இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
(லூக்கா நற்செய்தி 24:39,40)
உயிர்த்த இயேசு தனது சீடர்களுக்குக் காட்சி கொடுத்தபோது அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை.
அவர் அவர்களை நோக்கி,
"நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்?
என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்."
என்று கூறி தனது ஐந்து காயங்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
இயேசுவின் இந்த சொற்களில் ஒரு முக்கியமான மறையுண்மை மறைந்திருக்கிறது.
அவரது வார்த்தைகளைச் சிறிது தியானித்தால் அந்த உண்மை முற்றிலும் வெளிப்படும்.
நாம் தோமையாரைச் "சந்தேகத் தோமையார்" என்று அழைப்பது வழக்கம்.
"அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்ற அவரது வார்த்தைகளே அதற்குக் காரணம்.
ஆனால் அவரது இந்த வார்த்தைகளே நமது ஆன்மீக வாழ்வுக்கு அடித் தளமான மறையுண்மையை நாம் அறியக் காரணமாக இருந்தன.
சிலுவையில் அறையப்பட்டு இறந்த இயேசு உயிர்த்து விட்டார்.
உண்மைதான்.
ஆனால் நாம் உயிர்த்த இயேசுவைப் பார்க்கும்போது
சிலுவையில் மரித்த இயேசுவை மறந்து விடக்கூடாது என்பதற்காக சிலுவையில் அவருக்குக் கிடைத்த ஐந்து காயங்களோடே உயிர்த்தார்.
தான் தான் இயேசு என்பதற்கு அடையாளமாகத் தனது ஐந்து காயங்களைத் தான் அவர் காண்பித்தார்.
நமது மீட்பர் ஐந்து காய இயேசு.
ஐந்து காயங்கள் இல்லையேல் மீட்பு இல்லை.
இது தான் இயேசுவின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் மறை உண்மை.
ஐந்து காயங்கள் இல்லையேல் உயிர்ப்பு கூட இல்லை.
ஒரு முறை ஞானோபதேச வகுப்பில் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
"இறுதி நாளில் நாம் உயிர்த்து மோட்சத்திற்குப் போக வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?"
ஒரு மாணவன் துடிப்போடு சொன்னான்,
"முதலில் நாம் சாக வேண்டும்."
சரியான பதில்.
இயேசுவே அதைத் தான் செய்தார்.
வெள்ளிக்கிழமை மரித்தார்.
ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தார்.
மரணம் இல்லையேல் உயிர்ப்பு இல்லை.
ஐந்து காயங்கள் இல்லையேல் மரணம் இல்லை.
முதலில் ஐந்து காயங்கள்,
அடுத்து மரணம்,
அடுத்து உயிர்ப்பு.
ஐந்து காயங்கள் இயேசு பட்ட பாடுகளுக்கு அடையாளம்.
நாம் கிறிஸ்தவர்களாக
(கிறிஸ்து அவர்களாக)
வாழ வேண்டும் என்றால்
நமது உடலில் இயேசுவின் உடலில் இருந்தது போல காயங்கள் இருக்க வேண்டும்,
அதாவது நாமும் அவரைப் போல பாடுகள் பட வேண்டும்.
பாடுகள் தான் நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு சான்று.
துன்பங்கள் எதுவும் இன்றி வாழ விரும்புகிறவன் கிறிஸ்தவனாக வாழ விரும்பவில்லை.
கிறிஸ்தவனாக வாழ விரும்பாதவன் சாத்தானுக்கு அடிமையாக வாழ விரும்புகிறான்.
இரண்டும் இல்லாத இடைநிலை வாழ்க்கை வாழ முடியாது.
தங்களை ஒறுத்து, தங்கள் சிலுவையைச் சுமந்து கொண்டு செல்பவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்களாக வாழ முடியும்.
இயேசுவின் சீடர்களுக்கு மட்டுமே அவரோடு நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு உண்டு.
இந்தியாவின் அப்போஸ்தலர் புனித தோமையர்.
நாம் இந்தியர்கள்.
ஆகவே அவர் நமது அப்போஸ்தலர்.
அவரது சிந்தனை ஓட்டம் நம்மிடம் இருக்க வேண்டும்.
நம்மை நாமே பார்க்கும் போது நமது கண்களுக்கு நாம் கிறிஸ்தவர்களாகத் தெரிய வேண்டுமென்றால்
நமது தோளில் இயேசுவின் சிலுவை தெரிய வேண்டும்.
நம்மை நாமே உற்று நோக்குவோம்.
நாம் சிலுவையை நேசித்தால்,
அதைச் சுமந்து கொண்டு வாழ்ந்தால்
நாம் கிறிஸ்தவர்கள்.
முதலில் நாம் கிறிஸ்தவர்களா என்பதைக் கண்டறிவோம்.
அப்புறம் மற்றவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்ற முயல்வோம்.
நடக்கத் தெரிந்தவனால்தான் நடைப்பயிற்சி கொடுக்க முடியும்.
ருசி பார்க்கத் தெரிந்தவனால்தான் ருசியாகச் சமைக்க முடியும்.
பாடம் தெரிந்தவரால்தான் பாடம் நடத்த முடியும்.
துன்பத்தை சிலுவையாக ஏற்றுக் கொள்பவரால்தான் இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியும்.
இயேசுவை ஏற்றுக் கொள்பவரால் தான் அவரை மற்றவர்களுக்கு அளிக்க முடியும்.
இயேசுவை மற்றவர்களுக்கு அளிப்பவர்கள் அவரது சீடர்கள்.
தோமையாரின் கண் நோக்கிலிருந்து நாம் இயேசுவின் சீடர்களா என்பதைக் கண்டறிவோம்.
இயேசுவின் காயங்களைப் பெறுவோம்,
அவரது சீடர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment