Monday, April 22, 2024

'"என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்."(அரு. 12:45)

"என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்."
(அரு. 12:45)

இயேசுவைக் காண்பவர்கள் தந்தை இறைவனைக் காண்கிறார்கள்.

ஏனெனில் இருவரும் ஒரே கடவுள்.

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.

மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம்.

பரிசுத்த தம திரித்துவத்தைப் நமக்கு ஏற்கனவே தெரியும்.

தெரிந்ததைப் பற்றி புதிதாக ஒரு கட்டுரை எதற்கு?

ஒரே உண்மையை வித்தியாசமான கோணங்களில் இருந்து பார்க்கலாம்.

இக்கட்டுரையில் நமது கோணத்திலிருந்து பரிசுத்த தம திரித்துவத்தைப் பார்ப்போம்.

From our point of view.

நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆள்.

ஒரே ஆளுக்குள் மூன்று தத்துவங்கள்.

மூன்று தத்துவங்கள் ஒரே ஆள்.

தம திரித்துவம், ஒரே கடவுள் மூன்று ஆட்கள்.

மனிதன், ஒரே ஆள், மூன்று தத்துவங்கள்.

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்று தத்துவங்களை உடையவன் தான் ஒரு மனிதன்.

 கடவுளில் மூன்று ஆட்களுக்கும் ஒரே பண்பு.

மனிதனில் மூன்று தத்துவங்களுக்கும் ஒரே........?

ஒரே என்ன?

நமது மூன்று தத்துவங்களும் ஒரே என்னவாக இருந்தால் நாம் கடவுளின் சாயலைக் கொண்டிருப்போம்?

நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருந்தால்,

அதாவது,

நாம் சிந்திப்பதைச் சொல்லி, சொன்னதைச் செய்தால் 

நாம் கடவுளின் சாயலைக் கொண்டிருப்போம்.

உள்ளொன்றை வைத்துக் கொண்டு,

வேறொன்றை சொல்லி,

இன்னொன்றைச் செய்தால் கடவுளின் சாயல் இல்லை.

அரசியல் வாதிகளை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.

உள்ளத்தில்,

தேர்தலில் வென்று, பதவியில் அமர்ந்து பணம் சம்பாதிக்க வேண்டும். வசதியாக வாழ வேண்டும்.

சொல்லில்,

விலைவாசியைக் குறைப்போம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்.

செயலில்.

மக்களிடமிருந்து அதிக வரி வசூலிப்பார்கள்.  அவர்கள் வசதியாக வாழ்வார்கள்.

சிந்தித்ததைச் செயல்படுத்துவார்கள்.

ஆனால் 

சிந்தித்ததைச் சொல்ல மாட்டார்கள். சொன்னதைச் செய்ய மாட்டார்கள்.

அரசியல்வாதிகளிடம் கடவுளின் சாயல் இல்லை.

நாம் கிறிஸ்தவர்கள். நம்மிடம் கடவுளின் சாயல் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்ப்போம்.

இயேசுவின் போதனைகள் நமது சிந்தனையில் இருக்க வேண்டும்.

அவைகளே நமது சொல்லிலும் செல்லிலும் இருக்க வேண்டும்.

உங்கள் விரோதிகளை நேசியுங்கள்.

இது இயேசுவின் போதனை.

நம்மை பகைப்பவர்களை நாம் நேசிக்கின்றோமா?

சிந்தனையில் அவர்களை நேசிக்காதவர்களின்    ஆன்மீக வாழ்வு ஆரம்பிக்கவேயில்லை.

மனதில் பகையை வைத்துக் கொண்டு "நேசிக்கிறேன்" என்று சொல்பவர்கள் நடிகர்கள்.

சிந்தனையில் உள்ளது தான் செயலில் வரும்.

ஆனால் சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒத்து வராதவர்களிடம் கடவுளின் சாயல் இருக்க முடியாது.

கடவுளின் சாயல்  இருந்தால் தான்  அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ முடியும்.

ஆகவே இயேசுவின் போதனையை சிந்தனையில் கொள்வோம்.

அதையே பேசுவோம்.

அதையே செய்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வு நமக்குத் தான்.

திருப்பலிக்குச் செல்கிறோம்.

திருப்பலி நேரத்தில் கூட்டத்தோடு கூட்டமாகச் செபம் சொல்கிறோம்,

பாட்டுப் படிக்கிறோம், வாயினால்.

சிந்தனை வேறு எங்காவது இருந்தால்?

நாம் சொல்வது செபமும் அல்ல,
படிப்பது பாட்டும் அல்ல, வெறும் சப்தம்.

"நித்திய துதிக்குரிய" பாடி திவ்ய நற்கருணையை ஆராதிக்கிறோம்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் ஆராதனை உணர்வு இருக்க வேண்டும்.

சிந்தனையிலும், சொல்லிலும் செப வார்த்தைகள்.

செயலில்?

திவ்ய நற்கருணையை ஆராதிக்கும்போது முழந்தாள் படியிட்டிருக்க வேண்டும்.

தூங்கும் போது படுத்த நிலை.

நடக்கும் போது நிமிர்ந்த நிலை.

சாப்பிடும் போது அமர்ந்த நிலை.

இறைவனை ஆராதிக்கும்போது முழந்தாள் படியிட்ட நிலை.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றுபட்ட நிலையைச் சத்தியம் என்கிறோம்.

நல்லதை நினைத்து, நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்பவனைச் சத்தியவான் என்கிறோம்.

அரசியலிலும் அது இருக்க வேண்டும் என்று காந்தி சொன்னார்.

ஆன்மீகத்தில் அப்படி இருக்க வேண்டும் என்று நம் ஆண்டவர் விரும்புகிறார்.

ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment