"இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். "
(அரு. 6:10)
"அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்."
விருந்துகளில் கலந்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.
அவர்களோடு சிறுவர்களையும் சேர்க்க வேண்டும்.
அப்படிப் பார்த்தால் சாப்பிட அமர்ந்திருந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கும்.
இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு அத்தனை பேருக்கும் உணவளிக்கிறார்.
ஒன்றுமில்லாமையிலிருந்து பிரபஞ்சத்தையே படைத்த கடவுளுக்கு 10000 அப்பங்களைப் படைப்பது பெரிய காரியமல்ல.
ஆனால் இயேசு , "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று கேட்கிறார்.
அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,
"இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன." என்று கூறுகிறார்.
இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்கிறார்.
ஒன்றுமில்லாமையிலிருந்து அப்பங்களைப் படைத்து அவரால் உணவு கொடுத்திருக்க முடியும்.
பின் ஏன் "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று கேட்டார்?
அவருடைய ஒவ்வொரு செயலிலும் இரண்டு அம்சங்கள் இருக்கும்.
ஒன்று அவர் செய்யும் உதவி.
அடுத்தது அவர் நமக்குக் கற்பிக்கும் பாடம்.
இந்த நிகழ்ச்சியில் நாம் என்ன பாடம் கற்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்?
ஐந்து அப்பங்களைக் கொண்டு அத்தனை பேருக்கும் உணவளித்தவர் இயேசு தான்.
ஆனாலும் அவர் ஒரு சிறுவனிடம் இருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பயன்படுத்திக் கொண்டார்.
நாம் செய்யும் எந்த பிறர் அன்புச் செயலிலும் நமது பங்கு இருக்க வேண்டும்.
அந்த பங்கு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை.
நமது மனது நல்லதாக இருக்க வேண்டும்.
நல்ல மனதுடன் நம்மிடம் இருப்பதைக் கொண்டு பிறர் அன்புப் பணியை ஆரம்பித்தால் மீதியைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.
அன்னைத் தெரசா ஒரு பெரிய தொகையைத் திரட்டி விட்டு தனது பணியை ஆரம்பிக்கவில்லை.
ஐந்து ரூபாயுடனும், முழுமையான நல்ல மனதுடனும் தன் பணியை ஆரம்பித்தார்.
கடவுள் அவருடனிருந்து செயல் புரிந்தார்.
அவரது பணி எவ்வளவு வெற்றிகரமாக நடந்தது என்று நமக்குத் தெரியும்.
அன்னைத் தெரசாவையும், அவளிடம் இருந்த ஐந்து ரூபாயையும் கொண்டு
ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தொண்டு செய்தவர் அவள் நம்பி வாழ்ந்த நற்கருணை நாதர், நம் இயேசு.
நல்ல மனதுடன் செயல் பட்ட அன்னைத் தெரசாவைத் தனது கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
முதலில் நம்மிடம் ஆழமான இறையன்பு இருக்க வேண்டும்.
அடுத்து இறைவனால் படைக்கப்பட்ட அனைவர் மீதும் அன்பு இருக்க வேண்டும்.
நமது ஒவ்வொரு நற்செயலையும் இந்த அன்பு தான் இயக்க வேண்டும்.
நற்செயல் என்றாலே இறைவனுக்காகச் செய்யப்படும் செயல்.
இறைவனுக்காகச் செய்யப்படும் செயலின் வெற்றியை இறைவனே கவனித்துக் கொள்வார்.
நமது நல்ல மனதையும், நம்மால் இயன்ற பங்கையும் நாம் அளிக்க வேண்டும்.
நமது பங்கு அளவோடு இருக்கும்.
ஏனெனில் நாம் அளவுள்ளவர்கள்.
ஆனால் கடவுளுடைய பங்கில் அளவு இருக்காது, ஏனெனில் அவர் அளவில்லாதவர்.
கடவுளுடைய ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும்.
நாம் அளவுள்ளவர்களாக இருந்தாலும் நமது ஒத்துழைப்பு முழுமையாக இருக்க வேண்டும்.
செயலின் வெற்றியும் முழுமையாக இருக்கும்.
நமக்கு நல்ல மனது இருந்தால் கடவுள் நம்மைத் தனது கருவியாகப் பயன்படுத்திக் கொள்வார்.
நம்மிடம் உள்ளதெல்லாம் கடவுள் நமக்கு தந்தவை.
அவற்றை முழுமையாகவோ, அவற்றில் ஒரு பங்கையோ நாம் பிறர் அன்பு பணிக்கு ஒதுக்கி
இறைவன் பெயரால் பிறருக்காகச் செலவழிக்க வேண்டும்.
நமது பிறர் அன்பு பணி சிறக்க கடவுளுடைய முழு உதவியும் நமக்கு கிடைக்கும்.
நம்மை முழுமையாக பயன்படுத்த நம்மை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.
நமது அன்னை மரியாளைப்போல நாம் அர்ப்பண வாழ்வு வாழ வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment