Wednesday, April 24, 2024

"நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்."(அரு. 14:14)

"நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்."
(அரு. 14:14)



"எங்கள் வங்கியில் எவ்வளவு பணம் கேட்டு விண்ணப்பித்தாலும் உடனே கொடுக்கப்படும்,

கடனாக அல்ல, இலவசமாக.

என்ன காரணத்திற்காக என்ற விபரம் மட்டும் கொடுக்கப்பட வேண்டும்."

என்று ஒரு வங்கி விளம்பரம் செய்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

வங்கியின் முன் எவ்வளவு கூட்டம் அலை மோதும்!

"நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்."

என்று சர்வ வல்லவரான கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

வங்கியில் குறிப்பிட்ட அளவு தான் பணம் இருக்கும்.

ஆனால் அளவு கடந்த செல்வத்துக்கு உரிமையாளர் கடவுள்.

காலம் மாறும் போது வங்கியின் நடவடிக்கைகள் மாறும்.

ஆனால் இறைவன் என்றும் மாறாதவர்.

சொன்ன சொல் தவறாதவர்.

பணத்திற்காக வங்கியின் முன் அலை மோதுபவர்களில் எத்தனை பேர் அருளுக்காக இறைவன் முன்னால் 
அலை மோதுகிறோம்?

அவர் சொன்னதை நம்பி நம்மில் எத்தனை பேர் அவர் பெயரால் நமக்கு வேண்டியதை எல்லாம் கேட்கிறோம்?

"நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்."

நீங்கள், நாம்.


என் பெயரால், 
இயேசுவின் பெயரால்.

இயேசு நமக்காகப் பட்ட வேதனை மிகுந்த பாடுகளின் பெயரால்.

இயேசுவின் சிலுவை மரணத்தின் பெயரால்.

எதைக் கேட்டாலும், 
நாம் ஆன்ம சரீரத்தோடு இவ்வுலகில் வாழ்கிறோம்.

நமக்கு இரண்டு விதமான உதவிகள் ஒரே நோக்கத்திற்காகத் தேவைப் படுகின்றன.

நமது ஆன்மீக மீட்புக்குத் தேவையான இறைவனது அருள் சார்ந்த உதவிகள்.

நமது உடல் நலனுக்குத் தேவையான பொருள் சார்ந்த உதவிகள்.

இரண்டிற்கும் ஒரே நோக்கம் தான், விண்ணகப் பாதையில் வேக நடைபோட.

நாம் எந்த உதவியைக் கேட்டாலும் இறைவன் கட்டாயம் செய்வார்.

நமது ஆன்மா வாழ்வதுவிண்ணக‌ வாழ்வுக்காக.

நமது உடல் வாழ்வது ஆன்மீக வாழ்வில் நமது ஆன்மாவுக்கு உதவிகரமாய் இருப்பதற்காக.

ஆன்மா ஆன்மீக காரியங்களைச் சிந்திப்பதற்காக.

உடல் நமது சிந்தனையைச் சொல்லிலும், செயலிலும் வெளிப் படுத்துவதற்காக.

நாம் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் ஆன்மீக வாழ்க்கை வாழ வேண்டும்.

ஆன்மீக வாழ்க்கை வாழ ஆண்டவரின் அருளுதவி வேண்டும்.

ஆண்டவரின் அருளுதவி இல்லாமல் நம்மால் உலகில் ஆன்மீக வாழ்வு வாழ முடியாது.

ஆன்மீக வாழ்வு வாழாமல் நம்மால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது.

இது நமக்குத் தெரியும்.

விண்ணக வாழ்வுக்காகத்தான் நாம் ஒவ்வொரு வினாடியும் வாழ்கிறோம்.

இதுவும் நமக்குத் தெரியும்.

நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் கடவுளுடைய அருள் உதவி நமக்குத் தேவை.

இதுவும் நமக்குத் தெரியும்.

தெரிந்தும் தெரியாதவர்கள் போல் வாழ்கின்றோம்.

இறைவாக்கை வாசித்த பிறகாவது தெரிந்ததைச் செயல் படுத்த ஆரம்பிக்கலாமா?

"ஒவ்வொரு வினாடியும் என் நலன் கருதி என்னுள் வாழும் என் தெய்வமே,

"என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்." என்று வாக்குக் கொடுத்தவரே,


தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே அதிகாலையில் படுக்கையை விட்டு எழுகிறேன்.

பகல் முழுவதும் உம் பெயரால் உமக்காகவே நான் வாழ அருள் புரிய வேண்டுகிறேன்.

நான் விடும் ஒவ்வொரு மூச்சும் உமக்காக.

என் மனதில் எழும் ஒவ்வொரு எண்ணமும் உமக்காக.

எனது ஒவ்வொரு அசைவும் உமக்காக.

உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் உமக்காக.

நடக்கும் நடையும் உமக்காக.

செய்யும் பணியும் உமக்காக.

எனது நினைவிலும், சொல்லிலும், செயலிலும் உமக்காகவே வாழ ஆசைப்பட்டாலும்

சுயமாக என்னால் ஒன்றும் செய்ய இயலாது.

ஒவ்வொரு வினாடியும் உமது அருளால் என்னை நிரப்பும்.

உமது அருளின் உதவியால் உமக்காக வாழ்வேன்.

நீண்ட நாள் வாழ வரம் கேட்கவில்லை.

பூரண சுகத்துடன் வாழ வரம் கேட்கவில்லை.

எவ்வளவு காலம் வாழ்ந்தாலும்,
எத்தகைய உடல்நலத்துடன் வாழ்ந்தாலும்

பாவமின்றி, பரிசுத்தனாய் வாழ வரம் தாரும்.

ஒவ்வொரு வினாடியும் எனது விண்ணகப் பாதையில் என்னை வழி நடத்தும்.

இவ்வுலகில் உமது விருப்பம் போல் வாழவும்,

மறுவுலகில உம்மோடு நித்திய காலம் வாழவும் வரம் தாரும்."

லூர்து செல்வம்

No comments:

Post a Comment