Saturday, April 20, 2024

"கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை."(அரு. 10:13)

"கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை."
(அரு. 10:13)

ஆயனுக்கு ஆடுகள் சொந்தம்.

ஆடுகளைப் பேணுவது மட்டுமே அவனது வாழ்க்கை.

ஆடுகளுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் பாதுகாப்பதில் கவனமாக இருப்பான்.

ஆகவே தன் சிந்தனையாலும், செயலாலும் எப்போதும் ஆடுகளுடனே இருப்பான்.

ஆனால் கூலிக்கு வேலை பார்ப்பவனுக்கு எப்போதும் கவனம் கூலியின் மேல்தான் இருக்கும்.

அவனைப் பொறுத்தவரை கூலிக்காக ஆடுகள்,
ஆடுகளுக்காகக் கூலியில்லை.

ஆடுகளால் கிடைக்கும் கூலியை விட வேறெங்காவது அதிகம் கூலி கிடைத்தால் அவற்றை விட்டு விட்டு அங்கே போய் விடுவான்.

நல்ல ஆயனாகிய இயேசு தனது நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க தனது சீடர்களை அனுப்பினார்.

அவர் செய்த பணியைச் சீடர்கள் செய்தார்கள்.

அதற்காகத்தான் கத்தோலிக்க திருச்சபையை நிறுவி, அதன் தலைவராக இராயப்பரை நியமித்தார்.

இராயப்பரும், சீடர்களும், அவர்களுகாகுப் பின்னால் வந்த பாப்பரசர்களும், ஆயர்களும், குருக்களும்

இயேசுவின் இடத்திலிருந்து நல்லாயனுக்குரிய பணியைச் செய்து வருகிறார்கள்.

பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுப் பிரிந்து சென்ற ஆயர்களும், குருக்களும்

திருச்சபையின் பாரம்பரியத்தை விட்டு விட்டு

பைபிளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு,

இயேசு என்னும் பெயரையும் எடுத்துக் கொண்டு

கூலிக்கு ஆடுகளை மேய்க்கச் சென்று விட்டார்கள்.

அவர்களுடைய முக்கிய நோக்கம் காணிக்கை என்ற பெயரில் அவர்கள் வசூலிக்கும் கூலி.

அதற்கு அவர்கள் பயன்படுத்துவது பைபிளையும், இயேசு என்ற பெயரையும்.

அவர்கள் பயன்படுத்துவது உண்மையான பைபிள் அல்ல.

தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொண்ட பைபிள்.

அவர்கள் வழிபடுவது இறைமகன் இயேசுவை அல்ல.

இறைமகன் இயேசு தமது பாவங்களை மன்னிப்பதற்காக மனிதனாகப் பிறந்தார்.

அதற்காகத் தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.

பலிப் பொருளை உண்பதற்காகத் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

தான் செய்ததை எல்லாம் செய்யும் வல்லமையைத் தனது சீடர்களுக்குக் கொடுத்தார்.

1.பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும்,

2.தன் பெயரால் திருப்பலி நிறைவேற்றும் அதிகாரத்தையும்,

3.திவ்ய நற்கருணையை அவருடைய அடியார்களுக்கு உணவாகத் தரும் அதிகாரத்தையும்

தனது சீடர்களுக்குக் கொடுத்தார்.

பாவ மன்னிப்பு கொடுக்கும் அதிகாரமும்,

திருப்பலி நிறைவேற்றும் அதிகாரமும்,

திவ்ய நற்கருணையை அவருடைய அடியார்களுக்கு உணவாகத் தரும் அதிகாரமும் உள்ளவர்கள் தான் அவருடைய சீடர்கள்.

இந்த குருத்துவ அதிகாரம் இயேசுவிலிருந்து தொடர்பு விடாமல் உலகம் முடியும் வரை இறங்க வேண்டும்.

இந்த மூன்று அதிகாரங்களையும் தனது சீடர்களுக்குக் கொடுத்த இயேசுவே இறைமகன் இயேசு.

நமது பிரிவினை சகோதரர்களுக்கு இந்த அதிகாரங்கள் இல்லை.

ஆகவே அவர்கள் போதிப்பது உண்மையான இயேசுவின் போதனைகளை அல்ல.

அவர்கள் இயேசுவால் அனுப்பப் பட்ட சீடர்கள் அல்ல,

ஆகவே உண்மையான ஆயர்கள் அல்ல.

அவர்கள் இயேசுவைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தும் கூலிகள்

"நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில்

(கத்தோலிக்க திருச்சபை)

வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். 

வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். 

அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார்."
(அரு. 10:1,2,3)

ஆக கத்தோலிக்க திருச்சபையில் உள்ள ஆயர்களே இறைமகன் இயேசுவால் அனுப்பப் பட்டவர்கள்.

கத்தோலிக்கர்களாகிய நாம் நமது ஆயர்களுக்கே செவி கொடுக்க வேண்டும்.

பிரிவினை சகோதரர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அவர்கள் நடத்தும் நற்செய்திக் கூட்டங்களுக்குச் செல்லக்கூடாது.

அங்கே நமக்குப் பாவ மன்னிப்பும் கிடையாது,

திருப்பலியும் கிடையாது,

திவ்ய நற்கருணையும் கிடையாது.

உண்மையான இயேசுவின் போதனைகளும் கிடைக்காது.

பைபிள் வசனங்களுக்கு அவர்கள் அவர்கள் கொடுக்கும் விளக்கத்துக்கும், ஆண்டவரின் உண்மையான போதனைக்கும் சம்பந்தமே இருக்காது.

கத்தோலிக்கர்கள் பிரிவினை சகோதரர்களின் கூட்டங்களுக்குப் போவதும்,

மாணவர்கள் பள்ளிக்கூட நேரத்தில் சினிமா தியேட்டருக்குப் போவதும் ஒன்று தான்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment