Tuesday, June 30, 2020

"ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்: மடிந்துபோகிறோம்"(மத்.8:25)


"ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்: மடிந்துபோகிறோம்"
(மத்.8:25)
************************************

இயேசுவும், சீடர்களும். படகில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

கடலில் மாபெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது.

படகுக்குமேல் அலைகள் எழுகின்றன. 
'
இயேசு தூங்கிக்கொண்டிருக்கிறார்.
.

நாம் நற்செய்தி வாசிக்கும்போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளை வெறும் நிகழ்ச்சிகளாக வாசிக்கக் கூடாது.

அவை நமக்குத் தரும் செய்திகளாகத்தான் (Messages)
வாசிக்க வேண்டும்.

நமது வாழ்வில் பாவத்தை மட்டுமே நாம் திட்டமிட்டு செய்கிறோம்.

மற்ற எல்லா நிகழ்வுகளுமே இறைவனின் நித்திய கால திட்டத்தின்படியே (Eternal plan of God) நடக்கின்றன.

மனிதன் தன் சுய சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவம் செய்கிறான்.

இறைவன் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்கவும்,

 அவனை விண்ணகப் பாதையில் வழிநடத்தவும்

 அவனது மற்ற நிகழ்வுகளை அவரே திட்டமிடுகிறார்.

அவரது சர்வ ஞானத்தின் காரணமாக, 

மனிதன் அவனது
சுதந்திரத்தை எப்போதெல்லாம் தவறாகப்  பயன்படுத்துவான்
என அவருக்கு நித்திய காலமாகத்  தெரியுமாகையால்,

அவனைத் திருத்துவதற்கான திட்டங்களையும் நித்திய காலமாகவே வகுக்கிறார்.

இயேசுவின் உலக வாழ்க்கையின்போது நடந்த ஒவ்வொரு நிகழ்வும் அவரது திட்டப்படியே நடந்தன.

அவர் சாப்பிடவும், தச்சுவேலை பார்க்கவும், தூங்கவும், புதுமைகள் செய்து வியாதிகளை  குணமாக்கவும் மனிதனாகப் பிறக்கவில்லை.

அவர் பிறந்ததின் ஒரே நோக்கம் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்பது மட்டும்.

நம்மைப் பாவத்திலிருந்து மீட்கவே அவர் நற்செய்தியை அறிவித்தார், பாடுபட்டு சிலுவையில் மரித்தார்.

அவரது வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் ஒரு நற்செய்தியைச் சொல்லும்.

அவர் புதுமைகள் செய்து வியாதிகளைக் குணமாக்கியதும் மக்களது விசுவாசத்தை வளர்க்கத்தான்.

"எளிய மனத்தோர் பேறு பெற்றோர்."  என்ற நற்செய்தியை நமக்கு வாழ்ந்து காண்பிக்கத்தானே 

இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

வாழ்வின் இறுதியில் அடக்கம் செய்யப்பட சொந்தத் கல்லறை கூட இல்லையே!



இயேசு சீடர்களோடு படகில் வரும்போது தூங்குகிறார்.

அவரது தூக்கம் சீடர்களுக்கும், நமக்கும் தரும் நற்செய்தி என்ன?

"குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம்?"

என்ற ஒரு வாக்கியம் இரண்டு செய்திகளைத் தருகிறது.

1. ஆழ்ந்த விசுவாசம்.
2. பயம் இல்லாமை.


 இயேசுவின் சீடர்களாய் இருக்க வேண்டுமென்றால் ஆழ்ந்த விசுவாசம் வேண்டும். 

இயேசு கடவுள் என்று உறுதியாக விசுவசிக்க வேண்டும். 

"அங்கிருந்தவர்கள்  வியந்து, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யார் ?" என்றனர்."

இயேசு சொந்தமாக படகு வைத்திருந்திருக்க மாட்டார்.

இராயப்பரும், அருளப்பரும் தங்கள் படகுகளை விட்டு விட்டுதான் இயேசுவைப் பின்பற்றினர். 

அப்படியானால் படகு ஏதாவது ஒரு படகோட்டிக்குச் சொந்தமாய் 
இருந்திருக்க வேண்டும்.

'சீடர்கள்' என்று குறிப்பிடாமல்
'அங்கிருந்தவர்கள்' என்று குறிப்பிடப் பட்டிருப்பதால்

 இயேசுவோடும், சீடர்களோடும் மற்றவர்களும்  வந்திருக்க வேண்டும்.

சீடர்களுக்கு இயேசு கடவுள் என்பது தெரியும்.

ஆகவே அவரை 'ஆண்டவரே' என்று அழைத்தார்கள்.


அங்கிருந்தவர்கள்  வியந்து, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே,

 இவர் யார்?" என்றனர்."

"இவர் யார்?" என்று வியந்ததிலிருந்து அவர்களிடம் விசுவாசம் இல்லை என்பது தெரிகிறது.

 சீடர்களுக்கு விசுவாசம் இருந்தது. ஆனால் குறைவாக 
 இருந்தது.

"குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம்?"

என்று இயேசு சீடர்களிடம் மட்டுமல்ல,

நம்மிடமும் கேட்கிறார்.

படகில் இயேசு கடவுள் என்பதை  அறிந்திருந்த  சீடர்களும்,

"இவர் யார்?" என்ற கேட்ட
 மற்றவர்களும் இருந்தார்கள். 

சீடர்களிடம் விசுவாசம் இருந்தும் குறைவாக இருந்ததால் விசுவாசம் இல்லாதவர்களைப் போல பயந்தார்கள்.

குறைவாகவாவது விசுவாசம்
இருந்ததால்தான்,

"ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்:" என்று கத்தினார்கள்.

இயேசு அவர்களுடைய அற்ப விசுவாசத்தைக் கடிந்து கொண்டார்.


இன்று நமது நிலையும் சீடர்களின் நிலையைப் போலிருக்கிறது.

நம்மிடமும் விசுவாசம் இருக்கிறது, ஆனால் போதிய அளவு இல்லை.

நம்மோடு விசுவாசம் இல்லாத பிற மக்களும் இருக்கிறார்கள்.

இன்றைய காலக் கட்டத்தில் அன்றைக்கு கடல் கொந்தளித்தது போலவே

 உலகமும் பிரச்சனைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

இக்கொந்தளிப்பில் விசுவாசம் உள்ள நாமும், 
விசுவாசம் அற்றவர்களும்
 ஒரே மாதிரி எதிர்வினை (Reaction) ஆற்றுகிறோமா?

நாம் விசுவாசம் உள்ளவர்களாக எதிர்வினை  ஆற்றுகிறோமா?

ஒரு குழந்தை தன் தாயின் இடுப்பில் இருந்து கொண்டு போகிறது.

இன்னொரு குழந்தை தனியே போகிறது.

எதிரே ஒரு நாய் வருகிறது.


இரண்டு குழந்தைகளின் எதிர் வினையும் எப்படி இருக்கும?

தனியே போகும் குழந்தை பயந்து கூப்பாடு போடும்.

தாயின் மடியிலுள்ள குழந்தை பயப்படாது, தாயை இறுகப் பற்றிக் கொள்ளும்.


விசுவாசம் உள்ள நாம் என்ன செய்கிறோம?

என்ன பிரச்சனையாக இருந்தாலும்

 அதிலிருந்து விடுதலை பெற நமக்கு உரிமை இருக்கிறது.

தீர்வு காண என்ன முயற்சி எடுத்தாலும்,

இறைவன் நம்மோடு இருந்து நமக்கு உதவுவார் என்ற

 ஆழமான விசுவாசத்தோடு அவரிடம் செபிக்க வேண்டும்.

தீர்வு எதுவாக இருந்தாலும் இறைவன் சித்தத்தை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறும் அளவிற்கு நமது மனது பக்குவப் பட்டிருக்க வேண்டும்.

இயேசு நமது பிரச்சனையை கட்டாயம் நமக்குச் சாதகமாகவே தீர்த்து வைப்பார்.

"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்."

என்று ஒரு பாடல் வரி உண்டு.

நம்பிக்கையோடு செபித்தால்,

என்ன நடந்தாலும் நல்லதுதான் என்று ஏற்றுக்கொள்வோம்.


படகில் இயேசு தூங்கியதிலிருந்து நாம் இன்னொரு பாடமும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசு தூங்குவதற்காகப் படகில் ஏறவில்லை.

அவர் கடவுள்.

சீடர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காகவே அவரே கடலைக் கொந்தளிக்கச் செய்திருக்க  வேண்டும்.

(அவனன்றி அணுவும் அசையாது, காற்று மட்டும் அசையுமா?)

அதற்காகவே அவர் தூங்கியிருக்க வேண்டும்.

காற்று வீசாமலும்,
அவர் தூங்காமலும் இருந்திருந்தால் சீடர்கள் ஏதாவது பேசிக்கொண்டு
இருந்திருப்பார்கள்.

தூக்கத்தின் காரணமாகவும்,  காற்றின் காரணமாகவும்தான் 

அவர்கள் இயேசுவை நோக்கி செபித்தார்கள், விசுவாசம் பற்றியும் கற்றுக் கொண்டார்கள்.

"நான் உங்களோடு வரும்போது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்?

நான் சர்வவல்லப கடவுள் என்ற விசுவாசம் இருந்தால்
உங்களுக்குப் பயம் வருமா?

என் மீது முழுமையான விசுவாசம் வையுங்கள் .

உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது."

என்றும், 

இன்னும் அதிகமாகவே அவர்களுக்குப் அறிவுரை கூறியிருப்பார்.

இது ஒரு செயல் முறைப் போதனை.

நமது வாழ்விலும் கூட, நம்மை அவரை நோக்கி ஈர்ப்பதற்காகவே,

 நமது வாழ்வில் அவர் பிரச்சனைகளை அனுமதித்து விட்டு 

அவர் கவனியாதது மாதிரி இருப்பார்.

நாம் அவரை  உதவிக்கு அழைப்போம்.

அழைக்கும்போதுகூட, நம்மை கவனியாதது மாதிரி இருப்பார்,

ஆனால் கவனித்துக் கொண்டு தான் இருப்பார்.


இது நம்மை விடாமல் செபிக்க வைப்பதற்காகவும்,

அவரின்றி நம்மால் எதையும் செய்ய முடியாது என்பதை நாம் உணரும்படியாகத்தான்.

நாம் முதலில் ஆழமான விசுவாசம் வேண்டி செபிக்க வேண்டும்.

நமது விசுவாசத்தை அவர் ஆழப்படுத்துவார். 

ஆழமான விசுவாசத்தோடு செபிக்கும்போது

நாம் கேட்டது கிடைக்கும்.

ஆக, இந்த படகு நிகழ்விலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்:

1. நமக்கு ஆழமான விசுவாசம் வேண்டும்.

2. இடை விடாது செபிக்க வேண்டும்.

3. எப்போதும் கடவுள் நம்மோடு இருப்பதால், பிரச்சனைகளைக் கண்டு பயப்படக்கூடாது.

4. என்ன நடந்தாலும கடவுள் திட்டப்படி நமது நன்மைக்காகவே நடக்கும்.

விசுவசிப்போம்,

வெற்றி பெறுவோம்.

லூர்து செல்வம்.

Monday, June 29, 2020

"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்."(மத்.16:25)


"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்."
(மத்.16:25)
-------------------------------------------------------

வாழ்வில் இருவகை உண்டு:

நிலையற்ற வாழ்வு.
நிலை வாழ்வு.


நிலையற்ற வாழ்வு இவ்வுலகைச் சேர்ந்தது.

நிலை வாழ்வு மறுவுலகைச் சேர்ந்தது.

இவ்வுலகில் வாழ்கின்ற அத்தனை மனிதர்களும் நிலையற்ற வாழ்வு உள்ளவர்கள்தான்.

பிறந்தவர்கள் அத்தனை பேரும் இறப்பது உறுதி.

விண்ணக வாழ்வை அடைந்தவர்களுக்கு இறப்பே இல்லை.

இயேசு சொல்கிறார்:


"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான்."

உயிர் இருக்கும் நிலைக்குதான் வாழ்வு என்று பெயர்.

உலகில் இருக்கும்வரை நாம் உயிரோடு வாழவே விரும்புகிறோம்.

நாம் உயிர் வாழ்வதற்காக ,

அதாவது,

இவ்வுலகின் நிலையற்ற வாழ்வை வாழ்வதற்காக

நமது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறோம்.

இப்போது கேள்வி,

நிலையற்ற வாழ்வை வாழ்வதற்காக

அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறோம் என்றால்,

நிலை  வாழ்வை வாழ்வதற்காக நாம் எப்படி இருக்க வேண்டும்?

"இயேசு அவரிடம் கூறியதாவது: "நானே வழியும் உண்மையும் உயிரும்." (அரு. 14:6) 

நாம் இயேசுவின் சீடர்கள்.

நம்மைப் பொறுத்தமட்டில், இயேசுவே நமது உயிர். இயேசு தான் நமது வாழ்வு.

Jesus is our life.

நமது ஆன்மீகத்தில்

இயேசு நம்மோடு இருக்கும்போது, 

நாம் வாழ்கிறோம்.

இயேசுவை இழக்கும்போது இறக்கிறோம்.

பாவம் செய்யும்போது நாம் இயேசுவை இழக்கிறோம்,

நிலை வாழ்விற்கான தகுதியையும் இழக்கிறோம்.

பாவத்தோடு உலகில் வாழ்பவர்கள் நடை பிணங்கள்,

ஏனெனில் அவர்களிடம் உயிராகிய இயேசு இல்லை.

பாவம் இல்லாதவர்களிடம் அவர்களின் உயிராகிய இயேசு இருக்கிறார்,

அவர்கள் நிலை வாழ்விற்குத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான்."

யாராவது நம்மிடம் வந்து,

"உனக்கு வேண்டியது நீ பார்க்கும் உத்தியோகமா அல்லது உயிரா?

இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்."

என்று சொன்னால்,

நாம் என்ன பதில் சொல்லுவோம்?

"உயிர் போனாலும் பரவாயில்லை, உத்தியோகம்தான் முக்கியம்" என்று சொல்வோமா?

அல்லது,

"எனக்கு உயிர் இருந்தால் போதும்." என்று சொல்வோமா?

நமக்குத் தெரியும், உயிரில்லாதவர்களால் உத்தியோகம் பார்க்க முடியாது என்று.

ஆகவே நாம் உயிரைத்தான் தேர்ந்தெடுப்போம்.


"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்."

இப்போ இயேசு நம்மிடம் கூறுகிறார்:

"நான் நிலை வாழ்வு.

 நீ உலகில் வாழ்ந்து கொண்டிருப்பது நிலையற்ற வாழ்வு.

நான் உன்னோடு இருந்தால் உனக்கு நிலை வாழ்வு கிடைக்கும்.

நான் உன்னோடு இல்லாவிட்டால் நித்திய மரணம் (நரகம்) கிடைக்கும்.

நீ பாவம் இல்லாமல் இருக்கும் போது நான் உன்னிடம் இருப்பேன். 

நீ பாவம் செய்தால் என்னை இழப்பாய்.

உனக்கு நான் வேண்டுமா? பாவம் வேண்டுமா?"

"ஆண்டவரே, நீர்தான் வேண்டும்."

"எனது அடுத்த கேள்வி:

என்னை நீ மறுதலித்தால் நீ இவ்வுலகில் வாழலாம்.

என்னை ஏற்றுக்கொண்டால் உன்னைக் கொன்று போடுவார்கள்.

என்னை ஏற்றுக் கொள்வாயா?
மறுதலிப்பாயா?

திரும்பவும் சொல்கிறேன்,

என்னை மறுதலித்தால்தான் இவ்வுலகில் உயிர் வாழலாம்.

இப்போ சொல்

என்னை ஏற்றுக் கொள்வாயா?
மறுதலிப்பாயா?"

இப்போ நாம் சொல்ல வேண்டிய பதில்:

"ஆண்டவரே, நீரே எங்கள் நிலை வாழ்வு.

எங்களுக்கு வேண்டியது அழியாத நிலைவாழ்வு,

நீர்தான் வேண்டும்.

உமக்காக நிலையற்ற வாழ்வை இழக்கத் தயார்.

நிலையற்ற வாழ்வுக்காக 
நிலை வாழ்வை இழக்க மாட்டோம்.

நிலையற்ற வாழ்வைக் காத்துக்கொள்ள அல்ல,

நிலைவாழ்வைப் பெறவே விரும்புகிறேன். 

எக்காரணம் முன்னிட்டும்  உம்மை இழக்க மாட்டேன். 

 உம்பொருட்டு என் உயிரை இழக்கத் தயார்.

எனக்குத் தெரியும்

உமக்காக இவ்வுலக வாழ்வை இழப்பவன்

மறுவுலகில் நிலைவாழ்வைக் கண்டடைவான்."

நாம் வயலில் நெல் நாற்று நட்டு, உரமிட்டு , நீர்ப் பாய்ச்சி வளர்க்கிறோம்.

எதற்காக?

அது வயலிலேயே எப்போதும் வளர்ந்து கொண்டிருப்பதற்காகவா?

இல்லை.

அது கதிர் விட்டு, 
கதிர் விளைந்தவுடன் அறுவடை செய்து,

நெல்லை வீட்டிற்குக் கொண்டு செல்கிறோம்.

 அதற்காகவே நாற்று நடுகிறோம்.

நெல்லை வீட்டிற்குக் கொண்டு செல்லும்போது

வைக்கோலை வயலிலேயே விட்டுச்  செல்லுகிறோம்.

அதேபோல்தான், இயேசு வயலாகிய இவ்வுலகில் நாற்றாகிய நம்மை நட்டு, தன் அருளாகிய நீரும், உரமும் இட்டு வளர்க்கிறார்.

அருள் பெற்று முதிர்ச்சி அடைந்த கதிராகிய நம் ஆன்மாவை அறுவடை செய்து விண்ணக நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்.

வைக்கோல் ஆகிய உடல் பூமியிலேயே விட்டுச் செல்லப் படுகிறது.

உலக முடிவில் உயிர்ப்பின்போது உடலும் ஆன்மீக உடலாக (spiritual body) மாறி,

 ஆன்மாவோடு இணைந்து விண்ணக வாழ்வில் பங்கேற்கிறது.

ஆக,

நாம் இரயிலில் ஏறுவது இரயிலிலேயே இருப்பதற்காக அல்ல,  நம் வீட்டிற்குச் செல்வதற்காக.

நாம் நிலையற்ற வாழ்விற்குள் நுழைந்தது, நிலை வாழ்விற்குள் செல்வதற்காகத்தான்.

நாம் இவ்வுலக வாழ்வே சதம் என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சென்னையில் இரயில் ஏறி தென்காசிக்கு வந்து கொண்டிருக்கிறோம்.

Train தென்காசிக்கு வந்தவுடனே ஊருக்கு வந்த மகிழ்ச்சியோடு இரயிலை விட்டு இறங்குவோமா?

அல்லது,

"ஐயெய்யோ! ஊருக்கு வந்துவிட்டோமே" என்று கூப்பாடு போட்டு அழுவோமா?

நம்மில் அநேகர் விண்ணக வாயிலை நெருங்கும் போது அதைத்தானே செய்கிறோம்.

ஒரு மகன் தந்தையின் மரணச் செய்தியை இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்:

"எங்கள் அன்புள்ள தந்தை........ துன்பங்கள் நிறைந்த இவ்வுலகை விட்டு விட்டு

 பேரின்ப நிலையை அடைந்து விட்டார் 

என்ற செய்தியை 

மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்."

இது எப்படி இருக்கிறது தெரியுமா?

"கடலுக்குள் விழுந்துவிட்ட என் மகன் உயிரோடு கரை சேர்ந்து விட்டான் என்ற செய்தியைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன"

சிரிப்பு வரவில்லை?

வெளியூருக்கு குடும்பத்தோடு Tour போயிருக்கிறோம்.

பல ஊர்களுக்குச் செல்கிறோம்.

ஊர்களைப் பார்த்து இரசிக்கும்போதே, ஆங்காங்கு புதுப்பொருட்கள் வாங்குகிறோம்.

எதற்காக?

நமது வீட்டை அலங்கரிப்பதற்காக, வீட்டில் நாம் பயன்படுத்த.

விண்ணகம் நமது வீடு. இவ்வுலம் Tourist centre. .

நமக்கு வேண்டிய, விண்வீட்டில் பயன்படுத்த ஆன்மீகப் பொருட்கள் நிறைய இங்கே கிடைக்கின்றன.

நாம் அவற்றை வாங்குகிறோமா?

பலர் அவற்றை வாங்கி, விண்ணகத்துக்கு அனுப்பி விடுகிறார்கள்.

பூமியில் வாங்கிய நமது விண்ணகக்  செல்வங்களை நாம் அங்கு கொண்டு செல்வதற்காகத்தான் 

நம்மோடு காவல் தூதர்களை இறைவன் அனுப்பியிருக்கிறார்.  

நாம் வாங்கி அனுப்புகிறோமா?

கேட்கலாம், 

செல்வங்கள் எங்கே இருக்கின்றன, 

அவற்றை வாங்க நம்மிடம் பணம் எங்கே இருக்கிறது என்று.

நமது ஆண்டவராகிய இயேசு நமக்கு வேண்டிய விண்ணகச் செல்வங்களைத் தயாரிப்பதற்காக, 

மனிதனாகி பாடுகள் பல பட்டு,
சிலுவையில் மரணம் அடைந்து,

தனது பாடுகள் மற்றும் மரணத்தின் மூலமாக

நிறைய ஆன்மீகச் செல்வங்களைத் தயாரித்து வைத்திருக்கிறார்.

அவற்றைப் பெற நாம் செலுத்த வேண்டிய பணம்

தேவத் திரவிய அனுமானங்கள், செபம்,
துன்பங்கள்.

நாம்  தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுவதின் மூலமும்,

துன்பங்களை இயேசுவுக்காகப்
பொறுமையுடன் ஏற்று, அவற்றை அவருக்கே ஒப்புக் கொடுப்பதன் மூலமும்

செபிப்பதன் மூலமும்

 நாம் நிறைய விண்ணகச் செல்வங்களைப் 
பெற்று

விண்ணகத்தில் சேமிக்க வேண்டும்.

விண்ணகம் சென்றபின் அவற்றை நிரந்தரமாக அனுபவிக்கலாம்.

நாம் தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுகிறோம்.

ஞானஸ்நானம் பெற்று விண்ணகப் பயணத்திற்குள் நுழைந்து விட்டோம்.
(கிறிஸ்தவர்களாக மாறிவிட்டோம்.)

இயேசு தன் பாடுகளால் தயாரித்து வைத்திருக்கும் பாவமன்னிப்பைப் பெற பாவசங்கீர்த்தனம் செய்கிறோமா?

தகுதியான முறையில் திருப்பலி கண்டு, திருவிருந்தில் கலந்து கொள்கிறோமா?

செபத்திற்கும், தியானத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்?

துன்பங்களைக் கண்டு ஏன் பயப்படுகிறோம்?

நமக்காக இயேசு துன்பப்பட்டார் என்று நமக்குத் தெரியும்.

அவருக்காகத் துன்பப்படும்போது தானே அவருடைய உண்மையான சீடர்கள் ஆகிறோம்!

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது"
(லூக். 14:27)


இயேசுவுக்காக நமக்கு வரும் சிலுவையைப் பொறுமையுடன் சுமந்து,

 அவருக்கே ஒப்புக் கொடுத்துக் கொண்டே அவர் பின்னாலேயே சென்று,

அவரோடே விண்ணகம் செல்வோம்.

நாம் சிலுவையைச் சுமந்ததற்கான பரிசு நமக்காகக் காத்திருக்கும்.

நிலையற்ற துன்பத்தின் மூலம் நிலைவாழ்வைச் சம்பாதித்துக் கொள்வோம்.

இயேசுவுக்காக நிலையற்ற உயிரை இழந்து,

நிலை வாழ்வாகிய இயேசுவை ஈட்டிக் கொள்வோம்.

கொரோனாவைக் கண்டு பயப்பட வேண்டாம்

அதை நிலைவாழ்வின் வாயிலாகக் கூட இயேசு மாற்றுவார்.

உறுதியாக நம்புவோம்,

விண்ணகம் நமக்கே!

லூர்து செல்வம்.

Saturday, June 27, 2020

விசுவாசத்தின் பார்வையில கொரோனா.(தொடர்ச்சி)


விசுவாசத்தின் பார்வையில கொரோனா.
(தொடர்ச்சி)
**********************************

நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆள்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒரு உடலும், ஒரு ஆன்மாவும் உள்ளன.

நமது உடல் ஆன்மா அல்ல.

நமது  ஆன்மா  உடல்   அல்ல.

நமது உடல் மண்ணைச் சார்ந்தது.

ஆன்மா விண்ணைச்  சார்ந்தது.

இப்படியாக நம்மிடம் இரண்டு அம்சங்கள் இருப்பதால்,

நமக்கு உள்ளே இரண்டு வகையான செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இரண்டு வகையான உணர்வுகள்,

இரண்டு வகையான பார்வைகள்,

இரண்டு வகையான ஆசைகள்,

இரண்டு வகையான நோக்கங்கள் etc. etc.

உடல் சிற்றின்பத்தை நோக்கி ஈர்க்கப்படும்.

ஆன்மா பேரின்பத்தை நோக்கி ஈர்க்கப்படும்.

இரண்டு அம்சங்களையும் படைத்து, இணைத்து வைத்தது கடவுள்தான்.

விண்ணக வாழ்வுக்காக மனிதனைப் படைத்ததால்

ஆன்மாவுக்குக் கட்டுப்பட்டு உடல் இயங்கவேண்டும் என்பது இறைவனின் திட்டம்.

அதாவது உடலின் செயல்பாடுகள், ஆன்மாவின் செயல்பாடுகளுடன் இணைந்து செல்லவேண்டும்.

பார்வையை எடுத்துக் கொள்வோம்.

நாம இயேசுவின் சீடர்கள்.

நம்முடைய விசுவாசத்தினால்தான் நாம் இயேசுவின் சீடர்கள் ஆனோம்.

நமது ஆன்மா இயக்கப்படுவது நமது விசுவாசத்தினால்.

ஆகவே நமது விண்ணகப் பயணத்தில் நமக்கு வழி காட்டவேண்டியது நமது விசுவாசப் பார்வை,

உடலைச் சார்ந்த உலகப் பார்வை அல்ல.

நம்மிடம் உள்ள இரண்டு பார்வைகளில் எந்தப் பார்வை யால் உலகை நோக்குகிறோமோ

அதற்குரிய தோற்றத்தை உலகம் தரும்.

விசுவாசக் கண்ணால் உலகை நோக்கும்போது,

உலகம் இறைவனின் அன்பைப் பிரதிபலிக்கும். 

அதாவது உலகில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் இறைவனின் அன்பினால் மட்டும் இயக்கப்படுகின்றது என்பது  புரியும்.

செயல் எத்தகையது என்பதைப் பார்க்க மாட்டோம், 

அதில் வெளிப்படும் இறையன்பை  மட்டும் பார்ப்போம்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்  பெற்றோர் இருவகைப் படுவர்,

ஒருவகை பள்ளிக்கூடத்தை முற்றிலும் நம்பி அனுப்பவர்,

அடுத்த வகை பிள்ளையை மட்டும் நம்பி அனுப்புவர்.

முதல் வகையைச் சேர்ந்த ஒரு பெற்றோரின் மகன்,

"அப்பா, இன்று வாத்தியார் அடி பின்னிட்டார் அப்பா, உள்ளங்கையைப் பாருங்கள்."
என்று சொன்னால்,

அவர் கையைப் பார்த்துவிட்டு,

"இதிலிருந்து நீ எவ்வளவு சேட்டை பண்ணியிருப்பாய்   என்று தெரிகிறது. உன்னைத் திருத்துவதற்காகத்தான் ஆசிரியர் அடித்திருக்கிறார்,

திருந்தி நட." என்று மகனுக்குப் புத்தி சொல்லுவார்.

இரண்டாவது வகை அப்பாவிடம் இதே ஆவலாதி சென்றால்,

"கொஞ்சம் கூட மனதுல ஈரமில்லாதவர் போலிருக்கு. நான் நாளைக்குப் பள்ளிக்கு வந்து கேட்கிறேன்" என்று சொல்லுவார்.

முதல் வகை அப்பா பார்த்தது விசுவாசப் பார்வை.

இரண்டாம் வகை அப்பா பார்த்தது உலகப் பார்வை.

கடவுள் அளவற்ற அன்பு உள்ளவர்.

ஒரு பெரிய பணக்காரர்.

அவருக்கு ஒரே ஒரு மகன்.

அவன் சின்னப் பையன்.

அவன் விளையாடுவதற்காக நூற்றுக் கணக்காகப் பொம்மைகள் வாங்கிப்போட்டிருந்தார்.

அவனால் ஒரு நேரத்துக்கு ஒரு பொம்மையுடன்தான் விளையாட முடியும்.

ஆனாலும் மகன் மீது கொண்ட அன்பு காரணமாக நூற்றுக் கணக்காக  வாங்கிப் போட்டிருந்தார்.

கடவுளுக்கு மனிதன் மீது எவ்வளவு அன்பு இருந்தால் 

அவன் ரசிப்பதற்காக இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் படைத்திருப்பார்!

ஆனாலும்  மனிதன் அவரது அன்பைப் பற்றிக் கவலைப் படாமல் 

அவருக்கு விரோதமாக பாவம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டு செயல்படுகிறான். 

ஆனாலும் அவர் அன்பில் கொஞ்சம் கூட குறையாதவராய் அவனை மீட்பதற்காக

மனிதனாய்ப் பிறந்து, தாங்கமுடியாத பாடுகளைப் பட்டு 

சிலுவை மரத்தில் தன் உயிரையே பலியாகக் கொடுத்தார்.

ஆனாலும் மனிதரில் அநேகர் பாவம் செய்வதைக் குறைக்கவே யில்லை.

பழைய ஏற்பாட்டில் யூத மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பு காரணமாக 

அவர்களைத் திருத்த  அவர்கள் மீது துன்பங்களை அனுமதித்தார்.

இந்நாள் வரை மனித குலம் திருந்துவதாயில்லை.

 நம்மீது கொண்ட அன்பினால், 

நாம் நித்திய பேரின்ப வாழ்விற்கு நம்மைத் தகுதி உள்ளவர்கள் ஆக்குவதற்காக 

துன்பங்களை  அனுமதித்துக் கொண்டிருக்கிறார்.

விசுவாசக் கண் கொண்டு பார்த்தால், துன்பங்களில் உள்ள இறையன்பை உணர்ந்து,

துன்பங்களின் நோக்கத்தையும் அறிந்து,

பாவங்களிலிருந்து மனந்திரும்பு வதோடு

எல்லா துன்பங்களையும் மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக  ஒப்புக் கொடுப்போம்.

 உலகையே புறட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனாவை 

நமது விசுவாசக் கண்ணால்தான் பார்க்க வேண்டும்.

உலகம் எந்த அளவுக்கு மோசமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.


கொரோனாவை ஒழிக்க மனிதன் முயற்சி செய்வதில் தவறு ஒன்றுமில்லை,

ஏனென்றால் உலகில் வாழும் போது மகிழ்ச்சியோடு வாழ்வதையே இறைவன் விரும்பு கிறார்.

அதற்காகத்தான் இவ்வளவு அழகான உலகைப் படைத்திருக்கிறார்.

ஆனாலும் விசுவாச அடிப்படையில்

 இவ்வுலக மகிழ்ச்சியைவிட

  மறுவுலக பேரின்பமே முக்கியமானது.


மறுவுலக பேரின்பத்திற்காக இவ்வுலக மகிழ்ச்சியைத் தியாகம் செய்யலாம்.

ஆனால் மறுவுலக பேரின்பத்தைத் தியாகம் செய்து இவ்வுலகை அனுபவிப்பது அறிவீனம்.

ஆகவே உலக ரீதியாக கொரோனாவை ஒழிக்க முயலு முன் 

உலக மக்கள் அனைவரும் தங்கள் பாவங்களுக்காக வருந்தி இறைவனிடம் திரும்ப வேண்டும்.

நம் முயற்சிக்கு இறைவனின் ஆசீரும் கிடைக்கும்.

கொரானாவும் ஒழிந்து விடும்.

நம்மைத் துன்பப் படுத்தி பார்க்க வேண்டும் என்று இறைவன் விரும்பவில்லை.

நம்மை நித்திய துன்பத்திற்குள் விழாதபடி காக்கவே

 அவரே சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டார்.

நாம் நித்திய பேரின்பத்தை இறைவனோடு அனுபவிப்பதற்காக 

முடியக்கூடிய இவ்வுலக துன்பத்தை ஏற்று இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.

உலகைத் திருத்துவதற்காகத்தான் இறைவன் கொரோனாவை அனுமதித்திருக்கிறார்.

நாம் திருந்தி விட்டால் கொரோனா தானாகவே ஓடிவிடும்.

திருந்துவோம்.

1. ஆள்பவர்கள் திருந்த வேண்டும்.

வல்லரசுகள் உண்மையிலேயே தங்களிடம் எந்த வல்லமையும் இல்லை என்பதை உணர வேண்டும். 

தாங்கள் தயார் நிலையில் வைத்துள்ள அணு ஆயுதங்களால் மக்களை அழிக்க மட்டும் முடியும், காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து

 ஆயுதங்களை அழித்துவிட்டு சமாதானத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

2. விண்வெளி வரை சென்று வர உதவிய விஞ்ஞானத்தால் மண்ணுலகில் மனிதனை ஒரு சிறு  வைரசிலிருந்து கூட காப்பாற்ற முடியவில்லையே என்பதை உணர்ந்து

 மெய்ஞானத்திற்கு எதிராக விஞ்ஞானம் போகாதபடி

 விஞ்ஞானிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. இறைவனைத் தவிர வேறு எந்த சக்தியாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.

நம்மை இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டு நாம் பயமின்றி வாழ வேண்டும்.

இறைவன் எங்கும் இருக்கிறார்.
நாம் இருந்தாலும், இறந்தாலும் இறைவன் கையில்தான் இருப்போம் என்பதை உணர்ந்தால் பயம் நம்மை விட்டுப் போய்விடும்.

நாம் இவ்வுலகில் மறுவுலகை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

நம்மோடு நமக்கு உதவியாக நம்மைப் படைத்த நமது சர்வ வல்லப தந்தையே வருகிறார். நாம் எதற்குப் பயப்பட வேண்டும்?

இறைவன் அன்பு என்றும் நம்மோடு இருக்கிறது.

இறைவன்பின் அரவணைப்பில் வாழ்கிறோம், வாழ்வோம்.

லூர்து செல்வம்

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத்.8:17)

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" 
(மத்.8:17)
  **********************************


"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய்ப் போ."
(மாற்கு, 5:34)

 "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" 
(மாற்கு.10:52)


"எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" 
(லூக்.17:19)

இயேசு தம்மிடம்  நோய் நீங்கி குணம் பெற வந்தவர்களை தனது வல்லமையால் குணப்படுத்தி  விட்டு,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" 

 என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

குணப்படுத்தியவர்  இயேசு. ஆனால், ஏன் 'விசுவாசம் குணமாக்கிற்று' என்கிறார்?

நமது ஒவ்வொரு செயலிலும் காரண, காரிய அடிப்படையில் பல படிகள், குறைந்தது இரண்டு, இருக்கும்.

ஒரு விபசாயி நிலத்தில் பயிர் செய்து, பலனை விட்டுக்குக் கொண்டு வர வேண்டுமானால்,

முதலில் விபசாயம் செய்ய ஆசை இருக்க வேண்டும்.

அடுத்து விபசாய நிலத்திற்குச் செல்ல வேண்டும். 

அடுத்து நிலத்தில் வேலை செய்து விளைய வைக்க வேண்டும்.

அடுத்து விளைச்சலை வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

இப்படிகளில் ஒன்று குறைந்தாலும் பலன் வீட்டிற்கு வராது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நான்கு படிகளில் அடிப்படையானது விபசாயம்
செய்ய இருக்கும் ஆசை.

விருப்பம் இல்லாதவனை எந்த வேலையையும் செய்ய வைக்க முடியாது.

நமது ஆன்மீக வாழ்வின் அடிப்படை

சர்வ வல்லப கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று விசுவசிப்பது தான்.

கடவுள் விசுவாசம் இல்லாதவர்களால் மிருக வாழ்வு மட்டும் தான் வாழ முடியும்.

நமது உடல் எல்லா வகையிலும் மிருகம்தான். அந்த மிருகத்தோடு ஆன்மா இணையும் போதுதான்

நாம் மனிதன் ஆகிறோம்.

Man is a rational animal.
மனிதன் பகுத்தறிவு உள்ள மிருகம்.

பகுத்தறிவு ஆன்மாவைச் சேர்ந்தது. 

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கள் தங்கள் உடல் சம்பந்தப்பட்ட வசதிகளுக்காக மட்டும் வாழ்வார் கள்.

உண்ணுதல், உடுத்தல், உறங்குதல் சம்பந்தப்பட்ட காரியங்களை வசதியாகச் செய்வதற்கு வேண்டியவற்றைப் பெறுவதற்கே தங்கள் ஆன்மாவிற்கு உரிய பகுத்தறிவைப் பயன்படுத்துவார் கள்.

ஆன்மீக காரியங்களுக்கு தங்கள் ஆன்மாவைப் பயன்படுத்தாத வர்கள் வாழ்வது மிருக வாழ்க்கைதான்.

இயேசு மனித உரு எடுத்தது நமது ஆன்மாவை இரட்சிக்க.

பாவம் செய்தது ஆன்மா, உடல் அல்ல.

உடலை ஆன்மா பயன்படுத்துகிறது, அவ்வளவுதான்.

எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?

பாவம் செய்த ஆன்மா இரட்சிக்கப்பட வேண்டும்.

இரட்சிப்பின் முதற்படி இரட்சகரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொள்வது தான் விசுவாசம்.

விசுவாசம் இல்லாதவனால் இரட்சிக்கப்பட முடியாது.

ஆகவேதான் இயேசு தான் செய்த ஒவ்வொரு குணமளித்தலுக்கும் விசுவாசம் காரணம் என்று அழுத்திக் கூறுகிறார்.

விசுவாசத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்குப் புரிய வைக்க விரும்புகிறார்.

தான் விண்ணகம் எய்து முன் தன் சீடர்களிடம் இயேசு
கூறினார்:

"விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,"
(மாற்கு.16:16)


விசுவாசம்,

ஞானஸ்நானம்.

மீட்பு.

  தாயின் வயிற்றில்  ஜென்ம பாவத்தோடு தான் கருத்தரித்தோம்.

நாம் கருத்தரித்ததின் இறுதி நோக்கம் (ultimate aim) விண்ணக வாழ்வு.

ஆனால் அதற்கு இடைஞ்சலாக இருந்தது ஜென்மப் பாவம்.

பாவத்திலிருந்து விடுதலை பெறுவது தான் மீட்பு.

மீட்பு பெற, 

அதாவது 
பாவத்திலிருந்து விடுதலை பெற, 

வேண்டியத ஞானஸ்நானம்.

ஞானஸ்நானம் பெற, 

வேண்டியது  விசுவாசம்.

நாம் சிறு குழந்தையாய் இருந்த போது நமக்கு விசுவாசம் என்றால் என்ன என்று தெரியாது.

 ஆகவே நமது பெயரால் நமது பெற்றோரும், ஞானப்பெற்றோரும் விசுவாச அறிக்கை செய்தார்கள்.

 சிலர் கேட்கலாம், 

"நாம் விசுவாசம் பெற்ற பிற்பாடு தானே ஞானஸ்தானம் பெறவேண்டும்,

 பெற்றோர் விசுவாச அறிக்கை செய்தால் அது நமக்கு எப்படி ஏற்றதாகும்" என்று.

ஆனால் அப்படிக் கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.

சென்மப் பாவம் 
முதல் பெற்றோரிடமிருந்து,

நமது பெற்றோர் வழியாகத்தான் நமக்குள் வந்தது.

நாம் விசுவாசத்தைப் பெற்ற பின்பு தான் ஞானஸ்தானம் பெறுவதாக இருந்தால் அதற்கு வெகு காலம் ஆகும்.

ஆகவேதான் 

யார் மூலமாக நமக்குள் பாவம் வந்ததோ அந்தப் பெற்றோரும்,

 நமது ஞான வாழ்விற்குப் பொறுப்பேற்கும் ஞானப் பெற்றோரும் 

நமது சார்பாக விசுவாச அறிக்கை செய்கிறார்கள்.

 நமக்கு உரிய வயது வரும்போது நாமே சுயமாக விசுவாச அறிக்கை செய்கிறோம்.

விசுவாசம் தான் நமது ஞான வாழ்வின் அடிப்படை,

 ஆகவே நாம் நமது விசுவாசத்தை அடிக்கடி உறுதிப்படுத்தி,

 ஞான வாழ்வின் அடிப்படையை உறுதிப்படுத்த வேண்டும்.

 அப்போதுதான் அதன்மேல் கட்டப்படும் ஞான வாழ்வாகிய கட்டடம் பலமாக இருக்கும்.

விசுவாசத்திலிருந்து பிறப்பதுதான் அன்பும் நம்பிக்கையும்.

நம்மை படைத்த கடவுளை விசுவசிக்கும் நாம் 

அவரை நமது சிந்தனையாலும், சொல்லாலும், செய்யாலும் அன்பு செய்தால் 

விண்ணகம் செல்வது உறுதி என்று நம்ப வேண்டும்.

விசுவதித்து, அன்பு செய்து வாழ்ந்தால்

விசுவாசத்தாலும், அன்பாலும் பெற்ற மீட்பின் பயனை அனுபவிக்க நித்தியத்துக்கும் இறைவனோடு இணைவோம்.

விசுவாசம் என்ற விதையோடு.

அன்பு என்ற நீர் சேரும் போது,

 நற்செயல்கள் என்ற கனிகள் தரும் 

ஞான வாழ்வு என்ற மரம் வளரும்.

அன்பு மயமான இறைவன் தன் அன்பின் காரணமாகவே,

நம்மையும், நாம் வாழும் உலகத்தையும் படைத்தார் என்றும்,

அவரது அன்பை மறந்து

 நாம் செய்த பாவங்களுக்குப்

 பரிகாரம் செய்து நம்மை மீட்கவே

மனிதனாய்ப் பிறந்து பாடுகள் பட்டு 

சிலுவையில் தன்னையே பலியாக்கினார் என்றும் உறுதியாக விசுவசிக்கிறோம்.

நமது விசுவாசம் உண்மையானால், 

இறைவனது செயல்கள் அனைத்தையும் 

விசுவாசம் என்ற கண்ணால்தான் மட்டுமே நோக்க வேண்டும்.

இப்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா விசுவாசத்தின் பார்வையில்  எப்படி இருக்கிறது?

இறைவனின் செயல் எதுவும் அவரது அன்புக்கு விரோதமாக இருக்க முடியாது.

God cannot do anything not in keeping with His Love.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Friday, June 26, 2020

"ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" (மத்.8:2)

"ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" (மத்.8:2)
 ***********************************

நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதற்கு தொழு நோயாளியின் செபம் ஒரு உதாரணம்.

கானாவூர் திருமணத்தின்போது மாதாவின் செபத்தை ஒட்டி இருக்கிறது தொழு நோயாளியின் செபம்.

மாதா இயேசுவை நோக்கி,

 "இரசம் தீர்ந்துவிட்டது"

என்று மட்டும் சொன்னாள்.

 தன் மகன் சர்வ வல்லப கடவுள் என்று அவரைக் கருத்தரிக்கு முன்பே அவளுக்குத் தெரியும்.

"இரசம் ஏற்பாடு செய்யுங்கள்" என்று மகனிடம் சொல்லவில்லை.

அதேபோல தொழுநோயாளியும்

"ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" 

என்று மட்டும் சொன்னான்.

"குணமாக்கும்" என்று சொல்லவே யில்லை.

இயேசு செய்வார் என்று உறுதியாக நம்புமளவிற்கு ஆழமான விசுவாசம்!


இயேசு மாதாவிடம்,

" எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று சொன்னாலும்,

தாயின் விருப்பப்படியே
ஒரு புதுமை செய்து இரசம் தயாரித்துக் கொடுக்கிறார்.

 தொழு நோயாளியைப் பார்த்து

''விரும்புகிறேன், குணமாகு" 
என்கிறார்.

அவனும் குணமானான்.

மாதாவும், தொழுநோயாளியும் தாங்கள் இருக்கிற சூழ்நிலையை மட்டும் இயேசுவிடம் சொன்னார்கள்.

அவர்களுடைய தேவை என்ன என்று இயேசுவுக்கு நித்திய காலமாகவே தெரியும்.

ஆகவேதான் அவர்கள் "செய்யுங்கள்" என்று கேட்காமலேயே இயேசு உதவி செய்கிறார்.

நமது விருப்பத்தை நாம் வெளிப்படையாகச் சொல்லாதிருக்கும் போதே,

அதை நிறைவேற்றி வைக்கிற சர்வ வல்லப கடவுள் இயேசு.

"நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்."
(மத். 6:8)

"ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.

 உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.

 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:

 இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
( மத். 6:31 - 33)

இயேசு கற்றுத் தந்த செபத்தில்  நமக்கு வேண்டியதைக் கேட்க,

"எங்கள் அன்றன்றுள்ள அப்பம் இன்று தாரும்" என்ற ஒரு விண்ணப்பத்தை மட்டும் சொல்லி யிருக்கிறார்.

மற்றவெல்லாம் இறைப் புகழ்ச்சிக்காவும், நமது ஆன்ம நலனுக்காவும் உடையவை.

ஆனால் நாம் நாமாகவே சொல்லும் செபம் முழுவதிலும்

நமது விண்ணப்பங்கள் மட்டும் இருக்கும்.

நமது நேர்ச்சை, திருத் தலப் பயணங்கள், மன்றாட்டுக்கள் எல்லாவற்றிலும்,

நமது பிறருதவி செயல்களில் கூட,

இறைவனைப் பற்றியும், நமது ஆன்மாவைப் பற்றியும் கவலைப் படமாட்டோம்.

நமது தேவைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுவோம்.

"ஆண்டவரே, நான் வேளாங்கண்ணிக்கு வருடா வருடம் திருப்பயணம் செய்கிறேன். எனக்கு ஒரு ஆண் குழந்தையைத் தாரும்."

"ஆண்டவரே, நான் உவரிக்குச் சென்று 13 பேருக்குச் சாப்பாடு போடுகிறேன். என் நோயைக் குணமாக்கும்"

யாராவது,

"ஆண்டவரே, நான் தினமும் திருப்பலிக்குச் சென்று, திருவிருந்தை அருந்துகிறேன்,

என்னைப் பாவத்திலிருந்து காப்பாற்றும், என்னிடம் அன்பை வளரைச் செய்யும்" என்று நேர்ச்சை வைக்கிறோமா?

"நான் உமக்கேற்ற பிள்ளையாய் வளர உதவியருளும்" என வேண்டி,

 நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாலே

நமக்கு என்ன தேவையோ,

 அதை பெல்லாம் நாம் கேளாமலேயே இயேசு தருவார்.

கடவுள் எதையெல்லாம் நமக்குத் தரவில்லையோ 

அவை எல்லாம் நமக்குத் தேவை இல்லை என்று அர்த்தம்.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற ஆசை இருந்தாலே

உதவுவதற்கு என்னவெல்லாம் தேவையே அதை எல்லாம் ஆண்டவர் தருவார்.

அன்னை மரியாளிடம் ஆழ்ந்த விசுவாசம் இருந்தது.

ஒரு கன்னியில் வயிற்றிலிருந்து மெசியா பிறப்பார் என்று மரியாளுக்குத் தெரியும், அவள் வேதாகமம் கற்றவள்.

ஆனால் தன்னிடம் மெசியா பிறப்பதற்காக கன்னியாய் இருக்க வார்த்தைப்பாடு 
கொடுக்கவில்லை.

அப்படிக் கொடுத்திருந்தால் கபிரியேல் சம்மனசு மங்கள வார்த்தை சொன்னபோது,

 அவ்வார்த்தையைக்  அவள் கேட்டுக் கலங்கி, 

'இவ்வாழ்த்து எத்தகையதோ' என்று எண்ணி யிருக்க மாட்டாள்.

"இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே"

என்று சொல்லியிருக்க மாட்டாள்.


ஆனால் இது இறைவனின் திட்டம் என அறிந்தவுடனேயே,

 "இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்றாள்.

இது மரியாளின் ஆழ்ந்த விசுவாசத்தையும், இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதில் அவளுக்கு இருந்த ஆர்வத்தையுமே காட்டுகிறது.

நமது மாதா பக்தி அவளுடைய திருத்தலங்களுக்குச் சென்று  வருவதிலும், 

அவளிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதிலும்

அடங்கி இருக்க வில்லை.

 மாதாவின் ஆழ்ந்த விசுவாசத்தையும்,  இறைச் சித்தத்தை நிறைவேற்ற வேண்டிய ஆர்வத்தையும்

 நமதாக்கித்  கொள்வதிலேயே அடங்கியிருக்கிறது.

குழந்தை வரம் கேட்பதற்கும்,

 வேலை கிடைப்பதற்கும்,

 சம்பள உயர்வுக்கும்,

 நோய் குணமாவதற்கும்

 இன்னும் நமக்கு  வேண்டிய உதவிகளுக்குமாகவே மாதாவைத்  தேடுகிறோம்.

புனித அந்தோனியார் இறையறிவில் வல்லுநர், ஆழ்ந்த விசுவாசமுள்ள புனிதர்.

ஆகையினால்தான் அவரால் எண்ணற்ற புதுமைகள் செய்ய முடிந்தது.

இறையறியை வேண்டியும், புனித வாழ்விற்கு உதவ வேண்டியும் யாரும் அந்தோனியாரைத் தேடுவதில்லை.

காணாமற்போன பொருட்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்கும்,

பேய் விரட்டுவதற்கும்தானே தேடுகிறோம்!

அதற்கும் அவர் உதவி செய்கிறார்.

ஆன்மீக உதவியைத் தேடிப் போவோர் சிலரே.

இயேசு புதுமைகள் செய்யும்போது பின்தொடர்ந்த கூட்டம்

அவரது சிலுவையடியில் இல்லையே!

"கேளுங்கள் கொடுக்கப்படும்"
என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

அவரது அருளைக் கேட்போம்,

நமக்கு 'வேண்டிய' எல்லாவற்றையும் அருள்வார்.

லூர்து செல்வம்.

Thursday, June 25, 2020

"ஆகவே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்."(மத். 7:24)


"ஆகவே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்."
(மத். 7:24)
******     ******  ******          .*****

சத்துள்ள உணவை உண்பதால் மட்டும் உடலில் சக்தி வந்து விடாது.

சிலர் உடலில் அதிக சக்தி வேண்டுமென்பதற்காக நிறைய சாப்பிடுவார்கள்.

சாப்பிட்டுவிட்டு,
"ஐயோ! வயிறு வலிக்கிறதே!" 
என்று கத்துவார்கள்.

அதிகம் சாப்பிடுவதால் மட்டும் உடலில் சக்தி வந்து விடாது.

சாப்பிட்ட உணவு சீரணிக்க வேண்டும்.

சத்து இரத்தத்தோடு கலந்து, உடல் எங்கும் பயணித்து, எல்லா உறுப்புக்களாலும் கிரகித்துக் கொள்ளப்பட வேண்டும்.

சீரணமான உணவு தான் உடலுக்கு சக்தியையும், வளர்ச்சியையும் கொடுக்கும்.

சீரணமாகாத உணவு வலியைத்தான் கொடுக்கும்.

ஆன்மாவுக்கு உணவு இறைவார்த்தை.

இறைவார்த்தையை வாசிக்கும்போதோ, கேட்கும் போதோ அதை நாம் உண்கிறோம்.

இறைவார்த்தை  உடலைச் சேர்ந்த வாய் வழியாகவோ, காதுவழியாகவோ நமது மூளையை அடைகிறது.

அதோடு நின்று விட்டால், நாம் வாசித்த அல்லது கேட்ட இறைவார்த்தையால் நமக்கு எந்த பயனும் இல்லை.

மூளையில் தேக்கிவைக்கப்படும் விசயங்கள் நமது அறிவை (Knowledge) வளர்க்கும்.

வெறும் அறிவினால் ஆன்மாவிற்கு எந்தப் பயனும் இல்லை.

உடலைச் சார்ந்த மூளை வழியாக இறைவார்த்தை நமது ஆன்மாவை அடைய வேண்டும்.

அடைந்தால் மட்டும் போதாது உள்ளே நுழைந்து அதை இயக்க வேண்டும்.

இறைவார்த்தையைக் கொண்டு ஆன்மா நமது வாழ்வின்   ஒவ்வொரு அசைவையும் இயக்க வேண்டும். 

அதாவது வார்த்தையானவர் நமது வாழ்வோடு இரண்டறக் கலக்க வேண்டும்.

அதாவது வார்த்தையானவர் 
நமது வாழ்வோடு ஒன்றிக்க வேண்டும்.

உணவோடு உப்போ, உறைப்போ, கசப்போ, இனிப்போ கலந்தால்

உணவே உப்பாகவும், உறைப்பாகவும், கசப்பாகவும், இனிப்பாகவும் மாறிவிடுவது போல,

நம்மில் நாமல்ல. வார்த்தையானவரே வாழ வேண்டும்.

வார்த்தையானவர் தந்தையின் சித்தத்தை  நிறைவேற்றினார்.

பரிசுத்த தமதிரித்துவத்தில் தந்தையும், மகனும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுளாகையால்,

தந்தைக்கும், மகனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் ஒரே சித்தம்தான்.

வார்த்தையானவர் நம்மோடு ஒன்றிக்கும் போது நாமும் தந்தையின் சித்தத்தைத்தான் நிறைவேற்றுவோம்.

வானகத்  தந்தையின் விருப்பப்படி 
நடந்தால் உறுதியாக விண்ணகத்திற்குள் நுழைவோம்.

இயேசு சொல்கிறார்,

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."
(மத். 7:21)

வாயினால் மட்டும் ஆண்டவரைக் கூப்பிட்டுப் பயனில்லை.

ஆண்டவர் சொற்படி நடந்தால்தான் அழைத்ததனால்
பயன் ஏற்படும்.

வானகத்திலுள்ள அவரது தந்தையின் விருப்பப்படி நடந்தால்தான் ஆண்டவரை அழைத்ததன் பயனை அடையலாம்.

வானகத்திலுள்ள அவரது தந்தையின் விருப்பம்

அவர் நம் உள்ளத்தில் பதித்திருக்கிற பத்து கட்டளைகள் மூலமாவும்,

திருச்சபையின் போதனைகள் மூலமாகவும் நமக்குத் தெரிவிக்கப் படுகிறது.

பைபிள்?

பைபிள் திருச்சபையின் போதனைக்குள் அடங்கும்.

கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளை ஏற்றுக் கொள்பவன்,

திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பைபிளையும் ஏற்றுக் கொள்கிறான்.

திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பைபிளில் 73 புத்தகங்கள் உள்ளன.

73 புத்தகங்களும் சேர்ந்து ஒரே புத்தகம்தான்.

ஒரு புத்தகத்தை எடுத்து  அதில் சில தாள்களைக் கிழித்துப் போட்டு விட்டால் அதை முழுப் புத்தகம் என்று சொல்ல முடியுமா?


நம்மோடு இருந்த சிலர் பைபிளில் உள்ள 73 புத்தகங்களில் ஏழு புத்தகங்களை  கிழித்துப் போட்டுவிட்டு 66 புத்தகங்களோடு வெளியேறிட்டனர்.

73 புத்தகங்களை உள்ளடக்கிய பைபிள் ஒரு முழு புத்தகம்.

அப்படியானால் அவர்கள் கொண்டு சென்றது முழு பைபிள் அல்ல.

திருச்சபையில் போதனையில் பைபிள் முழுவதும் அடங்கியிருக்கிறது.

அதாவது திருச்சபையில் போதனையில் இயேசுவின் போதனை, அதாவது, பிதாவின் சித்தம் முழுவதும் அடங்கியிருக்கிறது.

இயேசு நிறுவியது திருச்சபையை மட்டும் தான்.

பைபிள் மட்டும் போதுமென்பவர்கள் 

(அவர்கள் வைத்திருப்பது முழு பைபிள் அல்ல)

பிதாவின் முழுச் சித்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

திருச்சபையின் முழு போதனையையும் ஏற்றுக் கொள்பவர்களும்

முழுப் போதனைப்படி, முழுமையாக நடக்க வேண்டும்.


'திருச்சபையின் போதனைகளில் எனக்கு இஸ்டப்பட்டவைகளை மட்டும்' அனுசரிப்பேன் என்று சொல்வது,

"கார் ஓட்டும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களோ அவற்றில் எனக்குப் பிடித்தமானதை மட்டும் செய்வேன், பிடித்தமில்லாதவற்றைச் செய்ய மாட்டேன்" என்று சொல்வது போலிருக்கிறது.

Brake ஐ மட்டும் தொடாமல் வேகமாக ஓட்டினால் எப்படி இருக்கும்?

"பாவசங்கீர்த்தனம் செய்தாயா?"

"பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று பைபிளில் எங்கு இருக்கிறது?"

"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு. 20:23)
என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே!"

"அது சாமிமாருக்கு. 

மக்கள் 'பாவசங்கீர்த்தனம்  செய்ய வேண்டும்' என்று ஆண்டவர் சொன்னாரா?"

"ஞாயிற்றுக்கிழமை பூசைக்குக் கட்டாயம் போகணும்னு கூட ஆண்டவர் சொல்லவில்லை."

"அதைத் திருச்சபை சொல்லியிருக்கே."

"அதே திருச்சபைதான் தம்பி
'வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்' என்று சொல்கிறது."

டிசம்பர் 25ம் தேதிதான் கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டுமென்று பைபிளில் இருக்கா?.

கோவிலில்தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்று
பைபிளில் இருக்கா?

திவ்ய நற்கருணையை கையில்தான் வாங்கி உண்ண வேண்டும் என்று
பைபிளில் இருக்கா?

இப்படி ஏறுக்கு மாறா கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம்.

திருச்சபையைத் தாயாக ஏற்றுக் கொள்பவன் இப்படிக் கேள்வி கேட்கமாட்டான்.

நாம்  திருச்சபையைத் தாயாக ஏற்றுக் கொள்கிறோம்.

தாயின் சொற்படி நடப்பது நமது கடமை.

பைபிள் வாசிக்க வேண்டும், வாசித்தபடி வாழவேண்டும் என்பதும் திருச்சபையின் போதனைதான்.

ஒவ்வொரு திருப்பலியின் போதும் வாசிக்கப்படும்  வாசகங்களும், அவற்றை விளக்கும் பிரசங்கமும் இதற்குச் சான்று.

இறைவார்த்தையை பைபிள் மூலம் அறிந்தாலும், குருவானவருடைய பிரசங்கத்தின் மூலம் அறிந்தாலும்

அது தந்தையின் சித்தம் என்பதை உணர்ந்து அதன்படி வாழவேண்டும்.

திருப்பலியின்போது நாம் கேட்கும் வார்த்தையும், 

தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டு நாம் உண்ணும் வார்த்தையானவரும்

,நமது வாழ்க்கையாக மாறும்போதுதான் தந்தையின் சித்தம் நிறைவேறுகிறது.

ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றான்.

அவர் அவனைப் பரிசோதித்து விட்டு,

மருந்தை எழுதிக் கொடுத்து

"இதைத் தினமும் காலை உணவுக்குப் பின் சாப்பிடுங்கள்.

நான்கு நாள் கழித்து வாருங்கள்."
என்றார்.


நான்கு நாள் கழித்து
 மருத்துவரிடம் வந்தான்.


அவனைப் பரிசோதித்துப் பார்த்ததில் ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை.

"நான் சொன்னபடி சாப்பிட்டீர்களா?" 

"ஆமா டாக்டர்."

"எந்தக கடையில் மருந்து வாங்கினீர்கள்?"

"மருந்து ஒன்றும் வாங்கவில்லை. நீங்கள் சொன்னபடி நீங்கள் தந்த தாளை நான்காய்க் கிழித்து நான்கு நாட்களும் சாப்பிட்டேன்."

"!!!!!!!!!!!!!"

நாமும் அநேக சமயங்களில் பைபிளின் பேப்பர்களைத்தான்
கிழிக்கிறோம். வார்த்தையை உள்வாங்குவதில்லை.

உள்வாங்காத வார்த்தை எப்படி வாழ்வாக மாறும்?

ஒரு திருப்பலிக்கும் அடுத்த 
திருப்பலிக்கும் இடைப்பட்ட காலத்தில் 

நமது ஆன்மீக வாழ்வில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால்

திருப்பலியின்போது நாம் செய்த மன்றாட்டுக்களால் எந்தப் பயனும் இல்லை.

பிதாவின் சித்தம் மகனின் சித்தம்.

மகனின் சித்தம் அவருடைய திருச்சபையின் சித்தம். 

திருச்சபையின் சித்தத்தை நாம் நிறைவேற்றும் போது, பிதாவின் சித்தத்தையே நிறைவேற்றுகிறோம்.

திருச்சபை நமது தாய்.

தாய் சொற்படி நடப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, June 24, 2020

புதுப்பொண்ணும், புதுமாப்பிள்ளையும். (தொடர்ச்சி)

புதுப்பொண்ணும்,
புதுமாப்பிள்ளையும்.
 (தொடர்ச்சி)
**************-------**************

திருமணம் முடித்த அன்று இரவில் புது மணமக்கள் தனிமையில் சந்திக்கிறார்கள்.

"Praised be our Lord."

"Praised be our Lord."

 "ஆரம்பத்திலேயே  நான் சொன்ன அதே வார்த்தைகளை நீயும் சொல்கிறாயே,

நமது வாழ்நாள் முழுவதும் அப்படியே சொல்வாயா?"

"Yes, no."

"Yes ஆ? no வா?"

"இரண்டும்தான்."

"அதெப்படி?"

" வெவ்வேறு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த நம்மை
இணைத்து வைத்தது யார்?"

"கடவுள்."

"நம் இருவருக்கும் கடவுள்தானே தந்தை!
அவருக்காக, அவரில் நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் நீங்கள் சொல்வதற்கெல்லாம் 'yes''

மற்ற காரியங்களில் Yesம் இருக்கலாம், no வும் இருக்கலாம்."

"Reply accepted."

"Thanks."

"suppose நான் accept பண்ணி யிருக்காவிட்டால் என்ன சொல்லியிருப்ப?"

"அப்பவும் Thanks தான்."

"அதெப்படி?"

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள் என்று இறைவார்த்தை சொல்கிறதே!"

"புது மணத்தம்பதிகள் முதல் முதல் சந்திக்கும்போது

 அவர்களுடைய கண்கள்தான் முதலிம் பேசும், 

வாய்கள் முத்தங்களைப் பரிமாறிக் கொண்ட பின்புதான் பேச ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள்.

நமது ஆரம்பம் வித்தியாசமாக இல்லை?"

"வித்தியாசமாக இல்லை.

தாலி கட்டுவதற்கு முன்பே கண்கள் பேசிவிட்டன.

சம்மதம் தெரிவிக்கும்போதே வாய்களும் பேசிவிட்டன.

மற்றவர்கள் எப்படி ஆரம்பிப்பார்களோ, தெரியாது,

நான் இறை வாழ்த்தோடு மணவாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறோம்."

" நமது திருமண வாழ்வும் இறைவாழ்த்தாகவே இருக்க
வாழ்த்துகிறேன்!

புத்தகம் எழுத ஆரம்பிப்பவர்கள் முதலில் முன்னுரை எழுதுவார்கள்.

முன்னுரையில் தாங்கள் எதைப்பற்றி எப்படி எழுதப் போகிறோம் என்பதை விவரித்திருப்பார்கள்.

நமது முதல் இரவை நாம் எழுதவிருக்கும் வாழ்க்கை என்ற புத்தகத்திற்கு முன்னுரை இரவாக வைத்துக் கொள்வோமா?"

"permission granted!"

".இதேபோல்தான் நமது வாழ்க்கையில் நாம் செய்யும்  ஒவ்வொரு செயலும் 

ஒருவர் ஒருவரின் அனுமதியோடு நடக்க நமக்கு இறைவன் அருள் புரிவாராக.

நாம் எதற்காக திருமணம் செய்திருக்கிறோம்?"

"நம் மூலம் இறைவன் உலகிற்கு அனுப்ப விருக்கும் அவரது பிள்ளைகளை

 அவரது சித்தப்படி அவருக்காக வளர்க்க இறைவன் சித்தபடி திருமணம் செய்திருக்கிறோம்."

",திருமண வாழ்வு ஒரு ஆன்மீக வாழ்வாகத்தானே இருக்க வேண்டும்.  

ஆனால், அதில் சிற்றின்பம் இருக்கிறதே, 

ஆன்மீகம் பேரின்பத்தை நோக்கியதல்லவா?"

"கடவுள் ஏன் உலகை அழகானதாகப் படைத்தார்?"

." அழகில்லாத உலகில் எப்படி ரசனையோடு வாழ முடியும்?

நாம் வளர்வதற்காகச் சாப்பிட வேண்டும்.

 ருசி இல்லாவிட்டால் சாப்பிட மாட்டோம்.

ருசி ருசிக்காக அல்ல, சாப்பிட்டு வளர்வதற்காக.

அதேபோல் தான் உலகம் அழகாய் இருப்பது அதில் ரசனையோடு வாழ்வதற்காகத்தான்." 

"உலகில் எதுவும் அதுக்காக இல்லை, வேறொரு நோக்கத்திற்காக.

ஒவ்வொரு செயலுக்கும் உடனடியான நோக்கம் (objective)   ஒன்று உண்டு,


இறுதி நோக்கம் (ultimate aim) ஒன்று உண்டு.

ருசியின் நோக்கம் சாப்பிடுவது,

 சாப்பிடுவதன் நோக்கம் வளர்வது,

 வளர்வதின்  நோக்கம் வாழ்வது,

 இவ்வுலக வாழ்வின் நோக்கம் நிலை வாழ்வு. (மோட்சத்தில்)

ஆக ருசியின் இறுதி நோக்கம் நிலை வாழ்வுதான்.

அழகின் இறுதி நோக்கம் நிலை வாழ்வுதான்.

திருமண வாழ்வில் ஏன் இறைவன் சிற்றின்பத்தை வைத்திருக்கிறார்?

அது இல்லாவிட்டால் யாருமே திருமணம் செய்யமாட்டார்கள்.


சிற்றின்பத்தின் நோக்கம் மணவாழ்வு

.மணவாழ்வின் நோக்கம் குழந்தைப்பேறு.

குழந்தைப்பேற்றின் நோக்கம்,
இறைவன் கொடுத்த குழந்தைகளை அவர் காட்டிய வழியில்  வளர்ப்பது.

அவர் காட்டிய வழியில்  வளர்ப்பதின் நோக்கம் பிள்ளைகள்  இறைவனுக்காக வாழ்வது.

இறைவனுக்காக வாழ்வதன்
நோக்கம் இறுதியில் இறைவனோடு இணைவது.

ஆக, சிற்றின்பத்தின் இறுதி
நோக்கம் இறைவனோடு இணைவது. அதாவது மோட்சம். அதாவது பேரின்பம்."

." அதாவது நாம் விடும் ஒவ்வொரு மூச்சின் இறுதி நோக்கமும் மோட்சம்தான்!

தாயின் கருவறையில் நாம் முதல் முதல் மூச்சு விட்டதே மோட்சத்தை அடைவதை நோக்கமாக கொண்டு தான்.

இப்போ ஒரு கேள்வி:

சிற்றின்பம் பாவம் ஆவது எப்போது?"

"எந்த செயலும் தன்னிலேயே  பாவமானது இல்லை,

 ஏவாள் பழத்தைச்
 சாப்பிட்டது பாவமல்ல,

 விலக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டது தான் பாவம். 

அதுபோல, சிற்றின்பம் பாவம் அல்ல, 

விலக்கப்பட்ட சிற்றின்பம்தான் பாவம்.

நல்ல பொருளை ஒரு நன்மைக்காக பயன்படுத்துவது நற்செயல்.

 அதே பொருளை தீமைக்காக பயன்படுத்துவது பாவம்.

பணத்தை ஏழைக்குத் தர்மமாக கொடுப்பது நற்செயல்,

 அதே பணத்தை யாருக்காவது லஞ்சமாகக்  கொடுத்தால் அது பாவம்.

இறைவனை வழிபடுவதற்காக கோவிலுக்குச் சென்றால் நற்செயல்,

திருடுவதற்காகச் சென்றால் பாவம்.

சாப்பாட்டைக் கூட போசனப் பிரியத்துக்காகக் சாப்பிடுவது தலையான பாவம்.

Gluttony is a capital sin.

அதேபோல்,

மனைவியோடு அனுபவிக்கும் சிற்றின்பம் நற்செயல், 

வேறு யாரோடும் அனுபவித்தால் பாவம்."

."எந்த பொருளையும் அது எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்திற்காக பயன்படுத்துவது நற்செயல்.

 ஆனால் அதற்கு எதிர்மாறான நோக்கத்திற்காக, இறைவன் கட்டளைகளுக்கு எதிராக, பயன்படுத்துவது பாவம்.

கயிற்றை (rope) வாழ்க்கைக்கு உதவியாகப் பயன்படுத்தலாம்.

தற்கொலைக்காகப் பயன்படுத்தக்கூடாது.

அதேபோல சிற்றின்பத்தை குழந்தைப் பேற்றுக்குத் தடை இல்லாமல் பயன்படுத்துவது நற்செயல்.

குழந்தைப் பேற்றுக்குத் தடை போட்டுப் பயன்படுத்தினால் பாவம்.

சிற்றின்பத்தின்போது செயற்கை முறைக் கருத்தடைச் சாதனங்களைப்
(contraceptives)
 பயன் படுத்துவது பாவம்."

"நாம் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்?"

." குறைந்தது மூன்று. அதற்கு மேலும் இறைவன் தந்தால் நன்றியோடு பெற்றுக் கொள்வோம்.
 
எந்தக் காரணத்தை முன்னிட்டும் செயற்கைமுறைக்  கருத்தடைச் சாதனங்களைப்
(contraceptives)
 பயன் படுத்தக் கூடாது."

"புரியுதுங்க. இது பற்றித் திருச்சபை போதிப்பது எனக்குத் தெரியும்."

." Each one in this world is unique.

ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.

உனக்கென்று சில தனிக் குணங்கள் இருக்கும்.

எனக்கென்று சில தனிக் குணங்கள் இருக்கும்."

"நீங்கள் என்ன கேட்க போகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.

 நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும்.

 நான் நானாகவே இருக்க வேண்டும்.

 உங்களை உங்கள் தனித் தன்மைகளோடு   நான் ஏற்றுக்கொள்கிறேன்.

 என்னை எனது தனித் தன்மைகளோடு   நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

ஹைட்ஜன் தனி வாயு.
ஆக்ஸிஜன் தனி வாயு. இரண்டும் சேர்ந்தால் ஒரே தன்மையுள்ள தண்ணீர்.

அதேபோல்தான் நாமும்.

வெவ்வேறு தன்மைகளும் அன்பில் இணைந்து ஒரே குடும்பம் ஆகிறது.

குடும்பத்திற்கென்று தனிக் குணம் ஒன்று உண்டு.

அதுதான் அன்பு.

முழுமையான அன்போடு குடும்பம் நடத்துவோம்.

அன்பு மட்டும்தான் மாறக் கூடாது."

." very good. அதேபோல் நமது பிள்ளைகளிடம் தனித்தன்மைகள் இருக்கும். 

அவற்றிற்கேற்ப அவர்களை இறையன்பில் வளர்த்து ஆளாக்க வேண்டும்.

அவர்களை அவர்களாக வளர்த்தால்தான் அவர்கள் வளர்ச்சி முழுமையாக இருக்கும்.  

பிள்ளைகளையும், நம்மையும் ஒன்றாக வைத்திருக்க வேண்டியது இறையன்பும், பிறரன்பும் மட்டும்தான்.

அன்பு முழுமையானதாக இருந்தால் மற்ற எல்லா நற்குணங்களும் தாமாக வந்து விடும்."

"பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ,

 அப்படியே நாம் வாழ வேண்டும்.

 நமது வாழ்க்கை நமது பிள்ளைகளுக்கு முன்மாதிரிகையாக  இருக்க வேண்டும்."

."கடவுள் நம்மை தன் சாயலாக படைத்தார்.

 அந்த சாயலுக்குப் பங்கம் வராமல் நாம் வாழ்ந்தால்

 நமது பிள்ளைகளும் இறைவனின் சாயலிலேயே வாழ்வார்கள்.

இறைவனின் விருப்பம் அதுவே."

"ஆமாங்க. ஒரே வரியில் சொல்வதானால்,

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.

நல்ல குடும்பம் தானாக அமைந்துவிடும்."

." வழியும், ஒளியும், உயிருமாகிய இயேசுவே நமது 
வழியும், ஒளியும், உயிருமாக இருக்க வேண்டும்.

நாம் இருவரும் ஒருயிராய், ஒரே வழியில் ஒரே ஒளியில் நடப்போம்."

"நாம் இப்போது எழுதியுள்ள முன்னுரைப்படி  வாழ்வோம்.

இறைவன் என்றும் நம்மோடு இருக்கிறார்."

லூர்து செல்வம்.

Tuesday, June 23, 2020

புது மாப்பிள்ளை.

புது மாப்பிள்ளை.
222222222222222222222222

தங்கள் மகனுக்குத் திருமணம் நிச்சயம் செய்துவிட்டு பெற்றோர் மகனுடன் பங்குக் குருவைப் பார்க்க வந்தார்கள்.

"சுவாமி, பையனுக்குத் திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். ஓலை வாசிக்க வேண்டும். அது விசயமாக உங்களைப் பார்க்க  வந்தோம்." என்றார்கள்.

"ரொம்ப சந்தோசம். அப்பாவும், அம்மாவும் கொஞ்சம் வெளியே உட்காருங்க. நான் மாப்பிள்ளையுடன் கொஞ்சம் பேசிவிட்டுக் கூப்பிடுகிறேன்.

தம்பி. உட்காருங்க. எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன், சாமி."

"கல்யாணம் செய்யப் போகிறீங்களா?"

"ஆமா, சாமி."

"எதைச் செய்தாலும். அதுக்கு ஒரு நோக்கம் இருக்கணும், இல்ல?"

"ஆமா, சாமி."

"எந்த நோக்கத்தோடு திருமணம் செய்யப்போறீங்க?"

மாப்பிள்ள கொஞ்சம் யோசித்தார்.

சாமியார் ஏதோ ஒரு பதிலை எதிர்பார்க்கிறார்.

ஒரே செயலுக்கு ஆயிரம் நோக்கம் இருக்கும்.

செயல் செய்கிறவங்கிட்ட ஒரு நோக்கம்தான் இருக்கணும்.

சாமியார் எதிர்பார்க்கிற பதிலைச் சொல்லாவிட்டால், நம்மைப் பற்றித் தப்பா நினைப்பார்.

அவர் எதிர்பார்க்கிற பதில் எது என்று தெரியவில்லையே!

மாப்பிள்ளை அமைதியாய் இருப்பதை பார்த்து

சாமியார் கேட்டார்,  "தம்பி, பதில் தெரியவில்லையா?"

"சுவாமி, தெரியும்.

ஆனால் நீங்கள் என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.

நீங்கள் எதிர்பார்க்கிற பதிலைச் சொன்னால்தானே மார்க் கிடைக்கும்.

அதுதான் யோசிக்கிறேன்."

"நினைப்பதைச் சொல்லுங்க."

"வாழ்வதற்காக."

"நீங்கள் சொல்லுவது தவறான பதில் அல்ல,

ஆனால் பொதுவான பதில்.

குறிப்பிட்ட ஒரு செயலுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருக்கும்."

"மனைவியோடு வாழ."

"மனைவியோடு ஏன் வாழ வேண்டும்?"

"குழந்தைகளைப் பெற,  அவர்களை வளர்க்க."

"அப்போ நான் எதிர் பார்க்கிற பதிலை நீங்க சொல்ல மாட்டீங்க.

பரவாயில்லை. நானே சொல்லிவிடுகிறேன்.

கடவுள் நமது முதல் பெற்றோரை அவரே நேரடியாகப் படைத்தார்.

அடுத்த மனிதரைப் படைக்க அவர்களையே partners ஆகச் சேர்த்துக் கொண்டார்.

படைப்பது அவர்தான், ஆனால் மனித உதவியின்றி இன்னொரு மனிதனை அவர் படைப்பதில்லை.

மனிதனுக்குரிய உடலை கணவனும், மனைவியும் சேர்ந்து தயாரிக்கிறார்கள்.

ஆன்மாவைக் கடவுள் படைத்து உடலோடு சேர்க்கிறார்.

ஒரு புது மனிதன் உருவாகிறான்.

அப்போ மனித படைப்பு ஒரு..... வாக்கியத்தை முடிங்க."

மாப்பிள்ளை உடனே சொல்லி விடுகிறார்.

"Team work."

"Very good. Team work வெற்றி பெற எது முக்கியம்?"

"Cooperation. ஒத்துழைப்பு. Team தலைவரோடு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்."

"இந்த Team க்கு Head யாரு?"

"கடவுள்."

"Very good. இந்தப் பதிலை உங்கள்  மனதில் நன்கு  பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

கடவுள்தான் உங்கள் Team Head. நீங்களும், உங்கள் மனைவியும் Team members.

நீங்கள் இறைவனோடு ஒத்துழைத்தால்தான் உங்கள் குடும்பம் வெற்றி பெறும்.

Team எப்படி இயங்க வேண்டும்?"

"தலைமையின் ஆலோசனைப்படிதான் உறுப்பினர்கள் இயங்க வேண்டும்."

"Very good. கடவுள் தன்னுடைய படைப்பு தொழிலுக்கு உங்களை உதவிக்காக வைத்து கொள்கிறார்.

எவ்வளவு பெரிய பதவி!

அவரால் படைக்கப்பட்ட உங்கள் மக்களை

அவரது விருப்பப்படிதான்  வளர்க்க வேண்டும்."

"சரி, சுவாமி."

"அவரது விருப்பத்தை எப்படி அறிந்து கொள்வீர்கள்?"

"சுவாமி, இயேசு தாய்த் திருச்சபை மூலமாக நம் எல்லோரோடும் பேசுறார்.

என்னோடும் அப்படித்தான் பேசுகிறார்.

இப்போது இயேசு தான் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்."

"Good. தெளிவாக இருக்கிறீங்க.

இப்போ உங்கள் திருமணத்திற்காகத் தயார் நிலையில் உள்ளீர்கள், சரியா?"

"என்னால் இயன்ற அளவில் தயார்."

"ஆரம்பத்தில் பதில் சொல்ல கொஞ்சம் தயங்குனீர்களே, ஏன்?"

"தேர்வு எழுதப் போகும்போது உள்ள பயம். தேர்வு வைப்பவர் எதிர்பார்க்கும் பதிலைத் தரவேண்டுமே."

"இப்போ சொல்லுங்க.

நீங்க எந்த அளவுக்கு தயார்நிலையில் உள்ளீர்கள்?"

"எந்தச் செயலையும் இறைவனது  மகிமைக்காகத்தான் செய்யவேண்டும்

என்று திருச்சபை நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.

ஆகவே திருமண வாழ்க்கையையும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல,

  இறைவனுக்காகவே வாழ வேண்டும் என்ற உறுதியுடன் தான் நான் திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன்.

குருத்துவம் எவ்வாறு ஒரு இறை அழைப்போ அதேபோல திருமணமும் இறை அழைப்பு தான்.

குருத்துவம் எவ்வாறு ஒரு தேவத் திரவிய அனுமானமோ

அதே மாதிரி திருமணமும் ஒரு தேவத் திரவிய அனுமானம் தான்.

எவ்வாறு தகுந்த தயாரிப்போடுதான் குருக்கள் பட்டம் பெறுகிறார்களோ

அதே போல திருமணம் புரிபவர்களும் தகுந்த தயாரிப்போடுதான் திருமணம் செய்ய வேண்டும்.

எங்கள் மூலமாக இறைவன் உலகிற்கு அனுப்ப போகும் அவரது பிள்ளைகளை

அவரது சித்தப்படி வளர்க்க வேண்டியதுதான் எங்களது கடமை.
'
அதற்காகத்தான் நாங்கள் எங்களையே தயார்செய்து வைத்திருக்கிறோம்.

நாங்கள் பெறும் பிள்ளைகளை நல்ல கத்தோலிக்கர்களாக வளர்க்க வேண்டுமென்றால்

முதலில் நாங்கள் நல்ல கத்தோலிக்கர்களாக வாழ வேண்டும்.

எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் முன் மாதிரிகையாக  வாழ வேண்டும்

எங்களது வார்த்தைகளை விட செயல்கள்தான் பிள்ளைகளுக்கு அதிகம் போதிக்க வேண்டும்.

இறைவார்த்தை சொல்லுகிறது:

"குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால், இருவரும் குழியில் வீழ்வர்"
(மத்.15:14)

பெற்றோர் இறை வார்த்தையாகிய ஒளி இல்லாமல் வாழ்ந்தால்

அவர்களால் எப்படி பிள்ளைகளுக்கு இறைவார்த்தையை ஊட்ட முடியும்?

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்!

பெற்றோரிடம் என்ன குணங்கள் இருக்கின்றனவோ அவைகள் தான் பிள்ளைகளுக்கும் வரும்.

ஆகவே பெற்றோர் இறைவார்த்தையின்படி  புண்ணிய வாழ்வு வாழ வேண்டும்.

அவர்களைப் பார்த்தே பிள்ளைகள் புண்ணிய வாழ்வு வாழ்வர்..

பெற்றோர் கண்களில் விட்டம் இருந்தால் பிள்ளைகளின்

கண்ணிலுள்ள துரும்பு அவர்களுக்கு எப்படி தெரியும்?

குற்றம் இல்லாத பெற்றோர்தான் பிள்ளைகளை குற்றம் இல்லாதவர்களாக வளர்க்க முடியும்.

பெற்றோரிடம் குற்றம் இருக்குமானால் அவர்கள் முதலில் திருந்த வேண்டும், அப்புறம் பிள்ளைகளை திருத்த வேண்டும்.

கிறிஸ்தவ வாழ்வு ஆன்மீக வாழ்வு, ஆகவே கிறிஸ்தவ பெற்றோர் பிள்ளைகளை ஆன்மீகத்தில் வளர்க்க வேண்டும்.

உலக காரியங்களை பிள்ளைகள் தெரிந்திருக்க வேண்டியதுதான்,

ஆனால் அவர்கள் தெரிந்திருக்கிற உலக காரியங்கள்

கிறிஸ்தவ ஆன்மீகத்திற்கு இடையூறாக இல்லாதவையாக  இருக்க வேண்டும்.

அவர்ளுடைய கல்வி,  அவர்கள் செய்யப்போகிற   வேலை போன்றவை எதுவாக இருந்தாலும்

ஆன்மீக வாழ்வுக்கு விரோதமாய் இருந்து விடக் கூடாது.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு குட்டித் திருச்சபை என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

நானும், எனக்கு மனைவி ஆகப்போகிறவளும் இதை உணர்ந்து எங்களையே தயாரித்து,

திருமணத்திற்குத் தயாராக இருக்கிறோம்."

"எங்களால் செய்ய முடியாத ஒன்று உங்களால் செய்ய முடியும், அது என்ன?"

"எங்களால் குருக்களைப் பெற முடியும், உங்களால் குடும்பத்தைப் பெறமுடியாது."

"very Good. நான் இந்த கேள்வியைகேட்டதற்குக் காரணமே

நீங்கள் திருச்சபைக்கு குருக்களைப் பெற்றுத்தர வேண்டும் என்று விண்ணப்பிப்பதற்காகத்தான்.

ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு குருவானவர் உருவாக வேண்டும்.

ஒவ்வொரு அமைப்பிலும் quantityயும், qualityயும்,

அதாவது எண்ணிக்கையும், தரமும் இருக்கிறது.

திருச்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டவேண்டியது  குடும்பங்கள்.

தரத்தை maintain செய்ய வேண்டியது குருக்கள்.

குருக்களுடைய பணி ஆன்மீகப் பணி.

தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்ட விசுவாசிகளை விண்ணகப் பாதையில் வழிநடத்திச் செல்வது அவர்களது பணி.

உங்களுடைய குடும்பத்திலிருந்தும் ஒரு குருவானவர் வரவேண்டும்.

சரி. அப்பா அம்மாவை வரச் சொல்லுங்கள். மற்ற விபரங்கள் பற்றி பேசுவோம்."

"Thank you, Father."

(தொடரும்)

லூர்து செல்வம்.



Monday, June 22, 2020

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."(அரு.3:17)

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
(அரு.3:17)
*********************************
"நான் சொல்வதை ஒருவன் கேட்டபின் அதன்படி நடவாவிடில், அவனுக்குத் தீர்ப்பிடுவது நானல்லேன்: 

ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்."
(அரு.12:47)


ஒரு நாள், ஆசிரியர்கள் வழக்கமாகச் சொல்லுவதுபோல், நான் மாணவர்களைப் பார்த்து,

"எலே, நாளைக்கு மனப்பாடம் படியாம வாரவனக் கொன்னுப்புடுவேன்"னு சொன்னேன்.

மறுநாள் ஒரு பையனுடைய அப்பா வகுப்புக்கு வந்து என்னிடம்,

"ஏன் சார், நாங்க எங்க பிள்ளைகளை உங்களிடம் அனுப்புவது பாடம் படிப்பதற்கா அல்லது கொல்லப் படுவதற்கா?

"கொன்னுப்புடுவேன்"னு சொன்னீங்களாமே?"
என்றார்.


நான் உடனே பையனை அருகில் அழைத்து,

"ஏண்டா, என்றைக்காவது உன்னுடைய அப்பா நான் சொன்னது மாதிரி சொல்லியிருக்காரா?"

பையன் அப்பா முகத்தைப் பார்த்தான்.

"ஹலோ, சார், நானும் சொல்லியிருக்கேன்,
இதை விடக் கடுமையான வார்த்தைகளைக் கூட
சொல்லியிருக்கேன்.

ஏன்னா, நான் அவனுடைய அப்பா.

நான் அவன் மேல உண்மையான அன்பு உள்ளவன். அவனைத் திருத்துவதற்காகச் சொல்லியிருப்பேன். அதுவும் அன்பினால்தான் சொல்லியிருப்பேன்."

"எனக்கு மாணவர்கள் மேல் அன்பு இல்லையா ? 

திருத்துவதற்காகத்தானே பையன எங்கிட்ட அனுப்பியிருக்கீங்க! 


ஆசிரியர்கள் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது

 பிள்ளைகளைத் திருத்துவதற்காகத்தான் என்பது 
பெற்றோராகிய உங்களுக்கு ஏன் புரியவில்லை?

'ஆசு இரியர்' என்றாலே குற்றங்களை உறித்து எடுப்பவர் என்று தான் பொருள்.

உறிக்கும்போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.

என் மேல நம்பிக்கை இருந்தா பையன வகுப்பில விட்டுவிட்டுப் போங்க.

 இல்லாவிட்டால் H.Mம்மிடம் சொல்லி விட்டு

பையன வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க."

"Sorry சார். பையனைப் பார்த்துக்கிடுங்க."
போய்விட்டார்.


யாருடைய சொல்லுக்கும்  சொன்னவருடைய குணத்திலிருந்துதான்   பொருளைக் காணவேண்டும். 

இயேசுவின் வார்த்தைகளுக்கு  உள்ள பொருளை அவரது மட்டற்ற அன்பின்  மூலமாகத் தான் பார்க்க வேண்டும்.

அவர் அன்புமயமானவர் மட்டுமல்ல, அவர்தான் அன்பு.

Jesus is love.

எப்படி ஒளியிடம் இருட்டு இருக்க முடியாதோ,

அதேபோல,

இயேசுவிடம் அன்புக்கு ஒத்து வராத எந்தக் குணமும் இருக்க முடியாது.

அவருடைய மட்டற்ற அன்பு தான் நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாகப் பிறக்கச் செய்தது.

தந்தை மகனை உலகிற்கு அனுப்பியது

'தீர்ப்பளிக்கவன்று,'

 அவர்வழியாக 

'உலகம் மீட்புப்பெறவே.'

இயேசுவே அதைத்தான் சொல்கிறார்.

"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்."

இந்த வசனத்துக்கு உள்ள பொருளை நூற்றுக்கு நூறு அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்.

அவர் உலகிற்கு வந்ததன்  நோக்கத்தை அப்படியே சொல்கிறார்.

அட்டடியானால் மத்தேயு நற்செய்தியில்  இயேசு இறுதி நாளில் தீர்ப்பிடுவதாக எழுதியிருப்பதை எப்படிப் பொருள் கொள்வது?

இயேசு தன் போதனையில்  பிறர் அன்புப் பணி செய்வதன் மூலமே இறையன்பு செய்ய முடியும் என்ற உண்மையை வலியுறுத்துகிறார்.

நாம் விண்ணகம் செல்வோமா அல்லது செல்லமாட்டோமா என்று தீர்மானிப்பது

நாம் இறைவனுக்காக பிறரன்புப் பணிகள் செய்கிறோமா அல்லது செய்யவில்லையா என்பதுதான்.

 செயலிலுள்ள இறையன்பும், பிறரன்பும்தான்

இயேசு தன் மரணத்தினால் நமக்குத் தரத் தயாராக வைத்திருக்கும் மீட்பைப் பெற நமக்குத் தகுதியைத் தரும்.  

இயேசுவின் வார்த்தைப்படி நாம் வாழ்ந்தால் நமக்கு மீட்பு.

நாம் வாழாவிட்டால் விண்ணகத்தை நாம்தான் இழக்கிறோம்.

கடவுள் நம்மைத் தள்ள மாட்டார்,

இயேசு தீர்ப்பிடமாட்டார். நாம் தான் நம்மைத் தீர்ப்பிட்டுக் கொள்கிறோம்.


"என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவனுக்குத் தீர்ப்பிடும் ஒன்று உண்டு:

 நான் கூறிய வார்த்தையே அவனுக்கு இறுதி நாளில் தீர்ப்பிடும்."
(அரு.12:48)

இயேசு,

 "வார்த்தையே தீர்ப்பிடும்."

என்கிறார்.

அவரது வார்த்தையை நாம் கடைப் பிடிக்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்துதான் தீர்ப்பு.

கடைப்பிடிப்பதும், கடைப்பிடிக்காதிருப்பதும் நாம் தான்.

ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறுவது ஓடுகிறவன்தான்.

இறுதி நாள் பற்றி இயேசு பேசும்போது 

அவர் வலியுறுத்திக் கூறுவது 

நாம் பிறரன்பு செயல்களை செய்தால் மட்டுமே மீட்பு பெற முடியும் என்பதைத்தான்.

மருத்துவர் நோயாளிக்கு மருந்து கொடுத்துவிட்டு 

"இதை சாப்பிட்டால் மட்டுமே குணமாக முடியும்,

 ஆகவே மறக்காமல் ஒழுங்காக மருந்தைச் சாப்பிடுங்கள்"
என்று சொல்லுகிறார்.

மருத்துவர் தீர்ப்புச் சொல்லவில்லை. 
 பிழைக்க வழி சொல்லுகிறார்.


 மருந்தைச் சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும்  நோயாளியின் பொறுப்பு.

  சாப்பிட்டால் குணமாகும்,
சாப்பிடாவிட்டால் குணமாகாது.

மருந்தை அவன் ஒழுங்காகச் சாப்பிடாமல் இறந்துவிட்டால்

மருத்துவர்  மரணத் தீர்ப்பிட்டு  விட்டார் என்று என்று சொல்லலாமா?

சிலர் கேட்கலாம்

 "இயேசு அன்பு உள்ளவர், நம்மை மீட்க வந்தார்.

 அதே சமயத்தில் இயேசு நீதி உள்ளவர், ஆகவே நீதியின்படி தீர்ப்பிடலாம்  அல்லவா?"

உண்மை. இயேசு அளவற்ற அன்பு உள்ளவர் போல்,

 அளவற்ற நீதியும் உள்ளவர்.

 இது மறுக்க முடியாத உண்மை.

மனித கண்ணோக்கில் உள்ள நீதிக்கும், இறைவனின் நீதிக்கும் பாரதூர வித்தியாசம் உள்ளது.

மனித நீதிப்படி நீதிமன்றத்தில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

நிரபராதி விடுவிக்கப்பட வேண்டும்.

மனித நீதிபதி குற்றவாளியை பார்த்து,

 "நான் உன்னை நேசிக்கிறேன், ஆகவே  விடுவிக்கிறேன்"

 என்று கூற முடியாது.

"நான் உன்னை நேசிக்கிறேன்,
ஆகவே நீ செய்த குற்றத்திற்கு நானே பரிகாரம் செய்கிறேன்'' என்றும் கூற முடியாது.

இறைவனின் எல்லா பண்புகளும் அளவு இல்லாதவை.

 கடவுள் அளவற்ற அன்புள்ளவர் ,

அளவற்ற நீதியுள்ளவர்,

 இரண்டு பண்புகளும் அளவற்றவை.

 ஆகையால் இரண்டும் இணைந்தே செயல் புரிகின்றன.

  மனிதன் செய்த பாவத்தினால் தண்டனை பெறத் தகுதி உள்ளவன்.

  நீதிப்படி அவன் தண்டிக்கப்பட வேண்டும், 

ஆனால் அன்புப்படி   அவன் மன்னிக்கப்பட வேண்டும்.

அன்புப்படி மன்னிக்கப்பட வேண்டுமானால் 

நீதிப்படி  அவன் பாவத்திற்கு பரிகாரம் செய்தாக வேண்டும்.

ஆனால் அளவற்ற கடவுளுக்கு எதிராக செய்யப்பட்ட பாவத்திற்கான பரிகாரமும் அளவற்ற விதமாய் இருக்க வேண்டும்.

 ஆனால் அளவுள்ள மனிதனால் அளவற்ற விதமாய் பரிகாரம் செய்ய முடியாது.

ஆனாலும் மனிதனால் தான் செய்யப் படவேண்டும்.

ஆகவே கடவுள் மனிதனாய் பிறந்து 

மனிதன் செய்யவேண்டிய பரிகாரத்தை 

மனிதராக அவரே செய்தார்.

 அவர் மனிதன் ஆகையால் பரிகாரம் செல்லும், 

அவரே கடவுளாகையால் பரிகாரம் அளவற்ற விதமாய் இருக்கும்.

ஆகவே அன்புமயமான கடவுளே நீதிப்படி பரிகாரம் செய்தார்.

தன் உடலில் இருந்த   இரத்தத்தில் ஒரு துளியைக் கூட மீதம் வைக்காமல் சிந்தி

 நமக்காக தனது உயிரையும் கொடுத்து  

முழுமையான கடவுளும், முழுமையான மனிதனுமாகிய இயேசு

நாம் செய்யவேண்டிய பரிகாரத்தை அவரே செய்தார்.

ஆகவே இறைவனின் நீதி கூட நம்மை மன்னிக்கவே செய்கிறது.

இறைவன் நமக்காக சிந்திய ரத்தத்தை நாமே வீணாக்கி விடக்கூடாது.

இறைவார்த்தையை நமது  வாழ்வாக்குவோம்.

நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம். 

Sunday, June 21, 2020

"உலகிற்குச் சமாதானம் கொணர வந்தேன் என்று நினைக்கவேண்டாம். சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன்."(மத்.10:34)

"உலகிற்குச் சமாதானம் கொணர வந்தேன் என்று நினைக்கவேண்டாம். சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன்."
(மத்.10:34)
*********************************

"விண்ணுலகில் இறைவனுக்கு மகிமையும்,

பூவுலகில் நல் மனதோற்குச் சமாதானமும் உண்டாகுக."

கிறிஸ்து பிறந்த அன்று, அவர் பிறந்ததின் நோக்கத்தை விண்ணகத் தூதர்கள் வாழ்த்தாகப் பாடினார்கள்.

வார்த்தையானவர் (இறைமகன்) மனுவுரு எடுத்திருக்கிறார்.

இறைவார்த்தை (The word of God) நல்ல மனது உள்ளவர்களிடம் இறங்கி சமாதானத்தை அளிக்கிறது.

அதாவது வார்த்தையானவர் தரும் நற்செய்தி நல்ல மனதிற்கு சமாதானம் கொடுக்கிறது.

இயேசு சொல்கிறார்,

"சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன்."

தியானிப்போம்.


"தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமிக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன்.".

இயேசு குறிப்பிட்டுள்ள குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள். 

தந்தை,
தாய்,
மகன்,
மகள்,
மருமகள்.

தந்தை, தாய், (மாமியார்)
மகன், மகள், மருமகள்

தந்தை X  மகன்
தாய்      X  மகள்
மாமி      X  மருமகள்

இதை ஆன்மீக ரீதியாகத் தியானித்தால்:

 ஒவ்வொரு  மனிதனிடமும்
(In each person)
ஆன்மீக ரீதியில் ஒரு குடும்பம் இருக்கிறது.

அதில் இறைவனால் படைக்கப் பட்ட உறுப்பினர்கள்:

உடல், ஆன்மா, மனது.

கடவுள் படைக்கும்போது மனித மனது பரிசுத்தமானதாக  இருந்ததால்

  மனிதனிடம் சமாதானம் நிலவியது.

ஆனால் நமது முதல் பெற்றோர் இறைவனது கட்டளைகளை மீறியதால்

மேலும் இரண்டு உறுப்பினர்கள் நமக்குள் நுழைந்து விட்டார்கள்:

பாவம், அவிசுவாசம்.

சென்மப்பாவத்தினால் இந்த நிலை.

 பாவத்தினால் மனிதனிடம் இருந்த சமாதானம் போய்விட்டது.

ஆனால் உடலும், பாவமும்


ஆன்மாவும் , அவிசுவாசமும்,

 மனதும் சிற்றின்பத்தில் குடும்பம் நடத்துகிறார்கள்.

பாவம் உடலைத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.

அவிசுவாசம் ஆன்மாவைத்
தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.

இந்த நிலையிலிருந்து மனிதனை மீட்க

வார்த்தையானவர் மனுவுரு எடுக்கிறார்.

அவரின் வார்த்தை மனிதனின் மனதில் வாளாக இறங்கு கிறது.


"கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்மிக்கது, இரு பக்கமும் கருக்கு வாய்ந்த எந்த வாளினும் கூர்மையானது."
(எபி. 6:12)

மீட்பையே தலைச்சீராவாகத் தாங்கி,கடவுளின் சொல்லைத் தேவ ஆவி தரும் போர்வாளாக ஏந்திக்கொள்ளுங்கள்.
(எபே. 6:17)

இதுவரை சிற்றின்பத்தில் ஆன்மீகப் போராட்டம் எதுவுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தில்

மனதில் வாளாகிய இறங்கிய இறை வார்த்தை ஆன்மீகப் போரை ஆரம்பிக்கிறது.

இறை வார்த்தையால் மனம் மாறிக்கொண்டிருக்கும் மனது  ஆன்மாவையும், உடலையும் தொடுகிறது.

உடனே உடல் பாவத்தோடு போரிடுகிறது.

ஆன்மா அவிசுவாசத்தோடு போரிடுகிறது.

இறைவார்த்தையின் வல்லமையால்

உடல் பாவத்திலிருந்து 
பிரிகிறது, அதாவது, விடுதலை பெறுகிறது.


ஆன்மா அவிசுவாசத்திலிருந்து  விடுதலை பெறுகிறது.

இறைவார்த்தையை மனது ஏற்றுக் கொண்டதால்  மனிதன், 

ஞானஸ்நானம் பெற்று

சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறான்.


"தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமிக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன்."

வசனத்தை இப்படிப் புரிந்து கொள்வோம்.


இயேசு
"பாவத்திற்கு எதிராக உடலையும்

, அவிசுவாசத்திற்கு  எதிராக ஆன்மாவையும், 

பிரிக்க வந்தார்.

அதாவது

மனிதனை பாவத்திலிருந்து மீட்கவந்தார்.


இறைவார்த்தையைத் தியானித்தால் மட்டும் போதாது.

அதை வாழ்வாக்க வேண்டும். 

கிறிஸ்துவின் வருகை நமது மனதை சமாதானத்தால் நிரப்பிவிட்டது.

கிறிஸ்து தரும் சமாதானம்

 பாவத்திலிருந்து நாம் விடுதலை பெற நடைபெறும் ஆன்மீகப் போரில் 

வெற்றி பெற உதவுவதால் அதை வாள் என்று இயேசு குறிப்படுகிறார்.

பாவத்திலிருந்து விடுதலை பெற்ற நம்மை

 உடல் சம்பந்தபட்ட பாவ நாட்டங்கள் எதுவும்  நெருங்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

போசனப் பிரியம், உடல் இச்சைகள், indecent dress போன்ற நாட்டங்கள் நம்மை நெருங்கக்கூடாது.

நமது ஆன்மாவை விசுவாசம், நம்பிக்கை, இறையன்பு, மற்றும் தாழ்ச்சி, பொறுமை போன்ற புண்ணியங்களால் வளப்படுத்த வேண்டும்.

நமது மனதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

 இயேசு தந்த சமாதானம் என்றும் நம்மோடு தங்கும்.

லூர்து செல்வம்.

Saturday, June 20, 2020

"பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்."(லூக்.2:51)

"பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்."
(லூக்.2:51)
********************************

மூன்று நாட்கள் தன்னைத் தேடி அலைந்து,

மூன்றாம் நாள் ஆலயத்தில் கண்டுபிடித்த அன்னையையும், வளர்ப்புத் தந்தையும் பார்த்து

இயேசு,  " ஏன் என்னைத் தேடினீர்கள்?

என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்க வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.

இப்படிக் கூறிய இயேசு அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்.

இங்கு ஒரு முக்கிய உண்மையை நாம் தியானிக்க வேண்டும்.

" ஏன் என்னைத் தேடினீர்கள்?" என்று கேட்டவர்,

"நீங்கள் போய் வாருங்கள், என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கிறேன்."

என்று சொல்லவில்லை.

மாறாக உடனே அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்.

இந்த வசனத்தை வாசிக்கும் போது எனக்கு கானாவூர்  திருமணம் ஞாபகத்துக்கு வருகிறது.

கானாவூர் திருமணத்தின்போது,

"இரசம் தீர்ந்துவிட்டது" என்று சொன்ன தன் தாயிடம்

,"அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று சொன்னாலும்,

மாதா பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று சொன்னவுடன்,

இயேசு பணியாட்களிடம் "இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார்.

"எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று சொன்னவர்,

தாயின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு,

தண்ணீரை இரசமாக்கிக் கொடுக்கிறார்.

"ஏன் என்னைத் தேடினீர்கள்?"
என்று சொன்னவர் மாதாவுடன் புறப்பட்டுப் போகிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இயேசு எந்த குழ்நிலையிலும் தாயின் சொல்லைத் தட்ட மாட்டார்.

மாதாவை சாதாரணப் பெண் என்று கூவிக்கொண்டு திரிபவர்கள் கொஞ்சம் உட்கார்ந்து பைபிளை வாசியுங்கள்.

வாசித்தபின் கொஞ்சம் யோசியுங்கள்.

ஆலயத்திலிருந்து இயேசு மாதாவுடனும், சூசையப்பருடனும் ஏன் சென்றார்?

அவர்களுக்குப் பணிந்து வாழ்வதற்கு.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

ஆலயத்தில் நற்செய்தியை அறிவிப்பது எப்படி தந்தையின் சித்தமோ,

அதேபோல தாய்க்கும், வளர்த்த தந்தைக்குப் பணிந்து வாழ்வதும்  தந்தையின் சித்தம் தான்.

30 ஆண்டுகள் தாய் சொல் தட்டாமல் வாழ்ந்துவிட்டு,

3 ஆண்டுகள் மட்டும் பொது வாழ்வில் ஈடுபட்டார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

33 ஆண்டுகளும் இயேசு நற்செய்திப் பணி ஆற்றியிருக்கிறார் என்று தெரிகிறது.

பெற்றோருக்கும்,

நம்மை வழி நடத்தும் பெரியவர்களுக்கும்

கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற நற்செய்தியை
30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வாழ்ந்து போதித்தார்.

இதன் மூலம் நாம் கற்கும் பாடம்:

1. நாமும் நற்செய்தியை வாயினால் மட்டுமல்ல, வாழ்ந்தும் போதிப்போம்.

நமது வாழ்நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நற்செய்தியை அறிவிப்பதாக இருக்க வேண்டும்.

குருவானவர் கோவிலில் பிரசங்கம் மூலம் பேசி நற்செய்தி அறிவிக்கிறார்.

நாம் பிரசங்கத்தை அமைதியாக அமர்ந்து கூர்ந்து கவனிப்பதே நற்செய்தி அறிவிப்புதான்.

2. இயேசு இராயப்பரைப் பார்த்து, "என் ஆடுகளை மேய்" என்றார்.

மேய்ப்பன் ஆடுகளை மேய்க்கும் போது ஆடுகள் என்ன செய்ய வேண்டும்?

மேய்ப்பனுடைய வழிகாட்டுதல் படி மேய வேண்டும்.

இன்றுள்ள பெரிய பிரச்சனை ஆடுகள் மேய்ப்பனையே மேய்க்க ஆசைப்படுவது தான்.

தாய்த் திருச்சபையை விட்டு பிரிந்து சென்றவர்கள்,

"இராயப்பா, ஆண்டவர் உம்மை மேய்க்கச் சொல்ல வில்லை.

பைபிள் வைத்திருப்பவர்களை  மேய்க்கச் சொல்லி விட்டார்.

நாங்களே ஆடுகளை மேய்த்துக் கொள்வோம்.

உமது தலைமை தேவை இல்லை."

என்று கூறிவிட்டு, ஆடுகளை அவர்கள் 'மேய்ந்து' கொண்டிருக்கிறார்கள்!

ஆண்டவர் நமக்குக் கற்பிக்கும் பாடம்,

"நான் என் தாய்க்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தது உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே.

நான் என் தாய்க்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தது போல

நீங்கள் நான் உங்களுக்குத் தந்த அன்னைத் திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து வாழுங்கள்.

நான் என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே பூமிக்கு  வந்தேன்.

என் தந்தையின் சித்தப்படி

நான் நிருவிய திருச்சபையின் சித்தத்தை நிறைவேற்றுபவர்கள் என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்."

இயேசு அறிவித்த மிக முக்கிய நற்செய்தி கீழ்ப்படிதல்தான்.

கீழ்ப்படிதல் இல்லா விட்டால் மற்ற நற்செய்திகள் நம் காதில் விழாது.

கீழ்ப்படியாமை உலகில் பாவத்தைப் புகுத்தியது.

கீழ்ப்படிதல் பாவத்திருந்து மீட்பைத் தந்தது. 

இறைமகன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து மனிதன் ஆகி நம்மை மீட்டார்.

இறைமகனுக்கு கீழ்ப்படிந்தால் தான் நமக்கு மீட்பு.

இறைமகன் நிறுவிய ஒரே திருச்சபைக்குக் கீழ்ப்படியும் போது

, இறைமகனுக்குக் கீழ்ப்படிகிறோம்.

இறைமகனுக்குக் கீழ்ப்படியும்போது இறைத் தந்தைக்குக் கீழ்ப்படிகிறோம்.

இறைவன் தந்த பத்துக் கட்டளைகளில் நான்காவது கட்டளை:

"பிதாவையும், மாதாவையும் சங்கித்திருப்பாயாக."

முதல் மூன்று கட்டளைகளும்
கடவுளோடு நேரடித் தொடர்பு உடையவை.

அயலானோடு தொடர்புடைய ஏழு கட்டளைகளில் முதன்மையானது

நமக்கும் நமது பெற்றோருக்குமான உறவைப் பற்றியது.

நமது பெற்றோரை மதித்து, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

இதிலிருந்து கீழ்ப்படிதலுக்கு கடவுள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நமக்கு முன் மாதிரிகையாகத்தான் இயேசு திருக்குடும்பத்தில் கீழ்ப்படிந்து நடந்தார்.

நமது திருச்சபை ஒரு குடும்பம். நாம் எல்லோரும்  அதன் உறுப்பினர்கள்.

நமது குடும்பத்தை நேசிக்கவும்,

அதை வழி நடத்தும் இயேசுவின் பிரதிநிதிகளுக்கு கீழ்ப்படியவும்

எல்லோருக்கும் கடமை இருக்கிறது.

ஆயர்கள் பாப்பரசருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

குருக்கள் தங்களது ஆயர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

விசுவாசிகள் தங்களை வழி நடத்தும் பங்குக் குருவுக்கு
கீழ்ப்படிய வேண்டும்.

கீழ்ப்படிய மறுப்பவர்கள் லூசிபெரைப் பின்பற்றுகிறார்கள்.

கீழ்ப்படிபவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறார்கள்.

நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை நினைவில் வைத்துச் செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Friday, June 19, 2020

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."(மத்.11:28

சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."
(மத்.11:28)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-



இயேசு நம் மீது அவருடைய மாறாத அன்பு, பரிவு, இரக்கத்தின் காரணமாகத்தான் அவர் சொல்லுகிறார்,


"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."


உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
 ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்.

ஆம், என் நுகம் இனிது, என் சுமை எளிது."

ஆறுதல் அளிக்கும் இயேசுவின் வார்த்தைகளில்

ஆறுதல் மட்டுமல்ல ஒரு வாழ்க்கைப் பாடமும் இருக்கிறது.

பலருக்கு வாழ்க்கையே பெரிய சுமைதான்.

வாழ்க்கை வெறுமனே உயிரோடு வாழ்வது மட்டுமல்ல,

வசதியாக வாழ்வதற்காக பணம் ஈட்டுவதற்காக நாம் பார்க்கும் வேலை, அதில் உள்ள கஷ்டங்கள், களைப்பு, படும் அவமானங்கள் போன்றவை நாம் சுமக்கும் சுமை.

நமது இன்றைய சுமைகளில் ஆறுதல் பெற

 வேலை முடிந்தவுடன்

 தாயின் மடியிலோ,

 மனைவியின் மடியிலோ,

 கணவர் மடியிலோ

 தலை வைத்து அவர்களின் அன்பு முகத்தையே பாத்துக் கொண்டிருந்தால் சுமை இறங்கி ஆறுதல் கிடைக்கும்.

இயேசு "வாழ்க்கைச் சுமையால் கஷ்டப்படுகிறவர்களே, என்னிடம். வாருங்கள். 

நான் உங்களுக்கு ஆறுதல் தருவேன்.

என் அன்பு முகத்தைப் பார்த்தாலே உங்கள் கஷ்டங்கள் எல்லாம் பறந்து விடும்.

உங்களுக்காகக் கஷ்டப்பட்ட என் அன்பு முகத்தைப் பாருங்கள்.

உங்கள் கஷ்டங்களை என்னிடம் ஒப்புக் கொடுத்து விட்டு ஆறுதல் அடையுங்கள்."

மனதில் சுமை வைத்திருந்து,

 திவ்ய நற்கருணை நாதர் முன் அமர்ந்து தியானிப்பவர்கட்கு 

இந்த ஆறுதல் அனுபவம் புரியும்.

மேலும் சொல்கிறார்,

"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்."

நுகம் என்பது வண்டியில் பூட்டியிருக்கும் மாடுகளின் கழுத்தில் வைக்கப் பட்டிருக்கும் வண்டி நோக்கால்.

வண்டியில் உள்ள பாரத்தை அனுசரித்து நோக்காலின் சுமை இலேசாகமாகவோ, கனமானதாகவோ இருக்கும்.

வண்டியிலுள்ள சுமை வாழ்க்கை நாமாகவே ஏற்றுக் கொண்ட பாரத்தைக் குறிக்கும்.

ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டு, கோடிக்கணக்கில் சம்பாதித்து, அம்பானி மாதிரி அரண்மணை கட்டி, சகல வித வசதிகளையும் வைத்து வாழ்ந்தால்,

அவனது வசதிகளைப் பராமரிப்பது மிகக் கஷ்டம்.

 ஒரு நாள் AC ரிப்பேர் ஆகிவிட்டால் அன்று அவனது வாழ்க்கை நரகம்தான்.

ஆனால் குறைவாக சம்பாதித்து குடிசையில் வாழ்பவனுக்கு அம்பானி வசதி யெல்லாம் தேவை இல்லை.

குடிசைக்கு வெளியே நார்க் கட்டில் போட்டு படுத்தால் AC இல்லாமலே  இனிய தூக்கம் வரும்.

பணக்கார வாழ்வின் 'நுகம்' கனமானது.

ஏனெனில் வாழ்க்கைச் சுமை மிகப் பாரமானது.

ஏழை வாழ்வின் 'நுகம்' இலேசானது.

ஏனெனில் வாழ்க்கைச் சுமையும் இலேசானது.

ஆண்டவர் அவரிடமிருந்து சுற்றுக் கொள்ளச் சொல்கிறார் 


"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்,

என் நுகம் இனியது, 

ஏனென்றால் என் சுமை எளிது."

ஆண்டவரின் வாழ்க்கைச் சுமையைப் பாருங்கள்.

ஆண்டவர் மிக எளிமையாக வாழ்ந்தார். 

அவர்  பயன்படுத்திய வாழ்க்கை வசதிகள் மிகக்குறைவு. 

நற்செய்தி போதித்தபோது அவர் தங்க ஒரு வீடு கூட இல்லை. 

மனுமகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லை.


பகலில் போதித்து விட்டு, இரவில் மலைமேல் ஏறி தனிமையில் செபிப்பார்.

உணவு கிடைக்கிற இடத்தில்
கிடைக்கிற உணவைச் சாப்பிடுவார்.

கையில் பணம் கிடையாது.

(ஒரு முறை வரி கட்டுவதற்கு இராயப்பரிடம் சொல்லி மீனின் உடலில் இருந்து பணம் எடுத்து வரச்சொன்னார்.)

எளிமையாக மட்டுமல்ல ஏழையாகவும் வாழ்ந்ததால் 

அவரது வாழ்க்கைச் 'சுமை'

மிகக் குறைவு.

ஆகவே 'நுகமும்' இனியது.


இத்தகைய வாழ்க்கை 
முறையைத்தான்

இத்தகைய வாழ்க்கை நடத்துபவர்கள் மிகவும் சாந்தமும், தாழ்ச்சியும் உள்ளவர்களாக இருப்பார்கள்.

"என்னிடமிருந்து கற்றுத் கொள்ளுங்கள்" என்றார்.

இயேசுவிடம் சென்றால் நமக்கு மன ஆறுதலும் கிடைக்கும்.

வாழ்க்கைப் பாடமும் கிடைக்கும்


"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
 ஏனெனில்,

நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்."

இயேசுவின் வாழ்க்கையை  அப்படியேபின்பற்றினால் நமது துகம் மிக லேசாக இருக்கும்,

என்றால் அது இழுக்கவேண்டிய வாழ்க்கைச் சுமை குறைவு.

நாம் இயேசுவிடமிருந்து கற்கவேண்டிய மற்றொரு பாடம்

 பகலில் கடினமான வேலை முடிந்து இரவில் இறைவனோடு ஒன்றிப்பது.

வேலையின் போது  நாம் பட்ட கஷ்டங்களை எல்லாம் இறைவன் முன் இறக்கி வைத்துவிட்டு

 நாம் நிம்மதியாகத் தூங்க வேண்டும்.

 அப்போதுதான் மறுநாள் வேலைக்கு தயார் ஆக முடியும்.

இயேசு முக்கியத்துவம் கொடுத்தது மக்களுக்கு.

 அதிலே அவர் செல்வந்தர்,

அவர் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அவர் பின்னாலேயே சென்றது. அவர் பேசியதை கேட்டது.

 பணத்தை பொருத்தமட்டில் அவர் ஏழை.

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்தவுடன் இயேசுவிடம் சென்று,

  அவர் மடியில் தலைசாய்த்து,

 அவர் முகத்தை நோக்குவோம்.


 அவர் நமக்குத் தரும் ஆறுதலை ஏற்று, , வாழ்க்கை பாடத்தைக் கற்போம்.

 என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

நமக்கு மகிழ்ச்சி தரும் ஒரே செல்வமும் 

நித்திய பேரின்பம் தரும் ஒரே பாக்கியமும் 

இயேசுவே. 

லூர்து செல்வம்.