Thursday, April 18, 2024

தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்."(அரு. 7:10)(தொடர்ச்சி)

தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்."
(அரு. 7:10)
(தொடர்ச்சி)


இயேசுவின் சொல்லும், செயலும் இரண்டு வகைகளில் நம்மைப் பாதிக்கின்றன.

1.நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகின்றன.

2. நமது வாழ்க்கை அனுபவங்களை அவரது வாழ்க்கை அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன.

யாருடைய வாழ்க்கையின் தன்மையைப் பற்றியும் தீர்ப்புக் கூற மனிதருள் யாருக்கும் அதிகாரம் இல்லை.

நமது வாழ்க்கையின் தன்மையைத் தீர்மானிப்பது நமது அந்தரங்கம்.

நமது அந்தரங்கம் கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

நமது அந்தரங்கத்தில் தான் நமது செயல்களின் நோக்கம் இருக்கும்.

ஒருவன் டாஸ்மாக் கடைக்கு அடிக்கடி போகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அதை வைத்து நாம் அவன் ஒரு குடிகாரன் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.

அவன் எதற்குப் போகிறான் என்று அவனுக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.

கிணற்றில் விழுந்து ஒருவன் தற்கொலை பண்ணிக் கொண்டான் என்பதற்காக

கிணற்றில் குதிப்பவர்களெல்லாம் தற்கொலை பண்ணிக் கொள்கிறார்கள் என்று முடிவு பண்ண முடியாது.

நாம் நமது மனசாட்சியின் படி ஒழுங்காக வாழும் போது மற்றவர்கள் நம்மைப் பற்றி அவதூறாகப் பேசினால் நாம் அதைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

நமது ஆண்டவரை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவரையும் அப்படித்தான் பேசினார்கள்.

"யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன்" என்கிறார்கள். 


 மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார்.

 இவர்களோ, "இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,

 வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்கிறார்கள்."

இயேசு என்ன சொன்னாலும் செய்தாலும் அதில் குறை கண்டு பிடிப்பதையே பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.

தான் இறைமகன் என்ற உண்மையைச் சொன்னபோது அவர் தேவதூசனம் சொல்வதாகச் சொன்னார்கள்.

ஓய்வு நாளில் நோயாளிகளைக் குணமாக்கியபோது மோயீசன் சட்டத்தை அவர் மீறுவதாகச் சொன்னார்கள்.

அவரைப்பற்றி எவ்வளவு குறை கூறினாலும் அவர் நல்லது செய்வதை நிறுத்தவில்லை.

அனைவருக்கும் நன்மையை மட்டும் செய்த அவரைக் கடைசியில் சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்கள்.


பச்சை மரத்துக்கே இக்கதி என்றால் பட்ட மரத்துக்கு எக்கதி!

நாம் மற்றவர்களைப் பற்றி தீர்ப்பு எதுவும் கூற வேண்டாம்.

ஆனால் மற்றவர்கள் நம்மைப் பற்றி தீர்ப்புக் கூறும் போது நாம் நமது ஆண்டவரை நினைத்துக் கொள்வோம்.

பாவமே செய்யாத அவரைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள்.

அவர் மறுத்துப் பேசாமல் ஏற்றுக் கொண்டார் நமக்காக.

நாமும் நம்மைப் பற்றி மற்றவர்கள் தீர்ப்புக் கூறும் போது நமது பாவங்களுக்கும், உலகோர் செய்யும் பாவங்களுக்கும் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு

அதை நமது விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுப்போம்.

விண்ணகத் தந்தை எதைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்.

ஒவ்வொரு நாளும் நாம் பைபிள் வாசிக்கும் போது நமது ஆண்டவரின் வாழ்க்கையோடு நமது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஒத்துவராத நமது நடைமுறைகளை நமது ஆண்டவரின்வாழ்க்கையோடு ஒத்துவரும்படி மாற்றிக் கொள்வோம்.

இயேசுவின் நற்செய்தி வழி வாழ்வோம்.

நமது வாழ்க்கையை அவரது வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து தவறுகள் இருந்தால் திருத்துவோம்.

இயேசுவின் வழி எவ்வழி
அவ்வழி நம் வழி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment