தற்செயலாய் நடந்தன  போன்று தோன்றும் ஆனால் அதன் விளைவு (effect) நிகழ்ச்சியை உற்று நோக்கினால்  அதில் இறைவனின் கரம் இருப்பது புரியும்.

பெப்ரவரி மாதத்தில் ஒருநாள் நான் பாவூர்சத்திரத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது,

என்னுடைய old Students ல் ஒருவர் என்னை சந்திக்க நேர்ந்தது.

"வணக்கம் சார். நம்முடைய மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு வரத் திட்டம் இட்டுள்ளோம்."

"அப்படியா,  என்ன விசேசம்?"

"96ஆம் ஆண்டு 10 C பழைய மாணவர்கள் ஒரு WhatsApp group வைத்திருக்கிறோம்.

மே 17 ல் ஒரு get together வைத்திருக்கிறோம். அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உங்களை அழைக்க வரப் போகிறோம்."

"ஆனால் அன்று நான் அமெரிக்காவில் அல்லவா இருப்பேன்!"

"சார், அப்போ....."

"சரி. அது இருக்கட்டும். உங்கள் group ல் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்."

"Sir, நாங்க சின்ன பிள்ளைகள் போல் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். நீங்கள் எங்களது ஆசிரியர்.

உங்களுக்கு நாங்கள் பேசுவது பிடிக்குமோ  என்னமோ!"

"அதெல்லாம் பிடிக்கும்! நானும் இப்போது சின்ன பிள்ளை தானே!"

"சரி, சார்;  சேர்த்துக் கொள்கிறோம்."

இது ஒரு சாதாரண விஷயம்.

ஆனால் இதில் இறைவனது திட்டம்  இருப்பது எனக்கு பின்னால் தான் தெரிந்தது.

நான்  மார்ச் ஆரம்பத்தில் என் மகன் குடும்பத்தோடு அமெரிக்கா சென்றேன்.

மே கடைசியில் ஊருக்குத் திரும்புவதாகத் திட்டம்.

ஆனால் உலகில்  கொரோனா ஆக்கிரமிப்பின் காரணமாக flight ticket Cancel ஆகிவிட்டது.

July 17ல் தான் rescue flight ல் பெங்களுருக்குத் திரும்பினோம்.

ஆனால் அங்கிருந்து ஊருக்கு வர E-pass பெறுவதில் பிரச்சனை.

ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும்போதும் rejected என்றே பதில் வந்து கொண்டிருந்தது.

என்ன செய்வது என்று புரியவில்லை.

அப்போது என்னுடைய பழைய மாணவர்கள் group ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு message கொடுத்துப் பார்ப்போமே என்று நினைத்து,

"அன்பு மாணவர்களே, நான் பெங்களூரில் இருந்து ஊருக்கு வர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். யாராவது உதவிக்கு வாருங்களேன்!"

என்று group ற்கு message கொடுத்தேன்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மகேஷ் என்ற மாணவன் பதில் Message கொடுத்திருந்தான்.

"Sir, உங்களுடைய ID proof ஐ உடனே என் நம்பருக்கு அனுப்புங்கள். e-pass எடுத்து உங்களை ஊருக்கு அழைத்துக் கொண்டு போவது என் பொறுப்பு!"

அவன் புங்கம்பட்டி பையன். பெங்களுரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

நான் ID proof ஐ  அனுப்பி வைத்தேன்.

அவனே E-pass எடுத்து, அவன் காரிலேயே என்னை பாவூர்சத்திரத்தில் என்னுடைய  வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்துவிட்டான்.

நான் மாணவர்கள் group ல் சேர்ந்தது தற்செயல் நிகழ்ச்சி அல்ல

என்னை ஊருக்கு அழைத்து வர இறைவன் போட்ட திட்டம் என்று அப்போதுதான் தெரிந்தது.

இறைவனுக்கு நன்றி!

ஒவ்வொருவர் வாழ்விலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நிறைய நடந்து கொண்டே இருக்கும்.

விசுவாச கண்ணால் பார்த்தால்தான் அவை நமக்குத் தெரியும்.

அடுத்து இயேசு திவ்ய நற்கருணைப் பேழையில்  நமக்காக இரவும் பகலும் காத்துக்கொண்டிருக்கிறார்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

.

Wednesday, October 21, 2020

"என்ன வேண்டும் ?"

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_21.html


"என்ன வேண்டும் ?" 
???????????????????????????????

முந்திய  நாளிலேயே அருளப்பர் இயேசுவை மக்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டார்.

 "இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.

எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் என்னிலும் முன்னிடம் பெற்றவர்: 

என்று நான் சொன்னது இவரைப்பற்றியே:"


மறுநாள் மீண்டும் அருளப்பர் தம்முடைய சீடர் இருவரோடு இருக்கையில்,

இயேசு அப்பக்கம் நடந்து சென்றார். 

அருளப்பர் அவரை உற்றுநோக்கி, "இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.

  அவர் கூறியதைக் கேட்ட  சீடர் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, 

"என்ன வேண்டும் ?" 

என்று கேட்டார். 

அவர்கள், 

"ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" 

என்று கேட்டனர். 


இயேசு"

"வந்து பாருங்கள்" என்றார்.
'
அவர்கள் வந்து, அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்று அவரோடு தங்கினார்கள்.

   இயேசுவைப் பின்தொடர்ந்து தங்கிய  இருவருள் ஒருவர்

 சீமோன் இராயப்பரின் சகோதரராகிய பெலவேந்திரர்

 அவர்   சீமோனிடம்   சென்று

, "மெசியாவைக் கண்டோம்" என்றார். 

  பின்பு அவரை இயேசுவிடம் அழைத்துவந்தார்.

 இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். 

 கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.

ஏற்கனவே அருளப்பர் தனது சீடர்களிடம் இயேசுவைப் பற்றி கூறிவிட்டார்.

 ஆகவே அவர்கள்   இயேசுவைப் பின் தொடரும் முன்னே 

அவர் யார் என்று அவர்களுக்கு தெரியும். 

"உலகின் பாவங்களைப் போக்குவதற்காக பலி ஆகப்போகின்றவர்தான்   இயேசு"

 என்று அருளப்பர் இயேசுவே அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

  அதுவரை அருளப்பரின் சீடர்களாக இருந்தவர்கள் இயேசுவின் சீடர்களாக மாறுவதற்காகவே அவரை பின்தொடர்ந்தனர்.

இது இறை மகனுக்கு நன்கு தெரியும்.

ஆனாலும் எதுவும் தெரியாதவர் போல, 

"என்ன வேண்டும் ?" 

என்று கேட்டார்.

அவர்களும் தாங்கள் வந்ததின் நோக்கத்தை வெளிப்படையாக கூறாமல்,

"ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" 

எங்கு கேட்டார்கள்.


இயேசுவும் நேரடியாகப் பதிலைக் கூறாமல்,

"வந்து பாருங்கள்" என்றார்.

அவர்களும் அவரோடு போனது மட்டுமல்ல,

அன்று அவரோடு தங்கினார்கள்.


என்ன வேண்டும் ?" 
நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?
"வந்து பாருங்கள்"
அவரோடு தங்கினார்கள்.
"மெசியாவைக் கண்டோம்" என்றார். 



திடீரென்று இயேசு நம் முன் தோன்றி,
 
" என்ன வேண்டும்''

 என்று கேட்டால்,  என்ன பதில் சொல்லுவோம்?

ஏற்கனவே ஒரு list வைத்திருப்போம்.

list ஆளுக்கு ஆள் மாறுபடும்.


தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும்.

 நல்ல சம்பளம் உள்ள வேலை கிடைக்கவேண்டும். 

நல்ல பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்.

குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.

நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்.

நமது விண்ணப்பங்களை ஒன்றன் பக்கம் ஒன்றாக அடுக்கினால் உலகின் பரப்பளவு காணாது அவற்றைக்   கொள்ள!

செவ்வாய் கிரகத்திற்குப்  போய் இடம் பார்க்க வேண்டும்!

ஆனால் பெலவேந்திரருக்கு இருந்த ஆசை முற்றிலும் ஆன்மீகம் சார்ந்தது.

ஆண்டவரைப் பற்றி அறிய வேண்டும்.

அதுவும் அவர் இருக்கும்
 இடத்துக்குப் போய் அறியவேண்டும்.

இயேசுவினுடன் நேரடி அனுபவம் மூலம் அவரை அறிய வேண்டும்.

அதனால்தான் அவர் கேட்கிறார்:

"ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"

நமக்கும் ஞானத்தின் மீது ஆசைதான். ஆனால் அது நம்மிடம் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

 ஆனால்

பெலவேந்திரரோ ஞானத்தை இருக்கும் இடத்திற்குப் போய் பெற விரும்புகிறார்.

ஆண்டவரும் ஒரு படி மேலே போய் தான் தங்கியிருக்கும் இடத்தைச் சொல்லாமல், 

"வந்து பாருங்கள்." என்கிறார்.

காதால் கேட்டு பெறும் அறிவை விட கண்ணால் பெறும் அனுபவம்  வாழ்க்கையில் அதிகம் பயன்பெறும்.

அதனால்தான் உலகினர் Radio வை விட TV.யை அதிகம் விரும்புகின்றனர்.


சீடரும் இயேசுவுடன் சென்று அவர் தங்கிய இடத்தை பார்த்தார்.

ஆண்டவர் பாருங்கள் என்றுதான் சொன்னார்,

ஆனால் பெலவேந்திரரோ

அன்று ஆண்டவரோடு தங்கிவிட்டார். 

தங்கியது மட்டுமல்ல. இயேசுவே மெசியா என்பதையும் அறிந்து கொண்டார்.

அறிந்ததும் மட்டுமல்ல,

தம் சகோதரராகிய சீமோனைக் கண்டுபிடித்து, "மெசியாவைக் கண்டோம்" என்று அறிவித்தார்.

நற்செய்தியாளர் 

''சீமோனிடம் சென்று"

 என்று எழுதவில்லை.

" சீமோனைக் கண்டுபிடித்து" என்று எழுதியிருக்கிறார்.

 நற்செய்தியை அறிவதிலும் தேடல்,

 அறிவிப்பதிலும்   தேடல்!

தேடிப்போய் நற்செய்தியை அறிந்து தேடிப்போய் அதை அறிவிக்கிறார்!

அறிவித்தது மட்டுமல்ல,
அவரை இயேசுவிடம் அழைத்து வரவும் செய்தார்.

இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். 

 கேபா என்பதற்கு இராயப்பர், அதாவது, பாறை என்பது பொருள்.

இந்த தம்ளர் அளவு நற்செய்தி பகுதிக்குள் கடலளவு செய்தி இருக்கிறது, ஆல விதைக்குள் ஆலமரமே இருப்பது போல! 

செய்தியை வாசித்ததோடு நின்றுவிடாமல் நாமும் உள்ளே சென்று கொஞ்சம் தேடுவோம்,

சில நிமிட தியானத்தின் மூலம். 

பெலவேந்திரர்   


 இயேசுவின் சீடராக விரும்பினார்.

 அதற்காக அவரைப் பின்தொடர்ந்தார், 

அவர் தங்கிய   இடத்திற்குச்   சென்று   இயேசுவுடனே  தங்கினார்.

இயேசுவை அறிந்தார். 
 


பெலவேந்திரருக்கு அருளப்பர் இயேசுவைக் காண்பித்தார்.

நமக்கு இயேசுவே தனது திருச்சபையின் மூலம் தன்னைக்  காண்பிக்கிறார்.

நமது நண்பர்களில் சிலர்,

" இயேசுவை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?"

 என்று கேட்டால்,

" பைபிளில் இருந்து தெரிந்து கொண்டோம்."  என்பார்கள்.

நம்மிடம் யாராவது அதே கேள்வியை கேட்டால் 

நாம் திருச்சபையிலிருந்து இயேசுவை அறிந்து கொண்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் திருச்சபை தான் தன் வாய் மொழி மூலம் நமக்கு இயேசுவை அறிவித்துவிட்டு

 வாசிப்பதற்கு பைபிளையும் தந்தது.

இயேசுவை நமக்குத் தந்தது அதற்காகவே அவரால் நிறுவப்பட்ட திருச்சபை.

பள்ளிகூடத்தில் பாடம் நடத்துவது யார் என்று யாராவது கேட்டால் 

ஆசிரியர் என்று சொல்வோமா?

 புத்தகம் என்று சொல்வோமா?

உனக்கு உணவு தருவது யார் என்று யாராவது கேட்டால் அம்மா என்று சொல்வோமா?

Dining table என்று சொல்வோமா?

இயேசு நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்னது,

 தனது சீடர்களிடம் தான், பைபிளிடம் அல்ல.

இதனால்  நாம் பைபிளை குறைத்து   மதிப்பிடவில்லை.  

பைபிள் இறைவாக்கு.

இறைவாக்கு திருச்சபை மூலம் நமக்கு அறிவிக்கப்பட்டது.

உடனே ஒருவர் 

இறைவாக்கு இயேசு மூலம் அறிவிக்கப்பட்டது என்று என்பார்.

அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.

இயேசு யார்?

திருச்சபை என்ற ஞான சரீரத்தின் தலை இயேசு தான்.

நாம் இயேசுவின்  என்ற ஞான சரீரத்தின் உறுப்புகள்.

இயேசு தான் திருச்சபை.

 நாம் அவருக்குள்தான் இருக்கிறோம்.

இயேசு திராட்சை கொடி என்றால் நாம் அவரின் கிளைகள்.


சரி, விசயத்துக்கு வருவோம்.

திருச்சபை நமக்கு இயேசுவை காண்பித்தது.

காண்பித்தது மட்டுமல்ல, தந்தது.

இயேசுவை பெற்றவுடன் அவர் நம்மிடம் கேட்கிறார்,

" உனக்கு என்ன வேண்டும்?"

நமக்கும் பெலவேந்திரரைப் போல இயேசுவைப் பற்றி அதிகமதிகமாய் அறிய ஆசை இருக்கிறது.

அவரைப்போலவே

 நாமும் இயேசு இருக்கும் இடத்திற்குச் சென்று,

 அவரோடு  தங்கி,

 அவரோடு உரையாடி,

 அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோமா?


அது  எப்படி முடியும்?

பெலவேந்திரர் இயேசுவின் சம காலத்தவர்.

 ஆகவே அவரை நேருக்கு நேர் பார்க்கவும்,

 அவரோடு நேருக்கு நேர் பேசவும்,

 அவர் சென்ற இடமெல்லாம் கூடவே செல்லவும் 

வாய்ப்பு இருந்தது.

நமக்கு?

நமக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறதே!

(தொடரும்)

லூர்து செல்வம்.

Tuesday, October 20, 2020

சமம் + தானம்

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_20.html


              சமம் + தானம்
""""""""""""""""""----------------'''''''''''''''''''''''''''''

தூய தமிழ்ப் பிரியர்களுக்கு  "சமாதானம்" என்ற வார்த்தை பிடிப்பதில்லை,

ஏனெனில்,

அது வடமொழிச்சொல்.

பல இன மக்கள் சேர்ந்து வாழும் போது 

அவர்கள் பேசும் மொழிச்
சொற்களும் ஒன்றோடு ஒன்று  கலந்து விடுகின்றன.

 இது வரலாற்று அனுபவம்.

ஆங்கிலேயர்கள் நம்மை நீண்ட நாள் ஆண்ட காரணத்தினால்

 நம்மிடையே சில ஆங்கிலச் சொற்கள்

 தமிழ் சொற்கள் போலவே பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு:

சட்டை      = Shirt.
சாப்பாடு = Supper
தின்னு    = dine
போடு        = put

சட்டையைப் போடு  = put on your shirt.

அதே போல சமாதானம் என்ற சொல்லும் வட மொழியிலிருந்து வந்ததுதான்.

ஆனால்,

எப்படி அமெரிக்காவில் வாழும் தமிழன் அமெரிக்க உணவை உண்ணும் போது அது தமிழ் உடலாக மாறிவிடுகிறதோ

அதேபோல்தான் சமாதானம் என்ற வடமொழி தமிழாகவே மாறிவிட்டது. 

அதுமட்டுமல்ல அந்த வார்த்தை நமது மறை வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.

சமம் + தானம் = சமாதானம் =equal place = equal status.

நமது மறை வாழ்வின் மையம் எது?

இறைமகன் மனு உரு எடுத்தது.

இறைமகன் எதற்காக மனுமகன் ஆனார்?

மனிதனை பாவக் குழியிலிருந்து மீட்டு,  விண்ணை நோக்கி எழுப்ப,

God came 'down' to the world to lift us 'up'  to Heaven.

விழுந்தவனைத் தூக்க வேண்டுமென்றால் 

தூக்குகிறவன்  குனிந்துதான் ஆக வேண்டும்.

  கிணற்றுக்குள் விழுந்தவனை தூக்க வேண்டும் என்றால் 

கிணற்றுக்குள் குதித்துதான்,

அதாவது விழுந்தவன் இருக்கிற இடத்திற்கு சமமாக இறங்கிதான்

 அவனை மேலே தூக்க முடியும்.

இது உலகியல் உண்மை மட்டுமல்ல,    

 மறையியல் உண்மையும் இதுதான்.

நாம் செய்த பாவத்தினால் இறைவனுக்கும் நமக்கும் இருந்த உறவு முறிந்து விட்டது.

முறிந்த உறவை திரும்பவும் ஏற்படுத்தவே,

அதாவது பாவத்தில் இருந்து மீட்டு  நம்மை தூக்கி விடவே

இறைமகன் நமக்கு சமமாக மனிதனாய் பிறந்தார்.


இறைவன் மனிதரைப் பாவத்திலிருந்து   மீட்க 

தன்னை மனித நிலைக்கு தாழ்த்தி

 அவன்செய்த பாவங்களை தானே சுமந்தார், அவற்றிற்கு பரிகாரம் செய்வதற்காக.

அதாவது
 மனிதனின் சம தானத்திற்கு இறங்கி,

அவனை சமாதானத்திற்கு   அழைத்தார்.

"தம்மையே வெறுமையாக்கி,

 அடிமையின் தன்மை பூண்டு

. மனிதருக்கு ஒப்பானார். 


மனித உருவில் தோன்றி,

தம்மைத் தாழ்த்திச் 

சாவை ஏற்கும் அளவுக்கு, 

அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.
(பிலிப். 2:7,8)

ஆக, இறைமகன் நம்மை மீட்க நம்மோடு சமாதானம்

(நம்மேல் சம தானத்திற்கு வந்து)

 செய்து கொண்டார்.

 அவர் தந்த சமாதானத்தை நாம் ஏற்றால்தான் நாம் மீட்பு பெற இயலும். 

சமாதானம் என்ற வார்த்தையில் அடங்கியுள்ள 

மறையியல்   தத்துவம் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். 

 பொருளில் அதற்குச் சமமான வேறு வார்த்தை தமிழில் இல்லை. 

அது எந்த மொழியிலிருந்து   வந்தால் என்ன?

 பொருள் தரக்கூடியதாய் இருந்தால் போதும்,

 இந்தியர் சுகம் இல்லாமல் இருக்கும் போது அமெரிக்க மருந்தை எடுக்க மாட்டாரா?

 பசிக்கும்போது தமிழர் வட இந்திய கோதுமை உணவை உண்ண மாட்டாரா?

திருவள்ளுவர்   எழுதிய  முதல் குறள். 

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு."

இதில்,

 "பகவன்"
 ( Sanskrit: भगवान्, Bhagavān)
என்ற வடமொழிச் சொல்லால்தான் 
கடவுளைக் குறிப்பிடுகிறார்.

அவரை யாராவது குறை
 சொல்லுகிறோமா?

நாமும் சமாதானம் என்ற சொல்லை பயன்படுத்துவதில்   
தவறு ஒன்றும் இல்லை என்பது அடியேனின் கருத்து.

ஆசிரியர்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடம்:

மிகவும் குறைந்த மதிப் பெண் பெற்ற பையனை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டுமானால்

 அவனோடு சம நிலையில் அமர்ந்து, 

அவனுக்குப் புரியக்கூடிய விதமாய் நம்முடைய போதனா முறையை மாற்றி 

அவனுக்கு பாடத்தை விளக்க வேண்டும்.

தாயினால் எப்படி மகனுக்குக் கடினமான பாடத்தையும் புரியும்படி சொல்லி கொடுக்க முடிகிறது?

மகனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு 

முகத்தோடு முகம் வைத்து சொல்லிக் கொடுப்பாள்.

  நீச்சல் சொல்லிக் கொடுப்பவர்கள் படிப்பவர்களோடு தண்ணீருக்குள் இறங்கி விடுவார்கள்.

ஏழ்மையின்  மகத்துவத்தை நமக்கு போதிப்பதற்காக

சர்வ வல்லப தேவன் ஏழையாகப் பிறந்தார்.

கீழ்ப்படிதலின் அவசியத்தை போதிப்பதற்காக 
.
இறைமகன் மனுமகன் ஆகி 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வளர்ந்தார்.

நமக்கு வருகின்ற துன்பங்களை ஆண்டவருக்காக பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை போதிப்பதற்காக

 இயேசு நமக்காக துன்பங்களை தாங்கிக் கொண்டார்,

நமக்கு வரும் அவமானங்களால் நாம் நிலைகுலைந்து போக கூடாது என்பதை போதிப்பதற்காக

 இயேசு யூதர்கள் செய்த   அவமானங்களைத் தாங்கிக் கொண்டார்.

அன்பர்களுக்காக உயிரையும் தியாகம் செய்ய வேண்டும் என்பதை போதிப்பதற்காக

 இயேசு சிலுவை மரத்தில் தன் உயிரையே நமக்காகத் தியாகம் செய்தார்.


நமக்கு தீமை செய்தவர்களை நாம் மன்னிக்க வேண்டும் என்று நமக்கு போதிப்பதற்காக 

தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார். 

இவ்வாறு போதனைகளை   நம் நிலைக்கு இறங்கி வந்து முன்மாதிரியாக வாழ்ந்து நமக்கு போதித்தார்.

*நம் நிலைக்கு அவர் இறங்கி வந்ததன் நோக்கம் நம்மை அவர் நிலைக்கு  உயர்த்த.*


இயேசு சமாதானத்தின் தேவன்.

மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் சமாதான உறவை ஏற்படுத்திய கடவுள்.

இயேசு காட்டிய வழியில் நடந்தால் தான் உலகில் சமாதானம் நிலவும்.

"நானே 

வானினின்று 

இறங்கிவந்த 

உயிருள்ள உணவு"
(அரு. 6:51)

நாம் ஏற்றம் பெற
இறங்கி வந்தவர் இயேசு.

வாழ்வோம் இயேசு தந்த சமாதானத்தோடு, இங்கும், விண்ணிலும்.

லூர்து செல்வம்.

Sunday, October 18, 2020

சமாதானமா? அமைதியா

சமாதானமா? அமைதியா
""""""""""""""""""----------------'''''''''''''''''''''''''''''
வகுப்பிற்குள் நுழைய கால் எடுத்து வைத்தபோது, உள்ளே ஒரே கூச்சல்.

உட்கார்ந்து கொண்டே வாய்ச் சண்டையும் கைச் சண்டையும் போட்டுக்கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.

முன் டெஸ்கில் பிரம்பால் ஓங்கி ஒரு அடிகொடுத்துவிட்டு   உள்ளே நுழைந்தேன்.

கப்..சிப். 

ஒரு மாணவனது குரல் என் காதில் விழுந்தது.

"Recess போகும்போது வைத்துக் கொள்கிறேன்ல."

"Sit down. நீ வாடா இங்க." 

"Sir..." 

"என்ன சொன்ன?"

"ஒண்ணும் சொல்லல, சார்."

"நீ இங்கே வாடா. உன்னிட்ட என்ன சொன்னான்?"

"Recess போகும்போது வைத்துக் கொள்கிறேன்ல ன்னு சொன்னான், சார்."

" Recess போகும்போது என்ன வைக்கப்போற?"

"அவன் என்ன அடிச்சான், சார்"

"டேய், நீ இவன அடிச்சியா,"

"தெரியாம அடிச்சிட்டேன், சார். மன்னித்துக் கொள்ளுங்கள், சார்."

"தெரியாமன்னா? கண் தெரியாமலா?"

"நான் அடித்தது தப்புதான். மன்னித்துக் கொள்ளுங்கள், சார்."


"எங்கிட்ட மன்னிப்பு கேட்கிற. என்னையா அடிச்ச?"

"இல்லை. சார்."

"அவங்கிட்ட மன்னிப்பு கேளு."

"சாரிடா. மன்னிச்சிடுடா."

அவன் என்னைப் பார்த்தான்.

"என்னை ஏன் பார்க்கிறாய்? அவனைப் பாரு. மன்னிப்புக் கேட்டு விட்டான் மன்னித்துவிடு."

"அவன் திரும்பவும் அடிப்பான், சார்."    


"அடிக்க மாட்டேன்டா. மன்னிச்சிடுடா. கால்ல வேணும்னாலும் விழுகிறேன், டா."

"மன்னிப்பு கேட்டு விட்டான், அதற்கு மேல் விசாரணை கிடையாது.

 அவனை பார்த்து மன்னித்துவிட்டேன் சொல்லு."

"மன்னித்துவிட்டேன்."

"நன்றி, டா."

"இரண்டு பேரும் கைகுலுக்கிக் கொள்ளுங்க."

கைகுலுக்கிக் கொண்டார்கள்.

"இப்போ உங்கள் இரண்டு பேருக்கு இடையே என்ன ஆனது?"

"சமாதானம் ஆகி விட்டது, சார்."

"சரி அமைதியாகப் போய்   உட்காருங்கள்.

மாணவர்களே, இரண்டு பேருக்குள்ளும்     சமாதானம் ஆகி விட்டதாக கூறுகிறார்கள் சமாதானம் என்றால் என்ன?

மகேஷ் சொல்லு"

"சண்டையினால் உறவை இழந்த இருவர் ஒருவரையொருவர் மன்னித்துக் கொண்டதால்   ஏற்படும் உறவுதான் சமாதானம்."

"அமைதி என்றால்?"

"சத்தம் இல்லாமல் இருத்தல்."

"நான் வகுப்பிற்குள் வரும்போது கூச்சலோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தீர்கள்.

பிரம்பு சத்தத்தை கேட்டவுடன் அமைதி ஆகிவிட்டீர்கள். 

கூச்சலோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, உங்களிடையே ........ம் இல்லை,  ........இல்லை. பூர்த்தி செய், ராஜ்."



"கூச்சலோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, எங்களிடையே சமாதானமும் இல்லை, அமைதியும் இல்லை."

"பிரம்புச் சப்தத்தை கேட்டவுடனே?''

"அமைதி வந்தது, சமாதானம் இல்லாமலேயே."

"ஆகவே சமாதானமும் அமைதியும் ஒரே பொருள் உள்ள வார்த்தைகள் அல்ல.

வெர்செய்ல்ஸ் (Versailles) உடன்படிக்கை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''

"ஆமா சார். முதல் உலகப் போரின் முடிவில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை."

"உண்மையிலேயே அது சமாதான உடன்படிக்கைதானா?"


"இல்லை சார். அது வெறும் அமைதி உடன்படிக்கை."

"தோற்ற நாடுகள் வென்ற நாடுகளை மன்னிக்கவில்லை.

 வென்ற நாடுகளும் தோற்ற நாடுகளை மன்னிக்கவில்லை. மன்னிக்காமல் எப்படி சமாதானம் வரும்?"

"எப்படி அமைதி உடன்படிக்கை?"

"உடன்படிக்கைஏற்பட்டு சில ஆண்டுகள் போர் ஏற்படாமல்   அமைதி நிலவியது.

ஆனால் அந்த அமைதி காலத்தில் நாடுகள் அடுத்த போர் ஆரம்பிப்பதற்காகத் தங்களை தயாரித்துக் கொண்டு இருந்தன.

தயாரித்து முடிந்தவுடன் இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்தன."

"இரண்டாம் உலகப்போரின் முதல் காரணம் என்ன?"

"முதல் உலகப் போரின் இறுதியில் ஏற்பட்ட சமாதான,  

Sorry, 

அமைதி ஒப்பந்தம் தான் இரண்டாம் உலகப்போரில் முதல் காரணம்."

"இப்போ ஒன்று புரிந்திருக்கும்.

 அமைதி நிலவுவதால் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தம் அல்ல.

இப்போ சொல்லுங்கள்,

 உலகிற்கு  வேண்டியது சமாதானமா? அமைதியா?"

"இரண்டுமே வேண்டும், சார்."

"Correct. சமாதானம், அமைதி இரண்டும்  வெவ்வேறு வார்த்தைகள்,

வெவ்வேறு நிலைகளைக் குறிப்பவை.

ஒன்றோடொன்று தொடர்பு உடையவை.

சமாதானம் இரண்டு அல்லது அதற்கு மேல் உள்ள மக்களின் சுமுகமான உறவை குறிக்கிறது.

அமைதி நமது மன நிலையை குறிக்கிறது.

Peace of mind.

ஒருவன் தன்னுடனேயே கொண்டுள்ள உறவு.

ஒருவன் தன்னுடனே சுமூகமான உறவைக் கொண்டிருந்தால்
 அவனது   மனம் அமைதியாக இருக்கும்.

பசிபிக் பெருங்கடல், அதாவது, அமைதிப் பெருங்கடல்.

உலகிலேயே மிக ஆழமான கடல்.

ஆசியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள கடல்.

அலைகளே இல்லாத கடல்.

விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், இறை அன்பிலும் ஆழமாக உள்ள மனதில் 

போராட்டங்களாகிய அலைகள் இருக்காது.

 மனம் எப்பொழுதும் அமைதியாக இருக்கும்.

 அமைதியை ஆண்டவர் இருப்பிடம் என்பார்கள்.

அமைதியில் தான் ஆண்டவர் பேசுவார். 

அமைதிதான் ஆன்மீக தியானத்திற்கு ஏற்ற மனநிலை.

இறைவனோடும் தனது அயலானோடும் சுமூகமாக இருக்கும் மனிதனின் மனது அமைதியாக இருக்கும்.

அதாவது சமாதானம் உள்ள மனதில்தான் அமைதி இருக்கும். 

இதுதான் சமாதானத்திற்கும் அமைதிக்கும் உள்ள தொடர்பு.

இறைவனோடு சமாதானமாக இல்லாத மனது பாவ நிலையில் உள்ளது.

பாவ நிலையில் உள்ள மனதில் அமைதி இருக்காது.

மன அமைதி வேண்டுமென்றால்

 முதலில் நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை சுமுகமாக்க வேண்டும்,

 அதாவது,

 நமது பாவங்களுக்காக மனம் வருந்தி,

 மன்னிப்பு கேட்டு,

 பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ளவேண்டும்.

இறைவனோடு   சமாதானமாக இருக்கும் மனிதன் இயல்பாகவே அயலானோடும் சமாதானமாக இருப்பான்.

இறைவனோடும் அயலானோடும் சமாதானமாக இருக்கும் மனிதனின் மனதில் போராட்ட அலைகள் இருக்காது.

போராட்ட அலைகள்  இல்லாத மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்கும்.

சமாதானமும், அமைதியும் நமது மனதின் இரண்டு நிலைகள்.

காரண, காரிய  (Cause and effect) தொடர்பு உள்ளவை.

சமாதானம்தான் அமைதிக்கு காரணம்.

இதை நமது அனுபவத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

நமது மனதுக்கு பிடிக்காத ஒருவரை சந்திக்க நேரிட்டாலே நமது மன அமைதி பாதிக்கப்படும்.

எல்லோரும் நமக்கு பிடித்திருந்தால் 

அதாவது 

எல்லோரோடும் நமக்கு சமாதானமான உறவு இருந்தால்

 நமது மனது அமைதியாக இருக்கும்.


போராட்டங்கள் நிறைந்த உலகில் ஒருவன் அமைதியாக இருக்கிறான் என்றால்,

அவன் மனதில் யார் மீதும் வெறுப்பு இல்லை என்பது பொருள்.

அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு இருக்காது.

அன்பு இருக்கும் இடத்தில்
சமாதானம் இருக்கும்.

அன்பு இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும்.

அன்பு இருக்கும் இடத்தில் உண்மையான மகிழச்சி இருக்கும்.

அன்பே கடவுள்.
God is Love.

ஆக,

இறைவன் இருக்கும் மனதில் 
சமாதானம் இருக்கும்.
அமைதி இருக்கும்.
மகிழ்ச்சி இருக்கும்.

ஆகவே, மாணவர்களே....."

"நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும்."

"Very good."

"சார், ஒரு சின்ன சந்தேகம்.

 பிரம்பு இருக்கும் இடத்தில் அன்பு இருக்குமா?"

"எனக்கு உங்கள் மேல் அன்பு இருப்பதால்தான் என் கையில் பிரம்பு இருக்கிறது.

கடவுள் கூட அப்பப்போ பிரம்பைப் பயன்படுத்துவார்,

நம்மைத் திருத்துவதற்காக.

இப்போ ஒரு கேள்வி.

சமாதானத்திற்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு.

 ஆனால் அமைதிக்கு இரண்டு அர்த்தங்கள். எவையெல்லாம்? குமார், சொல்லு."

"ஒன்று மன அமைதி. 

அடுத்தது வாயைப் பொத்திக் கொண்டு இருக்கும்போது ஏற்படும் அமைதி."

"வகுப்பில் அமைதியாக இருக்க வேண்டுமா?"

"மன அமைதி எப்போதுமே வேண்டும்.

ஆனால் வகுப்பில் வாய் எப்போதும் அமைதியாய் இருந்தால்,

உங்களால் பாடம் நடத்தவும் முடியாது,

 எங்களால் உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாது.

 ஆகையினால் எப்போது அமைதியாய் இருக்க வேண்டுமோ அப்போது அமைதியாய் இருக்க வேண்டும்,

 எப்போது பேச வேண்டுமோ அப்போது பேச வேண்டும்."

"ரெக்ஸ், எப்போது அமைதியாய் இருக்க வேண்டும்?

எப்போது பேச வேண்டும்?"

"சார், நீங்கள் பேசும் போது நாங்கள் அமைதியாய் இருக்க வேண்டும்.

அமைதியாய் இருந்து நீங்கள் சொல்வதை கவனிக்கவேண்டும்.

நாங்கள் பேசும்போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்." 

"அப்போ,...."

"சார், நான் இன்னும் சொல்லி முடிக்கல."

"சரி, சொல்லு."

"நீங்கள் பாடம் நடத்துவதை  நாங்கள் அமைதியாகக் கவனிக்க வேண்டும்.

பாடத்தில் ஏதாவது சந்தேகம் வந்தாலும் நீங்கள் கேள்வி கேட்கும் போதும் நாங்கள் பேச வேண்டும்."

"ஜெபம் சொல்லும்போது?"

"நாமே வளவள என்று பேசிக்கொண்டே இருக்கக்கூடாது.

கடவுள் பேசுவதையும் கேட்க வேண்டும்."

"கடவுள் சொல்வதை கேட்டால் தான் மனதில் சமாதானமும், அமைதியும் நிலைத்திருக்கும்." 
 
"உலகில் நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம். உண்டாகுக." (லூக்.2:14)

லூர்து செல்வம்.


''
.