(அரு. 6:20)
" நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்.
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று சீடர்களைப் பார்த்து இயேசு கூறிய வார்த்தைகள் நமக்கும் பொறுந்தும்.
ஏனெனில் நாமும் அவருடைய சீடர்களே.
சீடர்கள் என்ற முறையில் நாம் இரண்டு விதமான காரியங்களைச் செய்கிறோம்.
முதலில் நாம் இயேசுவின் நற்செய்தியை வாழ்கிறோம்.
அடுத்து அதை மற்றவர்களுக்கு நமது சொல் மூலமாகவோ, செயல் மூலமாகவோ அறிவிக்கிறோம்.
நமது இந்த இரண்டு செயல்களிலும் இயேசு நம்மோடு இருக்கிறார்.
ஒவ்வொரு வினாடியும் அவர் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துகிறார்.
சில சமயங்களில் அவர் நம்மோடு இருப்பதை உணர்வோம்.
சில சமயங்களில் எம்மாவு நகருக்குச் சென்ற சீடர்களோடு சென்றது போல நாம் அறியாமலே நம்மோடு வருவார்.
உதாரணமாக நமக்கு சுகமில்லை என்று வைத்துக் கொள்வோம்.
நம்மை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
மருத்துவர் வடிவிலும், நர்ஸ் வடிவிலும், மருந்துக் கடைக்காரர் வடிவிலும் நம்மைக் கவனித்துக் கொள்பவர் இயேசுவே.
நாம் அனைவரிலும் இயேசுவைப் பார்க்க வேண்டும்.
அனைவரிலும் இயேசுவைப் பார்த்தால் நமது மனதில் நிம்மதி இருக்கும்.
என்ன நேர்ந்தாலும்,
நோய் குணமானாலும்,
குணமாகா விட்டாலும்
அதை இயேசுவின் சித்தம் என்று அமைதியோடு ஏற்றுக் கொள்வோம்.
"நான்தான், அஞ்சாதே" என்று இயேசு கூறுவது நமது காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
ஒரு குழந்தை தன் தாயின் மடியில் இருப்பது போல
நாமும் இறைவன் பிரசன்னத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம்.
இறைப் பிரசன்னத்தில் வாழ்பவர்கள் விண்ணக வாழ்வை முன்ருசி பார்ப்பார்கள்.
Those who live in God's presence will have a pretaste of eternal life.
ஏனெனில் விண்ணகத்தில் இறைவனை முகம் முகமாக தரிசித்துக் கொண்டு தான் வாழப் போகிறோம்.
உலகில் வாழும் போது முகம் முகமாகத் தரிசிக்க முடியா விட்டாலும் அந்த உணர்வோடு வாழலாம்.
இரவில் படுக்கப்போகும் போது தலையணையை இயேசுவின் மடியாகக் கற்பனை செய்து கொள்வோம்.
நிம்மதியான தூக்கம் வரும்.
காலையில் எழும்போது இயேசுவின் ஞாபகம் தான் முதலில் வரும்.
அந்த ஞாபகம் பகல் முழுவதும் இருந்தால் நாம் இயேசுவுக்குப் பிடித்தமானதையே செய்வோம்.
நாம் சந்திக்கும் நமது அயலானுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம்.
நமக்கு எதிராகச் செயல்படுபவர்களை மன்னிப்போம்.
நமக்குத் தீங்கு செய்பவர்களுக்கு நன்மை செய்வோம்.
நம்முள் வாழும் இயேசு நமது மூலமாக செயல் புரிந்து கொண்டிருப்பார்.
நம்மைப் பார்ப்போர் இயேசுவைப் பார்ப்பார்கள்.
நமக்கு கஷ்டங்கள் வந்தால்,
"அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கிறேன்"
என்று இயேசு நம்மை உற்சாகப் படுத்துவார்.
எல்லோரையும் இயேசு அவரது சாயலில் தான் படைத்திருக்கிறார்.
ஆகவே நாம் யாரைப் பார்த்தாலும் அவர்களில் இயேசுவின் சாயலை மட்டும் பார்ப்போம்.
பார்ப்பவர்களை எல்லாம் நேசிப்போம்.
யாரையாவது பார்த்து நாம் பயந்தாலும்,
"நான்தான், அஞ்சாதீர்கள்" என்ற குரல் நமது காதில் விழும்.
எல்லோரிலும் நாம் இயேசுவைப் பார்த்தால்
உலகில் நாம் யாருக்கும் பயப்பட மாட்டோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment