Saturday, April 6, 2024

"பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?"

"பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?"


உயிர்த்த ஞாயிறன்று மாலையில்
அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்த சீடர்கள் முன் 

 இயேசு தோன்றி,

"உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக."

என்று வாழ்த்தினார்.

அன்று தோமையார் அங்கு இல்லை.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். 

அன்று தோமையாரும் அவர்களோடு இருந்தார். 

கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக.!" என்று வாழ்த்தினார். 

ஆரம்பத்தில் சீடர்கள் இயேசு உயிர்த்ததை நம்பவில்லை.

அவர்களுக்கு காட்சி கொடுத்த பின் நம்பினார்கள்.

நம்பிய பின் ஏன் மீன் பிடிக்கச் சென்றார்கள் ?

 இயேசுவைப் பின்பற்ற மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு வந்தவர்கள்,

மூன்று ஆண்டுகளாக மீன் பிடிக்கப் போகாதவர்கள்,

ஏன் திடீர்னு மீன் பிடிக்கப் போனார்கள்?

எந்த இராயப்பரைப் பார்த்து 

இயேசு, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்று சொன்னாரோ அந்த இராயப்பர். 

"நான் மீன்பிடிக்கப் போகிறேன்" என்றார். 

அவருடன் இருந்த சீடர்கள், "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று போய்ப் படகில் ஏறினார்கள்.

தலைவர் எவ்வழி மற்றவர்கள் அவ்வழி.

 அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. 


கடல் கரையில் தோன்றிய இயேசு அவர்கள்மீது கோபப்படவில்லை.

மாறாக  அன்புடன்

"பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?" என்று கேட்டார். 

அதற்கு அவர்கள், "இல்லை" என்றார்கள். 

அவர், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்றார்.

 அவர்களும் அவ்வாறே வீசினார்கள். 

மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

அதன் பின்புதான் கரையில் நின்றது இயேசு என்று கண்டு பிடித்தார்கள்.

இயேசு அவர்களிடம் அன்பு டன், "உணவருந்த வாருங்கள்" என்றார். 

இந்நிகழ்ச்சி இயேசு எவ்வளவு பொறுமையும், அன்பும் உள்ளவர் என்பதைக் காட்டுகிறது.

மனிதர்களைப் பிடிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீன்களைப் பிடிப்பதற்காகச் சென்றபோது அவர்கள்மேல் கோபப்படாமல் 

அவர்களைத் திருத்துவதற்காகத் தந்தைக்குரிய பாசத்துடன் "பிள்ளைகளே"  என்று அழைத்தார்.

தவறுகள் செய்வது மனித இயல்பு, மன்னித்துத் திருத்துவது தெய்வீக இயல்பு.

To err is human, to forgive is divine.

தான் பாடுகள் பட்டு மரிக்கப் போவதையும்,

மூன்றாம் நாள் உயிர்க்கப் போவதையும் பல முறை முன்னறிவித்திருந்தும் சீடர்கள் அவர் உயிர்த்ததை நம்பவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கல்லறைக்கு வந்த பெண்களிடம் இருந்த தைரியம் கூட சீடர்களிடம் இல்லை.

பெண்கள் யாருக்கும் பயப்படவில்லை.

சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து வீட்டின் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தார்கள்.

இப்போது இயேசு உயிர்த்து விட்டார் என்று தெரிந்த பின்

தாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விட்டு விட்டு வந்திருந்த தொழிலுக்கே திரும்ப வந்திருக்கிறார்கள்.


நமது கண்ணோக்கில் பார்த்தால் ஆண்டவருக்கு அவர்கள் மேல் கோபம் வந்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்குரிய அறிகுறியே ஆண்டவரிடம் இல்லை.

எதிர் மாறாக அவர்களுக்கு மீன் கிடைக்க வலையை எங்கே வீச வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.

தச்சர் மீனவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார்!

அவர்களுக்கு அன்புடன் உணவும் கொடுக்கிறார்.

அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கிறார்.

கடவுளாகையால் அவர் தனது பண்புகளில் அளவில்லாதவர்,

அளவில்லாத அன்பு,
அளவில்லாத இரக்கம்,
அளவில்லாத பொறுமை,
அளவில்லாத ஞானம்.

இவ்வளவு நம்பிக்கை இல்லாதவர்களாக சீடர்கள் நடந்து கொண்டாலும்,

இந்தக் காட்சியின் போது தான்
இயேசு இராயப்பரிடம்

"என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்.

என் ஆடுகளை மேய்.

என் ஆடுகளைப் பேணிவளர்.

என்று கூறி தனது திருச்சபையின் முழுத் தலைமைப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கிறார்.

நமக்கு இன்னொன்றும் புரிகிறது,

திருச்சபையின் நிர்வாகப் பொறுப்பை இராயப்பரிடம் ஒப்படைத்திருந்தாலும்

உலகின் இறுதி வரை திருச்சபையுடன் இருந்து அதை வழி நடத்தப் போவது இயேசுவும், பரிசுத்த ஆவியும் தான்.

தான் உடலோடும், ஆன்மாவோடும் உலக முடிவு வரை நம்மோடு இருப்பதற்காகத் தான் குருத்துவத்தையும், திவ்ய நற்கருணையையும் ஏற்படுத்தினார்.

இன்று திருச்சபையை ஆள்வது பாப்பரசரும்,  ஆயர்களும், குருக்களுமாக இருந்தாலும்

அவர்களை வழி நடத்துவது கடவுள் தான்.

இதை நமக்குப் புரிய வைப்பதற்காகத்தான் சாதாரண மனிதர் கையில் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.

வெளிப்படையாக நம்மை வழி நடத்தும் ஆயர்களும், குருக்களும் நம்மிடையே பிறந்து வளர்ந்த நம்மவர்கள்.

நம்மிடம் உள்ள  குறைபாடுகள் அவர்களிடமும் இருக்கலாம்,

சீடர்களிடம் இருந்தது போல.

ஆனால் உள்ளிருந்து அவர்களை வழி நடத்துவது இயேசுவும் பரிசுத்த ஆவியானவரும் தான்.

ஆகவே நாம் அவர்கள் சொற்படி நடக்கும் போது கடவுள் சொற்படி தான் நடக்கிறோம்.

இதை நமக்குப் புரிய வைப்பதற்காகத்தான் சீடர்கள் மீன் பிடிக்கப் போனபோது இயேசு அவர்களிடம் தந்தைக்குரிய பாசத்துடன் நடந்து கொண்டார்.

மனிதர்கள் மாறலாம்.

கடவுள் மாறாதவர்.

அன்று சீடர்களைத் தேர்ந்தெடுத்த அதே இயேசு தான் இன்று நமது குருக்களையும், ஆயர்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஆகவே அவர்களில் நமது ஆண்டவரைப் பார்ப்போம்.

அவர்கள் காட்டும் வழி நடப்போம்.

நாம் நிலை வாழ்வு பெறுவது உறுதி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment