Tuesday, April 16, 2024

ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்."(அரு. 6:38)

ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்."
(அரு. 6:38)

பரிசுத்த தம் திரித்துவத்தின் மூன்று ஆட்களுக்கும் ஒரே விருப்பம், ஒரே வல்லமை, ஒரே ஞானம்,

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

ஏன் இயேசு "என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல" என்று கூறுகிறார்?

தந்தைக்கும் மகனுக்கும் தனித்தனியே சொந்த விருப்பங்கள் கிடையாது.

தந்தையின் விருப்பம்தான் மகனின் விருப்பம்.

மகனின் விருப்பம்தான் தந்தையின் விருப்பம்.

இருவருக்கும் ஒரே விருப்பம்.

ஒரே மாதிரியான விருப்பம் அல்ல,
ஒரே விருப்பம்.

கணவன், மனைவி இரண்டு பேர்.
இருவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருக்கலாம்,

ஒரே விருப்பம் இருக்க முடியாது,

ஏனெனில் அவர்கள் இருவர், ஒருவர் அல்ல.

இறைத் தந்தையையும், இறை மகனையும் பொறுத்த மட்டில் இருவரும் ஒரே கடவுள், ஆகவே ஒரே விருப்பம்.

ஆனால் நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்று நமக்குப் போதிப்பதற்காகவே

"என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல" என்று ஆண்டவர் கூறுகிறார்.

நாம் எப்போதும் நம்மை மையமாக வைத்து சிந்திக்கக் கூடாது,

நம்மைப் படைத்த கடவுளை மையமாக வைத்து சிந்திக்க வேண்டும்.

கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்திருக்கிறார்,

தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாம் கடவுளின் சாயல்.

கடவுள் தனது விருப்பங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாம் கடவுளையும், நமது அயலானையும் அன்பு செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம்.

இந்த விருப்பத்தை கட்டளை வடிவில் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாம் கடவுளுடைய விருப்பத்தை ஏற்றுக் கொண்டால் அது நமது விருப்பமாகவும் மாறி விடுகிறது.

அது நமது விருப்பம் என்றாலும் அது கடவுள் விருப்பம் என்பதற்காக அதை நிறைவேற்ற வேண்டும்.

அதாவது அது நமது விருப்பம் என்பதற்காக அல்ல,

கடவுளின் விருப்பம் என்பதற்காக நாம் அதை நிறைவேற்ற வேண்டும்.


"நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். "
(அரு. 14:15)

அதாவது நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பித்தால் 

அவர்மீது அன்பு கொண்டிருப்பதாகப் பொருள்.

இரத்தினச் சுருக்கமாக சொன்னால்,

நாம் இறைவன் சித்தப்படி வாழ வேண்டும்.

நமது விருப்பப்படி அல்ல, இறைவன் விருப்பப்படி வாழ வேண்டும்.

என்ன வித்தியாசம்?

ஒரு ஒப்புமையால் விளக்குவோம்.

நமது அப்பா நம்மைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறார்.

Term fees கட்டுவதற்காகப் பணம் தந்து விடுகிறார்.

அது யாருடைய பணம்?

அப்பாவுடைய பணம்.

அப்பாவுடைய பணத்தை நமது பெயரில் பள்ளியில் கட்டுகிறோம்.

அதை நமது பணமாகச் செலவழித்தாலும் அது அப்பாவுடைய பணம்தான்.

அதேபோல் கடவுளுடைய விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்று அதன் படி வாழ்ந்தாலும் 

நாம் கடவுளின் விருப்பப்படி தான் வாழ்கிறோம்.

நமது அன்னை மரியாளும் இறைவன் விருப்பத்தை அறிந்தவுடன்,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக் கடவது."

எனக் கூறித் தன்னை முற்றிலும் இறைப்பணிக்கு அர்ப்பணித்தாள்.

ஆன்மீகத்தில் எதிர் எதிரான இரண்டு விருப்பங்கள் நம்மைத் தங்களை நோக்கி ஈர்க்கின்றன.

நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் தின்னக் கூடாது என்பது இறைவனின் விருப்பம்.

அவர்கள் அதைச் சாப்பிட வேண்டும் என்பது சாத்தானின் விருப்பம்.

முதலில் இறைவனின் விருப்பப்படிதான் வாழ்ந்தார்கள்.

ஆனால் சாத்தான் அவர்களைச் சோதித்த போது அவனுடைய விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்கள். 

விளைவு?

அவர்கள் பாவத்தில் விழுந்தார்கள். 

இறைவனோடு அவர்களுக்கு இருந்த உறவு முறிந்தது.

நமது முதல் பெற்றோருக்கு இருந்த நிலைதான் இன்று நமக்கு.

இன்றும் சாத்தான் நம்மைச் சோதித்துக் கொண்டு தான் இருக்கிறது.

"எங்களை சோதனையில் விழ விடாதேயும்'' என்று நாம் தினமும் இறைவனிடம் வேண்டுகிறோம்.

சோதனையில் விழாதிருக்க வேண்டிய அருள் வரங்களை இறைவன் தந்து கொண்டு தான் இருக்கிறார்.

அந்த அருள் வரங்களைப் பயன்படுத்தி இறைவனோடு நமக்கு உள்ள உறவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அதாவது இறைவன் விருப்பப்படி நடந்து அவரது பிள்ளைகளாக வாழ வேண்டும். 

இறைவன் விருப்பப்படி வாழ்வதுதான் நமது விருப்பமாக இருந்தாலும், 

அது நமது விருப்பம் என்பதற்காக அல்ல, 

இறைவனது விருப்பம் என்பதற்காக அதை நிறைவேற்ற வேண்டும். 

நமது விருப்பத்தின் அளவு மாறலாம், சில சமயங்களில் விருப்பமே மாறலாம். 

ஆனால் இறைவனின் விருப்பம் மாறாது. 

ஆகவே மாற்றத்திற்கு உட்பட்ட நமது விருப்பத்தின் படி அல்ல,

மாறாத கடவுளின் விருப்பத்தின் படியே நாம் வாழ வேண்டும்.

கடவுள் நம்மில்  வாழ வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மை அல்ல கடவுளைப் பார்க்க வேண்டும்.

நூறு சதவீதம் நாம் கடவுளைப் பிரதிபலிக்க வேண்டும்.

அதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.

கிறிஸ்துவின் விருப்பப்படி வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment