Friday, April 5, 2024

கதை கதையாம் காரணமாம்.(தொடர்ச்சி)

கதை கதையாம் காரணமாம்.
(தொடர்ச்சி)

இறை இயேசுவில் அன்பர்களே,

பிறவியின் பயனை அடைந்து விட்டேன் என்று மற்றவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

இன்று நானே சொல்கிறேன்.

நான் என் பிறவியின் பயனை அடைந்து விட்டேன்.

 நமது பிறப்புக்குக் காரணமான இறைவனுக்குப் பணி புரிய நமக்குக் கிடைக்கும் வாய்ப்பே நமது பிறவியின் பயன்.

 நமது மீட்பராகிய இயேசுவாகிய வழியில் 

தாய்த் திருச்சபையின் பிள்ளைகளாகிய உங்களை வழி நடத்திச் செல்வதே கத்தோலிக்கத் திருச்சபையின் குருவானவர் என்ற முறையில் எனது கடமை.

அக்கடமையை சீருடனும் சிறப்புடனும் நிறைவேற்ற வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இறைவனுக்கு நன்றி.

எனது கடமையை நான் இயேசுவின் விருப்பப்படி நிறைவேற்ற இறை மக்களாகிய உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இரு கைகளையும் தட்டினால் தான் ஓசை வரும்.

பங்குக் குருவானவரும் மக்களும் ஒத்துழைத்தால் தான் நாம் அனைவரும் ஆன்மீகத்தில் வளர முடியும்.

நாம் கிறிஸ்தவர்கள். 

பெயருக்கு கிறிஸ்தவர்களாக இருந்தால் போதாது.

உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.

பரிசுத்தமான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.

பரிசுத்தமாக வாழ வேண்டுமென்றால் பாவமின்றி வாழ வேண்டும்.

பாவமின்றி வாழ வேண்டுமென்றால் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் குளிக்கிறோம்.

ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

திருப்பலிக்கு வருபவர்கள் திருப்பலி ஆரம்பிக்கு முன்பே கோவிலுக்கு வந்து விட வேண்டும்.

பாவமில்லாத உள்ளத்தோடு தகுந்த தயாரிப்புடன் நற்கருணையை நாவில் வாங்க வேண்டும்.

நம்மைப் படைத்த கடவுளை ஆரஞ்சு வில்லையை வாங்குவது போல கையில் வாங்கக் கூடாது.

நாளை மறுநாள் கோடி அற்புதர் புனித அந்தோனியார் கோபுரத் திறப்பு விழா.

கோபுரத்தைக் கட்ட உதவிய இறைவனுக்கும்,

கட்டுமானப் பணியில் முழுமனதுடன் ஈடுபட்ட என்ஜினீயர் மற்றும் குழுவினர்க்கும்,

ஒத்துழைத்த இறை மக்களுக்கும்,

கேளாமலேயே பொருளுதவி செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திறப்பு விழாவில் பரிசுத்தமான உள்ளத்தோடு அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும்.

அதற்கு உதவியாக நாளை காலை 10 மணி முதல் தியானம் இருக்கும்.

தியானத்தின் போது அனைவரும் நல்ல முறையில் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்பவர்கள் மட்டுமே விழாப் பூசையில் திவ்ய நற்கருணை வாங்க வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்யாதவர்கள் நன்மை வாங்கக் கூடாது.

பாவத்தோடு நற்கருணை விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்."

கையில் ஒரு பைசா கூட இல்லாமல்,

இறைவனுடைய உதவியால் மட்டும் 100 அடி உயர கோபுரத்தைக் கட்டி முடித்துவிட்ட சாமியாரின் உற்சாகம் மக்களையும் தொற்றிக் கொண்டது.

கைகளைத் தட்டித் தங்கள் உற்சாகத்தைத் தெரிவித்தார்கள்.

மறுநாள் தியானத்தில் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

அனைவரும் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்தார்கள்.

அனைவரும் நற்கருணை நாதரைத் தங்கள் உள்ளத்தில் வரவேற்றார்கள்.

கோபுரத் திறப்பு விழாவிலும் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

அன்று மட்டுமல்ல, அதற்குப் பின் அனைத்து நாட்களிலும் தினசரி பூசைக்கு வர ஆரம்பித்தார்கள்.

உலகச் செல்வத்தைப் பொறுத்த மட்டில் ஏழைகள் வாழும் பங்கு

ஆன்மீகச் செல்வத்தைப் பொறுத்த மட்டில் செல்வந்தர்கள் வாழும் பங்காக மாறிவிட்டது.

இறைவனுக்கு நன்றி.

Deo gratias!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment