Wednesday, April 3, 2024

கதை கதையாம் காரணமாம்.

கதை கதையாம் காரணமாம்.

ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு பங்குச் சாமியார் இருந்தாராம்.

அந்த பங்கு மக்கள் அப்பாவிகளாம்.

அன்றன்றய உணவுக்கு அன்றாடம் வேலைக்குப் போக வேண்டிய தினக் கூலிகளாம்.

வாரத்தில் ஏழு நாட்களுமே வேலைக்குப் போவார்களாம்.

வேலை கிடைக்காத நாட்களில் மட்டும் கோவிலுக்கு வருவார்களாம்.

ஆகவே கோவில் பெரும்பாலான நாட்கள் வெறுமையாக இருக்குமாம்.

கோவிலுக்கு வரும் ஒரு சிலரும் வேலைக்குப் போக முடியாத பாட்டிகளாகத்தான் இருப்பார்களாம்.

அவர்களால் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாதாம், எழுந்திரித்தால் உட்கார முடியாதாம்.

சாமியாருக்கு ரொம்ப சங்கடமாக இருந்ததாம்.

கோவிலில்லா ஊரில் குடியிருக்கக் கூடாது என்பார்கள்.

ஆளில்லா கோயிலில் எப்படி குடியிருப்பது?

கோவிலுக்கு எப்படி ஆட்களை வரவழைப்பது?

கெஞ்சிப் பார்த்தும் ஆட்கள் வரவில்லை.

சத்தம் போட்டால் வருகிற ஒன்றிரண்டு பேரும் நின்று விடுகிறார்கள்.

ஒரு நாள் இரவு இதையே நினைத்துக் கொண்டு தூங்காமல் படுத்திருக்கும் போது அவர் உள்ளத்தில் ஒரு idea உதித்தது.

கோவில் முன்னால் நூறடி உயரத்துக்கு ஒரு கோபுரம் கட்ட வேண்டும்.

கோபுரத்தின் உச்சியில் அந்தோனியாரை நிற்க வைத்து விட வேண்டும்.

கோவிலைப் பார்க்க ஆட்கள் வரா விட்டாலும் கோபுரத்தைப் பார்க்க ஆட்கள் வருவார்கள்!

idea நல்லாத்தான் இருக்கு.

ஆனால் பணம்?

கோபுரம் வா என்றால் வந்து விடுமா?

ஆனால் எண்ணம் உறுதியாக இருந்தால் செயலும் உறுதியாக இருக்கும்.

ஒரு நாள் Civil engineer ஒருவரைப் பார்க்க நேர்ந்தது.

சாமியார் கோபுரம் பற்றி அவரிடம் பேசினார்.

"சுவாமி, கோபுரம் கட்டுவது என் பொறுப்பு.

வேண்டிய பொருட்களுக்கான பணத்தை மட்டும் நீங்கள் கொடுத்து விடுங்கள்."

''பணம்தானே பிரச்சினை. பங்கு மக்கள் பரம ஏழைகள்.

பங்குச் சாமியார் அவர்களை விட ஏழை."

"அப்போ ஒன்று செய்வோம். நான் வேலையை ஆரம்பித்து விடுகிறேன்.

முடித்து வைப்பது கடவுள் பொறுப்பு."

சாமியார் கோபுரம் கட்ட வேண்டிய இடத்தைக் காண்பித்தார்.

"அடுத்த வாரம் திங்கள் கிழமை வேலையை ஆரம்பித்து விடுகிறேன்."

சாமியாருக்கு திங்கள் கிழமை வரைத் தூக்கமே வரவில்லை.

திங்கள் கிழமை Engineer ம், ஆட்களும் வந்தார்கள்.

கோபுரம் கட்ட வேண்டிய இடத்தை அளந்து தோண்ட ஆரம்பித்தார்கள்.

குழி தோண்டியதைப் பார்த்தவுடன் சாமியாரின் உள்ளத்தில் வினோதமான ஒரு எண்ணம் தோன்றியது.

கோபுரத்தை மேல் நோக்கிக் கட்ட வேண்டும்.

இவர்கள் ஏன் கீழ் நோக்கித் தோண்டுகிறார்கள்?

சாமியார் அந்த எண்ணத்தைத் தோண்ட ஆரம்பித்தார், ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தார்.

கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து தான் உலகைப் படைத்தார்.

நன்மை தீமை அறியும் மரத்திலிருந்து தான் தீமை பிறந்தது.

தீமை தான் மீட்பர் பிறக்க காரணமாக இருந்தது.

மீட்பரின் பிறப்பு தான் அவருடைய இறப்புக்கு ஆரம்பமாய் இருந்தது.

இறப்பு தான் உயிர்ப்புக்குக் காரணமாக இருந்தது.

எதிர் மறைகள் தான் அர்த்தங்களாக இருக்கின்றன.

இவ்வுலகில் மரணம் = மறுவுலகில் பிறப்பு.

இவ்வுலகில் துன்பம் = மறுவுலகில் பேரின்பம்.

பந்து ஆகாயத்தை நோக்கி எழும்ப வேண்டுமா?

அதைத் தரையில் ஓங்கி அடிக்க வேண்டும்.

ஏழைகள் பாக்கியவான்கள்.

துயருறுவோர் ஆறுதல் பெறுவர். 

இயேசுவின் அரசில் எதிர்மறைகள் ஒன்றோடொன்று ஒத்துழைக்கும்.

ஆழ்ந்து சிந்தித்தால் எதிர்மறைகளே கிடையாது.

அததற்கு அததன் பணி.

இலக்கணத்தில் மேல் X கீழ்.

நடைமுறையில் கீழ் நோக்கி அஸ்திவாரம் தோண்டாவிட்டால் மேல் நோக்கி கட்டடம் கட்ட முடியாது.

அஸ்திவாரம் ஆழமாக இருந்தால்தான் உயரமாகக் கட்டடம் கட்டலாம்.

ஏழ்மை X வசதி. இலக்கணத்தில்.

நடைமுறையில் ஏழ்மை இருக்கும் இடத்தில் உழைப்பு இருக்கும்.

உழைப்பு இருந்தால் வசதி பிறக்கும்.

கடவுள் ஏன் என்னை ஒரு ஏழ்மையான கிராமத்தில் பங்குச் சாமியாராக நியமித்தார்?

உழைப்பின் மூலம் அதை முனானேற்ற.

உழைப்பேன். அனைத்து மக்களையும் ஆண்டவரிடம் அழைத்து வருவேன்.

உலக ரீதியில் ஏழ்மையான பங்கை ஆன்மீக ரீதியில் உச்சக்கட்ட பங்காக மாற்றுவேன்.

"சுவாமி." என்ஜினீயர் அழைத்தார்.

''தோண்டுங்கள். தோண்டுங்கள்.
ஆழமாகத் தோண்டுங்கள்.

கோபுரம் நூறு அடி உயர வேண்டும்."

''அதைப் பற்றிய கவலை வேண்டாம்.

அந்தோனியார் துணை நிற்பார்."

சாமியார் ஏறிட்டுப் பார்த்தார்.

பங்கு மக்கள் அநேகர் அஸ்திவாரம் தோண்டிய இடத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

சாமியார் முகம் மலர்ந்தது.

ஒருவர் ஓடி வந்து சொன்னார்,

''சுவாமி, வேலைக்கு நாங்கள் இருக்கிறோம்.

சம்பளம் வேண்டாம்.

அந்தோனியாருக்கு‌க் கோபுரம் எழும்பினால் போதும்."

சாமியாருக்கு உற்சாகம் பிறந்தது.

" முதலில் எல்லோரும் கோவிலுக்கு வாருங்கள்."

மறுநாள் காலையில் சாமியாருக்கு அவரது கண்களையே நம்ப முடியவில்லை.

பூசைக்கு நிறையப் பேர் வந்திருந்தார்கள்.

அன்று மட்டுமல்ல தினமும் வர ஆரம்பித்தார்கள்.

கோபுர கட்டுமானத்துக்கு பங்கு மக்கள் தங்கள் கஷ்டங்கள் மத்தியிலும் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்தார்கள்.

எதிர்பாராத இடங்களிலிருந்து நன்கொடைகள் வந்தன.

கோபுரம் கட்டி முடிக்கும் பொறுப்பை கடவுளே ஏற்றுக் கொண்டார்.

நல்ல மனதுடன் அவருடைய மகிமைக்காக நாம் ஆரம்பிக்கும் எந்த வேலையையும் அவரே செய்து முடிப்பார்.

நம்மிடம் இருக்க வேண்டியது விசுவாசமும், விடா முயற்சியும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment