அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.
(லூக்கா நற்செய்தி 10:37)
இயேசு, "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று கூறியபோது
திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரிடம்
"எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று கேட்டார்.
அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இயேசு நல்ல சமாரியன் உவமையைக் கூறினார்.
"ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார்.
அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு நயம் இருக்கும்.
எருசலேம் ஆலய நகரம், ஆன்மீக வாழ்வைக் குறிக்கிறது.
எரிக்கோ ஒரு வியாபார நகரம், லௌகீக வாழ்வைக் குறிக்கிறது.
கள்வர் லௌகீக வாதிகள், ஆன்மீகத்துக்கு எதிரிகள்.
ஆன்மீகம் சார்ந்த பக்தி வாழ்க்கையை விட்டு விட்டு லௌகீகம் சார்ந்த வாழ்க்கைக்குத் திரும்பும் போது இந்த விபத்து நடக்கிறது.
ஆன்மீகத்திலேயே இருந்திருந்தால் ஆண்டவர் துணையோடு பத்திரமாக இருந்திருப்பார்.
லௌகீக வாதிகளுக்குதான் ஆன்மீக விபத்துக்கள் ஏற்படும்.
அடிபட்டுக் கிடந்தவர் வழியாக ஒரு குருவும், லேவியர் ஒருவரும் வருகிறார்கள்.
இருவருமே இனரீதியாக யூதர்கள். அடிபட்டுக் கிடப்பவரும யூதர். அவர்கள் அடிபட்டுக் கிடப்பவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
அதாவது அவரைத் தங்கள் அயலானாக ஏற்கவில்லை.
மூன்றாவதாக ஒரு சமாரியர் வருகிறார்
அவர் அடிபட்டுக் கிடப்பவர் மீது பரிவு கொண்டு,
அவரது காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.
மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்கிறார்.
இந்த உவமையைக் கூறிய பின் இயேசு ஒரு கேள்வி கேட்கிறார்,
"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?"
அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்கிறார்.
இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறுகிறார்.
மனிதர்கள் ஒவ்வொரும் அவரவர் அயலானுக்கு உதவி செய்ய வேண்டும்.
அயலான் என்றால் அதே இனத்தைச் சேர்ந்தவன் என்று அர்த்தம் அல்ல.
அதே சமயத்தைச் சேர்ந்தவன் என்றும் அர்த்தம் அல்ல.
இரத்த உறவினன் என்றும் அர்த்தம் அல்ல.
இறைவனால் அவரது சாயலில் படைக்கப்பட்டவன், அதாவது அன்பும், இரக்கமும் உள்ளவன்.
அன்பும், இரக்கமும் உள்ளவன் தான் அயலானுக்குரிய கடமையைச் செய்ய முடியும்.
குருவும், லேவியரும் அடிபட்டுக் கடந்தவனைப் போல் யூதர்கள் தான், ஆனால் அன்பும், இரக்கமும் இல்லாதவர்கள்.
ஆகவே தங்கள் இனத்தவனுக்கு உதவி செய்யவில்லை.
ஆனால் அன்பும் இரக்கமும் உள்ள சமாரியர் இனம் பார்க்காமல் வேற்று இனத்தவருக்கும் உதவி செய்கிறார்.
இயேசு ஏன் அடிபட்டுக் கிடந்தவருக்கு அயலான் யார் என்று கேட்கிறார்?
எல்லோரும் மனிதர்கள் தான், மனிதனுக்குரிய பண்புகள் உரியவர்கள் தான் மனிதர் என்று அழைக்கப்பட ஏற்றவர்கள். அன்பு இல்லாதவர் மனிதர் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்.
அதேபோல நமக்கு அடுத்து இருப்பவர்கள் அனைவரும் அயலான்கள்தான் என்றாலும்
அயலானுக்குரிய பண்பாகிய இரக்கம் உள்ளவர்கள் தான் அப்பெயருக்கு ஏற்றவர்கள்.
அதை நமக்கு உணர்த்தவே இந்த உவமை.
இரக்கம் உள்ள சமாரியரே அயலான் என்ற பெயருக்கு ஏற்றவர்.
இன, மத, சமூக வேறுபாடுகள் இல்லாமல், தேவைப்படும் அனைவருக்கும் நாம் உதவ வேண்டும் என்பதே இந்த உவமையின் முக்கியக் கருத்து.
அடிபட்டுக் கிடந்தவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் பயணிப்பவர்,
அதாவது பக்தி நிறைந்த ஆன்மீக வாழ்வை விட்டுப் பாவ வாழ்க்கையை நோக்கிப் பயணிப்பவர்,
ஒரே வார்த்தையில் நல்லவரல்ல.
உதவி செய்பவர் இரக்கம் உள்ளவராக இருந்தால் உதவி தேவைப்படுபவர் எப்படி பட்டவர்களாக இருந்தாலும், நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் உதவி செய்வார்.
இயேசு இரக்கம் உள்ளவர், நாம் பாவம் செய்தவர்கள் ஆனால் நல்லவராகிய இயேசு கெட்டவர்களாகிய நம்மை ஒவ்வொரு வினாடியும் பாதுகாத்து பராமரித்து வருகிறார்.
அவரது அன்பைப் பார்த்து நாம் மனம் திரும்ப வேண்டும்.
நல்ல சமாரியன் மூலம் இயேசு நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன?
நாம் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
நமது பிறர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நமது இரக்கத்தின் காரணமாக அவர்களுக்கு உதவ வேண்டும்.
அதனால் தான் இயேசு
"நீரும் போய் அப்படியே செய்யும்" என்கிறார்.
நாமும் அப்படியே செய்வோம்.
லூர்து செல்வம்