"இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது."
(அரு. 6:35)
கலிலேயா கடற்கரையில் வைத்து இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவளித்த பின் இயேசுவும் சீடர்களும் மறுகரையில் உள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று விட்டார்கள்.
மக்கள் மறுநாள் காலையில் இயேசுவைத் தேடி கப்பர்நாகும் ஊருக்கே வந்து விட்டார்கள்.
அப்பங்களை வயிறார உண்டதால்தான் தன்னைத் தேடுகிறார்கள் என்பதை அறிந்த இயேசு
" அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்.
நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்."
என்று கூறினார்.
அவர்கள் அவரை நம்ப ஒரு அரும் அடையாளத்தை எதிர் பார்த்தார்கள்.
அவர்களது முன்னோர் பாலை நிலத்தில் வானிலிருந்து வந்த மன்னாவை உண்ட அரும் அடையாளத்தை சுட்டிக் காண்பித்தார்கள்.
அவர்களுடைய எண்ணங்கள் சாப்பாட்டைச் சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தன!
இயேசு அவர்களிடம்,
"வாழ்வு தரும் உணவு நானே.
என்னிடம் வருபவருக்குப் பசியே இராது;
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது." என்று கூறினார்.
இப்போது நமக்கு ஒன்று புரிய வேண்டும்.
இயேசு தானே வாழ்வு தரும் உணவு என்று கூற சந்தர்ப்பதை ஏற்படுத்தவே ஐந்து அப்பங்களைக் கொண்டு அத்தனை பேருக்கு உணவளித்தார்.
புத்தகம் எழுதுபவர்கள் முதலில் முன்னுரை எழுதுவது போல ,
ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவளித்தது இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்துவதற்கான முன்னுரை.
மக்கள் அவரிடமிருந்து எதிர்பார்த்தது உடற்பசி போக்கும் உணவை.
ஆனால் இயேசு வாக்களித்தது ஆன்மீக உணவை.
"நிலை வாழ்வு தரும் உணவு நானே.
என்னை ஆன்மீக உணவாக உண்பவர்கள் உடற்பசியைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்."
உடலைச் சார்ந்த உணவு இவ்வுலகில் வாழப் பயன்படும்.
ஆனால் ஆன்மீக உணவாக இயேசுவை உண்பவர்கள் நிலை வாழ்வு வாழ்வார்கள்.
ஒரு வகையில் நாம் நித்திய மானவர்கள்.
கடவுள் நித்தியர்.
நித்திய காலமாக கடவுளுடைய உள்ளத்தில் எண்ணமாக இருந்தவர்கள் தான் நாம்.
கடவுள் நமக்குக் குறித்த காலத்தில் நாம் மனிதர்களாகப் பிறந்தோம்.
நாம் என்பது நமது ஆன்மாவை குறிக்கும்.
ஆன்மா என்றென்றும் அழியாது.
அது என்றென்றும் இறைவனோடு நித்திய பேரின்பத்தில் வாழ வேண்டுமென்றால்
அது ஆன்மீகத்தில் இறையருளில் வளர வேண்டும்.
அது ஆன்மீகத்தில் வளர்வதற்கான ஆன்மீக உணவு நமது ஆண்டவராகிய இயேசு.
நம்மோடு உலகம் முடியும் மட்டும் வாழ்வதற்காகவும்,
நமக்குத் தன்னையே ஆன்மீக உணவாகத் தருவதற்காகவும் இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
திருப்பலிக்குச் செல்லும்போதெல்லாம் திரு விருந்தில் கலந்து கொள்கிறோம்.
ஆன்மீக உணவாகிய இயேசு நமது ஆன்மாவோடு இரண்டறக் கலந்து விடுகிறார்.
அந்நிலையிலேயே வாழ்வைத் தொடர்ந்தால் நாம் நிலை வாழ்வு பெறுவது உறுதி.
நற்கருணை நாதர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment