Monday, April 8, 2024

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."(அரு. 3:17)



"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."
(அரு. 3:17)

இறைமகன் மனுமகனாகப் பிறந்ததின் ஒரே நோக்கம் மனித குல மீட்பு.

தான் உலகுக்கு வந்ததன் நோக்கம் 

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல

என்று இயேசுவே சொல்கிறார்.

அப்படியானால் இயேசுவின் இரண்டாவது வருகையும், இறுதித் தீர்ப்பும்?

கடவுள் மனிதரைப் படைக்கும் போதே தேர்ந்தெடுக்கும் உரிமையோடு (Freedom of choice) படைத்துவிட்டார்.

பாவமா, புண்ணியமா விருப்பப் பட்டதை தேர்ந்தெடுக்க முழு உரிமை மனிதருக்கு உண்டு.

எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதன் விளைவோடு சேர்த்து தான் தேர்ந்தெடுக்கிறான்.

புண்ணியத்தின் விளைவு நித்திய பேரின்பம்.

சாவான பாவத்தின் விளைவு நித்திய பேரிடர்.

செயலிலேயே விளைவு (தீர்ப்பு)
அடங்கியிருக்கிறது.

"அவர்மீது நம்பிக்கை கொள்வோர்
(புண்ணிய வாழ்வு வாழ்வோர்)

 தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை;


ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் (பாவத்தைத் தேர்ந்தெடுப்போர்)

ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.

மனிதர்கள் நற்செயலைத் தேர்ந்தெடுக்கும் போது அதற்கான சம்பாவனையையும் அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்.

 பாவத்தை தேர்ந்தெடுக்கும் போது அதற்கான பேரிடர் வாழ்க்கையும் அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்.


" உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; 

உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். 

 மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. 

எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். 
(சீராக்கின் ஞானம் 15:16,17)

ஆக கடவுள் யார் மீதும் தண்டனைத் தீர்ப்பிடுவதில்லை,

மனிதர்கள் தங்கள் தீர்ப்பைத் தாங்களே தேர்வு செய்து கொள்கிறார்கள்.

இயேசுவின் இரண்டாவது வருகையின் போது மரித்தோர் அனைவரும் உயிர்த்தெழுவர்.

அவர்கள் மரித்த போதே தங்கள் தங்கள் வாழ்க்கை நிலையை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

நல்லவர்கள் மோட்சத்துக்கும் கெட்டவர்கள் நரகத்திற்கும் சென்றிருப்பார்கள்.

அப்போது ஆன்மாவுடன் மட்டும் சென்றவர்கள் 

உயிர்த்தபின் 

ஆவியின் தன்மையை அடைந்த உடலோடும், (Spiritual body) ஆன்மாவோடும்

 தாங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த நிலைக்குத் திரும்புவார்கள்.

இதற்கு நமது கணக்குப்படி ஒரு வினாடி கூட ஆகாது. 

இறுதித் தீர்ப்பு நாளை நமது உலக வழக்கப்படி நாமே கற்பனை செய்து பார்க்கக் கூடாது. 

மரித்தபின் நமக்கு இடமும் இல்லை நேரமும் இல்லை,

 நித்தியம் மட்டுமே உண்டு.

நல்லவர்களுக்கு அவர்களாகவே தேர்வு செய்த நித்திய பேரின்ப நிலை.

 கெட்டவர்களுக்குஅவர்களாகவே தேர்வு செய்த நித்திய பேரிடர் நிலை.

இயேசுவின் இரண்டாவது வருகையின் போது, நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்த தீர்ப்பு தான் இறுதித் தீர்ப்பாக வழங்கப் படும்.

நாம் நித்திய பேரின்ப நிலையை அடையவே இயேசு பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.

நாம் என்ன செய்ய வேண்டும்? 

முதலில் நித்திய பேரின்ப நிலையைத் தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு அதற்கு ஏற்றபடி புண்ணிய வாழ்வு வாழ வேண்டும். 

அதற்கான அருள் வரத்தை 
இறைவனிடமிருந்து கேட்டு பெற வேண்டும். 

இந்த வரத்தைத் தான்

''கேளுங்கள், கொடுக்கப்படும்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

ஆனால் நாம் இந்த ஆன்மீக வரத்தைக் கேட்காமல் உலகைச் சார்ந்த உதவிகளையே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆன்மீக வாழ்வுக்கு தேவையான அருள் வரங்களை ஆண்டவரிடம் கேட்போம்.

நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment