(தொடர்ச்சி)
மூன்று நாட்கள் மகனைத் தேடி மூன்றாம் நாள் அவரைக் கோவிலில் கண்டு பிடித்த
மரியாள் அவரை நோக்கி,
"மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.
அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.
இயேசு அவரது தந்தையின் சித்தப்படி நடந்தார்.
மரியாள் ஒரு நல்ல கிறிஸ்தவள் செய்ய வேண்டியதைச் செய்தாள்,
இயேசுவைத் தேடினாள்.
நமது ஆன்மீக வாழ்விலும் இதே போன்ற சூழ்நிலை ஏற்படுவதுண்டு.
எவ்வளவு பக்தியாக இருந்தாலும் சில சமயங்களில் இயேசுவைக் காணாதது போன்ற உணர்வு ஏற்படும்.
அவரைப்பற்றி தியானிக்க முடியாதபடி மனதில் இருள் தோன்றும்.
அப்போது சோர்ந்து விடக்கூடாது.
கோவிலிலுக்குச் சென்று திவ்ய நற்கருணைப் பேழையைப் பார்த்துக் கொண்டிருந்தாலே இருள் விலக ஆரம்பித்து விடும்.
நாம் அவரைத் தேடிப் போக வேண்டும் என்பதற்காகவே இயேசுவே இப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்துவார்.
நாம் மரியாளைப் போல இயேசுவைத் தேடி கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
வாழ்க்கையின் எந்த அந்தஸ்தைத்ன தேர்ந்தெடுத்தாலும் இறைவன் சித்தப்படி வாழ வேண்டியது நல்ல கிறிஸ்தவனின் கடமை.
மரியாள் திருமண அந்தஸ்தில் வாழ்ந்தாலும் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.
ஆகவே அவள் கன்னியாய் வாழ வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.
மரியாளும் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்ந்தாள்.
யார் யார் எப்போது பிறக்க வேண்டும், எப்போது இறக்க வேண்டும் என்பது இறைவனின் திட்டம்.
அதன்படி அவருக்கு மரணம் நெருங்கிய போது அவரைச் சாக விடாமல் காப்பாற்றும்படி கடவுளாகிய தன் மகனிடம் மரியாள் வேண்டவில்லை.
சூசையப்பர் இறைமகன் இயேசுவின் மடியில் தலை வைத்து பாக்கியமான மரணம் அடைந்தார்.
ஆகவே சூசையப்பரை நல்ல மரணத்தின் பாதுகாவலராக நமது தாய்த் திருச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
இயேசுவுக்கு 30 வயது நடக்கும் போது அன்னை மரியாள் தன் மகனைப் பொது வாழ்வுக்கு அர்ப்பணித்து விட்டாள்.
இயேசுவின் பொது வாழ்வின் ஆரம்பித்தில் அன்னை மரியாள் இயேசுவோடு கானாவூர் திருமணத்தில் கலந்து கொண்டாள்.
இயேசுவின் தாயாக மட்டுமல்ல ஒரு நல்ல கிறிஸ்தவளாக அவள் செய்ய வேண்டிய பணியைச் செய்தாள்.
வெறும் விருந்தாளியாக மட்டுமல்ல பிறர் சிநேகம் மிக்க ஒரு நல்ல கிறிஸ்தவளாகச் செயல் பட்டாள்.
அவள் அப்படிச் செயல் பட்டிருக்கா விட்டால்
திருமண வீடு விருந்தினருக்கு திராட்சை ரசம் கொடுக்க முடியாத குடும்பம் என்ற கெட்ட பெயர் வாங்கியிருக்கும்.
அதைக் காப்பாற்றிய பெருமை பிறரன்பு மிகுந்திருந்த அன்னை மரியாளையே சேரும்.
"இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்." என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.
(12:46)
இயேசுவின் மூன்று ஆண்டு கால பொது வாழ்வின் போது இதே போன்று பல முறை மகனைப் பார்க்கச் சென்றிருக்கலாம்.
இயேசுவின் பாடுகளின் போது அவருடைய சீடர்கள் அவரை விட்டு ஓடிப்போய் விட்டார்கள்.
ஆனால் அன்னை மரியாள் ஆரம்பம் முதல் முடிவு வரை இயேசுவோடு இருந்தாள்.
அவரது வேதனை மிகுந்த பாடுகளை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தாள்.
இறந்த இயேசுவை அவளது மடியில் கிடத்தியபோது
"இது என் உடல், என் இரத்தம்"
என்ற எண்ணம் அவள் மனதில் உதித்திருக்கும்.
தாயிடமிருந்து பெற்றதுதானே மகனின் உடலும் இரத்தமும்.
தனது உடலையும், இரத்தத்தையும் உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாக இறைத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்த ஒரே கிறிஸ்தவள் அன்னை மரியாள் தான்.
அவளைப் பின் பற்றி நாம் இந்த செபத்தை அடிக்கடி சொல்வோம்.
''நித்திய பிதாவே,
உமது திருமகனும், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும்
எங்கள் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக
உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
நித்திய பிதாவே, உமது திருமகனின் வேதனை மிகுந்த பாடுகளைப் பார்த்து
எங்கள் மேலும்,
எங்கள் குடும்பத்தின் மேலும்,
அகில உலகத்தின் மேலும்
இரக்கமாயிரும்."
இயேசு உயிர்த்து விண்ணெய்திய பின்
தனது மரணம் வரை அப்போஸ்தலர்கள் கூட இருந்து தாய் போல அவர்களை வழி நடத்தினாள்.
அப்போஸ்தலர்கள் மேல் பரிசுத்த ஆவி இறங்கிய பெந்தகோஸ்தே நாளன்று அன்னை மரியாளும் அவர்களுடன் இருந்தாள்.
சிலுவையடியில் அன்னை மரியாள் நின்று கொண்டிருந்தபோது அருளப்பர் மூலமாக அவளை இயேசு தனது திருச்சபைக்கே தாயாக்கினார்.
இன்று நமது சார்பாகத் தனது மகனிடம் பகிர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அன்னை மரியாள் முதல் கிறிஸ்தவள் மட்டுமல்ல,
எல்லாரையும் விட மிக நல்ல கிறிஸ்தவள்.
Mother Mary is not only the first Christian, but the best Christian ever lived.
நாம் பின்பற்ற வேண்டிய மிகச்சிறந்த முன்மாதிரிகை.
She is the best example for us to follow.
தாயைப் போல பிள்ளை என்ற பழமொழியை மெய்யாக்குவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment